“இருட்டில் கிடைக்கும் சிறிது வெளிச்சம் சூரியனைவிடப் பிரகாசமானது” அரிசங்கர்

ழுத்தாளர் அரிசங்கர் சமகாலத்தில் நவீன தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை பதிலடி, ஏமாளி, உடல் என்கிற மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும், பாரிஸ் மற்றும் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்கிற இரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளது. இவை மட்டுமின்றி மாயப்படகு என்கிற சிறார் நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அரிசங்கர் இன்றைய நவீன வாழ்வில் மனிதர்களின் துயரை யதார்த்தமான மொழி நடையில் நமக்குச் சொல்கிறார். அரிசங்கரின் படைப்புகளில் வரும் பல்வேறு மனிதர்கள் ஒருவகையில் இந்த சமூகத்தில் நாம் மறுக்க முடியாத பன்முகத் தன்மைகொண்ட முகங்களே. ஒரு வகையில் அரிசங்கர் என்கிற எழுத்தாளரின் குரல் இந்த சமூகத்தின் துயரமான உண்மையான குரல்தான்.

இந்த நேர்காணல் கனலியின் 17 வது இணைய இதழிற்காக மின்னஞ்சல் வழியாக மேற்கொள்ளப்பட்டது.

ன் எழுதுகிறீர்கள்? இது நேரிடையான கேள்வியாக இருக்கலாம் இருந்தாலும் உங்கள் எழுத்தின் அடிப்படைகளை அறிந்துகொள்ளவே இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன்.?

ல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கான பதில் நிச்சயம் ஒன்றுபோல் இருந்ததில்லை. அதற்குக் காரணம் அந்தந்த சந்தர்ப்பங்களில் என்னை, என் வாழ்க்கையை, என் இறந்தகாலத்தை எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதில் தான் இருந்திருக்கிறது. உண்மையில் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான திட்டவட்டமான நேர்மையான ஒரு பதிலை என்னால் என்னிலிருந்து பெற முடியவில்லை. ‘இன்சப்ஷன்’ திரைப்படத்தில் நாயகன் ஒரு கேள்வி கேட்பார், “இந்தக் கனவின் தொடக்கம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று. எனக்கும் அதேபோலத்தான் இருக்கிறது. ஏன் எழுதுகிறேன் என்று இதற்குமுன் சொன்ன, எனக்குள் சொல்லிக்கொண்ட, நானே உருவாக்கிக்கொண்ட எந்தக் காரணமும் உண்மையில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

ஆனால், எழுதுவது எனக்கு எதிலிருந்தோ விடுதலையடைவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. நான் யாரையோ அல்லது ஏதோ ஒன்றை இந்த சமூகத்தின் முன் நிறுத்துவதாக நம்புகிறேன். வெகு சமீபத்தில் எழுதுவதே என்னை, என் தற்கொலையை எண்ணத்திலிருந்து சற்று தள்ளி வைத்தது. அதன்பிறகு சற்று அதிலிருந்து மீண்டு வந்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கப்படப்போகும் இதே கேள்விக்கு என் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள நானுமே மிக ஆர்வமாக இருக்கிறேன்.

 

நீங்கள் தீவிரமான வாசிப்பாளர் என்று தெரியும். தனிப்பட்ட வாசிப்பு எப்படித் தொடங்கியது இன்று வரை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட வாசிப்புகள் எந்தவகையில் உங்களின் எழுத்துகளுக்கு உதவியாக இருக்கிறது?

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது தமிழ் பல்ப் பிக்ஷன்களை படிக்கத் தொடங்கினேன். அது பன்னிரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. அந்த காலகட்டத்தில்தான்  கிழக்குப் பதிப்பகம் அதிக அளவில் புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது. மேலும் அது பரவலாகப் பல இடங்களில் கிடைக்கும். என் வாசிப்பு சற்று திசைமாறியது. அதே காலகட்டத்தில் நான் ஹாரி பாட்டரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அதன் பாதிப்பில் ‘மாயப்படகு’ என்ற சிறுவர் கதையை எழுதினேன். அது புதுச்சேரியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த “புதுவை பாரதி” என்ற இதழில் தொடராக வெளிவந்தது.

அந்த காலகட்டத்தில் எனக்குக் கம்யூனிசத்தின் தீவிர ஈடுபாடு வந்தது. அது வழக்கம்போல காஸ்ட்ரோ, சே என இருந்தபோது தோழர் ஒருவரின் நட்பு கிடைத்து நானும் சிறிது காலம் கட்சியிலிருந்தேன். கட்சியில் பெரிதாக எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லையென்றாலும், அது என் வாசிப்பு பழக்கத்தைச் சரியான திசைக்கு மாற்றியது. அப்போது ரஷ்ய இலக்கியங்கள் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். சென்னைக்கு வந்தபிறகு தமிழில் தீவிர இலக்கியங்களை அதிக அளவில் வாசிக்க ஆரம்பித்தேன். கோபிகிருஷ்ணன், நகுலன், சம்பத், எம்.ஜி.சுரேஷ், தமிழவன், ஜீ.நாகராஜன், ராஜேந்திர சோழன், பஷீர் போன்றவர்ளை விரும்பி வாசித்தேன்.

மாயப்படகு கதைக்குப் பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர் வாசிப்பே என்னை எழுதத் தூண்டியது. தொடர் வாசிப்பு மட்டுமே என் எழுத்தில் புது புது உத்திகளையும் கதை சொல்லல் பாணியையும் முயன்று பார்க்கத் தூண்டுகிறது.

ஆதர்சமான எழுத்துகள் அல்லது மாஸ்டர்கள் என்கிற பட்டியல் அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்றும் மனதிலிருக்கும் உங்களுக்கு அப்படி ஏதேனும் மனதிலிருக்கிறதா. அவற்றிலிருந்து நீங்கள் பெற்றவை அல்லது ஒதுக்கியவை எவையெவை?

எனக்கு ஒரு பழக்கம் உள்ளது. நான் எதையாவது சாப்பிடும்போது எனக்கு அது மிகவும் பிடித்துவிட்டால், உடனே ‘மனிதன் உருவாக்கியதிலேயே மகத்தான ஒன்று இதுதான்’ என அந்த நேரத்திற்கு நினைத்துக்கொள்வேன். அடுத்து வேறு எதாவது சாப்பிடும்போது அது மாறிவிடும். இது எனது இலக்கிய மனதிற்கு அப்படியே பொருந்தும். நான் யாராவது ஒருவரை வாசிக்கும்போது எனக்கு அது பிடித்துவிட்டால் அந்த நேரத்திற்கு அவர் தான் எனது மாஸ்டர். மேலும் இதுபோல வேறு யாராவது அப்படி யாரைப்பற்றியாவது சொன்னால் நான் அவரையும் தேடி வாசிப்பேன். சில புத்தக விற்பனையாளர்களே என்னிடம் “கண்டதையெல்லாம் படிக்காதீர்கள். காச அதிகமா செலவு பண்ணாதீங்கன்னு கூட சொல்லியிருக்கிறார்கள்”. எனது ஆதர்ச எழுத்துகள் அல்லது மாஸ்டர்கள் மாறிக்கொண்டேயிருப்பார்கள். மாறிவிட்டதாலேயே ஒருவரை மற்றவர் மிஞ்சிவிட்டார்கள் எனப் பொருள்கொள்ளத் தேவையில்லை. நான் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதுவே என் எழுத்தில் யார் சாயலும் இல்லையென்று நினைகிறேன். (நான் அப்படித்தான் நம்புகிறேன். ஒருவேளை இருந்தால் யாராவது சொல்லலாம். தெரிந்துகொள்கிறேன்).  ஒருவகையில் நான் நிலையில்லாத மனதுடையவன் என்பதை இது காட்டலாம். இவர்களில் ஒருவர் எப்போதும் என் மனதில் ஆதர்சமாக இருப்பவர் என்றால் அது எழுத்தாளர் ராஜேந்திர சோழன் அவர்களும் வைக்கம் முகமது பஷீர் அவர்களும் தான். மேலும் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லை. அது பெரும்பாலும் சார்பு நிலைகொண்டது என்பதே என் எண்ணம். எப்போதும் எந்தப் பட்டியலிலும் இடம்பெறாத நல்ல எழுத்தாளர்கள் தமிழில் உண்டு.

முதல் சிறுகதை எப்போது  வெளியானது? அந்த நேரத்தில் எப்படிப்பட்ட மனநிலை இருந்தது. தொடர்ந்து எழுதிட அது ஒரு உந்துதலாக இருந்ததா?

மாயப்படகு (2005) சிறுவர் கதை வெளியானபோதே புதுவை பாமரன் என்ற சிற்றிதழில் தொடர்ந்து மூன்று சிறுகதைகள் எழுதினேன். அது ஒரு ஆர்வத்தில் செய்தது. அந்த நேரத்தில் அது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் கொடுத்தது. ஆனால், நான் அதைத் தொடரவில்லை. அதன்பிறகு சென்னைக்கு வந்த தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தபின்பே மீண்டும் எழுதத் தொடங்கினேன். 2018 ஆம் ஆண்டு மலைகள் இனைய இதழில் புதுச்சட்டை என்ற கதை வந்து மிகுந்த மகிழ்ச்சியையும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது. அதன் பிறகு பதாகை, சொல்வனம், மலைகள், நடு, காக்கை சிறகினிலே, உயிர் எழுத்து ஆகிய இதழ்களில் தொடர்ந்து கதைகள் வெளியாகி அதே ஆண்டு இறுதியில் முதல் தொகுப்பும் வெளிவந்துவிட்டது. அதேசமயம் அவ்வாறு தொடர்ந்து வேகமாக எழுதுவதே நண்பர்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டாக எழுந்தது. முதல் தொகுப்பிற்குப் பிறகு அந்த வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். அது பல வகையில் பலனளித்தது.

சிறுகதை எழுத வேண்டும் என்று முடிவு செய்த பின்பு உங்களை எப்படியெல்லாம் தயார் செய்து கொள்வீர்கள்?

ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் அந்த கதையை மனதிற்குள் அசைபோட்டபடியே இருப்பேன். அதே நேரத்தில் அதன் வடிவத்தைப் பற்றியும் யோசனைகள் ஓடும். என் மனைவியுடன் எழுதப் போகும் கதையைச் சொல்வேன். பிறகு ஒரு வடிவம் கூடி வந்ததும் மீண்டும் சொல்வேன். மேலும் அதே சாயலில் அல்லது கருத்தில் வேறு எதாவது கதை வந்துள்ளதா என்று தேடுவேன். சில சமயம் இது எதுவும் இல்லாமல் ஒரு விஷயம் மனதில் தோன்றியதும் நேரடியாக உட்கார்ந்து ஒரே அமர்வில் கூட எழுதியிருக்கிறேன். மனநிலையைப் பொறுத்தது தான் எல்லாம். தொடர்ந்து வாசிப்பதும் கூட என்னைத் தயார்ப் படுத்திக்கொள்ளும் ஒரு வழி தான்.

மிகச்சிறந்த சிறுகதை என்கிற சொல்லாடலை ஒரு எழுத்தாளராக நீங்கள் எப்படி அணுகுவீர்கள்?

அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. முக்கியமாக வாழ்க்கையை நாம் எப்படி அனுகுகிறோம் என்ற விதத்தில் இருக்கிறது. சிலர் சில விஷயங்களை வெகு சாதாரணமாக எடுத்துகொள்வார்கள். சில சாதாரண விஷயத்திற்கே கொந்தளிப்பார்கள். அவரவர் மனநிலைக் கேற்றபடியே தேர்வுகள் இருக்கும்.

மிகச்சிறந்த சிறுகதையென்று உங்களுக்கு சில கதைகள் இருக்கலாம். அவை எனக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். என் கருத்துகளை நீங்கள் நிராகரிக்கலாம். என்னிடமே சில உதாரணங்கள் உள்ளன. என் கதைகளில் நல்ல கதை என்று யாராவது பாராட்டியிருப்பார்கள். அதே கதை மோசமான ஒன்று என்ற விவாதமும் நடந்துள்ளது.

சமீபத்தில் யூ-டியூபில் இரண்டு காணொளிகளில் சிறுகதையின் திருமூலர் என்று தமிழ் இலக்கியத்தில் புகழப்படும் மௌனி அவர்களின் கதைகள் மற்றும் கருத்துகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. நமக்கு ஒரு அபிப்ராயம் இருக்கிறது என்ற காரணத்தால் அந்த விமர்சனத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட முடியாது. மிகச்சிறந்த சிறுகதை என்கிற ஒன்றைக் காலம் தான் தீர்மானிக்கும். ஆனால், அதுவும் கூட முழுமையான ஒரு கருத்தாக ஏற்றுக்கொள்ளப்படாது. நம் சமூகமும் மனநிலையும் அவ்வாறே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட வரலாறு கொண்ட தமிழிலக்கியச் சிறுகதை ஆசிரியர்களின் யாரின் தொடர்ச்சியாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்? அல்லது உங்களுக்கு என்று ஏதேனும் சில மாற்றுப் பாதைகள் அல்லது கனவுகள் இருக்கிறதா.

அப்படி யாருடைய தொடர்ச்சியாகவோ அல்லது யாரையும் பின் தொடரவோ விரும்பவில்லை. ஆனால், நம்மையும் அறியாமல் அது நிகழ்ந்துவிடும். எனது சில கதைகளை வாசித்து யாருடனாவது ஒப்பிட்டு சொல்வார்கள். பல நேரங்களில் எனக்கு அது ஆச்சர்யமாக இருக்கும். அவர்கள் சொல்லும் எழுத்தாளரின் ஒரு வரியைக் கூட நான் வாசித்திருக்கமாட்டேன். ஆனால், அது நிகழும். அது மனித மனங்களின் இயல்பு. அது எப்போதும் ஒன்றை மற்றொன்றுடம் ஒப்பிட்டுக்கொண்டேயிருக்கும்.  எனக்கு சரியோ தப்போ, எழுத வருகிறதோ, இல்லையோ செய்வதை சுயமாகச் செய்யவே விரும்புகிறேன். சில கனவுகள் இருக்கிறது. கனவு நாவல்கள். எழுத வேண்டும். எழுதிவிடுவேன் என்று நம்புகிறேன். அதையும் தான் நான் எழுதுவதில் யாருடைய சாயல் தெரிந்தால் அது என்னையும் அறியாமல் அந்த எழுத்தாளர் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு எனலாம். மேலும் தனித்து இயங்குபவர்களால் மட்டும் நீங்கள் சொன்ன நீண்ட வரலாற்றில் இடம்பெற முடியும்.

முதல் தொகுப்பான பதிலடி சிறுகதைத் தொகுப்பு நிறைவாக வந்துள்ளது. தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதைகளிலும் வரும் எளிய மனிதர்கள் நிறையவே ஈர்க்கிறார்கள், மகிழ்ச்சியைத் தருகிறார்கள், நிறைய இடங்களில் கண்ணீர் விட வைக்கிறார்கள். இவ்வளவு எளிய மனிதர்களின் கதைகளை எப்படிக் கண்டடைகிறீர்கள்?

அனைவரும் என்னைச் சுற்றி இருப்பவர்களே. உண்மையில் நம் அனைவரையும் சுற்றி அவர்கள் தான் இருக்கிறார்கள். சில விஷயங்களை நாம் செய்தால் மட்டும் போதுமானது. அவர்கள் இயல்பாகவே நம்மோடு வந்து இனைந்துவிடுவார்கள். முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் கொஞ்சம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். சாதி மத இன வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் சரி சமமாகப் பாவிக்க வேண்டும். மனிதர்களும் அவர்களின் கதைகளையும் உணர்வுகளையும் நம்மால் எளிமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.

பதிலடி தொகுப்பில் மூகம் தன் மீது நிகழ்த்தும் தாக்குதல்களை எதிர்த்து நிற்கும் மனிதர்கள் நிறைய வருகிறார்கள் (பாலியல் துன்புறுத்தல் முதல், அதிகார மையங்களின் தாக்குதல்கள், சுரண்டல்கள், சாதிய வேறுபாடுகள்) சமூகத்தின் மீது உங்களுக்கிருக்கும் ஏமாற்றங்கள் அல்லது கோபமாக இந்தச் சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாமா?

ஆம், சரிதான். அந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் எனக்குள் நிகழ்ந்த ஏமாற்றங்கள் மற்றும் கோபங்களின் வெளிப்பாடுதான். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் என் இயலாமைகள். இது அனைவருக்கும் இருக்கும். சிலர் அதை வெளியே சொல்லக் கூச்சப்படுவர், அஞ்சுவர். எனக்கு அதெல்லாம் இல்லை. மௌனம் கலையட்டும், திருடர்கள், பதிலடி, பிணந்தின்னிகள் போன்ற கதைகளில் அதைக் காணலாம்.

பதிலடி சிறுகதைத் தொகுப்பு எப்படிப்பட்ட அனுபவங்களைத் தந்துள்ளது. இன்று அதன் மீதான கருத்துகள் அல்லது விமர்சனங்களை எப்படி நீங்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள்?

தொகுப்பு வெளிவந்தபோது மிக மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆரம்பத்தில் சில விமர்சனங்கள் வந்தன. இரண்டும் கலந்துதான் இருந்தது. அனைத்தையும் நான் நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டேன். முடிந்தவரை குறைகளைச் சரிசெய்ய முயல்கிறேன்.

பதிலடி தொகுப்பில் சில சிறுகதைகள் எனக்குப் பிடித்துள்ளது. இன்னும் சில சிறுகதைகள் வடிவ ரீதியாக எனக்குத் தனிப்பட்ட அளவில் மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்த விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்.

நான் எப்போதுமே விமர்சனத்திற்கு மதிப்பளிக்கக்கூடியவன். என்னுடைய எழுத்துகளை நான் முழுமையாக மறுவாசிப்புக்கு உட்படுத்தியபோது எனக்கே பல கதைகள், அதை எழுதிய முறை திருப்தியளிக்கவில்லை. ஏதோ ஒருவகையில் நான் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட்டேன் என்று நினைக்கும்போது எனக்கு அது திருப்தியாகவே உள்ளது. ஆனால், அந்தக் கதைகளை அப்படியே நிராகரிக்கவும் நான் விரும்பவில்லை. அது என் கடந்தகாலத்தின் ஒரு ஆவணம். நான் எங்கிருந்து தொடங்கியிருக்கிறேன் என்பதற்கான சாட்சி. இப்போது எப்படியிருக்கிறது என்று நான் என்னை மதிப்பீடு செய்ய அவை தேவை.

இதுவரை நான் எழுதிக்கொண்டிருக்கிற அனைத்துமே ஒரு முயற்சிதான். பதிலடி தொகுப்பில் உள்ள 16 கதைகளும் 16 முயற்சிகள். சில ஏற்கப்பட்டுள்ளது. சில ஏற்கப்படவில்லை. ஆனால், நான் என் முயற்சிகளைக் கைவிடவில்லை. என் அடுத்த தொகுப்பான ஏமாளியில் அதை இன்னும் அதிகமாகச் செய்தேன் என்றே நம்புகிறேன்.

நேரிடையான மொழியில் கதைகள் எழுதுவது எவ்வளவு உதவியாக உள்ளது. மொழி சார்ந்த படைப்புகள் மேன்மையானவை என்கிற தவறான புரிதல் இங்குள்ளது இல்லையா.

முதலில் அதைத் தவறான புரிதல் தானா என்று தெரியவில்லை. அது ரசனையின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. எழுத்தாளன் நேரடியாகவோ அல்லது மொழியின் ஜாலத்தைக் கொண்டோ ஒரு கதையை எழுதலாம். அது அவரவர் விருப்பம் சார்ந்தது. மேலும் அனைத்தும் அனைவருக்கும் கைவந்துவிடாது. நமக்கு என்ன வருகிறது என்பதில் முதலில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். அதற்காக ஒன்றிலிருந்து மற்றொன்றை முயலக்கூடாது என்று அர்த்தமில்லை.  அடுத்தவர்களைப் பார்த்து நாம் நம் இயல்பை இழந்துவிடக்கூடாது.  நேரிடையான மொழியோ அல்லது அழகியல் நிரம்பி வழியும் மொழியோ, இறுதியில் எழுத்தாளன் என்ன சொல்ல வருகிறான் என்பது தான் முக்கியம். வெறும் மொழியை மட்டும் வைத்து யார் மனதையும் வெல்ல முடியாது. அது கதைகளாலும் அதிலுள்ள மனிதர்களாலும் தான் முடியும். இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கும் மாஸ்டர்களின் கதைகள் கதைக்காகவும் கருத்துக்காகவும் தான் பேசப்படுகிறது. மொழி ஜாலமெல்லாம் அதற்கு அடுத்தது தான். ஆனால், வெறும் மொழியை வைத்துத் திருகி உருட்டி ஒப்பேத்திவிடலாமென்று சிலர் நம்பச் செய்கிறார்கள் என்பதும் உண்மையே.

யதார்த்தவாத கதைகளின் காலம் என்றும் முடியப் போவதில்லை. அதே நேரத்தில் மாற்று முயற்சிகள் இங்குக் குறைவாக உள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

யாதார்த்தவாதம் எப்போதும் முடியப் போவதில்லை. ஆனால், எது யதார்த்தமென்பது மாறிகொண்டேயிருக்கும். கொரோனாவிற்கு முன் நாம் வாழ்வின் யதார்த்தம் வேறு, இப்போது இருக்கும் யதார்த்தம் வேறு. நாம் அதை சரியாக உள்வாங்கிக்கொள்ளுதல் முக்கியம். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதைகளின் காலம் எழுதப்படுவதிலிருந்து குறைந்தது பத்து ஆண்டுகள் முன் உள்ளது. அதனாலேயே வாசிக்கும் பெரும்பாலான கதைகள் நமக்கு பழையது போல் தோன்றுகிறது. எழுத்தாளன் எதிர்காலத்தை காண வேண்டும். அவனுக்கு நிகழ்காலத்தைகொண்டு வருங்காலத்தை கனிக்க வேண்டும். அவ்வாறான செயல்கள் நிகழும் போது கதைகளில் மாற்று முயற்சிகள் தானாகவே நிகழும்.

மேலும் யாருடைய பாதையையும் பின்பற்றாமல் சுயமாக எழுத நினைக்கிறவர்களால் தான் மாற்று முயற்சிகளைச் செய்து பார்க்க முடியும். அசோகமித்திரன் போலவோ ஆதவன் போலவோ ஜெயமோகன் போல எழுதிவிட்டால் வெற்றி பெற்றுவிடலாமென்று நம்பினால் ஏற்கனவே எழுதப்பட்டதைத் தொடர்ந்து பிரதி செய்துகொண்டிருக்க வேண்டியது. எழுத்தாளன் தன் முன்னோடிகளிடம் கற்றுக்கொள்ளலாம். காப்பி அடிக்கக் கூடாது. அதே சமயம் புதிய முயற்சிகள் செய்பவர்கள் எந்த அளவிற்கு ஊக்கப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் தன்நிலை முறையில் கதை சொல்லும் முறைகளைக்கொண்ட கதைகள் எழுதுகிறீர்கள்? இதற்கும் தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா.

இதுவரை எழுதியதில் பெரும்பாலும் என்னையும் என்னைச் சுற்றியிருப்பவர்களையும் தான் அதிகம் எழுதியுள்ளேன். ஒருவேளை அது என்னையும் அறியாமல் நிகழ்ந்திருக்கலாம். திட்டமிட்ட செயல் இதில் எதுவுமில்லை.

உங்கள் சிறுகதைகளில் தனக்கு தானே பரிதாபம் தேடும் மனிதர்கள் நிறைய வருகிறார்கள்.இது ஒரு சில சிறுகதைகளுக்குச் சரியாகப் பொருத்தமாக உள்ளது. சில இடங்களில் வாசிப்புக்குச் சற்று இடர் தருகிறது. இதை நீங்கள் கவனித்தது உண்டா?

இல்லை. இந்த கேள்வியைப் பற்றி நீண்ட நேரம் யோசித்தேன். ஒருவேளை எனது இந்த பரிதாபம் தேடும் சுபாவம் என்பது எனது இயல்பு என்றே தோன்றுகிறது. அதுவே எனது கதைகளில் பிரதிபலித்திருக்கலாம். இது எந்த வகையிலும் என்னைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கவில்லை. அந்த பரிதாபத்தை நான் உருவாக்கிக்கொண்டதற்கு, சிறுவயதில் ஒருவேளை நல்ல சோறு கிடைக்கச் செய்துவிடாதா என்ற எண்ணமாகக் கூட இருந்திருக்கலாம். நான் மீண்டும் அந்தத் தொகுப்பை இந்தக் கண்ணோட்டத்தில் வாசித்துப்பார்க்கிறேன். ஒருவேளை அது தொடர்வதாகத் தெரிந்தால் சரி செய்துகொள்கிறேன்.

 தனிப்பட்ட கேள்வி தான் உங்கள் பால்யத்தின் நாட்களுக்கும் உங்கள் எழுத்துகளுக்கும் எவ்வளவு தொடர்புகள் இருக்கிறது.

நிறையத் தொடர்புள்ளது. என்னுடைய மொத்த எழுத்திலும் நான் எதோ ஒரு வகையில் இருக்கிறேன். நான் இன்னும் என் வாழ்க்கையை என் அனுபவங்களை என்னைச் சுற்றியிருப்பவர்களை விட்டு விலகி  முழுவதுமான ஒரு புனைவுலகத்தைக் கட்டமைக்கவில்லை. ஆனால், விரைவில் அதிலிருந்து விலகி அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டுமென்ற விருப்பமுள்ளது. நான் இதைச் சொல்வதற்காக எந்த வித கூச்சமோ வெட்கமோ படவில்லை. பதிலடி தொகுப்பில் உள்ள மௌனம் களையட்டும் கதையில் வரும் பாலியல் பலாத்காரம் எனக்கு நேர்ந்தது தான். அதில் உள்ள எந்தவொன்றும் கற்பனையில்லை. பெண் குழந்தைகளுக்கு நிகழும் அதே அளவிற்கு ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது. அது பெரும்பாலும் தெரிந்தவர்கள் உறவினர்கள் மூலமாகவே நடக்கிறது. அதைப் பற்றி நேரடியாகப் பேசவேண்டும் என்று தான் அந்தக் கதையை எழுதினேன். ஆனால், அது போதவில்லை என்றே தோன்றுகிறது. அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது, அதுவே கூட உங்களின் முந்தைய கேள்விக்குப் பதிலாக இருக்கலாம்.

ஏமாளி என்கிற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு முதல் தொகுப்பிலிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது என்று நினைக்கிறேன். இதிலிருக்கும் சில சிறுகதைகள் சற்று வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது. இரண்டாவது தொகுப்பிலிருக்கும் கதைகளைப் பார்க்கும் போது உங்கள் எழுத்து பல்வேறு இடங்களில் மேம்பட்டுள்ளது அதே நேரத்தில் சில சறுக்கல்களும் உண்டு, முக்கியமாக சில மாற்று முயற்சிகள் இன்னும் சற்றே சரியாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. என் கருத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ஒரு வகையில் உங்கள் கருத்து உண்மைதான். பதிலடி தொகுப்பின் முன்னுரையில் யதார்த்தக் கதைகள் தான் பாணி எழுத்து என்பதுபோல் சொல்லியிருப்பேன். ஆனால், அதற்கு நேர்மாறான கதைகள் அதிக அளவில் ஏமாளி தொகுப்பில் இடம்பெற்றிருக்கும். சற்று மேம்பட்டுள்ளதாக உங்களைப் போல வேறு சிலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்த இரண்டு விஷயத்திற்கும் ஒரே காரணம் வாசிப்பு தான். மேலும் சறுக்கல்கள் எப்போதும் நிகழ்வதுதான். அதில் வியப்பேதுமில்லை. சில கதைகள் எழுதிய சமயத்தில் நன்றாக வந்துள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். காலம் கடந்து மறுவாசிப்பு செய்யும் போதே சில தவறுகள் பிடிபடும். அது யதார்த்தத்தில் மிகச் சாதாரண விஷயம் தான். நான் ஏற்கனவே சொன்னது போல் என் ஒவ்வொரு கதையும் ஒரு முயற்சிதான். அது பாராட்டப்படும் போதும் சரி, விமர்சிக்கப்படும் போதும் சரி, அதிலிருந்து எதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அதேபோல் பதிலடி தொகுப்பில் அதன் தலைப்புக் கதையான பதிலடி கதையை எழுதியிருக்க வேண்டாமோ என்று இப்போது தோன்றுகிறது.

புறாக்கூண்டு போன்ற சிறுகதையின் வழியாக நடுத்தர வர்க்கத்தின் முக்கியமாகப் பெண்களின் அகம் மற்றும் புறச் சிக்கல்களைச் சொல்கிறீர்கள்? இருந்தாலும் உங்கள் படைப்புகளில் பெண் கதாபாத்திரங்களின் பங்களிப்பு சற்று குறைவாக உள்ளதாகவே நினைக்கிறேன். (நிச்சயம் பெண் கதாபாத்திரங்களை வைத்து நீங்கள் எழுதியுள்ள கதைகள் முக்கியமானவை).

அதற்கு முக்கியமான காரணம் என் வாழ்க்கையில் பெண்கள் மிகக்குறைவு. என்னோடு அதிக நெருக்கமாக இருக்கும் பெண்கள் என்றால் அது என் மனைவியும், மகளும் தான். என் அம்மாவோடு எனக்குப் பெரிதாக ஒட்டுதல் கிடையாது. என் அம்மாவால் உண்டான குடும்ப சச்சரவுகளின் காரணமாக எனக்கு உறவினர்களிடம் கூட பெரிய ஒட்டுதல் இல்லை. என்னுடைய சமீபத்திய “உடல்” சிறுகதைத் தொகுப்பில் உள்ள “அம்மா இன்னும் சாகவில்லை” என்ற கதை சில விமர்சனங்களைச் சந்தித்தது. என் கதைகளில் வரும் பெரும்பாலான பெண்கள் நான் தூரத்திலிருந்து பார்த்தவர்களே. முடிந்தவரை அவர்களை நேர்மையாகவே பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒரு பின் மத்திய பேருந்துப் பயணம் என்கிற சிறுகதை அந்தத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகளில் உச்சமான சிறுகதை என்று நினைக்கிறேன். இது ஏதேனும் உண்மையான சம்பவமா அல்லது கேள்விப்பட்ட சம்பவத்தை எழுதினீர்களா?

அது விகடனில் வந்தபோது பலரால் பாராட்டப்பட்டது. எனக்குக் கூட மிகப்பிடித்த கதை. அந்தக் கதைக்கான கருவை ஒரு செய்தித்தாளிலிருந்து கண்டடைந்தேன். அதிலிருந்து நானாகப் புனைந்தது தான் இந்தக்கதை. இப்படி செய்திகளிலிருந்து சிலகதைகள் எழுதியுள்ளேன். அதில் இந்தக் கதை நன்றாக வந்திருந்தது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்து அல்லது நவீன கார்ப்பரேட் உலகம் சார்ந்து மனிதர்களை மையப்படுத்தி நீங்கள் எழுதும் சிறுகதைகள் சரியான மையத்திற்கு வருகிறது. அதே நேரத்தில் அக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் தன்னை சற்று பரிதாபத்துக்குரியவனாகக் காட்டிக் கொள்ளும் இடங்கள் சற்று நெருடல் தருகிறது. கார்ப்பரேட் உலகில் பொய்கள் மட்டும் நிற்கிறது அதே நேரத்தில் சில உண்மைகளும் இருக்கிறது அதையும் பேசலாம் இல்லையா?

‘எல்லாம் நன்றாக இருக்கிறது. அனைவரும் தினம் தினம் மகிழ்ச்சியாக நாட்களைக் கழித்துவிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினர். மேலாளர் தங்கமானவர். எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பாக வேலை வாங்குவார்’ என்பது மாதிரியான எந்தச் சிக்கலும் இல்லாத, சுவாரஸ்யம் இல்லாத பிரச்சனைகள் இல்லாத ஒன்றை என்ன காரணத்திற்காக எழுத வேண்டும். உண்மையில் கதைகள் சிறியது முதல் பெரியதுவரை எதாவது ஒரு சிக்கலை அல்லது பிரச்சனையைத் தான் பேசுகிறது. ஏன், எதற்கு, எப்படி யாரால் என்ற முடிச்சுகளைப் போட்டு அவிழ்ப்பதே ஒரு கதைசொல்லியின் பிரதான நோக்கம். அவன் அதை எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நோக்கம் அதுதான். என் கதைகளில் பரிதாபத்துக்குரியவனாக ஒருவன் வருகிறான் என்றால் அவன் ஏதோ ஒரு வகையில் என் ஆழ்மன பிரதிபலிப்பாக இருக்கலாம். ஒருவேளை நான் வளர்ந்த விதமும் வாழும் சூழலும் வேறு மாதிரியாக இருந்திருந்தால் என் கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்கள் அதையொட்டி இருக்கும். இருபெரும் ஆளுமைகளாக டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயெவ்ஸ்கி இவரின் வாழ்க்கையையும் அவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ‘ரஸ்கோல் நிகோவ்’ தஸ்தயெவ்ஸ்கியின் ஆழ்மனமென்றால் ‘நெஹ்லூதவ்’ கதாபாத்திரத்தில் டால்ஸ்டாயின் ஆழ்மனம் நிச்சயம் செயல்பட்டிருக்கும்.

நீங்கள் எழுதும் சிறுகதைகளின் வடிவம் எனக்குப் பிடித்துள்ளது. கச்சிதமான வடிவம் ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறீர்கள். அதிகபட்சமாக ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குள் (சற்று வேகமாக வாசிக்கும் நபர்களுக்கு) வாசித்துவிட முடிகிறது. இந்த வடிவத்தை எப்படி அமைத்துக் கொண்டீர்கள்.

அது திட்டமிட்டுச் செய்துகொண்டதல்ல. இயல்பாகவே அமைந்தது. கதைக்குத் தேவையானதை மட்டும் சொன்னால் போதுமென்ற என் தீர்மானமாகக் கூட இருக்கலாம். கதைக்கும் அதன் சூழலுக்கு தேவையற்றதை நான் எப்போதும் வைப்பதில்லை.

சிறுகதையின் முடிவு அதிர்ச்சியாக அல்லது முடிவில்லாத இடத்திற்குப் போக வேண்டும் என்கிற விதி தொடர்ந்து பின்பற்றப்படுவது ஏன்?

நீங்கள் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு இதற்கும் ஒரே பதில் சொல்லலாமென்று நினைக்கிறேன். எனக்கான ஒரு பாணி அல்லது என் வழி. இது புதிதான ஒன்றல்ல தான். ஏற்கனவே பலர் துவங்கி வைத்ததுதான். இருந்தாலும் அது எனக்குப் பிடித்திருக்கிறது. அதை எனக்கான ஒரு பாணியாக வைத்துக்கொண்டேன். கடைசி நேர அதிர்ச்சி பல சமயங்களில் சுவாரஸ்யத்தைக் கூட்டுமென்று நம்புகிறேன். சிலர் இதை வெகுஜன பாணி என்பார்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

பாரிஸ் நாவலின் மையம் சரியான தேர்வு என்று நினைக்கிறேன்? புதுவையின் சமகால வாழ்வியல் மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட நாவல் ஒன்றை எழுதிட வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?

பொதுவாகவே தமிழில் சமகாலத்தைப் பேசும் நாவல்கள் மிகக்குறைவு. அதுவும் உலகமயமாக்கலுக்குப் பிறகான சமூக மாற்றத்தை தமிழ் இலக்கியம் வெகு அரிதாகவே பதிவு செய்திருக்கிறது. அது சிறுகதைகளிலும் சரி நாவலிலும் சரி. பாரிஸ் நாவலின் மையம் என் சிறுவயதிலிருந்து என்னைச் சுற்றியே நிகழ்ந்துகொண்டிருந்த ஒன்று. அது பலநாட்களாக வெவ்வேறு விதங்களில் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் அது ஒரு நீண்டகால சிக்கல். அந்த நாவல் வெளிவந்தபோது பலருக்கு அது ஆச்சர்யத்தையளித்தது. நான் முதல் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதி முடித்ததுமே இந்த நாவல் எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனால், அதன் வடிவம் எனக்குக் கைவரவில்லை. இரண்டு மூன்றுமுறை முயன்று பிறகு கைவிட்டு கடைசியாகத்தான் இந்த வடிவத்தை அது அடைந்தது. மேலும் இதில் மையக் கதாபாத்திரமானது எனக்கு மிக நெருக்கமான ஒன்று. அதற்கே இந்த நாவலையும் சமர்ப்பித்துள்ளேன். என் நெருங்கிய நண்பனின் மரணம் இந்த நாவலை எழுதத் தூண்டியது.  பாரிஸ் நாவலில் அவன் மரணத்தைப் பற்றி நான் எழுதவில்லை. அந்நாவலில் தொடர்ச்சியான “மாகே கஃபே”வில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளேன். ஆனால், அந்நாவல் புதுச்சேரியின் வேறு ஒரு சிக்கலைப் பேசும்.

பாரிஸ் நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களது கனவு காணும் வாழ்க்கையை தங்களது உண்மையான யதார்த்தமான வாழ்வில் இழக்கிறார்கள்? அசோக், கிரிஸ்டோ, பிஜேஷ், ராஃபி, நம் சமூகத்தில் அன்றாடம் நாம் எதிரில் கடந்து வரும் மனிதர்கள் தான். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எதுவாக இருக்கும். ஏன் என்கிற காரணத்தையும் சொன்னால் சரியாக இருக்கும்.?

தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிஸ்டோவே பிடித்த கதாபாத்திரம். நாவலில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அனைவருக்கும் உள்ளுக்குள் ஏதோ ஒரு நோக்கமும் தடுமாற்றமும் கொண்டிருப்பவர்கள். அசோக், ரஃபி இருவருக்கு பிரான்ஸ் தான் முக்கியம். ஜென்னியும் கிரிஸ்டோவும் தான் அன்பிற்கும் காதலுக்கும் ஏங்குபவர்கள். ஆனால், அதிலும் கூட கிரிஸ்டோ இறுதிவரை நிற்கிறவனாக இருக்கிறான். கிரிஸ்டோவின் உறுதியே பிஜேஷை இருக்க வைக்கிறது. இல்லையென்றால் அவன் எப்போதோ அழுதுகொண்டு ஓடியிருப்பான். கிரிஸ்டோவிற்கு வாய்ப்புகள் இருந்தும் அவன் அதை நோக்கி ஓடவில்லை. மேலும் அதில் நான் சொல்ல வந்த விஷயம் உண்மையான காதலுக்குப் பாலின பாகுபாடெல்லாம் இல்லை என்பது தான்.

 பாரிஸ் நாவலில் சொல்லப்படும் நேஷனாலிட்டி திருமணங்கள் மற்றும் கலாச்சார அதிர்வுகள் தற்போதும் புதுவையில் நடக்கிறதா?

கடந்த பத்து ஆண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறது. பிரான்ஸில் சில சட்டதிட்டங்கள் மாறிவிட்டன. பிரான்ஸின் பொருளாதார நிலைமையும் அதற்கு ஒருகாரணம். முன்பு இருந்த அளவிற்கு இல்லை என்று நிச்சயமாகத் தெரியும். ஆனால், முழுவதுமாக இல்லையென்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. முன்பு இருந்த வழிமுறைகள் மாறியிருக்கலாம். இன்னும் அந்தக் கனவும், இதுதான் வழியென்ற நினைப்பும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் இப்போது பிரான்ஸ் போகும் ஒருவனால் தான் நன்றாக சம்பாதிக்க முடியும், சொத்து சேர்க்க முடியுமென்ற நிலை மாறிவிட்டது. ஆனால், புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு ஓரளவிற்கு மேல் அங்கு வாய்ப்பு இல்லை என்பதும் உண்மைதான். அவர்கள் அடுத்த கட்டத்தை அடைய இப்போது புதுச்சேரியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் இருக்கிறது. அது முழுவதும் வேறு ஒரு சிக்கல்.

 நாவல் மட்டுமல்ல உங்களின் சிறுகதைகளில் கூட சமூகத்தை வேடிக்கை பார்க்கும் மனிதன் ஒருவனின் குரல் தான் வருகிறது. எங்கும் அரிசங்கர் என்கிற எழுத்தாளர் வந்து தத்துவார்த்தமான உரைகளை அல்லது வாழ்க்கையின் மேம்பாடுகளுக்கான உரையாடல்களையும் நிகழ்த்தவில்லை. இது எனக்குப் பிடித்திருக்கிறது. இருந்தாலும் நடுநடுவே எழுத்தாளரின் குரல் உயரும் இடங்களும் ஒரு வாசகனுக்குத் தேவையில்லையா?

அது தேவையா இல்லையா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அது அவரவர் விருப்பம் சார்ந்தது. நான் சொல்ல விரும்புவதைத்தான் என் கதாபாத்திரங்கள் மூலம் சொல்கிறது. அதிலிருந்து விலகி தனியாகச் சென்று தத்துவம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எழுதப்படும் படைப்புகளை வாசிக்கும்போது எனக்கே ஏற்புடையதாக இல்லாதபோது நான் எப்படி அதைச் செய்ய முடியும். நான் என் கதைகளில் மறைந்திருக்கவே விரும்புகிறேன்.

புதுச்சேரி போன்ற பகுதியைப் பின்னணியாகக் கொண்டு ஒரு சில பெரிய நாவல்கள் மட்டும் வந்துள்ளது (பிரபஞ்சனும், பாவண்ணனும் எழுதியுள்ளார்கள் என்று நினைக்கிறேன்) அதன் பெரிய வரலாற்றையும், கலாச்சார முரண்பாடுகளை, அங்கிருக்கும் வாழ்க்கைப்பாடுகளையும் கொண்டு பெரிய நாவல் ஒன்றை எழுதும் திட்டம் எதாவது மனதிலிருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. குறைந்தது மூன்று நாவல்களாவது எழுத வேண்டுமென்ற எண்ணம் உள்ளது. அதற்கான தகவல்கள் திரட்டும் பணியில் இருக்கிறேன். நிச்சயம் அது புதுச்சேரியின் வரலாற்றை, கலாச்சாரத்தை புதிய கோணத்தில் காட்டும். உண்மையில் புதுச்சேரியைப் பற்றிச் சொல்வதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.

உண்மைகள், பொய்கள், கற்பனைகள் முற்றிலும் வித்தியாசமான முயற்சியாக வந்துள்ளது. வழக்கமாகச் சொல்லப்படும் நாவலின் கட்டுக்கோப்பை இது உடைத்துள்ளது. இதற்கு எப்படிப்பட்ட கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் கிடைத்தது?

அந்த நாவலுக்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதன் கருத்துகளில் ஒருசாராருக்கு உடன்பாடில்லை. அது சாதி மற்றும் மத ரீதியாக இயங்குபவர்களைச் சற்று சீண்டியிருக்கிறது என்பதை உணர்கிறேன். அதற்காக அந்த நாவலில் எந்த குறையும் இல்லை என்று சொல்ல வரவில்லை. நியாயமான முறையில் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். சமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் வெளிவந்த கட்டுரையில் பயன்படுத்திய வார்த்தைகளில் அதை உணர முடிந்தது. ஒருவகையில் அது எனக்கு உத்வேகத்தையே அளித்தது. சமீபத்தில் பேசிய எழுத்தாளர் ஒருவர்,

‘சமகாலத்தில் எழுதுபவர்களில் சுய சாதி பெருமிதமோ அல்லது மதப் பற்றோ இல்லாத வெகு சிலரில் நீயும் ஒருவன்’

என்று குறிப்பிட்டார். உண்மையில் அது எனக்குப் பெருமிதமாக இருந்தது. நானும் அவ்வாறே இருக்க விரும்புகிறேன். உள்ளுக்குள் ஒரு பூனைக்குட்டியை ஒளித்து வைத்துக்கொண்டு நல்லவன் வேஷம் போட நான் விரும்பவில்லை.

அதேபோல் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலுக்கு சில நல்ல விமர்சனங்களும் வந்தது. கூட்டங்கள் நடந்தது. அதையும் மறுப்பதற்கில்லை. அந்த நாவலை எழுதியதில் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.

 உங்களின் பெரும்பாலான படைப்புகளில் வரும் மனிதர்கள் ஏன் வாழ்க்கையின் நேர்மறையான பாதையிலிருந்து விலகி அதற்கு நேரெதிரான இருட்டான பாதைக்குப் பயணம் செய்கிறார்கள்?

அதுதான் வாழ்க்கையின் யதார்த்தமென நான் நினைக்கிறேன். பெரும்பாலான மனிதர்கள் தங்களையும் அறியாமல் அதைத்தான் செய்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளுக்கு அதுவே காரணமாக அமைகிறது. அதுவே அவர்களை வீழ்த்துகிறது. இருட்டில் கிடைக்கும் சிறிது வெளிச்சம் சூரியனைவிடப் பிரகாசமானது என்று நான் நம்புகிறேன். அது இன்னும் நிறைய நமக்குத் தெரியப்படுத்தும். கற்றுக்கொடுக்கும்.

வாழ்க்கை, குடும்பம், இலக்கியம் இவற்றிற்கிடையே ஓடிக் கொண்டிருக்கும்  பயணம் எப்படி இருக்கிறது. தனிப்பட்ட அழுத்தங்களை மீறி எழுத்து வேலைகளைத் தொடர்வது எவ்வளவு சவால்கள் நிறைந்த பணியாக இருக்கிறது.

வேலை காரணமாக தற்போது மனைவி, மகளுடன் சென்னையில் வசிக்கிறேன். மனைவியும் இலக்கிய ஆர்வமுடையவர் என்பதால் வாசிப்பு மற்றும் எழுதுவதற்காக நேரம் செலவழிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், எனக்கென சில தனிப்பட்ட அழுத்தங்கள் நிச்சயம் உண்டு. அது பெரும்பாலும் எனது வேலை சார்ந்ததாகவே உள்ளது. உடன் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் இலக்கியவாதிகள் என்றால் சற்றே இளக்காரமாகவே பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மேலாளர் ஒருவர், “இவனுக்குப் படிப்பதிலும் எழுதுவதிலும் தான் ஆர்வம் இருக்கிறது. வேலை செய்வதில் இல்லை, இவனுக்கு பிரமோஷன் தரவேண்டியதில்லை’ என நேரடியாக என்னைப் பற்றி தனது குறிப்பாகக் கொடுத்திருக்கிறார். அதற்குத் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டேன். அதற்கு மறைமுகமாக எனது முகநூல் கணக்கு அவர்களால் வேவுபார்க்கப்பட்டது. அப்போது உண்மையில் மிகுந்த அருவருப்பாக உணர்ந்தேன். அதன் பிறகு எனது எழுத்து செயல்பாட்டை முழுவதுமாக அவர்களிடமிருந்து மறைக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது. அது உருவாக்கிய கொந்தளிப்பான மனநிலையைச் சமாளிக்க மிகுந்த சிரமப்பட்டேன். அந்த நேரத்தில் கொரோனா வந்து கொஞ்சம் காப்பாற்றியது. எல்லா பணியிடமும் இவ்வாறு தான் எனக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆனால், எனக்கு இவ்வாறே நடந்தது. அந்த நேர அழுத்தத்தின்போது எழுதப்பட்ட நாவல் தான் “உண்மைகள் பொய்கள் கற்பனைகள்”.

இந்த இலக்கிய பயணத்தில் பெரிய கனவுகள் என்று ஏதேனும் இருக்கிறதா? வழக்கமான கேள்வி தான் அடுத்த திட்டங்கள் என்னென்ன?

சில ஆண்டுகளுக்கு முன்பாக சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது புதுச்சேரியைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது ஒரு இளம் எழுத்தாளர் “புதுச்சேரியில் என்ன இருக்கிறது, சரக்குதான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். நான் அதற்கு எதிராகக் கடுமையாக வாதிட்டேன். அது இன்றுவரை எனக்குள் தணியாத ஒன்றாகவே இருக்கிறது. தமிழகத்தின் மற்ற ஊர்களை விட புதுச்சேரிக்கென்று தனித்த வரலாறும் கலாச்சாரமும் உண்டு. அது சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளது. மேலும் புதுச்சேரியைப் பற்றிய இன்னும் சில கதைகள் எழுத வேண்டும். ஏற்கனவே சொன்னதுபோல் மூன்று பெரிய நாவல்கள் எழுதவேண்டும். அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டேன். எப்போது முடியுமென்று தெரியவில்லை. அதை மட்டும் முடித்தால் போதுமென்றிருக்கிறேன்.

நேர்கண்டவர்: க.விக்னேஸ்வரன்

https://www.commonfolks.in/books/harisankar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.