அவ்வில்லத் தலைவியார் தம் மகள் என்னோடு நெருங்கிப் பழக வேண்டும், நானும் அவளோடு நெருங்கிய உறவு கொள்ள வேண்டும் என எண்ணினார்; ஆனாலும், நாங்கள் இருவரும் தனித்துப் பேசும் போதெல்லாம் எங்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார். இவ்வாறு அவர் இருவிதமாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. வயதின் உணர்ச்சியால் விரைந்து சென்றேன். அப்போது அவரைப் பற்றி ஐயமும் சினமும் கொண்டேன். ‘ஒன்று, அவருடைய மகள், என்னோடு காதலுறவுகொள்ள விட்டுவிடவேண்டும்; அல்லது, நாங்கள் பழகுவதையே நிறுத்தத் தலைப்பட வேண்டும்,’ என எண்ணி வெகுண்டேன். ‘அவர் பெண்டிர்தாமே! ஆகையாலேதான் ஆய்கின்ற திறனும், முடிவாக எதனையும் செய்யும் குணமும் இல்லாதவராய் இருக்கிறார்,’ என்று நினைத்தேன்.
நான் பெண்ணினத்தையே தாழ்வாக எண்ணினேன். ஆனால், என் உள்ளம் கவர்ந்த அப்பெண்மணியை மட்டும் அவ்வாறு எண்ணவில்லை. அவள் எனக்கு உயர்ந்தவளாகவே புலப்பட்டாள். உலகில் நம்புதற்குரிய ஒருத்தி அவளாகவே இருந்தாள். ‘நம்பிக்கை’ சமயத்திற்குப் பயன்படுத்த வேண்டிய சொல். ஆனால், ஒரு பெண்ணிடத்தே அதனைப் பயன்படுத்துகிறேன். உண்மையில் காதலும், சமயமும் ஒன்றேதான். சமயத்தில் மிகுந்த பற்று வைப்பவன் வெளி உலகையே மறந்துவிடுகிறான். காதலில் தன்னை மறப்பவனும் அப்படியே. தன் காதலே உயர்ந்தது என எண்ணுகிறேன்; நான், ‘என் காதலியே நல்லவள்; பிற பெண்கள் தாழ்ந்தவர்கள்; நம்பத்தகாதவர்கள்,’ என்று எண்ணியதைப்போல. நான் அவளைக் காணும்போதெல்லாம் பெரிய எண்ணங்கள் என் மனத்தகத்தே தோன்றின. என் எண்ணங்களெல்லாம் அவளைப்பற்றியே இருந்தன.
சிற்சில காலங்களில் என் உள்ளம் பட்டபாட்டினை எண்ணும் போது எனக்கே நாணம் உண்டாகிறது! காதல் பொறாமையை வளர்க்கும் போலும்! அது ஐயத்தையும் உண்டு பண்ணும் போலும்! அவ்வீட்டில் ஆண்குரல் கேட்டுவிட்டால் போதும்! என் மனம் வேதனைப்படும். ‘வந்தவர் இளைஞரா, வயது முதிர்ந்தவரா? அவர் எம் முறையில் அவர்களோடு உறவாடுகின்றார்?’ என்றெல்லாம் எண்ணுவேன். என் நரம்புகள் துடிக்கும். அவர் சென்ற பின்பு அவரைப்பற்றி அவர்களையே கேட்டுவிடுவேன். கேட்கும்போது எப்படியும் என் உள்ள உணர்ச்சிகளை அவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது எனவே மறைக்க முயலுவேன். ஆனால், அகத்தின் அழகு முகத்தில் விளங்கிவிடும். என் பார்வையே என்னைக் காட்டிக்கொடுத்துவிடும்.
என் காதல் வளர வளர, அவ்வில்லத் தலைவியாரைப் பற்றிய எண்ணமும் உடன் வளர்ந்தது. எங்கள் உறவுக்கிடையே குழப்பநிலை இருப்பதாகக் கண்டேன். நான் மிகவும் முந்திச் சென்றேன். தலைவியார் மகளோ, அமைதியாகவே பழகினாள். அவ்வில்லத் தலைவியாரே எங்களிடையே காதல் ஏற்படுவதை வரவேற்றார்: ஆனால், அவர் எந்த அளவு தக்கது என எண்ணுகிறாரோ அதற்கு மேல் பழகவிடுவது இல்லை. இப்படி நாங்கள் மூவரும் மூன்று நிலையில் இருந்தோம். ஆகையால், என் குழப்பம் மிகுந்தது.
என் எண்ணங்கள் மாறி மாறி எழுந்தன. அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதனை நான் நன்குணர்வேன். ஆனாலும், மனிதன் தன்னலம் தோன்றும்போது நல்லவர்களையும் அல்லவர்களாக எண்ணுவது இயல்புதானே! என்னுடைய நண்பர்கள் வருவார்கள். நான் ஏதோ வாடகைக்கு இருக்கிறேன் ஆகையால் அவ்வில்லத்தார்க்குத் தொல்லை தாரா வகையில் பேச வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் பேசிச் செல்வார்கள். நான் விரும்பும் பெண்ணின் நண்பர்கள் வருவார்கள். அவர்கள் என்னை அவ்வில்லத்தின் தலைவனாகவே மதித்து மரியாதையோடு அமைதியாகத் தாழ்ந்த குரலில் பேசிச் செல்வார்கள். நானும் குடிக்கூலியும், உணவுக்குப் பணமும் தந்துவிட்டு அவ்வீட்டில் இருப்பதாக எண்ணவே இல்லை. அந்த அளவுக்கு எங்கள் உறவு வளர்ந்துவிட்டது. ஆயினும், நான் மட்டும் சிறிது கரவுள்ளம் பெற்றவனாகவே இருந்தேன். அவ்வில்லத் தலைவியாரை ஐயக் கண்கொண்டே நோக்கினேன். ஆனால், அவர் மகள் எனக்கு நம்பிக்கையின் திருவுருவாய் இருந்தாள் – அவள் தாயார் என்னை நம்பவில்லையோ என்றுகூட எண்ணினேன் – என் கடந்த கால வாழ்வினை – வரலாற்றினை – அவர்கள் கேட்டபோதெல்லாம் சொல்ல மறுத்தேன்; இறுதியில் சொன்னேன் – அப்படிச் சொல்லிவரும்போது நான் என் பிறந்த ஊருக்கு இனித் திரும்பவே போவதில்லை என்று கூறினதைக் கேட்டுத் தயார் கலங்கினார். மகளோ, அழுதுவிட்டாள்.
என் பழங்கதையைக் கேட்ட பின்னர் அவர்கள் என்னைத் தங்கள் நெருங்கிய உறவினனாகவே செய்துகொண்டார்கள். என்னிடத்தே அவர்கள் காட்டிய பரிவு மேலும் வளர்ந்தது. அவர்கள் பரிவு வளர வளர ஐயப் பேய் என்னைப் பிடித்து ஆட்டத்தொடங்கியது. என் சிற்றப்பர் எம்முறையில் பரிவு காட்டினாரோ, அதே முறையிலேதான் இவர்களும் பழகுகிறார்களோ என எண்ணினேன். அவ்வில்லத் தலைவியார் ஏதோ தந்திரம் செய்பவர் போன்று தோன்றினார். அவர் பொருள் வளம் பெற்றவரல்லர். என்னிடம் ஓரளவுக்குப் பொருள் இருந்தது. ஆகையாலேதான் இப்படிப் பழகுகிறார்களோ என எண்ண அவர் மகளைப்பற்றிக்கூட ஐயப்பட்டேன். ஆனால், அது அடுத்த கணமே மறைந்துவிடும். அவள் எனக்கு நம்புவதற்குரிய ஒருத்தியாகவே இருந்தாள். ஏன்? காதலுணர்ச்சி அவள்மீது எனக்கு நம்பிக்கையை ஊட்டி வந்தது. அது நான் எண்ணுகிறபடி விரைவில் தடை செய்து வந்த தாயார் எனக்கு நம்பத்தகாத கொடுமை செய்பவராய்த் தோன்றினார். ஆகையால், என் உண்மை எண்ணத்தை வெளியிட முடியவில்லை. ”அவளை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும், அவளிடமே கேட்டுவிட வேண்டும்,” என எண்ணினேன். ஆயினும், ”நான் சிற்றப்பரால் ஏமாற்றப்பட்டேன்; அதே நிலை திரும்பவும் என் வாழ்வில் ஏற்படக்கூடாது,” என்ற எண்ணம் என்னைத் தடுத்து வந்தது.
இப்படி, நம்பிக்கைக்கும், தவறான எண்ணங்கட்கும் இடையே திண்டாடி வந்தேன். நம்பிக்கை என்னுடைய கற்பனையில் தோன்றுவதாயும் நம்பாமை என் உண்மை வாழ்வில் தோன்றுவதாயும் எனக்குப் பட்டன. இப்படி அமைதியற்ற அவல நிலையில் அல்லற்பட்டுக்கொண்டிருந்தேன்.
நான் நூல் வாங்குவதில் பெருவிருப்பம் காட்டினேன். எங்குப் புதிய தென்பட்டாலும் அதனை வாங்குவது என்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. இதனைக் கண்ட அந்த வீட்டு அம்மையார் எனக்கெனச் சில துணிகளை வாங்கிக்கொள்ளச் சொன்னார். என் உடைகள் எல்லாமே பருத்தித் துணிகளால் ஆக்கப்பட்டவை. அக்காலத்தில் மாணவர்கள் பட்டு உடுப்பது இல்லை. நானும் அப்படியே பட்டினை உடுப்பது இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் ஆடைகளைப்பற்றி மிகுதியாக அக்கறை கொள்ளவில்லை. பட்டம் பெறும் வரை, முகத்திலே மீசை அரும்பும் வரை, நல்ல உடைகள் வேண்டா எனவே எண்ணி வந்தேன். ஆனால், என் உள்ளங்கவர் பெண்ணின் தாயார் என் உடையைப்பற்றிக் குறிப்பிட்டவுடன், ‘நல்ல உடை நமக்கும் வேண்டும்,’ என்ற நிலை வந்துவிட்டது. அவர்கள் மனம் மகிழ நான் எதனையும் செய்ய ஆயத்தமாயிருந்தேன். ஆகையால், நல்ல துணிகளை வாங்க முடிவு செய்துவிட்டேன்.
பெண்கள் உடைகள் தேர்ந்தெடுப்பதில் கை தேர்ந்தவர்களல்லவா? ஆகையால், அம்மையார் அவர்களையும் அவருடைய மகளையும் உடன்வரும்படி அழைத்தேன். இருவரும் உடன்பட்டு வந்தனர். பெண்களோடு வயது வந்த இளைஞன் கடைத்தெருப் பக்கம் போவது அக்காலத்தே அனைவருக்கும் காட்சியாய் இருக்கும். இந்த எண்ணம் எனக்கு நடுக்கத்தை உண்டுபண்ணியது. போதாக்குறைக்கு அந்தப் பெண் வேறு வருவார் போவார் கவனங்களைக் கவரும் வண்ணம் அவ்வளவு அழகாகத் தன்னை ஒப்பனை செய்திருந்தாள். அவளைக் காண்பவர்கள் அவளோடு செல்லும் என்மீதுகூட பார்வையைச் செலுத்தினார்கள். எனக்கோ, உடம்பெல்லாம் புல்லரித்தது. எப்படியோ வாங்க வேண்டிய துணிகளை வாங்கிக்கொண்டு அப்படியே ஒரு சிற்றுண்டிக் கடைக்குச் சென்று உண்டு வீடு திரும்பினோம்.
அடுத்த நாள் நான் பள்ளிக்குச் சென்றேன். அங்கே என் நண்பர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். “எப்போதப்பா உனக்குத் திருமணமாயிற்று?“ என்றான் ஒருவன். “உன் மனைவி சிறந்த அழகியடா!“ என்றான் இன்னொருவன். இப்படிப் பலரும் என்னைக் கேலி செய்தனர். எனக்கு, ”என்ன சொல்வது? எப்படிச் சொல்வது?“ என்பதே புரியவில்லை. நான் வீட்டிற்குத் திரும்பி வந்ததும் நடந்தவை அனைத்தையும் அம்மையாரிடமும் அவருடைய மகளிடமும் கூறினேன். அவர் மகள், ”ஓ! எப்படி இதனை அவர்கள் அறிந்தார்கள்?“ என்று கூறிவிட்டுத் தன் முகத்தினை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
இப்போது அம்மையார் மகளின் திருமணத்தைப்பற்றிய பேச்சைத் தொடங்கினார். தம் மகளை இரண்டு மூன்று இடத்திலிருந்து வந்து கேட்டதாகவும் அவள் இன்னமும் சிறுமியாகவே இருப்பதால் பொறுப்பு வாய்ந்த மண வாழ்வில் அவளை ஈடுபடுத்த விரும்பாமல் மணத்தைத் தள்ளி வைத்து விட்டதாகவும் கூறினார். அவர் பேச்சில் அவர் மகள் அழகாய் இருப்பதால் எப்போதும் அவளை ‘நான், நீ’ என முன் வந்து மணமுடித்துக்கொள்ள மணாளர்கள் தயாராயிருப்பார்கள் என்ற எண்ணமுடையவர் என்பதனையும் காட்டிவிட்டார். அவருக்கு ஒரே பெண்; வேறு பிள்ளைகளும் இல்லை. மணம் என்பது பெண்ணின் தாயாகப் பிரிவு என்பதாகும். ஆகையால், அவளைப் பிரியவும் விரும்பவில்லை என்பதனையும் கூறினார். இப்படிப் பல விதமாகத் தன் மகளின் எழிலையும் அவள் தமக்கு அருகே இருக்க வேண்டிய இன்றியமையாமையையும் கூறிவந்ததில் நான் என் நினைவை இழந்தேன். நான் அவளை மணமுடித்துக்கொள்ளத் தயாராயிருப்பதனைக் கூற மறந்துவிட்டேன்.
இப்படி நானும் என் விருப்பத்தினைக் கூறவில்லை; அவர்களும் எதனையும் முடிவாகச் சொல்லவில்லை. ஆயினும், எங்கள் மூவரிடையேயும் ஒரு நல்ல நட்பு நிலை இருந்து வந்தது. இப்போது வேறு ஒருவர் எங்கள் மூவர்க்கிடையே நுழைந்தார். அவருடைய நுழைவு என் வாழ்க்கைப் போக்கையே – ஏன் என் விதியையே மாற்றிவிட்டது. அவர் எங்களிடையே வந்தபோது அவரால் நான் ஒரு பெரிய இருண்ட நிலையை அடைவேன் எனவோ, அல்லது வாழ்வில் வெறுப்புற்றுத் திரிவேன் எனவோ நான் அறியேன். அந்த மனிதர் தாமாகவா எங்கள் மூவரிடையே நுழைந்தார்? அதுவும் இல்லை – நானே தான் அவரை நுழைய வைத்தேன். அவர் என்னுடைய நண்பர்.
அவர் என் நண்பரேயாயினும், அவரது பெயரைச் சொல்ல நான் விரும்பவில்லை. அவரைக் ‘க’ எனவே குறிப்பிடுகிறேன். அவர் நான் பிறந்த ஊரிலேயே பிறந்தவர்; குழவிப் பருவம் முதல் நல்ல நண்பர். அவரோ, கோயில் குருக்கள் ஒருவரின் இரண்டாம் பிள்ளை. அவர்கள் குடும்பம் நடுத்தரக் குடும்பந்தான். நாங்கள் இடைநிலைப் பள்ளியில் படிக்கும்போதே, நண்பர் ‘க’ மருத்துவர் ஒருவரால் தம் வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ளப்பட்டார். இது எங்களுக்குத் தெரியாது. அது வரைக்கும் அவருடைய தந்தையார் பெயர் அவருடைய பெயர்க்குப்பின் வரும்; வளர்ப்புப் பிள்ளையானபின் மருத்துவர் பெயர் அவருடைய பெயர்க்குப் பின் வந்தது கண்டு நான் வியப்படைந்தேன். பின்னர் அவரையே கேட்டு விளங்கிக்கொண்டேன்.
‘க’ அவர்களை வளர்ப்புப் பிள்ளையாக ஏற்ற குடும்பமும் நல்ல செல்வக் குடும்பந்தான். ஆகையாலேதான் அவரை டோக்கியோவுக்கு அனுப்பிப் படிக்கவைக்க முடிந்தது. நாங்கள் இருவரும் ஒரே விடுதியிலேதான் தங்கிப் படித்தோம். அப்போது நாங்கள் இருவரும் பல மணி நேரம் எங்கள் எதிர்காலத் திட்டத்தினைப்பற்றிப் பேசுவோம். ஒவ்வொருவருக்கும் தாம் எதிர் காலத்தில் இப்படியெல்லாம் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருப்பது இயல்பு. ஆனால், அதனை வளர்த்து உருவாக்கத்தான் சமுதாயம் இடம் தருவது இல்லை. அப்படி நாங்கள் கலந்து பேசியபோதெல்லாம் ஏதோ பெரிய செயலைச் சாதிக்க அறிஞர் இருவர் அமர்ந்து உரையாடுதலைப் போன்ற நிலையினை அடைவோம்; எண்ணச் சிகரத்தின் உச்சியில் இருப்போம். அப்போதுகூட, ‘க’ வின் எண்ணங்களும் பேச்சும், சமயம் தத்துவம் ஆகியவற்றைப் பற்றித்தான் இருக்கும்.
‘க’ வை வளர்ப்புப் பிள்ளையாக எடுத்த குடும்பத்தார் அவர் ஒரு பெரிய டாக்டராக வேண்டும் என எண்ணினர். ஆனால், ‘க’ வின் மனமெல்லாம் – செயல் எல்லாம் – சமயத்தைப்பற்றியே இருந்தன. அவர் படித்த நூல்கள் எல்லாம் சமய நூல்களே. அவரே என்னிடந்தான் தம் வளர்ப்புப் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக நடப்பதாகவும், ஆயினும் தம் உள்ளத்திற்குச் சரியெனப்படுவதனைத் தாம் செய்து வருவதாகவும் கூறினார். எனக்கும் அவர் செயல் தக்கது எனவே பட்டது. ஆகையால், அவரை அவர் சென்ற துறையில் நானும் ஊக்கி வந்தேன்.
கோடை விடுமுறையும் வந்தது. அதுதான் முதல் விடுமுறை. நாங்கள் படபடப்பும் மகிழ்ச்சியும் கொண்டு ஊருக்குப் புறப்பட்டோம். ஆனால், ‘க’ மட்டும் டோக்கியோவில் தங்கிவிட்டார்; வீட்டிற்கு வரவில்லை. ஒரு கோயிலுக்கு அருகில் வீடும் எடுத்துக்கொண்டு சமய நூல்களைப் படிப்பதில் ஆழ்ந்த கருத்தினை செலுத்தினார். எப்போதும் மணியை உருட்டுவதும், விவிலிய நூல் (Bible) படிப்பதும் அவருடைய வேலையாகிவிட்டது. அவரைப் பார்த்தால் பெரிய மத குருவோ என்றுகூட ஐயப்பட நேரிடும். ஆனால், அவ்விதம் ஐயப்பட அவர் வயதுதான் குறுக்கே நின்றது.
அடுத்த கோடை விடுமுறையில் அவரும் எங்களோடு புறப்பட்டார்; வீடு வந்து சேர்ந்தார். மெல்லத் தம் வளர்ப்புப் பெற்றோருக்குத் தமது விருப்பத்தினை வெளியிட்டார். ஆயினும், அவர் டோக்கியோவில் என்ன பாடங்களைப் படித்து வருகிறார் என்பதனைச் சொல்லவில்லை. அவர்களோ, அவர் டாக்டர் படிப்புக்கு வேண்டிய பாடங்களையே படித்து வருவதாக எண்ணினார்கள். அவர் மூன்றாவது கோடை விடுமுறையிலும் அங்கேயே தங்கிவிட்டார். நான் ஊர் திரும்பி, சிற்றப்பரோடு வேறுபட்டு, இனி ஊருக்குத் திரும்புவது இல்லை என்ற எண்ணத்தால் டோக்கியோ திரும்பியபோது அவரை அங்கே கண்டேன். அவர் தம் பெற்றோர்க்குத் தம் விருப்பம், படிப்பு முதலியவற்றைத் தெளிவாக எழுதி விட்டதாகச் சொன்னார்; அவர்கள் விருப்பத்திற்கு மாறான கல்வியைக் கற்கப் புகுந்ததற்கு மன்னிப்பும் வேண்டி எழுதியதாகக் கூறினார்.
உண்மையை எழுதியதற்கு மனம் மகிழ வேண்டும். உலகம் உண்மையைக் கூறுபவனைக் கோமாளி என்கிறது; அல்லது அவனுக்கு வாழத் தெரியாதவன் என்னும் பட்டத்தினைச் சூட்டுகின்றது. இங்கே ‘க’ பெற்றது என்ன? இரண்டும் இல்லை. அவர் வாழ்க்கையை இழந்தார். வளர்ப்புப் பெற்றோர் அச்செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டனர்; மனம் வெதும்பினர்; ‘இனி பொருளே அனுப்ப முடியாது!’ என்று எழுதியும் விட்டனர். பெற்ற தாய் தந்தையரும் கல் நெஞ்சம் உடையவராய்த் தம் மைந்தர் மத சம்பந்தமான நூலைப் படித்து வருகிறார் எனக் கேட்டு வருந்தி அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என எழுதிவிட்டனர். நண்பர் ‘க’, பொருளற்ற நிலையில் விடப்பட்டார். இப்போதோ, அவர் பள்ளியை விட்டுப் பல்கலைக்கழகத்திற் புகுந்துவிட்டார். ஆனால், …..
– நாத்சுமே ஸோஸாகி