கம்பாட்டம்

நான் சென்று விளக்கை அணைத்துவிட்டு வீட்டின் ஒரு முக்கில் சுருட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரைகள் கிழிந்துவிட்ட கோரைப்பாயை எடுத்துவந்து தரையில் விரித்துப் படுத்துக்கொண்டேன். தாத்தா உறங்கிவிட்டதற்கான அறிகுறியாக அவரது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த அனக்கம் நின்றுவிட்டது.

நான் உறக்கம் வரும்வரை என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு அவரது அறையின் அனக்கத்தை கவனிப்பது வழக்கம். இன்று கொல்லமூட்டம்மன் கோயிலில் கொடை விழாவிற்கு நானும் தாத்தாவும் சென்று வந்தோம். கோயிலில் மத்தியானம் வைக்கப்பட்ட சோற்றை நான் இலையில் வாங்கி இரவுணவிற்காகக் கொண்டு வந்திருந்ததால் இரவு சமைக்கவேண்டிய தேவைகள் எதுவும் இல்லை. வெளியே மழை ரப்பர் காடுகளைப் பிளந்துகொண்டு பெய்துகொண்டிருந்தது.

ஒழுக்கிற்காக நான் வைத்திருந்த பாத்திரங்களில் வீழும் துளிகளின் ஒலி மிகுந்துகொண்டேயிருந்தது. தங்கைகளும் அவர்களின் குடும்பங்களும் கோயிலிலிருந்து நேரடியாக அவர்களின் ஊருக்குச் சென்றுவிட்டது நல்லது என்று நினைத்துக்கொண்டேன். இந்த மழையில் இரு குடும்பமும் குழந்தைகளோடு இரண்டு அறைகள் மட்டும் கொண்ட இந்தச் சிறிய வீட்டில் தங்குவது என்பது மிகவும் சிரமம். குழந்தைகள் பிறந்துவிட்டபிறகு தங்கைகள் குடும்பத்துடன் ஒருமுறைகூட இந்த வீட்டில்

இரவுத் தங்கியதில்லை. ஆனால் நான் மரியாதைக்காக அவர்களைக் கூப்பிடுவதும் அவர்கள் சின்ன வேலையிருக்கிறதென்று நாசூக்காக மறுப்பதும் ஒவ்வொருமுறையும் நடக்கும் நாடகம். அது இன்றும் கோயிலில் கொடை முடிந்து வீட்டிற்குப் புறப்படும் பொழுது வழக்கம் போல் எவ்வித வேறுபாடுகளுமின்றி அச்சுப் பிசகாமல்

நடந்து முடிந்தது. நான் கண்களை மூடிக்கொண்டேன். வீட்டின் தரையிலிருந்த மெல்லிய நடுக்கத்தை என் உடல் உணர்ந்தது. அது வெளியே பெய்கின்ற பெருமழையினால் வருகின்ற நடுக்கம் என்று நினைத்த எனக்கு சற்று நேரத்திலேயே அது காலையில் தங்கைகளின் குழந்தைகள் வீடு முழுவதும் ஓடி விளையாடிய

அதிர்வு என்று அறிந்த பொழுது உடல் சில்லிட்டது.

தாத்தா ஏன் இன்று பழையவற்றைச் சொன்னார் என்று என்னால் ஊகிக்கமுடியவில்லை. கோயிலில் வைத்து அவருக்குக் கொடுக்கப்படும் வழக்கமான மரியாதையை மறுத்து “எனி எல்லாம் அவந்தான் நமக்க காலம் கழிஞ்சாச்சில்லா” என்று என்னைக் கைகாட்ட, நான் விலக முயன்றும், வலுக்கட்டாயமாக நல்ல செவ்வந்திப்பூ ஆரம் ஒன்று என் தோளின் மீது போடப்பட்டது. அந்த மரியாதை மாற்றம் கூட அவர் பழையவற்றை என்னிடம் இன்று சொன்னதற்கான காரணமாகக் கொள்ளலாம். அல்லது கொல்லமூட்டம்மனின் விருப்பு அதுவாக இருந்திருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஏனோ இன்று நடந்தவற்றைச் சந்திப்பதற்கோ அல்லது உள்வாங்கிக் கொள்வதற்கோ உரிய நிலையில் என் மனம் இல்லை. வளைகுடா நாடு ஒன்றிற்குச் செல்ல கிடைக்கவேண்டிய விசா கிடைக்கவில்லை என்ற செய்தியும், சற்றே நெருங்கி முடியும் நிலையிலிருந்த திருமணச் சம்பந்தம் இனி நடப்பதற்கில்லை என்ற தகவலும் ஒரு சேர வந்து ஒருவிதச் சோர்வை உண்டாக்கியிருந்தது. கோயிலில் இருந்து திரும்பி வரும் பொழுதும் தாத்தாவிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் வீட்டிற்கு வந்ததும் அவர் அழைத்து சிலவற்றைப் பேசவேண்டும் என்றவுடன் ஏனோ ஒரு ஆர்வம் மேலிட அவர் அறைக்குச் சென்று கட்டிலின் அருகே ஒரு குறுங்கட்டியை போட்டு அமர்ந்துகொண்டேன்.

அவர் நரைத்துவிட்ட என் தலைமுடிகளுக்குள் கைகளை விட்டுக் கோதினார். நான் குறுங்கட்டியில் அமர்ந்தவாறே சம்பளம் கூட்டிக்கொண்டேன். தாத்தா தற்மநாடாச்சியின் கதையைச் சொன்னார். கொல்லமூட்டம்மன் கோயிலில் எங்களுக்குத் தரப்படும் இந்த செவ்வந்திப்பூ ஆரமும், கனகாம்பரச் சரமும், சுருள் என்றப் பெயரில் தரப்படும் பணமும் ஏன் தரப்படுகிறதென்று சொன்னார். தற்மநாடாச்சி அவரின் அப்பாவின் அப்பம்மை. அவள் ஊரில் மழை வராமலிருக்கும் பொழுது ஆடப்படும் கம்பாட்டம் என்னும் ஆட்டம் ஆடுபவள். கம்பாட்டம் இப்பொழுது முற்றிலும் அருகிவிட்டது. எப்பொழுதேனும் அரிதாக ஆடப்பட்டுக்கொண்டிருந்த அது, எங்கள் ஊரைச் சார்ந்த ஒருவர் இம்மாவட்டத்தின் நீர்வள ஆதார அமைப்பில் உயர்பதவியில் வந்தபொழுது கொண்டு வந்த சில பாசனத் திட்டங்களினால் முழுதாக நின்றுவிட்டது. அதனால் தாத்தா கேள்விப்படக் கடைசியாக கம்பாட்டத்தை ஆடியது தற்மநாடாச்சி தான்.

அவர் கதையை மிக நிதானமாக மெல்லியச் செருமலுடன் சொன்னார். பல பத்தாண்டுகளுக்கு முன் பருவத்தில் வரும் மழை பொய்த்துவிட்டது. மூன்று ஆண்டுகளாக மழை பெய்யாமல் போக்கு காட்டியது. ஏற்கனவே பஞ்சத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் மழையும் பொய்த்துவிட்டதால் செய்யும் செயல் அறியாது நின்றனர். கைவிடப்படுவோர் எட்டும் கடைசி வழியாகத் தெய்வத்தின் முன் நின்றனர். கொல்லமூட்டம்மனுக்கு எல்லா வகையான பூசைகளும் செய்யப்பட்டன. ஆனால் ஒரு துளி கூட மழை வரவில்லை. நீரை அள்ளித் தரும் வானம் தன் கைகளை விரித்துவிட்டது. பல இடங்களிலும் இருந்து வந்து கொல்லமூட்டம்மன் கோயிலில் கம்பாட்டம் ஆடினார்கள். ஆனால் மழை என்பது தெய்வத்தின் ஆட்டம். அது மனிதனின் ஆட்டத்திற்குக் கட்டுப்படுவதில்லை. நாளாக நாளாக நீருக்கான கஷ்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு பெண்களுடன் சேர்ந்து குடத்தைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகத் திரிந்தனர். ஊருணியில் நீருக்காகச் சொக்காரர்கள் அடித்துக் கொள்வது வழக்கமானது.

ஒரு முறை ஊருணியில் நீருக்காக நடந்த சண்டையில் மைத்துனன் ஒருவன் தங்கையையும் அவள் கணவனையும் தாக்கிய சம்பவத்தின் பின்னால் மக்கள் மீண்டும் கொல்லமூட்டம்மனின் முன்னால் நின்றனர். கம்பாட்டம் ஆடுவதற்காகத் தொலைதூரத்திலிருந்து ஒரு பெரும் ஆட்டக்காரி வரவழைக்கப்பட்டாள். மீண்டும் ஏமாற்றம். அப்பொழுதுதான் ஒரு நாள் வெகுநாட்களாக தொண்டைக்குழிக்குள் சீவன் கிடந்த பூண்டுஉரிச்சான் பாட்டாவிடம் பிராயக்கார பையன் ஒருவன் விளையாட்டாக

“ஓய் பாட்டா நீரு மண்டையப் போட்டீருணு சொன்னா ஒமக்க பிரேதத்தை குளிச்சோத்தமாட்டோம் பாத்துகிடம், பீணா பீ

மோளுணா மோளு அதோடயாங்கம் பூத்துவோம்” என்றான்.

அதற்கு அவர் “லே செத்தோல எங்கிணயாம் வெள்ளம் கோரி பிரேதத்தை

குளிச்சோத்துங்கல, உள்ள நாளம்படம் நல்லா குளிச்சி மணக்க மணக்க இருந்த ஒடம்பாக்கும், குளிச்சோத்தாம பூத்துனியள்னா கடிக்கும்ல, சொறியதுக்கும் எளவு

கையில உயிரு இருக்கதுல்லால” என்கிறார்.

அவன் விடாமல் “ஓய் உயிருள்ள மனியம் குடிச்சியதுக்கு வெள்ளம் இல்லாம தொண்ட காஞ்சி

கெடக்கான் ஆனா ஒம்ம பிரேதத்துக்கு குண்டி கழுவணுமோ” என்கிறான்.

கிடையில் கிடந்த பாட்டா தன் தலையைத் தூக்கி “லே மனியம் வளர வளரத்தான் குஞ்சியும் வளரும்ணி பண்டு சும்மா ஒண்ணம் சொல்லல கேட்டியா போய்

தற்மநாடாச்சிய ஆடியதுக்கு கூப்பிடுங்கல” என்று சொன்னார்.

பாட்டா சொல்வதில் உண்மையிருக்கும் என்று நம்பிய அந்தப் பிராயக்காரப் பையன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தற்மநாடாச்சியை பார்ப்பதற்காக அவள் வீட்டிற்கு வந்தான். அவர்கள் வந்தபொழுது தற்மநாடாச்சி மாட்டில் பால்கறந்து கொண்டிருந்தாள். அவர்கள் வந்ததைக்கண்டவள் அவர்களிடம் வந்து “லே என்னடே கூட்டமாட்டு வந்திருக்கிய” என்றாள். எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார்கள். அவளால் மறுப்பெதுவும் சொல்லமுடியாத செயல். வருணன் அவளை விளையாடிப் பார்ப்பதற்காக அழைக்கும் அழைப்பு. ஆனாலும் அவள் சற்றுத் தயங்கினாள். தன் கணவன் வந்தவுடன் அவரிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொன்னாள்.

அவர்கள் மக்களின் கஷ்டத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்கூறினார்கள். ஊர் பிழைத்திருப்பது அவள் கையில்தான் இருக்கிறதென்று அவளைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அவள் அவர்களைத் தேற்றி அனுப்பினாள். அவர்கள் வந்து கொல்லமூட்டம்மன் கோயில் அருகில் கூட்டமாக அமர்ந்திருந்தபொழுது தற்மநாடாச்சியின் கணவன் அங்கு வந்தான். “கொல்லமூட்டம்மனுக்கு பூசைக்கு ஏற்பாடு செய்ங்க நாங்க ஆடவாறோம்” என்று சொன்னான். அடுத்த ஒடுக்கத்து வெள்ளிக்கிழமை

கொல்லமூட்டம்மனுக்கு பெரிய பூசை ஏற்பாடு செய்யப்பட்டது. ஊர்க்கூட்டம் நடத்தப்பட்டு மக்களுக்கு வரி விதிக்கப்பட்டது. ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒடுக்கத்து வெள்ளியன்று காலையிலேயே தற்மநாடாச்சியும் அவள் கணவனும் கோயிலுக்கு வந்துவிட்டனர். கோயிலுக்கு அருகிலிருந்த ஒரு பெரிய புளியமரத்தின் அடியில் அமர்ந்து இரவு ஆட்டத்திற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர். பெரிய பூசையானதால் மக்கள் சுழன்று வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்.பொங்கலுக்குத் தேவையான பாலை வாங்கிவர ஒரு கூட்டம், அருகிலிருந்த காட்டில் விறகு பொறுக்க ஒரு கூட்டம் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இரவு நெருங்கியதும் தற்மநாடாச்சியும் அவள் கணவனும் ஒப்பனைகளைத் துவங்கினர். அவள் நல்லப் பச்சைநிறமும் சிகப்புநிறக் கரையும் கொண்ட பட்டு ஒன்றை உடுத்திக்கொண்டாள். அதைக் கால்களுக்கிடையில் பாய்ச்சிக்கொண்டாள். உச்சிக் கொண்டையிட்டு பவளமாலையிட்டாள். அவள் கணவன் ஊதாநிறப் பட்டு வேட்டியொன்றைக் கால்களுக்கிடையில் பாய்ச்சிக்கொண்டான்.

தற்மநாடாச்சி இலைகளை ஈர்க்குச்சிக் கொண்டு கோர்த்து வாள் ஒன்றைச் செய்துகொண்டாள். பின் கோயிலின் முன் தரையை நிரத்தி செம்மண் கொண்டு செய்யப்பட்ட களத்தின் நடுவில் இரண்டு கைகளைக்கொண்டு பிடிக்கும் அளவுள்ள ஆளுயரக் கம்பு ஒன்றை அவளும் அவள் கணவனும் சேர்ந்து நாட்டினார்கள்.

அந்தக் கம்பின் நடுவில் வட்டமாக விரல் அளவிற்கான ஆழத்தில் செதுக்கப்பட்டிருந்த இடத்தில் இரும்பாலான வளையம் ஒன்று மாட்டப்பட்டது.

அந்த வளையத்தின் ஒரு பகுதியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு கொக்கியில் மேலும் ஒரு வளையம் இணைக்கப்பட்டது. இணைக்கப்பட்ட வளையம்தொங்கிக்கொண்டிருந்தது. தற்மநாடாச்சி கம்பிலிருந்த வளையத்தில் தேங்காய் எண்ணெய்யைத் தடவினாள்.

பின் தன் கால்களால் ஒரு எட்டு கம்பிலிருந்து அளந்து அதைக் குறித்துக்கொண்டு, அங்கிருந்து தன் கையிலிருந்த இலைக்கத்தியால்ஒரு கத்தி அளவு அளந்து குறித்துக்கொண்டாள். அவள் குறித்த இடத்திலிருந்து கம்பத்தைச் சுற்றி பெரிய வட்டம் ஒன்று வரையப்பட்டது. இவையெல்லாம் நடந்துமுடிவதற்குள் பூசைக்கான நேரம் வந்துவிட்டிருந்தது. தற்மநாடாச்சியும் அவள் கணவனும் அம்மனைச் சென்று வணங்கினார்கள். பெரிய பூசை செய்யப்பட்டு மக்கள்அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு ஆட்டம் தொடங்கியது. தற்மநாடாச்சி சென்று கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்தவளையத்தைப் பிடித்தாள். அவள் கணவன் சென்று அதைச் சுற்றி வரையப்பட்டிருந்த கோட்டில் நின்றுகொண்டான்.அவன் கம்பீரமாக வருணன் வேடத்திலிருந்தான்.

இந்த ஆட்டத்தின் கதையென்பது வருணனுக்கு அச்சத்தை உண்டாக்கி மழை வரச்செய்வது. வருணன் நடக்கத்தொடங்கினார். கோட்டின் மீது மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தார். தற்மநாடாச்சி அவரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள். பின் தன் கைகளையேந்தி மழைவேண்டி இரந்தாள்.

இதைச் சொன்னபொழுது தாத்தாவின் முகத்தில் ஆராசனை வந்ததுபோல இருந்தது. அவர் எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்து மீதிக்கதையைச் சொன்னார். கம்ப சுத்தி சுத்தி வந்த அவளைக் காணாது எங்கோ நோக்கிக்கொண்டு வருணன் கோட்டில் சுற்றிக் கொண்டிருந்தார்.அவள் பெருங்குரலெடுத்து அழுதவாறே பாடுகிறாள்.

கட்டை எலைக் கண்ட வாழை-பகவானே

பகவானே

சுட்ட முலைக் கண்ட மழலை-பகவானே

பகவானே

நட்ட கன்று நிறம் மாறியதோ-பகவானே

பகவானே

எட்ட நின்று புறம் காணிப்பதோ-பகவானே

பகவானே

அப்படிச் சென்றுகொண்டிருந்தது பாட்டு. கம்பைச் சுற்றி வந்துகொண்டிருந்தவளின் கேவல் கேட்டு அவள் வீட்டுப் பசு கால் உரசி அழுதது. நடந்தபடியே கம்பியைப் பிடித்து கறங்கிக்கொண்டிருந்தவள் வருணன் கிறுங்காததைக் கண்டு தன் முட்டினைத் தரையில் ஊன்றி முட்டைத் தேய்த்து வளையத்தில் தொங்கியவாறே கம்பைச் சுற்றி வந்து மீண்டும் பாடினாள். வருணன் தன் புறமுதுகைக் காட்டியவாறு கோட்டைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறார். தன் சேலை முந்தானையை வருணனை நோக்கி நீட்டியவாறு பாடினாள்.

மேன்மக்கள் வாழும் மருதையிலே மா மழை – பகவானே

சான்றோர் வாழும் சாத்தையிலே செம்மழை – பகவானே

நல்லோர் வாழும் நெல்வேலியில் நாலுமழை – பகவானே

நஞ்சு மக்க நாடோ இந்த நாஞ்சில் நாடே – பகவானே

பாட்டை நிறுத்திவிட்டு கண்களில் நீர்வடிய வளையத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள். வருணன் தன் ஓட்டத்தை நிறுத்தாமல் கோட்டின் மீது பறந்து சென்றுகொண்டிருந்தார். தற்மநாடாச்சியின் ஒப்பாரியைக் கேட்ட ஊர்மக்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கரைந்தனர். மண்ணும் வானும் கண்டிராத ஒப்பாரி.வருணன் ஓடிக்கொண்டிருந்தார். திடீரென தற்மநாடாச்சியின் அழுகை நின்றது. வேகம் கொண்டு எழும்பினாள். இலையில் செய்த வாளினை எடுத்தாள்.வாளினை வருணனை நோக்கி வீசியவாறே பாடினாள்.

சூறைகாத்தா வந்து உன்ன சுத்தி அடிப்பேனே

பெருவயிறெடுத்து உன்ன குடிச்சி தீப்பேனே

கரி நிறத்த காணாம ஆக்குவேனே

தேரி மண்கொண்டு ஈரம் காய்பேனே

வாள் வருணனின் உடலை நோக்கி நீண்டு அவரை அச்சப்படுத்தியது. கோட்டின் மீது அவரின் வேகம் கூடியது. தற்மநாடாச்சியின் வேகமும் கூடியது. அவள் வளையத்தைப் பிடித்து தனது கால் பெருவிரல்கள் மட்டும் தரையில் படுமாறு ஊன்றி எழுந்து அந்தரத்தில் பறந்தவாறே கம்பத்தைச் சுற்றினாள். ஒரு சுற்று சுற்றுவதற்கு நான்கு முறைதான் அவளின் பெருவிரல் தரையில்பட்டது. அத்தனை வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுதும் வாள் வருணனை நோக்கி வீசியது. சரியாக இரவு மணி இரண்டிற்கு “நெலா மறைஞ்சிற்று நெலா மறைஞ்சிற்று” என்று ஒரு சிறுவன் சத்தம் போட்டான். மக்கள் எல்லாம் கோயிலில் இருந்து இறங்கி வெட்டவெளி நோக்கி ஓடி வானத்தைப் பார்த்தார்கள். வெள்ளி எல்லாம் மறைந்து வானம் முழுக்க கருமை சூழ்ந்திருந்தது. தொட்டால் எட்டிவிடும் தொலைவில் கருமை இருப்பது போல அந்த இரவின் இருட்டில் தெரிந்தது. மக்கள் ஆவேசம் கொண்டு ஆடினார்கள். பிள்ளைகளைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு ஆடினார்கள். துன்பம் எல்லாம் தீர்ந்ததென களிவெறியாட்டம் போட்டனர். திடீரென்று ஒரு காற்று. எங்கிருந்து வந்ததெனத் தெரியாத காற்று. சூறாவளிக் காற்று.மண் உருக்கொண்டு மேலெழுந்து சுற்றி வானை நோக்கிப் பறந்தது. மக்கள் அஞ்சிக் கோயில் புரைக்குள் ஓடினார்கள். மண் எழுந்து நின்று பேயாட்டம் ஆடியது.

புரைக்குள் நின்றோர் நாசியெங்கும் நிறைந்தது. உடலின் கடைசி ஈரமாகத் தொண்டையில் நின்ற எச்சில் நீரையும் வற்றவைத்தது. எல்லாத் தீப்பந்தங்களும் அணைந்துவிட பேரிருள் சூழ்ந்துகொண்டது. இருள் வளர்ந்து சூனியத்தை நோக்கிப் போய்விட்டது. மக்கள் வாணாளில் அறிந்திராத இருட்டின் முன் புலன்கள் அனைத்தும் செயலற்று நின்றிருந்தனர். அங்கே கட்டிலில் கிடந்த பூண்டுஉரிச்சான் பாட்டாவின் குரல் கேட்டது.

“லே தற்மநாடாச்சியையும் அவளுக்கப் பிரியனையும் காப்பாத்துங்கல காப்பாத்துங்கல” என்று அழுகையோடு கத்தினார். மக்கள் இறங்கி களத்தை நோக்கி ஓட முயன்று காற்றை எதிர்கொள்ள முடியாது மீண்டும் புரைக்குள் ஏறி நின்றனர். “தற்மநாடாச்சி எனக்க எம்மோ தற்மநாடாச்சி” என்று ஒரே கூக்குரல். சற்று நேரத்தில் காற்றின் வேகம் மட்டுப்பட்டது. வானத்தில் அலைந்திருந்த மண் மீண்டும் நிலத்திற்குத் திரும்பியது. வெள்ளி பூத்தது. நிலா மீண்டும் வானில் வந்தது. மக்கள் நிலா வெளிச்சத்தில்

தற்மநாடாச்சியையும் அவள் கணவனையும் கண்டார்கள். தரை மீது இருவரும் கிடக்க மண் அவர்களை மூடியிருந்தது. தீப்பந்தங்கள் எரிந்தன. மக்கள் ஓடிச்சென்று இருவரையும் தூக்கினார்கள். உடலெங்கும் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டார்கள். அவர்களை ஒரு திண்டில் அமரவைத்துவிட்டு களமெங்கும் வெளியெங்கும்தேடினார்கள். ஒரு துளி மழைத்துளியின் அடையாளமும் மண்ணில் இல்லை. தற்மநாடாச்சியிடம் மக்கள் வந்தார்கள். அவள் மண்ணில் புரண்டு அழுதுகொண்டிருந்தாள்.

அவர்கள் அவளைத் தேற்றினார்கள். அடுத்த ஒடுக்கத்து வெள்ளிக்கிழமை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்கள். தற்மநாடாச்சியின் முகம் அழுது அழுதுவீங்கிவிட்டது. மக்கள் சிறு சிறு கூட்டமாகக் களத்தில் அமர்ந்தார்கள். சற்று நேரத்தில் கேட்ட ஊளை அவர்களைத் திடுக்கிடச் செய்தது. தற்மநாடாச்சி கம்பத்திலிருந்த வளையத்தைப் பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தாள். மெல்ல நடந்து சுற்றத்தொடங்கினாள். ஆவேசம் பொங்க வேகம் கூடிக்கொண்டே சென்றது. அவளின் ஆவேசத்தைக் கண்ட அவள் கணவன் எழுந்து கோட்டில் கால்வைத்துத் தானும் ஆட்டத்தில் இணைந்துகொண்டான். இம்முறை கம்பத்தை ஒரு சுற்று சுற்றிவர அவளின் கால் பெருவிரல் ஒரே ஒருமுறைதான் தரையில் பட்டது. அந்தரத்தில் பறந்தாள் அவள். வருணன் அவள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தெவங்கிவிட்டார். ஆற்றலைத் திரட்டிக்கொண்டு மீண்டும் ஓடினார். வானில் மேகம் மீண்டும் திரள்கிறது. நிலா மறைகிறது. வெள்ளி காணாமல் ஆகிறது. இருள் சூழ்கிறது. தற்மநாடாச்சியின் பெருவிரல் உடைந்துவிட்டது. அவள் கீழே விழுந்துவிட்டாள். அவள் கணவனும் சோர்ந்து விழுந்துவிட்டார். இருவரும் வானத்தையே பார்த்தவாறு தரையில் கிடந்தனர்.

மேகம் முட்டிக்கொண்டு நின்றது. ஆனால் ஒரு துளி நீர் மண்ணில் விழவில்லை. முட்டிய மேகம் பிணங்கிய பெண் போலக் கலைந்து சென்றது.

“எம்மா நான் என்ன தெற்று செய்தேனம்மா” என்று எழுந்து ஓடி கொல்லமூட்டம்மனின் காலடியில் விழுந்தாள் தற்மநாடாச்சி. மக்கள் எல்லோரும் புரைக்குள் ஓடினார்கள். தற்மநாடாச்சி அசைவற்று அம்மனின் காலடியில் கிடந்தாள். வெகுநேரம் அவளைத் தொட யாருக்கும் துணிவு வரவில்லை. அவள் கணவனும் செய்யும் செயலறியாது நின்றார். கூட்டம் பேச்சற்று அமைதியாக இருந்தது. அந்த அமைதியைக் கிழிக்கும் விதமாகத் தொலைவில் தற்மநாடாச்சியின் வீட்டிலிருந்து அவள் பசுவின் சத்தம் கேட்டது. அவளைக் கூப்பிட்டது. தற்மநாடாச்சியின் உடலில் அசைவுகள் ஏற்பட்டன. அவள் மெல்லத் தன் தலையைத் தூக்கினாள். முட்டுக்கூட்டி எழுந்து தன் கணவனை நோக்கிக் கூறினாள்.

“ஓய் இங்கணயே நின்னுகிடம் நான் செண்ணு மாட்டுல பாலு கறந்துட்டு வாறேன், மக்க எல்லாரும் குடிக்க ஒரு வாய்

தண்ணி இல்லாம இருக்காவ, வந்து திருப்பியும் ஆடுவோம்”.

சொல்லிவிட்டு அவனின் பதிலுக்குக் காத்திராமல் இருளில் எழுந்து விரல் உடைந்துவிட்ட தன் கால்களைக் கிந்தியவாறு நடந்தாள். அந்த இருளில் அவள் தலையில் வைத்திருந்த கனகாம்பரச் சரம் தீச்சுடரென ஒளிவிட்டது. மக்கள் அவள் போன திசை நோக்கி அந்தத் தீச்சுடரைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே நின்றார்கள்.

இதைச் சொல்லியவுடன் தாத்தா ஏன் ஒரு நீண்ட இடைவெளி விட்டார் என்று தெரியவில்லை. ஆனால் தன்னுள்ளே ஆழ்ந்து சிந்திப்பதைப் போன்ற ஒரு முகபாவனையுடன் ஒரு நீண்ட அமைதியுடன் அமர்ந்திருந்தார். பின் சற்று நேரத்தில் அவர் முகத்தில் ஒருவிதத் தீவிரத்தன்மை உண்டாகியது. அம்மாவும் அப்பாவும் இறந்துவிட நானும் தங்கைகளும் தனியாகத் தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்து பின்பு நான் தலையெடுத்து கூலி வேலைக்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து தங்கைகளை ஓரளவு நல்ல

இடத்தில் கெட்டிக் கொடுத்து இந்த ரப்பர் தோட்டத்திலிருந்த ஒரு சென்ட் நிலத்தில் இரு அறை மட்டும் கொண்ட ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு தனியாக வாழத்தொடங்கியது வரை நீண்ட இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் தாத்தாவின் முகத்தில் இத்தகைய தீவிரத்தன்மையை நான் ஒரு பொழுதும் கண்டதில்லை. நான் அசைவற்று இருந்த என் உடலில் கால்களை நீட்டிக் கொள்வதின் வாயிலாக சில அசைவுகளை ஏற்படுத்தி அந்தத் தருணத்தின் தீவிரத்தன்மையை தவிர்க்க நினைத்தேன். ஆனால் தாத்தா இதையெல்லாம் எவ்வகையிலும் உணராதவர் போல அமர்ந்திருந்துவிட்டு சற்று நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவரது கதை சொல்லலைத் தொடர்ந்தார்.

கீழப்பக்கம் மெல்லிய வெளிச்சம் வரத்தொடங்கியபொழுது தற்மநாடாச்சியின் தலை தெரிந்தது. அவள் உடலில் முன் இல்லாத வேகமும் ஆக்ரோஷமும் கூடியிருந்தது. அவளின் ஆக்ரோஷத்தைக் கண்ட மக்கள் அச்சம் கொண்டு அவளுக்கு ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாதென்று கொல்லமூட்டம்மனிடம் வேண்டிக்கொண்டார்கள். கோயில்களத்தை அடைந்தவள் “ஓய் வாரும்” எனக் கூறித் தன் கணவனை அழைத்தாள். அவன் எழுந்து சென்று கோட்டில் நின்றுகொண்டான். தற்மநாடாச்சி சென்று கம்பில்மாட்டப்பட்டிருந்த வளையத்தைப் பிடித்தாள். பெரும் ஊளையொன்று கேட்டது. ஆட்டம் தொடங்கியது. தற்மநாடாச்சி ஒரு கால் பெருவிரலை மட்டும் தரையில் ஊன்றிஎழுந்து பறந்து ஆடினாள்.

கம்பத்தைச் சுற்றி அந்தரத்தில் பறந்துகொண்டேயிருந்தாள். அவளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வருணன் தேங்கிவிட்டார்.தற்மநாடாச்சி வானில் மின்னி மறையும் வெள்ளியெனப் பறந்துகொண்டேயிருந்தாள். ஒரு நொடி, அந்த நொடியில் தன் பெருவிரலை ஊன்றியவள் தன் இடுப்பிலிருந்தவாளையெடுத்து அவள் கணவன் மீது பாய்ச்சினாள். அது அவன் வயிற்றைக் கிழித்துக்கொண்டு உள்ளிறங்கியது. அவன் ரத்தவெள்ளத்தில் சாய்ந்துவிட்டான். மக்கள் அதிர்ந்து சொல்லற்று நின்றிருந்தனர். கீழே விழுந்துவிட்ட அவன் வயிற்றிலிருந்து ரத்தம் கொப்பளித்து வெளிவந்து தரையெங்கும் பரவியது. கொப்பளித்து வெதும்பி நின்ற ரத்தத்தில் முதல் மழைத்துளி விழுந்தது. தற்மநாடாச்சி “எனக்க தெய்வமே” என்று கதறியவாறு தரையில் விழுந்தாள். அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்தது. விடாத மழை. சிறிது கூட காற்று என்பது இல்லாத ஒரு மழை. யாரோ வானிலிருந்து நீரை இறைத்து ஊற்றியது போன்ற மழை. வெறும் தரையில் நீரூற்று பொங்கிய மழை. ஊரையொட்டி ஓடி கழியில் சென்று கலந்து கடலுக்குச் செல்லும் அந்த சிற்றோடை உருவான மழை. ஊரின் கொல்லா மரங்கள் எல்லாம் மறைந்து தென்னை மரங்கள் மிகவைத்த மழை. அன்றிலிருந்து நூறாண்டுகள் பொய்க்காமல் ஆண்டுதோறும் பெய்த மழை. காதலர்கள் தவித்த மழை. கல்லும் புழுத்த மழை. பசு தன் மடி சப்பிய மழை. தெங்கு எங்கும் குருத்த மழை. கழிநீர் குளிநீரான மழை. விழிநீர் அழிக்கவந்த மழை. நஞ்செல்லாம் வழித்த மழை. பஞ்சம் தீர்க்க வந்த மழை.மாமழை.

தற்மநாடாச்சி கடைசியாக ஆடிய ஆட்டம் அது. அடுத்த ஒடுக்கத்து வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்றவர்கள் கொல்லமூட்டம்மனின் கால்களில் தற்மநாடாச்சியின் தாலி சிக்கியிருப்பதைக் கண்டார்கள்.

தாத்தா சொல்லிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டார். அதன் பிறகு அவர் வேறு சொற்கள் எதுவும் பேசவில்லை. அப்படியே சாய்ந்து கட்டிலில் படுத்துக்கொண்டார்.

நான் பாயிலிருந்து எழுந்து அமர்ந்தேன். தாகம் இல்லையென்றாலும் தண்ணீர் குடிக்கவேண்டுமென்று தோன்றியது. எழுந்தபொழுதுதான் மழை அத்தனைத் தீவிரமாக வெளியே பெய்துகொண்டிருந்தது என் மூளைக்கு எட்டியது. நான் சென்று அறையின் ஒரு முக்கில் வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு

தாத்தாவின் அறைக்குச் சென்றேன்.

“தாத்தா”

அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

“தாத்தா”

மீண்டும் பதிலில்லை.

“தாத்தா தற்மநாடாச்சிக்க பிரியனுக்கு அவா அவர உண்மையான வாளெண்டு குத்தப் போறது தெரியுமா, அவருகிட்ட சம்மதம் கேட்டாளா” என்றேன்.

தாத்தா லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தார். பின் பதிலெதுவும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டார். நான் மீண்டும் என் அறைக்கு வந்து பாயில் படுத்துக்கொண்டேன். கோயிலில் எனக்குத் தரப்பட்ட அந்தச் செவ்வந்திப்பூ ஆரம் உயர்ந்தெழுந்து இருளில் ஒளிகொண்டு அந்த அறையை நிறைத்து என் முன் பிரம்மாண்டமாக நின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.