உண்மையான தி.ஜானகிராமன் எங்குள்ளார் என்று கேள்வி எழுகிறது. உயிர்த்தேனிலோ, மலர்மஞ்சத்திலோ, மோகமுள் பாத்திரங்களிலோ, மரப்பசுவின் பக்கங்களிலோ, செம்பருத்தி, நளபாகம் கதைமாந்தர்களின் தோள்கள் மீதோ, அம்மா வந்தாளின் வரிகளிலோ எங்கும் இருக்கலாம். கம்பீரமாக உலவி வரலாம். அவரின் எழுத்திற்குள்ளேயே அவர் புகுந்து சிரிப்பது வழக்கமானதுதான். வக்கிரமான எழுத்து என்பதல்ல. மிக வசீகரமான எழுத்து. மெத்தென்ற பாதை. தி.ஜா பசும்புற்கள் நோகாமல் மென்நடை போடுவார். தனக்கே தனக்கு என்று போட்டுக்கொண்ட பாதை. அதில் வாசகனும் குதூகலத்தோடு நடக்கலாம். ஜானகிராமன் பெயர் இருக்கும்வரை உயர் எழுத்துக்களைப் பற்றிய விவாதங்கள் இருந்துகொண்டே இருக்கும். எழுத்தாளனின் வெற்றி என்பது இதுதான்.
இந்த உலகில் காரணமின்றி எதுவும் நடப்பதில்லை. ஆசை, கருணை இவை பூரணம் பெறுகின்றன. ஜானகிராமனில் கிடைக்கும் இந்தக் கருணையும் ஆசையும் அதன் மூலம் கிட்டும் அனுபவமும் ஒருவகை அநுபூதிதான். ஒன்று கொடுக்க முடியும் அல்லது எடுக்கமுடியும். ஒட்டுமொத்த ஜானகிராமம் இதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம்? தன் பாத்திரங்களுக்கு இழைத்த துன்பங்களுக்காகக் கோபப்படுகிறோமா? அனுதாப்படுகிறோமா? பாத்திரங்களுக்குக் கொடுத்த மகிமையை ஆராதிக்கப் போகிறோமா? எல்லாம் ஒன்றுதான். எல்லாமே நடக்கிறது. இவர்கள் தீமையானவர்களா, மேன்மையானவர்களா என்பதில் ஆரம்ப வாசகன் குழம்பிப் போகிறான். “பார்க்கிறேன், எழுதுகிறேன்” என்ற வாசகம் தி.ஜாவிற்கும் போதுமானதாக இருந்தது. வாசகன் விசாலமானவனாகவும், அலசிப்பார்க்கும் விமரிசனனாகவும் மாறும்போது ஜானகிராமன் வேறொரு வடிவம் கொள்கிறார். ஜானகிராமனின் முழுமை புலப்படுகிறது. இவனுக்கு ஜானகிராமனின் எழுத்தில் பிரேமை வருகிறது. அது அவரின் எழுத்தைத் தாண்டி அவரின் மேல் வருகிறது. ஓர் அதிசயம், ஜானகிராமன் கேள்விகள் இன்றியே பதில்களை விவரிப்பார். அந்தப் பதில்கள் தான் அவரது செளந்தர்யமான எழுத்தாகப் பரிமளிக்கின்றன. தமிழிலக்கியத்தில் ஒரு தனித்த விதிவிலக்கான நிகழ்வு, சம்பிரதாய கட்டுப்பாடுகளை மீறும் இயல்பான அழகு அற்புதமானது. ஆச்சாரசீலர்களும் கூட ‘நடக்கத்தானே செய்கிறது’ என்று தமக்குள்ளே தீர்வுக்கு வரும் போக்கு வந்துவிடுகிறது.
வாழ்க்கையின் எதார்த்தங்களை எழுதிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. பிராமண வாழ்க்கையை, அதன் மதிப்பீடுகளை உச்சமாகப் பேசுகிறார். சீர்கேடுகளைச் சரியான ஆவணங்களாகப் பதிவு செய்கிறார். “பெண்ணுக்கு எல்லாமே வேண்டும்” ஆண்கள் முரடன்களாகவும் இருந்து கொண்டு சொன்ன பேச்சு கேட்கும் பெண்களை ஆக்கிரமிக்கும் அநீதி, தர்மமாக மாற்றப்பட்டுவிட்டது என்கிறார். கதாபாத்திரங்கள் பேசுவது என்பது ஜானகிராமன் பேசுவதான். மேல்தட்டு வாழ்க்கையச் சித்தரிப்பது குற்றமல்ல, அவரது எல்லா எழுத்துகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வருகிறார்கள். “ சிலிர்ப்பு” என்ற ஒரு கதை போதும் என்று தேர்ந்த வாசகன் முடிவுக்கு வருவான்.
எல்லாப் பகுதிகளிலும் இல்லாதவர்கள் மூச்சுதிணறிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை அச்சு அசலாக எழுதலாம். அரசுக்குச் சமர்பிக்கும் புள்ளிவிவர அறிக்கை போலாகிவிடும். தி.ஜாவின் கலைமொழி வேறு. வெகு நுட்பமான சித்திரம் போலானது, துல்லியமானது.
ஒருவரை மறுப்பது, அசூயைப் படவைப்பது சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படும். புகழ்வதை சுலபமாக ஏற்க முடிவதில்லை. வாழ்நாள் முழுதும் இதுதான். தவறை நம்பி விடுதல், இதன் பின்னரான உளவியலை அறியாத பிழை நடந்துகொண்டே இருக்கிறது. உள்ளேயிருந்து வரும் குரலை அலட்சியம் செய்தல் நடக்கிறது. நம் குழப்பமே இதுதான். நமக்குப் புரியாததை வாசகன் மேல் ஏற்றக்கூடாது என்று சொல்கிறார்:
“செளக்கியமா?”
“செளக்கியமாக இருக்கிறதுக்குதான் வழிபண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்ற உரையாடல் . இதுதான் மோகமுள் என்று அடையாளப்படுத்துகிறது. “உனக்கு கணக்கு வராது. கதை பண்ணத்தான் லாயக்கு” என்று மூன்றாம் வகுப்பு வாத்தியார் செய்த ஆசீர்வாதம்தான் தி.ஜாவை எழுத வைத்தது என்று சிரிப்பது வழக்கம். ‘அழகான பெண்களின் அழகு, பெண்களையே கலவரப்படுத்தியது’ என்று அவரால்தான் எழுதமுடியும். அலங்காரத்தம்மாளின் கணவர் தன் மகனிடம் பேசுகிறார். “ கல்வி செல்வம், நளினம் இதர விஷயங்கள் பெண்ணுக்கு வேண்டும்தான். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான். கை தப்பு செய்கிறது என்பதற்காக கையை வெட்டிவிடமுடியுமா?” – தண்டபாணியின் மனசு சொல்லும் வாசகங்கள் இவை. இது மனித ஜேஷ்டைகள், மனிதர்களை அவற்றோடு கொண்டாடுவதில் அலுப்பில்லை என்பது ஜானகிராமம்.
சங்கீதத்தை உபாசனையாக- தியான மார்க்கமாகப் பார்க்க விழைந்தபோது உமையாள்புரம் சாமிநாத ஐயர் ஆசானாகக் கிடைத்தார். உலகத்தின் ஒலிகளையெல்லாம் கையாண்டு வசப்படுத்தி வேறொரு பிரபஞ்சவெளியை அடைந்து சுதந்திரமாகப் பறக்க ஆசைப்பட்டார். அவர்பெற்ற துளி வித்தையை தன் வார்த்தைகளில் லேசாகக் கையாண்டார். எழுத்தில் தரமுடியாததை இசையில் தரமுடியுமா என்று பார்த்தார். எழுத்தின் பரவலான அவரது உபாசனை சங்கீதத்தை பூரணமாகக் கையாள முடியவில்லை. அந்த மனநிலை வாய்க்கவில்லை என்றார். விவாதி ராகங்களை யாரும் கையாள்வதில்லை. ஆனால் எழுத்தில் கொண்டு வந்து நீளமான கச்சேரியே செய்தார். அவரது எழுத்தே இசை வாணர்களால் பயந்து புறக்கணிக்கப்பட்ட விவாதி ராகங்களே..!
ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி பகவான் அடைத்திருக்கிறார்’ என்பார். மோகமுள் விவகாரங்கள் நீண்டகாலமாக அடைகாத்தவையே. மரபு மீறிய பாத்திரங்களைக் கொண்டு மரபை விமர்சித்தார்.
பலன் தருவதெல்லாம் உண்மை என்ற கருத்து நிலைக்கொண்டது. பொய் பலன் தருமானால் அது உண்மையாகிறது. அற நூல்களின் கட்டமைப்பின் அடித்தளம் இதுவே. உண்மை மாறாதது. தன் எழுத்தின் மூலம் உண்மையைப் பேசத் துணிந்தார். ஆயிரக்கணக்கானவர்களின் மனதை ஈர்ப்பது தான் இலக்கியமா என்ற கேள்வி இருந்தது. இலக்கியத் தரம் அடிப்படை அம்சம் எல்லா பாராட்டுகளும் பொதுஜன மனதை ஈர்ப்பதற்கு அப்பாற்பட்டது. ஜானகிராமன் இந்த சட்டகத்துக்குள் வருகிறாரா? வழிதவறிச் செல்கிறவர்கள் நிறைய அனுபவங்களைப் பெறுகிறார்கள். பக்குவம் அடைகிறார்கள். சிவசுவை பக்குவம் பெற்றவனாக அடையாளப் படுத்துகிறார்.
அலங்காரத்தம்மாள் பக்குவமானாள். யமுனா, இந்து, ரங்கண்ணா, அம்மணி எல்லோரும் பக்குவம் பெற்றவர்கள். “எல்லாம் இதற்குத்தானா? என்ற ஒற்றை வரிப் புலம்பலில் தன்னைப் பக்குவமானவளாக யமுனா அடையாளப்படுத்திக் கொள்வதைப் போல ஒவ்வொரு ஒற்றை வாக்கியத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். பாதை மாறிச் செல்வது அறிதலுக்குரிய ஒருவழிதான். இதில் பிழையேது? அம்மணியை இன்னும் கூட நேசிக்க முடிகிறது. வாசகர் மனதில் எழுத்து ஒரு அற்புத ரசாயனத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஜானகிராமனையே நாட வேண்டியிருக்கிறது. இவரின் அறம் புரிந்துக் கொள்ளக்கூடியதே. நல்லதை வரையறுக்க இயலாது. அதில் பொதிந்திருக்கும் அழகிய மர்மங்களைப் புரிந்து கொள்ள முடியும். இதுவும் இலக்கியத்தின் பகுதிதான். இலக்கியத்தை விட்டு விலகுவதில்லை. வாசகனுக்கு ஓர் உருவம் தருவது. வாசகனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் புலப்படும் அற்புதம் நிகழ்கிறது. கருத்திற்கும் உருவத்திற்கும் போட்டியே இல்லை. “நான் கண்ட ஐநூறு பெண்களின் கலவைதான் அலங்காரத்தம்மாள். உண்மையில் நான் எழுதவந்தது தஞ்சாவூர் மாவட்டப் பெரிய மிராசுதார்களின் லெளகிக அடாவடிகளைத்தான். அதில் இவர்களும் வருகிறார்கள்” என்று அறிவிக்கிறார்.
தமிழின் நெடும் இலக்கியப்பரப்பில் ஜானகிராமன் ஒர் அற்புதம். காலமும் இடமும் ஐக்கியமான மாய அனுபவத்தைப் பெறுவதற்கான வழிமுறையை லேசாகக் காட்டினார். சத்தியத்தைத் தேடுவது என்பது ஆத்மாவைத் தேடுவதுதான். “பூரணமான ஓர் இலக்கிய அனுபவம் என்பது முழு உண்மையே” என்று ஜானகிராமனை வியப்பார் க.நா.சு. மனித முகங்கள் வேறுபடுவதைப்போல நல்ல முயற்சிகளும் வேறுபடுகின்றன. அவை நியாயமானவை என்பது ஜானகிராமனின் வாதம். உலகத்தில் இலக்கியம் இருக்கிறதே தவிர அற இலக்கியம் என்றெல்லாம் கிடையாது. மற்றவர்கள் குத்தும் முத்திரை எப்போதும் அவரோடு இல்லை. ஜானகிராமம் பிரம்மாண்டம். ஜானகிராமன் ரிஷி.!
-நா.விச்வநாதன்
நா.விச்சுவநாதனின் வியப்பு ஏற்புடையது தான்.த ஜானகிராமன் தான் சந்தித்த மனிதர்களை இசையாக மீட்டினார் .இந்த இசையை வாசகர்கள் தம் மனோதர்மப்படி பல நிலைகளில் சஞ்சாரம் செய்தனர்.மண்ணும் மனிதரும் மணந்தனர். இங்கே ஜானகிராமனின் கலை நிற்கிறது.
க்ளாஸிக்ஸ்.