இதற்கிடையில் மிலிட்டரியில் வேலைபார்க்கும் தன் அண்ணனைப் பார்த்துத் தாழ்ந்து கொண்டும், தன் அண்ணியிடம் மனக்கசப்பு கொண்டும் துரைசாமியின் கல்லூரி காலம் நிறைவடைகிறது. பிறகு மிலிட்டரியில் வேலை பார்க்கும் சினேகிதனின் மனப்போக்கினைக் கண்டு, அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளால் மிலிட்டரி மற்றும் அரசு சார்ந்து இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிவது குறித்து, அவனுள் ஒரு மாற்றுக்கருத்து உண்டாகிறது. இது அவனின் மென்மையான அகத்தை வெளிப்படுத்தும் தருணங்கள். மேலும் இதற்கு வலு சேர்ப்பதற்கு, தன் நண்பனிடம் உதவியாளராக பணிபுரியும் ஒரு சிறுவனுக்கு ஏற்படும் தன்மானச் சீண்டல் அவனை வெகுவாக பாதிக்கிறது. அச்சிறுவனே. பின்னர் அவனிடம் பணிபுரியும் கம்பவுண்டர் ஜீவரத்தினம்.
கடைசியில் அவன் திருமணத்திற்கு கூட ஒரு மேளம் வைத்துத் திருமணம் நடத்த முடியவில்லையே என்ற எண்ணம் அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இக்கதை விவரிப்பில் நான் கதையின் தன்மையை மட்டுமே சொல்லியிருக்கிறேன். கதையை வாசித்தால் மட்டுமே இக்கதையின் அனுபவத்தையையும் போக்கையும் உணர முடியும் என்பதே என்னுடைய கருத்து. தி.ஜானகிராமனின் எழுத்தை கண்டறிவதற்கு அவரின் மொழியே வசப்படும்.