கனவில் நனைந்த மலர்

அந்த அப்பார்ட்மெண்ட் எங்கும் பச்சை நிறமொத்ததாய் இருந்தது. முகமற்ற பொம்மைகளின் வரைபடங்கள் பென்சில் ஸ்கெட்சாகவோ வண்ணக்கலவையாகவோ சுவரெங்கும் பரவிக் கிடந்தன. வானமும் கடலும் சேர்ந்தது போன்ற படம் ஜெசிந்தாவை ஈர்த்துக் கொண்டே இருந்தது. மாதவி கண்முன் சூடான இஞ்சி தேநீரைக் கொடுத்தாள். அதென்னமோ சிறிய வயதிலிருந்தே கேட்காமல் இஞ்சி தேநீர் கொடுப்பவர்கள் மேல் இயல்பான ஒரு பாசம் வந்து விடுகிறது

“சீனி பாருங்க ஜெசி.. ஓகேயா?”

ஜெசிந்தா ஒரு மிடறு தேநீரைக் குடித்துப் பார்த்தாள். ஒரு இரவு நேரக் காதலனின் இதமான அணைப்பைப் போல் அது தொண்டைக்குழியில் சிக்கியது. இனிப்பு சரியாக இருக்கிறதென இவள் தலையசைத்தாள். தன்னையறியாமலே உதட்டில் இவளுக்கு ஒரு புன்னகை தன்னையறியாமலே படர்ந்தது.

“என்ன ஜெசி.. டீ மோசமாருக்கா?”

“ச்சேச்சே….சிறப்பாருக்குங்க.. வேணுமான்னு கேக்காமலே தேநீர் தர்றவங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்…”

இப்போது மாதவியும் சிரித்தாள். கன்னத்தின் வடு மேல் இயல்பாகக் கை வைத்து விரலால் தேய்த்து விட்டாள். சில புன்னகைகள் மனசுக்குள் நுழைந்து ஆன்மாவைக் கையகப்படுத்திக் கொள்ளும்.

“பொதுவா நான் பேட்டிலாம் கொடுக்கறதில்ல…என்னமோ நீங்க பேசுனது பிடிச்சிருந்துச்சு ஜெசி…”

“அதான் ஏன்… அதான் என்னோட மொத கேள்வின்னு வச்சிக்கலாம்..”

மாதவி சிரித்து பின் முகம் இறுகி அமைதியானாள்.

“இண்டர்வியூ கொடுத்து? என்ன purposeனு சத்யமா என்னால புரிஞ்சிக்க முடில. யோசிச்சும் சரியா முடிவெடுக்க முடில. ஒரு பாப்புலாரிட்டி. அவ்ளோ தான். யாராச்சும் ஒருத்தர் ஃபோன் செஞ்சி உங்க  பேட்டி பாத்தேன்னு சொல்வாங்க. நோட் பண்ணனும்.. பாத்தேன்.. வாசிச்சேன் இல்ல…  இந்த பேட்டி மிக ஆபத்தானதுன்னு ஒரு அறிவுஜீவி ஃபேஸ்புக்ல கமெண்ட் போடுவாரு. போங்கடா ங்கோத்தான்னு மனசுல தோணுறத மறச்சிட்டு அதாகப்பட்டதுன்னு பொய்யா ஏதாச்சும் பேசணும். யூ நோ ஜெசி. பொய் சொன்னா தான் வாழ முடியும்”

மாதவியின் குரல் அடர்ந்த வனத்தின் நடுவே நனைந்து கிடக்கும் மலரைப் போலிருந்தது. அடுத்து என்ன பேசுவதென்று சத்தியமாகப் புரியவில்லை. திடுக்கிட்டு அவளைப் பார்ப்பது கூட அந்த நொடியின் கனத்தைக் கிழித்து விடக் கூடும் எனத் தோன்றிற்று.

“எங்கிட்ட வந்து என்ன கேப்பாங்க.. உங்கள ரேப் பண்ணவன நீங்க அவன் விடுதல ஆகி வர்றப்ப ஏன் கொல பண்ணீங்கன்னு.. அதான? அவங்களுக்கு ஏதாச்சும் கேக்கணும். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ஜெசி? அவன் ஜெயிலுக்கு போனது தான் அவனுக்கு தண்டனன்னு எல்லாருமே நினச்சாங்க… அதில்ல…”

மாதவியின் கைகள் தன்னிச்சையாக ஒன்றோடு ஒன்று விரல்கள் கோர்த்துக் கொண்டன. ஏதும் பகிராத புன்னகையொன்றை அவள் ஏதோ ஒரு திசையை நோக்கிப் பகிர்ந்தாள். கடிகாரத்திற்குக் கால் முளைத்து பாத சப்தங்கள் மட்டும் ஒரு உலகில் கேட்பது போல் ஒரு ப்ரமை ஏற்பட்டது ஜெசிந்தாவுக்கு. மாதவியின் விரல்களோடு தனதையும் பிணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

“வழக்குலாம் இப்ப ஏதும் நிலுவைல இல்ல… நீங்க இப்ப சொல்லலாமா… ஏன் ஜெயில் வாசல்ல வர்கீஸை கொல செஞ்சீங்கன்னு?”

“ம்ம்ம்.. ஒரு தடவ என்ன தப்பா கையாண்டதுக்கு தான் அவனுக்கு அந்த ஜெயில் தண்டன. ஆனா தெனந்தோறும் என் மனசு.. ஒடம்பு எல்லாமே செத்துச்சே.. என்ன நானே கொல செஞ்சிக்கிட்டேனே.. அதுக்கு? அதுக்கு என்ன தண்டனய அவன் அனுபவிச்சான்? நா அவன கொல பண்ணிட்டேன்னு எனக்கே தெரில.. அவன் விடுதல ஆகி வர்றப்ப நா ஏன் அங்க ஜெயில் வாசலுக்குப் போனேன்னு புரியல… ஆனா போனேன்.. it was not premeditated. நா… நா.. அவன கீழ தள்ளினேன். அவன் தல கல்லுல அடிச்சி அவன் சரிஞ்சி விழுந்தான்… சரிஞ்சி விழுந்தான்னு நெனச்சேன்.. ஆனா செத்து விழுந்துட்டான். சாவுன்னு என்ன? அப்படியே இருக்கறது… ஆடாமல் அசையாம இருக்கறது அவ்வளவு தானேஅதுக்கென்ன ஆர்ப்பாட்டம். செத்துப் போன அவன் உடம்புக்கு அத்தன பச்சாதாபம்னா .. உசிரோடு செத்து கெடக்குற எனக்கு என்ன கெடச்சிது.. அட .. நா வேற என்னென்னமோ பேசிட்டு இருக்கேன்… நீ குடி..”

மாதவியின் குரல் மெல்ல ஒரு அருவியில் வழுக்கும்  சிறுபாறை போல உள்ளே அமுங்கி தொண்டைக் குழி நரம்புகள் மெல்ல மெல்ல உள்ளிழுத்து ஒரு சாலைப் பள்ளம் போலத் தெரிந்தது. ஜெசிந்தா அவள் கைகளைப்  பிடித்துக்கொண்டாள். பெருமழையின் முதல் தூறல்கள் கண்ணாடி ஜன்னல்களில் விழுந்து தெறித்தன. வாசலில் காலிங் பெல்லின் ஒலி கேட்டது. மாதவி சட்டென தன்னைத் தானே உசுப்பிக் கொண்டு எழும்பினாள்

“என் வாழ்க்கைல மிக முக்கியமான விஷயம் இதான் ஜெசி… நான் தனியா இருக்கணும்னு நெனைக்கறப்பல்லாம் யாராச்சும் வருவாங்க”

நாற்காலியை இழுத்துக் கொண்டு நகர்கிறவளுக்குத் தக்க “ க்ரீச்” எனும் ஒலி கேட்டது. அவள் மனவோட்டத்தின் ஒலியாகவும் அதே போல ஒரு இரவை சங்கிலியால் கட்டி இழுத்துக்கொண்டு போனால் வரும் சத்தங்களை ஒத்திருந்தது. அவள் வாசல் கதவைத் திறக்க ஹூசைன் உள்ளே வந்து அவளை அணைத்து பின் கையில் ஒரு பையைக் கொடுத்தான்.

“சிக்கன் தான் கெடைச்சது… அவங்க சாப்டுவாங்கல்ல?”

மாதவி இவளைத் திரும்பிப் பார்க்க இவள் ஆமாமென தலையசைத்தாள். அவன் கையுறைகளைக் கழற்றினபடி அங்கிருந்த ஒரு சோனி சிஸ்டத்தை ஆன் செய்தான். அறை முழுக்க விஸ்தாரமெடுக்கும் ஒரு பனித்துளி போல ஒரு பியோனோ இசை வழிந்தோடியது. மாதவி கிச்சனை நோக்கி நடக்க ஹூசைன் சட்டென அவள் முன்னால் சறுக்கிக்கொண்டு போய் நின்று அதைக் கிட்டத்தட்டப் பிடுங்கினான்.

“நீ பேசிட்டு இரு மாதவி.. நா சமைக்கறேன் .. ரொட்டி அண்ட் ஸ்பைசி சிக்கன் ஓகே தானே?”

மாதவி சிரித்தபடி அவன் கையில் அதெல்லாம் கொடுத்துவிட்டு நகர்ந்தவள் பின்னால் திரும்பி அவனை ஒரு முறை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். அந்தக் கணம் அந்த முத்தம் மிகப் பரவசமானதாக இருந்தது. ஏதோ ஒரு உணர்வை ஜெசிந்தாவுக்கு அம்முத்தம் கடத்திற்று. வேறு யாருக்கோ கொடுக்கப்பட்ட முத்தம் ஒரு பரவசத்தை ஏற்படுத்துமென்பதே இவளுக்குப் புதிதாக இருந்தது. ஜெசிந்தாவுக்கு சரவணன் நினைவுக்கு வந்தான். அவன் ஒரு நாளும் உடலுறவு நேரம் தவிர இவளுக்கு முத்தம் கொடுத்ததில்லை என்பது சம்பந்தமில்லாமல் இவள் நினைவுக்கு வந்து தொலைத்தது.

“ஹூசைன் இல்லனா என்னிக்கோ என் மனநலம் பாதிச்சிருக்கும் ஜெசி. அவன பத்தி நா நெறய இந்த உலகத்துக்கு பேசணும்..”

“உங்க முத்தம் எல்லாத்தயும் சொல்லிருச்சு”

பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டதைப் போல ஜெசிந்தா சிரித்தாள்.

“ஹூசைன நா கோர்ட் வாய்தாக்கெல்லாம் போயிட்டு வர்றப்ப தான் பார்த்திருக்கிறேன்… சும்மா பேசிப்போம்.. கோயம்புத்தூர் வெடிகுண்டுல அந்த தெருல கட வச்சிருந்தார்னு விசாரணைக்கு கூட்டிட்டு வந்து அரெஸ்ட் பண்ணிட்டாங்க… எத்ன பேர் தெரிமா… ஹூசைன் வெளிய வந்த அன்னைக்கு அவர் அண்ணாந்து பாத்தது எத தெரியுமா? ஆகாசத்த தான்… அதான் அவருக்கு பெரிய விஷயமாருந்துச்சு.. நாங்க கார்ல வீட்டுக்கு வந்தோம்.. அப்ப வரைக்கும் அவர் தலய லேசா வெளிய விட்டு ஆகாசத்த தான் பாத்தாரு.. தெரு மாறியிருந்ததுலாம் வேற அதுலாம் ஹூசைனுக்கு ஒரு பொருட்டா இல்ல…”

மெல்லிய சிகப்பு நிறத்தில் மினுங்கிய ஒரு சூப்பை ஹூசைன் மேஜையில் வைத்திருந்தான். “மொதல்ல சாப்டுட்டு பேசுங்க.. சூடா ஏதாச்சும் உள்ள போகலன்னா… மும்பை குளிர் உங்கள தின்னு தீர்த்திடும்..” ஹூசன் சிரித்தது ஒரு வெண்பனிக்கோடு போல இருந்தது. சூப்பின் இதமான வாசனை அதைப் பருக அழைத்த போதும் தேநீர் இன்னும் நெஞ்சுக்கூட்டை விட்டு அகலாமல் நிறைந்திருந்தது.

ஜெசிந்தாவுக்கு ஷீலாவின் ஞாபகம் வந்தது.  அவர்கள் ராயப்பேட்டையில் எல்டாம்ஸ் ரோட்டில் இருந்தபோது எதிர் வீட்டில் இருந்தவள். திருமணமான பெண் என்று தன்னைக் காட்டிக் கொள்வதில் அத்தனை சந்தோஷம் அவளுக்கு. நெற்றியில் குங்குமம், மஞ்சள் சரடு, மெட்டி. எல்லாமே. அவள் தான் இப்படியொரு மெல்லிய சிகப்பு நிறத்தில் சூப் செய்வாள். அதில் ஒரு சில மஞ்சள் சோள குருத்துக்கள் மிதக்கும். தினம் ஒரு கோவிலாக அவள் போவதைப் பார்த்து அந்த தெருவே ஆச்சரியப்படும். அவள் மேல் எப்போதுமே கோவிலில் அலையும் ஒரு வாசனை இருந்தபடியே இருக்கும். அது அவளுக்கு மேலும் அழகூட்டுவதாகவே இருந்தது. வாழ்வின் மிக முக்கியமான அர்த்தங்களில் ஒன்று மனிதர்களின் வாசனை என்று தோன்றிற்று. அந்த ஷீலா பின் ஒரு கோவில் பூசாரியோடு தொடர்பு ஏற்பட்டு ஏதோ ஒரு ஏரிக்கரையில் பிணமாக எடுக்கப்பட்டாள். போஸ்ட் மார்ட்டம் முடிந்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் போது நிற்க இடமில்லாமல் அவர்கள் வீட்டுச் சமையலறையில் பல்லி போல ஒட்டிக்கொண்டு நின்றபோது மேடையில் லேசாகத் திறந்த பாத்திரத்தில் அவித்த சோளம் பூசனம் பூத்திருந்தது. அவள் மேல் பூக்கள் வீசினபடி அவள் கணவன் இறுதி யாத்திரையில் நடந்து போனான்.

“என்ன யோசன? வீட்ட, ஹஸ்பெண்ட தேடிட்டா இவள இண்டர்வியூ எடுக்க வந்து என்ன புண்ணியம்னு நெனச்சிட்டியா?”

“ இல்ல.. இந்த மாரி ஒரு சூப்ப ஷீலான்னு ஒருத்தங்க தான் எனக்கு முதல்ல கொடுத்தாங்க.. அதான்.. இந்த வாசன அவங்கள ஞாபகப்படுத்திருச்சு”

“ம். வர்கீஸுக்கும் இப்படி தான் பீடியும் இஞ்சி மொரப்பாவும் கலந்த மாரி ஒரு வாசன இருக்கும்.. என்ன அவன் ரேப் பண்ணப்ப அவன் குடிச்சிருந்தான். அப்ப அவனோட போராடுனதுல அந்த நெடி எனக்கு தெரியல.. ஆனா அப்புறமா அது என் புத்தில அட்சரம் மாறாம படிஞ்சிக் கெடக்குன்னு தெரிஞ்சிது..”

“ஸாரி.. உங்கள மறுபடி பழசெல்லாம் ஞாபகப்படுத்துறேனோன்னு தோணுது..”

“இண்டர்வியூன்னா என்ன? பழசுக்குள்ள போய் வாழ்ந்து தொலைறது தான? ஆனா ஒண்ணு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி  சொன்ன மாதிரி இல்ல, இப்ப சொல்றப்ப கண்ணீர் இல்ல.. முத தடவல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு.. நான் என்னமோ குற்றம் பண்ண மாரி என்ன நெனச்சே எனக்கு அருவருப்பா இருந்துச்சு..”

ஜெசி மெல்ல சூப்பைக் குடிக்க பதில் சொல்லவில்லையெனினும் அதற்கு நிகரான சூட்டோடு உணவு குழாயினுள் வெப்பம் தகதகத்தது. நெற்றிப் பொட்டில் சின்ன பாதரச துளிகள் போல வேர்த்தது. இவள் சட்டெனத் துடைப்பதைப் பார்த்த மாதவி எழுந்து மின் விசிறி போட இவள் புன்னகைத்தாள். மாதவியின் கண்கள் ஒரு சிறிய பறவை தன் சிறகை விரிப்பதைப் போல ஆசுவாசத்தை பரப்புகிறாற் போலத் தோன்றிற்று.

“எங்கூட பேசுறதுக்கு .. கேள்விகள் கேக்கறதுக்கு எந்த விதமாவும் சங்கடம் வேணாம் ஜெசி. என்னனாலும் கேக்கலாம் நீங்க” என்றாள் ஒரு பறவை தரையைத் தொட்டு தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் இதத்தோடு அவள் கேட்டாள்

“இருக்கு.. ஆனா.. உங்கள காயப்படுத்திற கூடாதுன்னு தான் கேக்காம இருக்கறேன்”

மாதவி இவள் தோளைப் பற்றிக் கொண்டாள்

“இனிமேல என்ன காயம்? ஒண்ணுங்கெடையாது.. கேளுங்க”

“ஒரு ரேப் விக்டிம்.. ஒரு கொல செஞ்சவர்.. நீங்க உங்க ஐடெண்டிய என்னவா பாக்குறீங்க?”

ஹூசைன் க்ரில் சிக்கனை ப்ரிட்ஜில் மசாலா போட்டுவைக்க வந்தவன் ஒரு கணம் ஸ்தம்பித்து நிற்க, ப்ரிட்ஜ் கதவு மூடும் சத்தம் பெரிதாகக் கேட்கும் அளவுக்கு அங்கு ஒரு நெடிய மவுனம் மரண அவஸ்தையோடு புரண்டது

“மாதவி ரொம்ப ரொம்ப அன்பான அழகான பெண்”

பெரும் சத்தத்தோடு அவள் சிரித்தாள். “ நீங்க சொல்றதுலாம் இந்த பாழா போன உலகம் என்ன பாத்துச் சொல்றது தான? ஆனா எனக்கு இந்த மாதவி ரொம்ப அழகான ஒரு பொண்ணு..”

“ஸாரி”

“என்னதுக்கு? நீங்கல்லாம் என்ன எப்டி பாக்கறீங்கன்னு எனக்கு பிரச்ன இல்ல.. நா என்ன எப்டி பாத்துக்கறேன்ங்கிறது தான முக்யம்..”

“இல்ல .. ஸாரி”

இவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். பற்றிக்கொள்ள கையிலிருந்த ஸ்பூன் மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்று அவளே சொல்லியிருந்தால்கூட எதையும் கேட்டிருக்கக் கூடாது என்று சமரசமற்ற குரலொன்று உள்ளே ஒலித்தது

“Don’t feel bad ”

கண் திறக்கையில் ஹூசைன் மாதவியின் கழுத்தை மெல்லிதாக மசாஜ் செய்தபடி இருந்தான். இவளுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து போனாற் போலிருந்தது

இவளது அலைபேசி வைப்ரேஷன்  மோடில் அதிர்ந்தது. மாதவி ஏதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் தயங்குவதைப் பார்த்து இவள் அலைபேசியை எடுக்காமல் விட “பேசுங்க ஜெசி” என்றாள். இவள் அலைபேசியை நகர்த்தி வைத்து விட்டு “நீங்க சொல்லுங்க” என்று சொன்னாள்.

“இல்ல .. எனக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லணும் போலருக்கு.. உங்களுக்கு இது தெரியணும்… இது ஆஃப் தி ரெக்கார்ட்டா ஆன் தி ரெக்கார்ட்டான்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க.. யெஸ்.. நா ப்ரெக்னண்டாருக்கேன்.. 45 வயசு.. இது எனக்கு பெரிய்ய விஷயம்.. எனக்கு செக்ஸ் பிடிக்காது ஜெசி. ஐ ஹேட் இட். யாரும் தொட்டா பிடிக்காது.. வெளிப்படையா சொல்லணும்னா .. நானும் ஹூசைனும் சேந்து வாழ ஆரம்பிச்சப்ப எனக்கு செக்ஸ் பத்தி பெரிசா ஒண்ணு தோணல.. யெஸ்.. அதான்.. தோணல.. ஆனா இப்ப மாறியிருக்கேன்.. ஆக்சுவலா ஜெசி.. செக்ஸ் வித் லவ் ரொம்ப அழகான விஷயம்.. இத நா சொன்னேன்னு எழுதுங்க.. சொசைட்டி ஆச்சர்யப்படும் இல்ல? ஒரு ரேப் விக்டிம் செக்ஸ் ரொம்ப நல்ல விஷயம்னு சொல்றது சும்மா பத்திக்கும் இல்ல?”

ஒரு நிமிடம் இவளுக்கு தன்னிருப்பே பாரமானது போலிருந்தது. ஃபோன் அடித்துக் கொண்டு ஓய்ந்த ஒரு மெசேஜ் மேலாக மினுங்கி சத்தமிட்டது. எடிட்டோரியலில் இருந்து சிவசாமி குறுந்தகவலில் “ ஏதாவது தேறுச்சா? கவர் ஸ்டோரி?” என்று கேட்டிருந்தான். இவள் பதில் அனுப்பாமல் அலைபேசியை கைப்பைக்குள் போட்டாள்.

“ஏன் சொன்னேன்னு தெரில.. ஆனா சொல்லணும் போலருந்துச்சு.. அவ்ளோ தான். பொண்ணுங்க உடம்பு மட்டும் தான் உறவுன்னு எல்லா ஆம்பளைங்களும் நினைக்கறதில்ல ஜெசி”

மாதவி வெறுமனே புன்னகைத்து  “ஒருநிமிஷம்.. பாத்ரூம் போயிட்டு  வந்துடுறேன்”  என்றபடி உள்ளே போக, ஜெசி அவசரமாக ஃபோனை எடுத்து சிவசாமியின் எண்ணை டயல் செய்தாள்

“என்னாச்சு ஜெசி? கவர் தான? எத்தன பேஜ்? ஆறு?”

சரவணன் செகண்ட் காலில் திரும்பத் திரும்ப வர, ஒரு நொடி யோசனைக்குப் பின் இவள் “அவங்கள பாக்கவே முடில சிவா.. நாளைக்கு பாக்கலாம்னு சொல்றாங்க.. ட்ரை பண்றேன்.. நாளைக்கும் கெடைக்கலன்னா கெளம்பிடுவேன்.. ” என்றாள்

சிவசாமி அதிர்ந்து ஏதேதோ பேசினபடி இருக்க இவள் ஏரோப்ளேன் மோடில் போட்டு விட்டு உடலை விரித்து நாற்காலி முழுக்க நிறைத்து கண்களை மூடினாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.