புதியிடத்து மடத்தில் (மலையாற்றூர்) கே.வி.இராமகிருஷ்ணன் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

(புனைபெயர்: மலையாற்றூர் இராமகிருஷ்ணன்

இலக்கியச் சேவை: இவரின் சிறுகதைகளும் நாவல்களும் பாமர வாசகர்கள் முதல் இலக்கிய விமர்சகர்கள் வரை பலராலும் பாராட்டப்பட்டவை. நாவல் சில நனவோடை முறையில் எழுதப்பட்டவை. இவருடைய சிறுகதைகள் பலவும் நகைச்சுவை மிளிர்ந்ததாகும். நாவல்களில் ‘வேர்கள்’, ‘ஐந்து சென்ட்’, ‘யந்திரம்’, ‘நெட்டூர் மடம்’ முதலியன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதும், நினைவில் நிற்கக் கூடியதுமாகும். ‘வேர்கள்’, ‘ஐந்து சென்ட்’ முதலிய நாவல்களை ‘குறிஞ்சி வேலனின்’ மொழிபெயர்ப்பால் தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்துள்ளனர். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. பல பரிசுகள் பெற்ற எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.)

 

லையாளம் ராஜ்யம்’ வார இதழில் ‘பிசாசின்டெ பிடியில்’ (பிசாசின் பிடி) என்னும் திடுக்கிட வைக்கும் ஒரு மர்ம நாவல் தொடர்கதையாக வந்துகொண்டிருந்த காலம். மூவாட்டுப்புழாவில் இரண்டாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையன் அந்த நாவலைத் தொடர்ந்து ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதெல்லாம் அந்தப் பையன், பிசாசு ஓர் உண்மை ஜீவனென்றே நம்பியிருந்தான். அந்த நாவலில் பிசாசு கூத்தாட்டுக் குளத்தை அடைந்த அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்த போது, பையன் பயந்து கைகால் உடம்பெல்லாம் விரைத்துப் போய் உரக்கக் கத்தி விட்டான். என்னவோ ஏதோவென திகிலுடன் ஓடிவந்த பெற்றோர்கள் அலறலின் காரணத்தையறிந்து சிரித்து விட்டார்கள். மூவாட்டுப்புழாவிலிருந்து கூத்தாட்டுக்குளம் எட்டு மைல் தூரத்திலல்லவோ இருக்கிறது!

‘பிசாசின்டெ பிடியில்’ என்ற நாவலைப் படித்து அலறிய அந்தப் பையன் திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். சிகரெட் கடையிலும் மற்ற இடங்களிலுமாக எழுபத்தைந்து ரூபாய் கடன்காரனாக இருந்த நேரம். அறிமுகமான ஒரு புத்தகப் பதிப்பாளரிடம் சென்று புத்தகம் ஏதாவது பிரசுரிக்க எடுத்துக் கொள்கிறார்களா என்று கேட்டான். ‘டிடெக்டிவ்’ கதையென்றால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற பதில் கிடைத்தது. நமது கதாநாயகன் அதற்கு நூற்றைம்பது ரூபாய் கேட்டான். பதிப்பாளர் எழுபத்தைந்து ரூபாய் பேரம் பேசித் தீர்த்தார். பதினாறு நாட்களில் அந்த ‘டிடெக்டிவ்’ நாவலை எழுதி முடித்தான். திடுக்கிட வைக்கும் ஓர் இரவின் கதை அது. அந்த ரூபாயை வாங்கிச் சிகரெட் கடையிலும், மற்ற இடங்களிலுமிருந்த கடனைத் தீர்த்துவிட்டுத் தலைநிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான். இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இந்த இரு நிகழ்ச்சிகளிலிருந்தும் உங்களின் மனதில் உயர்ந்து வருகின்றவன் – வருகின்றவர் யாரென்று உங்களால் சொல்ல முடியுமா?

‘ஹிப்போபொட்டாமஸி’ முதல் ‘யந்திரம்’ வரை நீண்டு கிடக்கும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதிதான் அந்தப் பிரமுகர். வார்த்தைகளால் மட்டுமல்ல, கோடுகளாலும் வர்ணங்களாலும் கூட குண இயல்புகளை வெளிப்படுத்துவதில் நிகரற்ற திறமைசாலியான அந்தக் கதாநாயகனின் பெயரை இனியும் மறைத்து வைக்க விரும்பவில்லை. அவர் பெயர்தான் புதியிடத்து மடத்தில் மலையாற்றூர் கே.வி.இராமகிருஷ்ணன்.

‘சல்லிவேர்கள்’ என்னும் ஒரே நாவலாலேயே முன்னணி மலையாள நாவலாசிரியர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்ட மலையாற்றூரையோ, திறமைமிக்க ஓவியரும் புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்டுமான மலையாற்றூரையோ அல்ல – நான் இங்கே அறிமுகப்படுத்துவது. புதியிடத்து மடத்தில் கே.வி.இராமகிருஷ்ணனைத்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

1927 மே மாதம் 30-ஆம் தேதி குன்னத்து நாடு வட்டத்தைச் சேர்ந்த ‘தோட்டுவா’ என்ற கிராமத்திலுள்ள புதியிடத்து மடத்தில்தான் மலையாற்றூர் பிறந்தார். தந்தை பெயர் கே.ஆர்.விஸ்வநாதசாமி, தாயார் பெயர் ஜானகியம்மாள்.

திருவனந்தபுரம், மூவாட்டுப்புழா, கொல்லம், திருவல்லா, பெரும்பாவூர் ஆகிய இடங்களில் ஆரம்ப, நடுத்தர, உயர்வகுப்புக் கல்விகளைக் கற்றார். ஆல்வாய் யூ.ஸி. கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்ஸி.யும், திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றார்.

1951 முதல் 1955 வரை பெரும்பாவூர், வடக்கன்பறவூர் ஆகிய இடங்களில் வக்கீலாக இருந்தார். 1955-ம் ஆண்டில் இரண்டு மாதங்கள் ஃபிரிஃபிரஸ் ஜர்னலின் சப்-எடிட்டராக இருந்தார். அதே ஆண்டில் மாஜிஸ்ட்ரேட்டாக நியமனமானார். 1959-ல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். அதன்பின் உதவி ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், துணைச் செயலாளர், ஹரிஜன நலத்துறை இயக்குநர், சிவில் சப்ளைஸ் இயக்குநர், ஆட்சி மொழியின் தனி அலுவலர், டி.ஸி.ஸி.யில் (திருவாங்கூர் கொச்சின் கெமிக்கல்ஸ் லிமிடெட்) நிர்வாக இயக்குநர், கே.எஸ்.ஆர்.டிஸியின் பொது மேலாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றிய மலையாற்றூர், இறுதியாக, கேரள தலைமைச் செயலகத்தில் ரெவின்யூஃபோர்டு செயலாளராக இருந்தபோது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தன் பதவியை ராஜினாமா செய்தவர். ‘ஜனயுகம்’ பத்திரிகையின் ஆசிரியராக மூன்றாண்டுகளும், நான்கு இதழ்கள் கொண்ட ஒரு பத்திரிகை குரூப்பிற்கு நிர்வாக ஆசிரியராகவும் இருந்த பின், திரைப்படங்களுக்குக் கதை வசனம் இயக்குநர் பொறுப்புகளை வகித்தவர்.

1954-ல் வேணியை மணந்துகொண்டார். ஒரு மகனும் ஒரு மகளும். கண்ணன் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் விஸ்வநாதன், மகள் சோபா இருவருக்கும் திருமணமாகிவிட்டது. முறைகேடுகளால் ஏற்படும் குழப்பங்கள் வைதேஹி (வீட்டின் பெயர்)யில் எப்போதும் இருந்தது இல்லை. அங்கே முழு திருப்தியின் அலைகள் தான் எப்போதும். (மலையாற்றூரும் மனைவியும் மறைந்து விட்டதால் வைதேஹி இப்போது அமைதியின் பிடியில்…)

வாழ்க்கையின் அந்திம காலத்தில் ‘ரிட்டயர்டு ரெவின்யூ செகரட்டரி’ என்பதை விட, ஓர் இலக்கியவாதி என்று அறியப்படுவதைத் தான் தான் விரும்புவதாகக் கூறினார், மலையாற்றூர் இராமகிருஷ்ணன். இளம் வயதில், தான் ஒரு பாடகனாக வேண்டுமென்று விரும்பினாராம். பயப்படுத்தக் கூடிய ஓர் நடுசாமத்தின் பயங்கர அமைதியிலிருக்கும் மங்கலப் புழை செமினாரி சூழ்நிலையை, ‘யக்ஷி’ கதாசிரியரால் ஒருபோதும் மறக்க முடியவில்லையாம். பெரியாற்றின் கரையிலுள்ள ஆலமரத்தின் கீழே பி.கிருஷ்ணப் பிள்ளையால் நடத்தப்பட்ட ‘ஸ்டடி க்ளாஸ்’தான் தன் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றத்துக்கு உதவியதென்று மலையாற்றூர் கருதுகிறார்.

ஒரு காலத்தில் சமூகப் புரட்சியின் முக்கியஸ்தராக விளங்கிய மலையாற்றூர் ஒரு முழு நேர அரசியல்வாதியாக இருந்திருப்பாரேயானால் கேரள மாநிலத்திலேயே ஒரு பெரும் அரசியல் தலைவராக வந்திருப்பார் என்பது முடிவான விஷயமாகும். அப்பயணத்தின் உச்சக்கட்டமாக ஓர் அமைச்சர் பதவியை அடைவதை விட, மனப்போராட்டங்கள் நிறைந்த ஓர் இலக்கியவாதியின் பயணத்தைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார். தான் ஒரு சிறந்த எழுத்தாளனாக அறிய ஆசைப்பட்ட மலையாற்றூர் ஒருபோதும் எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினரானதில்லை. பலரும் மலையாற்றூரை ஒரு கம்யூனிஸ்டுகாரராகவே நினைத்துக் கொண்டிருந்தனர்.

1942-ல் ஆல்வாய் யூ.ஸி. கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி, மலையாற்றூரின் மனதில் இன்றும் பசுமையாகத் தங்கியுள்ளது. வேட்டியணிந்து நடமாடிக் கொண்டிருந்த ஸ்காட்லாண்ட்காரரான புரொபஸர் குரோளிதான் அந்த நிகழ்ச்சிக்கு கதாநாயகர். மாலை நேரங்களில் மாணவர்களைத் தேநீருக்கு’ அழைத்தும், தேநீர் அருந்தும் நேரத்தில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சில புதிர்களைச் சொல்லியும், அதற்கான அவர்களின் பதிலைக் கேட்டு ரசித்துக் கொண்டும், அசாதாரண அற்புதங்களை உள்ளடக்கி பிரத்தியேகமான மனிதராகத் திகழ்ந்தார் அந்த அந்நியர். இப்படி இருக்கும்போது ஆகஸ்ட் புரட்சி அதன் தீவிரத்தையடைந்தது. ஒரு நாள் இரவு கல்லூரி காம்பவுண்டில் மாணவர்களின் கூட்டம் கூடியது. ‘பிரிட்டிஷ் நாய்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்ற கோஷம் முழங்க ஆரம்பித்தது. அதைக் கேட்டு குரோளி கோபிக்கவில்லை; மாறாகக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். அந்த நல்ல மனிதரின் கண்ணீர்த் துளிகள், மலையாற்றூர் உள்பட பலரையும் மன்னிப்புக் கேட்கத் தூண்டியது. அந்த நினைவு இனிமையான ஒரு வேதனையாகவே மலையாற்றூரின் நினைவில் நிறைந்திருந்தது. (இந்த நிகழ்ச்சியை இவருடைய ‘சல்லிவேர்கள்’ நாவலில் காணலாம்.)

இந்தி பேசும் ஒரு பிச்சைக்காரனாக திருவனந்தபுரம் பெரிய கடைவீதி வழியாக நடந்து சென்ற தினத்தைப் பற்றிச் சொல்லும்போதே, அவர் முகத்தில் புன்னகைக் கோடுகள் அதிகமாகும்.

மலையாற்றூர் அப்போது பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார். பாறயில் ஷம்சுதீன், பதருதீன், வி.கே.கிருஷ்ணமேனனின் வரலாற்றை எழுதிய டிறஜஸ் ஜார்ஜ் என்பவர்கள் அன்றைய நண்பர்களில் முக்கியமானவர்கள். ஒரு நாள் பெரும்பாவூர்க்காரனான ஒரு நண்பன். “ஆள் அடையாளம் தெரியாமல் திருவனந்தபுரம் நகரத்தில் யாராலாவது நடமாட முடியுமா?” என்று கேட்டான். மலையாற்றூர் பந்தயத்தை ஏற்றுக்கொண்டார். பந்தயத்தொகை 5 ரூபாய்தான். தாடியும் மீசையும் ஒட்டிக்கொண்டு இந்தி பேசும் பிச்சைக்காரனாக மாறினார் மலையாற்றூர். தம்பானூரை அடைந்து சாலை வழியாக நடந்து சென்றார். பலரிடமிருந்து பிச்சையும் வாங்கினார். யாரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. (இந்த இடங்களில் உள்ளவர்கள் இவரை மிக நன்றாகத் தெரிந்தவர்கள்) மினர்வா ஜங்க்ஷனையடைந்தபோது ஒருவன் இவர் பெயரைச் சொல்லியழைத்தான். அதனால் அந்தப் பகல் வேஷம் தோல்வியடைந்துவிட்டது.

தமாஷுக்காக இப்படியெல்லாம் செய்ய மலையாற்றூருக்கு எப்போதும் ஆசையுண்டு. ஆனால், அந்த ஆசை இனி ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லை.

பம்பாயில் ஃபிரிப்ரஸ் ஜர்னலில் 1955-ல் இரண்டு மாத காலம் உதவி ஆசிரியராக வேலை செய்த மலையாற்றூர், அந்த ‘போர் அடித்த வேலை’யைப் பற்றி பல சமயங்களில் வேடிக்கையுடன் சொல்வதுண்டு. சிவராமன்தான் அன்றைய தலைமை ஆசிரியராம்.

நேர்முகத்தேர்வில் கேட்ட முதல் கேள்வியே “டைப்பிங் தெரியுமா?” என்றுதான்.

டைப்பிங் சிறிது கூட தெரியாத ராமகிருஷ்ணன், “தெரியும்!” என்னும் பதிலைத்தான் சொன்னார்.

உடனே, ‘T.C.Elections and after’ என்னும் கட்டுரையை டைப் செய்ய அனுப்பினார் சிவராமன். உள்ளூர ஏற்பட்டிருந்த நகைச்சுவையுணர்வுகள் கொடுத்த மன தைரியத்தினால் கண்கள் கலங்கவில்லை. கைகள் நடுங்கவில்லை. ஒரு லேடி டைப்பிஸ்டின் கருணை கிடைத்தது. ஒரு ஸ்பெல்லிங் பிழை கூட இல்லாமல் டைப் செய்துகொடுத்தாள். அதை எடுத்துப் போய் சிவராமனிடம் காண்பித்தார். உடனே நியமன உத்தரவு கிடைத்தது. முதலில் ‘புரூப் ரீடரா’கவும் எட்டு நாட்கள் கழித்து ‘சப்-எடிட்டரா’கவும் ஆனார். சம்பளம் நூற்றிருபது ரூபாய்.

அப்போதுதான், நகரசபை ஆணையாளர் தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டுமென்று வீட்டிலிருந்து கடிதம் வந்தது. பட்டம் தாணுப்பிள்ளை அப்போது முதலமைச்சராக இருந்தார்.

சிவராமனிடம் சென்று இதைப் பற்றி அபிப்பிராயம் கேட்டார் மலையாற்றூர்.

“பத்திரிகையாளனாக வேண்டும் என்னும் நிர்பந்தம் உனக்கு இல்லையென்றால், நீ திரும்பிச் செல்வதுதானே நல்லது?” என்று அவர் சொன்னார்.

அந்த உபதேசத்தை ஏற்றுக்கொண்டு பெரும்பாவூருக்குத் திரும்பினார் மலையாற்றூர்.

பட்டம் தாணுப் பிள்ளையை நேரில் சென்று பார்த்தார்.

“அரசியல் குறுக்கீடு இல்லையென்றால் நான் அதற்குத் தகுதியுள்ளவன்தான்” என்று கூறினார் மலையாற்றூர்.

‘As a matter of right’ என்னும் ஆங்கில வார்த்தைகள் முன்கோபியான தாணுப் பிள்ளையவர்களைத் கோபப்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் விண்ணப்ப பேப்பர்களைத் திருப்பிக் கொடுத்து பி.கே.குஞ்ஞினைப் பார்க்கச் சொன்னார். குஞ்ஞுடன் பயங்கர விவாதம் நடத்திய பின் அந்த முயற்சியை உதறிவிட்டு மீண்டும் வழக்கறிஞர் வாழ்க்கையை ஆரம்பித்தார் மலையாற்றூர்.

1955-ல் நீதிபதி தேர்விற்காகத் தாயின் நிர்ப்பந்தத்தின் பேரில் கடைசி நேரத்தில் விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வும் நடந்தது. பதினாறு பேர்களில் முதலாவது நபராக நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார் இராமகிருஷ்ணன், பி.எஸ்ஸி. மெம்பர்கள் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பைப் பார்த்ததும் இந்த தடவையும் தனக்கு அந்த வேலை கிடைக்காதென்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அந்த வேலை அவருக்கே கிடைத்தது. ஐ.ஜி.சந்திரசேகரன் நாயரால்தான் தனக்கு அந்த நியமனம் கிடைத்ததென்று மலையாற்றூர் கருதினார். அவ்வாறு 200 ரூபாய் சம்பளத்தில் மட்டாஞ்சேரியில் இரண்டாம் வகுப்பு நீதிபதியாக இராமகிருஷ்ணன் நீதித்துறையில் புகுந்தார். என்றாலும், கம்யூனிஸ்ட்காரர் என்ற முத்திரை மட்டும் அவரை விட்டு விலகவில்லை. முதல் வழக்கே அந்த நம்பிக்கையை அரக்கு வைத்து உறுதி செய்வது போல் இருந்தது. முதல் தீர்ப்பிலேயே முதலாளிக்கு 20 ரூபாய் அபராதம் விதித்தும் வேலைக்காரனுக்கு 10 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

ஆறுமாத உத்தியோகத்திலேயே நீதிபதி வேலை போரடிக்கத் தொடங்கியது. எர்ணாகுளம் போலீஸ் கிளப்பிற்கு வரும்போதெல்லாம் ஐ.ஜி. சந்திரசேகரன் நாயர் மலையாற்றூரை ஃபோனில் அழைத்து நலம் விசாரித்துக் கொண்டிருப்பார். ஒரு சமயம் அவரிடம், “அந்த வேலை எனக்குப் போரடிக்கிறது. அதனால் ராஜினாமா செய்ய ஆசைப்படறேன்” என்று கூறினார் மலையாற்றூர். ஐ.ஜி. அதற்குத் தைரியம் கூறினார்.

“இருபத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கென்றே ஒரு வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். ஸ்பெஷல் ரெக்ரூட்மென்ட் வரப்போகிறது. அதற்கு எழுது. கண்டிப்பாகக் கிடைக்கும். ஒரு கம்யூனிஸ்ட்காரனை மாஜிஸ்ட்ரேட்டாக்கினேன் என்று ஒரு புகார் எழுந்துள்ளது. அதனால், ஒரு கம்யூனிஸ்ட்காரனை ஐ.ஏ.எஸ்ஸாகவே ஆக்கிப் பார்க்கலாம்” என்றார்.

அப்போதுதான் மலையாற்றூருக்குத் தன்னம்பிக்கை ஏற்பட்டது. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். 1957-ல் உதவி கலெக்டராகத் தேவிகுளத்துக்கு நியமனமாயிற்று. ஒரு தந்தையின் கடமையைப் போன்ற பாசத்தின் உறுதி, சந்திரசேகரனிடம்தான் கிடைத்ததென்று மலையாற்றூர் மிகுந்த நன்றியுடன் கூறுவதுண்டு.

சமூக விஷயங்களில் என்றும் ஓர் ஆதரிசவாதியாகவே இருந்தார் இந்த மனிதர். நெருங்கிப் பழகுபவர்களிடம் ஒரு போதும் பிரிய முடியாத நட்பைச் செலுத்தி, அதைத் தன் முதலீடாகப் பாதுகாக்கும் இந்த ஐ.ஏ.எஸ்.காரருக்கு, தலைக்கனம் அதிகம் உண்டு என்று சிலர் சொல்வதை நான் கேட்டதுண்டு. பல வருடங்களாக நான் இந்த பிரபல எழுத்தாளரையும், அதைவிட அந்த எழுத்தாளனுக்குள்ளே இருக்கும் சாதாரண மனிதனையும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தேன். அந்தச் சிலர் சொல்லும் அபிப்பிராயத்துடன் என்னால் ஒத்துப்போகவே முடியவில்லை.

“ஓர் எழுத்தாளன் என்ற வகையில் பஷீரை எனக்குப் பிடிக்கும். ஆனால், பஷீர் என்னும் சாதாரண மனிதருடன் என்னால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் செலவழிக்க முடியாது.” என்னும் அபிப்பிராயத்தைக் கூறிய மலையாற்றூர் இராமகிருஷ்ணனிடம் உள்ள பச்சையான மனிதனைப் பலரும் புரிந்துகொள்ளவில்லை.

ஒருமுறை நான் மலையாற்றூரைச் சந்தித்துத் திரும்பும்போது எனக்கு அறிமுகமான ஒருவர், “அவரிடம் கொஞ்சம் அகந்தை இருக்குமே?” என்று கேட்டார்.

அதற்கு நான், “ரெவின்யூ செகரட்டரி மலையாற்றூரைக் காண நான் போகவில்லை. இலக்கியவாதியும் எனது நண்பருமான இராமகிருஷ்ணனைக் காணத்தான் நான் போனேன்” என்றும், மேலும் சிலவற்றையும் பதிலாகக் கூறினேன். அவரின் – கேள்வி கேட்டவரின் – முகம் சுருங்கியது. மலையாற்றூர் இராமகிருஷ்ணனுக்கு அகந்தை உண்டென்றால், அது ஆத்ம விசுவாசத்தின் விளம்பரம்தானே தவிர, வேறொன்றுமில்லை.

மலையாற்றூருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் தெரியும்; இந்தி தெரியாது. ஹோட்டலுக்குச் சென்றதும் கூறுகின்ற ஒரு வார்த்தையை மட்டும் அவர் இந்தியில் கற்று வைத்திருந்தார். “ஸாப்கரோ” (சுத்தமாக்கு) என்ற வார்த்தைதான் அது.

‘குமார சம்பவம்’ மேஜை மேல் இருப்பதைப் பார்த்ததும் அவருடைய புத்தகப் படிப்பைப் பற்றிக் கேட்டேன்.

“ரீடிங் கேப்” எனக்கு ஏராளமாக உண்டு. காளிதாசனை நான் (அறுபது வயதில்) இப்போதுதான் தொடங்கியுள்ளேன். குமார சம்பவத்தைப் படித்தபோதுதான் மலையாளத்தில் கவிதையே இல்லை என்று தோன்றியது. சம்ஸ்க்ருதம் படிக்காததால் எனக்கு மிகவும் வருத்தமுண்டு. ஓர் ஆசிரியர் கிடைத்தால் சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளலாமென்று நான் ஆசைப்படுகிறேன்.”

ஓர் இலக்கியவாதியைப் பொருத்தமட்டில் ‘ரீடிங் கேப்’ என்பது ஒரு குறையில்லை. ‘திங்கிங் கேப்’ மட்டும் உண்டாகக் கூடாது.

“கார்ட்டூன் கலையில் இரண்டு நவீன திறமைசாலிகளே உள்ளனர். ஒருவர் ஆலிஃபிராண்ட்; மற்றவர் ஓ.வி.விஜயன். எனக்கு மிகவும் பிடித்த ஒரே கார்ட்டூனிஸ்ட் ஓ.வி.விஜயன்தான்” என்று இந்த கார்ட்டூனிஸ்ட் உரிமை கொண்டாடுகிறார்.

உத்தியோகத்தின் பேரால் யாராலும் தன் வயப்படுத்த முடியாத மலையாற்றூர் இராமகிருஷ்ணனை, நட்பினால் தன் வயப்படுத்தியவர்கள் ஏராளமானவர்களாவர். நட்புறவில் சூழ்ச்சிகளும் திரைகளும் ஏற்படாமலிருக்க மலையாற்றூரைப் போல் சிரத்தை எடுத்துக்கொள்ளக் கூடிய வேறொரு நபரை எங்கேயோ ஒருவரைத்தான் பார்க்க முடியும். ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வந்த தினத்திலும், சங்கர்ஸ் வீக்லி பத்திரிகையில் தன்னுடைய முதல் கார்ட்டூன் வந்த தினத்திலும்தான் மலையாற்றூர் அதிக மகிழ்ச்சியை அனுபவித்தாராம்.

திருமணம், வீட்டுப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. பெண் ஒரு காபி கொண்டு வந்தாள். ஒரு பாட்டுப் பாடினாள்; அந்நியோந்நியமாகப் பேசினாள் – இதுதான் பெண் பார்த்த சடங்கு. தனது வாழ்க்கையிலுள்ள எல்லா சுகங்களுக்கும் ‘வேணி’ முக்கியமான பங்கு வகித்தார் என்று இராமகிருஷ்ணன் கருதினார். மது அருந்தும் விஷயத்தில் மட்டும் மனைவியிடமிருந்து பலத்த எதிர்ப்பு உண்டாம். அதனால் ஏற்படும் பிணக்குகளும் ஏராளமாக உண்டாம். வேணி – இராமகிருஷ்ணனுடைய வாழ்க்கையில் இறுதிவரை எவ்வித முரண்பாடுகளும் ஏற்பட்டதில்லை.

மகள் சோபா கார்ட்டூனிஸ்ட்காரரான தந்தையின் ‘சித்தி’யைப் பெற்றிருந்தார்.

“சோபா, இங்கே வந்து உன் அப்பாவின் கார்ட்டூன் ஒன்றை வி.பி.சி.க்கு வரைந்து காட்டு” என்றார் மலையாற்றூர்.

ஒன்றிரண்டு நிமிடங்களில் தந்தையைப் படத்தில் கொண்டுவந்து நிறுத்தி விட்டாள் சோபா.

கண்ணனின் ரசனை வேறொரு விதமாக இருந்தது. பழைய சட்டைகளையும் மற்றவைகளையும் ‘டை அண்டு டை’ செய்து புதியதாக மாற்றுவது. ‘டை அண்டு டை’ செய்த ஒரு சட்டையை நான் பார்த்தேன். ஒண்ணரை ரூபாய் மட்டும் செலவழித்தால் போதும்; வேறெங்கேயும் கிடைக்காத விசேஷமான ஒரு சட்டை கிடைத்துவிடும் – அதுவும் துணி விஷயத்தில் தீ போல் விலையேறியுள்ள இந்தக் காலத்தில்.

ஒரு சினிமாவை இயக்க வேண்டுமென்பது மலையாற்றூரின் அடங்காத ஆசைகளில் ஒன்றாக இருந்தது. (இந்தப் பேட்டிக்குப் பின் பல படங்களை டைரக்ட் செய்துவிட்டார்.) மலையாளத்திலுள்ள சாதாரண படங்களில் மிகவும் புகழப்பட்ட ஐந்தோ பத்தோ படங்களிலிருந்து மாறுதலான முறையில் அழகாகத் தயாரிக்கத் தன்னால் முடியுமென்னும் தன்னம்பிக்கையும் இந்த மனிதருக்கு இருந்தது.

இளமையின் உஷ்ணமும் வெளிச்சமும் படர்ந்து பற்றும் பிராயத்தில், தெளிவற்ற காதலின் பன்னீர்க் குளத்தில் நீந்தித் துடிக்காதவர்கள் யாரும் இல்லை. இறக்கும்வரை வேதனையாக உள்ள அந்த இனிமையான நினைவுகளை மனதில் பாதுகாக்காதவர்களும் மிகவும் குறைவு.

“காதல் விதை முளைத்தது என்றைக்கு? கல்லூரி வாழ்க்கையிலா? அதற்கு முன்பா?” என்னும் என் கேள்விகள், மலையாற்றூரை வர்ணஜால மிகுந்த நினைவுகளின் உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து, “அப்படி பிரத்தியேகமாக ஒன்றுமில்லை” என்று கூறினார்.

நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். என்னுடைய அப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் இனிமையான ஒரு புன்சிரிப்பாலேயே ஒதுக்கிவிட்டார். என் நினைவில், வசியப்படுத்தும் புன்னகையுடன், முழுநிலா போன்ற பெண் அமைதியுடன் வந்து சென்றாள். அவள்தான் ‘அஞ்சு சென்டி’ல் (சுதந்திரப் போராட்ட நாவல்) வந்த மேரி ஈப்பன். ஒரு திரையின் மூடுபடலத்தினுள்ளே இறந்த காலம் முழுவதையும் அடக்கம் செய்ய முடியுமோ? முடியும் என்று சொன்னவர்கள் யாரும், வாழ்க்கையின் மிருதுவான பாவங்களை உண்மையாக உணர்த்தும் இலக்கியவாதியாக இருந்ததில்லை அல்லவா?

நகைச்சுவை இலக்கியம் எழுதுபவன் இலக்கியத்தில் ‘தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன்’ என்பதுதான் மலையாற்றூர் என்ற நகைச்சுவைப் பிரியனின் அபிப்பிராயம்.

“ஜேம்ஸ் தர்பரை விட நல்ல நகைச்சுவை எழுதலாமென்னும் அகங்காரம் எனக்கு உண்டு. ஆனால், நல்ல நகைச்சுவை மட்டும் எழுதினால் நான் இலக்கியத்தில் ஒரு ‘ஆல்ஸோரான்’ ஆகிவிடுவேன். அதுதான் கால நிர்ணயமும் கூட. சிரிக்க நமக்கு நேரம் குறைவு – குஞ்சன் நம்பியாரின் வழிவந்தவன் என்று சொல்லிக் கொண்டு நடந்தாலும்” என்று அவர் கூறினார்.

‘அலட்சிய நிமிடங்களில் எழுதுகின்ற வரிகளாலும், வரையும் படங்களாலும் ஒரு தனிமனிதனின் மனதைப் படிக்கலாம்’ என்று ரிச்சர்டு ஃபாஸ்டர் சுட்டிக் காட்டியுள்ளார். மலையாற்றூர் தன் அலட்சியமான நேரங்களில் ஒரு காகிதத்தில் குறித்துள்ள வரிகளையே இங்கே எழுதுகிறேன்.

“எவ்வளவோ சக்தி குறைந்ததுதான் வெளிச்சத்தின் உடல்; அது எவ்வளவோ மெல்லியதானதும் கூட. மஞ்சள் வெளிச்சம் ஆடி விளையாடும்போது, அடுக்களைச் சுவரில் கருமை நிழல்கள் அலைகின்றன; வளருகின்றன. அந்தக் கருமை நிழல்களுக்குத் தெரியும் – விளக்கு அணையுமென்று. அதனால், கண்களின் இமைகள் இறுக்கி மூடிக் கொள்ளும். அப்படி இறுக மூடினாலும், அவை தானாகத் திறந்து கொள்ளத்தான் துடிக்கும். இந்த இருள்தான் எப்படிப்பட்டதொரு சூத்திரதாரி! பயந்து கண்களை மூடும்போதும் இருள்தான் உண்டாகிறது. அதனால் மீண்டும் கண்களைத் திறப்பது ஒரு பெரிய புண்ணியம்தான்” என்று எழுதியுள்ள குறிப்புகளால், மலையாற்றூர் ராமகிருஷ்ணன் என்னும் எழுத்தாளரிடமுள்ள பச்சையான மனிதனைக் காண முடிந்ததா? இல்லையென்றால், இதோ வாழ்க்கைதான் மேன்மை என்று கருதும், ஒரு பெரிய மனதின் உரிமையாளன்தான் மலையாற்றூர். நெருங்கினால் நேசிக்கவும், விலகினால் ஆதரிக்கவும் கூடிய இந்த நல்ல நண்பர். அறிமுகமற்றவர்களுக்கு ஒரு புதுமையானவர்தான். அறிமுகமானவர்களுக்கு என்றும் ஒரு இன்பச் சோலையாவார்.