Thursday, Aug 18, 2022
Homeபடைப்புகள்நூல் விமர்சனம்கரும்பலகை -நூல் விமர்சனம்

கரும்பலகை -நூல் விமர்சனம்

ஆசிரியராக வேண்டுமென்ற கனவு நம் எல்லோருக்கும் ஒருமுறையாவது நம் வாழ்வில் துளிர்த்திருக்கும். சமூகத்தில் தன்னாலான மாற்றத்தை ஏற்படுத்த இப்பணியைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஒருபுறம், நல்ல சம்பளம், ஓய்வு போன்ற காரணங்களுக்காக இப்பணியைத் தேர்ந்தெடுப்பவர்கள் மறுபுறம். இதில் முதலில் கூறிய காரணத்திற்காக ஆசிரியப்பணியைத் தேர்வு செய்தவர்களே நம் மனதில் நாயகர்களாகிறார்கள். அப்படியொரு ஆசிரியரின் கதையே கரும்பலகை. தமிழில் பள்ளிக்கல்வியை மையமாகக் கொண்டு நிறையச் சிறுகதைகள் வந்துள்ளன. ஆனால், நான் வாசித்தளவில் கரும்பலகைதான் முழுக்க பள்ளிக்கல்வி குறித்துப் பேசும் நாவலாக வந்துள்ளது.

ஒரு ஆசிரியர் வெற்றி அடைந்துவிட்டதற்கான சிறந்த அறிகுறி இவ்வாறு சொல்ல முடிவதே : குழந்தைகள் இப்போதெல்லாம் நான் ஒருத்தி இல்லாத மாதிரியே நடந்து கொள்கின்றனர் – மரியா மான்டெசோரி

கரும்பலகை முதல் அத்தியாயத்தில் ராஜலட்சுமி டீச்சர் மனக்குழப்பத்தில் அமர்ந்திருக்கக் குறிப்பறிந்து மாணவர்கள் அமைதியாக இருக்கின்றனர் என்பதிலிருந்து அவர் நல்ல ஆசிரியர் என்பதை அறிய முடிகிறது. அவரது குழப்பத்திற்கான காரணம் அரசுப்பள்ளி ஆசிரியைகளின் தலையாய பிரச்சனையான பணிநிரவல். திடீர் திடீரென கூகுளில் தேடினாலும் கிடைக்காத ஊருக்கு வடக்கே உள்ளவர்களை தெற்கே, தெற்கே உள்ளவர்களை வடக்கே எனக் கண்டபடி கலைத்துப் போடும் முறைக்குத்தான் பணிநிரவல் என்று பெயர்.

மதுரையிலிருந்து தினசரி பயணித்து அல்லது தொலைதூர ஊர் என்றால் அங்கு வீடு எடுத்து பணிசெய்யும் ஆசிரியை ராஜலட்சுமிக்கு அவரது கணவர் தனசேகரும், மகள் சங்கீதாவும் உறுதுணையாக இருக்கிறார்கள். ‘தன் முயற்சியிலிருந்து சற்றும் மனந்தளராமல் வேதாளத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விக்கிரமாதித்தனைப்போல’ எத்தனை ஊர்களுக்கு மாற்றினாலும் தன் பணியைச் சிறப்பாகச் செய்கிறார், ஆசிரியை ராஜலட்சுமி.

நாவல் வாசிக்கும்போது அரசுப் பள்ளி, தனியார் பள்ளிகளின் நிலை, கிராமங்களில் அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைச் சூழல், பேருந்து வசதிகளே இல்லாத கிராமங்கள், கிராமங்களில் நிலவும் சாதியப் பிரச்சனைகள், ஆசிரியர்களின் மனப்பான்மை, பணம் கொடுத்துத் தான் விரும்பிய ஊருக்குப் பணி மாற்றலாகும் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி அலுவலர் தொடங்கி அமைச்சர் வரை பணிநிரவல் பின்னால் நிலவும் அரசியல் எனப்  பல விசயங்களை நாமும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை, பணிநிரவல் போன்ற பல பிரச்சனைகள். நாவலில் ஓரிடத்தில் ஆசிரியையொருவர் சொல்வது போல ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளை விட்டு தொலைதூரத்தில் உள்ள ஊருக்குப் போய் வருவதே பெரும்பாடு. அலைச்சலே முக்கால்வாசி உளைச்சலைக் கொடுத்துவிடுகிறது. இது போன்ற பல காரணங்களால்தான் பெயரளவிற்கு நடத்திச் செல்லும் ஆசிரியர்கள் உருவாகிறார்கள்.

பல்வேறு ஊர்களில் பணிபுரிபவர்களுக்கு புதிய அனுபவங்களும் நிறையக் கிடைக்கும். மழை பொய்க்கும்போது நாம் நம்பிக்கையையும், பிரார்த்தனையையும் கையில் எடுக்கிறோம். இஸ்லாமிய மக்கள் மிகுதியாக உள்ள கிராமம் ஒன்றில் மழை வேண்டி நடக்கும் முங்கா – முங்காணி சடங்கை வாசிக்கையில் எங்கள் ஊரில் முன்பு மழை பொய்த்திருந்த போது பார்த்த மழைச்சோறு மழைக்கறி என வீடுவீடாக உணவு சேகரித்து வந்தவர்கள் நினைவிற்கு வருகிறார்கள். அதேபோல ஒரு ஊரில் உள்ள மாணவ – மாணவிகளின் பெயர்கள் எல்லாம் நடிகர் – நடிகைகளின் பெயராக உள்ளது. விசாரித்துப் பார்த்தால் அவர்கள் அலைகுடி சமூகத்தைச் சேர்ந்த நரிக்குறவ மக்களின் பிள்ளைகள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனப் பெயர் வைத்துக் கொண்டவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இதுபோன்ற சுவாரசியமான விசயங்களையும் ராஜலட்சுமி தன்னுடைய பணியினூடாகப் பார்க்கிறார்.

பணி நிரவலால் வெறுத்து பணம் கொடுத்துக்கூட மதுரையிலுள்ள பள்ளிக்கு வந்துவிடலாமா என ராஜலட்சுமியே யோசிக்கும் வேளையில் அவரது குடும்பம் கொடுக்கும் ஊக்கம் அவரது மனதை மாற்றிவிடுகிறது. அவ்வேளையில் பள்ளிக்கூடங்களில் மாற்றங்களைச் செய்த ஆசிரியர்களைப் பற்றி வாசிக்கிறார். இன்று ஹைட்டோகார்பன் பிரச்சனையால் புகழ்பெற்ற நெடுவாசல் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் கருப்பையனின் சாதனைகளைப் படிக்கும்போது நமக்கே மெய்சிலிர்க்கிறது. ஒரு கிராமத்தையே ஆசிரியரால் மாற்ற முடியும் என்பதை தம் பணியால் செய்து காண்பித்து இருக்கிறார். பள்ளிக்கூடத்தில் நூலகம், கணினி வசதிகள் தொடங்கி ஊரில் அனைவரது வீடுகளிலும் கழிப்பறை வசதிகள் பெறுவதுவரை பல பணிகளை ஊர்மக்களோடு இணைந்து செய்துள்ளார். மேலும், தெரிந்துகொள்ள இணையத்தில் நெடுவாசல் அரசுப்பள்ளியெனத் தேடவும்.

தமிழ் நாவல்களில் கரும்பலகை மிக முக்கியமான நாவல் எனலாம். பல்வேறு இடையூறுகளுக்கிடையிலும் தான் தேர்ந்தெடுத்த பணியைச் சிறப்பாகச் செய்யும் ராஜலட்சுமி போன்ற ஆசிரியைகளால்தான் நம் பள்ளிகள் உயிரோட்டமாக இருக்கின்றன. குறிப்பாக இந்நாவலை வாசிக்கையில் நம்முடைய பள்ளிநாட்களும் மனதிற்குள் வந்துபோகிறது.

இந்நாவலாசிரியர் எஸ்.அர்ஷியாவைப் பற்றி…

சையத் உசேன் பாஷா என்ற இயற்பெயர் கொண்ட இவர், மகளின் பெயரில் எழுதியவர். 1959 ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்த இவர் 2018 ஏப்ரல் 7ஆம் தேதி காலமானார். பத்திரிக்கையாளராக பணியாற்றி பிறகு தோட்டக்கலை சார்ந்த பணிகளைச் செய்துவந்தார். ஏழரைப்பங்காளி வகையறா, பொய்கைக்கரைப்பட்டி, அப்பாஸ்பாய்தோப்பு, கரும்பலகை, அதிகாரம், சொட்டாங்கல், நவம்பர் 8 2016 என்ற ஏழு நாவல்களையும், கபரஸ்தான் கதவு, மரணத்தில் மிதக்கும் சொற்கள் என்ற இரண்டு சிறுகதைத்தொகுப்புகளும், சரித்திரப் பிழைகள், அசை என்ற இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார். கட்டுரை, புனைவிலக்கியங்களோடு பல மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார்.

எஸ்.அர்ஷியா அவர்களுடன் பசுமை நடைப் பயணங்கள் வாயிலாகப் பழகும் வாய்ப்பு கிட்டியது. எல்லோரிடமும் வாஞ்சையோடு பழகும் நற்பண்பு கொண்டவர். புத்தக வாசிப்பு மற்றும் அவரது படைப்புகள் குறித்து உரையாடிய நாட்கள் மறக்க இயலாதவை. மதுரையின் முக்கியமான படைப்பாளுமையை இழந்துவிட்டது பெருஞ்சோகம்.

-சித்திரவீதிக்காரன்


நூல்: கரும்பலகை (நாவல்)
எழுத்தாளர்: எஸ்அர்ஷியா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ரூ.180

பகிர்:
Latest comment
  • superb review bro do it more

leave a comment

error: Content is protected !!