கூப்பிய கரம்

நீங்கள் உங்கள் வெறுங்கையையே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பீர்கள்? உங்களால் உங்கள் உள்ளங்கையில் ஊடுபாவும் ரேகைகளையே  வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியுமா? அப்படியான சமயங்கள் எப்போதாவது  வாய்த்திருக்குமா உங்களுக்கு? நான் அப்படியான ஒரு வெறுங்கை வெறுமையில் உழன்ற நாட்கள் அவை. பற்றிக்கொள்ளவும் பற்று கொள்ளவும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், வெயிலில் வெளிறும் சுவர்ச்சித்திரம் போல வெளிறிக்கொண்டிருந்த நாட்கள் அவை. வேலைக்குச் சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது. வீடு, வேலை, நட்பு என்று எதிலும் சராசரி கொடுக்கல் வாங்கலுக்கு அப்பால் ஒன்றுமில்லை. அப்படியான ஒரு நாளில் தான் என் முகநூல் சாட்டில் ஒரு புதிய கணக்கிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. “ஹாய் டா லோகேஷ் எப்படி இருக்க? நான் வித்யா.  KCSM ஸ்கூல்ல ஒன்னா படிச்சோமே. என்னை ஞாபகம் இருக்கா? நான் உன்னை கண்டுபுடிச்சுட்டேன்னு தான் நினைக்கிறேன். நான் உன்னை ஆர்குட்லலாம் கூட சேர்ச் பண்ணிப் பாத்தேன். நீ கிடைக்கல. நான் உன்ன ரொம்ப நாளாவே தேடிட்டு தான் இருக்கேன். நல்லவேளை இப்ப கெடைச்சிட்டா மாதிரி இருக்கு.” வந்திருந்த முதல் செய்தியிலேயே இவை எல்லாமும் இருந்தது. இத்தனை உரிமையாக என்னை தேடிக்கொண்டிருக்கும் நபர் ஒருவர் இருப்பார் என்று நான் அன்று எதிர்பாராதது. அந்த முதல் செய்தியின் கடைசி இருவரிகள், அதுவரையில் அந்தச் செய்தியில் வெளிப்பட்ட உரிமை சட்டென உடைந்து, தூர்ந்து போய்விடுகின்ற தொனியில் இருந்தது. “நீ நான் நினைக்கிற, என்னோட லோகேஷா  இருந்தா எனக்கு ரிப்ளை பண்ணு. அப்படியில்லன்னா தொந்திரவு பண்ணதுக்கு என்னை மன்னிச்சிடு. இப்படிக்கு வித்யாபதி”

இவ்வரிகளைக் கடந்ததும், ஒருவேளை நான் அந்த லோகேஷாக இல்லாவிட்டாலும் அந்த லோகேஷ் தான் என்று சொல்லிவிடலாமோ என்று தான் இருந்தது. கான்கிரீட் சுவற்றில் விரிசலிட்டு வெளிவந்திருந்த பூண்டுச்செடி போலிருந்தது அந்தச் செய்தி. அவ்வளவு நாட்களாக வெறும் வெளிறிய மொட்டைச் சுவராக நின்றிருந்ததை உயிர்ப்புள்ளதாக மாற்றிவிட்டிருக்கிறது.

நான் அந்த ப்ரோஃபைலுக்குள் சென்று யார், எவர் என்று பார்த்தேன். முகப்பு படத்தில் சச்சினோ ட்ராவிடோ இருந்தார்கள்.  என் முகப்பு படத்தில் ரஹ்மான் படம் வைத்திருந்தேன். அந்தப் ப்ரொபைலில் இருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்தேன். அதில் இருந்த முகம் மிகப் பரிச்சயமானதாகத் தான் தோன்றியது.  எவரோ எனக்கு தெரிந்தவர் தான். எவனோ என் நண்பன் தான். அம்முகமும் அவ்வாழ்க்கையும் என் நினைவில் முற்றிலுமாக அகன்றுவிட்டிருந்தது. KCSM ஸ்கூல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு எனும் ஊரில் இருக்கிறது. நான் என் இரண்டாவதையும் மூன்றாவதையும் அங்கு தான் படித்தேன். அன்று எங்கள் அப்பா அந்த ஊரில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளர் நல அலுவலராக பணி புரிந்துகொண்டிருந்தார். பிறகு மாற்றலாகி மாற்றலாகி பல ஊர்களுக்கு இப்படி மாறிவிட்டிருந்தோம். அதனாலேயே எனக்கு தற்காலிக நட்பு வட்டங்கள் தான் அமைந்ததே ஒழிய கூடவே தொடர்ந்து பயணித்து வரும் நட்பு வட்டம் என்ற ஒன்று இருந்ததில்லை. அப்படி ஒரு நட்பு வட்டத்தில் இருந்து பதினைந்து பதினாறு வருடங்கள் கழித்து இப்படி ஒரு நட்பழைப்பு வருவது என்பது எனக்கு ஆச்சரியம் தான். எங்கிருந்தோ எவருக்கோ நான் ஏதோ ஒரு உறுத்தலாக இருந்திருக்கிறேன் போல.  கிளையில் இருந்த போது தன்னையறியாமல் தன் சிறகை உதிர்த்த பறவை, தாழப் பறந்து கீழிருக்கும் சுனையில் மீன் கொத்த, ஓர் இலை மடலில் வந்து நின்ற போது, வீழ்ந்த சிறகினால் எழுப்பப்பட்ட நீர்ச்சுழல் வட்டங்களே அதன் கால் வந்தடைவது போல.  ஒன்றுமே இல்லாமல் தொலைந்து போய்விட்டதாய் எண்ணிக்கொண்டிருந்த போது, எப்போதோ என்னால் ஏற்பட்டிருந்த ஒரு சிறு சலனம் இவ்வளவு காலம் தாண்டி என்னை வந்தடைந்திருக்கிறது.

அவன் எத்தனை லோகேஷ்களிடம் தோற்றுப் போய் என்னிடம் வந்திருக்கிறானோ? நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையும்  இது போன்று தான். லோகேஷ் என்பவர் யார் எவரென்று தெரியாத போது சங்கோஜம் பார்க்காமல் அனைத்து லோகேஷ்களுக்கும் செய்தி அனுப்பிவிடுவோம். இதை என் துறையில் Best effort delivery என்பார்கள். இவர் தானா, இவர் தானா என்று யோசித்துக்கொண்டே இருப்பதைவிட, அனுப்பிவிட்டு பதில் வருகிறதா என்று பார்ப்பது மேல். அதனால் அந்தச் செய்தியில் இருந்த துயரை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. உடனேயே நான் அவனுக்கு பதில் அளித்தேன். “வித்யாபதி நலமாக இருக்கிறாயா? நல்லவேளை இம்முறை உன் தேடல் பொய்க்கவில்லை. நீ தேடும் லோகேஷ் நான் தான். எப்படி இருக்கிறாய்? எங்கிருக்கிறாய்?” 

அவனிடமிருந்து உடனேயே பதில் வந்தது. “நான் அனுப்பிய செய்தியை இப்போது தான் பார்க்கிறாயா? நான் அனுப்பியே நான்கு மாதங்கள் ஆகிவிட்டனவே”. நான் அப்போது தான் உணர்ந்தேன்.  எதனாலோ இத்தனை நாட்களாக இந்தச் சாட் என் கண்ணில் படவே இல்லை.

பின்னர் அவன் என் தொலைபேசி எண்ணை வாங்கினான். நான் கொடுத்தேன். அன்று இரவு என்னை அழைத்துப் பேசுவதாகச் சொன்னான்.

அழைத்தும் பேசினான். என் குடும்பத்தைப் பற்றி கேட்டான். அம்மா, அப்பா, அக்கா, தாத்தா, பாட்டி அனைவரையும் விசாரித்தான். எனக்கு அக்கா இருப்பதை முதற்கொண்டு அவன் நினைவு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அதுவும் மூன்றாவது படித்த போது இருந்த ஞாபக சக்தியை வைத்துக்கொண்டு. “ஸ்கூல் முடிச்சுட்டு வந்து எல்லா பசங்களும் உங்க வீட்ல தானே விளையாடிட்டு போவோம். பிரகாஷ், ஏஞ்சல் காந்திலாம் வருவாங்களே. நெனப்பிருக்கா?” எனக்கு அவர்கள் எல்லாம்  நினைவில் இல்லை. இவன் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்த போது தான் நான் ஒவ்வொருவரின் முகமாகவும் ஒவ்வொரு இடமாகவும் நினைவு கூர்ந்தேன்.  அன்று இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்போம்.

நான் அன்று இரவு படுக்கும் போது மூங்கில்துறைப்பட்டில் கழித்த, அந்த பால்ய கால நினைவுகளை முடிந்த வரை நினைவு கூர்ந்தபடி படுத்திருந்தேன். அப்போது அது விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் தெற்கு கரையில் இந்த மூங்கில்துறைப்பட்டு அமைந்துள்ளது. வடக்கே வாழவச்சனூர். அது தான் வித்யாபதியின் ஊர். ஆனால் அது திருவண்ணாமலை மாவட்டம். ஆறு இருமாவட்டங்களையும் வசதியாக பிரித்துத் தந்திருக்கிறது. அங்கிருந்து 25 கிலோமீட்டரில் திருவண்ணாமலை. 

எங்கள் வீட்டில் இருந்து நேர் எதிரிலேயே அண்ணாமலை தெரியும்.  வடக்கு பார்த்த வீடாகவே அமைந்துவிட்டது எங்களுக்கு. என் பாட்டி ஒவ்வொரு நாளும் விடிந்த பிறகு வாசலுக்கு வந்து எதிரிலே தெரியும் மலையை தரிசித்துவிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டு வருவாள். அங்கிருந்த வரை அப்பா எல்லா பெளர்ணமிகளுக்கும் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு பேருந்து ஏறிவிடுவார்.   மொத்தமாக ஒரு 30, 40 கிரிவலங்களாவது சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். ஒருமுறை கார்த்திகை தீபத்துக்கு எங்களை மலையேற்றி கூட்டிச் சென்றார். நாங்கள் எண்ணெய் கொப்பரையின் அருகே வரை சென்றுவிட்டு பார்த்து வந்தோம். அப்போது தீபம் இன்னும் ஏற்றப்படவில்லை.  இன்னும் அரை மணி நேரத்தில் ஏற்றிவிடுவார்கள். கீழிருந்து ஏதோ சமிக்ஞை வர வேண்டும் என்றார்கள். நாங்கள் உடனேயே மலை இறங்கிவிட்டோம். ஏறும் போது கூட பரவாயில்லை. இறங்கும் போது தான், கால்கள் ஒட்டி  மடக்கி குந்தி அமர்ந்தபடி பாறைகளில் இருந்து சருக்கிச் சருக்கி இறங்க வேண்டியிருந்தது. அதுதான் ரொம்ப லேட்டாகிவிட்டது. மூன்று நாட்களுக்கு அந்த தீபம் அணையாமல் எரியும். எங்கள் வீட்டு வாசலில் இருந்து அந்த எரிதலைப் பார்க்கமுடியும். ஒரு சிறிய செந்நிற ஒளிப்பொட்டாக தீபம் மலைமுடியில் வீற்றிருந்தபடி நெளிவது தெரியும்.

பள்ளி முடித்துவிட்டு எல்லா நண்பர்களும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். பள்ளிக்கு அடுத்த தெருவிலேயே எங்கள் குவார்ட்டர்ஸ். அம்மா வந்த பசங்களுக்கு ஏதாவது சாப்பிடத் தருவாள். சாப்பிட்டுவிட்டு எங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் கொய்யாமரத்திலும் மாமரத்திலும் ஆளுக்கு ஒரு கிளையில் ஏறி விளையாடுவோம். மாமரத்தில் ஒருமுறை என்னை முசுடு கடித்தது நினைவிருக்கிறது.

விடுமுறை நாட்களில் பொதுவாக வித்யாபதி எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். நானும் அவனுமாகவும் தான் ஊர் சுற்றுவோம். ஏஞ்சல் காந்தி மைக்கேல்புரத்தில் இருந்து வரவேண்டும். பிரகாஷ் படிக்க வேண்டும் என்று சொல்லி வரமாட்டான்.

நாங்கள் இருவரும் இலந்தைக் காட்டுக்கு சென்று, முள்பட்டு கிழி வாங்காமல் உள்ளே சென்று இலந்தைப்பழத்தைப் பறித்துத் தின்று அருகிலேயே கொட்டையைத் துப்பி விட்டு வருவோம். 

எங்கள் பள்ளிக்கு அருகிலே ஓரிடத்தில் கொடுக்காப்பளி மரம் இருந்தது. அதில் இருந்து ஒரு காயை அடித்துக்கொடுத்தான் வித்யாபதி. செம்ம புளிப்பு. செம்ம துவர்ப்பு. நான் வாயில் போட்ட வேகத்திலேயே  வெளியில் துப்பிவிட்டேன். எனக்கு பிடிக்கவில்லை. “டேய் நல்ல டேஸ்டுடா” என்றான் அவன். 

அப்படியே ஆலை பக்கம் செல்வோம். அங்கு அரவைக்காக லோடு இறங்க நாட்கணக்கில் காத்து கொண்டிருக்கும் ட்ராக்டர் ட்ரக்குகளில் ஏறி கரும்பு உருவுவோம். பொங்கல் கரும்பு போலிருக்காது ஆலைக் கரும்பு.  இன்னும் இனிக்கும். வித்யாபதி, “அதான் இதுலேந்து சக்கர வருது” என்றான்.

ஒருமுறை வித்யாபதி வேகமாக சென்றுகொண்டிருந்த டிராக்டரில் தொத்தி ஏறி, கரும்பு உருவி கொடுத்தான். போகிற வழியெல்லாம் நாங்கள் மென்று துப்பிப் போட்ட கரும்புச் சக்கையாக கிடக்கும். துப்பிப் போட்ட கரும்புச் சக்கைப் பாதை வழியாகவே  ஒருமுறை ஒருவர் எங்களைத் தேடிக் கண்டுபிடித்து வந்தார். அட்டெண்டர் தனபால் அண்ணன் என்று நினைக்கிறேன். அப்பா அழைத்துவிட்டதாக சொல்லி என்னைக் கூட்டிச் சென்றார்.

பிறகு ஊர்க்காரப் பெட்டி கடைகளில் எல்லாம் சென்று பார்லே-ஜி பிஸ்கட்கள் வாங்குவோம். ஷக்திமான் ஸ்டிக்கர்கள் சேகரிப்போம்.  அதற்காக பல இடத்தில் பல பேரிடம் பேரம் பேசி வைத்திருப்போம். ஒருமுறை ஸ்க்ராட்சில் எனக்கு மிகப்பெரிய சக்திமான் ஸ்டிக்கர் அடித்தது.  நான் அதனை பிரகாசுக்கு கொடுத்துவிட்டேன். அதனால் வித்யாபதிக்கு என் மேல் கோபம். வித்யாபதி டிராவிட் ரசிகன். பிரகாஷ் ஜடேஜா ரசிகன். இருவரும் அடித்துக் கொள்வார்கள். அதனால் ஏற்பட்ட ஓரவஞ்சனை.

ஒருமுறை வித்யாபதி, தென்பெண்ணை பாலம் கடந்து அக்கரையில் உள்ள அவன் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றான். அப்போது தான் நான் முதன்முதலாக கரடி பார்த்தேன். கரடி ஒரு மனிதன் உயரத்துக்கே இருந்தது. இரு கால்களால் நடந்தது. உடல் முழுதும் கண்ணங்கரிய மயிர்கள். அது விலங்கிடப்பட்டு இன்னொரு மனிதனால் அழைத்து செல்லப்பட்டுக்கொண்டிருந்தது. அருகே எங்கோ வித்தைக்காக அழைத்து வரப்பட்டிருக்கும் போல.  “ஒன்னும் பண்ணாதுடா” என்றான் வித்யாபதி. நாங்களும் பத்திருபது தப்படிகளில் அதை பின் தொடர்ந்து நடந்து சென்றோம். கரடியுடன்  சேர்ந்து ஒரு பாலக் கடப்பு.

வித்யாபதியின் வீடு நல்ல பெரிய வீடு. அவன் அப்பா சர்க்கரை ஆலையில் வேலை செய்யவில்லை.  என் அப்பா, ஏஞ்சல் காந்தி அப்பா, பிரகாஷ் அப்பா மட்டுமே ஆலையில் வேலை செய்கிறார்கள். வித்யாபதி அப்பா பெரிய தோப்பும் துரவும் வைத்திருக்கிறார். தோப்பின் நடுவே தான் அவர்களின் வீடு.  சுற்றியும் வாழை, கரும்பு, மல்லாட்டை எனப் போட்டிருந்தார்கள்.

அவன் வீட்டிலிருந்து திரும்பும் போது, பாலம் வழியாகப் பிரதான சாலையில் வராமல், ஆற்றில் இறக்கிக் கூட்டி வந்து இக்கரையில் விட்டான் வித்யாபதி. ஆற்றில் பெரிதாக நீர் ஓடவில்லை. அதிக பட்சம் மூட்டு வரை நனையும் அவ்வளவு தான். வேண்டும் என்றால் படுத்திருந்தபடி குளிக்க முடியும். 

அப்போது தான் எங்களுக்கு ஒரு புதுப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் புதுப் பழக்கம் வேறொன்றும் இல்லை. கூழாங்கல் பொறுக்குவது. அந்த வயது, எல்லாவற்றையும் பொறுக்கி பொறுக்கியே கழிக்கிற வயது போல. அரிதானது என்று நினைத்து எல்லாவற்றையும் பொறுக்கி பொறுக்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறோம். வீட்டில் இவையே ஒரே குப்பையாய் சேர்ந்துவிடும். அம்மா திட்டிக்கொண்டிருப்பாள்.

கோழி இறகு பொறுக்கியிருக்கிறோம். மயிலிறகு பொறுக்கியிருக்கிறோம். நத்தை ஓடு பொறுக்கியிருக்கிறோம். எங்கள் பொறுக்கு லிஸ்டில் அன்றோடு கூழாங்கல்லும்  இணைந்து கொண்டது. நான் தனிப்பட்ட முறையில் பேருந்துப் பயணச்சீட்டுகளைப் பொறுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன் அப்போதெல்லாம். பேருந்தில் பயணம் செல்லும் போதெல்லாம் கீழே குனிந்து கால்களையே பார்த்துக்கொண்டிருப்பேன். அக்கா அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிடுவாள். அம்மா “மானத்தை வாங்காதடா” என்று தலையில் அடித்துக்கொள்வாள். பெரிய பஸ்டாண்ட் போல  எங்கேயாவது இறங்கினால் பிளாட்பார்ம் பிளாட்பார்மாக போய் குனிந்து பொறுக்கிக்கொண்டிருப்பேன் போல. அம்மா இதையே சொல்லிக் காண்பித்துத் திட்டிக்கொண்டிருப்பாள். மற்றவைகூட பரவாயில்லை. டிக்கெட்டுகளை எதற்கு அப்படிப் பொறுக்கினேன் என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை. 

சில பையன்களுக்கு சிகரெட்டு அட்டைப் பெட்டிகள் பொறுக்கும் பழக்கம் கூட இருந்தது. ஒரு சமயம் மாரல் சயின்ஸ் புக்கெடுக்க கட்டசேகரின் புத்தகப்பையை நாங்கள் திறந்து பார்த்த போது அதில் ஒரே சிகரெட்டு அட்டைகளாகக் கிடந்தது. “டேய் சிகரெட்டுல்லாம் குடிக்க ஆரம்பிச்சுட்டியா சேகரு” என்றோம். “டேய் இதல்லாம் சேத்து வச்சு குடுத்தா ஒரு அண்ணன் காசு தருவேன்னு சொல்லிச்சு அதான்”, என்றான்.

அன்று கை நிறையக் கூழாங்கற்களைக் கொண்டு வந்து வீட்டில் போட்டேன்.  பின் வந்த விடுமுறை நாட்களில் நாங்கள் இதே வேலையாக ஆற்றில் இறங்கிக் கொண்டிருந்தோம். மற்றதெல்லாம் கொஞ்சம் பின்வாங்கிக் கொண்டுவிட்டது. 

ஆற்றில் இறங்கிய ஒருமுறை, நான் சொன்னேன் “டேய் வித்யா, நாம இப்போ திர்ணாமலலயும் இல்ல விளுப்புரத்துலயும் இல்ல”

நீரோட்டத்தை நூல் பிடித்தவாறே இருவரும் கிழக்குப்பக்கமாகச் சென்று கொண்டிருந்தோம். ஓரிடத்தில் வித்யாபதி என்னை மறித்து நின்றுவிட்டான்.

“டேய் நில்லுடா கொஞ்சம்”

“என்ன?”

“இங்க பாரு?”

“என்னடா இது?”

“ஏதோ ஒரு பெரிய விலங்கு  போட்டுட்டு போன முட்டை போல இருக்கு. முதலை முட்டையா இருக்குமோ?”

ஒன்று போலவே இன்னொன்றும் இருந்தது. ஒரே நிறம். ஒரே அளவு. வழக்கமாக அதுவரை நாங்கள் பொறுக்கிய கூழாங்கற்கள் போல இல்லாமல் சற்று பெரிதாகவே, முட்டை வடிவில் கரிய நிறத்தில் இருந்தன. நல்ல கருமை.  நல்ல வழுவழுப்பு.

வித்யாபதி நீரில் கைவிட்டு ஒவ்வொன்றாய் எடுத்தான்.  ஒன்றை என் கையில் தந்தான். நல்ல கனம். முட்டை என்றால் உள்ளே காற்றிருக்கும். இந்த கனம் சாத்தியப்படாதே.

நான், “எவ்ளோ பெருசா இருக்கு ரெண்டும்” என்று வியந்தேன்.

“எப்படி இது ரெண்டும் ஒரே மாதிரி, ஒரே சைசுல இருக்கு?”

“அதான் எனக்கும் தெரில”

தூரத்தில் ஆற்றுக்குக் குறுக்கே தாங்குகழிகள் ஊன்றியிருந்து அவற்றில் கொடிக்கயிறுகள் கட்டியிருந்தன. ஒரு வண்ணாத்தியக்கா துவைத்த துணிமணிகளை அக்கொடிகளில் உலர்த்திக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றி இருவரும் குடுகுடுவென  கற்களை எடுத்துக்கொண்டு அவளருகே ஓடினோம்.

வித்யாபதி மூச்சு வாங்கியபடி, “யக்கா இது என்னாது? அதோ அங்கிருந்து எடுத்தோம்? முதலை முட்டையா?”

அங்கே உலர்த்தியிருந்த ஆடைகள் காற்றில் ஆடி சரசரத்துக்கொண்டிருந்தன.

அக்கா சட்டென உலர்த்திக் கொண்டிருந்த துணியை விலக்கி விட்டு எங்களைப் பார்த்தாள்.  நாங்கள் கையை நீட்டிக் காண்பித்ததைப் பார்த்துவிட்டு, “இது முட்டையில்ல. ரெட்டை கூழாங்கல்லு.  சாதாரணமா தட்டுப்படாது. உங்களுக்கு எப்படியோ கெடச்சுருக்கு. பத்திரமா வச்சுக்குங்க.”

“அப்ப கூழாங்கல் தானா இது?”

“ஆமா”

“நாங்க ஓடற இந்த ஆத்து தண்ணீல எங்க துணிகள வெளுக்குறா மாதிரி,  இந்த தண்ணீ சாதா கல்லையும் வெளுத்து கூழாங்கல் ஆக்குது. நாம கல்லை செதுக்கி செலையாக்குற மாதிரி, ஆத்து தண்ணீ இதை செதுக்குது.  தண்ணீ செதுக்குன சிலை இது”

“தண்ணீ செதுக்குமா?” வியப்பில் இருவரும்  ஒருசேர  ஒன்றாக அக்கேள்வியை எழுப்பினோம்.

“ஆமா செதுக்கும். அதனாலதான  கூழாங்கல் இப்படி சாஃப்டா இருக்கு”

“ஆமா ரெண்டு பேரும் எந்த ஊர்? கூழாங்கல் பொறுக்கவா வந்தீங்க?”

“ஆமா”

“இவனுக்கு மூங்கிதொறபட்டு”

“இவனுக்கு வாளவச்சனூரு”

“ஆனா எப்படி இது ரெண்டும் ஒரே மாதிரி செதுங்கியிருக்கு?”

“அதனால தான் இதுக்கு ரெட்டை கூழாங்கல்லுன்னு பேரு. இந்த ஆத்து தண்ணீ இது ஒன்னொன்னுத்து மேலயும் ஒரே மாதிரி போயிருக்கணும். அதனால அப்படி செதுங்கியிருக்கும்.”

“ஓஹ்”

நான் என் உள்ளங்கையில் இருந்த அந்தக் கல்லை அப்படியே மூடப் பார்த்தேன். என்னைக் கண்டு அவனும் அப்படிச் செய்தான். எங்களால் மூட முடியவில்லை. நன்றாக அழுத்தியிருந்ததில் விரல்களில் அதன் குளிர்ச்சி தெரிந்தது. நீரில்  இருந்து எடுத்து, நீர் வடிந்து காய்ந்த பிறகும் அந்தக் கல்லில் அப்படி ஒரு குளிர்ச்சி. 

“என்ன சில்லுன்னு இருக்கா? தண்ணீ எப்போதும் இருந்துகிட்டே இருக்கும் இதுல. என்னென்னிக்குமா ஓடுற தண்ணிய கல்லா புடிச்சு வச்சுகிட்டது மாதிரி” 

அக்கா ஒரு சில கொடிகளிலிருந்து உலர்ந்த துணிகளை எடுத்து மூட்டையில் போட்டு கட்டி இறுக்கினாள். பிறகு மூட்டையைத் தோள்பட்டையில் போட்டுக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

நகர்வதற்கு முன், திரும்பிப் பார்த்து, “யாராச்சும் தீய பாக்கமுடீல காமிங்கன்னு சொன்னா அண்ணாந்து இந்த மலையை பாக்க சொல்லலாம். தண்ணீய பாக்கமுடீல காமிங்கன்னு சொன்னா குனிஞ்சு இந்த கூழாங்கல்ல பாக்க சொல்லலாம்” என்றாள்.

நாங்களும் ஆற்றில் இருந்தபடியே தூரத்தில் தெரிந்த அண்ணாமலையை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தோம். எங்கள் உயரத்திற்கு மலை சரியாகத் தெரியவில்லை. ஒருவர் தோளை ஒருவர் பிடித்துப் பிடித்துக் குதித்துப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“சரி நான் கெளம்பணும். நீங்க ரெண்டு பேரும்  பத்திரமா வீடு போய் சேருங்க”

அந்த அக்கா அவ்விடத்தை விட்டு அகன்று சென்றாள். நாங்களும் வந்த வழியிலேயே திரும்பி நடந்தோம்.

“சரி. இதுல ஒனக்கு ஒன்னு. எனக்கு ஒன்னு. ரைட்டா?” நான் கேட்டேன்.

“சரி”

“ஏதோ ரெட்டையா  கெடச்சுது, ஒன்னொன்னு எடுத்துக்கிட்டோம். ஒத்தையா, ஒன்னே ஒன்னு மட்டும் கெடச்சுருந்துச்சுன்னா என்ன பண்ணிருப்ப?”

“உன்கிட்டயே கொடுத்து வச்சுக்க சொல்லியிருப்பேன்”  என்றான் அவன்.

பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. அன்று நாங்களும் தத்தம் கரைபக்கம் மேடேறி வீடடைந்தோம்.

அடுத்த நாள், ஸ்கூலில் இந்த விஷயத்தை சொன்னோம். அவர்கள் முதலில் நம்பவில்லை. அடுத்த நாள் அக்கூழாங்கற்களை எடுத்து வந்து அவர்கள் முன் இருவரும் காண்பித்த பிறகு தான் நம்பினார்கள். அதில் எங்களுக்கு ஒரே பெருமையான பெருமை.

சில வாரங்களிலேயே, அப்பாவுக்குத் திடீர் ட்ரான்ஸ்ஃப்ர் ஆர்டர் வந்துவிட்டிருந்தது. தஞ்சாவூருக்கு அருகே மாற்றலாகிப் போய்விடப் போகிறோம் என அப்பா சொன்னார். எனக்கும் அக்காவுக்கும்  அரையாண்டு நெருங்கிக் கொண்டிருந்தது. நான் நான்காம் வகுப்பில் இருந்தேன். அக்கா எட்டாம் வகுப்பு. இந்த நேரத்தில் எப்படி இந்த திடீர் ட்ரான்ஸ்பெர் என்று அம்மா நொந்து கொண்டாள். இதற்கு முன்பே நாங்கள் சேத்தியாதோப்பு,  பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் என்று மாறியிருந்துவிட்டுத் தான் இங்கே வந்திருந்தோம். இப்போது அதற்குள்ளே இன்னொரு  ட்ரான்ஸ்ஃபெர்.

அப்பா, “வேறு வழியில்லை. காசு கொடுக்க முடிஞ்சா இங்கயே இருக்கலாம். ஆனால் எனக்கு வழியில்லையே. என்ன மாதிரி மத்த மில்லுல இருக்கறவங்க அப்படி தான் செஞ்சு தன்னோட ஊர் பக்கத்துலன்னு மாறிக்கிறாங்க. அதனால தான் இந்த பந்தாட்டம். ஒன்னும் பண்ண முடியாது. நாளைக்கே மூட்டை கட்டணும். நாளை ராத்திரி லாரிக்கு சொல்லியிருக்கேன். பசங்களுக்கு டீஸி வாங்கவும் ஏற்பாடு பண்ணிட்டேன். ரெண்டு நாள்ல கெடச்சுடும். மணிவண்ணன் கொண்டு வந்து கொடுப்பார். நாம எல்லாரும் நாளைக்கே சாமான்களோட சாமானாவே கிளம்பிடலாம். நாம போக வேன் அரேஞ்சு பண்ணியிருக்கேன்” என்றார்.

அம்மா சொன்னாள். “நத்தை மாறி ஓட்டை தூக்கிக்கிட்டே அலையணும் போல, நம்ம விதிக்கு” 

சட்டென வேரோடு பிடுங்கி மற்றொரு இடத்தில் ஊன்றப்படுவதாக உணர்ந்தேன். என்னால்  பள்ளியில் என் நண்பர்கள் எவரிடத்திலும் சொல்லிக்கொள்ளக் கூட முடியவில்லை. முக்கியமாக வித்யாபதியிடம்.

தஞ்சை மாறி சென்ற பிறகு ஸ்கூல் அட்மிஷனுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டோம். எந்தப் பள்ளியிலும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றார்கள். பாதி வருடம் தாண்டி விட்டதே என்றார்கள். அப்பா மனம் நொந்து போனார். பிறகு  அப்பாவின் ஆரம்பகால ஸ்நேகிதன் நாராயணன் அங்கிள் மூலம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பள்ளியில் எங்களுக்கு அட்மிஷன் கிடைத்தது. முதலில் அவர்களும் மறுத்துப் பேசினார்கள். பிறகு அந்த அங்கிளின் கட்சி சகவாசத்தை எடுத்துரைத்தவுடன் புரிந்து கொண்டு இடமளித்தார்கள். அதன் பிறகு, பின்னாட்களில் அப்பாவுக்கு வந்த திடீர் திடீர் ட்ரான்ஸ்பர்களுக்கு நாங்கள் பலியாகவில்லை. அம்மா ஓரிடத்தில் ஒண்டிக்கொள்ள முடிவு செய்துவிட்டாள். நாங்கள் தஞ்சாவூரிலேயே மாறி மாறி இருந்தோம். எங்கள் பத்தாவது பன்னிரண்டாவதை அங்கேயே முடித்துவிட்டு தான் வெளியே நகர்ந்தோம். அப்பா மட்டும் மாறியபடி தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். வார இறுதிகளில் மட்டும் தஞ்சாவூர் வருவார்.

இவற்றையெல்லாம் வித்யாபதியிடம்  தொலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னான், “நீ ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வராத போது நாங்க உன்னைத் தேடினோம். உனக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லையோன்னு நினைச்சோம். அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்ல உன் பேரு கூப்பிடப்படலங்கறது லேட்டா தான் உரைச்சுது. ஸ்கூல்ல கேட்டதுக்கு நீ டீஸி வாங்கிட்டன்னு சொன்னாங்க.  உடனே உன் வீட்டுக்கு வந்து பார்த்தோம். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டு ஆண்டிக்கிட்ட கேட்டப்போ மாத்தலாகி வேற ஊர் போயிட்டீங்கன்னு சொன்னாங்க.” என்றான்.

எதிர்முனையில் இருந்த நான், “அதான் இப்போ கண்டுபுடிச்சிட்டியே” என்றேன். அவன் நகைத்தான்.

ஆனால் அவனிடம் எனக்கு ஒரு கேள்வி இருந்து கொண்டிருந்தது. என்னைத் தொடர்ந்து தேட வைத்துக் கொண்டிருந்தது எது என்கிற கேள்வி தான் அது.

ஒருமுறை அவனிடம் கேட்டுப் பார்த்தேன். “நீ எனக்கு பிறகு எத்தனையோ பிரெண்ட்ஸ பாத்திருப்ப. அவங்களோட நெருக்கமாகியிருப்ப. ஸ்கூல்ல காலேஜுல அவங்களுக்கு மத்தியில என் ஞாபகம் எப்படி?” அவன் அதற்கு, “ரேண்டமா தான் உன்னை யோசிச்சு தேட ஆரம்பிச்சேன். சும்மா வெட்டியா இருந்தப்போ தேடிப் பார்ப்போம்ன்னு ஆரம்பிச்சது தான்” என்றான்.

பிறகு ஒருமுறை என்னைப் பற்றிப் பேசினோம். “நான் முன்ன போல இல்லடா. ரொம்பவே மாறிட்டேன். பழைய இன்னொசன்ஸ்லாம் போயிடுச்சு” என்றேன்.

பிறகு சில மாதங்கள் கழித்து எனக்கு போனடித்தான். அவனுக்கு அப்போது தான் ஒரு வேலை கிடைத்திருந்தது.  அவன் வீட்டின் அருகிலேயே ஒரு தனியார் கல்லூரியில் ஓர் அசிஸ்டெண்ட் ப்ரொபசர் வேலை. மேலும் அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டதாகச் சொன்னான். சொந்தத்திலேயே பெண் அமைந்துவிட்டது. நான் என்னடா இருபத்தி நாளு வயசு தான நமக்கு என்றேன்.  நாங்க இங்க சீக்கிரமே முடிச்சுடுவோம்டா என்றான்.

“மறக்காமக் கல்யாணத்துக்கு வந்து சேரு. உன்னை நேர்ல அப்போ பார்த்தது தான். நானே நேர்ல வந்து பத்திரிக்கை  வச்சு  உன்னை அழைக்கிறேன்” என்றான். 

அவன் வருகிறேன் என்று சொன்ன திகதிகளில் அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.  அவனுக்கு வருத்தம் தந்துவிடக்கூடாது என்று செல்வதற்கு முதல் நாளிலேயே தெரியப்படுத்தியிருந்தேன். 

“கண்டிப்பா வந்துடுடா. வராம ஏமாத்திடாத. ரொம்பவே மாறிட்ட தான். ஆனாலும் என் அழைப்ப நிராகரிக்கிற அளவுக்கு இன்னும் மாற்றியிருக்க மாட்டன்னு நெனைக்கிறேன். பத்திரிக்கையைத் தபாலில் அனுப்பி வைக்கிறேன்”

அவன் திருமண நாள் வந்தது. திருமணம் திருவண்ணாமலையில் தான். பெண் வீட்டார் அங்கே தான். திருமணம் முடிந்து அடுத்த நாள் வரவேற்பு வாழவச்சனூரில் என்று சொல்லியிருந்தான். அவன் திருவண்ணாமலையில் ஒரு ஹோட்டலில் எனக்கு ரூம் போட்டிருந்தான். நான் திருவண்ணாமலைக்கு மீண்டும் இப்போது தான் செல்கிறேன். அது பக்கமாக செல்லும் வாய்ப்பு கூட இந்த பதினைந்து வருடங்களாக ஏற்படவில்லை. நான் இரவு பேருந்தில் கிளம்பிச் சென்றேன்.

கல்யாண நாளில் என்னைக் கண்ட மாத்திரத்திலேயே அவன் என்னை வந்து கட்டிப்பிடித்துக்கொண்டான். நான் சற்று தயங்கி நின்றபடி கைகளை என்ன செய்வதென்று அறியாது வைத்துக்கொண்டிருந்தேன். “நல்லா கட்டிப்பிடிச்சுக்கோடா” என்றான். பிறகு அவனது மனைவியிடம் என்னை அறிமுகப் படுத்தினான். பிரகாஷ் வந்திருந்தான். முகத்தை வைத்து தெரிந்து கொள்ள முடிந்தது. அவனும் என்னை அடையாளம் கண்டுவிட்டிருந்தான். ஏஞ்சல் வரவில்லையா என்று கேட்டதற்கு அவன் ஜெர்மனியில் இருக்கிறான் என்றான் பிரகாஷ். 

திருமணம் முடிந்து அன்று சாயங்காலமே வாழவச்சனூர் செல்லத் தயாராகியிருந்தனர். என்னையும் என் பெட்டிப் படுக்கை எல்லாவற்றையும் பிடிங்கி வைத்துக்கொண்டு அவன் கூடவே அழைத்துச் சென்றான். மறுநாள் மாலை அவனது திருமண வரவேற்பிலும் கலந்து கொண்டேன். அவன் வீட்டிலேயே தான் தங்கினேன். அடுத்த நாள் காலை நான் கிளம்பத் தயாராகி இருந்தேன். அவனிடம் சொல்ல போனடித்து அழைத்தேன். அவனே எழுந்து வந்து விட்டான்.  “நான் சென்று வருகிறேன்” என்றேன். ஒரு நிமிடம் என்றுவிட்டு வீட்டுக்குள் எங்கோ போனான். கையில் எதையோ மறைத்துக் கொண்டு வந்தான். கை விரித்து காண்பித்தான். ரெட்டைக் கூழாங்கற்களில் ஒன்று இருந்தது.  “இந்தா இதை எடுத்துட்டு போ. இது உன்கிட்ட இருக்கணும்” என்றான். நான் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

“உன்னோடத என்கிட்ட கொடுக்கறியா” என்றேன் என்னை அறியாமல். 

“நல்லா ஆசை தோசை அப்பள வடை. நான் எதுக்கு என்னோடத  தரணும்?”

“இது வேற ஒன்னா? புதுசா எங்கயாச்சும் எடுத்தியா?”

“அதே மாதிரி, புதுசா எப்படிடா கிடைக்கும் மடையா?”

“பின்ன”

“இல்ல இது அன்னிக்கு எடுத்தது தான். உன்னோடது தான்”

நான் யோசித்துப் பார்த்தேன். அன்றைக்கு எங்கே போட்டோம் அதை? 

“சத்தியமா தெரில. பத்து பதினஞ்சு வருஷம் முன்னாடி போய், டைம் ட்ராவல் பண்ணி தான் பாக்கணும் போல”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். அன்னிக்கு உன்ன பாக்க உன் வீட்டுக்கு போனேன்னு சொன்னேன்ல. அப்போ உங்க வீட்டு சைடுல குப்பையோட குப்பையா நம்ம கலெக்ட் பண்ணின கூழாங்கல்லுலாமும் வீசி எறிஞ்சு கெடந்துச்சு. அதுல இதுவும் இருந்தது. அதான் எடுத்து வச்சுக்கிட்டேன். நாம பேசிகிட்டபடி என்னிக்காருந்தாலும்  இது உன்னோடது. உன்கிட்ட தான் இருக்கணும்”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இமை மயிர்களில் நீர் கோர்த்துக் கொண்டு வருவதை என்னால் உணர முடிந்தது. நான் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டேன். உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பார்த்தேன். அதே குளிர்ச்சி. “இன்னும் அப்படியே இருக்குல்ல” என்றான். இப்போது என் வெறுங்கையின் மேல் ஒரு தண்மையான எடை வந்து அமர்ந்திருக்கிறது. வேண்டுமென்கிற போது அதை  இறுகப் பற்றிக்கொள்ளலாம்.  உள்ளங்கை வரிகளில் தென்பெண்ணையின் நீர்மை ஓடும்.

அவனே என்னைப் பேருந்து ஏற்றிவிட வந்தான். நான் அவனிடம் “ரொம்ப நன்றி” என்றேன். அவன் “நமக்குள்ள என்னடா” என்றான். நான் அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறி ஒரு ஜன்னல் சீட் பிடித்து அமர்ந்து கொண்டேன். பேருந்து புறப்பட்டது. ஜன்னல் வழியாக முன்னால் தென்பட்ட மலையையே கண் அகலாமல் வேடிக்கைப் பார்த்தபடி இருந்தேன். நிலத்திலிருந்து எழப்பெற்ற கூப்பிய கரம் போலத் தெரிந்து என்னை வழியனுப்பிவைத்தது மலை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.