புறப்பாடு

                          1

 உலகப்பற்றற்ற துறவிகளான தர்வேஷ்கள், தனது ஆன்மாவைக் கீழான மனோஇச்சைகளிலிருந்து இறைதுதியுடன் உரல்போல் சுழன்று ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் சமா எனும் சுழல் நடனத்தை வெளிப்படுத்த சிறுவர்கள் வரிசையாகப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வுமேடையில் நின்றுகொண்டிருந்தனர்.  தர்வேஷ் போல் தரித்த வெள்ளை அங்கியும், தொப்பியும் அணிந்து சமா சுழலுக்காக ஒரு கையை வானத்தின் பக்கமும், மறுகையை பூமியின் பக்கமும் நிலைநிறுத்தி, துருக்கியின் புல்லாங்குழல் இசைக்காக பாலகர்கள் காத்திருந்தனர்.  வரிசையாக நிறுத்தப்பட்ட நீளத்தொப்பி தலைகள்,  மேடையின் மஞ்சள் ஒளி வெளிச்சத்தில் சுருண்டுகொண்டே செல்லும் சிவப்பு திரையின் சுருள்களைப் பார்த்தவாறு கண்கள் நின்றன. சுபைதாவிடம் மூத்தவன் முழு ஒத்திகையைப் பலமுறை வீட்டிலேயே நிகழ்த்தியிருந்தாலும், சுழலும்போது அவன் மயக்கத்தில் விழுந்துவிடுவானோ என்று பதற்றமடைந்திருந்தாள். நான் அவளை இதெல்லாம் சிறுவர்கள் விளையாடும் தட்டாமாலை விளையாட்டு போல் நினைத்துக்கொள் என்று தைரியப்படுத்தியிருந்தேன். ஆனால் ஒரு சமா என்பது சாதாரணமல்ல, பார்வை, ஆழ்மனம், மூளை, செவிப்புலன் நான்கையும் சமப்படுத்தி இறைதுதி மூலம் சிந்தையைக் குவிக்கும் கலை. அதில் ஏதேனும் ஒன்று உடைந்தாலும் மொத்தமும் நாற்காலி உடைவது போல் சிதறிவிடும்.

 

பலத்த கைதட்டல் ஒலியுடன் வெண்ணிற குடைகளாக கீழாடை சுழன்று சூஃபிகளாக  சுழல ஆரம்பித்தனர். அப்போது மேடைக்கு அருகே இருந்த பழமையான அரசமரம். அதன் கிளைகளில் பறவைகள் திசைகளிலிருந்து அமர ஆரம்பித்திருந்தன. வண்ணப்பறவைகள் மயில்,  புறாக்கள், மஞ்சள்பட்டை, குயில், செந்நாரைகள் என ஒவ்வொன்றாய் உட்கார ஆரம்பித்திருந்தன. பார்வையாளர்களின் கவனம் நிகழ்ச்சியில் குவிந்திருந்தாலும் என் பார்வை மரத்தில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் விநோதமான பறவைகளே பிரக்ஞையில் நின்றுகொண்டிருந்தன. எந்நேரமும் பறவைகள் படையெடுத்து மேடைக்குள் நுழையலாம் எனும் பதட்டம் எனக்குள் புகுந்துகொண்டு இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. பறவைகள் ஒவ்வொன்றாக இறங்க ஆரம்பித்ததும் நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணி என் கண்களை இறுக மூடிக்கொண்டேன். சட்டெனப் பறவைகள் மேடையை நோக்கிப் படையெடுத்தன.

நான் இருபத்தைந்து வயதில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்ததற்குப் பெரிதாகக் காரணங்கள் ஏதும் இல்லை. பொருள் தேடி அலைந்து, நோயுற்று இறந்துபோகும் சாமானிய வாழ்க்கையை எனது மனம் பொருளற்றதாக எடை நிறுத்துகிறது. லௌகீக பாரம் நெரிசல் மிக்க ரயிலில் இருக்கை நுனிக்கு நகர்த்திக்கொண்டு போவதைப்போல் போலன்றி வேறேது. உள்ளக்கிடக்கையில் கூழாங்கற்களாக உருண்டுகிடக்கும் கனவுகளை மெல்ல நகர்த்திக்கொண்டுபோய் ஒரு பாறையில் மோதி தகர்கிறது. ஒரு பாறைபோல் தவம் கிடந்து தன்மீது கொடிகளாலும் பறவைகளாலும் ஆசீர்வதிக்கப்படும் இயற்கை உலகத்தையே என் மனம் நாடுகிறது.

லௌகீகத்தை விட்டு நகர்வதே இதன் முதல்படி.

அதற்காக நான் முதன்முதலில் சந்தித்தது கோயாவை தான். அவன் மலபாரி, கோலாலம்பூரிலே வாழ்ந்தாலும் மலபார் மந்திரதந்திரங்களுடன் நெருங்கிய உறவு உண்டு. மலபார் மாந்திரீகத்தில் கெட்டிக்காரர்களைக் கைவசம் வைத்துக்கொண்டு அவர்களின் பிரமுகராகச் செயல்பட்டான். ஜின் வசியம், வியாபார விஸ்தீரணம், ஸ்தீரி வசியம் என மாந்திரீக லாகிரிகளை சம்மந்தப்பட்ட பார்ட்டிகளோடு பேசிமுடிப்பது, சித்து வேலைக்கான தகடு, தந்திரப்பொடிகளைக் கைமாற்றிவிடுவது என அவனது வியாபார டீலிங் அனைத்தும் எனது கடைவாசலில் கிடக்கும் மேசை நாற்காலியில் தான்.

‘மண்ணினேயும் பொன்னாக்குன்ன மிருகத்தினேயும் மனுசனாக்குன்ன இஸ்முல் அஃலம் பிரவாஹம் செய்யுந்ந மலபார்,அந்தக் தீவ் போல மலேஷியயில் ஒரு தீவ் உண்டு புலாவ் பெசார் தீவ்’

எனப் பாதி தமிழும் மலையாளமும் கலந்து யாரிடமோ போனில்  பேசிக்கொண்டிருந்தான். அவனது பையில் வியாபார நெருக்கடி நீக்கும் நரிக்கொம்பு, ஆண்களை வசியம் செய்யும் பெண்களுக்கான முக ஊசி, விரும்பிய ஆண்மகனைப் படுத்த பாயோடு சுருட்டிவைக்க உதவும் தலையணை மந்திர வசிய உணவு  ‘நாசி கங்காக்’ இப்படி கைவசம் நிறைய உண்டு. சிலநேரம் சீனர்கள் கூட அவனைச் சந்திக்கவருவதுண்டு. கோயாவைச் சந்திக்க வரும் வாடிக்கையாளரிடம் அவன் விவரிக்கும் ‘மாய உலகம்’ ஒட்டுக்கேட்டதில் எனக்கும் அறிமுகமாகியிருந்தது.

வாப்பாவிற்குப் பிறகு உணவகத்தொழிலை ஏற்று நடத்தும் எனது கட்டாயசூழல், தொழில் தெரியாமல் சாப்பாட்டுக்கடையில் இறங்குவது தன்னை தானே பலி கொடுப்பதுபோலன்றி வேறெதுவுமல்ல. புதிதாக ஒருவன் உணவகத்தில் நுழைந்து அதன் அரிச்சுவடிகளை அறிவது,  கோப்பை, குவளையின் பயன்பாடுகளை.. தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் கூறும் சாக்குபோக்குகளின் அடியாழ மெய்மைகளை நீங்கள் மொழிபெயர்த்து அறிவதற்குள்.. போதும் என்றாகிவிடும். ஒருநாள் ரொட்டிபோடும் மாஸ்டர் படுத்துக்கொண்டால் முதலாளியே இறங்கி ரொட்டிபோடணும்.. தண்ணீர் போடுபவன் போங்கு அடித்தால் .. நாம் கோப்பி தண்ணீர் பட்டறையில் நிக்கணும். வாப்பாவுக்கு சாப்பாட்டுக்கடை அத்துபடி. பெர்னாக்கன் உணவு, வட இந்திய உணவு, சிங்கப்பூர் உணவுகள் என அவரது கைப்பக்குவம் பினாங்கு முதல் சண்டகான் வரை வேலைபார்த்து அவரது கையும் கால்களும் நளபாகத்திற்கென ஊறிப்போயிருந்தன. அடுப்பில் தாளிக்கும் வாசனை வைத்தே பண்டாரியைக் கூப்பிட்டு ஏன் தால்ச்சாவில் உப்பு கம்மியாக இருக்கிறது என அவரை வறுத்தெடுப்பார். ஒரு வேலைக்காரனாக வாப்பா கோலோச்சிய சாகசம், கோலாலம்பூரில் முதலாளியாகும் போது சறுக்கிவிட்டார்.  கூட்டாளிகளோடு இணைந்து உருவாக்கிய ரெஸ்டாரெண்ட்கள் பெரிதாகச் சோபிக்காமல் போக, வெறும் மேசையும் நாற்காலி, பாத்திரங்களை விலைபேசி முடிக்கும் போது நட்டமே கடைக்குள் யானைபோல் நின்றுகொண்டிருந்தது. ஒரு கடையில் பள்ளத்தை மறைக்க வட்டிக்கு வாங்கி மற்றொரு கடை ஆரம்பித்து, நான்கு கடைகளுக்கு நடுவில் தன் தலையைக் கொடுத்து நசுக்கிக் கொண்டார்.

ஸ்த்தீரி பிரச்சனையில் ஸ்வாமியை மனம் மாற்றனும். அவன் கூட ஒட்டிட்டு இருக்குற இந்தோனேசியக்காரியை வெட்டணும், ஏதாவது தங்கள்ட்ட ஏற்பாடு பண்ணு’ என கோயாவிடம் உதவிகோரி வந்த பெரிய பார்ட்டிக்கு, தேத்தாரிக் தண்ணீர் கோப்பையை மேசையில் வைக்கும் போது கோயா என் காதருகே வந்து சிகரெட்டை ஊதிக்கொண்டே என்னிடம் கூறினான்.

‘அகமத், எத்தனை முறை உனக்கு சொல்றது.. உனக்கு தோசம் இருக்கு.. நாளைக்கு காடி(கார்) புலாவபசார் போகுது. நீயும் வந்திடு..உன் கழுத்தைச் சுற்றி பாம்பு இருக்கிறது, ஒருமுறை என்னோடு வா. தோஷம் கழிச்சிடலாம். புங்கா மண்டீ போடலாம் ‘

இரவு, எனது அறையில்  புங்கா மண்டீ குளியலுக்குத் தேவையான ஏழு வகையான மலர்களைப் பையில் எடுத்துவைத்துக்கொண்டிருந்தபோது, வெளியே உம்மாவும் அக்காளும் அழகன்குளத்தில் இருக்கும் மாமாவிடம் அக்காவின் திருமணம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். கல்யாணத்திற்குத் தேவையான செலவுகளைப் புரட்ட மாமா பார்த்துக்கொள்வதாய் கூறினார். மாமாவின் உதவிக்குக் கைமாறு என்பது  மாமாவின் மகள் சுபைதாவையே எனக்கு மணமுடிப்பது என நல்லநாள் ஒன்றை மனதிற்குள் உம்மா தேடிக்கொண்டிருக்கிறாள்.

பால்யம் முதல் ஹாஸ்டல்களிலேயே வாழ்ந்துவிட்டதால் ஹரிராயவிற்கு (பெருநாட்கள்)  மட்டுமே வீட்டிற்கு வந்துபோகும் நாட்கள் ஒன்றில் தான் உறவுகளில் பிணைப்புகளற்று மைய நீரோட்டத்திலிருந்து விலகிக்கொண்டு வருவதை உணர்ந்தேன்.

தனிமை போக்க புத்தகம் வாசிக்க ஆரம்பித்த நாட்களில் தோராவும் எமர்சனும் என்னைக் கவர்ந்திருந்தார்கள். ஒருபுறம் நாளுக்கு நாள் இயற்கை மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டிருக்கும் நாட்களில் தான் மறுபுறம் குடும்பத்திற்கும் எனக்கும் நடுவே அகழிகள் பறிக்கப்பட்டு என்னை நானே தனிமைக்குத் தள்ளிக்கொண்டிருந்தேன்.

காலையில் இளநீலமாகவும், மாலையில் கருநீலமாகவும், இரவில் கரியதாகவும் மாறிக்கொண்டிருக்கும் கடல் மீன் மச்சங்களை, பாசி பவளப்பாறைகளை, கடல் ஆமை பேசும் மொழியை, கடலின் அடியாழ மௌனத்தை, மீன் வாய் உமிழும் குமிழியின் கவலை கனதியை  அப்படியே ஒரு தியானத்தின் மூலம் உள்வாங்கிக் கொள்வதுபோல் பூமியையும் மனிதர்களையும் அதன் சுபாவத்தையும் அப்படியே பிசகாமல் உள்வாங்கவேண்டும் என்பதே எனது நீண்ட கனா.

சிலர் இதெல்லாம் ‘பிஞ்சிலே பழுத்தது’ என உறவினர்களாலும் நண்பர்களாலும் நான் தூக்கிவீசப்பட்டுக் கொண்டிருந்தபோது இயற்கையின் தரிசனத்திற்கும், அதன் வழியே  கண்டடையும் அழிவற்ற பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பை அறியும் ஆன்மீகத்தை  உணர எனது வாப்பா வாங்கிவைத்திருந்த விலையுயர்ந்த கார்களை வீட்டிலேயே விட்டுவிட்டு வெகுதூரம் கால்களால் நாட்கணக்கில் காடுகளிலும் மலைகளிலும் உலாவியிருக்கிறேன். இயற்கையின் முடிச்சு அவிழ்ந்து ஆன்மீகம் தொடங்கும் ஸ்தலம், கோயா போன்றோர் உலாவும் மாயமந்திர உலகம் இல்லையென்று ஆழ்மனம் கூறினாலும், கோயா போன்ற மனிதர்கள் நாம் கண்டடையப்போகும் ஊரின் துருப்புச்சீட்டுகள் என்றே நம்புகிறேன். இதன் மூலம் ஏற்படும் அனுபவத்திற்காக அவனோடு பயணிக்க ஒத்துக்கொண்டேன்.

ஹிப்பி பின்னணிகொண்ட குழுவில் தாய்லாந்து எல்லை வரை நான் பயணித்திருந்தாலும் அவையாவும் திட்டமிடப்பட்டவை. கிடைக்கும் வாகனத்திலேறி, நிற்கும் ஊர்களில் இறங்கி, கிடைக்கும் உணவை மக்களோடு பகிர்ந்துண்ணும் திட்டமில்லா பயணம் தான் இலக்கு.

ஆதலால் கோயாவோடு நான் பயணிக்கப் போகும் இந்தப் பயணத்தில் வரும் இந்தோனேசிய மாந்திரீகர் குழுவோடு ஜாவாவிற்கு பயணித்து விடலாம் எனும் சந்தர்ப்பமும் சேர்ந்தே அமைந்தது. ஒருவழிப்பயணம் என்பதால் கடை வரவு செலவுகளை , இருப்பு விவரத்தை, தீர்க்கவேண்டிய கடன்களை எனது அக்காளின் ஈமெயிலுக்கு ‘பேலன்ஸ் சீட்டாக’ அனுப்ப பழைய டச்சு பாரம்பரியமிக்க மலாக்கா நகரத்தின் விடுதியிலிருந்து விடுபட்டபோது இந்தோனேசியாவிலிருந்து மாந்திரீகர் குழு விடுதிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

மலாக்காவிலிருந்து புலாவ் பசார் தீவுக்கு கடலைக் கிழித்துச் செல்லும் படகில் நாங்கள் இரட்டையாகப் பலகையில் அமர்ந்திருந்தபோது,

மிகப்பெரிய மாந்திரீகப் பொருள் கைமாறப் போவதற்கான அறிகுறிகள், காலையிலிருந்து விடுதிக்கு கோயாவை சந்திக்க ஈப்போவிலிருந்து வந்திருந்த பார்ட்டிகளை வைத்தே என்னால்  கணிக்கமுடிந்தது. தொலைதூரத்தில் தீவிற்குள் கொம்புதேங்காய் காய்க்கும் வளைந்த தென்னைகளும், கரையோரத்தில் அடிக்கப்பட்ட தற்காலிகக் குடில்களும், அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பாழடைந்த ஸ்பெயின்பாணி கட்டிடங்களும், உல்லாச விடுதிகளும் தூரம் குறையத் துல்லியமாகக் காட்சிகள் துலங்கிக் கொண்டே வந்தன. படகு கரைக்கு ஒதுங்கியதும் , கடலின் நீர் உள்வாங்கியிருந்ததால் பாறைகள் நிர்வாணத்தை மூடியமர்ந்து கரிய முதுகைக் காட்டிநின்றன. வற்றிக்கிடக்கும் சேருக்குள் பால்நண்டுகள் தன் கண்களைத் தூக்கி ஓடும் சகதியில், சிப்பிகள் கால்களை கிழிக்கும் அபாயத்தில் நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது, தமிழர்களும் மாமா முஸ்லீம்களும் தங்களது சோற்றுப்பொட்டலங்களைச் சுமந்துகொண்டு புலாவ் பசாரில் இருக்கும் சூஃபி பெரியவர் சுல்தானுல் ஆரிஃபீன் மகாமை நோக்கி தங்களது நேர்ச்சைகளுடன் நடந்துக்கொண்டிருந்தனர்.

சூஃபி பெரியவர் மலேயாவில் நிகழ்த்திய சன்மார்க்க பரப்புரைகள் மூலம் மலேயா இஸ்லாமிய சன்மார்க்கத்திற்குள் நுழைந்தது. அற்புதங்கள் நிகழ்த்தும் காரணக்கடல் சுல்தானுல் ஆரிஃபீன், தாங்களது ஹாஜத்களை(வேண்டுதல்) நினைத்து மக்கள் இங்கே குவிகின்றார்கள் என்று ஈப்போ பார்ட்டீகளிடம் கோயா ரத்தினச் சுருக்க அறிமுகத்தை முடிக்கும் முன்பு கரையை நாங்கள் எட்டியிருந்தோம். காரணக்கடல் சுல்தானுல் ஆரிஃபீன் மகாம் அருகே இருந்த நன்னீர் கிணற்றடியில் கோயா,  புங்கா மண்டீக்காக என்னை விட்டுவிட்டு மாலை கருக்கலில் மலையில் இருக்கும் சூஃபி தவக்குகையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

பையிலிருந்த ஏழுவகை மலர்களையும், காம்பு ஒடித்த வெற்றிலை, கொட்டைப்பாக்கு, தென்னங்கீற்று, மெழுகு பாத்திரத்தில் நீரோடு கொட்டியிருந்தது. பாத்திரத்தில் இருப்பதை ஒரே மூச்சில் தலையில் கொட்டிவிட்டு மகாமுக்கு ஈரத்தலையுடன் சென்றுவிடு என்று சைகை காட்டிவிட்டு தவக்குகையை நோக்கி அவன் ஏறும்போது கையிலிருந்த உயிர் சேவல் கூவிக்கொண்டு குதித்தது. அதன் கழுத்தில் கட்டியிருந்த வில்லையைத் தான் ஈப்போ பார்ட்டியிடம் ஒரு ஜரிகை பேப்பரில் கோயா பிரித்துக்காட்ட கண்கள் விரிய அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பகைவர்களிடமிருந்து காக்கும் கேந்திரம் ‘Besi kuning’ எனும் மாந்திரீக வில்லை, காட்டு எருது கொம்பிலிருந்து எடுக்கப்படும் அரியவகை சாமான். ரெண்டாம்நம்பர் சந்தையில் போலிகளுக்கு மத்தியில் நயமான பெசிகூனிங்கை அடையாளம் காண்பது சவாலாகும். இதை மோதிரமாகவும் தாயத்தாகவும் அணிந்திருப்பவர்களை எந்த வாளாலும் தோட்டாவாலும் காயப்படுத்த முடியாது என்பதே கூட்டு நம்பிக்கை. அதன் வியாபாரம் மலேசிய சந்தையில் பில்லியன் கணக்கில் கல்லா கட்டுவார்கள். கோயா இன்னும் சிலநேரத்தில் மாந்திரீகம் வேலைசெய்கிறதா எனக் காட்டும் சோதனை மந்திர சக்திமிக்க இடங்களில் முழுபெளர்ணமி நாளில் ஈப்போ பார்ட்டியிடம் காட்டப்போகிறான். கணநேரத்தில் இடுப்பில் இருக்கும் ‘க்ரீஸ் கத்தியை’ அந்தரத்தில் சுழலவிட்டு சித்துவேலைகாட்டும் இந்தோனேசிய மாந்திரீகர்களிடமிருந்து தருவிக்கப்பட்ட பெசிகூனிங்கை கோயா கைமாற்றப்போகிறான். ஏதோ ஒரு காரணத்தினால் இந்த வியாபாரத்தில் என்னை ஆரம்பத்திலிருந்தே கோயா தவிர்த்துவிட்டான்.

கோயாவின் கையில் பெசிகூனிங் கழுத்தில் கட்டப்பட்ட சேவல், கலங்க விழித்துப்பார்ப்பது, எத்தனை க்ரீஸ் கத்திகள் வீசினாலும் என் கழுத்தைக் காயப்படுத்திடா மாந்திரீகம் என்னிடம் இருக்கிறது என்று சேவல் பெருமிதம் பொங்கப் பார்ப்பதுபோல் எனக்கு இருந்தது. கோயா போன்ற தரகர்கள் மலேயா முழுதும் இருக்கிறார்கள். அதன் வியாபார ஒழுங்கே கையை மறைத்துக்கொண்டு விலைபேச ஒருகூட்டமும் , அதனை கண்மூடிக்கொண்டு வாங்குவதற்கு ஒரு கூட்டமும் காத்திருக்கிறது.

குளிர்த்த நீருடன் உலர்ந்த ஆடையுமாய், நினைவிடத்தை நான் நெருங்கும் போது அகில் கட்டைகளை எரித்துப் பரப்பும் வாசனைகளுக்கு நடுவில் வெண்ணிற திரைச்சீலைகளுக்குள் வெண்மை ஸ்படிக பெட்டகத்திற்குள் சூஃபியின் மகாம் ஒளி இலங்குகிறது. மகாமின் உயர சாரளத்திலிருந்து பச்சை தலைப்பாகையுடன் ஒருவர் வெளிப்படுகிறார். கையில் நறுமணம் கமழும் தொங்கத் அலி மரத்தில் ஒடித்து சீவப்பட்ட கவட்டை கைத்தடி.

                        2

அத்தாவை பலமுறை கண்டிருந்தாலும் அன்றுதான் அத்தாவை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் எனது தந்தை அவரை சந்தித்து, கஷ்டத்தைப் போக்கும் ஒரு இஸ்முல் அஃலம் (இறைத்துதி) வாங்கிவர அவரிடம் அனுப்பியிருந்தார்.

அத்தா ஒரு சூஃபி ஞானி. தன்னிடம் பிரச்சனைகளைக் கூறி ஆறுதல் கேட்டு வரும் செல்வந்தர்களிடத்தில்  ‘ஏழைகளைக் கவனியுங்கள். விஷேசமாக உங்களை இறைவன் கவனிப்பான்….’  என்று கூறிக்கொண்டேயிருந்தார். வீட்டின் முகப்பில் வழிந்த கூட்டம் ஒருவாறு வடிந்துகொண்டிருந்த போது, அத்தா, துண்டை உதறி முகத்தைத் துடைத்துவிட்டு மதியசாப்பாட்டிற்குத்  தயாராகிக் கொண்டிருந்தார். முகப்பில் நான் விரித்துக்கிடந்த நாற்காலியில் காத்திருந்தேன். வீட்டு வாசலுக்கு அருகில் பழமையான அரசமரம். ரம்மியமான காற்று அதன் கிளைகளை உலுக்கி இலைகளை உதிர்த்துக்கொண்டேயிருந்தது. நிமிடத்திற்கு மூன்று இலைகள் வீதம் என்றாலும் நிதானமான இலை உதிர்தல், சருகாய் பறந்து தெருவெங்கும் இலை இரைந்துகிடந்தது. வெளிறிக்கொண்டிருக்கும் பகலில் வளைந்து நெளிந்து ஓடும் கோம்பாக் ஆறு,  நீர் பெருகி அத்தாவின் பக்கவாட்டுச் சுவரை நனைத்தவாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

சந்தில் அரிசி மூட்டைகள் அடுக்கிய வேன் வளைவில் முந்தும் டயர் அச்சுகளுக்கு நடுவே மூட்டையிலிருந்து ஒழுகும் அரிசிமணிகள் வழியெங்கும் ஒரு வரைகோட்டை வரைந்துகொண்டேவந்தன. வேன் அத்தா வீடு இருக்கும் சந்துக்குள் நுழைந்ததும், ள் பழைய அரசமரத்திலிருந்து மணிப்புறா, சிட்டுக்குருவி, மைனாக்கள் என நூற்றுக்கணக்கான பறவைகள் சிதறிய அரிசிமணிகளை அலகில் கவ்விக்கொண்டு மீண்டும் மரத்தின் கிளைகளுக்கே திரும்பின. அத்தாவின் உபன்யாசம், மனதைச் சுட்டுவிட்டால் வந்தவர்கள் – பரிகாரமாய் அத்தாவிடம் ஏழைகளுக்காக அரிசி அனுப்பிவைத்தார்கள். அரிசி அத்தாவின் கிட்டங்கியை அடைந்தால் அதற்கு மறுநாளே அரிசிவேன், கம்போங் மலாயிலோ அல்லது கெண்டிங் மலையடிவாரத்து கிராமமான பதாங் காலியிலோ அரிசி பாக்கெட்களை ‘துஆன்.. பெராஸ்’ என தகரகுடிசை கதவுகளைத் தட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்.

அத்தாவை சிலமுறை  அதிகாலை தொழுவதற்கு மஸ்ஜித் இந்தியா வரும்போது கவனித்ததுண்டு. மக்கள் அவர்களைச் சூழ ஆரம்பித்துவிடும். காலையில் அவர் கொடுக்கும் நாசிலீமாவும் ரொட்டி சென்னாவும் வாங்கப் பெரிய வரிசையே காத்திருக்கும். வெள்ளை தலைப்பாகையும், சாம்பலும் கருப்புமாய் தாடிமுடி வேரிட்ட புன்னகை தவழும் அத்தாவின் முழுவதனத்தைக் கண்டுவிட்டால் ‘சகாயா’ எனச் சப்தமிடும் மலாய் பைத்தியக்காரன் கூட அந்த வரிசையில் நிற்பதைக் கண்டதுண்டு. ‘சகாயா’ என்றால் சாதாரண ஒளியல்ல. பேரொளி. ஜனத்திரள் மத்தியில் உடைந்த மாதுளை முத்துக்களைச் சிதறடிக்கும் புன்முறுவலுடன்  நீலவர்ண கரன்சிதாள்களை திணிக்கும் கரங்களை நாம் கடந்தால் ஊகிக்கலாம் அங்கே அத்தா இருப்பாரென்று.

தலைவாசலில் கைபனியனுடன் கைத்தடி தாங்கலாக வெளிப்பட்ட அத்தா, வேனில் சிதறிக்கிடந்த அரிசியையும்  அரசமரத்திலிருந்த பறவைகளையும் மாறி பார்த்தார். அவரைக்கண்டதும் பறவைகள், கிளைகளிலிருந்து மெல்ல இறங்க தரையிறங்க ஆரம்பித்தன. ஒவ்வொன்றாக அத்தாவைச்சுற்றி, இரண்டு அங்குலம் இடைவெளிவிட்டு அமர ஆரம்பித்தன. சிட்டுக்குருவியின் அலகுகள் ‘கீச் கீச்’ என அத்தாவின் வேரிட்ட தாடியை முத்தமிட்டு முதல் வட்டத்தில் அமரத்தொடங்கின. பின்பு புறாக்கள் உருண்டுகொண்டிருக்கும் கண்களால் அத்தாவைப் பார்த்துக்கொண்டே இரண்டாவது வட்டத்தில்.. மூன்றாவது வட்டத்தில் காகங்கள்.. இப்படி அடுக்கடுக்காக ஏழு வட்டங்களில் விதவிதமான பறவைகள் அமர்ந்திருந்தன.

நாற்காலியில் அமர்ந்திருந்த என்னை அழைத்த அத்தா ஒருபிடி அரிசியைக் கையில் திணித்து பறவைகளின் வட்டத்திற்குள் எனை வரவழைத்தார். ‘ஹூ’ வென ஒரு கையை மேலும் கீழுமாக வைத்துக்கொண்டு  அசைத்தது போதும்,  ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் பறவைகள் மெல்ல எழுந்து சிறகடித்தன. சிறகடித்துக்கொண்டே நீள்வட்டத்தில் ஆரம்பித்த சுழல் , மெல்ல வேகம் எடுத்த போது பறவைகளின் இறகுகள் உதிர ஆரம்பித்தன. மனிதர்களே இல்லா அத்தெருவில்  பெரிய காற்றுசுழலின் தட்டாமாலை, ‘‘ஹூ’வென்று நித்தியமானவனின் சுழலில் ஓரிழையாக உருமாறியிருந்தது. எங்கு காணிணும் பறவைகளின் இறகுகள்.. பஞ்சுபோல் உதிர ஆரம்பித்தன.’ ஹூ’ வென ஓங்காரம் சுழன்று ஆடிமுடிகையில் நிகழ்ந்த மாயவெளிகாட்சியில் நான் உறைந்து ஸ்தம்பித்துப்போயிருந்த கணம், அத்தா என் கையை பிடித்து அரிசியை பறவைகள் மீது எறிந்ததும்

வட்டமடித்த பறவைகள் சூழ்ந்துகொண்டு என் உடல் மீது ஏறி ஊற ஆரம்பித்தன. அதன் அலகுகள் தந்த முத்தத்தில் அதன் சிறகுகள் மார்பினில் கால்களில் தந்த  கூச்சத்தை அதன் ஸ்பரிசத்தை எங்கனம் மறவேன் ? அதன் உதிர்ந்த சிறகொன்று படகு போல் அனாந்தரத்தில் பறக்க ஆரம்பித்தது. அதன் மயிர்க்கால்களைக் கூர்ந்து பின்தொடர்ந்தேன். அத்தா சுழன்ற அத்தனை சுருள்களும் உதிர்ந்த இறகின் மயிர்க்கால்களுக்குள் சுருண்டுகிடந்தது. பெரிய தட்டாமாலை ஆட்டம் ஒடுங்கியபின், அற்புதம் பிரவாகிக்கும் இஸ்முல் அஃலம் மந்திரம் எதுவென்றேன்? .

‘காத்திரு, காத்திரு வெளியில் எங்கும் போகாமல் இன்றிரவு வாப்பாவுடன்இரு..இனி உனக்கு நல்லகாலம் போய் வா..’ என்று என் தலையைத் தடவி வழியனுப்பிவைத்தார் அத்தா. வழியெங்கும் பறவைகளின் ஸ்பரிசம் உடலைப் பஞ்சுபோல் எடைகுறைந்து மனபாரம் இறங்கியிருந்தது. கடனைப்பற்றியோ கடையைப்பற்றியோ எந்த பிரக்ஞையுமற்ற நான் பறவையாகியிருந்தேன்.

நள்ளிரவில் நானும் வாப்பாவும் உம்மாவும் அக்காவுமாக இருமருங்கில் அமர்ந்துகொண்டு வாப்பாவின் படுக்கையில் பேசிக்கொண்டிருந்த நேரம், தோள் வலியெடுக்கிறது என சரிந்தார் வாப்பா. அவசரமாய் ஆஸ்பத்திரிக்கு நான் காரில் அள்ளிக்கொண்டு ஓடியபோதே  புரிந்துகொண்டேன். அரைமயக்கத்தில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவர். மருத்துவமனைக்குப் போகும் முன்பே கண்களை மூடியிருந்தார்.

                       3

 புலாவ்பசார் தீவு மற்ற தீவுகளைப்போல் அல்லாது நகரத்திலிருந்து வெகு அந்நியத்தன்மை கொண்டவை, விநோத ஒலிகள் எழுப்பும் பறவைகள், சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்கள், பொந்துகளில் பதுங்கும் உடும்புகள், சூஃபி ஞானிகள், தன்னிலை மறந்த மஜ்தூப்கள், கல்வத் எனும் தவத்திற்காகத் தனிமையை விரும்பிவந்தவர்கள், கடல் ஆமைகள் ஊறும் மலைக்குன்றுகள் என்று தனித்த அமானுஷ்யதன்மை கொண்டது. நெளிந்த தகரத்துடன் மக்களை ஜெட்டி துறைமுகத்திலிருந்து மகாமிற்கு அழைத்து வாரும் வேன்கள் மலைக்குன்றுகளில் குலுங்கும் பயணத்தை நிறுத்திவிட்டு இரவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நேரம், ஆளரவமற்ற இரவு, புங்காமண்டீயால் உடலில் ஒட்டிய இருவாச்சி மலரும் செம்பருத்தி இதழ்களோடு ஈர உடலோடு , மகாமில் நடுங்கிக்கொண்டிருந்தேன். எதிர்பாரா நேரம் எனது மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு ஒருகரம் சூஃபி மடத்திலிருந்து முழங்காலளவு சிரவி புற்கள் மண்டிய புதர் வழியாக மலையை நோக்கி இழுத்துச்சென்றது. முன்னே ஆஜானுபாகுவான உயரத்தில் பச்சை அங்கியில் மலாய் மனிதர் நடந்துகொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த மோதிரக்கல் பாதையெங்கும் வெளிச்சத்தை நிரப்பியிருந்தது. தொங்காத் அலி கட்டையில் செதுக்கிய கைத்தடி தடமும் தாழம்பூ வாசனையும் வழிப்பாதையில் நாங்களிருவரும் பயணித்த தடயங்களாக விட்டுச்சென்றன. அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பச்சைநிற கோல்ப் மைதானம் புல்வெளி இப்போது இருளாக இருந்தது. பாழடைந்த ஸ்பெயின் பாணி  கட்டிடங்கள் நிராயுதபாணியாக இருளில் நின்றுகொண்டிருந்தன. உடும்புகளின் குட்டையில் பால் நிலா மிதந்துகொண்டிருந்தது. அதில் ஆமைகளின் செதில்நீந்தியதில் உண்டான நீர்த்திவலைகள்  நிலவினை ஆட்டம் காணச்செய்தது. இரண்டு மணிநேர நடையில் ‘பத்து பெல்லா’ எனும் மலை உச்சத்தை அடைந்திருந்தோம். சுற்றிலும் கடல். அடர்த்தியான திரவத்திற்கு அப்பால் மூக்குத்தி கற்கள் போல் தொலைதூர நகரத்தின் விளக்குகள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. எங்கும் இருள்சூழ்ந்திருந்த மலையின் உச்சத்திலிருந்து சூஃபி மடத்தைக் கண்டேன். முழுபெளர்ணமியின் நிலவில் பிரகாசமான சுடர் விட்டுக்கொண்டிருந்தது. சுடரில் மனம்

லயித்து திரவமாக சொட்டிக்கொண்டிருந்த நேரம், மெல்ல மனதின் அடியாழத்தில் கூழாங்கற்கள் கரையில் ஒதுங்கி ஒரு சீரான நீரோட்டத்திற்கான முன்னோட்ட ஒத்திகை நடந்துகொண்டிருந்தன. அது இயற்கையும் ஆழ்மனதையும் பிரபஞ்சத்தையும் நோக்கிப் பாய ஆரம்பித்த கணம்,  தொங்காத் அலி கைத்தடி, என் முதுகை வருடியது.

‘நம் அகத்தின் சுடர் தான் சந்திரனாகவும் சூரியனாகவும் ஒளிவிளக்காகவும் .. பிரபஞ்சமாகவும் .. எல்லா மூலத்திற்கு சாகாயாவாகவும் ..’ என்றதும் திரும்பிப் பார்த்தேன்.

சகாயா?  அத்தா ? .. என்றேன்.

ஆமாம் உள்ளே போ.. என்றார்.

மலை உச்சியின் குவா யூனுஸ் மலைக்குகை, உள்ளே ஒளிரும் தீப்பந்த வெளிச்சத்தில் அத்தா மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மலைக்குகையில் உள்ளடுக்குகளில் வழியும் வெள்ளியருவியின் இரைச்சல் யாதொரு தடங்கலையும் வகுப்பிற்கு ஏற்படுத்தாமல் வழிந்து கொண்டிருந்தது. அத்தாவை சுற்றி மணிப்புறாக்களும் பறவைகளும் உடும்புகளும் ஆமைகளும் அதனதன் இயல்பில் புலன்களால் உள்வாங்கிக்கொண்டிருந்தன. உபன்யாசம் சிலநேரம் மௌனங்களாகவும், பார்வைகளாகவும், உன்மத்த நிலையாகவும், பித்துநிலையாகவும் இருந்தது. இறைத்துதியில் லயித்து நிலைகுத்தி நின்றவர்கள் குகையின் மறுபகுதியில் நின்றனர். சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் சிலர் மயக்கத்தில், மாதங்கள் வருடங்கள் தாண்டிய அவர்களின் தவநிலைகள் மீது கொடிகள் படர்ந்திருந்தன. சிலரின் மீது சிலந்திவலை பின்னப்பட்டிருந்தன.

‘உனக்கான அவகாசம் இந்நாள்’ என இருவர் என்னை அத்தாவிடம் அழைத்துச் சென்றனர்.

‘ஒரு பாறையைப் போல் உங்களால் நிசப்தமாக இருக்க முடியுமானால் உங்களின் மீதே விருட்சங்கள் வேர்விடும். பறவைகள் வந்தமரும். மழையும் வெயிலும் உடலை வடிவேற்றும். இயற்கையை புரிந்துகொள்ள கூர்ந்த புலன்களும் பொறுமையுமே அவசியம் எனும் தோராவின் எழுதப்படா வாசகங்கள் குகையில் காட்சி சித்திரங்களாக உருப்பெறுகின்றன. ஃபனா பக்கா எனும் அழிதலும் உயிர்ப்பித்தலுமே பிரபஞ்ச இயங்குநிலை,  கடுந்தவம் மூலம் ஈட்டுக்கொள்ளும் அகத்தின் சுடரைப் போல் வேறு பேறு ஏது. தவநிலைகள் குகையின் இருளில் அழிவில்லா பேருண்மையைச் சரிக்கு நிகர் சந்திக்கும் திராணியை  வார்த்தெடுக்கிறது. இவ்வாறு ஒருகணத்தில் சட்டென அகத்தில் விருட்சமென வளரும் பேருண்மையை அகச்சுடரைக் கண்டுவிட்டால் இதுவரை தான் வாழ்ந்த மொத்த லௌகீகத்தையும் காட்சிப்பிழைகளென கைகழுவி விருட்சத்தின் உச்சிக்கு உயர்ந்து உச்சம் காணும் நிலையில் பித்து நிலை தெளிந்து, உலகத்திடம் தன்னை ஒப்படைக்க மறுக்கிறார்கள். வீடு செல்ல மறுக்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம், அத்தா, அவகாசம் முடிந்ததென வீடு திருப்பிவைக்கிறார். சமூகத்திற்காக அர்ப்பணிக்கப் போகிறேன் என்பவர்களிடம் முதலில் உன் குடும்பத்திடம் நல்ல பெயரெடு.. என லௌகீக வாழ்வை நோக்கி அத்தா திருப்பிவிட்டுக் கொண்டிருக்கையில் வகுப்பை நோக்கி,

‘துறவு என்பது ஒரு வழியல்ல,.

 உலகைத் துறந்து உண்மையைக் காண்பதும்

 உண்மை கண்டதும் உலகிற்கே திரும்புவதுமாய்

 இருவழிப்பாதை ‘

என்றார் அத்தா.

வனவாசம் முடிந்தவர்கள் விடைபெறுதல் குகையில் நிகழ்ந்துகொண்டிருக்கையில் தான், தவநிலையின் ஒரு மயக்கத் தெளிவில் அத்தாவிடம் கேட்டேன்.

‘இஸ்முல் அஃலம் எனும் பேரற்புதம் என்ன?

‘நீ பொறுமையாக இருப்பது, காலம் கனியும் வரை.. உனக்கான பக்குவம் அடையும் வரை .. பொறுமை தான் இஸ்முல் அஃலம், பொறுமை தான் பேரதிசயம்.. காத்திருப்பு தான் மந்திரம் . மண்ணைத்தொட்டால் பொன்னாகும்.. மிருகத்தை வருடினால் மனிதனாகும்..’ என்றார் அத்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.