குரல்கள்

வராண்டா கிரில் வழியாக மதில் சுவரிலிருந்து மரத்துக்குத் தாவிய அணிலைப் பார்த்தார். இதே வராண்டா கிரில்லை பிடித்துக்கொண்டு அணிலைக் கண்டவுடன் குதித்த தன் மகனை நினைத்துக்கொண்டார். சூரிய ஒளி க்ரில்லில் இருந்த இரும்புப் பூக்களைத் தரையில் நிழல்கோலமாகக் காட்டியது. அவரைச் சுற்றி பலவித ஓசைகள்: எங்கோ ஒரு குயில் பாடியது, காகம் கரைந்தது, வாசலுக்கு வெளியே நாய் குரைத்தது. ஒருமுறை உறவினர் அபார்ட்மெண்டில் தங்கியபொழுது காலை எழுந்தவுடன் ஒரு சப்தமும் இல்லாமல் அமைதியாக இருந்த அறை அவரை நிலைகுலைய வைத்தது. அவர் மகனிடம், “இது போன்ற ஓசையில்லா இடத்தில் இவர்கள் எப்படித்தான் வாழ்கிறார்களோ?” என்று கேட்டார். வீட்டுக்கு வெளியே ஓசைகள் பல கேட்டாலும், வீட்டுக்குள் தனிமையின் ஓசை மட்டும்தான் கேட்டது.

மெதுவாக வீட்டின் பின்புறத்திற்கு நடக்க ஆரம்பித்தார். ரயில் பெட்டிபோல் நீளமான பாதையில் ஒருபுறம் அறைகளும் இன்னொரு புறம் சுவரும் இருக்கும்படி கட்டப்பட்ட வீடு. சுவரில் மாட்டியிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டார். வட்டமான முகம், தீர்க்கமான மூக்கு, வழுக்கைத்தலை, காதுக்குப் பக்கத்தில் எஞ்சியிருந்த நரை முடி, ஸ்டீல் ஃபிரேம் போட்ட மூக்குக்கண்ணாடி. அவர் வீட்டில் இருக்கும்பொழுதும் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை இன்ஷர்ட் செய்யப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டையும் கருப்பு அல்லது கருநீல நிற பாண்ட் அணிந்துகொண்டிருப்பார். அவருடைய கம்பீரத்தையும் அவர் உடை அணிந்திருந்த விதத்தையும் பார்த்தவுடனேயே எல்லோரும் அவர் ஏதோ பெரிய அலுவலகத்தில் ஒரு பெரிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி என்பதைக் கண்டுகொண்டுவிடுவார்கள். வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் அவர் அதே போல் உடை உடுத்திக்கொண்டிருந்தார். தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு அவர் பெருமிதம் அடையவில்லை. அவருக்கு அவர் மனைவியின் நினைவுதான் வந்தது. வெளியே எங்காவது கிளம்ப வேண்டுமென்றால் அவள் உடையணிந்துகொண்டு தன்னை இந்த கண்ணாடியில் பார்த்துக்கொள்வாள். “டிரஸ் நல்லா இருக்கா” என்று அவள் கேட்க, “அதான் நீயே பார்த்துக்கொண்டாயே. என்னை எதற்குக் கேட்கிறாய்?” என்று அவர் சொல்ல, “நான் நல்லா இருக்கேன்னு சொல்ல உங்களுக்கு மனசு வராதே” என்று அவள் கூற, “கெளம்பு. நேரமாகுது”. இனிமையான நினைவுகள். இப்பொழுது அவள் இல்லை. சில சமயங்களில் கண்ணாடியில் அவளுடைய சிரித்த முகத்தைப் பார்ப்பார். அப்பொழுதெல்லாம் கண்ணாடியில் அவளுடைய முகம் உறைந்துவிட்டதோ என்று அவருக்குச் சந்தேகம் வரும்.

பின்புறக் கதவை நோக்கி மெதுவாக நடந்தார். ஒரு காலத்தில் அவருடைய மிடுக்கான தோற்றத்திற்கு அவருடைய கம்பீரமான நடையும் ஒரு காரணமாக இருந்தது. முட்டி ஆபரேஷனுக்கு பிறகு அவரால் வேகமாக நடக்கமுடியவில்லை. அதிகம் நடந்தால் முட்டி வலிக்க ஆரம்பித்தது. பின்புற க்ரில் கதவைப் பிடித்துக்கொண்டு தோட்டத்தைப் பார்த்தார். இங்கு வந்து நின்றுகொண்டவுடன் அவருக்கு அவருடைய மனைவி நிச்சயமாக ஞாபகத்துக்கு வருவாள். வீடு கட்டும் பொழுது, “எனக்கு வீட்டுக்கு முன்னேயும் பின்னேயும் பத்து அடி கார்டனுக்காக வேணும். வீட்டை நீங்க எப்படி வேணா டிசைன் பண்ணுங்க ஆனா எனக்கு என் கார்டன் வேணும்” என்றாள். பலர் அவனைத் திட்டினார்கள். “டேய். நீ என்ன முட்டாளா? இவ்வளவு எடம் கார்டனுக்காக வேஸ்ட் பண்ற. வீட பெருசா கட்டினா, ஒரு போர்ஷன வாடகைக்கு விட்டு உன்னோட கடன சுலபமா தீர்க்கலாம்.” ஆனால் அவள் ஆசைப்பட்டுவிட்டாள் என்பதற்காக அவர் அவள் விருப்பப்படியே வேண்டிய காலி இடத்தை கொடுத்தார். அவள் அந்த காலி இடத்தை மாற்றிய விதம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. மாமரம், தென்னை மரம், கருவேப்பிலை மரம், கொய்யா மரம், பலா மரம், ரோஜா, சாமந்தி, பாரிஜாதம், கனகாம்பரம், செம்பருத்தி மற்றும் அவருக்குப் பெயர் தெரியாத பூக்கள் பூத்துக் குலுங்கின. மனிபிளாண்ட், மல்லிகை போன்ற கொடிகள் படர்ந்தன. தக்காளி, வெண்டைக்காய், கொத்தமல்லி, கத்திரிக்காய் மற்றும் காய்கறிகள் இந்த தோட்டத்திலிருந்து தான் சமையலுக்காக அவள் பறித்தாள். பல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த தோட்டத்திலிருந்து பழம் மற்றும் காய்கறிகளைக் கொடுத்தார்கள். தோட்டம் வேண்டாம் என்று சொன்னவர்கள் இப்பொழுது அவரிடம், “நல்லவேளை, எங்க பேச்ச கேட்டு நீ இன்னொரு போர்ஷன் கட்டல.” என்றார்கள். அவருக்கு அதைக் கேட்கப் பெருமிதமாக இருந்தது. அதைவிட, தோட்டத்தில் முதல் முறையாகத் தக்காளி தோன்றியபொழுது, அந்த சிறிய சிவப்பு நிற, பனியில் நனைந்த உருண்டையைப் பார்த்து அவர் மகன் அடைந்த ஆனந்தம் தான் அவருக்குள் இன்னும் நீங்காத நினைவாக இருக்கிறது. “அப்பா, அப்பா, இத பாரு. இத பாரு. டொமாட்டோ. டொமாட்டோ” என்று கத்திய அரை நிஜார் அணிந்த சிறியவனின் முகத்தை நினைத்துத் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

அவள்தான் கதவுகளை எல்லாம் க்ரில் கதவுகளாக வைக்கச் சொன்னாள். வீடு முழுவதும் பெரிய ஜன்னல்கள். எல்லா ஜன்னல்களும் எப்பொழுதும் திறந்திருப்பதால் வீட்டில் எந்த மூலையிலும் இருட்டுக்கு இடமில்லை. அவர் வீட்டில் நிறைந்திருந்த வெளிச்சத்தை, அது தரையில் பிரதிபலித்த ஜன்னல் கம்பிகளையும் பார்த்துப் பெருமூச்சு விட்டார். அவருக்கு டீ குடிக்கவேண்டும் போல் இருந்தது. மெதுவாகச் சமையலறைக்கு நடந்து சென்றார். சமையலறை மேடை சுத்தமாக இருந்ததைப் பார்த்து மறுபடியும் பெருமூச்சு விட்டார். அவளிருந்தவரை சமையலறை மேடை என்றும் சுத்தமாக இருந்ததில்லை. இப்பொழுது அந்த கருப்பு கிரானைட் மேடை பளபளக்கிறது. ஒருகாலத்தில் வீடு முழுவதும் மனிதர்கள் நிரம்பி இருந்தார்கள். வீட்டில் பெற்றோர்கள், தினமும் வந்து செல்லும் உறவினர்கள், நண்பர்கள். சமையலறையில் எப்பொழுதும் அடுப்பு எரிந்துகொண்டுதான் இருக்கும். கொரொனாவுக்கு முன்பு வரை அவர் ஒரு நாளும் தனியாக டீ அருந்தியதில்லை. கொரொனா பலரைக் கொண்டு சென்றது. அவர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர் மனைவியை.

சமையல்காரன் பிளாஸ்க் நிறைய டீ போட்டிருந்தான். ஒரு ஸ்டீல் டம்ளரில் டீயை ஊற்றிக்கொண்டு, மில்க் பிஸ்கட் பாக்கெட்டை மேல் ஷெல்ஃபிலிருந்து எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு முன் உட்கார்ந்துகொண்டார். வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அதையடுத்து ஒரு பூனை மியாவ் என்று முனகியது. வீடு மட்டும் மௌனமாக இருந்தது.

அந்த கொடிய நோய் உலகைத் தாக்குவதற்கு முன்பு வரை அவர் வாழ்கையில் மௌனத்திற்கு இடமே இல்லை. வீடு எப்பொழுதும் சப்தங்கள் நிறைந்ததாக இருந்தது. நண்பர்களின் சிரிப்பொலி, ரேடியோவில் பாட்டுச் சத்தம், மிக்ஸியின் மேல்ஸ்தாயி அலறல், டீவியில் கிரிக்கெட் காமெண்ட்ரி, மனைவிக்கு ஊர்க் கதைகளைச் சொல்லும் உறவினர்கள், மகனின் கல்லூரி நண்பர்களின் கும்மாளம் என்று எப்பொழுதும் கலகலப்பாக இருந்த வீடு, இப்பொழுது அமைதியாக இருந்தது. பெரிய வீடு என்பதால் அந்த அமைதி அவரை மேலும் அழுத்தியது. எழுந்து சென்று டீவியை ஆன் செய்து இந்த அமைதியைக் குலைக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் டீவியில் எப்பொழுதும் அறைகுறை ஆடைகள் அணிந்து, தொம் தொம் என்று காது கிழியும் இசைக்கு ஆடிக்கொண்டிருக்கும் பெண்களையோ அல்லது செய்திகள் என்ற பெயரில் ஒருவரைப் பார்த்து ஒருவர் உரத்த குரலில் கத்திக்கொண்டிருப்பதையோ பார்க்க வேண்டும் என்று நினைத்தபோதே ஆயாசமாக இருந்தது. டைனிங் மேஜைமேல் பழக்கூடை அருகில் பிஸ்கட் பாக்கெட்டையும் டீ கோப்பையும் வைத்துவிட்டு சுவரில் மாட்டியிருந்த அவருடைய மனைவியின் சிரித்த முகத்தைப் பார்த்தார். பின்பு மகனும் அவன் குடும்பமும் சேர்ந்து நிற்கும் படத்தைப் பார்த்துக்கொண்டே ஏதோ நினைவில் ஆழ்ந்தார்.

அருகில் வந்த நாய் பிஸ்கட் பாக்கெட்டை திறந்து இரண்டு பிஸ்கட்டுகளை வாயில் கவ்வியது. ஜன்னல் வழியாக வந்த குரங்கு மேஜைமேல் வைத்திருந்த வாழைப்பழத்தை கையிலேந்திக்கொண்டு அவரது இடது தோளின் மேல் உட்கார்ந்தது. பூனை மேஜைமேல் வைத்திருந்த டீயை ஊதி குடிக்க ஆரம்பித்தது. “என்ன ரொம்ப டல்லா இருக்க. மாலையில மகனோட பேசணும்னா காலைலேர்ந்து உன்னை யாரும் கையில் பிடிக்க முடியாது. இன்னிக்கி ஏன் இந்த சோகம்?” என்று குரங்கு கேட்டது. “இன்னிக்கி கால் கேன்ஸல்” என்றது பூனை. “ஆமாம். அவர்களுக்கு ஏதோ வேலை இருக்கிறதாம். அதனால் அடுத்த வாரம் பேசுவார்கள்.” என்றது நாய். பூனை ஏளனமாகச் சிரித்தது. “எங்கே மறுபடியும் வீடு பத்தி தகராறு வருமோன்னு காலை தள்ளிவச்சிருப்பாங்க” என்றது. “என்ன தகராறு?” என்று குரங்கு கேட்க, “போன ஆறு மாசமா நடக்கிற தகராறு தான். நான் எதுக்கு இந்த வீட்டை விட்டு முதியவர்களுக்கான அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்சுக்கு போகணும்? என்னோட நினைவுகளெல்லாம் இந்த வீட்ல தான் இருக்கு. இத எவனோ இடிச்சி அபர்ட்மெண்ட்டா கட்டுவான். வீட்டை மட்டுமில்ல, என்னோட நினைவுகளையும் இடித்துவிடுவான். நான் போன பிறகு நீ எதுவேணும்னாலும் செஞ்சிக்கோ. நான் இருக்கற வரைக்கும் இந்த வீட்லதான் இருப்பேன்னு தீர்மானமா சொல்லிட்டேன். இருந்தாலும் ஒவ்வொருமுறை பேசும்போதும் இதைப் பத்தியே பேச்சு வருது. எனக்கு கோவம் வருது” என்றார்.

“இந்த முறை உங்க மருமகளும் சேர்ந்துகொண்டாள் போல?” என்று குரங்கு கேட்க. “மருமகள் மட்டுமல்ல பேத்தியும் கூட” என்றது நாய். “அப்பா, நீங்க இவருக்கு ரொம்ப டென்ஷன் கொடுக்கறீங்க. இங்க வாங்கன்னு சொன்னா வரமாட்டேன் என்கிறீர்கள். ஒரு அபார்ட்மெண்டுக்கு ஷிப்ட் செய்யுங்கள்னு சொன்னாலும் கேக்க மாட்டேன்றீங்கன்னு என் மருமகள் கூறுகிறாள். “கிராண்ட்பா, வொய் ஆர் யூ அலோன். கம் ஹியர்” என்று என் பேத்தி என்னை அமெரிக்காவுக்கு கூப்பிடுகிறாள். “யு ஆர் பீயிங் அன்ரீசநெபுல்” என்றான் என் மகன். அவனுக்கு என் மேல் அவ்வளவு அக்கறை என்றால் அவன் இங்கு வரவேண்டியது தானே.” அவர் குரல் உயர்ந்தது. “எனக்கு யார் தயவும் வேண்டாம். நான் தனியாக இருப்பேன். என்னைத் தனியாக இருக்க விடு” என்று கத்தினார். அவர் குரல் வீட்டின் அமைதியைக் குலைத்தது.

நாய் அதன் கையை அவர் தொடை மேல் வைத்து, “உங்கள் நல்லதுக்கு தானே சொல்கிறான். அவன் சொல்வதையும் கேட்கலாமே?” என்றது. அவருக்கு மறுபடியும் கோபம். “ஏன், ஏன் நானே எப்பொழுதும் எல்லோருடைய பேச்சையும் கேட்கவேண்டும்? அவனால் திரும்பி வரமுடியுமா?” மறுபடியும் அவர் குரல் உயர்ந்தது. “வர முடியாது இல்ல? அவன் பசங்க வரமாட்டாங்க. அவன் அவங்களை விட்டு வரமாட்டான். நான் மட்டும் என் மனைவியை விட்டுட்டு போகணுமா? என்னால எப்படி முடியும்?” மனைவியின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டுத் தேம்பித் தேம்பி ஆழ ஆரம்பித்தார். அமைதியானபின், “நான் தனியாக இருக்கக்கூடாது என்று தானே மேல் மாடியில் உறவினரைக் குடித்தனம் வைத்திருக்கிறேன்” என்றார்.

“என்ன லாபம்?” என்று பூனை கேட்டது. “கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். ஒரே மகன். அவனும் கல்லூரிக்குச் சென்று விடுவான். வயதான பாட்டி வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு ஒன்று என்றால் நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இருந்தும் ஒரு பிரயோஜனம் இல்லை” என்றது.

“யார் இருக்கிறார்களோ இல்லையோ, என்னால் தனியாக இருக்க முடியும்” என்று உறுதியாகக் கூறினார்.

பூனை சிரித்தது. “இருக்கலாம் ஆனால் உன் நண்பன் இரண்டு நாட்களுக்கு முன் இறந்தான். அது யாருக்கும் அன்று தெரியவில்லை. அடுத்த நாள் தான் தெரிந்தது”

“எப்படி இருந்தால் என்ன? நான் செத்தால் சாகிறேன். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. என்ன நடந்தாலும் நடக்கட்டும்” மறுபடியும் அவர் குரல் வீட்டின் அமைதியைக் குலைத்தது.

“என்னால் தனியாக இருக்க முடியும்”, என்று அவர் சொன்ன வாக்கியத்தை மறுபடியும் சொன்னது அந்த பச்சைக்கிளி. “என்னால் தனியாக இருக்க முடியும்.”

காலிங் பெல் அடித்ததைக் கேட்டு அவர் துணுக்குற்றார். மெதுவாக நடந்து வாசல் பக்கம் வந்தார். மேல் மாடியில் வசிக்கும் அவர் உறவுக்காரப் பெண்ணின் கல்லூரி செல்லும் மகன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். “உள்ள வாடா.” என்று அவனை உள்ளே அழைத்தார். அவன் டைனிங் மேஜை அருகே வந்து, திறந்திருந்த பிஸ்கட் பாக்கெட், கோப்பையில் டீ மற்றும் வாழைப்பழத் தோலை பார்த்தான். நாற்காலியில் உட்காராமல் நின்றுக்கொண்டே இருந்தான்.

“என்ன இப்படி?” என்று கேட்டார்.

“பாட்டி உங்கள பாத்திட்டு வரச்சொன்னாங்க. இங்கிருந்து ஏதோ சண்ட போடற சத்தமும், யாரோ அழுவுற சத்தமும் கேட்டிச்சின்னாங்க. யாராவது வந்தாங்களா?” என்று கேட்டான்.

“யாரும் வரலையே. டீவி சத்தமா இருக்குமோ என்னவோ” என்றார்.

அவன் குழம்பியிருப்பதைப் பார்த்தார். “டீவி ஆன்ல இல்லையே” என்றான்.

“பக்கத்து வீட்டுதா இருக்கும்” என்றார்.

அந்த வீட்டின் அமைதி அவனைத் தாக்கியது. சற்று நேரம் ஒன்றும் சொல்லாமல் வீட்டை நோட்டமிட்டான். வீட்டில் எந்த அசைவும் இல்லை, எந்த சப்தமும் இல்லை.

வீட்டைவிட்டுப் புறப்படத் தயாராக இருந்த அவனுக்கு ஏதோ தோன்றியது. “நீங்கள் ஏதாவது உங்களுடனே பேசிக்கொள்கிறீர்களா? என்று கேட்டான்.

“இல்லையே,” என்றார் அவர். “எனக்கு ஒன்றுமில்லை. நான் நன்றாக இருக்கிறேன்”

“எனக்கு ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன்,” கிளி அவர் காதில் கிசுகிசுத்தது.

அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. வீட்டை ஒருமுறை மறுபடியும் நோட்டமிட்டுவிட்டு “ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.

அவன் சென்ற பிறகு மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தார். அவள் அவரை பரிதாபமாகப் பார்ப்பது போல் அவருக்குத் தோன்றியது. அன்று இரவு, “நீ சொன்ன அபார்ட்மெண்ட் பெயர் என்ன?” என்ற கேள்வியை வாட்ஸப்பில் அவர் மகனுக்கு அனுப்பினார்.

Previous articleநீரை மகேந்திரன் கவிதைகள்
Next articleகனவில் நனைந்த மலர்
சுரேஷ்
எழுத்தாளர் பற்றிய குறிப்பு : சுரேஷ் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதும் எழுத்தாளர். இவர் இசை பற்றிய கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்பு, சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல் எழுத்துகிறார். 'மூக முனி' என்ற சிறுகதை இவருடைய முதல் புனைவு கதை. நட்பாஸ் என்றைழக்கபடும் பாஸ்கரின் உந்துதலில் இதை இவர் பதாகைக்காக எழுதினார். அதற்கு பிறகு இவர் பதகையிலும் சொல்வனத்திலும் எழுதிய கதைகள் 'பாகேஷ்ரீ' என்ற தலைப்பில் தொகுக்கபட்டு 'யாவரும் - பதாகை' பிரசுரத்தால் வெளியிடப்பட்டது. 'பாகேஷ்ரீ' தொகுப்புக்கு 'சுஜாதா உயிர்மை' விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.