மக்மல்பஃப் மே 29, 1957 அன்று தெஹ்ரானில் பிறந்தார். 15 வயதில், ஈரானின் ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஒரு போராளிக் குழுவில் ஈடுபட்டார். 17 வயதில், ஒரு காவலரைக் குத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, ஈரானில் நடந்த புரட்சியால், அவர் 1970 இல் விடுவிக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் திரைப்படம் எடுத்தவர், ஆதாமின் பிள்ளைகள்; ஏவாளின் பெற்றோர்கள், நாடோடித் திரைக் கலைஞர் என்ற பொருண்மையில், ஹமீத் தபாஸி, மோஷென் மக்மல்பஃபுடன் மேற்கொண்ட உரையாடல்கள் தான் இத்தொகுப்பு. மூன்று அத்தியாயங்களாக இப் புத்தகம் அமைந்துள்ளது.
மே 28, 1957 இல் பிறந்த மோஷன் மக்மல்பஃப் வாழ்க்கை இதுவரையில், ஈரானின் நவீன வரலாற்றில் சுமார் ஐந்து சதாப்தங்களைக் கொண்டுள்ளதாகச் சித்தரிக்கப்படுகிறது. அவர் தாய் வழியில் டெஹ்ரானியன்; தந்தை வழியில் கஷானி. தந்தைவழி தாத்தா ரொட்டி வியாபாரி. அவருடைய தாய் வழியில், அவருடைய பாட்டி, டெஹ்ரானில் கல்லறைத் தோண்டுபவரின் மனைவி. மக்மல்பஃப்பின் தாய்க்கு மூன்று திருமணங்கள் நிகழ்கின்றன; தன் தாய்க்குத் திருமணமாகி ஆறு நாட்களுக்கு மட்டுமே வாழ்ந்த, முதல் கணவருக்குப் பிறந்தவர்தான் மோஷன். இவரின் 12 வயதில், அவருடைய அம்மா, 27 / 28 வயது உள்ள ஒரு குடும்ப நபரை மணந்து, நான்காண்டுகளுக்குப் பிறகு பிரிந்து விடுகிறார்கள்.
இவரின் தாய்க்கும் முதல் கணவருக்குமான சண்டை வலுத்து, தாயின் செவிலியர் பணி முடிவுக்கு வருகிறது. மோஷனின் பிறப்புச் சான்றிதழ் பெற அவருடைய தந்தை மறுத்து விட்டதே காரணம். அவருடைய தாய், முதல் கணவர் மீது வழக்குத் தொடுக்கிறார்; வழக்கின் போது கைதாகிக் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட முதல் தந்தை, மோஷனை ஆள் வைத்துக் கடத்த எத்தனிக்கிறார். அப்போது மோஷனுக்கு 5 வயது. மிக தடினமாக இருந்த முதல் தந்தையின் மீதான பயம், மோஷனுக்கு எப்போதும் உண்டு.
வழக்கில் உதவிய நபரை, மோஷனின் அம்மா, மூன்றாவது திருமணம் செய்து கொள்கிறார். மூன்றாவது கணவர், மதவாதியும் அரசியல்வாதியுமான கோமெய்னியின் ஆதரவாளர். புரட்சிக்குப் பின், கோமெய்னியை அவர் ஏற்கவில்லை.இதனால் பாட்டியின் வீட்டில் மோஷன், இரண்டு ஆண்டுகள் வெளியே வராமல் இருக்கிறார். அந்த வீட்டில் இருந்த ஆசிரியரான அத்தை அவருக்கு வாசிக்கவும் எழுதவும் கற்றுத் தருகிறார். ஆறாம் வகுப்பில் நுழையும் முன்பு துப்பறியும் கதைகளை மோஷன் வாசித்தவர்.
மோஷன் கூடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகனிடம், நாளொன்றுக்கு வாடகைக்குப் புத்தகங்கள் பெற்று வாசித்தார். “தோக்தரன் பெஸாரண், கீஹான் பச்சேஹா மற்றும் அமிர் அஸிரி, காஸி ஸோயித்… அதுபோன்ற புத்தகங்கள்தான்.” என்று நினைவு கூறுகிறார்.
மோஷனுக்குப் பாட்டியின் மூலமாக மதம் அறிமுகம் ஆகிறது: அத்தையின் மூலமாக எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறார்; வளர்ப்புத் தந்தையான கமாலியன் மூலமாக அரசியல் அறிகிறார்: அவருடைய பண்புநலன், அவர் வாழ்வின் முதல் மூன்று தசாப்தங்களில், அம்மூவரால் வார்த்தெடுக்கப்பட்டது. அவருடைய வாழ்வின் பிந்தைய நிகழ்வுகள் எல்லாம் இந்த உறவு நிலைகளின் விளைவுகளே.
“நான் சிறை சென்றது, எனது அரசியல் சித்தாந்த கட்டமைப்பு எல்லாம் என் வளர்ப்புத் தந்தையிடம் வேர் கொண்டவை. நான் மதவாதியாக இருந்திருந்தால் அதன் வேர்களை என் பாட்டியிடம் தடயம் காண முடியும். என் பாட்டி சுவாரஸ்யமான நபர். நம்ப முடியாதபடி அன்பானவர். என் வாழ்வின் மாபெரும் நேசம் என் பாட்டியினுடையது தான் என்றெண்ணுகிறேன். ஏனெனில் எனது அப்பா என்னைக் கடத்தி விடுவார் என்று நான் மிகவும் பயந்தபோது, ஒரு பைத்திய நிலையில் நான் மாட்டியிருந்தபோது, அவளருகே தூங்கும்போது, பிரபஞ்சத்தில் வேறெங்கையும் விடப் பத்திரமாக இருந்ததாக உணர்ந்தேன் இரவில் அவள் சொன்ன கதைகள், தூங்குவதற்கு முன்னான கதைகளெல்லாம் தீர்க்கதரிசிகளைப் பற்றியவை.
இத்தகைய சந்தர்ப்பங்களில், தீர்க்கதரிசிகளின் கதைகள், உலகத்திற்கே புலப்படாதவனாக நானிருந்த. அமைதியைத் தந்தன. அவரது கதைகளில் அவரும் கடவுளும் ஒன்று கலந்து விட்டதான அளவுக்குப் பாட்டி அன்பாயிருந்தார். கடவுளைப் பற்றி நான் எண்ணுகையில், இதேதான் இன்னும் நீடிக்கிறது. என் இருதய அடியாழத்தே உறைந்திடும் கடவுள் என் பாட்டி போன்றிருக்கிறார். நான் சிறுவனாயிருந்தபோது, எங்கள் வீட்டு அலமாரியில், தொப்பியணிந்துள்ள தாத்தா படம் இருந்தது. கடவுள் வயதானவர் என்றெண்ணினேன். ஆனால் பின்னர் கடவுள் வயதானவர் ஆனார். அந்த வயதில் என் பாட்டி என்னிடம் காட்டிய பாசமும், மதரீதியிலான அவரது பேச்சும்..” என்றும் குறிப்பிடுகிறார், மோஷன்.
மோஷன், தன்னுடைய ஆரம்பக் காலங்களில், நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் கூடியிருந்த மசூதியில் வாழ்ந்தவர். பன்னிரண்டாம் வகுப்பில் இறையியலாளனாகிவிட்டவர். 1968இருந்து 70வது வரை, இறையியலாளர். 1972 – 74க்குள், 13 இடங்களில் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.
மதம், மொழி, அரசியல் ஆகியவற்றை ஆரம்பக்காலத்தில் கற்றுக்கொண்ட மோஷன், கலை ரசனை கொண்ட அத்தையின் வழியாகப் பாரசீகம் கற்பிக்கிறார். அவரிடம் படிந்திருப்பது அத்தையின் செல்வாக்கு மட்டுமே. தன் மகளை, “பள்ளிக்குச் செல்ல வேண்டாம்; பாரசீக மொழியை மட்டும் கற்றுக் கொள்” என்று சொல்லிவிடுகிறார் மோஷன். இக்காலகட்ட வாழ்க்கைச் சம்பவங்கள், A moment for innocence (படம்), the dump mans dream (புத்தகம்) ஆகியவற்றில் பதியப்பட்டுள்ளன.
ஆய்வாளர்கள், புத்தக ஆசிரியர்கள் வெளியிட்டவர்களுக்கு எழுதி, அன்பளிப்பு பிரதிகள் பெற்று, திரட்டிய ஒரு லட்சம் தோமன்ஸில் புத்தகங்கள் வாங்கி, உள்ளூர் மசூதிக்குள், தானேஷ் நூலகத்தை, 400 உறுப்பினருடன் தொடங்குகிறார். நண்பர்களுடன் சேர்ந்து பலால் குழுவை உருவாக்குகிறார். சுமார் இரண்டு ஆண்டுகள் தலைமறைவு இயக்க வேலைகள் செய்கிறார். விளையாட்டு, கராத்தே, அரசியல் நடவடிக்கைகள், நிதி திரட்டுதல் எனப் பல்வேறு செயல்பாடுகள் ஈடுபட்டுகிறது, இக்குழு. இறுதி நடவடிக்கையாகக் காவல் துறை அலுவலரைத் தாக்குகிறது, பலால் குழு. மோஷன் காயமுற்றுக் கைதாகிறார். பஹ்லவி சிறையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இருந்தார். அங்கு அவருக்குக் கிடைத்தவை இரண்டே இரண்டு. ஒன்று, சித்திரவதை. இரண்டு, எழுத்து. ஈரான் மக்கள் உணர்வைப் பற்றிப் பிரதிபலிக்கும் கதை அது. சிறையில் இருந்த போது கொந்தளிப்பாக இருந்த மோஷன், விடுதலை ஆகும்பொழுது சித்தாந்தவாதியாக வெளியேறுகிறார். அவருக்கு அந்தச் சிறையில் நடந்த சித்திரவதை குறித்து மறக்க முடியவில்லை. அதை அவர் தன்னுடைய படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்.
“சித்திரவதைதான் படுமோசம். என்னைப் பெரிதும் பாதித்தது அதுவே. சித்திரவதை என்பது அடித்து உதைப்பதிலிருந்து வேறானது என்று கேள்விப்படுகிறோம். ஆனால் சித்திரவதையை ‘புரிந்து கொள்ள, ‘ஆன்மாவின் அறுவைச் சிகிச்சை’ (ஜர்ராஹி- இ ருஹ்) என்னும் என் கதை உதவக் கூடும். ஒரு கணத்தில், ஒருவன் அவ்வளவு அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அவனது நம்பிக்கைகளெல்லாம் நொறுங்கிப் போகும். அது இயற்கையானதே. பொதுவாக, நீங்கள் சில்லென்று இருக்கையில், பெரிதும் கோபப்படுவீர்கள் கதகதப்பாயிருக்கையில், பசிப்பதாக / தூக்கம் வருவதாக உணர்வீர்கள். உங்களின் உள்ளார்ந்த சமநிலை குலையலாம். இவற்றையெல்லாம் ஆயிரம் மடங்கு பெருக்கி, அதனைக் கற்பிதம் செய்து பாருங்கள். சிறைகளில் அமைப்புகளால் தரப்படும் அழுத் தங்களுடன், குறிப்பாகப் பிளவுகள் ஏற்படுகையில், ஒப்பிடுகையில், அவையெல்லாம் மங்கிப் போகும்…”
“நீங்கள் உள்ளான மோசமான சித்திரவதையின் ஞாபகம் எது?”
“நெருப்பாய்க் கொதித்தல் போல நீங்கள் எதிர்பார்க்கின்றவற்றிற்கு எதிரானது. ஒயர்களைப் பயன்படுத்தி அளிக்கப்பட்ட வதைதான் படுமோசமானது.”
“ஒயர்களைப் பயன்படுத்தி”.
தொலைப்பேசி கம்பிவடங்களைப் போல அடர்த்தியானவை வெவ்வேறு அளவுகளில் இரும்புக் கடைகளில் கிடைக்கும். சித்திரவதை தொடங்கும்போது, உங்களைப் படுக்கையில் கட்டிப் போடுவார்கள்; இரு விதங்களில் இந்த ஒயர் செலுத்தப்படும். ‘அபோல்லோ என ஒரு நாற்காலியை அழைப்பார்கள். முடிதிருத்தும் கடையில் உள்ள மர நாற்காலி போன்றது, விமானத்திலுள்ள பயண இருக்கை போன்றது.”
என்று மோஷன் தன் சித்திரவதையைப் பகிர்கிறார்.
அதிகாரவர்க்கம் அதிகரிக்க, உட்பூசலும் அதிகரிக்க, மோஷன், அரசியல் குழுவிலிருந்து விலகி, செய்தி வாசிப்பவராக வானொலியில் சேர்கிறார். வானொலியில் பணியாற்றும் காலத்தில் 12 சிறுகதைகளை எழுதி, தந்தையின் பரிசுப் பொருட்களை விற்று, அக்கதைகளை ஒரு புத்தகமாகக் கொண்டு வருகிறார். வானொலி காலத்தில் புதிய தலைமுறைச் சிறுகதை எழுத்தாளர்களைக் கண்டறிவது அவசியம் என்று தோன்றி, பலருடன் தொடர்பு கொண்டு, ஒரு வாசிப்பு வட்டத்தை உருவாக்குகிறார். அதில் 20 பேர் கூடி, வாசித்து, விமர்சித்துக் கொள்வார்கள். இன்றைய ஈரானில் தேர்ந்த எழுத்தாளராகக் கருதப்படும் மோஷன் சுலைமானி, காசமலி பர்ஸாத், அப்பாஸ் மருஃப்பி ஆகியோர் இக்குழுவில் உருவானவர்கள்தான். இக்குழுவிலிருந்து தொகுக்கப்பட்ட கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு இலக்கிய வகைமைச் சார்ந்த படைப்புகளை, soureh என்ற பெயரில், வரிசையாக, புத்தகமாகக் கொண்டு வந்தனர். இதே நேரத்தில், மோஷன் 14, 15 நாடகங்களை எழுதுகிறார்.
ஈராஜ் காடெரியின் மோசமான ஒரு படத்தை (பராஸகி – ஹா) பார்த்த மோஷன், தானே ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் முடிவு செய்கிறார். அதற்கு உத்வேகம் அளித்தவர், ஈராஜ் காடெரிதான் என்பது ஆச்சரியம். அடுத்த ஒரு மாதத்திற்குள் நஸுவாவின் வருத்தம் என்ற படத்தை மோஷன் எடுத்து விடுகிறார். சினிமா கலை குறித்து அறிந்து கொள்வதற்காக, சினிமா சார்ந்த நூல்கள் வாசிக்க, ஆறு மாதங்களைச் செலவிடுகிறார். தன்னுடைய படங்களை அவர் நான்கு காலகட்டமாகப் பிரித்துக் கொள்கிறார்.
“1982-இல் நஸூவாவின் வருத்தம், 1983- இல் இரு பார்வையில்லா விழிகள், 1984-இல் புகலிடம் கோருதல் என்னும் மூன்று படங்களை எடுத்த பிறகு, வேறு படங்கள் எடுக்கவில்லை. ஓராண்டு காலம் திரைப்படம் குறித்த புத்தகங்களை வாசிக்கத் தீர்மானித்தேன்.” இது மோஷனின் சினிமா முதல் கட்டம்.
“என் இரண்டாம் கால கட்டம் மூன்று படங்களைக் கொண்டது. நடைபாதை வியாபாரி, சைக்கிள்காரன் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டோரின் திருமணம். இவை சமூகப் பிரச்சனைகளைச் சித்தரிப்பவை. புரட்சி நடந்து சில ஆண்டுகள் கழிந்துள்ளன; அரசாங்கம் உருப்படியாக எதையும் செய்யப் போவதில்லை.” இது இரண்டாவது காலகட்டம். இவை தொழில்நுட்ப ரீதியில் சமூகப் பிரச்சனைகளைத் திறம்படக் கையாண்டவை.
“மூன்றாம் கட்டத்தில், மாறி இருப்பவை பாத்திரங்கள். அவை மிக சிக்கலாக ஆகியுள்ளன. நல்லவர்களையும், கெட்டவர்களையும் ஒருவர் காண்பதில்லை. ஒவ்வொருவரும் ஒரே வேளையில் நல்லவராயும் கெட்டவராயும் இருக்கிறார்; ஒவ்வொருவரும் சாம்பல் நிறத்தவர். இக்காலக் கட்டத்தில் இதுவே முக்கிய மாறுதல் அத்துடன் இப்படங்களில், உண்மையின்மையுமில்லை.’’ என்று குறிப்பிடுகிறார் மோஷன்.
நான்காம் கட்டத்தை இப்படிக் குறிப்பிடுகிறார் மோஷன்: “சில பகுதிகள் என் மீதான சார்பியலின் செல்வாக்கை எடுத்துக் காட்டும். எனது மூன்றாவது கால கட்டம் பற்றிய மிக முக்கிய விஷயம், அமைதிவாதத்திலிருந்து சார்பு நிலைக்கு நான் நகர்ந்தது; பாத்திரங்கள் கறுப்பு – வெள்ளையாயிருப்பதற்குப் பதிலாகச் சாம்பல் நிறத்தில் இருந்தன. வடிவம் குறித்து எப்போதும் நான் சார்பு கொண்டிருந்தாலும், ஒரு பிரச்சனையாயிருக்கவில்லை. நான்காம் கால கட்டம் Gobbeh-வுடன் தொடங்குகிறது. Salaam Cinema-வுடன் இதில் நான் தத்துவத்திலிருந்து நகர்ந்துள்ளேன்.”
மேலும், “நான்காம் கட்டத்தில் சார்பியல் தன்மையில் கூட எனக்குப் பொறுமையில்லை என்பது போன்றிருந்தது. இக்கட்டத்தில் இரண்டு பொதுப் பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருந்தேன். ஒன்று, நோக்கு நிலைகளின் பன்மைத்துவம், இன்னொன்று மனிதத் துயரம். உணர்வார்ந்த நோக்கு நிலையைத் தேடிக் கொண்டிருந்தேன்; என் படங்களின் கதகதப்பு, மனிதத் துயரத்தின் சட்டகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதன் மகிழ்விலிருந்து வருகின்றது.” என்றும் குறிப்பிடுகிறார் மோஷன்.
ஒரு துணைவியின் இழப்பு என்ற பகுதியில், மோஷனின் மனைவி ஃபாதோமஹ் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. இளைய சகோதரனின் சூட் அணிந்து, வழுக்கைத் தலை தெரிய, ஓர் அறையைத் தூய்மை செய்து, இரு மெத்தைகள், இரு விளக்குகள், சில தட்டுகள், சில கரண்டிகள் வாங்கிக் கொண்டு, ஒரு கரப்பானுக்குப் பொருத்தமான அறையில் குடி அமர்கிறார்கள். உயிர்ப்புடன் இருந்த அந்தக் கரப்பான் மீது, காதல் கொள்கிறார் மோஷன். பின்னாளின் அரசியல் அமைப்புகள் இருந்து வெளியேறி, வானொலிக்கு மோஷன் நகர்ந்ததும், அவருடைய மனைவியும் உடன் வருகிறார். மோஷன் வானொலிக்கு எழுத, அவர் அறிவிப்பாளர் ஆகிறார். இரவில் மோஷன் எழுதிக் கொண்டிருக்க, அவர்கள் தூங்குவார்கள். அப்புறம் மோஷன் தூங்கிக் கொண்டிருக்க, அவருடைய மனைவி அறிவிப்பாளர் ஆவார். அவர்கள் இருவரும் வேலை பார்க்க, குழந்தை எப்போதும் அவர்களுடன் இருந்தது. சில மாதங்களில் 13 வீடுகளில் குடிமாறி இருக்கிறார்கள். டோலதாபாத் வீட்டில், மோஷனுக்கு ஒரு துயரச் சம்பவம் நிகழ்கிறது.
“கடைசி வீடு டோலதாபத்தில் நாங்கள் வாங்கியது. பிளாஸ்டிக் கால்சராய்கள் அணிந்திருந்த அவள், எண்ணெய் விளக்கு ஏற்ற முற்பட எண்ணெய் சிறிது அவள் மீது படிந்து விட்டது. கால்சராய்கள் பற்றிக் கொண்டன. தீயை அணைக்க அண்டைவீட்டார் விரைந்து வந்தும் பலனில்லாது போயிற்று. ஒரே நிமிடத்தில் முடிந்து விட்டது. தன் சகோதரியுடன் இரவில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் கருகி விட்டனர். என் மனைவியின் உடல் எரிவதைப் பார்த்து உதவ விரைந்தவளின் துணிகளிலும் நெருப்பு பற்றிவிட்டது. அவளும் முழுதாக எரிந்து போனாள். எப்படி விளக்குவது? எரிந்து போன தீக்குச்சியின் இடத்தே ஒரு மனித உயிரை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் அணிந்திருந்தது பிளாஸ்டிக் ஆடைகளாதலால், அவை தீப்பற்றியதும். சருமத்தில் ஒட்டிக் கொண்டு, உங்களைக் கருக்கி விடும், ஒரு நிமிடத்தில்.” என்று குறிப்பிடுகிறார் மோஷன். திரைப்பட தயாரிப்பில், ஒரு நடிகையாகவும் அவர் விளங்கி இருக்கிறார்.
“ஆம், மிகவும். Once upon a Time, Cinema, The Actor மற்றும் சில படங் களில் நடிக்கவும் செய்தாள். எனக்கு ஒரு பாத்திரம் வேண்டும் பொழுதெல்லாம் அவள் நடித்து விடுவாள். ஒரு செவிலியர் தேவைப்பட்டால், (ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் திருமணம்) அவள் செவிலியரின் உடையணிந்து நடித்து விடுவாள். சிறுசிறு பாத்திரங்களாகப் பல வேடங்களில் நடித்திருக்கிறாள். திரைக் கதைகளிலும் குறிப்பாகப் பெண்கள் பாத்திரங்களை உருவாக்குவதில், ஈடுபாடு கொண்டிருந்தாள். என் குழந்தைகளும் (சமீரா, மெய்தாம், ஹனா) எனது பல படங்களில் இடம் பெற்றனர்.”
இக்காலகட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மோஷனுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது. அவை இரண்டாவது மனைவியாக, ஃபாதெமெஹ்ஹின் தங்கையான குழந்தை பெற இயலாத மர்ஸியெஹை மணக்கிறார், குழந்தைகள் பெற விரும்பாத மோஷன்.
எதிர்காலமாகக் கலை – பகுதியில், மோஷனின் சினிமா வாழ்வு பேசப்படுகிறது. அவர் எடுத்த படங்களை விட, அவர் எழுதிய புத்தகங்கள் ஐந்து மடங்கு லாபம் தருகின்றன. ஆனால், சினிமா என்பது அதிகரிக்கும் சர்வதேசக் கலை என்று குறிப்பிடும் மோஷன், சினிமாவையே தேர்ந்தெடுக்கிறார். மேற்கு, கிழக்கு குறித்த விஷயங்களில், முதன்முறையில் மேற்கின் நல்ல அம்சங்களை, விம் வெண்டர்சனின் , wings of desire-ன் மூலமாக அறிந்து கொள்கிறார். இந்தப் படம் மட்டுமே தன்னிடம் தாக்கம் ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார். அவருடைய படங்களைப் பற்றி,
“என் படைப்பின் வண்ணமும் வாசனையும் ஈரானுக்குரியதானது உள்ளடக்கமோ அப்படியில்லை. என் படைப்பு அக்கறை கொள்வது, பிறப்பு, வாழ்க்கை, மரணம் பற்றி எடுத்துக்காட்டாக, நடைபாதை வியாபாரி மூன்று பகுதிகளாயிருக்கும். முதலாவது பிறப்பைப் பற்றியும், இரண்டாவது வாழ்க்கையையும் மூன்றாவது மரணத்தையும் பற்றியவை. இப்போதைக்கு இது ஈரானை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம், ஆனால் இது அனைத்து மனிதச் சமூகத்திற்கும் உரியது. வந்து போவதன் கதை, நேசம் மற்றும் வாழ்வின் கதை. எங்கேயும் உள்ள யாருக்கும் இவற்றின் அர்த்தம் ஒன்றே. ஈரானியத் தேசியவாதம் சார்ந்து ஒரு படத்தை எடுத்தாலும், வேறெங்கோ ஓரிடத்தில் தம் தேசியவாதம் சார்ந்த அனுபவமுள்ள வருக்கும் அது அதிர்வையளிக்கும்” என்று கூறுகிறார்.
ஒரு தீர்க்கதரிசியின் அழகியல் பகுதியில், ஈரானியக் கவிஞர்கள் பற்றிய உரையாடல் நிகழ்கிறது. ஃபாரவ், செபெஹ்ரி ஆகிய கவிஞர்கள் இருவரும், மோஷனுக்குப் பிடித்தமானவர்கள் . கவிஞர்கள் ஷாம்லு, நிமா ஆகியோரின் கவிதைச் சொற்கள் மேல் பெரிதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் மோஷன். “நான் ஒரு முஸ்லிம். ரோஜாவை நோக்கித் தொழுகின்றேன். என் தோழியே பாய் ஓர் நதி” என்கிற செபெஹ்ரியின் இயற்கை வாத பண்பும், நாட்டை விமர்சிக்கும் பண்பும், மோஷனுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.
படைப்புகளில் சமூக எதார்த்தம், ஒரு வண்ணமாக இருக்கிறது என்கிறார் மோஷன்.
“இன்னொன்று சமூக யதார்த்தம். சமூகம் வண்ண மயமாயிருப்பின், நானும் அப்படியே இருக்கிறேன்.எதையும் நான் கூற முடியாத போது, அதனை வண்ணங்களில் சொல்ல வேண்டியுள்ளது. அவர்கள் சமூகத்தைக் கருமையாக்கினாலும், நானே அதன் இருள் தவிர வேறெதனையும் பற்றிப் பேசாது இருந்தேன். இருத்தல் எனும் எளிய உண்மை தவிர்த்து – வாழ்தல் தவிர்த்து – வேறெதிலும் எனக்கு நம்பிக்கையில்லை என்பதை மெதுவாக ஒப்புக் கொள்ளலானேன். வாழ்தல் என்பது வெண்மை. எனவே எனது சித்தாந்தம் வெண்மை. இது இந்தியாவுக்கு நான் ஒரு பயணம் மேற்கொண்டபோது கிடைத்த உண்மை.”
என்று குறிப்பிடும் அவர், 1990 – 91 களில், மும்பைக்கு வருகிறார். மும்பை விமான நிலையத்திலிருந்து, அறைக்குச் செல்லும் வழியில், அனைத்து விதமான பிச்சைக்காரர்களும் லட்சக்கணக்கில் அங்கே முகாம் இட்டு இருப்பதைக் காண்கிறார். இந்தியச் சமூகத்தில் ஒரு சினிமா ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது என்கிறார் அவர். இந்தியச் சினிமா கனவுகளை விற்றுக் கொண்டிருக்கிறது என்றும், இந்து சமயத்தைச் சார்ந்து இருக்கிறது என்றும், இருண்ட சினிமாவை அவர்கள் விரும்புவதில்லை என்றும், ஆனந்தத்தை இந்தியச் சினிமா போற்றுகிறது என்றும், மோஷன், உரையாடலில் கூறுகிறார். இந்தியாவின் பிச்சைக்காரர்களைத் தனது ஆசிரியர்களாக ஏற்று, திரைக்கதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார், மோஷன்.
இஸ்லாம், பௌத்தம், இந்து ஆன்மீகத்தைப் பற்றி ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதிய மோஷன், திறந்த நிலையில் இந்து மதமும், பின்பற்றுவோருக்கு நிம்மதி அளித்திடும் நிலையில் பௌத்த மதமும், நோய் கூறான நிலையில் இஸ்லாமும் இருப்பதாக எழுதுகிறார்.
ஈரானின் இறையாண்மையை, பண்பாட்டு நோயின் ஆதாரங்கள் என்ற தலைப்பில் பேசுகிறார் மோஷன். அபினி ஹெராயின் உபயோகிப்பது தேசியப் பண்பாக இருக்கின்றன என்றும், ஆணவம் போலி தன்மை மிக்க நாடு என்றும் சொல்கிறார். ஒவ்வொருவரும் தம்மை முற்றிலும் சரியானவராக நம்பிக் கொள்வதே, ஈரானின் ஜனநாயகத் தோல்வி என்கிறார். சிந்திக்கும், பரிசீலிக்கும், பகுப்பாய்வு செய்யும் அறிவுஜீவிகள் ஈரானில் இல்லை என்பது அவர் கருத்து. செவ்வியல் தன்மையிலிருந்து விலகி, நவீனத் தன்மைக்கு ஈரான் என்றும் செல்லவில்லை என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது. உரையாடலுக்கான கதவு மூடப்பட்டு, அடிப்படை சுதந்திரங்கள் இல்லாமல் இருப்பதால், பரிசீலிக்க ஏதும் இன்றி ஈரான் மக்கள் விடப்பட்டுள்ளனர் எனக் கருதுகிறார் மோஷன். அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது; மக்கள், மக்களை ஏமாற்றுகின்றனர் என்பது மோஷனின் வாதம். மதம், அரசியல், கலை என்பவற்றிலிருந்து தெரிவு செய்ய வேண்டுமாயின் கலையைத் தான் தெரிவு செய்வேன் என்கிறார் மோஷன்.
இந்தப் பகுதியில் அதிகமும் தன்னைப்பற்றி விசாரித்துக் கொள்கிறார். தன்னைத்தானே அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்:
“எந்த விதத்திலும் நான் உலகை மாற்றிக் கொண்டிருப்பதாகக் கருதவில்லை. உலகின் பொறுப்பினை எல்லாம் எடுத்துக் கொள்ள முயன்றுள்ள எவரும், கடைசியில் உலகை நாசப்படுத்தியது தவிர வேறெதுவும் செய்திருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் என்னை விமர்சித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் என்னைப் புதுப்பித்துக் கொள்ள முயலுகிறேன். நான் கூறுகின்ற எதுவும் யாரேனும் ஒருவரை ஒருவர் கொல்லுமாறோ, நான் சொல்வதை ஆதரிக்கும் பொருட்டு கொல்லப்படுமாறோ இட்டுச் செல்லாது எனத் திரைப்படக் கலைஞனாக நம்புகிறேன். எல்லாச் சினிமாவை விடவும் தனியொரு மானுட வாழ்வு மதிப்புமிக்கது. ஒளியேற்றவும் வாழ்வுக்கு மகிழ்ச்சியைச் சேர்க்கவுமே திரைக் கலைஞர்களாகிய நாங்கள் இருக்கிறோம். என் படத்தினால் ஒருவர் சிறிது சந்தோஷப்பட்டார். மேலும் சிறிய அன்புடன் உலகில் செயல்பட்டார் என்பதையே தேடுகிறேன்.” என்று தன்னுடைய சினிமா கலையைக் கூறுகிறார். கவிஞர்கள் வார்த்தைகளின் நேரத்தையும், மதத்தலைவர்கள் அறிவின் நேரத்தையும், புரட்சியாளர்கள் மக்களின் நேரத்தையும் வீணடிப்பதாகவே மோஷன் கருதுகிறார்.
யுனெஸ்கோ கந்தஹார் படத்திற்காக மக்மல்பஃபுக்கு Federico Fellini விருதை வழங்கியபோது, ஆப்கன் சிறுவர்கள் குறித்த சிறிய ஆவணப் படத்தை எடுக்கும் பொறுப்பையும் அவருக்கு அளித்தது. அது 2001 அக்டோபர் நடுவில், அந்த ஆவணப் படத்தை எடுத்துக் கொண்டு ஈரான் – ஆப்கனுக்கு இடையிலுள்ள எல்லையில், ஸாஹெதான் ஆப்கன் அகதி முகாமில் மக்மல்பஃப் இருந்தார். இதன் விளைச்சலே The Afghan Alphabet (2002). அவர் அங்கிருந்தபோது 2001 அக்டோபர் 27 சனிக்கிழமையன்று நியூயார்க்கிலிருந்து நான் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல், ஆதாமின் பிள்ளைகள், ஏவாளின் பெற்றோர் என்ற தலைப்பில் சம்பாஷனை நடைபெறுகிறது.
இப்பகுதியில், ஆப்கன் மக்களின் அன்றாட வாழ்க்கை, பெண்களுக்கு (சிறுமியர்) மறுக்கப்பட்ட கல்வி, அடிப்படை மதவாதம், ஈரான் ஆப்கான் எல்லையில் அமைந்துள்ள அகதிப் பள்ளிகள், கந்தஹார் திரைப்படம் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது.
“ஆப்கனில் நுழைந்ததுமே அதிர்ந்து விட்டேன். எல்லாவற்றையும் விட என்னை முடமாக்கி விட்டது. அடியாழம் காண முடியாத பசி தான் ஹேரத் நகரைச் சுற்றிலும் 20,000-க்கும் மேற்பட்டோர் தெருக்களிலும், நெடுஞ்சாலைகளிலும் மடிந்து கொண்டிருந்தனர். அவர்கள் மடிந்தது முற்றிலும் பஞ்சத்தால், பட்டினியால், ஆப்கன் குறித்து சுமார் 10,000 பக்கங்கள் அளவுக்குப் புத்தகங்களையும் கட்டுரைகளையும் வாசித்தேன். பின்னர் ஈரான் – ஆப்கன் எல்லை வழியே விரிவாகப் பயணித்தேன். ஈரானுக்கு வந்து கொண்டிருந்த ஆப்கன் அகதிகள் முகாம்களுக்குச் சென்றேன். பலர் அங்குச் சென்று சேர்ந்திடக் கண்ணி வெடிகள் பதித்திருந்த நிலங்களின் மீது நடந்து வந்திருந்தனர். ஆப்கனுக்குள்ளே காலில்லாத பலரைப் பார்த்தேன்.
மேலும் ஆய்வு செய்ததில், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்ததையும், இன்னொரு 65 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டிருந்ததையும் கண்டேன். அதாவது, 10 சதவீதம் பேர் மடிய இன்னொரு 30 சதவீதம் அகதிகளாயினர். எங்களது அண்டைவீட்டார் தன் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் இழந்திருந்தது சட்டென என்னைத் தாக்கிற்று! நமது பெருந்திரள் ஊடகம் இதனைக் கண்டுகொள்ளாது இருந்ததால், ஈரானில் கூட பெருமளவிலான உலகம் ஒருபுறம் இருக்கட்டும் அவர்களது நாசகரமான நிலவரத்தை அறியாது இருந்திருக்கிறோம். உலகம் அவர்களைக் கவனிக்காது. ஏனெனில் உலக ஊடகம் ஆப்கானியரை அலட்சியம் செய்தது.”
என்று பதிவு செய்கிறார் மோஷன். தன்னுடைய கந்தஹார் படம், ஆப்கனின் உண்மை நிலவரத்தைக் கூறுவதாகச் சொல்கிறார்.
“இப்படத்தை எடுப்பதிலான எனது ஆரம்பக் கட்ட நோக்கம் இதுவே. இதனை எடுக்கத் தொடங்கியபோது. நானொரு படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ஒரு துயரம் பற்றி உலகிற்குத் தெரிவிக்கும் பொருட்டு, சினிமா சாதனங்களைப் பயன்படுத்தியதாக முதன் முதலில் உணர்ந்தேன். ஏனெனில் செப்டம்பர் 11-க்கு முன்னர் ஆப்கன் பற்றி யாரும் அக்கறைப்பட வில்லை (அல்லது) பேசவில்லை. ஆப்கனுக்கு உள்ளேயான நிலவரம் குறித்து எடுக்கப்பட்ட ஒரு படம் கந்தஹார்.” மேலும்,
“ஈரானியத் திரைப்படக் கலைஞனின் அனுபவங்களின் அடிப்படையில், இந்நாட்டின் மீது வீழ்ந்துள்ள துயரத்தின் செல்வாக்கிற்கு உள்ளான கலைஞனின் மனப் பதிவுகளின் அடிப்படையில், சினிமா வாயிலாக யதார்த்தத்தை எடுத்துரைப்பது – ஒவ்வொரு நாளும் அறியாதபடி கண்ணி வெடி பதிந்துள்ள நிலத்தின் மீது நடந்து, ஏழிலிருந்து பத்துப் பேர் வரை கால்களை இழந்திடும் மக்களின் துயரைச் சொல்வதாகும்.” என்றும் கூறுகிறார்.
ஆப்கன் துயரத்தைச் சொல்வது மட்டுமில்லாமல், கந்தஹார் திரைப்பட விற்பனை, ஒரு கட்டுரையில் வந்த காப்புத் தொகையைக் கொண்டு, ஈரான் எல்லையில், குவிந்திருக்கும் ஆப்கானிய சிறுமிகளுக்குக் கல்விக் குடில்களை அமைக்கிறார், மோஷன். ஆப்கன் மீதான அமெரிக்க ஏவுகணைகள் மீது பெரிதும் அதிருப்தி கொள்கிறார்.
“கந்தஹாரின் விற்பனைத் தொகை மற்றும் அதனைப் பற்றிய எனது கட்டுரை The Statues of Buddha were not destroyed -க்கு கிட்டிய காப்புத் தொகையிலிருந்து ஆசிரியர்களை அமர்த்திக் கற்பிக்க வைக்கின்றோம். 20 ஆப்கன் குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் வீதம் அமர்த்துகின்றோம்; சுமார் 5 மாதங்களாக ஆறாம். வகுப்புப் பாடம் எடுக்கின்றனர். இதன் செலவு மாதத்திற்குச் சுமார் 40 டாலர்கள் 20 குழந்தைகளுக்குக் கற்பிக்க ஓர் ஆசிரியருக்கு 200 டாலர்கள் ஊதியமளிக்கிறோம். ஒரு மாணவனுக்குக் கற்பிக்கும் செலவு 10 டாலர் எனில், புத்தகங்கள் -எழுதுபொருளுக்கு இன்னொரு S டாலர் ஆப்கன்கள் மீது அமெரிக்கர் ஏவும் ஒவ்வொரு ஏவுகணைக்கும் செலவிடும் தொகையால், சுமார் 1,30,000 ஆப்கன் குழந்தைகளைப் படிக்க வைக்க இயலும் எந்த அளவுக்கு மனிதச் சமுதாயம் சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த ஓர் எடுத்துக்காட்டே போதுமானது.”
அத்துடன், ஆப்கானியர் மீதான இப்போரே. போர்க் கருவிகளை விற்பதற்கான தந்திரமே.” என்று உரையாடலில் கூறுகிறார், மோஷன். பட்டினியும் எழுத்து அறிவு இன்மையும் உள்ள ஆப்கன் தேசத்தைப் பயங்கரவாதம் என்ற பெயரில், அமெரிக்க அரசு கோபத்துடன், ஈவு இரக்கமின்றித் தாக்குவதைப் பதிவு செய்கிறார். நியூயார்க் துயரில் மடிந்தோரின் ஆன்மாக்கள், ரத்தப் பழித் தீர்ந்திட, அப்பாவிகள் மீது இழைத்து உள்ள குற்றங்களை அமெரிக்கா ஒத்துக்கொள்ளுமா? என்று ஆதங்கப்படுகிறார் மோஷன். நமது உலகிற்குப் புஷ்ஷை விட காந்தியே அவசியம் என்கிறார். உலகத்தைக் கிராமமாக மாற்றுவதில் பெருந்திரள் ஊடகம் தவறி இருக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார் மோஷன்.
ஆப்கன் சிறுமிகளுக்குக் கல்வி கற்பதற்காக, யூனிஸெஃப் ஆப்கன் எல்லையில் பள்ளிகளை உருவாக்கி உள்ளது. ஈரானும், ஆப்கன் அகதி சிறுமிகளுக்காகப் பள்ளிகள் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானியர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், ஒரு நல்கையை மோஷன் தொடங்குகிறார். அதற்குக் காரணம், ஆப்கன் சிறுமிகள்.
“”யுனெஸ்கோ விருது நிதி சார்ந்ததில்லை – ஒரு கௌரவம்,அவ் ளவே. ஆனால் நான் ஓர் உறுதிப்பாடு எடுத்துக் கொண்டேன் ஆப்கன் விடுதலையானதும் கந்தஹாரில் ஒரு பள்ளியைக் கட்டுவதாக. அதற்கு Federico Fellini School எனப் பெயரிட்டு, யுனெஸ்கோ சார்பில் இவ்விருதினை அப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவேன் ஆப்கன் சிறுவர்களின் கல்விக்காக யுனெஸ்கோவுடன் இணைந்து செயல் திட்டங்களையும் தொடங்கியுள்ளோம். கற்கும் திறனுடைய 5 லட்சம் ஆப்கன் குழந்தைகளுக்குப் பள்ளிகள் நிறுவ யூனிசெஃப் முயன்று வருகிறது – ஆனால் நிதி – சட்டச் சிக்கல்களால் அது முடிய வில்லை. பல்வேறான ஈரானியப் பெரு நகரங்களில், கிராமங்களில் இவை நிறுவப்பட்டு ஆசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள். இப்போதைக்கு ஆப்கன் சிறுவருக்குக் கற்பிப்பது பற்றிய ஆவணப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.”, என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் ஓர் ஆப்கன் சிறுமிக்குக் கல்வி மிக முக்கியமானது.
“நான் எதிர்கொண்டது, பள்ளியில் இருக்கையில் இறுக்கமான முகத்திரையை அணிந்திருந்த சுமார் 9 வயது ஆப்கன் சிறுமியைச் சந்தித்தது. அவள் தன் பெயரையும் சொல்லவில்லை. அறையில் முகத் திரையை அகற்றவும் இல்லை. இருந்தும் பள்ளிக்கு வருவதிலும் எழுதப் படிக்கக் கற்பதிலும் தீர்மானகரமாயிருந்தாள். இது ஒட்டு மொத்தப் பண்பாடு. தன் பெயரைக் கூறி அந்நியர் முன்னே முகத் திரையை அகற்றினால், தான் நரகம் செல்ல வேண்டி வரும் என்று ஒன்பது வயதுச் சிறுமி கலக்கமடைந்திருக்கையில் குண்டு வீசி அவளை எப்படி மாற்ற முடியும்? அவளுக்குக் கற்பிக்க வேண்டும். முதலில் கல்வி எழுத்தறிவாலும், அப்புறம் சமூக வயப்படுதலின் அனுபவங்களாலும், ஓர் ஆப்கானியப் பெண்ணாக அனுபவிக்க வேண்டும். இல்லாவிடில், ஒன்பது வயதில், வயதான ஆப்கன் ஆணின் அந்தப்புரத்தில் நுழைய வேண்டும்; தன் வாழ்வின் கடைசி வரையும்,பாலியல் கல்விக்கான செயலூக்கமற்ற பொருளாக இருப்பது தவிர்த்து, பெண்ணாக இருப்பது குறித்து எதுவும் அறியாதிருப்பாள். என்று ஆதங்கப்படுகிறார் மோஷன்.
தன்னை ஓர் அவநம்பிக்கை வாதியாகக் கருதும் மோஷன், தன் படத்தால் எதையும் மாற்றி விட முடியாது என்றும் கருதுகிறார்.
“படப்பிடிப்பு இடங்களைப் பார்க்க ஹேரத்திற்குச் சென்று 20,000 பேர் பட்டினியால் மடியும் மக்களைப் பார்த்தபோது, நான் எடுத்துள்ள படங்களெல்லாம் மடிந்து கொண்டிருப்பவர்களில் ஒருவரைக் கூட காப்பாற்றாது என உணர்ந்து கொண்டேன்; இப்போது எனது அண்டை அயலிலேயே கடவுளால் கைவிடப்பட்டவர்கள் தலைமீது வீசப்படும் ஒரு குண்டைக் கூட என் படங்கள் தடுக்க முடியாது என்பதை உணருகிறேன். அப்புறம் படங்கள் எடுப்பதின் அர்த்தம் என்ன வியப்படைகிறேன்? ஆப்கனில் நான் நுழைந்ததும், யாரோ என் முகத்தில் அறைந்து என்னை நிதானமடையச் செய்தது போலிருந்தது. சுமார் ஓராண்டுக்கு முன்னர், இரண்டு கட்டிடங்கள் சரிந்தபோது, அமெரிக்காவின் முகத்தில் விடப்பட்ட அறை போல, 20,000 பேர் பட்டினியால் மடிந்து கொண்டிருந்ததை நான் பார்த்தபோது அந்த அறை என்னைத் தாக்கிற்று” என்று குறிப்பிடுகிறார்.
நாடோடித் திரைக் கலைஞர் என்ற பகுதியில், ஈரானின் தற்போதைய நிலை, மோஷனின் விருப்பம், கடாமியின் நம்பிக்கை பற்றிப் பேசப்படுகிறது. இன்றைய வன்முறை உலகத்தில், சினிமாவால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும், சினிமா என்பது வணிகத்தில் சிக்கிக் கொண்ட ஒன்று என்றும் திரும்பத் திரும்பப் பேசுகிறார் மோஷன்.
“என்னைப் பொறுத்தவரை, உலகில் என்ன நிகழ்கிறது எனில், வன்முறையின் திருகு சுழலே, மேலும் வன்முறையை உண்டாக்குகிறது. வன்முறை, கையை மீறிப் போகும் வன்முறை புஷ் – பின்லேடன் ஆகியோருக்கு இடையே, இவ்விரு பெயர்களும் எதன் பொருட்டு இருக்கின்றன என்பது தொடர்பாக வன்முறையின் உரையாடல் நிகழ்வதாகத் தோன்றுகிறது – அப்பாவி மக்கள் சிக்கிக் கொண்டிருக்க, ஒரு தரப்பு இன்னொன்றை விஞ்சுகிறது. இந்த அமளியில் சினிமா என்ன செய்து விடும்? உண்மையில் உருப்படியாக ஒன்றுமில்லை; திரைப்படத் திருவிழாக்கள். தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் தொழில் முறையினர், விமர்சகர்கள் போன்றவர்களின் வலையில் சிக்கியிருக்கும் விதத்தில். ஆனால் நாமென்ன செய்யலாம் அரவைக் கல்லில் நம் மூக்குகளை வைத்து, நம்பிக்கை கொள்வதைத் தவிர்த்து?”
என்ற கேள்வியுடன், ஹமீத் தபாஸியுடனான மோஷன் மக்மல்பஃப் பின் உரையாடல் முடிவடைகிறது.
சா.தேவதாஸ் மொழி பெயர்த்த இந்தப் புத்தகத்தை, இக்கட்டுரை எழுதுவதற்காக இரண்டாவது முறை வாசித்தேன். மேலும் சில புரிதல்கள் ஏற்பட்டன. திரைப்படக் கலையைக் கவிதாபூர்வமாகவும், சமூகப் பார்வையாகவும் செயல்பாடாகவும் பார்க்கிறார் மோஷன்.
இந்த நேர்காணல்களின் மூலம், மதவாதியாக, அரசியல்வாதியாக, செய்தியாளராக, எழுத்தாளராக, பதிப்பாளராக, இயக்குநராக, சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய மோஷனைப் புரிந்து கொள்ள முடிகிறது.
சத்துவாச்சாரியில், ஜீ. முருகன் வீட்டில் ஈரான் படங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நினைக்கும்பொழுது, ஈரான் மற்றும் ஆப்கனின் மண் வீடுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. சிறிய குகை போன்றவை அவை. மோஷனுடைய, ‘பள்ளியை அடித்துச் செல்லும் காற்று’ திரைப்படமும் நினைவில் உள்ளது. ஒரு சிறிய டென்ட், பள்ளியாக இருக்கிறது. பலத்த காற்று, அந்தப் பள்ளியை எடுத்துச் செல்கிறது. ஒரு சிறுவனின் தலையில் சிறிய காயம் மட்டுமே. ஓர் ஆட்டின் கழுத்தில் தொங்கும் மணியே, பள்ளி மணியாக அமைகிறது.
இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, “The Afghan Alphabet” என்ற மோஷன் மக்மல்பஃப் தயாரித்த ஆவணப் படத்தைப் பார்த்தேன். ஆண்களுக்கு முன்னால் முகத்திரையை எடுத்து, தன் முகத்தைக் காட்ட விரும்பாத (முகத்திரையை விலக்குவது பாவம்) சிறுமி, படத்தின் முடிவில் தன் முகத்தைக் காட்டுகிறாள். ஆப்கன் அகதிகள், தம்மை ஓர் இனக் குழுவாகவே அடையாளம் காட்டுகிறார்கள். ஆப்கன் அகதிகள், சிறுவர்கள், பாடம் சொல்லித் தரும் ஆசிரியையிடம் நேர்காணல் நிகழ்கிறது. அதில் ஒரு சிறுவன், கேள்விகளுக்கு இப்படிப் பதில் சொல்கிறான்:
“உனக்கு அமெரிக்காவைப் பிடிக்குமா?”
“பிடிக்காது”
“உனக்குத் தாலிபான்களைப் பிடிக்குமா?”
‘’பிடிக்காது”
இந்தப் படத்தில், ஒரு மண் குடிலில், சிறுமிகளுக்கு A (ஆ). B (பெ) சொல்லித் தரப்படுகிறது. A, B என்ற எழுத்தை . ஆ, பெ என்று உச்சரிக்கிறார்கள்- ஆ, பெ ஒலிகள், சாதாரணமாக ஒலிப்பதில்லை. அவை கற்கும் உரிமையைக் கேட்கின்றன. தமக்கான சுதந்திரத்தை ஆப்கனிடம் கேட்கின்றன. ஒரு மண் வீட்டின் மீது ஏறி நின்று கத்தும் ஆடுகளைப் பார்த்தேன். ஆடுகளின் கதறல், சிறுமிகளின் ஆ, பெவுக்கும் அர்த்தங்கள் இருக்கின்றன.
ஆ,பெ என்றால், ஆப்கன் மொழியில், தண்ணீர். முகத்திரையை விலக்கி, தண்ணீரால் முகத்தைக் கழுவும் சிறுமிகளுக்குக் கல்வி தருவது ஒன்றும் மோசமான விஷயம் இல்லை. கல்வியும் தண்ணீரைப் போன்றது தான்.
இந்தப் புத்தகத்தை முதலில் யார் வாசிக்க வேண்டும்? தமிழ்நாடு திரைப்பட இளம் இயக்குநர்கள் தான். அதிலும் முக்கியமாகத் திரைப்படத் துறையிலிருந்துகொண்டு இலக்கியம் படைப்பவர்கள்தான்.
ஏன் வாசிக்க வேண்டும்? வணிகம் என்பதைக் கடந்து, ஒரு திரைப்படம் கலைப்படமாக, சமூகப் படமாக எப்படி அமைய வேண்டும்? என்பதை இப்புத்தகம் சொல்லித் தரும். போதையையும் வன்முறையையும் காமத்தையும் இன அரசியலையும் அடையாளத்திற்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தும் / பயன்படுத்த விரும்பும் தமிழ்த்திரை இயக்குநர்களுக்கு, எப்படி மோஷன் போல் இருக்க வேண்டும் என்பதை, இந்த நேர்காணல் தொகுப்பு சுட்டிக்காட்டுகிறது. மோஷனின் நேர்காணங்களிலிருந்து, ஓர் இயக்குநர் தான் யார் என்பதை எடைபோட்டுக்கொள்ள முடியும். மோஷென் மக்மல்பஃப் சினிமா பாதையை வாசித்து அறிந்தபின், தன் பாதை எவ்வளவு உயர்ந்தது? எவ்வளவுக்குத் தரமற்றது என்பதை, ஒரு திரைப் படைப்பாளியால் அறிந்து கொள்ள முடியும்.
(மோஷென் மக்மல்பஃபுடன் உரையாடல்கள் – ஹமித்தபாஸி – தமிழில் – சா. தேவதாஸ் – பன்முக மேடை, தேனி – மு.ப. 2024 – ரூ.200)






