திகம்பர பாதம்

ழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே அதிர்ந்தது. இவர்களை அதட்டியும் கழிகளால் தள்ளியும் நெறிப்படுத்தி மொத்தக் கூட்டத்தையும் இயக்கி நின்ற குதிரை வீரர்கள் தங்கள் தலைப்பாகை அதிகாரிகள் வருகைக்காகப் பரபரப்புடன் இருந்தனர். வருடம் முழுவதும் சேர்த்து வைத்த காணிக்கைகள் அனைத்தையும் சுமடுகளாகக் கொண்டு வந்த பதினெட்டு பிடாகைகளைச் சேர்ந்த மக்கள் வலியெடுக்கக் கைமாற்றி கைமாற்றி நடந்தனர்.  பொதுவாக நெல்மணிகளும் பிற தானியங்களும் தான் காணிக்கை. சில பெரிய வீட்டுக்காரர்கள் ஊரறிய தங்க ஆபரணங்களையும் வெள்ளிப் பாத்திரங்களையும் பட்டுத்துணிகளையும் படைப்பதும் உண்டு.

ஸ்ரீ இந்திர மார்கழித் திருவிழாவின் பத்து நாட்களும் பெரும் சனத்திரளுடன் தெய்வங்கள் வாகனங்களில் மண்ணிறங்கி வந்து நகர் வீதிகளில் ஆடிக் களிக்கும். அன்று ஒன்பதாம் நாள் தேரோட்டம். முந்தைய நாள் மாலையிலேயே பெரிய தேரும் சிறிய தேரும் அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்றன. கூடவே குழந்தைகள் மட்டுமே இழுத்துச் செல்லும் பிள்ளையார் தேர். ஒவ்வொரு தேரைச் சுற்றிலும் கூட்டம் கூட்டமாக முட்டி மோதி நெருங்கிச் சென்ற மக்கள். தேரின் ஏதாவது ஒரு பகுதியைத் தொட்டு விட்டாலே பெரும் புண்ணியம் என்பது நம்பிக்கை. தேர் வடத்தைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டு செல்லும் ஒரு வரிசை. ஸ்ரீ இந்திர ஸ்தல வரலாறு சொல்லும் கதைப் பாடலை கோவில் முகப்புப் பந்தலில் இசைத்திருந்த குழுவைச் சுற்றிக் குழுமியிருந்த முதியவர் கூட்டம். சற்று நேரத்தில் கதிரெழுந்ததும் தேர் வட பூசை துவங்கும். பொங்கித் ததும்பும் அலையெனத் தோன்றும் மக்களிடையே மிதந்து செல்வதாய்த் தோன்றும் தேர்கள் நிலைக்கு வர நண்பகல் ஆகிவிடும். வீதிகளின் இருபுறமும் இருந்த மாளிகைகளின் மாடங்களில் அமர்ந்து தேர் பார்க்கத் தயாராய் முதியவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் சிறு குழந்தைகளும்.

ஸ்தல புராணம் முடியவும் கூட்டத்தில் ஒரு சலசலப்பு. எங்கிருந்தோ எழுந்த பேரோலம் ஒருவர் மீது ஒருவரெனத் தாவி கோவில் முகப்பை வந்தடைந்தது. மக்களின் முகத்தில் வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள். ஆர்வமிகுதியில் வாலிபர்கள் முண்டியடித்துக் கொண்டு பரிசல் துறையை நோக்கி ஓடினர். கோவில் அதிகாரிகள் செய்தியறிந்து காவலர் முன் செல்ல விரைந்தனர். பரிசல் துறையில் மொத்தக் கூட்டத்தையும் விலக்கி கயிறுகளைப் பிடித்திழுத்து நின்றனர் குதிரை வீரர்கள்.

கோவில் முதன்மை அதிகாரி வந்து நின்று தலைமைக் காவலனிடம் எங்கேயென்று கையசைத்துக் கேட்க, அவன் ஆற்றின் நடுப்பகுதியைச் சுட்டிக் காட்டினான். நாலைந்து பரிசல்கள் அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. நடுவில் ஒரு சிறு பாறை முகப்பு தெரிந்தது. மக்கள் கூட்டம் ‘நமச்சிவாய வாழ்க’ என்று தொடர் முழக்கமிட்டது. வான் பார்த்து வேண்டி முனகி நின்றது.

ஒரு பரிசலில் ஏறி ஆற்றின் மையத்திற்குச் செலுத்துமாறு ஆணையிட்டார் அதிகாரி. முதல் சேதி கொண்டு வந்தவனைத் தன்னுடன் வருமாறு பணித்தார். அப்பரிசல் உள்ளே செல்லச் செல்ல மக்கள் கூட்டத்தின் முழக்கம் பேரொலியாக மாறி, சற்று நேரத்தில் மொத்தக் கூட்டமும் ஒற்றைக் குரலெடுத்து அழுவதைப் போலத் தோன்றியது. தாங்க முடியாத அத்தனை சோகங்களையும் கரைத்து வெளித்தள்ளும் பெரும் கதறல். ஊடே ஆனந்த மிகுதியில் வெளிப்பட்ட ஊளைகளும் துள்ளலும்.

ஆற்றின் மையத்தை அடைந்த அதிகாரி தன்னையறியாமல் கைகூப்பி பேச்சற்று நிற்க, பரிசல் அப்பாறை முகட்டை நெருங்கியது. பாறையின் மையத்தில் வார்த்தெடுத்ததைப் போல இரு காலடிச் சுவடுகள். சுற்றி வந்த பரிசல்களிலிருந்த வீரர்கள் தங்களை மறந்து பரவசத்தில் பேச்சற்று நிற்க, அதிகாரி அப்பாதத் தடங்களுக்கு மாலையொன்றை அணிவித்து வணங்கினார்.

“ஸ்ரீ இந்திரமென்றாலே அதிசயங்களும் அற்புதங்களும் தானே! இதுவும் நல்லதாகவே முடியட்டும், அரசவைக்குத் தகவல் அனுப்புங்கள்,” என்றார்.

கதிரெழுந்தது. தேர் வட பூசை ஆரம்பித்தது. பெரிய தேர் முகப்பில் சிறு யாகம் வளர்த்து மூலவருக்கான அர்ப்பணங்களைச் செய்தார் நம்பூதிரி. அதே போல் அம்மன் தேருக்கும் செய்து முடித்து கைகளை வான் நோக்கி நீட்டி சில மந்திரங்களை உரைக்க மொத்த சனமும் அவற்றைக்  கேட்டுரைத்தது. தேர்களின் முன்னிருந்த உருளிகளில் இருந்த தீர்த்தத்தை எடுத்து வடங்களின் மீது தெளிப்பதற்காக வேத மடத்தின் சிறுவர்கள் வந்தனர். மக்கள் கூட்டம் வடங்களைப் பிடிக்க  நெருக்கியடித்துக்  கொண்டு வந்தது.

“அப்பனும் அம்மையும் வரட்டும், காத்திருங்கள். பொறுமை, பொறுமை!” எனக் கத்தியவாறு தன் வீரர்களைப் பார்த்து சமிக்கை செய்தான் தலைமைக் காவலன். குதிரை வீரர்கள் அணிவகுத்து வடங்களின் அருகே சென்று இருபுறமும் மக்களை ஒதுக்கி நின்றனர். கோவிலின் உள்ளிருந்து கொம்பும் முழவும் ஒலிக்க மக்கள் ஆர்ப்பரித்து தலைமேல் கரம் குவித்து வேண்டி நின்றனர். அலங்கரிக்கப்பட்ட சொலிக்கும் குடைகளைச் சுழற்றியவாறு முதலில் வந்தனர் இளம் பெண்கள். சிலையெனத் தெரிந்த முகங்கள். தொடர்ந்து வந்தது பஞ்ச வாத்தியம். பின், இருபுறமும் பெரிய சூலங்களில் தீபங்களை ஏந்திய கோவில் பணியாட்கள். வேத மடத்துச் சிறுவர்கள் மந்திர உச்சாடனம் செய்து பின்தொடர, கோவில் தலைமை அதிகாரி பிடாகைத் தலைவர்கள் புடைசூழ வந்தார். மங்கள வாத்தியம் முழங்க முப்பத்திருவர் தோள் மீது தன் ரிஷப வாகனத்தில் ஆடியாடி வந்தார் ஸ்ரீ இந்திரத்து தேவன். தன் தேரருகே வந்து துணைவிக்காகக் காத்து நிற்பது போல முன்னும் பின்னும் அசைந்து நின்றார்.

செவ்வாடை தரித்த இளம்பெண்கள் முன்வர, கோவில் யானைகள் இருபுறமும் காவலாக நின்றும் முழங்கியும் அடியெடுத்து வர, தன் சிம்ம வாகனத்தில் பூவலங்காரத்தில் புன்னகை பூக்க வந்தாள் ஸ்ரீ இந்திரத்து அம்மை. தேவனின் அருகமைந்து அவளும் அசைந்து அசைந்து நிற்க, மக்கள் கூட்டம் சட்டென அமைதியானது. அடுத்த ஒரு நாழிகை மௌனத்தில் மொத்த ஊரும் நிற்க வேண்டும். நம்பூதிரி சிவப்புத் துணியால் வாய்மூடி இரு வாகனங்களையும் சுற்றிப் பூசை செய்வார். பிறகு, அதிசயமாய் சரியாக அத்தருணத்தில் தோன்றும் இரு கருடன்கள் திருக்கோவில் கோபுரத்தைச் சுற்றி மூன்று சுற்றுகள் பறந்து வந்து கோபுரத்தில் அமைய, தேவனும் தேவியும் தங்கள் தேர்களில் எழுந்தருள்வார்கள்.

நம்பூதிரி வந்து பூசையைத் தொடங்க மௌனத்தில் உறைந்து நின்றது ஸ்ரீ இந்திரம். திடீரென தூரத்தில் பலத்த கூச்சல் கேட்க, மக்கள் கூட்டத்தில் ஆங்காங்கே அசைவு. வாலிபர்களும் குதிரை வீரர்களும் சத்தம் வந்த திசை நோக்கி விரைந்தனர். சத்தம் அதிகரித்துக் கொண்டே கோவிலை நோக்கி நகர்ந்து வந்தது. பூசை தொடர, மக்கள் குழப்பத்தோடு வேண்டி நிற்க, பரிசல் துறையிலிருந்து கோவிலை நோக்கி நீண்ட பாதையில் தீப்பந்தங்களின் வெளிச்சம் குவிந்தது. மக்கள் இருபுறமும் விலகி ஓட, பெண்களின் கூச்சல் ஓங்கியெழுந்தது. குதிரை வீரர்கள் அதட்டும் ஒலியும் இடையிடையே கேட்டது. விலகிய கூட்டத்தில் தனக்கான தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டு ஓர் ஒற்றை உருவம் மெல்ல நடந்து வருவது தூரத்தில் தெரிந்தது. காவலன் ஒருவன் கைகாட்ட, ஐந்தாறு குதிரை வீரர்கள் அப்பாதையின் குறுக்காகச் சங்கிலி போல் பிணைத்து நின்றனர். அந்த உருவம் அருகே வர வர, கூட்டம் மௌனம் கலைத்துக் கூச்சலிட்டது. ‘போ இங்கிருந்து, கெட்ட சகுனம், போ, போ.’ எனவும், ‘அடித்து விரட்டுங்கள் அவனை’, ‘பெண்களெல்லாம் திரும்பி நில்லுங்கோ’, எனவும் ஏதேதோ குரல்கள்.

குதிரை வீரர்களின் தடுப்பின் முன்னே வந்து அமைதியாக நின்றது அவ்வுருவம். ஆடையற்ற அழுக்கும் சேறும் படிந்த மேனி, தரை பார்த்திருந்த கண்கள், முடியற்ற சிவந்த தலை, கையில் மயிற்பீலிகளால் செய்யப்பட்ட ஒரு விசிறித் தோகை. யார் பேசுவதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மௌனமாக நின்றது அவ்வுருவம். குதிரை வீரர்களில் ஒருவன், “திரும்பிச் செல்லுங்கள், இவ்விடம் இன்று மங்கள காரியம். பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். உடனே திரும்பிச் செல்லுங்கள்.” என்றான்.

கைகூப்பியவாறு, “ஸ்ரீ இந்திரம் குறித்தறிந்து வந்திருக்கிறேன். தேவனையும் தேவியையும் பார்த்துச் செல்ல எண்ணம்,” என்றது அவ்வுருவம்.

“அம்மணமாகவா?” என்று கேட்டு கேலியாகச் சிரித்தான் அவ்வீரன். கூட்டமும் சேர்ந்து சிரிக்க, சிலர் கொச்சைச் சொற்களால் வசைபாடினர்.

“மோனே, நான் ஒரு திகம்பரன். வானத்தையே ஆடையாக அணிந்தவன். திருச்சாணத்து மலையிலிருந்து வருகிறேன். ஸ்ரீ இந்திர தேசத்து இறையையும் மக்களையும் தரிசிக்க வந்தேன்.”

“அதுதான் மொத்த சனமும் உன்னை முழுக்க தரிசித்து விட்டதே, அசிங்கம் பிடித்தவனே, விலகிச் செல். தலைவர் வந்துவிடப் போகிறார், பிறகு அடி வாங்கியே செத்து விடுவாய், போ, போ, தேர் வடம் பிடிக்க நேரமாயிற்று,” என்று கூவினான் அவ்வீரன்.

திகம்பரர் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் நின்றார். பிறகு மெல்ல தலை தூக்கி அவ்வீரனை நோக்கி, “மோனே, தேவனை தரிசிக்கத் தடை சொல்லாதே. கருடன் தன் சுற்றுகளை முடித்து விட்டான் பார்,” என்று வான் நோக்கிக் கை காட்டினார்.

குதிரை வீரர்களில் அடுத்தவன், “தேவையற்ற பேச்சு, சீ, விலகிப் போ, உன் போன்றவர்களுக்கு இங்கே அனுமதி இல்லை, தெரியாதா?  ஊரில் ஏற்கனவே சுற்றின மொட்டைக் கிறுக்குகளை ஒழிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதில் இன்னொன்று வந்து நிற்கிறது.” என்றபடி தன் குதிரையிலிருந்து குதித்தான்.

“அடித்து விரட்டுங்கள், தூக்கித் தெப்பக் குளத்தில் போடுங்கள்,” என்று மக்கள் கூட்டத்திலிருந்து குரல்கள். திகம்பரர் கவனியாததைப் போலக் கோவில் தெப்பக் குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களைப் பார்த்து அசைவற்று நின்றார்.

அக்குதிரை வீரன் தன் கழியை ஓங்கியவாறு, “போகிறாயா இல்லையா? அடித்து மண்டையை உடைத்து விடுவேன், ஓடு, ஓடிப்போ,” என்றான்.

திகம்பரர் அங்கில்லாததைப் போல, தாமரை மலர்களிலிருந்து மீண்டு வரமுடியாது நின்றார். கண்கள் சிவக்க அவரை நெருங்கி அடிக்கக் கை ஓங்கிய அவ்வீரன் ஒரு நொடி அசைவற்று நின்றான். ஏதோ தாக்கியதைப் போல சட்டெனப் பின் நகர்ந்து தரையோடு மண்டியிட்டு விழுந்தான். அப்படியே அசைவற்று சிலை போல உறைந்து கிடந்தான். மக்கள் வியந்து கூக்குரல் எழுப்ப, சிலர் பயந்து ஓட, குனிந்து அவ்வீரனின் தலையில் கை வைத்து விட்டு, மெல்ல அடியெடுத்து கோவிலை நோக்கி நடந்தார் திகம்பரர்.

செய்தி காற்றென விரைந்து பரவ, நான்கு தேர்ச்சாலைகளிலுமிருந்து மக்கள் கோவில் முகப்பை நோக்கி விரைந்தனர். தேவனும் அம்மையும் தங்கள் தேர்களில் நிலைகொண்டு புறப்பாட்டிற்குத் தயாராக, ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம் வடம் தூக்கி நிற்க, நம்பூதிரி வெண்கொடி தாங்கி பெரிய தேரின் முன்பாக வந்து நின்றார். தலைமைக் காவலன் அவரருகே நின்று சுற்றிலும் நோட்டம் விட்டவாறு நின்றான். நம்பூதிரி கொடியெடுத்து அசைக்க எத்தனித்த போது கூட்டம் ஓவென அலறி விலக, கோவில் கோபுரத்தை வியந்து பார்த்தபடி மேல் நோக்கி இரு கைகூப்பி வணங்கி, மெல்லிய புன்னகையோடு தேர் முகப்பை நோக்கி நடந்தார் திகம்பரர். அதைப் பார்த்த நம்பூதிரி திகைத்து பேச்சற்று நிற்க, மக்கள் கூட்டத்திலிருந்து பல்வேறு வசைகள் எழுந்து வந்தன. கூடவே முழக்கங்களும்.

“தில்லையம்பலம், திருச்சிற்றம்பலம்.”

“திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம்.”

முழக்கங்கள் பரவிப் பெருக, தலைமைக் காவலன் சினந்து வெறிக் கூச்சலிட்டபடி தன் வீரர்களைப் பார்க்க, அவர்கள் தங்கள் கழிகளையும் குறுவாட்களையும் ஓங்கியபடி ஓடி வந்தனர். திகம்பரரைச் சுற்றி நின்று தலைவரின் ஆணைக்காகக் காத்திருந்தனர்.

“தூக்கிப் போடுங்களடா பொறத்து, கருமத்த மாடுகள்.” என்று கத்தியபடி நம்பூதிரியைப் பார்த்து ஒன்றுமில்லை என்பதைப் போலச் சமிக்கை செய்தான் தலைமைக் காவலன்.

நம்பூதிரி ஒரு கணம் கண்மூடி ஏதோ மந்திரங்களைச் சொல்ல, வீரர்கள் திகம்பரரை நெருங்கிக் கையோங்க, ஒருவர் பின் ஒருவராய் வலிப்பு வந்ததைப் போலத் தரையில் விழுந்து துடித்து மயங்கினர். மக்கள் கூட்டம் அலறிப் பல அடிகள் பின்னகர்ந்தது. திகம்பரர் எதையும் கண்டுகொள்ளாது தேர் மீது வீற்றிருந்த தேவனைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி நின்றார்.

“இதெந்தா? ஈயாளு மாந்த்ரீகனானோ?”

“ஒருவேள சித்து வேலக்கி பக்கத்து தேச ஏமானுங்க அனுப்பி விட்டதா இருக்கும்.”

“இல்ல மக்களே, இவங்கல்லாம் பேச்சிப்பாறை பக்கத்து மடத்து ஆட்களாக்கும். பெரிய சக்தி உண்டுன்னும் பேச்சு.”

“அட ஆமாப்பா, எங்க மாமனாரு வீடு அங்கனயாக்கும். இவுங்க சோறு தண்ணி இல்லாம பல வருசம் இருக்கப்பட்ட ஆளுகளாக்கும். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டாங்களாம். பின்ன, இன்னிக்கி இங்க எதுக்கு வந்ததுன்னு மனசுலாகல.”

“என்னது? தொந்தரவு இல்லையா? ஊர் முழுக்க மொட்டையாக்கிருவானுவோ பாத்துக்கோ. இந்த மாதி மொட்டப் பயக்களத்தான் நம்ம தாத்தன் பூட்டன் காலத்துல இங்கன கழுவுல ஏத்துனதாம். இந்தா, இதே தேர்மூட்டுக்க பின்னாடி தான அந்தக் கழுபீடம் இருந்து, நாங்கல்லாம் ஏறிக் குதிச்சி வெளையாடின எடமாக்கும். பின்ன, இப்பம் இவனுவோ ஆட்டம் கொஞ்சம் கொறஞ்சி போச்சு போல ”

“அது சரி, ஆனாலும் இப்பிடி கொமருக இருக்க எடத்துல முண்டக்கட்டயா வந்தா எப்பிடி? நல்ல நாளும் அதுவுமா.”

“அது, அவுங்க பழக்கம் அப்புடியாம். துணி கூட வேண்டான்னு ஒரு எண்ணமா இருக்கும்.”

“ஓஹோ, அது சரி, முற்றும் தொறக்கணும்னா வீட்டுக்குள்ளல்லா தொறக்கணும்? இப்பிடி நடுத்தெருவுல நின்னா நாய அடிச்ச மாதிதான் அடிக்கணும், பின்ன.”

“அது இப்ப உண்டும் பாத்துக்கோ. தாத்தா எதோ சொல்லுவா, என்னமோ சிதம்பரமோ, திகம்பரமோன்னு கேட்ட ஞாவகம். அந்த ஒத்த மயில்தோக மட்டுந்தான் சொத்து.”

“அதெதுக்காம்?”

“இவுங்க நடந்து போற வழில உள்ள எறும்பு, பூச்சி பொட்டக் கூட மிதிச்சுக் கொன்னுராம பாத்து நடப்பாங்களாம். இத வச்சி விசிறி பூச்சியெல்லாம் வெரட்டி விட்ட பொறவுதான் எங்கயும் உக்காரவே செய்யது.”

“அடப் பாரப்பா? இந்த ஒலகத்துல இப்பிடியுமா ஆட்கள் உண்டும்!”

“அதெல்லாம் சரி. இப்ப நம்ம கோவக்காரரு வெட்டிக் கொல்லப் போறாரு பாரு.”

எகிறிக் குதித்துத் தன் உடைவாளை உருவிக்கொண்டு வந்த தலைமைக் காவலன் திகம்பரரின் முன் வந்து நின்று, “ஏய்! என்ன வேணும் உனக்கு? ஒழுங்கு மரியாதையாக ஓடிப் போய்விடு, என்ன!” என்று கூவினார்.

திகம்பரர் அதே அமைதியுடன், “மோனே, நான் ஒரு திகம்பரன். திருச்சாணத்து மலையிலிருந்து வருகிறேன். ஸ்ரீ இந்திர தேசத்து இறையையும் மக்களையும் தரிசிக்க வந்தேன்,” என்றார்.

“என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. இங்கே சிவத் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி. விலகிப் போ, தேர் புறப்பட ஏற்கனவே தாமதமாகி விட்டது. புறப்படு, புறப்படு.”

திகம்பரர், “சரி, நானும் தேர் இழுக்கக் கை கொடுக்கிறேன்,” என்று புன்னகையுடன் முன் வந்தார்.

“நில்லடா அங்கே. ஓரடி வைத்தாயென்றால் உன் தலை உருளும்,” என்றபடி தன் வாளை அவரது முகத்தின் முன் நீட்டியபடி நெருங்கினான் தலைமைக் காவலன். அதற்குள் மக்கள் கூட்டமெங்கும் ஏதேதோ வதந்திகள் உருவாகிப் பறந்து கொண்டிருந்தன. பரிசல் துறையில் கொலை நடந்து விட்டதாகவும், தெய்வச் சிலைகளை யாரோ உடைத்து விட்டதாகவும், தெப்பக் குளத்தில் யாரோ விசம் கலந்துவிட்டதாகவும், தேர் சக்கரம் உடைந்து விட்டதாகவும் பலப்பல செய்திகள்.

திகம்பரர் அவனைக் கண்டுகொள்ளாமல் ஒன்றும் பேசாமல் தன் மயில்தோகை விசிறியால் தான்  நின்ற இடத்தில் விசிறினார். கண்மூடி நெஞ்சில் கைவைத்தபடி அங்கேயே உட்கார்ந்தார். நிமிர்ந்து கண் மூடி அமர்ந்து தியானிக்க ஆரம்பித்தார். ஒரு கணம் தலைமைக் காவலன் அசைவற்று நின்றதைப் போலிருந்தது.

சில நொடிகளில் சுய நினைவு வந்தவனாக கோவத்தின் உச்சத்தில் வெறிக் கூச்சலிட்டபடி தன் உடைவாளை ஓங்கி திகம்பரரை வெட்டக் காலடி எடுத்து வைத்தான். யாரென்றறியா வாலிபன் ஒருவன் எங்கிருந்தோ சட்டெனப் பாய்ந்து வந்து அந்த வாளைப் பிடித்து தலைமைக் காவலனை மறித்து நின்றான். நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் மார்பில் ருத்திராட்ச மாலையும் அணிந்திருந்தான்.  சற்று தயங்கிப் பின், அவனை எட்டி உதைத்து மீண்டும் கையோங்கிய தலைமைக் காவலனின் முன் வந்து நின்றனர் மேலும் இருவர். திகம்பரர் அசைவற்று இருக்க, நாலாபுறமிருந்து கூட்டத்திலிருந்து ஏவப்பட்ட அம்புகளென மேலும் இருவர், மூவரென வந்து திகம்பரரைச் சுற்றி அரண் போல் நெஞ்சுயர்த்தி நின்றனர். தொலைவில் அரச குடும்பத்து வருகைக்கான மேள வாத்தியங்கள் கேட்டன. சற்று நேரம் செயலற்று திகைத்து நின்ற தலைமைக் காவலன் மேல்நோக்கி திருக்கோவில் கோபுரத்தைக் கூர்ந்து பார்த்தான். பின், சட்டெனத் தன் உடைவாளைக் கீழே போட்டு விட்டு தலை குனிந்து கூட்டத்தை விட்டு விலகி நடந்தான். அவன் எங்கு சென்றான், என்ன ஆனான் என்பது குறித்துப் பின்னாளில் ஏதேதோ கதைகள் உருவாகி வந்தன.

ஊர் மையத்திலுள்ள ஆலமரத்தடி பேரம்பல மண்டபத்தின் முன் நின்று வணங்கி விபூதியணிந்து திரும்பி குழுமியிருந்த ஊர் மக்களைப் பார்த்து வணங்கிப் பின் இடப்புறம் தரையில் கண்மூடி அமர்ந்திருந்த திகம்பரரைப் பார்த்தபடி தன் ஆசனத்தில் வந்தமர்ந்தான் ஸ்ரீ இந்திரத்து அரசன் நின்றசீரான். மக்களைப் பார்த்துக் கைகூப்பி அமருமாறு அவன் கைகாட்ட, மொத்த சனமும் மௌனித்து அமர்ந்தது. முதல் நிலை அமைச்சன் வந்து அரசனின் அருகே நின்று விசயத்தை விளக்கிச் சொன்னான். தேர்த்திருவிழாவில் களங்கம் ஏற்படுத்தியது, அதனால் தேர் நிலைக்கு நிற்றலில் தாமதம் ஏற்பட்டது, மங்கள நிகழ்வை அவமதிக்கும் விதமாக ஆடையின்றி வந்தது, அரச வீரர்களைத் தந்திரத்தால் வீழ்த்தியது, திருக்கோவிலுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குத் தீட்டு நீடிக்குமாறு கோவிலினுள் அத்துமீறி நுழைந்தது, அரசுக்கும் கோவிலுக்கும் எதிராக அப்பாவி மக்களைத் திசைதிருப்பியது, இன்னும் சில குற்றங்கள் ஊரறிய வாசிக்கப்பட்டன.

எல்லாம் கேட்டறிந்த நின்றசீரான் தன் நெருங்கிய சிலரை அருகழைத்து கலந்துரையாடினான். பின் தன் ஆசனத்தில் வந்தமர்ந்து கால் மேல் கால் போட்டபடி இருந்து பணியாள் நீட்டிய வெற்றிலையை வாயிலிட்டு மென்றான். கூட்டமெங்கும் சலசலப்பு. சற்று நேரத்தில் புதிய தலைமைக் காவலன் தன் கையில் கொடுக்கப்பட்ட ஓலையுடன் முன்வந்து அரசனை வணங்கி நின்றான். அரசன் கைகாட்ட அவன் மக்களைப் பார்த்து வணங்கிப் பின் ஓலையை வாசித்தான்.

“திருச்சாணத்து மலையிலிருந்து வந்ததாய்ச் சொல்லும் இங்கிருக்கும் திகம்பரன் மேற்படி குற்றங்களைப் புரிந்தபடியால், தை, மாசி, பங்குனி ஆகிய மும்மாதங்களும் காவலில் வைக்கப்படுவான். காவலில் இருக்கும் நாட்கள் அவன் ஸ்ரீ இந்திரத்துக் கோவில் கோசாலையில் பசுக்களின் சாணமள்ளி சுத்தப்படுத்த வேண்டும். அரண்மனைக் கழிவறைகளில் மலமள்ள வேண்டும். பசுக்களுக்கு வைக்கப்படும் உணவில் மிஞ்சியதை மட்டுமே உண்டு சீவித்திருக்க வேண்டும். சீவன் நீடித்தால் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் ஸ்ரீ இந்திரத்துத் திருக்கோவில் முகப்பில் மக்கள் மத்தியில் கழுவேற்றப்படுவான். அதுநாள் வரையிலும் ஊர் மக்கள் தங்கள் வீட்டு அழுக்குத் துணிகளைக் கோசாலையில் கொண்டு போடவும். அவற்றை அவன் கட்டாயம் உடுத்திருக்க வேண்டும். மேற்கண்ட முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் தினசரி தலைமைக் காவலர் குழு கொடுக்கும் அத்தனை தண்டனைகளும் அவனுக்கு உரித்தாகும். பேரரசர் நின்றசீரான் வாழ்க! ஸ்ரீ இந்திரம் வாழ்க!”

மக்கள் கூட்டத்தில் பலர் ஸ்ரீ இந்திரப் பெருமையை முழக்கமிட்டு ஆர்ப்பரிக்க, சிலர் திகம்பரரைப் பார்த்துப் பரிதாபப்பட்டனர். அரசன் எழுந்து திகம்பரரை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தபடி மக்களை வணங்கிக் கிளம்பினான். திகம்பரர் முன்னமர்ந்த மோன நிலையிலேயே நிலைத்திருந்தார்.

திகம்பரர் சிறையிலடைக்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஊரில் ஒவ்வொரு புதுக் கதை உருவாகி வந்தது.

“ஏம்ப்பா, அந்தச் சாமியார் கூடு விட்டுக் கூடு பாய்வாராமே? நெனச்ச பொழுது நெனச்ச எடத்துல இருப்பாராம் கேட்டியா! என்ன மாயமோ, என்னவோ?”

“அட ஆமப்பா! இப்போ செறைல இருக்காருன்னா நெனைக்க? அவரு திருச்சாணத்து மலைக்கு போயி ரெண்டு சாமம் முடிஞ்சு பாத்துக்கோ. இவனுவோ வேலையும் சோலியும் இல்லாம சுத்துகானுவோ, பேசாம அன்னிக்கே புடிச்சி கழுவுல சொருகியிருக்கணும்.”

“அவருக்க பேரு கோரக்கராக்கும். அடுப்புக் கங்குல பொறந்து வந்த ஆளாக்கும்.”

“இதென்னடி புதுக் கதயா இருக்கு?”

“அட, ஆமடி. ஒருத்திக்கி பிள்ளயில்லன்னு ஒரு ஆலமரத்தச் சுத்திச் சுத்தி வந்தாளாம். ஒருநாள் அந்த வழியா வந்த ஒரு மொட்டச்சாமி அவளோட பக்தியப் பாத்து ஒரு சூரணத்தக் குடுத்து சாப்பிடச் சொன்னாராம். அவ போயி பக்கத்து வீட்டுக் காரி கிட்ட சொல்ல, அந்தக் கிறுக்கி ‘அதெல்லாம் ஏமாத்து வேல, போயி அத அடுப்புல போடு’ன்னு சொல்லிருக்கா, இவளும் அதத் தூக்கி அடுப்புல போட்டுட்டா. சரியா மூணு வருசம் கழிச்சி, அதே நாள் அந்த ஊருக்கு வந்த அந்த மொட்டச்சாமி அவ வீட்டு வாசல்ல போயி பிச்சை கேட்டாராம்.”

“ஓஹோ, பொறவு என்னாச்சாம்?”

“அவரப் பாத்து அவ பயந்து போயி நின்னுருக்கா. அவரு ‘எங்கம்மா? ஒம் பையனக் கூப்பிடு, பாப்போம்’ன்னு கேட்டாராம். அவ அழுது தான் செஞ்சத சொல்லிருக்கா. அதுக்கு அவரு  ‘எந்த அடுப்புல போட்டியோ அதே அடுப்பு கிட்ட போயி ஒம் மகனக் கூப்பிடு’ன்னாராம். அவ போயி என்ன செய்யன்னு தெரியாம அப்பிடியே கூப்பிட்டுருக்கா.”

“புள்ள வந்துட்டுன்னு சொல்லுவ போலருக்கே!”

“அடக் கேளு, அவ கூப்பிட்ட ஒடனே தீக்கங்குல இருந்து ஒரு சின்னப் பையன் எழுந்து வந்தானாம். மூணு வயசுப் பையன், புரியுதா? அதனால தான் கோரக்கர்ன்னு பேராம். தீயிலருந்து வந்தவன்னு அர்த்தமாம்.”

“என்னமோ, போ! என்னல்லாம் கத!”

“அது மட்டுமில்லடி, இப்போ கோசால முச்சூடும் சந்தன வாசமா அடிக்காம் பாத்துக்கோ, அன்னிக்கி நீ அவரு மொகத்தப் பாத்தியா இல்லயா? என்ன ஒரு அம்சம் தெரியுமா? நம்ம ஸ்ரீ இந்திரத்து முருகன் சன்னிதிதான் எனக்கு சட்டுன்னு தோணிச்சி. சரி, பாப்பம்.”

முழு நாள் வேலையும் முடித்து காவலர் குழுவின் ஏளனமும் தண்டனையும் ஏற்று சிறையில் அதே நிமிர்வுடன் இருந்தார் திகம்பரர். இரவெல்லாம் உறங்காது கண்மூடி தியானத்திலிருந்தார். உணவேதும் உட்கொள்ளவுமில்லை. யாருடனும் பேசவுமில்லை. பசுக்களும் அவரும் மட்டுமே தங்களுக்குள் பேசிக் கொண்டதாகச் செய்தி. அவர் சேர்ந்த பிறகு அதுவரை இல்லாத அளவில் பசுக்கள் பால் சுரந்ததாகவும், அப் பால் தேன் போல தனக்கென ஒரு சுவையுடையதாக இருந்ததாகவும், எப்போதும் கோசாலையிலிருந்து ஒரு மெல்லிய புல்லாங்குழல் ஓசை வந்து கொண்டிருந்ததாகவும் பல செய்திகள் ஊரெங்கும் பரவின. சில நாட்களில் ஏனென்றில்லாமல் கோசாலையின் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமானது. வேறு வழிகளில் செல்ல வேண்டியவர்கள் எல்லோரும் சுற்றி கோசாலையைக் கடந்து சென்றனர். அதிகாலை முதல் அந்தி சாயும் வரை கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதும் கோசாலையை அருகே சென்று பார்ப்பதும் அரசவைக்குச் செய்தியாகச் சென்ற போது கோசாலையைச் சுற்றிலும் காவலை அதிகரிக்கும்படியும் மக்கள் அவ்வழிச் செல்வதைத் தடை செய்யும்படியும் உத்தரவிட்டான் அரசன் நின்றசீரான்.

காவல் பலப்படுத்தப்பட்டதையறிந்த மக்கள் போலிச்சாக்குகளைச் சொல்லி வருவதும், காவலர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து வருவதுமென தொடர்ந்தது. சில நாட்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் தங்கள் கழிகளால் அவர்களை அடித்து விரட்ட வேண்டியதும் நடந்தது.

சில நாட்களுக்குப் பிறகு கோசாலையைப் போலவே திகம்பரரை அடைத்து வைத்திருந்த சிறைக்கூடத்தின் அருகேயும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதுவும் குறிப்பாக இரவுகளில். துவக்கத்தில் யாரும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாவிட்டாலும் இதுவே தொடர்ந்த போது அரசவையில் குழப்பமேற்பட, ஊர் முழுவதும் சில நாட்களுக்கு ஊரடங்கி இருக்க வேண்டுமென உத்தரவு போடப்பட்டது. வெளியே வருபவர்கள் சிறையிலடைக்கப்படுவர் எனவும் ஊரெங்கும் தகவல் பரவியது. அச்செய்தி பரவியது முதல் மூன்று நாட்கள் ஊர் அடங்கிப்போயிருந்தது. நான்காம் நாள் அதிகாலையில் கோசாலையின் வாயிற்கதவைத் திறந்த பணியாளை இடித்துத் தள்ளி உட்புகுந்த மக்கள் கூட்டமொன்று அங்கிருந்த பசுக்களை அன்போடு கட்டித் தழுவிப் பராமரித்து ஆனந்த நடனம் புரிந்தபடி வெளியேறியது. திகம்பரர் எதையும் கண்டுகொள்ளாது அதே புன்னகையோடு தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். காவல் கூடியது. கழிகள் பெருகின. ஆயினும் பித்துப் பிடித்ததைப் போல ஒரு பரவச நிலையில் ஆடியும் பாடியும் வந்து சென்ற மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்து நிற்க மட்டுமே முடிந்தது. ஓங்கிய கழிகள் தானாகவே இறங்கியதாகவும் காவலர்களும் உடன் சேர்ந்து ஆடியும் பாடியும் திரிந்ததாகவும் ஊரெங்கும் செய்தி.

ஒன்றும் புரியாமல் திணறி நின்ற அமைச்சர் குழுவின் முன் வந்து நின்ற அரசன் தன் முடிவை அறிவித்தான்.

“அத் திகம்பரனின்  வேலைதான் இதெல்லாம் என்று அறிகிறேன். இன்றிரவே அவனை இந்திர மலையுச்சிக்குக் கொண்டு சென்று நமது குகைகளிலொன்றில் அடைத்து வையுங்கள். உணவற்று நீரற்று உடல் மெலிந்து அவன் மடிந்து அவனது பிணத்தைக் கழுகுகள் கொத்தித் தின்ற பிறகு எனக்குத் தகவல் சொல்லுங்கள்!”

“அரசே, சித்திரைத் திருவிழா கொடியேற்றத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொறுத்திருந்தால் என்ன? உங்கள் தீர்ப்புப் படியே ஊரறிய அவனைக் கழுவேற்றினால் தானே உமது புகழ் பெருகும், எதிர்க்கத் துணிபவர்க்கும் ஒரு பயம் இருக்கும், இல்லையா?” என்று கேட்டார் பிரதம அமைச்சர்.

சற்று யோசித்த அரசன், “ம்‌ம். அதுவும் சரிதான். அப்படியென்றால் அவனைக் குகையில் அடைத்து மட்டும் போடுங்கள். இன்னும் சில நாட்கள் தானே! பாவம் பிழைத்துக் கிடக்கட்டும். எப்படியாயினும் வெற்றி நம் பக்கம் தானே!” என்றான்.

அப்போது அவசர செய்தி கொண்டு வந்த காவலன் ஒருவன் உள்ளே பரபரத்து ஓடி வந்து மூச்சிரைக்க நின்றான்.

“மன்னிக்க வேண்டும் அரசே! கெட்ட செய்தி! திருக்கோவில் கோபுரத்திலிருந்து குதித்து ஒருவர் தலை சிதறி மாண்டு விட்டார். கோவில் நடை சாத்தப்பட்டது. மூன்று நாட்களுக்குச் சுப காரியங்கள் எதுவும் நடைபெறக் கூடாதென ஊரெங்கும் செய்தி அனுப்பப்பட்டது. தலைமைக் காவலரின் செய்தி!”

குழப்பத்தோடு மொத்த அவையும் திகைத்து நிற்க, அரசன், “விழுந்த அந்தக் கோழை யார்?” என்று கேட்டான்.

“அரசே! அவர் நம் முந்தைய தலைமைக் காவலர் என்று தகவல். காணாமல் போனவர் இன்று மாலை நகர் நுழைந்ததாகவும் நேராகக் கோசாலைக்குச் சென்று பின் திருக்கோவிலில் தரிசனம் செய்ததாகவும் அறிந்தோம்.”

அவையெங்கும் பேரமைதி. பல்வேறு எண்ணங்கள், கேள்விகள், பதில்கள் என அந்த அறை முழுதும் குழப்ப நெடி நிறைந்தது.

நள்ளிரவில் சிறைக்கூடத்து முகப்பில் வந்து நின்றது பத்து குதிரை வீரர்களை அடக்கிய குழுவொன்று. எல்லோரும் உடைவாள் தாங்கியிருந்தனர். தலைமைக் காவலன் சமிக்கையிட இருவர் உள்ளே செல்ல, மற்றவர்கள் தங்கள் குதிரைகளை ஓரமாகக் கட்டி விட்டு மறைத்து வைத்திருந்த ஒரு பல்லக்கைத் தூக்கி வந்து சிறையின்  முகப்பில் நின்றனர். மகாராணியும் இளவரசியும் மட்டுமே உபயோகப்படுத்தும் பல்லக்கு.

உள்ளே சென்ற இருவரும் அலறிக் கொண்டு ஓடிவந்தனர். “திகம்பரரைக் காணவில்லை தலைவரே! யாரும் ஒன்றும் அறியவில்லை. காவலர்கள் பேச்சற்று சிலைபோல நிற்கின்றனர். ஆனால், அவர் இருந்த அறையில் தாமரை மலர்கள் குவிந்து கிடக்கின்றன.”

“அவர் என்னடா அவர். அவன் என்று சொல். அவனை இன்றிரவே கழுகுகளுக்குப் படைக்கிறேனா இல்லையா பார்,” என்று கத்தினான் தலைமைக் காவலன்.

..

திருக்கோவில் முகப்பின் எதிர்ப்புறமாக நீண்டு சென்ற வீதியின் நடுவே மெல்ல அடியெடுத்து நடந்தார் திகம்பரர். இடையில் அவ்வப்போது நின்று தன் மயில் தோகைப் பீலியால் காலடியில் விசிறி பின் தொடர்ந்து நடந்தார். திறந்து கொண்ட சில மாடங்களிலிருந்து நீண்ட கைகள் பூக்களைத் தூவின. திறந்துகொண்ட சில கதவுகளிலிருந்து வெளிவந்த உருவங்கள் சில திகம்பரரின் பின்னால் அதே போல் மெல்லடி வைத்து நடக்கத் தொடங்கின. சற்று தூரம் சென்றதும் அவர்களில் ஒவ்வொருவராக தங்கள் ஆடைகளைக் கிழித்தெறிந்து வானையுடுத்தத் துணிந்தவர்களாகத் தொடர்ந்தனர்.

ஸ்ரீ இந்திரத்து எல்லை தாண்டிக் குறுக்கிட்ட பெரும் குளமொன்றில் இறங்கி நீராடினார் திகம்பரர். ஆகாசத் தாமரையாக நீரில் வான் நோக்கி மிதந்தார்.  சிறு குழந்தை போல நீரைச் சிதறியடித்து விளையாடினார். அப்படியே அக்குளத்தை நீந்திக் கடந்து மறுகரை ஏறினார். கரையிலிருந்து முன்சென்ற ஒற்றையடிப் பாதையின் ஓரமாக ஓங்கி உயர்ந்து நின்ற வில்வ மரத்தடியில் சென்று வடக்கு நோக்கி நின்று கைகூப்பி வணங்கினார். கண்மூடி தியானத்தில் ஆழ்ந்த அவரருகே சென்ற மற்றவர்கள் அவரைப் போலவே தாங்களும் வணங்கி நின்றனர்.

பல வருடங்களுக்குப் பிறகு.

திடீரென செயலற்று வீழ்ந்து பல்லாண்டுகளாக உயிரை மட்டும் பிடித்து வைத்திருந்த தன் தந்தைக்காக வேண்டி நாற்பத்தோரு நாட்கள் விரதமிருந்து மக்களோடு மக்களாக நடந்து வந்து பெரும் குளத்தை நீந்திக் கடந்து வில்வ மரத்தடி பாதத்தடங்களில் வந்து விழுந்தான் அரசன் இரண்டாம் நின்றசீரான். கண்மூடி அமர்ந்து நீண்ட நேரம் தியானித்திருந்தான். தன்னையறியாமல் அவன் வாய் ஏதேதோ முனகிக் கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. மீண்டும் மீண்டும் பலமுறை அப்பாதத் தடங்களில் தன் தலையை வைத்து வணங்கினான். பின், கண் விழித்தவன் அந்த இடத்தையும் மக்களையும் கூர்ந்து கவனித்தான்.

சிற்பி செதுக்கியதைப் போல மரத்தடி வேரில் நிலைத்திருந்த பாதத்தடங்கள், சற்று மேல் ஆளுயரத்தில் ஒரு குடை போலத் தானாகவே உருவாகியிருந்த மரக்கிளையொன்றின் பொந்து, எப்போதும் அப்பாதத்தடங்களில் கசிந்து கொண்டிருந்த நீர்மை, கவலையேதுமின்றி பெரு மகிழ்வில் சொலித்து நின்ற அவ்வூர் மக்கள் ஒவ்வொருவரின் முகம், இயல்பாய் மேய்ந்து கொண்டிருந்த அழகிய பசுக்கள். இன்னும் கூர்ந்து கவனித்தபோது அவன் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது. ஒரு மெல்லிய புல்லாங்குழல் ஓசை அவ்விடத்துக் காற்றில் கலந்து வந்துகொண்டேயிருந்தது. சட்டென எழுந்தவன் கால் இடறி ஒரு சிறு கல்லில் இடித்தது. ஒரு கணம் நின்று, ‘சிவ சிவா’ என்றவன் அக்கல்லைக் கூர்ந்து பார்த்தான். ஏதோ தோன்றியவனாக வில்வ மரத்தடி பாதத் தடத்தை வணங்கிய பின் தலைமைக் காவலனை அழைத்தான்.

“பழையாற்றின் பரிசல் துறையின் அருகே ஒரு பாறையில் பாதத் தடங்கள் உண்டில்லையா? அப்பாறையைப் பெயர்த்து இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதோ, சரியாக இப்பாதத் தடங்களின் மீது. இவ்வில்வ மரத்திற்குச் சிறிதும் சேதமின்றி மரத்தோடு சேர்த்து இந்திர மலைக் கற்களால் ஒரு ஆலயம் கட்டப் போகிறோம். கோரக்க நாதர் ஆலயம் என ஊரெங்கும் தெரியப்படுத்த வேண்டியன செய்யுங்கள்!” என்று உத்தரவிட்டு விட்டு மெல்லக் காலடி எடுத்து வைத்துத் திரும்ப நடந்தவன் சில அடிகள் சென்றதும் நின்றான்.

ஆழ்ந்து யோசித்தபடி, “ம்‌ம், சரிதான், பாதத்தடத்தின் இடப்புறமாக கணபதியையும் வலப்புறம் பகவதியம்மையையும் பிரதிஷ்டை செய்யுங்கள். இவ்வாலயத்தை எழுப்பியது பேரரசர் முதலாம் நின்றசீரான் எனக் கல்வெட்டு பொறிக்கப்படட்டும்.” என்றான்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.