முட்டாளின் சொர்க்கம்

ரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர் ஒருவரின் ஆதரவற்ற மகள் வளர்ந்தாள். அவள் பெயர் அஃஸா. அட்ஸெல் உயரமான பையன். கருமையான தலைமுடியும் கருநிறமான விழிகளையும் கொண்டவன். அஃஸா அட்ஸெலை விட உயரம் குறைந்தவள். பொன்னிற முடியும் நீலநிறமான விழிகளையும் கொண்டவள். அவர்கள் இருவரும் சம வயதினர். அவர்கள் குழந்தைகளாக ஒன்றாக சாப்பிட்டார்கள், ஒன்றாக படித்தார்கள், ஒன்றாக விளையாடினார்கள். அட்ஸெல் கணவனாகவும் அஃஸா மனைவியாகவும் விளையாடினார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்தவுடன் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது என்பது கேள்வியே இல்லாமல் முடிவாயிற்று.

அவர்கள் வளர்ந்த போது திடீரென்று அட்ஸெல்லுக்கு ஒரு நோய் வந்தது. அப்படி ஒரு நோய் உண்டு என்று யாரும் கேள்விப்பட்டது கூட இல்லை. அட்ஸெல் தான் இறந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டான்.

அவனுக்கு எப்படி அந்த எண்ணம் வந்திருக்கும்? அந்த எண்ணம் சொர்க்கம் பற்றிய கதைகளை கேட்டதில் இருந்து வந்திருக்கலாம். அட்ஸெல்லை பராமரிக்க முதிய செவிலி ஒருத்தி இருந்தாள். அவள் அடிக்கடி சொர்க்கம் பற்றிய கதைகளை சொல்வாள். சொர்க்கத்தில் ஒருவர் வேலை செய்யவோ, படிக்கவோ அல்லது வேறு முயற்சிகள் செய்யவோ அவசியமில்லை என்று சொல்வாள். சொர்க்கத்தில் காட்டெருமையின் இறைச்சியும் திமிங்கலத்தின் இறைச்சியும் சாப்பிடலாம். கடவுள் உருவாக்கிய வைன் மதுவை அருந்தி மகிழலாம். பகல் நேரத்தில் தூங்கலாம். எந்த வேலையும் கிடையாது.

அட்ஸெல் இயல்பிலேயே சோம்பேறி. அவன் விடிகாலையில் எழுந்து மொழிப்பாடமும் அறிவியல் பாடமும் படிப்பதை வெறுத்தான். ஒருநாள் அவனது அப்பாவின் வியாபாரத்தை தான் செய்ய வேண்டும் என அறிந்திருந்தான். அவனுக்கு அது பிடிக்கவில்லை.

அட்ஸெல்லின் முதிய செவிலி சொர்க்கத்திற்கு போவதற்கான ஒரே வழி இறப்பது என்று கூறியிருந்தாள். அட்ஸெல் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக இறந்து விடுவதாக முடிவு செய்தான். அது பற்றி அதிகமாக சிந்தித்தவாறு இருந்தான். விரைவிலேயே தான் இறந்து போய்விட்டதாக கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்து விட்டான்.

அட்ஸெல்லின் நடத்தையில் மாற்றத்தைக் கண்டவுடன் அவனது பெற்றோர்கள் பெரும் கவலைக்கு உள்ளானார்கள். அஃஸா ரகசியமாக அழுதாள். அட்ஸெல் உயிருடன் தான் இருக்கிறான் என்பதை நம்ப வைக்க அவனது குடும்பம் எல்லா வகையிலும் முயற்சி செய்தது. அட்ஸெல் அவற்றை நம்ப மறுத்தான். “என்னை ஏன் புதைக்கவில்லை? பாருங்கள்! நான் செத்துவிட்டேன். உங்களால் தான் என்னால் சொர்க்கத்திற்கு போகமுடியவில்லை“ என்று கூறினான்.

அட்ஸெல்லை பரிசோதிக்க பல மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எல்லோரும் அட்ஸெல் உயிருடன் தான் இருக்கிறான் என்று அவனை நம்ப வைக்க முயன்றனர். அவன் பேசுவதையும் சாப்பிடுவதையும் தூங்குவதையும் குறிப்பிட்டு காட்டினர். ஆனால் அதற்கு வெகு முன்னரே அட்ஸெல் சாப்பாட்டை குறைத்து கொண்டான். எப்போதாவது மட்டுமே பேசினான். அவன் இறந்து போய் விடுவானோ என்று பயந்தார்கள்.

இந்த நிலையில் கதீஷ் அறிவும் ஞானமும் கொண்ட மிக சிறந்த மருத்துவர் ஒருவரை சந்திக்கச் சென்றார். அவரது பெயர் டாக்டர். யோட்ஸ். அவர் அட்ஸெல்லின் நோய் குறித்து நன்றாக விசாரித்து கொண்டார். பின்னர் கதீஷிடம் “உங்கள் மகனை எட்டு நாளில் குணப்படுத்திவிடுகிறேன். அதற்கு நீங்கள் எனக்கொரு வாக்கு தர வேண்டும். நான் எத்தனை விசித்திரமான செயல்களை செய்யச் சொன்னாலும் மறுக்காமல் செய்ய வேண்டும்” என்றார்.

கதீஷ் டாக்டர். யோட்ஸின் கோரிக்கையை ஏற்று கொண்டார். அன்றைய நாளே அட்ஸெல்லை பார்க்க வருவதாக டாக்டர். யோட்ஸ் சொன்னார். கதீஷ் வீட்டிற்கு வந்து எல்லோரையும் தயார்ப்படுத்தினார். அவர் தன் மனைவி, அஃஸா மற்றும் பிற வேலைக்காரர்கள் எல்லோரிடமும் டாக்டர் சொல்வதை கேள்வி கேட்காமல் பின்பற்றும் படி சொன்னார். அவர்களும் அப்படியே நடந்து கொண்டனர்.

டாக்டர். யோட்ஸ் வீட்டிற்கு வந்தவுடன் அட்ஸெல்லின் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். பையன் கட்டிலில் படுத்திருந்தான். பட்டினி கிடந்ததால் வெளிறியும் மெலிந்தும் காணப்பட்டான். தலைமுடி கலைந்திருந்தது. அவன் அணிந்திருந்த இரவு உடைகள் கசங்கி ஒழுங்கில்லாமல் இருந்தன.

டாக்டர் அட்ஸெல்லை ஒரு பார்வை பார்த்தார். பின்னர் பெற்றோர்களை பார்த்து “பிணத்தை ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்கள்? இறுதிச் சடங்குகளை ஏன் செய்யவில்லை?” என்று கேட்டார்.

இவ்வார்த்தைகளை கேட்டவுடன் பெற்றோர் மிக அதிகமாக பயந்தனர். ஆனால் அட்ஸெல்லின் முகம் புன்னகையில் சுடர்ந்தது. அவன் ”பார்த்தீர்களா, நான் சரியாகத் தான் சொன்னேன்” என்றான்.

டாக்டரின் சொற்களால் கதீஷும் அவரது மனைவியும் மனம் கலங்கினார்கள். எனினும் கதீஷ் டாக்டருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைத்து கொண்டார்கள். சாவு சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

டாக்டர் சொன்னதை கேட்டவுடன் அட்ஸெல் உற்சாகத்தில் மிதந்தான். அவன் தன் படுக்கையில் எழுந்து நின்று தாவி குதித்தான். நடனமாடியும் கைதட்டியும் மகிழ்ந்தான். அவனது சந்தோஷத்தால் பசி எடுக்கவே உணவு வேண்டும் என கேட்டான். டாக்டர். யோட்ஸ் ”கொஞ்சம் காத்திரு, சொர்க்கத்துக்கு போனவுடன் சாப்பிடலாம்” என்றார்.

டாக்டர் அட்ஸெல்லின் அறையை சொர்க்கத்தை போல அலங்கரிக்குமாறு கேட்டுக் கொண்டார். சுவர் முழுவதும் வெண்பட்டு துணியால் அலங்கரிக்கப் பட்டது. தரை முழுக்க விலைமதிப்பு மிக்க விரிப்புகள் இடப்பட்டன. ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டன. நீண்ட தீரைச்சீலைகள் நேர்த்தியாக தொங்கவிடப்பட்டன. எண்ணெய் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும் இரவுபகலாக எரிந்தன. வேலைகாரர்கள் பின்புறத்தில் தேவதைகளை போல வெண்ணிற சிறகுகள் வைத்து தைத்த ஆடைகளை அணிந்து கொண்டனர்.

அட்ஸெல் மூடப்படாத சவப்பெட்டியில் படுக்க வைக்கப்பட்டான். இறுதி சடங்குகள் நடைபெற்றன. அட்ஸெல் மிகையான மகிழ்ச்சியினால் களைத்து போயிருந்தான். எனவே விரைவில் தூங்கி விட்டான். விழித்தவுடன் தான் இருந்த அறை எதுவென்று அவனுக்கு தெரியவில்லை. “நான் எங்கு இருக்கிறேன்?” என்று கேட்டான்.

சிறகு கொண்ட வேலைக்காரன் “சொர்க்கத்தில் இருக்கிறீர்கள், அரசே” என்றான்.

“எனக்கு மிகவும் பசிக்கிறது. திமிங்கலத்தின் இறைச்சியும் புனித வைன் மதுவும் வேண்டும்” என்று அட்ஸெல் கூறினான்.

“இதோ கொணர்கிறேன், அரசே” என்றபடி வேலைக்காரன் சென்றான்.

தலைமை வேலைக்காரன் இரு கைகளையும் தட்டினான். கதவு திறந்து வேலைக்காரர்களும் பணிப் பெண்களும் வரிசையாக வந்தனர். அவர்கள் எல்லோரும் சிறகுகள் கொண்டிருந்தனர். கைகளில் தங்க தட்டுகளை ஏந்தி இருந்தனர். அத்தட்டுகளில் இறைச்சி, மீன், மாதுளை பழங்கள், பேரிச்சம் பழங்கள், அன்னாசி பழங்கள், பீச் பழங்கள் இருந்தன. வெண்தாடி வைத்த உயரமான வேலைக்காரன் தங்க கோப்பையில் வைன் மதுவை எடுத்து வந்தான். அட்ஸெல் பட்டினியால் வாடிப் போயிருந்தான். உணவை பார்த்தவுடன் ஓநாய் போல ஆவேசமாக சாப்பிட்டான். தேவதைகள் அவனை சுற்றி பறந்தனர். அவன் கேட்பதற்கு முன்னரே தட்டிலும் கோப்பையிலும் உணவையும் மதுவையும் பரிமாறினர்.

அட்ஸெல் சாப்பிட்டு முடித்தவுடன் இளைப்பாற விரும்பினான். இரண்டு தேவதைகள் அவனது உடைகளை களைந்து குளிப்பாட்டினர். பூ வேலைப்பாடுகள் அமைந்த மென்மையான இரவு ஆடைகளை அணிவித்தனர். தூங்குவதற்கு வசதியாக முகத்தை மூடிக்கொள்ளும் குஞ்சலம் வைத்த இரவு தொப்பியை அணிவித்தனர். பின்னர் பட்டுத்துணி விரிக்கப்பட்டு ஊதா நிற வெல்வெட் விதானம் கொண்ட கட்டிலில் அட்ஸெல்லை படுக்க வைத்தனர். படுத்த வேகத்தில் அட்ஸெல் தூங்கி விட்டான். பலநாள்களுக்கு பின் மகிழ்ச்சியாக உறங்கினான்.

அவன் தூங்கி எழுந்த போது காலை நேரம். ஆனால் அது இரவு எப்படி இருந்ததோ அதே போல் இருந்தது. ஜன்னல்கள் மூடியிருந்தன. மெழுகுவர்த்திகளும் எண்ணெய் விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. அட்ஸெல் எழுந்ததை வேலைக்காரர்கள் பார்த்தார்கள். அவனுக்கு முந்தைய நாள் கொடுத்த அதே உணவு வகையை சாப்பிட கொண்டுவந்தனர்.

“எனக்கு நேற்று கொடுத்த உணவையே ஏன் கொடுக்கிறீர்கள்? உங்களிடம் பால், காபி, புதிய ரொட்டி, வெண்ணை என்று வேறு எதுவும் இல்லையா?” என்று அட்ஸெல் விசாரித்தான்.

“இல்லை, அரசே. சொர்க்கத்தில் ஒருவர் எப்போதும் ஒரே உணவை மட்டுமே உண்பார்.” வேலைக்காரன் பதிலளித்தான்.

“இப்போது இரவா? பகலா?” அட்ஸெல் வினவினான்.

“சொர்க்கத்தில் இரவும் இல்லை. பகலும் இல்லை.”

டாக்டர். யோட்ஸ் வேலைக்காரர்களுக்கு கவனமாக அறிவுரைகள் கொடுத்து இருந்தார். அட்ஸெல்லிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று.

அட்ஸெல் மீண்டும் மீன், இறைச்சி, பழங்களை சாப்பிட்டான். வைன் மதுவை குடித்தான். ஆனால் அவனுக்கு உணவின் மேல் முதல் முறை போல் ஆர்வமில்லை. அவன் சாப்பிட்டு முடித்தவுடன் தங்க கிண்ணத்தில் தன் கைகளை கழுவி கொண்டான். “இப்போது என்ன நேரம்?” என்று கேட்டான்.

“சொர்க்கத்தில் காலம் என்பது இல்லை” என்று வேலைக்காரன் சொன்னான். “இப்போது நான் என்ன செய்வது?” என்று அட்ஸெல் கேட்டான். “அரசே, சொர்க்கத்தில் ஒருவர் எதுவும் செய்ய வேண்டாம்.”

“மற்ற புனிதர்கள் எல்லாம் எங்கே? நான் அவர்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று அட்ஸெல் விசாரித்தான்.

“சொர்க்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக இடம் உண்டு.”

“நான் வெளியே சென்று சந்தித்து வரக் கூடாதா?”

“சொர்க்கத்தில் வீடுகள் ஒவ்வொன்றும் வெகு தூரத்தில் தள்ளி தள்ளி இருக்கும். ஒருவர் வீட்டிலிருந்து இன்னொருவர் வீட்டிற்கு செல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.”

“என் குடும்பத்தினர் எப்போது வருவார்கள்?” என்று அட்ஸெல் கேட்டான்.

“உங்கள் அப்பாவிற்கு இருபது ஆண்டுகள் வாழ்க்கை உள்ளது. அம்மாவிற்கு முப்பது ஆண்டுகள். அவர்கள் பூமியில் உயிரோடு வாழும் வரை இங்கே வர முடியாது.”

“அப்படியெனில் அஃஸா?” “அவள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டி இருக்கிறது.” “அதுவரை நான் தனியாகவா இருக்க வேண்டும்?” “ஆம், அரசே.”

சிறிது நேரத்திற்கு அட்ஸெல் தலையை அசைத்தபடி தீவிரமாக சிந்தித்தான். பின்னர் அவன் “அஃஸா இனி என்ன செய்வாள்?” என்று கேட்டான்.

“இப்போதைக்கு அவள் உங்களை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள், அரசே. ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்கும், காலத்திற்கும் ஒருவர் அழ முடியாது. கொஞ்சம் காலம் கழித்தோ அல்லது அதற்கு பின்னரோ அஃஸா உங்களை மறந்துவிடுவாள். இன்னொரு இளைஞனை சந்திப்பாள், திருமணம் செய்து கொள்வாள். அது தான் வாழ்க்கை நடக்கும் முறை.”

அட்ஸெல் கட்டிலில் இருந்து எழுந்து முன்னும் பின்னுமாக நடந்தான். நீண்ட தூக்கமும் நல்ல தரமான உணவும் அவனுக்கு ஊக்கத்தை கொடுத்து இருந்தது. சோம்பேறி அட்ஸெல் தன் வாழ்நாளில் முதல் முறையாக ஏதாவது ஒரு வேலையை செய்ய விரும்பினான். ஆனால் சொர்க்கத்தில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லை.

அட்ஸெல் எட்டு நாட்கள் பொய்யான சொர்க்கத்தில் வாழ்ந்தான். அவன் நாளுக்கு நாள் சோகமாகி கொண்டே சென்றான். அப்பாவை நினைத்து கொண்டான். அம்மாவை விரும்பினான். அஃஸாவை நினைத்து ஏங்கினான். வேலையே இல்லாமல் வெட்டியாக இருப்பது முன்பு போல அவனுக்கு பிடித்ததாக இல்லை. இப்போது அவன் எதையாவது படிக்க விரும்பினான். அவன் நிறைய கனவு கண்டான். பயணம் போவது, குதிரையில் ஏறி ஒடுவது, நண்பர்களுடன் பேசி சிரிப்பது என்று கனவுகள் கண்டான். முதலில் மிக சுவையாக பிரமாதமாக இருந்த உணவு அவனுக்கு சுவையே இல்லாததாக மாறியது.

அவனால் தன் சோகத்தை தாங்கி கொள்ள முடியாத நிலையை அடைந்தான். வேலைக்காரன் ஒருவனிடம் வருத்தப்பட்டான் “இப்போது எனக்கு தெரிகிறது. நான் நினைத்தது போல வாழ்வது ஒன்றும் அவ்வளவு மோசமானது இல்லை.”

“வாழ்வது மிகவும் கடினமானது, அரசே. வாழ்வது என்றால் ஒருவர் படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும். இங்கோ எதுவும் செய்ய வேண்டாம். எல்லாமே சுலபம்.” வேலைக்காரன் ஆறுதல் கூறினான்.

“இப்படி சும்மா இருப்பதற்கு நான் மரம் வெட்டியோ, கல் சுமந்தோ கூட வாழ்ந்து கொள்வேன். இப்படியே எவ்வளவு காலத்தை கழிப்பது?”

“முடிவற்ற காலம் வரைக்கும்.”

“முடிவே இல்லாமல் இப்படி இருப்பதா?” அட்ஸெல் தலையை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தான். “அதைவிட நான் தற்கொலை செய்து கொள்வேன்.”

“இறந்து போன மனிதன் தன்னை தானே கொன்று கொள்ள முடியாது.”

எட்டாவது நாள், அட்ஸெல் ஆழமான அவநம்பிக்கைக்கு உள்ளாகி மனம் தளர்ந்து போயிருந்தான். அப்போது வேலைகாரர்களில் ஒருவன் ஏற்பாடு செய்யப்பட்டான். அவன் அட்ஸெல்லிடம் சென்று “அரசே, ஒரு பிழை நடந்து விட்டது. நீங்கள் இறக்கவில்லை. நீங்கள் உடனடியாக சொர்க்கத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்றான்.

“நான் உயிருடன் இருக்கிறேனா?”

“ஆம், நீங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்கள். நான் உங்களை பூமிக்கே அழைத்துச் செல்ல போகிறேன்.”

அட்ஸெல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். வேலைக்காரன் அவனது கண்களை துணியால் மூடிக் கட்டினான். பின்னர் அவர்கள் வீட்டு நீண்ட முற்றத்தில் அவனை முன்னும் பின்னுமாக நடக்க வைத்தான். கடைசியாக அவனது குடும்பத்தினர் காத்திருந்த அறைக்கு அட்ஸெல்லை அழைத்து வந்தான். கண்கட்டை அவிழ்த்து விட்டான்.

அது ஒரு பிரகாசமான நாள். சூரிய ஒளி சாளரங்கள் வழி உள்ளே வந்தது. சுற்றியிருந்த வயல்களிலும் பழத்தோட்டத்திலும் இருந்து புத்துணர்ச்சி மிக்க இளங்காற்று வீசியது. புறத்தோட்டத்தில் பறவைகள் பாடின. தேனீக்கள் பூக்களின் மேல் மிதந்தபடி ரீங்காரமிட்டன. தொழுவத்தில் பசுக்கள் கத்துவதையும் லாயத்தில் குதிரைகள் கனைப்பதையும் அட்ஸெல் கேட்டான். மகிழ்ச்சி பெருக்கில் தன் பெற்றோர்களையும் அஃஸாவையும் கட்டியணைத்து முத்தமிட்டான். “எனக்கு தெரிந்திருக்கவில்லை, வாழ்வது எத்தனை மகிழ்ச்சிக்குரியது என்று” என்று கூவி ஆனந்த கண்ணீர்விட்டான்.

அஃஸாவிடம் சென்று அவன் கேட்டான் “நான் இல்லாத போது நீ இன்னொரு இளைஞனை சந்திக்கவில்லை தானே? இப்போதும் என்னை காதலிக்கிறாயா?”

“ஆம், நான் உன்னை காதலிக்கிறேன், அட்ஸெல். என்னால் உன்னை மறக்க முடியவில்லை.”

“அப்படியெனில் இதுவே நாம் திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்ற தருணம்.”

அவர்களின் திருமணம் மிக விரைவிலேயே நடந்தது. டாக்டர். யோட்ஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இசைக்கலைஞர்கள் வந்திருந்து வாத்தியம் இசைத்தனர். தொலைதூர நகரங்களில் இருந்து எல்லாம் விருந்தினர்கள் வந்தனர். சிலர் குதிரையில் வந்தனர். சிலர் கோவேறு கழுதையில் வந்தனர். இன்னும் சிலர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்தும் வந்தனர். எல்லோருமே மணமக்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளை கொண்டு வந்திருந்தனர். அவை தங்கமும் வெள்ளியும் யானை தந்தமும் விலைமதிப்பு மிக்க ரத்தின கற்களுமாய் இருந்தன. அந்த திருமண கொண்டாட்டம் ஏழு இரவுகளும் ஏழு பகல்களும் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் நினைவில் மறக்க முடியாத மகிழ்வூட்டும் நிகழ்வாக அட்ஸெலின் திருமணம் இடம்பெற்றது. அட்ஸெல்லும் அஃஸாவும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அவர்கள் இருவரும் முதுமை வரை வாழ்ந்தார்கள். அட்ஸெல் தன் சோம்பேறித்தனத்தை விட்டு ஒழித்தான். அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிக தேர்ந்த வியாபாரியாக உருமாறினான். அவனது வணிக வண்டிகள் பாக்தாத், இந்தியா என்று தொலைதூர நாடுகள் வரை சென்று வந்தன.

அட்ஸெல் திருமணம் முடிந்த பின்னர்தான் டாக்டர். யோட்ஸ் அவனை எப்படி குணப்படுத்தினார் என்பதை அறிந்தான். அவன் முட்டாளின் சொர்க்கத்தில் வாழ்ந்தான் என்பதையும். திருமணத்திற்கு பின் ஆரம்ப நாட்களில் அவன் அடிக்கடி அஃஸாவிடம் தன் பயண சாகங்சங்களை சொல்வான். வயதான பின் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் டாக்டர். யோட்ஸின் வியப்பூட்டும் அற்புத தீர்வை கதையாக சொல்வார்கள். எப்போதும் “ஆனால் சொர்க்கம் உண்மையில் எப்படி இருக்குமென்று யாருமே சொல்ல முடியாது” என்ற வார்த்தைகளுடனேயே கதையை முடிப்பர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.