இரவில் ஒரு குரல் – வில்லியம் ஹோப் ஹாஜ்சன்,தமிழில் – நரேன்

து ஒரு நட்சத்திரங்களற்ற இருள் சூழ்ந்த இரவு. வட பசிஃபிக்கில் காற்றின்றி அசையாது நின்ற பாய்மரக் கப்பலில் இருந்தோம் நாங்கள். மிகச் சரியாக எத்திசையில் இருந்தோம் எனத் தெரியவில்லை; பாய்மர உச்சியின் உயரத்திற்கு, எங்கள் தலைக்கு மேலே மூடுபனி ஒரு வாரமாக சூரியனை மறைத்தபடி மிதந்துகொண்டிருந்தது. சில நேரம் கீழே இறங்கி வந்து எங்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் கடலையும் மறைத்தது. மிகுந்த சலிப்பும் மூச்சுத் திணறும் களைப்புமாகக் கழிந்த வாரம் அது.

சுத்தமாகக் காற்றே இல்லாததால் நாங்கள் விசைக்கோலை நிலை நிறுத்தியிருந்தோம். மையத் தளத்தில் நான் மட்டுமே இருந்தேன். எங்கள் குழுவில் மேலும் இரண்டு ஆண்களும் ஒரு சிறுவனும் இருந்தனர். அவர்கள் கீழ்த்தள இடுக்கறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். என்னுடைய நண்பன் வில் – இந்தக் கப்பலின் தலைவனும் அவன்தான் – பின்புறம் அவனுக்கான சிறிய தனியறையில் இருந்தான்.

திடீரென சுற்றியிருந்த கடும் இருளிலிருந்து ஒரு அழைப்புச் சத்தம் உரக்கக் கேட்டது.

“ஸ்கூனர் … ஒஹோய்….!” 

அதிர்ச்சியினாலும், முற்றிலும் எதிர்பாராதத் தருணத்தில் எழும் குரல் என்பதாலும் நான் உடனடியாக பதிலளிக்கவில்லை.

அக்குரல் மீண்டும் ஒலித்தது – மனிதக் குரல் போல இல்லை ஆனால் ஆர்வம் கொப்புளிக்கும் அடித்தொண்டையிலிருந்து எழுந்த குரல். இருண்ட கடலில் எங்கிருந்தோ எங்கள் படகின் இடப் பக்கத்திலிருந்து அந்தச் சத்தம் கேட்டது.

 “ஸ்கூனர்… ஒஹோய்….!”

“ஹல்லோ….” தைரியத்தை ஓரளவு திரட்டிக்கொண்டு பதில் குரல் கொடுத்தேன். “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?”

“நீங்கள் பயப்படத் தேவையில்லை,” அந்த வினோதக் குரல் பதிலளித்தது. என் குரலில் குழப்பத்தின் தடயங்களைக் கவனித்திருக்கக்கூடும். “நான் வயதானவன்தான்… பயம் வேண்டாம்.”

சட்டென குரல் நின்றதால் பெருகிய அமைதிதான் என் காதுகளை முழுதாக நிறைத்தது. அதன் பிறகுதான் அக்குரலின் பதிலில் இருந்த முக்கியத்துவம் எனக்கு விளங்கியது.

“அப்படியானால் நீங்கள் நெருங்கி இந்தப் பக்கமாக வரலாமே?” நான் சற்று எரிச்சலுடன் கேட்டேன்; நான் சற்று அச்சப்பட்டதை அவன் அறிந்ததாகக் காட்டிக்கொண்டது எனக்குப் பிடிக்கவில்லை.

“நான்… இல்லை… என்னால்… வரமுடியாது. அது பாதுகாப்பானதாக இருக்காது.  நான்…” அக்குரல் உடைந்து போனது. அமைதி நிலவியது.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” நான் கேட்டேன். என் திகைப்பு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “ஏன் பாதுகாப்பு இல்லை? நீ எங்கே இருக்கிறாய்?”

ஒரு கணம் உற்றுக் கவனித்தேன்; பதில் ஏதும் வரவில்லை. அப்போது திடீரென நான் என்னவென அறிந்துகொள்ளமுடியாத, தெளிவற்ற ஒரு சந்தேகம் எனக்குள் எழ, திசையறிகருவி பொருத்தப்பட்டிருக்கும் பேழையின் மீது விரைந்து ஏறி ஒளிரும் விளக்கை கையில் எடுத்துக்கொண்டேன். அதே நேரத்தில் வில்லை எழுப்புவதற்காகக் குதிகாலால் தளத்தை ஓங்கித் தட்டினேன். பின்னர் நான் படகின் பக்கவாட்டிற்கு மீண்டும் வந்து தடுப்புக் கம்பிகளுக்கு அப்பால் விரிந்து கிடந்த அமைதிப் பெரும்பரப்பிற்குள் மஞ்சள் ஒளிப் புனலை வீசினேன். நான் அப்படிச் செய்த உடனே மெலிதான உள்ளொடுங்கிய அழுகையொன்றைக் கேட்டேன். பின்னர் யாரோ திடுமென துடுப்புகளை இயக்கியதால் நீர் தெறிக்கும் சத்தம் கேட்டது. என்னால் நிச்சயமாக எதையும் கூற முடியாவிடினும் உறுதியாக ஒன்றைச் சொல்லலாம். விளக்கின் முதல் ஒளி இருளுள் நுழைந்த கண நேரத்தில் நீரின் மீது ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டேன் ஆனால் இப்போது அங்கே எதுவுமே இல்லை.

“ஹல்லோ… அடேய்….,” நானே அழைத்தேன். “என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது?”

ஆனால் இரவுக்குள் படகு இழுபட்டுச் செல்வதைப் போன்ற தெளிவில்லாத சத்தங்களே கேட்டன.

எனக்குப் பின் பக்கமாக விரைந்து வரும் காலடிச் சத்தங்களைத் தொடர்ந்து வில்லின் குரல் கேட்டது:

“என்ன ஆச்சு, ஜார்ஜ்?”

“இங்கே வா, வில்.” அவனை அழைத்தேன்.

தளத்தின் மேலேறி வந்து கேட்டான், “என்ன விஷயம்?”

அவனிடம் இந்த விசித்திரமான சம்பவத்தைச் சொன்னேன். கேள்வி மேல் கேள்விகள் கேட்டான். பின், கண நேர அமைதிக்குப் பிறகு கைகளை உதட்டருகே கொண்டு வந்து உரக்கக் குரலெழுப்பினான்:

“ஓஹோய்…. படகுக்காரனே…”

வெகு தொலைவில் இருந்து மங்கிய பதிலொன்று திரும்பி வந்தது. என் நண்பன் மீண்டும் கூவி அழைத்தான். இம்முறை, ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு துடுப்புகளின் முணுமுணுப்பொலி பெருகி வந்தது. இதைக் கேட்டதுமே, வில் மீண்டும் உரக்கக் கூவினான்.

இம்முறை தெளிவான பதில் வந்தது:

“விளக்கை அணைத்துவிடு”

“அதெப்படி… முடியவே முடியாது” நான் முணுமுணுத்தேன். ஆனால் அக்குரல் கேட்டுக்கொண்டதைப் போலச் செய்யச் சொன்னான் வில். நான் விளக்கை தடுப்பரண்களின் அடியில் மறைத்து வைத்தேன்.

“அருகில் வா,” வில் சொன்னான். துடுப்புகளின் சத்தம் தொடர்ந்தது. முப்பது அடித் தொலைவிலேயே அவை மீண்டும் நின்று விட்டன.

“இன்னும் நெருங்கி இந்தப் பக்கமாக வா,” கூச்சலிட்டான் வில். “உன்னை பயமுறுத்தும் எதுவும் இந்தக் கப்பலில் இல்லை.”

“நீ வெளிச்சத்தைக் காட்ட மாட்டேனென்று எனக்குச் சத்தியம் செய்…”

“விளக்கு உன்னை என்ன செய்துவிடப் போகிறது?” நான் வெடிக்குரலில் கேட்டேன். “வெளிச்சத்தைக் கண்டு ஏன் நரகத்திற்குள் தள்ளப்படுபவனைப் போலப் பயந்து பதறுகிறாய்?”

“ஏனென்றால்…” தொடங்கிய குரல் அப்படியே நின்றது.

“ஏனென்றால் என்ன?” வேகமாகக் கேட்டேன்.

வில் என் தோள்களின் மீது கையை வைத்தான்.

“ஒரு நிமிடம் வாயை மூடிக்கொண்டிரு கிழவா..” என்றான் தாழ்ந்த குரலில். “நானே அவனைச் சமாளிக்கிறேன்.”

அவன் தடுப்புக் கம்பிகளின் மீது மேலும் சாய்ந்தான்.

“இங்கே பார், மிஸ்டர்,” அவன் கூறினான். “இந்தப் புனிதமான பசிபிக் பெருங்கடலின் மத்தியில் நீ இப்படி திடீரென தோன்றி எங்களை நோக்கி வந்து பேசுவதெல்லாம் மிக விசித்திரமான விஷயமாக இருக்கிறது. நீ பேயோ பூதமோ அல்லது மந்திர தந்திரம் செய்பவனோ இல்லையென நாங்கள் எப்படி நம்புவது? அங்கே நீ ஒருவன் மட்டும்தான் இருக்கிறேன் என்கிறாய். உன்னைக் கொஞ்சம் கூட பார்க்காமல் அதை நாங்கள் எப்படி அறிந்துகொள்வது, சொல்? வெளிச்சத்தின் மீது அப்படி என்ன ஆட்சேபணை உனக்கு?”

அவன் பேசி முடித்ததும், துடுப்புகளின் ஓசை மீண்டும் எனக்குக் கேட்டது, அதன் பிறகு அவனுடைய குரலும். ஆனால் இம்முறை அதிக தூரத்திலிருந்து வந்தது. மிகவும் நம்பிக்கையற்று பரிதாபமாக ஒலித்தது.

“ஸாரி… ஸாரி… மன்னிக்கவும். உங்களை நான் தொந்தரவு செய்திருக்கவே மாட்டேன். ஆனால்… மிகுந்த பசியில் இருக்கிறேன். அவளும்தான்…”

குரல் கரைந்து சென்றது. நீரில் ததும்பும் துடுப்புகளின் ஓசையும் விட்டுவிட்டு எங்களுக்குக் கேட்டது

“நில்!” வில் கத்தினான். “உன்னை இங்கிருந்து விரட்டும் எண்ணம் எனக்கில்லை. திரும்பி வா! உனக்கு வேண்டாமென்றால், நாங்கள் விளக்கை மறைத்தே வைத்திருக்கிறோம்.”

என் பக்கம் திரும்பினான்.

“நிச்சயமாக இது கொஞ்சம் துடுக்குத்தனமான செயல்தான். ஆனால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்?”

அவனது தொனியில் ஒரு கேள்விக்குறி இருந்தது. நான் பதிலளித்தேன்.

“ஆமாம். படகு சேதமடைந்து இந்தப் பாவப்பட்டவன் இங்கேயே சிக்கிக்கொண்டு விட்டான் போலிருக்கிறது. இப்போது பைத்தியம்கூட பிடித்திருக்கலாம்.”

துடுப்புகளின் சத்தம் நெருங்கி வந்தது.

“அந்த விளக்கை அடியிலேயே தள்ளி வை” என்றான் வில். தடுப்புக் கம்பிகளின் மீது சாய்ந்து கூர்ந்து கவனித்தான். நான் விளக்கை நன்றாக உள்ளே தள்ளி வைத்துவிட்டு மீண்டும் அவன் பக்கம் வந்து நின்றேன். இப்போது சில கெஜம் தூரத்தில் துடுப்புகள் அலைவது நின்றது.

“நீ இப்போதும் பக்கத்தில் வர மாட்டாயா?” மிகத் தன்மையான குரலில் கேட்டான் வில். “நான் விளக்கைக் கொண்டு போய் மறைவிடத்தில் வைத்து விட்டேன்.”

“நான்… என்னால்… வர முடியாது,” குரல் பதிலளித்தது. “நான் அருகே வர முடியாது… உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்களுக்கும் என்னால் பணம் கொடுக்க முடியாது.”

“அது பரவாயில்லை,” வில் சொன்னான். பின் தயங்கினான். “நீங்கள் தாராளமாக உங்களுக்கு வேண்டியவற்றை வந்து எடுத்துக் கொண்டு போகலாம்.” மீண்டும் வில் தயங்கினான்.

“நீங்கள் ரொம்ப நல்லவர்,” குரலில் உணர்ச்சி பொங்கியது. “அனைத்தையும் அறிந்த கடவுள் உங்களுக்குத் தகுந்த வெகுமதி அளிப்பார்- – ” சடாரென குரல் உடைந்தது.

“அந்தப் பெண்?” வில் திடீரென கேட்டான். “அவங்க…”

“நான் அவளைத் தீவிலேயே விட்டுவிட்டு வந்தேன்,” அந்தக் குரல் சொன்னது.

“எந்தத் தீவு?” நான் இடைமறித்தேன்.

“எனக்கு அதன் பெயர் தெரியாது,” பதிலளித்தது குரல். “நான் கடவுளுக்கு…” அதுவாகவே தொடங்கி சட்டென நிறுத்திக்கொண்டது அக்குரல்.

“அவர்களை அழைத்து வருவதற்கு ஒரு படகை அனுப்பவா?” வில் கேட்டான்.

“வேண்டாம்!” அசாதாரணமான அழுத்தத்துடன் சொன்னது குரல். “கடவுளே! வேண்டாம்!” ஒரு கணம் அமைதியானது; பிறகு அர்த்தம் நிறைந்த அழுத்தமான குரலில் தொடர்ந்தது,

“எங்கள் தேவையின் பொருட்டுதான் நான் இம்முயற்சியில் இறங்கினேன். அவள் படும் வேதனை என்னைச் சித்திரவதை செய்கிறது.”

“ஐயோ… நான் ஒரு அறிவுகெட்ட ஞாபக மறதிக்காரன்” உரக்கக் கூறினான் வில். “நீ யாரோ என்னவோ… ஒரு நிமிடம் இரு. உனக்கு உடனடியாக ஏதாவது கொண்டு வருகிறேன்.”

இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்தான். கை நிறைய உணவுப் பொருட்கள் இருந்தன. தடுப்புக் கம்பிகளின் அருகில் நின்றான்.

“இவற்றுக்காகக்கூட உன்னால் அருகில் வர முடியாதா?” அவன் கேட்டான்.

“இல்லை – நான் நிச்சயம் வரக்கூடாது,” குரல் பதிலளித்தது. அதன் தொனியில் நீண்ட ஏக்கத்தின் குறிப்புகள் தென்படுவதாக எனக்குத் தோன்றியது – தடைசெய்யப்பட்ட தன் கடைசி விருப்பத்தைக்  கூற முடியாமல் அடக்கி மறைத்துக்கொள்வதைப் போல. பிறகு எனக்குள் சட்டென அது உதித்தது. இந்த வயதான மனிதன் இந்தக் கும்மிருட்டில், வில் கையில் வைத்திருக்கும் பொருட்களின் நியாயமான தேவையுடன் காத்திருக்கிறான். துன்பத்தில் துவண்டிருக்கிறான். ஆனால் ஏதோ விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பயம் அவன் எங்கள் படகின் அருகில் வந்து இவற்றை வாங்கிக்கொள்ள முடியாமல் அவனைத் தடுக்கிறது. கண்களுக்குத் தெரியாத அவன் ஒரு பித்தனல்ல என்ற அறிவும் மின்னலைப் போல திடீரென்று ஒரு உறுதியும் எனக்குள் தோன்றியது; உண்மையில், அவன் ஏதோ தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பயங்கரத்தை எதிர்நோக்கியிருக்கிறான்.

“அடடா… வில்!” கலவையான உணர்வுகள் கொண்டு அவனை அழைத்தேன். அதில் பரிதாபமே மேலோங்கியிருந்தது. “ஒரு பெட்டியை எடு. இவற்றையெல்லாம் பெட்டியில் வைத்து அவனிடம் மிதக்க விடுவோம்.”

நாங்கள் அதைச் செய்தோம் – அப்பெட்டியைக் கொக்கியில் இணைத்து படகிலிருந்து இருளுக்குள் செலுத்தினோம். ஒரு நிமிடம் கழித்து கண் அறியா தூரத்திலிருந்து ஒரு மெலிதான கூவல் குரல் கேட்டது. பெட்டி அவரைச் சென்றடைந்தது என்பதைப் புரிந்துகொண்டோம்.

சற்று நேரம் கழித்து, மனம் நிறைய எங்களுக்கு ஆசி அளித்துவிட்டு விடைபெற்றார். அத்தனை ஆசிகளுக்கும் உகந்தவர்கள் நாங்கள் என்பதை அறிவோம். பிறகு சற்றும் தாமதிக்காமல் இருளுக்குள்ளிருந்து துடுப்புகளின் சத்தம் கேட்டது.

“உடனே கிளம்பியாச்சு போல,” லேசான ஏமாற்றத்துடன் குறிப்பிட்டான் வில்.

“இரு,” நான் பதிலளித்தேன். “எப்படியோ அவன் திரும்பி வருவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவனுக்கு இந்த உணவு மிகவும் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்பட்டிருக்கலாம்.”

“கூடவே அந்தப் பெண் வேறு,” சொன்னான் வில். ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டுத் தொடர்ந்து சொன்னான், “நான் மீன் பிடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இப்படியான ஒரு விசித்திரமான சம்பவத்தை எதிர்கொண்டதே இல்லை.”

“ஆமாம்” என்று சொல்லிவிட்டு நான் சிந்தனையில் மூழ்கினேன்.

அப்படியே நேரம் நழுவிச் சென்றது – ஒரு மணி நேரம், இரண்டு என மேலும் மேலும்… வில் என்னுடனே இருந்தான்; இந்த விநோதச் சம்பவம் எங்களிடமிருந்து தூக்கத்தை விரட்டியடித்துவிட்டது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து அமைதியான கடலுக்கு அப்பாலிருந்து மீண்டும் துடுப்புகளின் ஓசை கேட்டது.

“அதோ கவனி!” மிகச் சிறிய உற்சாகம் அவன் குரலில் தெரிந்தது.

“நான் நினைத்தது போலவே அவன் திரும்பி வருகிறான்” நான் முணுமுணுத்தேன்.

தண்ணீரில் தோய்ந்து எழும் துடுப்புகளின் சத்தம் நெருங்கி வந்தது. துடுப்புகளின் இழுப்பு இம்முறை நீண்டும் உறுதியாகவும் இருந்தது. உணவுத் தேவையாகத்தான் இருக்கும்.

எங்கள் படகின் அகன்ற பகுதியின் பக்கமாக வந்து நின்றதும் இருளிலிருந்து மீண்டும் அந்த விநோதக் குரல் கேட்டது: “அஹோஓஓஓ….”

“அது நீயா?” வில் கேட்டான்.

“ஆமாம்,” குரல் பதிலளித்தது. “நான் உடனேயே கிளம்பிப் போய்விட்டேன்; ஒரு அவசரத் தேவையிருந்தது அதனால்தான்…”

“அந்தப் பெண்?” வில் கேள்வி எழுப்பினான்.

“இந்தப் பூமியில் மிகவும் நன்றியுள்ளவள் இப்போது அவள்தான். சீக்கிரத்திலேயே சொர்க்கத்திலும் மிகவும் நன்றி நிறைந்தவளாகவே அவள் இருப்பாள்.”

புதிரான குரலில் ஏதோ பதிலளிக்க வில் முற்பட்டான்; ஆனால் பின் குழப்பமடைந்து பாதியிலேயே நிறுத்திவிட்டான். நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன். இப்படி அடிக்கடி உருவாகும் ஆர்வம் கிளப்பும் அமைதியை நான் குறுகுறுப்புடன் கவனித்துக்கொண்டிருந்தேன். வியப்பை விடவும் என்னிடம் அனுதாபம்தான் மேலோங்கி இருந்தது.

குரல் தொடர்ந்து பேசியது:

“நாங்கள் – நானும் அவளும், இறைவனின் இக்கருணை மிகுந்த செயலைப் பற்றிப் பேசினோம். உங்களுடைய உதவியையும்…”

வில் குறுக்கிட்டான் ஆனால் கோர்வையாக எதுவும் சொல்லவில்லை.

“நீங்கள் இன்று இரவு செய்த இம்மாபெரும் உதவியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நான் உங்களிடம் இரந்து கேட்கிறேன். இறைவனின் கவனத்திலிருந்து இத்தொண்டு தப்பாது என்று உறுதியாக நம்புங்கள்.”

குரல் நின்றது. முழுதாக ஒரு நிமிட அமைதி. பின் அது மீண்டும் ஒலித்தது:

“எங்களுக்கு நேர்ந்ததைப் பற்றி நாங்கள் இருவரும் கலந்து பேசினோம் – எங்களைத் தீண்டிய இக்கோரத்தைப் பற்றி… எங்கள் வாழ்க்கையின் மீது கவிழ்ந்த இப்பயங்கரத்தைப் பற்றி யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் போய்விட வேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தோம். ஆனால் இன்று இரவு நடந்தவையெல்லாம் கடவுளின் தீர்ப்பே என்ற என் நம்பிக்கையை அவளும் ஒப்புக்கொண்டாள். அன்று அதற்குப் பிறகு நடந்தவற்றையெல்லாம் உங்களிடம் கூறிவிட வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் போல…”

“எதற்குப் பிறகு?” வில் நிதானமாகக் கேட்டான்.

“அல்பட்ராஸ் மூழ்கிய பிறகு.”

“ஓஓஓஓ….” நான் என்னையறியாமல் கூச்சலிட்டேன். “ஆறு மாதங்களுக்கு முன்பு நீயு கேஸ்டலில் இருந்து புறப்பட்டது இல்லையா. ஆனால் அதன் பிறகு அதைப் பற்றி யாரும் ஒன்றுமே கேள்விப்படவில்லையே.”

“ஆமாம்,” அக்குரல் பதிலளித்தது. வடக்குக் கோட்டின் சில டிகிரிக்கு முன்பே ஒரு பயங்கரமான புயலில் சிக்கிச் சிதைந்து போனது. அக்கப்பலில் ஓட்டை விழுந்து நீர் கசிந்துகொண்டிருப்பது பகலில்தான் தெரிந்தது. மாலுமிகள் படகைக் கீழிறக்கி என் வருங்கால மனைவியான இவ்விளம் பெண்ணையும் என்னையும் உருக்குலையும் கப்பலிலேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.”

“அவர்கள் கிளம்பிச் செல்லும்போது எங்கள் பொருட்கள் சிலவற்றைக் கப்பலின் கீழே சேகரித்துக்கொண்டிருந்தோம். பயத்தில் அவர்கள் ஒருவரையும் பொருட்படுத்தவில்லை. நாங்கள் மேல் தளத்திற்கு ஏறி வந்தபோது மிகச் சிறிய உருவங்களாக அடிவானத்தில் தொலைதூரத்தில் தென்பட்டார்கள். ஆனாலும் நாங்கள் விரக்தியடையவில்லை. நாங்கள் அவசரமாகக் காரியத்தில் இறங்கி ஒரு சிறிய தோணியைக் கட்டினோம். தேவையான அளவிற்கு தண்ணீர், பிஸ்கட்டுகள் என தேவையான ஒரு சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டோம். கப்பல் ஏற்கனவே நீரின் ஆழத்தில் மூழ்கத் தொடங்கியிருந்ததால், தோணியை வெளியே தள்ளி அதில் ஏறிக்கொண்டோம்.

பிறகுதான் கவனித்தேன், ஒரு பெரிய அலையோ அல்லது ஒரு நீண்ட நீரொழுக்கோ எங்களைக் கப்பலிலிருந்து ஒரே கோணத்தில் வெகு தூரத்திற்குச் செலுத்திச் சென்றது. என் கைக்கடிகாரத்தின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் மொத்தக் கப்பலும் எங்கள் கண் பார்வையிலிருந்து மறைந்து போனது. உடைந்த சில பாகங்கள் மட்டும் மேலும் சற்று நேரத்திற்கு மிதந்து கொண்டிருந்தது எங்கள் பார்வையில் பட்டது. பிறகு மாலையில் மூடுபனி வளர்ந்து இரவு முழுதும் தொடர்ந்தது. அடுத்த நாள் முழுதும் நாங்கள் பனியால் சூழப்பட்டோம், வானிலை மிக அமைதியாக இருந்தது.

நான்கு நாட்களுக்கு இந்த விசித்திரமான மூடுபனி வழியாக நாங்கள் மிதந்துகொண்டிருந்தோம். நான்காம் நாள் எங்கள் காதுகளுக்கு பெருத்த அலைகள் எதிலோ மோதி நுரை ததும்பும் ஓசை கேட்டது. பிறகு படிப்படியாக அது அமைதியடைந்து நள்ளிரவில் மீண்டும் அச்சத்தம் இரண்டு பக்கமும் கேட்கத் தொடங்கியது. எங்களின் தோணி பல முறை உயரே மேலே எழும்பி இறங்கியது. அதன் பிறகு நிதானமான நீரில் பயணிக்கத் தொடங்கினோம். நுரை அலையின் சத்தம் இம்முறை எங்கள் பின்னால் கேட்டது.

காலை வந்ததும் திடீரென நாங்கள் ஒரு மிகப் பெரிய வட்டவடிவிலான தீவிற்குள் இருப்பதைப் போலத் தோன்றியது; நாங்கள் அதை அப்போது சரியாகக் கவனிக்கவில்லை. காரணம் எங்களின் முன்னே, மூடுதிரையாக சூழ்ந்திருந்த பனி மூட்டத்தினுள்ளிருந்து பெரிய பாய்மரக் கப்பல் ஒன்று எங்களருகே தோன்றியது. நாங்கள் ஒரு சேர மண்டியிட்டு இறைவனுக்கு நன்றி சொன்னோம்; எங்களின் அத்தனை துயரமும் முடிவுக்கு வந்ததாக நாங்கள் அப்போது நம்பினோம். ஆனால் நாங்கள் அறிந்துகொள்வதற்கு இன்னும் ஏராளம் காத்திருந்தன.

எங்களின் தோணி அக்கப்பலின் அருகே சென்றது. எங்களை உள்ளே ஏற்றிக்கொள்ளுமாறு நாங்கள் கத்தினோம்; ஆனால் ஒருவரும் பதிலளிக்கவில்லை. அப்போது தோணி கப்பலைத் தொட்டுக்கொண்டு நின்றது. அதிலிருந்து ஒரு கயிறு கீழே தொங்குவதைப் பார்த்ததும் அதைப் பிடித்து மேலே ஏறத் தொடங்கினேன். ஆனால் பிடித்து ஏறுவதற்கு மிகச் சிரமமாக இருந்தது. சாம்பல் நிறத்தில் ஒரு மலர்க் கொடியைப் போல பூஞ்சை முழுவதுமாக கயிற்றில் பூசியிருந்தது. அது கப்பலின் பக்கவாட்டில்கூட மிக மூர்க்கமாக தழுவிப் பரவியிருந்தது.”

எட்டி தடுப்புக் கம்பிகளை அடைந்தேன். அதனுள் தவழ்ந்து கடந்து மேல் தளத்தை அடைந்தேன். தளத்தை முழுதும் பச்சை திட்டுகளால், சாம்பல் நிறக் குவியல்களாக, நிறைந்திருப்பதைக் கண்டேன். அதில் பல நெளிந்த முடிச்சுகளாகப் பல அடிகள் உயர்ந்திருந்தன; அந்நேரத்தில் இதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் கப்பலில் மனிதர்கள் யாரேனும் இருக்கும் சாத்தியத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உரக்கச் சத்தம் போட்டேன்; யாரும் பதிலளிக்கவில்லை. கப்பலின் பின் பகுதியின் கீழே இருந்த கதவின் அருகே சென்றேன். அதைத் திறந்து உள்ளே பார்த்தேன். நாட்பட்ட மட்கிய வாசனை பிரம்மாண்டமாக நிறைந்து இருந்தது; உயிர் வாழும் எதுவும் அதனுள் இருக்கும் வாய்ப்பில்லை என்பதை உடனடியாகத் தெரிந்துகொண்டேன். இதை உணர்ந்த உடனே நான் கதவைச் சாத்திவிட்டேன். தனிமையாக உணரத் தொடங்கினேன்.

கப்பலுக்குள் நான் ஏறி நுழைந்த இடத்திற்கே திரும்பச் சென்றேன். என் அன்புக் காதலி கீழே தோணியில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தாள். நான் கீழ் நோக்கி அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவுடன் கப்பலில் யாரேனும் இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டாள். வெகு நாட்களுக்கு முன்னரே கைவிடப்பட்ட கப்பலைப் போலத் தெரிகிறது என்று அவளுக்குப் பதிலளித்தேன்; ஆனால் இன்னும் சிறிது நேரம் அவளால் அங்கே காத்திருக்க முடியுமென்றால் அவள் ஏறி வருவதற்காக ஏதேனும் ஏணி கிடைக்கிறதாவென பார்ப்பதாகச் சொன்னேன். அதன் பின் கப்பல் முழுவதும் இருவருமாகத் தேடலைத் தொடரலாம். மேலும் சற்று நேரத் தேடலுக்குப் பிறகு எதிர்ப் பக்கத்தில் கயிற்று ஏணி ஒன்றைக் கண்டெடுத்தேன். அதைத் தூக்கி நான் வீசிய சில கணங்களிலேயே அவள் என்னருகில் வந்துவிட்டாள்.

நாங்கள் இருவரும் கப்பலின் மற்ற பகுதிகளில் இருந்த சிற்றறைகளையும் அடுக்கு அறைகளையும் ஆய்வு செய்தோம்; உயிர்த்திருக்கும் எதுவும் அங்கு இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. அங்கேயும் இங்கேயும் என சிற்றறைகள் முழுவதும் வினோத பூஞ்சை திட்டுகளைக் கண்டோம்; ஆனால் என் அன்புக் கண்மணி சொன்னதைப் போல அவற்றைச் சுத்தம் செய்துவிட முடியும்.

இறுதியில், கப்பலின் மற்ற பகுதிகளும் காலியாகத்தான் உள்ளன என்பதை உறுதி செய்தவுடன் விசித்திரமான சாம்பல் முடிச்சு திட்டுகளின் இடையில் லாவகமாக குனிந்து நெளிந்து பார்த்தோம்; எங்களைத் தவிர வேறு யாரும் இக்கப்பலில் இல்லை என்பதை எங்கள் தேடலின் முடிவில் உறுதியாக உணர்ந்துகொண்டோம்.

சந்தேகத்திற்கு இடமின்றி இதைத் தெரிந்துகொண்டதும் கப்பலின் உறுதியான பின்புறத்திற்குச் சென்று அவ்விடத்தை எங்கள் வசதிக்கு ஏற்றார் போல மாற்றிக்கொண்டோம். இருவருமாகச் சேர்ந்து இரண்டு அறைகளைச் சுத்தம் செய்தோம். அதன் பிறகு உணவுப் பண்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிடச் சென்றேன். அவற்றை நான் விரைவிலேயே கண்டுபிடித்ததும் மனதார இறைவனின் கருணைக்காக நன்றி சொன்னேன். கூடுதலாக நன்னீர்க் குழாய் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்தேன். அதைச் சரி செய்ததுமே குடிநீர் எங்களுக்குக் கிடைத்துவிட்டது, அதன் சுவை அவ்வளவு விரும்பத்தக்கதாக இல்லை.

கரைக்குச் செல்லும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் நாங்கள் கப்பலிலேயே பல நாட்கள் தங்கி இருந்தோம். அக்கப்பலை வாழ்விடமாக மாற்றுவதிலேயே மும்முரமாக இருந்தோம். ஆனால் நாங்கள் கற்பனை செய்ததைவிட இவ்விடம் நாங்கள் விரும்பியதைப் போல இல்லை என்பதை வெகு விரைவிலேயே அறிந்துகொண்டோம்; காரணம், முதல் படியாக நாங்கள் தரையிலும் அறையின் சுவர்களிலும் படர்ந்திருந்த பூஞ்சையை முழுவதுமாக அகற்றினாலும் அவை அதே அளவிற்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் மீண்டும் வளர்ந்தன. இது எங்களின் ஊக்கத்தைக் குறைத்துவிடவில்லை ஆனால் தெளிவற்ற ஒரு அமைதியின்மையை அளித்தது.

இருப்பினும் தோற்றதாய் ஒப்புக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை, மீண்டும் வேலையில் இறங்கினோம். இம்முறை பூஞ்சையைச் சுத்தப்படுத்துவதை மட்டும் செய்யவில்லை கூடவே சரக்கு அறையில் இருந்த கார்போலிக்கினால் அத்தனை இடத்தையும் தோய்த்தோம். இருப்பினும் வாரத்தின் இறுதியில் அவை மீண்டும் முழு வலிமையுடன் திரும்பி வந்தன, இம்முறை மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கின. ஏதோ எங்களின் செயல்கள் அதிலிருந்த கிருமிகளை மற்ற இடங்களுக்குப் பரவ உதவியதோ என்று தோன்றியது.

ஏழாம் நாள் காலை, என் காதலி உறங்கி விழித்த போது, அவளின் தலையணையில் முகத்திற்கு அருகே ஒரு பச்சைத் துண்டு முளைத்திருப்பதைக் கண்டாள். அதைக் கண்டதுமே, ஆடைகள் உடுத்திக் கொண்டு வேகமாக என்னிடம் வந்தாள். கப்பலின் தட்டையான பகுதியில் காலையுணவு சமைப்பதற்காக நான் தீ மூட்டிக் கொண்டிருந்தேன்.

‘இங்கே வா, ஜான்.’ என்னை அவள் பின்னால் அழைத்துச் சென்றாள். அவள் தலையணை மேல் இருந்த அதைக் கண்டதும் நான் நடுங்கினேன். அங்கேயே அப்போதே நாங்கள் இந்தக் கப்பலை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்றும் கப்பல் தட்டி நின்ற கரை திட்டை அடைந்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.

அவசர அவசரமாக நாங்கள் எங்கள் பொருட்களை சேகரித்துக்கொண்டோம். அப்போதுதான் பூஞ்சை மிக வேகமாக இவற்றிலும் கூட பரவிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவள் போர்வைகளில் ஒன்றில் ஒரு ஓரமாகப் பச்சைக் கட்டி ஒன்று முளைத்திருந்தது. அவளிடம் சொல்லாமல் நான் அதைத் தூரத் தூக்கி எறிந்தேன்.

எங்களின் தோணி இன்னமும் அங்கேதான் இருந்தது, ஆனால் எங்களை ஏற்றிச் செல்ல முடியாதபடி சற்று குலைந்திருந்தது. கப்பலின் குறுக்கே தொங்கிக் கொண்டிருந்த படகு ஒன்றைக் கீழிறக்கி அதனுள் ஏறி மீண்டும் நீருக்குள் நுழைந்தோம். திட்டின் கரையை நெருங்கும்போதுதான், எங்களைக் கப்பலில் இருந்து விரட்டியடித்த இக்கொடூரமான பூஞ்சை இங்கே கொந்தளித்துப் பரவியிருக்கிறது என்பதைப் படிப்படியாக உணர்ந்தேன். சில இடங்களில் இவை பயங்கரமான, பிரம்மாண்டமான மேடுகளாக உயர்ந்திருந்தன. காற்று வீசும்போது அவை அமைதியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருப்பதைப் போல சிலிர்த்து அடங்கின. ஒரு சில இடங்களில் விரித்த விரல்களைப் போலப் பரவியிருந்தன, சில இடங்களில் மிக மென்மையாகத் தட்டையாக வளர்ந்திருந்தன. விகாரமான இடங்களில், முண்டு முடிச்சுகளுடன் முறுக்கிக்கொண்டிருக்கும் கோரமான மரங்களைப் போல இருந்தன – அவ்வப்போது முழுதும் வெறுக்கத்தக அதிர்வுகளுடன்.

முதலில், எங்களுக்கு இந்தப் பயங்கரமான பாசியால் மறைக்கப்படாத ஒரு பகுதி கூட இத்தீவில் இல்லை என்று தோன்றியது. ஆனால் நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டோம்; சற்று நேரம் சுற்றி வந்த பிறகு பொடிய மணலைப் போலத் தோன்றிய ஒரு வெள்ளைத் திட்டைக் கண்டோம். அது மணல் இல்லை. அது என்னவென்றே தெரியவில்லை. ஆனால் நான் கண்டுகொண்டது எல்லாம் அங்கே பூஞ்சை வளரவில்லை என்பதுதான். பாதையிட்டதைப் போல ஆங்காங்கே மணல் எனத் தெரிந்த சிறு பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும், எங்கெங்கும், அருவருப்பூட்டும் சாம்பல் நிறப் பாழ் பூஞ்சையைத் தவிர வேறொன்றுமேயில்லை.

அதன் படர்தலிலிருந்து தப்பிய ஒரு சிறு இடத்தைக் கண்டதும் நாங்கள் அடைந்த உற்சாகத்தை உங்களுக்குப் புரியும்படி விவரிக்கவே முடியாது. எங்கள் பொருட்களை அங்கே வைத்தோம். மேலும் தேவையென்று தோன்றிய பொருட்களை எடுக்க நாங்கள் மீண்டும் கப்பலுக்குச் சென்றோம். மற்ற பொருட்களோடு நான் கப்பற்பாய்களைக் கொண்டு வந்திருந்தேன். அதை வைத்து இரண்டு சிறிய கூடாரங்களை அமைத்தேன். அவை சற்று கரடுமுரடான உருவில் இருந்தாலும் எங்கள் தேவையைப் பூர்த்தி செய்தன. இவற்றினுள் நாங்கள் வாழத் தொடங்கினோம், அவசியப் பொருட்களைச் சேமித்து வைத்தோம். குறிப்பிடும்படி மகிழ்வென ஏதும் இல்லையென்றாலும் நான்கு வாரங்கள் சீராகச் சென்றன. இல்லை… உண்மையில் மிக மகிழ்வுடனே ஒன்றைச் சொல்ல முடியும் – நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம்.

அவளது வலது கையின் கட்டை விரலில்தான் அதன் வளர்ச்சி முதலில் தென்பட்டது. அது ஒரு சிறிய வட்டமாகத்தான் இருந்தது, ஒரு சிறிய மச்சம் போல. ஆனால் கடவுளே! அவள் விரலைக் காட்டியதும் எப்படியொரு பயம் என் இதயத்தில் பரவியது!! அதைச் சுத்தம் செய்தோம். நீரையும் கார்போலிக்கையும் கொண்டு விரலைக் கழுவினோம். மறுநாள் காலையில் அவள் மீண்டும் என்னிடம் கையைக் காட்டினாள். சிறு சாம்பல் கட்டி மீண்டும் முளைத்திருந்தது. சற்று நேரம் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அதன் பிறகும் வார்த்தைகள் ஏதுமின்றி அதை அகற்றினோம். சிகிச்சையின் மத்தியில் அவள் திடீரென பேசினாள்.

‘டியர், உன் முகத்தின் அந்தப் பக்கத்தில் அது என்ன?’ அவள் குரல் பதட்டத்திலும் கூர்மையாக வெளிப்பட்டது. நான் கைகளால் தொட்டுப் பார்த்தேன்.

‘அங்கே! தலைமுடியின் கீழே, காதின் அருகே. சற்று முன்பக்கம். என் விரல் ஒரு இடத்தில் நின்றது. அறிந்துகொண்டேன்.’

‘உன் கட்டை விரலை முதலில் சரி செய்வோம் என்றேன். அவளும் ஒப்புக்கொண்டாள். தன் விரல்களால் என்னைத் தொடுவதற்கு அவள் பயந்தாள் என்பதுதான் அதற்கு ஒரே காரணம். கட்டை விரலைக் கழுவி அக்கிருமியை அதிலிருந்து அகற்றியதும் அவள் என் முகத்தைத் தொட்டுத் திருப்பினாள். முகத்தைச் சுத்தம் செய்து முடித்ததும் நாங்களிருவரும் ஒன்றாக அமர்ந்து எங்கள் வாழ்வில் சடாரென நுழைந்துவிட்ட இந்தப் பயங்கர சம்பவங்களைப் பற்றிப் பேசினோம். கொடூரமான எண்ணங்கள்! நாங்கள் இருவருமே, ஒரு சேர, மரணத்தை விடவும் கொடியவை நேரும் சாத்தியங்களைப் பற்றிப் பேசினோம். படகில் பொருட்களையும் தண்ணீரையும் ஏற்றிக் கொண்டு கடலில் பயணிப்பதைப் பற்றிப் பேசினோம். ஆனால் நாங்கள் பல வகைகளிலும் உதவியற்றவர்களாக இருந்தோம். பரவல் மீண்டும் மூர்க்கமாகத் தொடர்ந்தது. கடவுளின் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும். காத்திருப்போம்! அங்கேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தோம்.’

ஒரு மாதம்.. இரண்டு மாதம்.. மூன்று மாதங்கள் கழிந்தன. மேலும் பல இடங்களில் அது பரவியது, புதியவையும் தோன்றின. அவை தொடர்ந்து பரவும் என்ற அச்சமிருந்தாலும் நாங்கள் தீவிரமாகப் போராடினோம். ஒப்பீட்டளவில் அதன் வேகம் சற்று மட்டுப்பட்டிருந்தது.

அவ்வப்போது பொருட்களை எடுப்பதற்காக நாங்கள் கப்பலுக்குள் சென்றோம். பூஞ்சை அங்கே தொடர்ந்து வளர்ந்துகொண்டிருந்தது. மையத் தளத்தில் இருந்த முண்டுகள் வேகமாக என் தலை உயரத்திற்கு வளர்ந்திருந்தன.

இந்தத் தீவை விட்டு தப்பிக்கும் எண்ணத்தையும் நம்பிக்கையையும் இழந்திருந்தோம். இதன் பாதிப்பில் இருக்கும்வரை ஆரோக்கியமான மற்ற மனிதர்களுடன் புழங்குவது அனுமதிக்கப்படாது என்பதையும் உணர்ந்தோம்.

இந்த உறுதியும் தெளிவும் எங்கள் மனதில் தோன்றியவுடனே உணவையும் நீரையும் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம். நாங்கள் மேலும் பல வருடங்கள் வாழும் சாத்தியம் உண்டென்பதை அப்போது நாங்கள் நினைத்துப்பார்க்கவில்லை”

உங்களிடம் நான் வயதானவன் என்று சொன்னது இப்போது ஞாபகம் வருகிறது. ஆண்டுகளைக் கணக்கிட்டால் நான் வயதானவன் அல்ல… ஆனால்… ஆனால்…”

அவன் பேச்சு உடைந்து நின்றது; பின்னர் திடீரென மீண்டும் தொடர்ந்தது.

“நான் சொல்லிக்கொண்டிருந்ததைப் போல உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் சேமித்து வைக்க எங்களிடம் மிச்ச உணவு எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். ஒரு வாரம் கழித்துதான் நான் என்னிடமிருந்த ரொட்டி கலங்கள் எல்லாமும் காலியாக இருப்பதைக் கண்டுபிடித்தேன். அவை அனைத்தும் நிரம்பியிருக்கும் என்றே நினைத்திருந்தேன். ஒருசில காய்கறிப் பெட்டிகளும் மாமிசக் குவளைகளையும் தவிர வேறு எதுவுமே எங்களிடம் இல்லை. நான் ஏற்கனவே திறந்திருந்த ரொட்டிக் கலத்தில் மட்டும் சில ரொட்டிகள் மிச்சம் இருந்தன.

இதை அறிந்துகொண்ட பிறகு என்னால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்ற தூண்டுதலை அடைந்தேன். கரையிலிருந்து மீன்கள் பிடிக்கும் முயற்சிகளில் இறங்கினேன் ஆனால் பெரிதாக வெற்றி கிட்டவில்லை. கடலுக்குள் சென்று மீன் பிடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் வரையில் நான் நம்பிக்கை இழந்தவனாக இருந்தேன்.

சில நேரங்களில் ஏதாவது மீன் கிடைக்கும்; ஆனால் அம்மீன்கள் எங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த பசியிலிருந்து காப்பதற்கு மிகச் சிறிய உதவியாகத்தான் இருந்தன. அதுவும் எப்போதாவதுதான்.

பசியால்தான் எங்களின் மரணம் நேரப் போகிறது என்று தோன்றியது. எங்கள் மேல் வளர்ந்து எங்களை ஆட்கொண்டிருக்கும் இந்தக் கொடிய பாசியால் அல்ல.

நான்காவது மாதம் முடிவுற்றபோது இப்படியான மனநிலையில்தான் நாங்கள் இருந்தோம். அப்போதுதான் மிகப் பயங்கரமான ஒன்றைக் கண்டுபிடித்தேன். ஒருநாள் காலை, மதியம் நெருங்குவதற்குச் சற்று முன்னால், மீதமிருந்த பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு கப்பலில் இருந்து வெளியே வந்தேன். கூடாரத்தின் நுழைவாயிலில் என் காதலி அமர்ந்துகொண்டு எதையோ உண்பதைக் கண்டேன்.

‘அது என்னது கண்ணே?’ நான் கரையில் இறங்கியதும் கேட்டேன். என் குரலைக் கேட்டதும் அவள் குழப்பமடைந்தாள். திரும்பிக்கொண்டாள். தந்திரமாக எதையோ கரையின் விளிம்பை நோக்கி வீசினாள். ஆனால் அது முன்னாலேயே விழுந்துவிட்டது. எனக்குள் ஒரு சந்தேகம் கிளம்பியது. குறுக்கே நடந்து சென்று அதை எடுத்தேன். அது பழுப்பு நிறப் பூஞ்சையின் ஒரு துண்டு.

அதைக் கையில் எடுத்துக்கொண்டு நான் அவளை நெருங்கியதும், அவள் முகம் வெளிறியது. பின் ரோஜா சிவப்பாக மாறியது.

நான் விசித்திரமான திகைப்பையும் கலக்கத்தையும் அடைந்தேன்.

‘என் அன்பே! கண்ணே…!’ என்று சொன்னேன். அதற்கு மேல் எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை. அவள் வார்த்தைகள் உடைந்து கசந்து அழத் தொடங்கினாள். படிப்படியாக அவள் நிதானமடைந்த பிறகு முந்தைய நாளே அவள் இதை முயன்று பார்த்தாள் என்றும் அவளுக்கு அது பிடித்திருந்தது என்ற செய்தியையும் அறிந்துகொண்டேன். இனி எவ்வளவு பசி வந்தாலும் அதைத் தொடக்கூடாது என்று அவளை மண்டியிட்டு சத்தியம் செய்ய வைத்தேன். வாக்குறுதி அளித்த பிறகு அவள் – அதை உண்ண வேண்டும் என்ற ஆவல் திடீரென எழுந்ததாகவும் அதுவரையில் அப்பூஞ்சையின் மீது மிகத் தீவிரமான வெறுப்புணர்வுதான் இருந்தது என்றும் என்னிடம் சொன்னாள்.

அந்நாளில் பின்னர் ஒருவிதமான அமைதியின்மையைக் கொண்டேன். புதிதாக அறிந்துகொண்ட அச்செய்தி என்னை தொந்தரவு செய்தது. மணல் போல ஏதோவென்றால் நெளிந்து வளைந்து அமைந்திருந்த ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சென்றேன். பூஞ்சை வளர்ச்சிக்கு ஊடாக இப்பாதை நீண்டு வளர்ந்திருந்தது. நான் முன்பே ஒருமுறை இந்த வழியில் சென்றிருக்கிறேன், ஆனால் சிறிய தூரம்தான். இம்முறை குழப்பமான சிந்தனையில் மூழ்கியிருந்த நான் நீண்ட தூரம் நடந்தேன்.

திடீரென்று ஐயுறும்படியான ஒரு சத்தம் என் இடது பக்கத்தில் கேட்டது. சடாரென திரும்பிப் பார்த்தேன், என் முழங்கைக்கு அருகே அசாதாரண வடிவிலான பூஞ்சை அசைவதைக் கண்டேன். அது ஒரு தனித்த உயிரைப் போலத் தள்ளாடி அசைந்தது. நான் உற்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அது ஒரு மனித உருவத்தின் கோரமான சிதைந்த உருவம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படி ஒரு வினோதமான எண்ணம் என் மூளையில் பளிச்சிட்டதும், மெலிதான, ஒரு கிழிபடும் சத்தம் கேட்டது. சுற்றியிருந்த பழுப்பு நிற குவியலில் இருந்து மரக் கிளை போல கரங்கள் தன்னைத்தானே பிரித்துக்கொண்டு என்னை நோக்கி வந்தன. தலையைப் போன்ற ஒன்று – வடிவமற்ற பழுப்பு நிறப் பந்து என் திசையில் சாய்ந்தது. நான் முட்டாளைப் போல அப்படியே நின்றிருந்தேன், அருவருப்பான அக்கரம் என் முகத்தைத் தடவியது. நான் பயத்தில் அலறினேன், சில அடிகள் தள்ளி ஓடினேன். அது என்னைத் தொட்டதில் ஒரு இனிமையான சுவை என் உதட்டில் உறைந்திருந்தது. அதை என் நாவால் சுவைத்ததும் மனிதத்தன்மையற்ற ஒரு வேட்கை எனக்குள் நிறைந்தது. நான் திரும்பி ஒரு பூஞ்சைக் கொத்தைப் பிடுங்கினேன், பிறகு மேலும்… மேலும்… நான் திருப்தியடையவில்லை. நான் அதைச் சுவைத்து விழுங்கிக்கொண்டிருக்கும் வேளையில்தான் அன்று காலையில் நடந்தவற்றின் நினைவுகள் என் குழம்பிப்போன மூளையை வந்து தாக்கின. அந்நினைவு கடவுளால் அனுப்பப்பட்டது. என் கையில் இருந்த துண்டை ஓங்கி தரையில் வீசினேன். பிறகு முற்றிலுமாக மனம் உலைந்து, நடுக்கம் தரும் குற்றவுணர்வுடன் என் சிறிய கூடாரத்தை நோக்கித் திரும்பினேன்.

காதல் பரிசளித்திருக்கும் அற்புதமான உள்ளுணர்வால்தான் அவள் என்னைக் கண்டதுமே கண்டுபிடித்துவிட்டாள் என்று நினைக்கிறேன். அமைதியாக அவள் வெளிப்படுத்திய அனுதாபமே எனக்கு உதவியாக இருந்தது. எனக்கு ஏற்பட்ட திடீர் பலவீனத்தை நான் அவளிடம் கூறினேன்; ஆனால் அதற்கு முன்னால் எனக்கு நேர்ந்த அசாதாரணமான அனுபவத்தைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. தேவையற்ற பயத்திலிருந்து அவளைக் காத்திட விரும்பினேன்.

ஆனால் என்னைப் பொருத்தவரை, என் மூளைக்குள் இடைவிடாத பயத்தை ஈன்றெடுக்கும் தாங்கவொணாத அறிதலைப் பெற்றுக்கொண்டேன்; இந்தத் தீவிற்குள் இறங்கிய மனிதர்களுள் ஒருவனின் முடிவைச் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்துகொண்டேன்; அந்தப் பயங்கரமான நிலையில் எங்களையே நான் கற்பனையில் கண்டேன்.

அதன்பிறகு, கேடுகெட்ட அதை உண்பதைத் தவிர்த்தோம், அதன் மீதான வேட்கை எங்கள் இரத்தத்தில் ஏற்கனவே இறங்கிவிட்டது என்றாலும். ஆனாலும் துயரார்ந்த தண்டனை எங்கள் மேல் கவிந்தது; நாளுக்கு நாள், அசுர வேகத்தில், அந்தப் பூஞ்சையின் வளர்ச்சி எங்கள் பாவப்பட்ட உடல்களை எடுத்துக்கொண்டது. என்ன செய்தாலும் அதை எங்களிடமிருந்து பிரித்திட முடியவில்லை. அதனால்… மனிதர்களாக இருந்த நாங்கள் இப்போது…. சரி, நாளுக்கு நாள் அதன் அர்த்தம் இழந்துகொண்டே போகிறது! வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் – ஒரு காலத்தில் நாங்கள் ஆணும் பெண்ணுமாக இருந்தோம்!

அச்சந்தரும் அப்பூஞ்சையின் மீதான பசி வேட்கையை எதிர்த்து எங்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போனது.

ஒரு வாரம் முன்னால் கடைசியாக இருந்த பிஸ்கட்டை உண்டோம். அதன் பிறகு நான் இதுவரை மூன்று மீன்களை மட்டும்தான் பிடித்திருந்தேன். இவ்விரவில், உங்களின் படகு மூடுபனியைக் கிழித்து என்னை நோக்கி வந்தபோது நான் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். உங்களை நோக்கி சத்தம் எழுப்பினேன். அதன் பிறகு நடந்தவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். ஒரு பாவப்பட்ட ஜோடிகளுக்கு நீங்கள் காட்டிய கருணைக்காக இறைவன் தன் பரந்த உள்ளத்திலிருந்து உங்களை ஆசிர்வதிப்பார்.”

நீரில் துடுப்பு மூழ்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து மற்றொன்று… கடைசி முறையாக அந்தக் குரல் மீண்டும் வந்தது, சூழ்ந்திருந்த மெலிதான பனியின் ஊடாக, துக்கம் நிறைந்த, வெறுமை ஒலியாக…

“கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக! நான் போகிறேன்!”

இதயம் நிறைந்த கலவையான உணர்வுகளுடன் நாங்கள் கரகரப்பானக் குரலில் கத்தினோம் – “போய் வாருங்கள்!”

விடியல் என் மீது படரத் தொடங்கியதைக் கவனித்தேன்.

இருளில் மூழ்கியிருந்த கடலின் குறுக்காக சூரியன் ஒரு ஒளிக் கற்றையை வீசியது; துயர் பரப்பும் தீ போல, மந்தமான மூடுபனியைத் துளைத்துப் பின்வாங்கிக் கொண்டிருக்கும் படகின் மீது ஒளியை ஏற்றியது. துடுப்புகளுக்கு இடையே ஏதோவொன்று தலையசைப்பதைத் தெளிவாகக் கண்டேன். கடற்பாசி என்று தோன்றியது – மிகப் பெரிய, சாம்பல் நிற, தலையசைக்கும் கடற் பஞ்சு – துடுப்புகள் தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தன. அவையும் சாம்பல் நிறத்தில் இருந்தன – படகும் கூட – துடுப்புகளைப் பற்றியிருக்கும் கைகளை என் கண்கள் ஒரு கணம் தேடித் தோற்றுப்போயின. என் பார்வை தலையின் பக்கம் பாய்ந்தது. துடுப்புகள் பின்னோக்கி வீசியபோது தலை முன்பக்கமாக அசைந்தது. துடுப்புகள் நீருக்குள் தோய்ந்தன. ஒளிப் பட்டையிலிருந்து படகு விலகிச் சென்றது. அந்த… அது தலையசைத்தபடி மென்பனிக்குள் மூழ்கியது!

-வில்லியம் ஹோப் ஹாஜ்சன்
தமிழில் – நரேன்

வில்லியம் ஹோப் ஹாஜ்சன் (William Hope Hodgson) – (15 நவம்பர் 1877 – 19 ஏப்ரல் 1918): நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என ஏராளமாக எழுதிக் குவித்த ஆங்கில எழுத்தாளர். இங்கிலாந்தின் எஸ்ஸக்ஸில் பிறந்த இவர், திகில் கதைகளுக்காகவும் பேய்க் கதைகளுக்காவும் மிகவும் புகழ்பெற்றவர். குண்டடிபட்டு இவர் இறந்த பிறகு சிலகாலம் எழுத்துலகில் மறக்கப்பட்ட ஆளுமையாக ஆனார். 1930-க்குப் பிறகு, இவரின் கதைகள் திரைப்படமாக உருப்பெறத் தொடங்கியதும் மீண்டும் பரவலாக வாசிக்கப்பட்டார். இவர் ஒரு மாலுமியாகவும் இராணுவ வீரனாகவும் தன் வாழ்வின் முக்கிய காலங்களைக் கழித்திருக்கிறார்.

தன் கடல் வாழ்வின் அனுபவங்களையே பெரும்பாலும் திகில் கதைகளாக எழுதிப் புகழ் பெற்றார். அசாதாரணமான தருணங்களில் வெளிப்படும் கருணையும் அன்பும் இவர் கதைகளின் திகில் அம்சத்தையும் மீறி பிரதானமாகத் தென்படும். இவரின் எண்ணற்ற கதைகள் பலமுறை திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பிரபலமான பல நவீன அறிபுனைவு எழுத்தாளர்கள் தங்கள் ஆதர்சமாக இவரைக் குறிப்பிடுகிறார்கள். 1907-ல் வெளிவந்த ‘இருளில் ஒரு குரல்’ இவரின் மிகப் பிரபலமான சிறுகதை. பலமுறை இக்கதை திரையாக்கம் பெற்றிருக்கிறது. ‘மடாங்கோ’ என்று ஜப்பானியத் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் உருவாக்கிய தொகுப்பில் இடம்பெற்றது இச்சிறுகதை

1 COMMENT

  1. அருமையான மொழியாக்கம் நரேன். மூல படைப்பாள்னின் உணர்வை நேர்த்தியாகக் க்டத்தியிருக்கிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.