கலாமோகன் கவிதைகள்

ஏன் தவம்? 

னி நான் தவங்கள்
செய்யப்போவதில்லை
எமது யுகங்கள் அனைத்திலும்
தூசிகள்தாம் வீடுகளை
மூடும்போது… ஏன்
தவம் செய்ய வேண்டும்?
இனி என்னிடம்
காடுகளிற்குப்
போகும் எண்ணங்களும் இல்லை…
கருகிய மலர்களுடன் உள்ள
மரங்களைக் காணவா?
மரணித்த மிருகங்கள்
மேல் நடக்கவா?
குடிசைகளை நோக்கி
நான் விரைந்தேன்
அவைகள் எரிந்து தூள்களாகி…
எனது கண்ணீர்கள் மட்டும்
பல முகங்களைக் காட்டி
விழித்தபடி… இரங்கியபடி…
நான் கடல்களை நோக்கிச் சென்றேன்
ஓடங்கள் அங்கே
தற்கொலைகளைச் செய்தபடி.
அனைத்து மீன்களும்

நண்டுகளும் இறால்களும்
ஆமைகளும்
கரைகளும் துடித்தபடி…
அப்போது எனக்கு நண்டுக்குப் பயம்.
அனைத்தும் துடித்தபடி
ஓர் நண்டைத் தூக்கினேன்
நான் அதனது துடிப்பை விழுங்கினேன்.
அனைத்துத் தியான விருப்புகளையும்
கருகச்செய்து
கரையில் நான் ஓர்
சாகும் நண்டானேன்.

அகதி 

மீண்டும் மீண்டும்
பசியின் கத்தல்களே
வயல்களில் வீழ்ந்தபடி
அனைத்துப் புல்களும்
சரிந்தபடி, இரங்கியபடி
அகதிகளாகக் கத்தியபடி…
வீதிகளில் புயல்கள்
தமது குரூரமான நடனங்களை
நடத்தியப்படி…
அலைகள் கரைகளைத்  தேடி
ஓடியபடி
அங்கு வந்து தஞ்சமடையத்
துடித்தபடி

அகதி! அகதி!
அது மனிதன் மட்டுமா?
“இல்லை,
எம்மைச் சூழ்பவைகளும்,
எமக்கு அருகில் இருப்பவைகளும்
நாம் பார்ப்பவைகளும்…”
வண்டியில்லாத ஓர் கிழவன்
இவைகளைச் சொல்லித்தான்
சாம்பல் வீதியில் நடக்கின்றான்.
அப்போது
எமது மழைகளும்
தமது பலங்களை இழந்து
உலகின் அனைத்து வீதிகளிலும்
விழுகின்றன…
ஓர் நொண்டிக் கிழவி
“அதிகாரமே அழிய…” என்று
கத்தியபடி நிலத்தில் வீழ்ந்தாள்.

கோலம் 

நான் அப்போது
கோலங்களைக் காணவில்லை
அவைகளை நிலத்தில்
நிறுத்தும்  பெண்களைத்தான் கண்டேன்
சில கணங்களின் பின்
அவள்கள் என்முன் மறைந்தனர்
நான் அவள்களைத்
தேடிச்  சென்றேன்

பல கோலங்களோடு
தூரத்தில் கண்டேன்
ஓர் கோலத்தில்
ஒருத்தி
ஓர் மலரை
முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்
இரண்டாவது கோலத்தில்
ஒருத்தி
தனது குலைந்த கூந்தலைப்
பின்னிக்கொண்டிருந்தாள்
மூன்றாவது கோலத்தில்
ஒருத்தி
தனது ஆச்சிக்குப் பழஞ்சோறு
தீத்திக் கொண்டிருந்தாள்
நான்காவது கோலத்தில்
ஒருத்தி
அலைகள்மீது
எழுதிக்கொண்டிருந்தாள்
ஐந்தாவது கோலத்தில்
ஒருத்தி இல்லை
அந்தக் கோலத்தைக்
கவனமாக எடுத்துவந்து
என் அன்னைக்கு வழங்கினேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.