மக்கள் எதிரி ஷேக்ஸ்பியரின் ஃப்ஸ்ட் ஃபொலியோ

ஷேக்ஸ்பியர் எனும் இங்கிலாந்தின் எழுத்தாளர் உலகளாவிய இலக்கிய கோட்பாடாக மாறி நூற்றுக்கணக்கான வருடங்கள் கடந்துவிட்டன. ரெனைசான்ஸ் காலகட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்து இங்கிலாந்தின் கலாச்சாரச் சின்னமாக அவன் கொண்டாடப்படுகிறான். பத்தொன்பதாவது நூற்றாண்டின் விக்டோரிய யுகத்தின் அனைத்து அற-நெறி மதிப்பீடுகளுக்கு முரணாகாமல் ஒத்துப்போன அவன் நாடகங்கள் ஐரோப்பாவின் காலனிய ஆதிக்கத்திற்குத் துணை நின்றது வியப்புக்குள்ளான சங்கதியொன்றுமல்ல. அவனுடைய பெரும்பாலான நாடகங்கள் அரிஸ்டாடிலின் “மூன்று ஒற்றுமை” (Three Unities) களில் இடம், காலம் ஒற்றுமைகளை நிராகரித்து ரெனைசான்ஸ் காலகட்டத்தின் மனித ஆற்றலை மேலோங்கி பிடித்தாலும் ஆழத்தில் மன்னராட்சியை (அதிகாரத்தை) வலிமைப் படுத்தவே விரும்புகின்றன. அரசாட்சிக்கு எதிராக எழும் புரட்சிகளை அவன் நாடகங்கள் தீய நிகழ்ச்சிகளாகவே கருதுகின்றன. ‘மெக்பத்’ நாடகத்தில் அது பட்டவர்தனமாகத் தெரிவதை இலக்கிய விமர்சகர்கள் காண்பித்துள்ளனர். அங்கு வரும் “விச்சஸ்” யாரென்பதைக் குறித்து மார்க்சீய இலக்கிய விமர்சகர்கள் எழுதியுள்ளனர். அன்றைய இங்கிலாந்தின் அரசி எலிசபெத் இறந்த பிறகு அவருக்கு நேரடி வாரிசு இல்லாத காரணத்தினால் உண்டான ஆட்சி குழப்பத்தில் அரசனாகப் பொறுப்பேற்றிருந்த ஒன்றாம் ஜேம்ஸிற்கு ஆதரவாக எழுதிய நாடகம் தான் மெக்பத் என்கிற வாதத்தை நாம் மறக்க இயலாது. ஒன்றாம் ஜேம்ஸிற்கு எதிராகக் கிளம்பிய புரட்சியாளர்களை மக்கள் மனதில் தீய மனிதர்களாகச் சித்தரிக்கவே “மெக்பத்”, லேடி மெக்பத், விச்சஸ்” போன்ற பாத்திரங்களை ஷேக்ஸ்பியர் சிருஷ்டித்துள்ளான் என்கிற வாதத்தை நாம் எளிதில் புறம் தள்ளிவிடவும் முடியாது. அவனுடைய மற்ற நாடகங்களிலும் இது தான் நிகழ்ந்துள்ளது என்றே கூறலாம். டென்ன்மார்க், ஹாலந்து போன்ற ஐரோப்பியாவின் மற்ற  சமூகங்களிலிருந்தும் கதைகளை எடுத்துக்கொண்ட அவன் கிறுத்துவத்திற்கு முன்னிருந்த ரோமா அரசாட்சியிலிருந்தும் கதைகளை மேடையாக்கியுள்ளான். ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்த ஜூலியஸ் சீஸர் கதையை நாடகமாக்கத் தெரிந்தவனுக்கு ரோமா அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராகப் போர்தொடுத்துக் கொல்லப்பட்ட ஸ்பார்ட்கஸ் தெரியாமல் போனது எதேச்சையா? ஜூலியஸ் சீஸர் எனும் ரோமா அரசன் செய்த காரியங்களை விட ஷேக்ஸ்பியரின் நாடகம் சீஸரின் கொலைக்குப் பிறகு நடக்கும் சங்கதிகளைத் தான் வெகுவாகப் பேசுகிறது. ரோமா சாம்ராஜ்ஜியத்தின் அடிமை முறையை எதிர்த்து அடிமைகளையெல்லாம் ஒன்றுசேர்த்து போர் தொடுத்த ஸ்பார்டகஸ் ஷேக்ஸ்பியரின் கண்களுக்குப் படாமலேயே போனது வியப்புக்குள்ளாக்கும் சங்கதி. ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாக எழுதி வந்த அல்லது அவன் பெயரில் சிலரால் எழுதப்பட்ட ஷேக்ஸ்பியரெனும் நபர் சாமானியர்களின் எதிரி என்றே என் பலமான கருத்து.

பின் நவீனத்துவ தத்துவவாதியான மிஷெல் ஃபுக்கொ கூறுவது போல் அதிகாரம் என்பது மையமாக ஒரே இடத்தில் செயல்படாமல் மருத்துவம், கல்வி, பொதுநல மக்கள் சேவை, கலை இலக்கியம் போன்ற “டிஸ்கோர்ஸ்” களால் மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். தன் சொந்த விருப்ப-வெறுப்புகளை இதுபோன்ற டிஸ்கோர்ஸ்களால் மக்கள் மத்தியில் அழியா உண்மையாய் வடிவமைத்து அவற்றை இயல்பாக மாற்றியமைக்கும் என்கிற ஃபுக்கொவின் தத்துவம் நம் அனைவருக்கும் அறிந்ததே. இதைத்தான் ஷேக்ஸ்பியர் தன் நாடகங்கள் வழியாகச் செய்தது. அவன் நாடகங்கள் அரசாட்சியை அல்லது அதிகார முறைமையைப் போற்றும் காரணத்தினால் தான் இன்றும் அதிகார வர்க்கங்களுக்கு அவன் செல்லப் பிள்ளை. முடியாட்சியை அவன் நாடகங்கள் கொண்டாடுவதினால் தான் ராணி விக்டோரியா ஆட்சிக்காலத்தில் (பத்தொன்பதாவது நூற்றாண்டில்) நடந்த காலனியப் படையெடுப்புகளில் மாலுமியாக உலகமெங்கும் ஷேக்ஸ்பியர் சென்று அங்குள்ள அதிகார வர்க்கங்களுக்கும் துணை நின்றது. கிரேக்கக் காலம் முதல் இது தான் இலக்கியத்தில் நடந்திருக்கிறது. சாஃபோக்ளாசின் “ஈடிபஸ், தி ரெக்ஸ்”” கூட இத்தகைய டிஸ்கோர்ஸைத் தான் நிகழ்த்தியுள்ளது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் “பாவங்களால்” சூழ்ந்தவன்; பின்னணி அறியாது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாயகன் இவ்வாறு அறம் இழந்தவனாக இருப்பான் எனும் அரசியல் கோட்பாட்டை மக்கள் மனதில் நிரந்தரமாக நிறுத்தவே அரிஸ்டாடலும் ஈடிபஸ்” நாடகத்தை தன் “கெதார்ஸிஸ்”” சிந்தனையால் இலக்கிய இயல்பாக, அதனூடே மனித வாழ்க்கையின் அறமாக மாற்றியது. அதைத்தான் ஷேக்ஸ்பியரும் பதினாறாம் நூற்றாண்டில் தன் நாடகங்களில் முன்னெடுத்து மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகளை (கேலி, நையாண்டி செய்தும்) சமூகத்தின் தீய செயலாகக் காண்பிக்கவே முற்பட்டுள்ளான் என்றே கூறலாம். ஆனால் ஸ்டீவன் க்ரீன்ப்ளாட், ஜனதன் டால்லிமர் போன்ற பின் நவீனத்துவ (நியூ ஹிஸ்டோரிஸிஸம், கல்சரல் மெட்டிரியலிஸம்) விமர்சகர்கள் இவ்வகையான ஷேக்ஸ்பியர் வாசிப்பை நிராகரித்து ஷேக்ஸ்பியர் தன் நாடகங்களில் அரசாட்சியை சூட்சுமமாக விமர்சித்துள்ளான் என்கின்றனர். பதினாறாம் நூற்றாண்டில் அரசு தணிக்கையை மீறியும் அவன் இதைச் செய்துள்ளான் என்பதைக் காண்பிக்க அவன் நாடகங்களை மீள் வாசிப்பு செய்து சான்று தந்துள்ளனர். ஆனால் அவையெல்லாம் இன்றைய அரசியல் வசதிக்காக நாம் செய்துகொண்ட வாசிப்பென்றே எனக்குத் தோன்றுகிறது. இலக்கியத்தை இவ்வாறு நாம் ஒரு வட்டத்திற்குள்ளிட்டு அரசியல் வெளிப்பாடாக அதைப் பார்ப்பது மிகவும் தவறு என்கிற கருத்தே மக்கள் எதிர்ப்பு நிலையில் நின்று பேசுவது தான். அதற்காக அனைத்து இலக்கியமும் சோஷியலிசத்தைத் தான் கருவாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல, பதிலாக இலக்கியம் என்பது என்றென்றைக்கும் ஒரு “சப்வர்ஸிவ்”“ செயல் என்பதை நிரூபிக்க சில படிமங்களையாவது அது உட்கொண்டிருக்க வேண்டும் என்று கூறலாம். அதிகார தொனிகளை நிராகரித்து எல்லோருக்கும் உகந்ததான உலகை சிருஷ்டிப்பது தான் இலக்கியம் என்றே கூறலாம். ஆனால் அதிகாரம் மனித இல்யல்புகளிலொன்றான ‘சுதந்திர’ மனப்பான்மையைக் கருவாகக்கொண்ட ’ இலக்கியங்களைப் புறந்தள்ளி அல்லது முற்றிலும் அழித்து தன்னைப் போற்றும் இலக்கியங்களைத் தான் சிறந்த படைப்புகளாய் மாற்றுகின்றன. இது காலங்காலமாக மனித உலகில் நடந்து வரும் செயல். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இதுதான் இங்கு நிகழ்கிறது. ப்ளாட்டோ/அரிஸ்டாட்டல்களுக்கு எதிரான அரிஸ்டோபஸ்ஸின் ஹெடோனிஸ்ட் எனும் சுதந்திர சித்தாந்தத்தைப் பழைய கிரேக்கமும் பின் வந்த கிறுத்துவ ஐரோப்பாவும் அளித்ததை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். அதிகாரத்தின் “டிஸ்கோர்ஸாக“” இலக்கியத்தை மாற்றும் இத்தகைய செயல்களை பதினாறாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகச் செய்த ஷேக்ஸ்பியர் அழியா இலக்கிய மன்னனாக இன்றுவரை திகழ்கிறான். இருப்பினும் இப்படி நாம் ””பைனரி””யாக அவனை வாசிக்கவும் இயலாது என்பதும் உண்மை தான். எல்லா வகையான கருத்து வேறுபாடுகள்/மோதல்களுக்கான பன்முக சாத்தியப்பாடுகளை உட்கொண்டிருக்கும் அவன் நாடகங்கள் இலக்கியத்தின் மூலப்பொருளான “நிச்சயமின்மைக்கு” சிறந்த எடுத்துக்காட்டு.  ஆகையால் தான் எல்லா வகையான விமர்சன சித்தாந்தங்களும் அவனைப் போற்றுவதும், கடுமையாக எதிர்ப்பதும்.

ஷேக்ஸ்பியர் எனும் மனிதன் நிஜமாகவே இருந்தானா!? அவன் தான் நாடகங்களை எழுதியது? அல்லது அவன் பெயரில் சிலரால் (க்ரிஸ்டோஃபர் மார்லோ, ஃப்ரான்ஸிஸ் பேகன், எட்வர்ட் டே வேர், சர் வால்டர் ராலி, ரோஜர் மேனர்ஸ்- இப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்) எழுதி சேர்க்கப்பட்டதா என்கிற கேள்விகள் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரையில் இருந்து வருவதையைப் போன்றே அவனுடைய மக்கள் எதிர் போக்கைக் கேள்வி கேட்கும் விமர்சனங்களும் ஐரோப்பா-அமெரிக்காவில் வளர்ந்து வருகிறது. இந்த ”டெமாக்ராடிக் விமர்சன பாதை”யில் இக்கட்டுரை தொடர்ந்து செல்லாமல் அவன் நாடகங்களின் முதல் பிரதியான “ஃபஸ்ட் ஃபொலியோ”” பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்பிரதிகளுக்கும் மன்னராட்சி/முதலாளித்துவ அமைப்புகளுக்கும் தொடர்புள்ளதால் இக்கட்டுரை ஷேக்ஸ்பியர் என்கிற “மாஸ்டர் நெரடீவை” ஃபஸ்ட் ஃபொலியோனூடே கட்டுடைக்க முயல்கிறது.

மனிதர்கள் வாழுமிடமெல்லாம் பரவிப் படர்ந்திருக்கும் இந்த ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அவன் வாழ்ந்த காலத்தில் புத்தகமாக வெளியாகவில்லை. அவன் இறப்பிற்கு பின்புதான் அவன் நாடகங்கள் முதன் முறையாக அச்சடிக்கப்பட்டன. சிறிய நாடகக் கம்பெனியில் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினான் என்று கூறப்படும் அவன் பின் கவிஞனாய், நாடக ஆசிரியனாய், “க்ளோப்” நாடக கம்பெனியின் முதலாளியாய் வளர்ந்து லண்டன் நகரத்தின் விலை உயர்ந்த இடங்களில் சொத்து சேகரித்து அந்நகரத்தின் பெரிய புள்ளியாய் மாறினான். அவன் வாழ்ந்த காலத்தில் புத்தக வணிகம் சிறப்பான தொழிலாய் இருந்திராத காரணத்தினாலோ என்னவோ தன் புத்தகங்களை அவன் பிரசுரிக்கவில்லை. வெறும் மேடை நாடகத்திற்காக எழுதப்பட்ட நாடகங்களுக்கு வெகு “கிராக்கி”” இருந்தாலும் அது வெறும் காகித அளவில் தான் இருந்திருக்கிறது. தத்துவம் சார்ந்த புத்தகங்கள் மட்டும் அச்சிடப்பட்ட அக்காலத்தில் இலக்கியப் படைப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் என்றால் எழுதப் படிக்கத் தெரிந்த (குறைந்த எண்ணிக்கையிலிருந்த) பெரும் செல்வந்தர்கள் தான். இது மட்டுமல்லாது தத்துவம் அல்லது மதம் சார்ந்த புத்தகங்களைத்தான் அவர்கள் படிக்க விரும்பியுள்ளனர். பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் லத்தீன் மொழி மட்டுமே சமூக அந்தஸ்து பெற்றிருந்த காரணத்தினால் ஆங்கிலம், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் செல்வந்தர்கள் மத்தியில் பெரும் மரியாதை இருக்கவில்லை. ரெனைசான்ஸ் காலத்தில் தான் அம்மொழிகளில் இலக்கியம் மலர ஆரம்பித்துள்ளது. புத்தக வணிகம் பிரபலமில்லாத, பிராந்திய மொழிகள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் எழுதிய ஷேக்ஸ்பியர் தன் புத்தகங்களின் அச்சுப் பிரதிகளைப் பார்க்காமலே இறந்து போனான். ஆனால் அவன் தோழர்களின் முயற்சியால் தான் அவன் படைப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன.

தான் சம்பாதித்த சொத்தை சரிபங்காகத் தன் மூன்று பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் படைப்புகளின் உரிமையை தன் நண்பர்களான ஜான் ஹெம்மிங்ஸ் மற்றும் ஹென்ரி காண்டல் எனும் இரு நபர்களுக்கு ஷேக்ஸ்பியர் கொடுத்திருக்கிறான். இந்த இருவர்கள் அன்று எடுத்த “ரிஸ்க்” தான் ஷேக்ஸ்பியரை இன்று நாம் அறிய மூலகாரணம். ஷேக்ஸ்பியரின் கையெழுத்துக்களால் எழுதப்பட்ட “க்வார்டோஸ்” என்றழைக்கப்படும் கைப்பிரதிகள் தான் அன்று நாடக மேடைகளில் புழக்கத்திலிருந்தது. ஷேக்ஸ்பியரின் மரணத்திற்குப் பிறகு அவற்றை வெகு நேர்த்தியாகக் காப்பாற்றிய இவர்கள் பிரத்தானியாவின் அன்றைய புத்தக வணிகர்களான எட்வர்ட் ப்ளௌண்ட் மற்றும் வில்லியம் என்பவர்களின் உதவியோடு ஷேக்ஸ்பியரின் 36 நாடகங்களை முதன்முறையாக அச்சிட்டு 1623-ல் வெளியிட்டனர். 14 இஞ்ச் நீளம், 9 இஞ்ச் அகலம், 3 இஞ்ச் தடிமன்கொண்ட ஷேக்ஸ்பியரின் அந்த 908 பக்கங்களின் முதல் தொகுப்பு தான் “ஃப்ஸ்ட் ஃபொலியோ” என்று அழைக்கப்படுகின்றன. “Mr. William Shakespeare’s Comedies, Histories & Tragidies” எனும் தலைப்பில் வெளியான அவன் நாடகங்களின் முதல் அச்சுத் தொகுப்பை வாங்கியவர்கள் மிகக் குறைவானவர்களே! அன்று அதன் விலை ஒரு பௌண்ட். அன்றைய காலகட்டத்தில் அது விலை அதிகமான பொருட்களிலொன்று. செல்வந்தர்களின் ஆண்டு வருமானமே அன்று நான்கு பௌண்ட்கள் தானாம். ஆகையால் இத்தொகுப்பு எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஷேக்ஸ்பியரின் படைப்புகளை நாடக மேடைகளில் கண்டு ரசிக்கவே விரும்பிய அன்றைய செல்வந்தர்கள் தம் மூன்று மாதங்களின் வருமானத்தைக் கேவலம் ஒரு புத்தகத்திற்காகச் செலவு செய்ய விரும்பவில்லையோ என்னவோ, மொத்தத்தில் இந்த “ஃப்ஸ்ட் ஃபொலியோ”  வெளியிட்டவர்களுக்கு இழப்பைத் தான் கொடுத்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் சூடு பிடித்த இத்தொகுப்பின் இன்றைய விலை எண்பது கோடி!. கால ஓட்டத்தில் அசுர வள்ர்ச்சியைக் கண்ட இந்த ”ஃப்ஸ்ட் ஃபொலியோ” தொகுப்பின் கதை மிகவும் சுவாரஸ்யமானது!

1632-ல் Second Folio, 1664-ல் Third Folio, 1685-ல் Fourth Folio என்று நான்கு முறை ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தொகுப்பு பிற்காலங்களில் மறு பதிப்புகளாக வந்தாலும் இந்த ஃபஸ்ட் ஃபொலியோவிற்குத் தான் மவுசு அதிகம். விலை உயர்ந்த பொருட்களை வைத்துக்கொள்வதில் பெருமிதம் கொள்ளும் “சூப்பர்  செல்வந்தர்”களில் சிலர் இந்த 1623-ல் வெளியான First Folio-வை அடைவதை இலக்காக கொண்டுள்ளனர். அதற்காக ஏலம், வியாபாரம், திருட்டுச் சந்தை என்று ஐரோப்பா அமெரிக்காவில் பெரியதோர் நெட்வர்க்கே இன்று செயல்படுகிறது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் அச்சு நூலான இந்த “ஃபஸ்ட் ஃபொலியோ” இங்கிலாந்திலிருந்து தொடங்கி ஐரோப்பா எல்லைகளைத் தாண்டி அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று உலக அளவில் விரிந்திருக்கும் இதன் சிறகுகள் கடத்தல் கும்பல்களுக்கு ஒரு பொக்கிஷம். ஆயிரம் பிரதிகளில் வெளியான இந்நூலின் பிரதிகளில் இன்று 233 மட்டும் தான் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. அதிலும் வெறும் 40 பிரதிகள் தான் முழுப் பக்கங்களைக் கொண்டுள்ளதாம். இதிலொரு பிரதியை மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பால் ஆலன் என்பவர் 2001-ல்ஆறு மில்லியன் டாலர் (இந்தியா பண மதிப்பில் 50 கோடி) கொடுத்து வாங்கினார். அப்பொழுது இன்னும் கூடுதலாகச் சூடுபிடித்து ஓடத்தொடங்கிய “ஃபஸ்ட் ஃபொலியோ” வணிகம்  இன்று வரையில் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் ஒரு பிரதி கிடைத்தால் நம் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று எண்ணிய கடத்தல் மன்னர்கள் பதினேழாம் நூற்றாண்டு முதல் இன்று வரை இந்நூலை வேட்டையாட புதுப்புது தந்திரங்களைக்  கையாண்டுகொண்டே இருக்கின்றனர். இந்த வேட்டையைக் குறித்து இங்கிலாந்து, அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் ஆய்வும் நடந்து வருகின்றன. அவற்றில்  Paul Collins-ன் ‘The Book of William: How Shakespeare’s First Folio Conquered the world’ முக்கியமானது. அண்மையில் வந்த The Shakespeare First Folios: A Descriptive Catalogue மற்றும் The Shakespeare Thefts: In search of First Folios இரண்டு புத்தகங்கள் மிக முக்கியமானவை.  2011-ல் Eric Rasmussen எனும் ஆய்வாளர் நடத்திய ஆய்வுக் கட்டுரைகள் ”ஃபஸ்ட் ஃபொலியோ” சம்பந்தமான பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகின்றன.

பதினாறாம் நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டு வரையில் நடந்த  “ஃபஸ்ட் ஃபொலியோ”  வேட்டை விவரங்களைச் சேகரித்து எரிக் ஆய்வு செய்துள்ளார். இந்நூலைப் பெற செல்வந்தர்களும், கடத்தல் கும்பல்களும் எவ்வாறு திண்டாடியிருக்கிறார்களென்பதை விவரிக்கும் அக்கட்டுரைகள் துப்பறியும் நாவல் போன்று விறுவிறுப்பாக நம்மை ஈர்க்கும். அதில் சில சங்கதிகள் இவ்வாறுள்ளன:

இங்கிலாந்தின் பல்கலைக்கழகமொன்றின் பெட்டக லாக்கர் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த ஃபஸ்ட் ஃபொலியோவின் ஒரு பிரதியைக் கடத்தல் மன்னர்கள் அபேஸ் செய்து இருபதாம் நூற்றாண்டின் துப்பறியும் தொழில் நுட்பங்களையே கேலிக்கூத்தாக்கினர். அமெரிக்காவிலிருந்து ஷேக்ஸ்பியர் நிபுணரொருவர் ஃபஸ்ட் ஃபொலியோவை ஆய்வு செய்ய வந்திருப்பதாகக் கூறி அந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்குச் சென்று ஐந்நூறு வருடங்களுக்கும் மேல் பழமையான ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் அச்சுப் பொக்கிஷத்தை ஆய்வு செய்யும் திருட்டு முயற்சியில் வெற்றிகண்டனர். அந்த ஷேக்ஸ்பியர் நிபுணரெனும் வேடம் போட்டிருந்த நபர் நூலகத்தின் தனி அறைக்குப் போய் மணிக்கணக்கில் ஆய்வு செய்து நூலைத் திருப்பிக்கொடுத்து தன் கும்பலோடு வெளியேறினார். தம் பொக்கிஷத்தை மீண்டும் லாக்கரில் போட்டுப் பாதுகாத்த நூலகத்தின் ஊழியர்கள் சில மாதங்கள் கழித்து திகைத்து நின்றனர்:  அமெரிக்காவைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் நிபுணர் என்று சொல்லிக்கொண்டு வந்த அந்த நபர் தான் போலி ஃபஸ்ட் ஃபொலியோ பிரதியை வைத்து விட்டு  மூலப்பிரதியைத் தூக்கிச் சென்றிருந்தான் எனும் சங்கதி தெரிய வந்தது.

இது போன்றே 2008-ல் ஃபஸ்ட் ஃபொலியோவின் மற்றொரு பிரதியை அமெரிக்காவின் களவுச்சந்தையில் விற்க முற்பட்ட ரிக்கெட் ஸ்காட் எனும் கடத்தல் கிறுக்கனிடம் 1998-ல் டிர்ஹாம் பல்கலைக்கழகத்திலிருந்து திருடப்பட்ட ஃபஸ்ட் ஃபொலியோ பிரதி இருந்திருக்கிறது. தானொரு பழங்காலப் பொருட்களை வியாபாரம் செய்யும் நபர் என்று சொல்லிக்கொண்டு அலைந்து கொண்டிருந்த அவனைக் கைது செய்து விசாரித்த போது அப்பிரதி டிர்ஹம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தது எனும் சங்கதி தெரிந்து அப்பிரதியின் உண்மைத் தன்மையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஆய்வாளர் எரிக் ரஸ்முஸ்ஸே அழைக்கப்பட்டார்.

பத்தொன்பதாவது நூற்றாண்டிலும் இதுபோன்ற கடத்தல் மன்னர்கள் இந்த விலை உயர்ந்த நூலை அபேஸ் செய்ய நூற்றுக்கணக்கான வழிகளைப் பிரயோகப்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானவன் ஜான் ஹாரிஸ். பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்திருந்த இவன் போலிப்பொருட்களை உண்டாக்குவதில் திறமை வாய்ந்தவன். ஃபஸ்ட் ஃபொலியோ போன்றே போலிப்பிரதியைச் செய்து தருமாறு அல்லது தம்மிடமுள்ள மூலப்பிரதியில் சில பக்கங்கள் கிழிந்து போயுள்ளன என்றோ வந்தவர்களை ஏமாற்றி பத்துக்கும் மேற்பட்ட ஃபஸ்ட் ஃபொலியோ மூலப் பிரதிகளைக் கைவசம் வைத்துக்கொண்டு திடீரென்று செல்வந்தனாக மாறியுள்ளான். இதனைக் கண்டு பதறிப்போன பல்கலைக்கழகங்களும், செல்வந்தர்களும் தம்மிடமுள்ள ஃபஸ்ட் ஃபொலியோ பிரதியின் உண்மைத் தன்மையை பரிசோதித்துப் பார்த்துக்கொண்டனராம். பிரிட்டிஷ் மியூஸியம் இவனை அழைத்து யார் யாருக்கு எந்தெந்த பிரதியைக் கொடுத்துள்ளாய் எனக்கேட்டு விவரங்களை சேகரித்திருந்தானாம்.

ஜப்பான் பல்கலைக்கழகமொன்று ஏலம் விட்ட ஃபஸ்ட் ஃபொலியோ பிரதியை மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இர்வின் எனும் செல்வந்தன் நூலை வாங்கிய மறு மாதமே கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டான்! மில்லியன் டாலர் கொடுத்து ஏலம் எடுத்த அந்த பதினாறாம் நூற்றாண்டின் பொக்கிஷத்தை ஏன் நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்து விட்டீர்கள் என்று கேட்கையில் அந்த புத்தகத்தின் நாற்றத்தை தன்னால் தாங்க முடியவில்லை, அதனால் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்து விட்டேன் என்றானாம், அவன்!

இது போன்ற நூற்றுக்கணக்கான சுவாரஸ்யக் கதைகளைக் கொண்டிருக்கும் எரிக் ரஸ்முஸ்ஸே ஆய்வு நூல் மற்றொரு தனித் தகவலையும் கூறுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் அச்சு நூலான இந்த ஃபஸ்ட் ஃபொலியோவை வாங்கிய முதல் மாதம் அல்லது வருடத்திலேயே சிலர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி இறந்து போன சங்கதியை எரிக் தன் கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். பத்தொன்பதாவது நூற்றாண்டில் இதை வாங்கிய ஒரு செல்வந்தரின் மேல் விண்ட் மில் விழுந்து விபத்துக்குள்ளாயிருக்கிறார். இந்த நூலை முதலில் பிரசுரித்தவர்களிலொருவனான வில்லியம் நூல் அச்சிலிருக்கும் பொழுதே மரணிக்கிறான். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1912) இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லவிருந்த டைட்டானிக் கப்பலில் ஒருவரிடம் ஃபஸ்ட் ஃபொலியோ பிரதி இருந்ததாம்! இது போலவே இந்நூலுக்காகக் கொலைகளும் நடந்துள்ளன. நம் இந்தியாவிலும் இதன் ஒரு பிரதி இருக்கக்கூடும் என்கிறார்  இந்நூலின் ஆய்வாளர்கள்.

விலை உயர்ந்த பழங்காலப் பொருட்களை வைத்துக்கொள்வது சிலருக்குப் பெருமை என்பதால் மற்றும் அது சட்டத்திற்குப் புறம்பானதல்ல என்கிற காரணத்தினாலும் இந்நூலை அடையப் பல செல்வந்தர்கள் எத்தனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களில் சிலர் ஏலம் வழியாக சட்டப்படி வாங்கினால் சிலர் கள்ளத்தனத்தில் வாங்குகிறார்கள். அவர்களுக்குத் துணையாகக் கடத்தல் கும்பல்களும் செயல்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் எரிக் ரஸமுஸ்ஸே போன்றோரின் ஆய்வு நூல்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன என்பதும் உண்மை தான். ஷேக்ஸ்பியர் என்றொரு நபரே இருக்கவில்லையென்று வாதிடும் “செவன் ஷேக்ஸ்பியர்ஸ்”, “ஷேக்ஸ்பியர்ஸ் மாஜிக் சர்கல்” எனும் நூல்களைப் போன்றே ஃபஸ்ட் ஃபொலியோ குறித்தான ஆராய்சி நூல்களும் ஆயிரக்கணக்கான ஆட்களை தம்மிடம் இழுத்துக்கொண்டு தான் உள்ளன.

பிரசுரமான காலத்தில் கேட்பார் இல்லாது நாதிகெட்டுக் கிடந்த புத்தகமொன்று நாள் போக்கில் உலகத்தின் மிக விலையுயர்ந்த பொருளாக மாறியது முரண். இவ்வுலகிற்கு ஷேக்ஸ்பியர்  என்று கூறப்படும் நபரின் முகத்தை அறிமுகப்படுத்திய பெருமை கொண்ட இந்நூலின் வளர்ச்சி என்பது இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய சங்கதிகளின் சமகால நிகழ்வுகள்.

அரசாட்சியோடு துணை நின்ற ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்றென்றைக்கும் செல்வந்தர்களின் செல்லப்பிள்ளை தான் என்பதை இந்த ஃபஸ்ட் ஃபொலியோவைச் சுற்றி நிகழும் சங்கதிகள் உறுதிப்படுத்துகின்றன என்பது என் திடமான கருத்து. ஸ்டீவன் க்ரீன்ப்ளாட் போன்றோர் இன்று டொனால்ட் ட்ரம்போடு ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசிக்கும் போது அவன் புத்துணர்ச்சி பெற்று வரவிருக்கும் காலத்திலும் அதிகாரத்தைப் போற்றும் இலக்கியவாதிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்வான். அதே போல் ஜார்ஜ் ஆர்வல், பெர்னாட்ஷா போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் அவனை எதிர்க்கவும் செய்வார்கள். தன் வாழ்நாள் முழுவதும் அவனை விரும்பாமலிருந்த லியோ டால்ஸ்டாய் போன்ற “தார்மீக இலக்கியவாதிகளும்” அவனைக் கடுமையாக விமர்சிப்பார்கள். மொழிகள் தம் நிச்சயமின்மையை எப்போது கை விடுகின்றனவோ அன்று வரையில் வானம், கடல்களைப் போன்று இங்கு ஷேக்ஸ்பியர் நிரந்தரமாக இருப்பான்.

Previous articleகம்பாட்டம்
Next articleதிகம்பர பாதம்
Avatar
தமிழ் தாய் மொழியாக கொண்டு கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர். கன்னடத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் தற்போது தமிழிலும் எழுதுகிறார். இவருடைய கன்னடக் கதைகளின் தமிழாக்கம் “வாட்டர்மெலன்” என்கிற தலைப்பில் வந்துள்ளது. கன்னடத்தில் இரண்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவந்துள்ள இவர் யூ ஆர் அனந்தமூர்த்தி கதா விருதை பெற்றுள்ளார். இவருடைய முதல் தமிழ் குறுநாடகம் “நில நகம்” கணையாழி இலக்கிய இதழ் நடத்திய குறுநாடகப் போட்டியில் சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதோடு “பாலைவனத்தின் ஐந்தாம் சுவர்”என்கிற இவருடைய குறுநாவலும் வெளியாகியுள்ளது. இவருடைய முதல் நாவல் “அல் கொஸாமா” ஸீரோ டிகிரி நடத்தும் நாவல் போட்டியின் நெடும்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போது இவர் சவுதி அரேபியாவின் பல்கலை கழகமொன்றில் ஆங்கில இலக்கியம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.