ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்

சாதாரண வாழக்கை

மது வாழ்க்கை சாதாரணமானது,

பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன்.

நமது வாழ்க்கை சாதாரணமானது,

தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள்.

சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள்,

ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல்,

நகர எல்லையில் உலா,

நல்ல செய்தி, கெட்ட செய்தி

ஆயினும் பொருள்களும் எண்ணங்களும்

எவ்விதமோ முடிக்கப்படாமல் இருந்தன

கைப்பிரதிகளாக.

ஏதோவொன்றுக்காக வீடுகளும் மரங்களும் கூடுதலாக ஆசைப்படுகின்றன.

மேலும் கோடையிலோ பசும் புல்வெளிகள்

எரிமலைகளாலான பூமியை மூடுகின்றன

கடலில் தூக்கி வீசப்பட்ட மேலங்கி போல.

வண்ணமற்ற சினிமாக்கள் வெளிச்சத்துக்கு ஏங்குகின்றன.

காய்ச்சல் கலக்கத்தில் காடுகள் சுவாசிக்கின்றன,

மேகங்கள் பாடுகின்றன மென்மையாக,

மழைக்காகப் பிரார்த்தனை செய்கிறது ஒரு மாங்குயில்.

சாதாரண வாழ்க்கை ஆசைகொள்கிறது.

 

சக மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகில்

சக மனிதர்களின் சங்கீதத்திலும்

சக மனிதர்களின் கவிதைகளிலும் என

சக மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகில் மாத்திரமே ஆறுதல் இருக்கிறது.

ஏகாந்தம் அபினைப் போல சுவையளிப்பதாக இருந்தாலும்

சக மனிதர்களால் மட்டுமே நமக்கு ரட்சிப்பு.

சக மனிதர்கள் நரகம் அல்ல,

விடியற்காலையில் நீங்கள் அவர்களைக்

கனவுகளால் சுத்தப்படுத்தப்பட்ட

தூய நெற்றி உடையவர்களாகப் பார்த்திருந்தால்.

அதனால்தான் நான் திகைப்படைகிறேன்

எந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று “அவன்” அல்லது “நீ”.

ஒவ்வொரு “அவனும்”

ஏதோவொரு “நீ”-யை வஞ்சிக்கிறது

ஆனால் பதிலுக்கு வேறொருவரின் கவிதை தந்துவிடுகிறது

நிதானமான பேச்சின் நம்பகத்தன்மையை.

 

மழையின் கதை

மரங்களின் கூடாரங்களுக்குக் கீழே உலாவிக் கொண்டிருந்தேன்

மழைத்துளிகள் அவ்வப்போது என்னை வந்தடைந்தன

துயருறுவதுதான் உன் ஆசையா?

அழுவதுதான் உனது விருப்பமா? என்று கேட்பது போல்.

 

மென்மையான காற்று,

ஈரமான இலைகள்;

வசந்தத்தின் வாசனை,

துக்கத்தின் வாசனை.

 

நீங்கள்தான் என் அமைதியான சகோதரர்கள்

இறந்தவர்களே

நீங்கள்தான் என் அமைதியான சகோதரர்கள்.

நான் உங்களை மறவேன்.

பழைய கடிதங்களில் நான் காண்கிறேன் உங்களது எழுத்தின் தடயங்களை,

தாளின் மீது ஊர்ந்து செல்கிறேன்

மனநல காப்பகச் சுவர் மீதிருக்கும் ஒரு நத்தை போல.

உங்களது முகவரிகளும் தொலைபேசி எண்களும்

எனது குறிப்பேடுகளில் முகாம் அமைத்துக்

காத்திருக்கின்றன, சிறுதுயில் கொள்கின்றன .

 

நான் பாரிஸில் இருந்தேன் நேற்று,

அங்கே கண்டேன்

உணர்ச்சியற்றும் சோர்வாகவும் இருந்த

நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை.

நான் நினைத்தேன்,

உங்களை மாதிரியே அவர்கள் இருக்கிறார்கள் என்றும்

நிலைகொள்ள இயலாமல் அவர்கள்

அமைதியின்றிச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும்.

 

நீங்கள் நினைத்திருக்கலாம் வாழ்வது எளிதாக இருக்கும் என்று.

 

உங்களுக்குத் தேவையானதெல்லாம் கைப்பிடியளவு பூமி, ஒரு படகு, ஒரு கூடு, ஒரு சிறை,

சிறிதளவு மூச்சுக்காற்று, சில துளி ரத்தம், ஏக்கம்.

 

இறந்தவர்களே

நீங்கள்தான் எனது ஆசிரியர்கள்.

என்னை மறந்துவிடாதீர்கள்.

 

நாக்டர்ன் (Nocturne)

செப்டம்பரின் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம்: எனது தந்தை

ஷோப்பினின் கன்செர்ட்டோவை கேட்டுக்கொண்டிருந்தார், எதையோ எண்ணியபடி,

(அவருக்கு இசை பெரும்பாலும் பிற செயல்பாடுகளான

வேலைக்கும் வாசிப்புக்குமான பின்னணியாகவே இருந்தது),

கொஞ்ச நேரம் கழித்து, புத்தகத்தை ஓரமாக வைத்தார்,

பிறகு சிந்தனையில் ஆழ்ந்தார்;

நான் நினைக்கிறேன் நாக்டர்ன்களில் ஏதோவொன்று

அவரை ஆழமாகப் பாதித்திருக்க வேண்டும்—

சன்னலுக்கு வெளியே பார்க்கிறார்

(அவருக்குத் தெரியாது, நான்

பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று),

அவர் முகம் திறக்கிறது இசைக்கும் வெளிச்சத்திற்கும்.

மேலும் இவ்வாறே அவர் எனது ஞாபகத்திலும் இருக்கிறார்,

ஒருமுகப்பட்டவராகவும் சலனமற்றவராகவும்.

இவ்வாறே அவர் என்றென்றும் இருப்பார்,

நாட்காட்டிக்கு அப்பால், பாதாளத்துக்கு அப்பால்,

அவரை நிர்மூலமாக்கிய வயோதிகத்துக்கு அப்பால்.

மேலும் இப்போது உயிருடன் இல்லாதபோதும்கூட,

அவர் இன்னும் இங்கு இருக்கிறார்,

விழிப்புடனும் அண்மையில் புத்தகத்துடனும்,

நாற்காலியில் சாய்ந்தபடி, அமைதியாக,

அவர் ஷோப்பினைக் கேட்டுக்கொண்டிருக்கிறார், ஏதோ அந்த இரவு இசையே

அவரிடம் பேசிக்கொண்டிருப்பது போலவும் எதையோ விளக்குவது போலவும்.

 

[தமிழில்: வே.நி.சூர்யா]


ஆடம் ஜகாஜெவ்ஸ்கி (1945-2021):

போலாந்து கவிஞர். எளிமையான மொழிதலையும் யதார்த்தத்துடன் ஒளிவு மறைவில்லாத தொடர்பை வலியுறுத்தி, போலாந்தில் உருவாகி வந்த, புதிய அலை இயக்கத்தின் முன்னணி கவிஞர். Tremor, Canvas, Mysticism for beginners, Unseen hand என ஐந்துக்கும் மேற்பட்ட கவிதை தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன. Solidarity, Solitude (1990), Another beauty (2002), A Defense of Ardor (2014), Slight Exaggeration (2017) போன்றவை இவருடைய கட்டுரை நூல்கள்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.