”வாசியுங்கள்.. புத்தகங்களை நேசியுங்கள்..!” – லிங்கம்

1) உங்கள் இளமைக்காலம் பற்றியும், குடும்ப பின்னணி பற்றியும் சொல்ல முடியுமா

எனக்கு ஒரு 50 ஆண்டு கால வாசிப்பு அனுபவம் உண்டு. எந்த ஒரு தீவிர வாசகனுக்கும், படைப்பாளிக்கும் ஒரு பின்னணி இருக்கும். எனக்கு அப்படி எந்த ஒரு பின்னணியுமில்லை. என் அப்பா அம்மாவுக்கு வேலூர் சேண்பாக்கம் சொந்த ஊர். அவர்கள் 1930-களிலேயே கோலார் தங்க வயலுக்குப் போய் விட்டார்கள்.

எனது பிறப்பு கோலார் தங்கவயல் மாரிகுப்பம் பகுதியில். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ‘கண்ணன்’ என்று ஒரு வார பத்திரிக்கை வரும். அதன் விலை ஒன்றையனா. நான் அதை வாங்கி வீட்டுக்கு தெரியாமல் ஏதாவது ஒரு புத்தகத்துக்குள் வைத்துப் படிப்பேன். அப்பொது துப்பறியும் நாவல் ஒன்று வரும். அதில் சுதாகர் என்ற ஒரு பாத்திரம் துப்பறியும். அதைப்படிக்கும் நண்பர்களை தேடி, 5 கிலோ மீட்டர் தூரமெல்லாம் போய் அந்த புத்தகத்தை வாங்கி வந்து படிப்பேன். எங்கள் பக்கத்து வீட்டில் துலுக்கானம் என்று ஒரு தாத்தா இருந்தார். அவர் குழந்தைகளுக்கெல்லாம் கதைச் சொல்வார். அவர் கதையை முக்கியமான ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டு, வெற்றிலைப்பாக்கு, பீடி போன்றவற்றை வாங்கி வரச் சொல்வார். கதை கேட்கும் ஆர்வம் இப்படி வந்தது தான்.)

நான் ஒன்றாவது தொடங்கி ஏழாவது வரை ஸ்ரீ ஆண்டாள் சன்னதி தொடக்கப் பள்ளியில் படித்தேன். அந்தப்பள்ளி சீத்தாராம் I.A.S., (1970, 1980-களில் தமிழ்நாட்டில் பணியாற்றியவர்) அவர் அப்பாவால் தொடங்கப்பட்டது. பிறகு மைசூர் மைன்ஸ். உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் தான் படித்தேன். அப்போது இப்படி படிக்க வேண்டும் என்று சொல்ல ஆள் கிடையாது.

1962 என் அப்பா ஓய்வு பெற்று வேலூர் சேண்பாக்கம் வந்து விட்டார். என் அக்கா தான் என்னை எல்லா கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டு படிக்க வைத்து, நவீன இலக்கியம் குறித்து ஒரு பட்டியல் போடுகிற அளவுக்கு என்னை வளர்த்து ஆளாக்கிய ஒரு அற்புதமான ஜீவன்.

கோலார் தங்கவயல், மைசூர் மையின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். (1964 முதல் 1967 வரை) இந்த உயர்நிலைப்பள்ளி சி.பி.எம்.தொழிற்சங்கம் மூலம் நடத்தப்பட்டது.

கோலார் தங்கவயலை குட்டி இங்கிலாந்து என்று அப்போது சொல்வார்கள். பள்ளிக் கட்டிடம் வெள்ளைக்காரன் கட்டியது. பிரம்மாண்டமாய் இருக்கும். அங்கு மைன்ஸ் சூப்பர்வைசருக்கு 18 அறை கொண்ட பங்களா உண்டு. ஆனால் தொழிலாளர் குடியிருப்புகள் மிகவும் மோசமாக இருக்கும். 15X10 அடி வீட்டின் முன்பகுதியில் சில வீடுகளில் தாழ்வாரம் இருக்கும். 2 குடும்பங்கள், ஒவ்வொரு குடும்பத்தாரும் 4 அல்லது 5 பிள்ளைகள். அந்த அவல வாழ்க்கை வாழ்ந்த என்னை போன்றோருக்கு தான் அந்த துன்பம் தெரியும். அங்கு வேலை செய்தவர்கள் எல்லோருமே, வடஆற்காடு, தர்மபுரி மாவட்டத்திலிருந்துப் போன அடித்தட்டு மக்கள் தான். அவர்களுக்கு குடும்ப பிரச்சனையை விட தண்ணீர் பிரச்சனை தான் அதிகம்.

 

2)எந்த வயதில் வாசிக்க ஆரம்பித்தீர்கள். அதிலும் தீவிரமாக இலக்கிய படைப்புகள் வாசிக்க ஆரம்பித்தது எந்த வயதில்?

எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த சத்தியநாதன் என்பவர் நான் படித்த உயர்நிலைப்பள்ளியில் இரவுகாவலர். அதனால் அவரிடம் சொல்லிவிட்டு பள்ளியிலேயே ஒரு பத்து மாணவர்கள் இரவில் படுத்துக் கொள்வோம். எம்.என்.நாகரத்தினம் என்று ஒரு வரலாற்றுப் பாட ஆசிரியர் பள்ளியிலேயே ஒரு தனி அறையில் தங்கியிருந்தார். அவர் எங்களுக்கு மு.வ.வின் அகல்விளக்கு, பெற்ற மனம், கள்ளோ காவியமோ, டாக்டர் அல்லி போன்ற பல நாவல்களைப் படிக்கக் கொடுப்பார். அப்போது எனக்கு 16 வயது. மு.வ.வின். அகல்விளக்கு நாவலைத் தொடங்கும் “நானும் சந்திரனும் பாலாற்றங்கரையில் உலாவிய நாட்கள், எங்கள் வாழ்வில் பொன்னான நாட்கள்” என்ற வரிகள் இன்றும் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.

 

3) இலக்கியப் படைப்பாளிகளில் யாருடன் முதன் முதலில் நட்பு ஏற்பட்டது 

வண்ணதாசனுடன் தான் எனக்கு முதன் முதலில் நட்பு ஏற்பட்டது. (1973) நான் அப்போது பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றினேன்.

அவரின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தான் முதலில் வாசித்தது. அந்த நூலின் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தீபத்தில் அல்லது கணையாழியில் வெளியான அவரின் ‘ஞாபகம்’, ‘போய் கொண்டிருப்பவள்’, பழைய பாடல்கள், படித்த அவரின் கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. வண்ணதாசனனின் ‘தற்காத்தல்” கதையைப் படித்துவிட்டு என்னோடு படித்த பெண்களைப் பார்த்துப் பேச வாய்ப்பிருந்தும் பிற்காலத்தில் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறேன். எனக்கும், வண்ணதாசனுக்கும் கடந்த 45 வருடங்களாக விமர்சனப் பூர்வமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதே போன்று நாஞ்சிலுக்கும் எனக்குமான நட்பின் வயது 29. 90-களின் ஆரம்பத்தில் நானும் கோவையில் வேலையிலிருந்தேன். அப்போது நாஞ்சிலும் மும்பையிலிருந்து மாற்றலாகி கோவையிலிருந்தார். ஒருநாள் விஜயாவில் அவரை பார்த்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த நட்பு இன்னும் தொடருகிறது.

4) கா..சு. மற்றும் தஞ்சை ப்ரகாஷ், பிரமிள் இவர்களுடன் பழகிய  நினைவுகளை பற்றி சொல்ல முடியுமா?

அரூப் சிவராம்:

எழுபதுகளில் வெங்கடசாமிநாதன், அரூப் சிவராம் ஆகியோர் பெரிய ஆளுமைகளாகக் கருதப்பட்டவர்கள். மதுரையில் அரூப் சிவராம் நான் தங்கியிருந்த லாட்ஜிக்கு அருகில் தங்கியிருந்தார். நாகராஜன் (கணையாழியில் சில சிறுகதை எழுதியிருக்கிறார்) என் நண்பர் ஒரு நாள் அவரைப் பார்க்க என்னை கூட்டிக் கொண்டு போனார். நாகராஜன் சிவராமுக்கு மிகவும் வேண்டியவர். அவருக்கு அறிமுகம் செய்தார். ஆனால் சிவராம் என்னைக் கண்டுக் கொள்ளவே இல்லை.  நாகராஜனுக்கு அது சங்கடமாகப் போயிருக்க வேண்டும். அவர் சிவராமின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர் கவிதைகளை எனக்குப் பிடிக்கும் என்றும் சொன்னார். ஆனாலும் சிவராம் என்னைப் பொருட்படுத்தவேயில்லை. அரைமணி நேரம் அந்த அறையில் இருந்துவிட்டு வந்துவிட்டோம். இந்த அனுபவத்தினாலேயே அப்போது நான் வெங்கடசாமி நாதனையும் போய் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டேன். (வெங்கட் சாமிநாதன் 77 அல்லது 78ஆம் ஆண்டு மதுரை லாட்சில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தார்).

 

கா.ந.சு. மற்றும் தஞ்சை ப்ரகாஷ் 

தஞ்சையிலிருந்த போது (1984 நவம்பர் முதல் 1990 அக்டோபர் வரை) ஜி.எம்.எல்.ப்ரகாஷ் உடன் அறிமுகம் ஏற்பட்டது. தினமும் நான் ப்ரகாஷை பார்க்கப் போவேன். நா.விச்வநாதன், தஞ்சை கோபாலன், சி.எம்.முத்து அங்கு இருப்பார்கள்.

ஆண்டு நினைவில்லை (1986-87) அப்போது தான் க.நா.சுவைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு கா.ந.சு வந்திருந்தார். க.நா.சுவை மதிய உணவு சாப்பிட எங்கள் வீட்டுக்கு அழைத்தேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவைத் தவிர்த்துவிட்டு என் வீட்டிற்குச் சாப்பிட வந்தார். கா.ந.சுவோடு ப்ரகாஷ், நா.விச்வநாதன், சி.எம்.முத்து உடன் வந்திருந்தார்கள். கா.ந.சுவின் மீது அப்போது எனக்கு ஒரு பிரமிப்பு இருந்தது. இப்போதும் உண்டு.

ஜி.எம்.எல்.ப்ரகாஷ் தான் அங்கு எழுத்தாளர்கள் சந்திப்புக்களுக்கு மய்யம். அவருக்குத் தெரியாத எழுத்தாளர்களே கிடையாது. எல்லோரும் அவரைத் தேடி வருவார்கள். மாலையில் நான் அவர் நடத்தி வந்த கடைக்குப் போய்விடுவேன். (ரப்பர் ஸ்டாம்ப்) கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி, சி.எம்.முத்து எனப் பலரையும் அங்கே பார்த்திருக்கிறேன். மாலை நேரத்தில் அங்குப் பல எழுத்தாளர்கள் கூடி விடுவார்கள். ஒரே பேச்சாக இருக்கும். அங்கு கு.பா.ராவின் மகன் பட்டாபி ப்ரகாஷின் பராமரிப்பிலிருந்தார். ஒரு முறை வல்லிக்கண்ணனும் தஞ்சை வந்து லாட்ஜில் தங்கியிருந்தார்.

முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் என்று மலையாளத்தில் ஒரு நூல் உண்டு.  எழுத்தாளர்களைப் பற்றியது. அதைத் தமிழில் குறிஞ்சி வேலன் தான் மொழி பெயர்த்திருந்தார். அதைப்போல ஒன்றை பிரகாஷ் எழுதிச் சென்றிருக்க வேண்டும்.

நான் தஞ்சைக்கு 1984-ல் போனேன். அதற்கு முன்பே எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரான தி.ஜானகி ராமன் இறந்து போனதால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது. 1985 ஆண்டு இலங்கை எழுத்தாளர் டேனியலை நானும் நண்பர் ந.விச்வநாதனும், அ.மார்க்ஸ் வீட்டில் ஒரு முறையும், ஆஸ்பத்திரியில் ஒருமுறையும் பார்த்திருக்கிறோம்.

5) வண்ணநிலவனிடம் அடிக்கடி பேசும் நண்பர் நீங்கள். அவரை பற்றியும் அவரின் படைப்புகளை பற்றி சில வரிகள்

1970-களில் அப்போது எழுதிக் கொண்டிருந்த வண்ணநிலவன், வண்ணதாசன், நாஞ்சில்  நாடன்,  பா.ஜெயப்பிரகாசம்  இப்படி எல்லோரையும் படிப்பேன். வண்ணநிலவன், பூமணி படைப்பின் மீது எப்போதுமே  எனக்கு தீராக்காதல் உண்டு. இப்போதும் தான். இப்போதும் வண்ணநிலவனிடம் 15 நாட்களுக்கு ஒருமுறை  தொலைப்பேசியில் பேசிவிடுவேன். பேசும்போதெல்லாம் அவரின் “அவனூர், மயான காண்டம், மழை, ராதா  அக்கா, மனைவியின் நண்பர், கரையும் உருவங்கள் பற்றி அதிகம் பேசுவேன். எல்லோரும் எஸ்தர் பற்றித் தான்  பேசுவார்கள்.

வயதான பின் இப்போது எதைப் படித்தாலும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அப்போது வாசிப்பு  அற்புதமாக இருந்தது. ஒரு சிந்தனை பெட்டகத்துத்திற்கு உங்கள் மூளை அடைபடுகிற போது வாசிப்பின்  சுவையும் தேர்வும் மாறிவிடுகிறது. அதை அப்படி அடைபடாமல் வைத்துக் கொள்வது தீவிர வாசிப்புக்கு  அவசியம். திறந்த மனமே வாசிப்பின் சுவையைக் கூட்டும்.

வாசகர் லிங்கம் உடன் க.விக்னேஷ்வரன்

6) எஸ்.ராமகிருஷ்ணன் சாருக்கும் உங்களுக்கும் இருக்கும் நட்பு ஆழமானது. அதைவிட உணர்வுபூர்வமானது என்று தெரியும். அவரை எங்கு முதன் முதலில் சந்தித்தீர்கள்.? அப்போது என்ன பேசினீர்கள் என்று நினைவில் இருக்கிறதா? தினமும் அவரிடம் பேசுகிறீர்கள் அப்படி பேசும் போது என்னென்ன பேசுவீர்கள்

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அவருடைய புத்தக வெளியீட்டில் அவரை பார்த்தேன். ஆனால் நினைவில் இருப்பது – 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தோடு என் வீட்டிற்கு என்னைப் பார்க்க  வந்திருந்தார். என் வீட்டிலிருந்த சே.கு.வே.ரா, தாஸ்தாவேஸ்கி  புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, இருவரும்  இரு துருவங்கள் இருவரையும் நேசிக்கிற ஒரு மனிதரை இப்போது தான் பார்க்கிறேன் என்று சொன்னார்.  எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். அவரின் “கதாவிலாசம்” , “தேசாந்திரி”, ”துணையெழுத்து”  ஆகியவற்றை ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு இலக்கிய பெட்டகங்கள். க.நா.ச-வுக்கு பிறகு உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தியதில் இவரின் பங்களிப்பு முக்கியமானது. அவரின் தாஸ்த்யேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ் பற்றிய உயிர்மெய் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்களைப் படித்துப் பாருங்கள்.

ராமகிருஷ்ணனால் படைப்பு மட்டுமல்ல, அவரின் மேடை சொற்பொழிவு தங்கு தடையின்றி அந்த பொருள்  பற்றி இயல்பாகப் பேசக்கூடியவர். எந்த ஒரு குறிப்பும் இன்றி அவரின் தாஸ்தயேவ்ஸ்கி, செகாவ் மற்றும்   மு.ராஜேந்திரனின் “பாதாளி” சிறுகதைத் தொகுப்பு மேடைப் பேச்சை நான் கேட்டிருக்கிறேன்.

 

7) ரஷ்ய இலக்கியங்கள் மீதான உங்கள் ஆர்வம்,வாசிப்பு அனுபவங்கள் குறித்து இலக்கிய உலகிலுள்ள பலரும் அறிந்திருப்பார்கள். ஏன் ரஷ்ய இலக்கியத்தில் மட்டும் இவ்வளவு ஆர்வம்?

நான் மதுரையிலிருந்த போது (1977 முதல் 1984 நவம்பர் வரை) NCBH புத்தக கடைக்கு போவதுண்டு. அங்கு ரஷ்ய இலக்கிய புத்தகங்கள் சிலவற்றை வாங்கியும் இருக்கிறேன். ஆனால் அப்போது அந்த புத்தகங்களை படிக்கவில்லை. நண்பர் ஜெயந்தன் என்னிடம் ஜமிலா நாவல் பற்றியும் ஆண்டன் செகாவின் “புத்திரசோகம்” கதைப் பற்றி அடிக்கடி சொல்லுவார்.

கார்க்கியின் “தாய்” ஜெயந்தனிடம் வாங்கி படித்தது நினைவுக்கிறது. ஆனால் என்னை கார்க்கியின் “தாய்” பாதிக்கவில்லை.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னாள் சோப்பியா டால்ஸ்டாயின் நாட்குறிப்பு (Sofin Tolstoy Diary) வாங்கி படித்தேன். அதில் டால்ஸ்டாய் பற்றி குறைப்பட்டு எழுதியிருப்பார். அதைப் படித்துவிட்டு நண்பர் சு.வேணுகோபாலிடம் இப்படிப்பட்ட டால்ஸ்டாய் எப்படி காந்திக்கு குருவாக முடிந்தது என்று பேசினேன். இப்படி பேசியது என் அறியாமை தான்.

சு.வேணுகோபால் தான் என்னை டால்ஸ்டாயை படித்து பாருங்கள் என்று சொன்னார். இப்படி தான் நான் முதலில் தாஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ், பால்சாக் …….. இப்படி துவங்கி இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஓரான் பாமுக் வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

 

8) லியோ டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயேவஸ்கி இருவரையும் அதிகம் வாசித்தவர் நீங்கள். இருவரில் யாரை அதிகம் பிடிக்கும்

இருவரையும் பிடிக்கும்.  இருந்தும் தஸ்தாயேவ்ஸ்கி மீது அதிகமான ஈடுபாடு உண்டு.

அன்னா அக்மோத்வ் ஓரிடத்தில் சொல்வார். வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை எழுதியவன் தஸ்தாயேவ்ஸ்கி, அதனால் டால்டாயை விட அவனை அதிகம் பிடிக்கும் என்று சொன்னார். அடுத்து பாஸ்டர்நாக் ரஷ்ய புரட்சிக்கு பின் தஸ்தாயேவ்ஸ்கியை போல ஒரு படைப்பாளி இருந்திருந்தால் ஒரு மாபெரும் பேரிலக்கியத்தை கொடுத்திருப்பார்கள். இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். தாஸ்தயேவ்ஸ்கி கால ரஷ்ய இளைஞர்கள் அவரை குறிப்பிடும் போது “Our fathers believed in Jesus Christ as we beleive in Dosteosky. இது ஒன்றே போதும் அவர் மேதமையை குறிப்பிடும். Albert Camus Noble Prize Winner for Literature during 1940’s recorded – it is not Karal Marx but Dostoevsky is the great thinker of 19th Century.

 

9) தஸ்தாயெவ்ஸ்கி மீது மட்டும் ஏன் இவ்வளவு காதல்? வாழ்வில் ஒருமுறை தாஸ்தயேவ்ஸ்கியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் (நிச்சயமாக புனைவு கேள்வி தான்) அவரிடம் என்ன கேட்பீர்கள்

அவரை பார்க்க நேர்ந்தால் என்னால் எப்படி பேச முடியும். முழு சாரமே கடவுள் இருப்பு குறித்து “தஸ்தயேவ்ஸ்கிக்கு ஏற்பட்ட மனப்போராட்டம் தான். யேசு இருக்கிறாரா இல்லையா என்பது தான். யேசு இல்லையென்றாலும் நான் யேசு பக்கம் நிற்பேன். எனக்கு யேசு வேண்டும், யேசு இருந்தால் தான் மனிதன் பாவங்கள் செய்வதற்கு பயப்படுவான். இல்லை என்றால் சட்டம் தான் மனிதனை வழிநடத்தும். அப்படியான சூழலில் மனிதன் என்று ஒன்று இல்லாமல் போய்விடும். யேசு இல்லாத உலகம் ஒரு பைத்தியகார விடுதியாக மாறிவிடும் என்கிறார்.

மனித சமுதாயத்தின் மேலுள்ள அன்பே தஸ்தயேவ்ஸ்கியை தெய்வ நம்பிக்கைக்கு இட்டு சென்றது. தெய்வம் இல்லாத உலகம் மனிதனுக்கு வெறுமையை தான் கொடுக்கும்.

– யேசு என்கிற மஹாசக்தி இல்லை என்பதற்கு கரமசோவ் சகோதரர்கள் வரும் இவான் அசடனில் வரும் இப்போலிட் எடுத்து வைக்கும் வாதங்கள் குறிப்பாக இவானின் வாதங்கள் உலக இலக்கியங்களின் உச்சம் என்கிறார்கள். இதோடு கரமசோவ் சகோதரர்களில் 13 வயது கோல்யா 12 வயது அல்யோஷாவிடம் சோசலிஸம் பற்றிய வாதம் செய்வது நமக்கு வியப்பை தருகிறது.

கடவுள் மறுப்பு வாதங்களை எதிர்க்கொள்ள முடியாத தஸ்தாயேவ்ஸ்கி கீழ்க்கண்ட கடவுள் மறுப்பாளர்களின் முடிவுகளை துன்பமாக முடித்திருக்கிறார்.

இவான் -மனப்பிறழ்வுக்கு ஆளாகிறான்

திமித்ரி–  தான் செய்யாத குற்றத்துக்காக சைபீரியா சிறைக்குபோகிறான். (கரமசோவ் சகோதரர்கள்)

இப்போலிட் – ஒரு தளபதியின் வைப்பாட்டிக்கு பிறந்தவன்   சிறுவயது முதல் நோயாளி 18 வயதில் மரணம். (அசடன் நாவல்)

ரஸ்கோல்னிகோவ் – சைபீரியா சிறைக்கு அனுப்பப்படுகிறான். (குற்றமும் தண்டனையும் நாவல்)

இவர்களுக்கு ஏன் இந்த தண்டனையை கொடுத்தாய் தந்தையே என்று கேட்பேன்.

10) இன்றைக்கும் நிறைய புதிய படைப்பாளிகளைத் தேடித் தேடி வாசிக்கிறீர்கள்.  அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

தொண்ணூறுகளில் எழுத வந்தவர்களின் அதிகம் கவனிக்கப்படாதவர்கள் சு.வேணுகோபால், பிறகு கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன், கீரனூர் ஜாகீர் ராஜா, யூமா வாசுகி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ என்னை உலுக்கி  எடுத்துவிட்டது. இவர்கள் ஐந்து பேரையும் தமிழ்ச் சமூகம் சரியான முறையில் இன்னும் Recognize செய்யவில்லை .

சமீபத்தில் வந்திருக்கும் சு.வேணுகோபாலின் பால்கனிகள் ஆட்டம், நிலம் என்னும் நல்லாள், இழைகள் தமிழன் முக்கியமான படைப்புகள்.

‘பால்கனிகள்” அரவாணிகள் பற்றியது தமிழில் இப்படியொரு படைப்பே வந்ததில்லை. அதே போன்று தான் “இழைகள்” தலித் பற்றிய முக்கியமான யாருமே ஏன் தலித் எழுத்தாளர்களால் கூட தலித்துக்கள் பற்றி இவ்வளவு கூர்மையான படைப்பைப் படைக்க முடிந்ததில்லை.

சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, உள்ளிருந்து உடற்றும் பசி, யூமா வாசுகியின் ரத்த உறவு, கண்மணியின் அஞ்சலை, ஜாகிரின் துருக்கி தொப்பி, அழகிய பெரியவன் தீட்டு, தகப்பன் கொடி இவற்றை முக்கிய படைப்பாகச் சொல்லலாம். கண்மணி அஞ்சலையில் ஒரு பெண்ணின் துயர வாழ்க்கையைக் காவியமாக்கிக் காட்டியிருக்கிறார்.

ஜாகீர் எழுத்தில் மற்றவர்கள் படைப்பு குறித்துப் படிக்கும் போது எந்தவொரு ஒரு வாசகனையும் அந்த படைப்பைத் தேடிப் படிக்கச் செய்யும்.

அழகிய பெரியவனின் “தீட்டு” பாலியலை மட்டும் பேசவில்லை. பெண்கள் அடையும் துன்பங்கள், நோய்கள்  அவர்களிடத்தில் இருக்கும் மனிதம் எல்லாவற்றையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். ஜி.நாகராஜனின்  “நாளை மற்றுமொரு நாவலை” ஒப்பிடும் போது “தீட்டு” நமக்கு வேறு உலகத்தைக் காட்டுகிறது.

சமீபத்தில் அவர் “வல்லிசை” நாவல் நற்றினை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அன்றைய ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்தில் தாழ்த்தப் பட்டவர்களின்  அரசியல் வரலாற்றைப் பேசுகிறது. எங்குமே அவர்  எழுத்தில் மிகையில்லை. படித்து முடித்தவுடன் 30,40-களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் விடிவுக்காகப்  போராடிய அந்த தலைவர்கள் போல் இப்போது ஏன் நம்மால் இனம் காணமுடியவில்லை .

இன்னொன்றையும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். வாலிப பருவ பாலியல் மீறல்களை கு.ப.ரா- வின்  ஆற்றாமை, சிறிது வெளிச்சம் மூலம் ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக வண்ண நிலவன் அவனூர்,  அயோத்தி, மனைவியின் நண்பர் மூலம் சிறுகதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். சமகாலத்தில்  கூந்தபனை, அபாய சங்கு, உள்ளிருந்து உடற்றும் பசி, மூலம் சு.வேணுகோபால் மீறல்களின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் ” மு.ராஜேந்திரனின்” வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நாவல் மற்றும் “பாதாளி” சிறுகதைத் தொகுப்பு இவர்களோடு சேர்ந்து சேர்த்துப் பார்க்க வேண்டிய படைப்புகள் குறிப்பாக அவரின் “வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு” இதுவரை நான் அறிந்து தமிழ் இலக்கியப் படைப்பில் உண்மைக்கு நெருக்கமாகப் புனைவுகளுடன் கூடிய தன் வரலாற்று நூல் வேறு எதுவுமில்லை.

தமிழ் இலக்கிய உலகம் இந்த “வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு” நூலைக் கூர்மையாகக் கவனித்திருக்க  வேண்டும். சமீப காலமாக சாமராஜின் சிறுகதைகள் முக்கியமானவை. அவரின் பட்டாளத்து வீடு சிறுகதை,  ஜார் ஒழிக சிறுகதைத் தொகுப்புகள் முக்கியமானது.

பெண் படைப்பாளிகள் பற்றி 

பெண் படைப்பாளிகளுடையதையும் நான் தொடர்ந்து வாசிப்பவன் தான். அம்பை போன்றவர்களின்  கதைகள் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் சிவகாமியுடைய ‘பழையன கழிதலும், ஆனந்தாயி’  போன்றவை மிகவும் என்னைப் பாதித்தன. அதற்குப் பிறகு உமாமகேஸ்வரி, சி.எம்.முத்து போன்றவர்கள்  எப்படிக் கவனிக்கப்பட வில்லையோ அப்படி தான் மகேஸ்வரியும் கவனிக்கப்படாதவர்.

தேன்மொழியின் நாகாபரணம் மற்றும் தாழி சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெண்ணிலாவின் கட்டுரை தமிழ் இந்து பத்திரிக்கையில் படித்தேன். அந்த  கட்டுரையைப் படித்துவிட்டு வெண்ணிலா கட்டுரையை படிப்பதற்காகவா 45 ஆண்டு காலம் இந்த இலக்கிய  உலகிலிருந்தேன் என்று வேடிக்கையாக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

பிறகு மு.ராஜேந்திரனின் “வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு” புனைகளோடு கூடிய தன்வரலாற்று நாவலைப்  படித்துவிட்டு வெண்ணிலாவிடம் தொடர்பு கொண்டேன். பிறகு தான் அவருடைய பிருந்தாவும் இளம் பருவத்து  ஆண்களும் சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். பின் அவரின் எழுத்து பற்றி என் கருத்தை  மாற்றிக்கொண்டேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் எட்டு கதைகள் காலத்தால் நிற்கும். சிறந்த தமிழ்ச்  சிறுகதை என்று ஒரு தொகுப்பைத் தொகுத்தால் அவருடைய “வெளிய” சிறுகதை அவசியம் இடம் பெறும்.

வெண்ணிலா ஒரு பன்முக படைப்பாளி. கவிதாயினி, சிறுகதை, நாவல் ஆசிரியர், சிறந்த மேடைப் பேச்சாளர்,  கல்வியாளர் அவரின் சமீப படைப்புகள் மரணம் ஒரு கலை (தமிழ் இந்து வெளியீடு). கங்காபுரம் நாவல் மிக  முக்கியமானது.

 

11) உங்கள் வீடு முழுவதும் புத்தகங்கள் தான்என்றாவது இதற்காக உங்கள் மனைவி கோபம் கொண்டது உண்டா

  இல்லை. அவருக்கு அதில் சந்தோஷம் தான். வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில், எஸ்.ராமகிருஷ்ணன்  இவர்களின் நண்பனாக நான் இருப்பதில் என் துணைவியாருக்கு பெருமை.

 

12)  இவ்வளவு புத்தகங்களையும் இந்த வயதிலும்  எப்படி பராமரிப்பு செய்கிறீர்கள்

படிப்பது மட்டுமல்ல, வாரம் ஒரு முறை புத்தகங்களை ஒழுங்குபடுத்தி கொண்டே இருப்பேன். நவீன  இலக்கியம் குறித்து எந்த புத்தகத்தையும் 5 நிமிடத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியும்.

 

13) உலகின் தலைசிறந்த பத்து புத்தகங்கள் பட்டியல் என்று ஒன்று நீங்கள் அளிப்பதாக இருந்தால் எந்த எந்த  புத்தகங்களை பரிந்துரை செய்வீர்கள்

 நான் படித்தவரை உலக இலக்கியத்தின் மிகச்சிறந்த 10 நாவல்கள்

1 தாஸ்தாயெவ்ஸ்கி -கரமசோவ் சகோதரர்கள்

2 MARIE CORELLI – THE MASTER CHRISTIAN

3 டால்ஸ்டாய் -போரும் அமைதியும்

4 குஸ்தாவ் பிளாபர்- மேடம் பவாரி

5 அனடோல் ப்ரான்ஸ்- தாசியும் தபசியும்

6 பர்லாகர் க்விஸ்ட் பாரபாஸ்

7 அகமத் ஹமதி-தன்பினார்- நிச்சலனம்

8 இவான் துர்கநேவ் -Father & Sons

9 ஓரான் பாமுக் – பனி

10 செல்மா லாகர் லெவ் மத்குரு

11 GOETHE -The Sorrows of Young Werther

 

14) மறக்க முடியாத சிறுகதைகள், குறுநாவல்கள் குறித்து கூற முடியுமா?

தமிழில் / இந்திய பிராந்திய மொழி நவீன இலக்கியங்களில் மிகச்சிறந்த, ஒப்பற்ற நாவல் / மற்றும் சிறுகதை  ஆசிரியர் ஒரே ஒருவரை குறிப்பிடும்படி கேட்டால் நான் தி.ஜானகிராமனை தான் சொல்வேன்.

பெண்களைப் பற்றி அவர் நிறைய கொச்சைப்படுத்தி விட்டார் என்று ஜானகிராமன் மீது ஒரு விமர்சனம்  உண்டு. ஆனால் பெண்களை பற்றி அதிகம் எழுதியிருந்தாலும் அவர்களின் குரலாக பல கதைகளில்  இருக்கிறார்.

தி.ஜா. கோபுர விளக்கு கதையில் நன்றாய் வாழ்ந்த குடும்பத்து பெண் ஒருத்தி பாலுறவு தொழிலாளி  ஆகிவிடுகிறாள். அவள் கடவுளின் சன்னதியில் நின்று ஈஸ்வரி இரண்டு நாளாக வயிறு காயறது.  இன்னிக்காவது கண்ணை திறந்து பார்க்கனும், தாராள மனசுள்ள ஒருவனை கொண்டு விட்டு தொலைத்தால் என்னவாம் என்று அம்மன் சன்னதியில் வேண்டுவாள். படித்துவிட்டு அதிர்ந்து போய் விட்டேன்.

அடுத்து பாருங்கள் அவள் இறந்து போவாள். அதே ஊரை சேர்ந்த அவர் வழக்கமாய் போகும் அந்த ஊர் கோவில் அன்று இருண்டிருக்கும். அவர் கோவில் நிர்வாகியிடம் ஏன் விளக்கு இல்லை என்று கேட்பார். நிர்வாகி  சொல்வார்; அங்கு ஒரு மனுஷி செத்துக் கிடக்கிறாளே அது உங்கள் கண்ணில் படவில்லையா. இன்னிக்கும் கடவுள் வெளிச்சம் கேட்பானா? கேட்க மாட்டான். ஊருக்கு மட்டும் என்ன வெளிச்சம். எத்தனை வெளிச்சம் போட்டால் என்ன? நம்ம இருட்டு கலையப் போறதில்லை. இப்படித்தான் தவிக்கட்டுமே ஒரு நாளைக்கு.

தி.ஜானகிராமன் ஒரு இலக்கிய பெரியார். அக்ரகாரத்திலிருந்து ஒருவர் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு துணிந்து இசை கற்று தருவது போலெல்லாம் அவர் எழுதியிருப்பார்.

ஆ.மாதவன் ஒருமுறை சொல்லியிருந்தார். ‘அம்மா வந்தாள்’ மட்டும் மலையாளத்தில் சரியாக மொழி  பெயர்க்கப்பட்டிருந்தால் மலையாள இலக்கிய உலகமே அதிர்ந்து போயிருக்கும் என்று. அவர் பெண்களை  கொச்சைப்படுத்துபவர் அல்ல. ஆராதிக்கிறவர். நம்மிடையே இருந்த தி.ஜானகிராமனை ஏன் வியந்து  கொண்டாட மறுக்கிறோம்? எல்லோரும் மோகமுள் அல்லது அம்மா வந்தாள் சொல்வார்கள். என்னை கேட்டால்  தி.ஜானகிராமனின் அழியாத காவியம், உயிர்த்தேன் தான் சிறந்த படைப்புகள்.. 1965-ல் க.நா.சு.  ஜானகிராமனை படித்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொன்னார். நான் பாக்கியசாலி தான், நீங்களும்  ஜானகிராமனை படித்து பாக்கியசாலி ஆக பாருங்களேன்.

என்னை மிகவும் பாதித்த சிறுகதைகளை தான் நான் தொகுத்திருக்கிறேன். உதாரணமாக நீல பத்மநாபனை  நாவலில் தான் என்னால் அங்கீகரிக்க முடியும். ஒரு சிறுகதை ஆசிரியராக என்னால் பார்க்க முடியாது. இதே  போன்று தான் எஸ்பொ , எம்.எஸ், பிரமிள், வ.க, இ.பா, சமுத்திரம், இன்னும் பலரின் படைப்புகள் என்னை  பாதிக்கவில்லை.

அதே போன்று சி.சு.செல்லப்பாவை விமர்ச்சகராகத் தான் என்னால் பார்க்க முடிந்தது. க.நா.சுவை.  விமர்சகராகவும், இந்திய மற்றும் உலக இலக்கியத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவராகவும் என்னால் பார்க்க முடிகிறது.

சமீப காலமாக சிலர் கு.பா.ராவின் படைப்புகள் நீர்த்து போய்விட்டது என்கிறார்கள். அவருடைய விடியுமா, ஆற்றாமை, சிறிது வெளிச்சம்…..  இப்படி 20 கதைகள் இன்னும் பல ஆண்டுகள் உயிர்ப்போடு தான் இருக்கும்.

அதே போன்று நா.பிச்சமூர்த்தியின் தாய், கபோதி, பதினெட்டாம் பெருக்கு கதைகள் காலத்தை வென்று நிற்கும்.

அழகிரி சாமியின் திரிபுரம், சுயரூபம், சந்திப்பு, நவீன தமிழ் வாசிக்கும் வாசகன் அவசியம் படிக்க வேண்டியது.

ரசிகன் கவனிக்கப்படாத ஒரு பெயர்.

குறிப்பாக  நா.பிச்சமூர்த்தி,புதுமைபித்தன்,  கு.பா.ர, ரசிகன், க.நா.சு, வா.ச.ரா, அழகிரிசாமி, தி.ஜானகிராமன் இந்த மூத்த தலைமுறை இன்று மட்டுமல்ல இன்னும் பல ஆண்டுகளுக்கு சிறுகதைகள் மூலம் நிலைத்து நிற்கும்.

15) சமூக ஊடகங்கள் வந்த பிறகு வாசிப்பு குறைந்துவிட்டது. புதியதாக வாசிக்கும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரைகள்

“வாசியுங்கள், வாசியுங்கள் பாரதியும், கவிதையும் போல் புத்தகங்களை நேசியுங்கள்.”


நேர்கண்டவர் : க.விக்னேஷ்வரன் 

11 COMMENTS

  1. அருமை. அனுபவம். ஆச்சரியம். நேர்காணல் படிக்க படிக்க பேரானந்தம். பொக்கிஷம்!
    நன்றி திரு லிங்கம் ஐயா மற்றும் திரு வா ச விக்னேஷ்வரன் அவர்கள்.

  2. நிறைவான நேர்காணல்……

    வாசிப்பு தித்திக்க செய்கிறது
    வாழ்த்துக்கள் தோழர்

    அன்புடன்
    ச.பார்த்திபன்

  3. பிரமாதமான நேர்காணல். இன்னும் நிறைய வாசிக்க, புத்தகங்களை சேகரிக்க பெரும் உத்வேகத்தைத் தரும் நேர்காணல். நன்றிகள். 🙏

  4. அருமையான செழுமையான
    நேர்காணல்
    தகவல்களின் திறப்பு ….
    நன்றி

  5. ஒரு முன்மாதிரி வாசகரை அறிமுகப்படுத்தியமைக்கு பெரு நன்றிகள்

  6. வாசிக்கும் ஒவ்வொருவரையும் நேசிக்கும் அற்புதமான வாசகரை பற்றி வாசிக்கும் போது மகிழ்வாக இருக்கிறது.

    கனலிக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்

  7. உங்களுக்கு பிடித்த சிறுகதைகளை தொகுத்திருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். அந்த கதைகளைக் குறிப்பிட முடியுமா?

  8. அற்புதமான ஒரு நேர்காணல் .சிறந்த கேள்விகள்; மனம் திறந்த பதில்கள் . ஒவ்வொன்றும் குறித்து அவர் அலசியிருக்கும் கோணம் குறித்து வியந்து போகிறேன் . அரிய பல செய்திகளையும் இதுவரை அறிந்திராத பல செய்திகளையும் அறிய முடிந்தது . தி ஜானகிராமன் அவர்களின் எழுத்து பற்றிய இவரது கோணம் எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது . ஒன்றிரண்டு நாவல்கள் தான் வாசித்துள்ளேன். மேலும் வாசித்து மேலும் பாக்கியசாலி ஆடக விரும்புகிறேன் . மொழிபெயர்ப்பு நாவல்கள் குறித்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். மிகவும் உபயோகமான ஒரு நேர்காணலாக இது அமைந்தது. திரு லிங்கம் அவர்களுக்கும் , ‘கனலி’க்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் !

  9. இந்த நேர்காணலை ஏனோதானோவென்று, லிங்கம் எனும் பெயருடைய ஒரு வாசகரின் பேட்டிதானே என்று மேலோட்டமாகப் பார்த்ததில், அவர் வண்ணதாசனைத் துவங்கியதில், எனக்கு மிகவும் பிடித்த வண்ண நிலவனைப் பற்றியும் இவர் சொல்லக்கூடும் எனும் எண்ணத்தில் படிக்கத் துவங்கியவன், நேர்காணலைப் படித்து முடித்தவுடந்தான் தெரிந்தது ஒரு நடமாடும் நூலகத்தையே அலட்சியமாக நினைத்தோமே என்று. விக்னேஷ்வரன் அவர்களுக்கும், லிங்கம் சாருக்கும் என் நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.