ந.பெரியசாமி கவிதைகள்

பூனை

விந்தி நடக்கிறது பூனை

தவறுதலாக

கால் ஒன்றை குறைச்சலாக்கி

வரைந்துவிட்டேன்.

 

எங்களுக்குள் இயல்பாகியது

அது முறைப்பதும்

நான் மன்னிப்பு கேட்பதும்.

 

விரையும் வேறு பூனை பார்க்க

அதன் கண்கள் நெருப்பாகிடும்

அப்பொழுது கிண்ணத்தில்

பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன்.

 

இன்று மறக்காமல்

வரைபடத் தாள்களையும்

எழுது உபகரணங்களையும்

எதிர் இல்ல சிறுமிக்கு

அன்பளிப்பாக்கினேன்

மென்மையை ஏந்திக்கொண்டு

பதுங்கிப் போனாள்.

 

உடனிருக்கும் நிலா

உன் சொற்கள்

எல்லோர் உடனும்

போகும் நிலா.

போர்வைக்குள் உடன் இருத்தி

உறங்கும் நம்பிக்கைமிக்கது.

பாவங்களைக் கழுவி

ரட்சிப்பதல்ல

நானிருப்பேன் எனும்

பலத்தைத் தருவது.

 

மந்திரச் சொல்

ஆகாயத் தாமரைகள்

கொக்குகளாகிப் பறக்கும்

காலம் வரக்கூடும்.

 

அன்றென் ஏரியில்

நிரம்பி இருக்கும் நீர்

மீன்களென சிறார்கள்

வான்பார்த்து நீந்திக் களிப்பர்

சிறு புழுவிற்கு

மீன்கள் கூடையை நிரப்பும்

காட்சிகள் மன அடுக்குகளில் சேர்ந்தபடி.

 

இருந்தென்ன செய்ய

கொக்குகளாக்கும் மந்திரச் சொல்

எந்த மேகத்துள்

ஒளிந்து கிடக்கிறதோ?

Previous articleபுறப்பாடு
Next articleகம்பாட்டம்
Avatar
ஒசூரில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனமொன்றில் வேலை. வெளிவந்த கவிதை தொகுப்புகள் நதிச்சிறை, மதுவாகினி, தோட்டாக்கள் பாயும் வெளி, குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம். கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது, அசோகமித்ரன் படைப்பூக்க விருது பெற்றுள்ளார். 'மொழியின் நிழல்' முதல் கட்டுரை தொகுப்பு.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments