இயற்கை ஒரு போதும் மனிதர்களுக்கு எதிராக இருந்ததில்லை. அது நேசமிக்கது. உலகத்தின் சீரான சுழற்சிக்கு அனுசரணையாக இருப்பது. சுயநலத்துக்காக அதனுடனான விரோதச் செயல்களில் முனையும்போது தனது ஆட்சேபத்தைத் துளி தெரிவிக்கிறது. மனித சமூகமே தாங்க முடியாத அளவிற்கு அல்லாடிப்போகிறது. பெரும் பதற்றம் உருவாகுகிறது. இயற்கையின் இருப்பை நிறையவே அறிந்து கொள்ள முயல்கிறது மனித சமூகம். சிறிது காலத்திற்குப் பின் நேசக்கரங்கள் நீள்கின்றன.
ஜப்பானியக் கவிதை இலக்கியங்கள் இயற்கையை நேசித்தலைப் போதிக்கின்றன. அன்பு ஆழமானது, உயிரோட்டமானது; நிகரற்றது; விடுதலையை அறிவிப்பது. ஆதி ஜப்பானியக் கவிதைகளிலிருந்து இன்றைய கவிதைகள் வரை ஒரு சரடை இணைத்துக் கொண்டே வருகிறது. இயற்கை அது சார்ந்த மனித வாழ்வியல் அதிலிருந்து பெறப்படுவதுதான் கவிதைக்கான கருப்பொருள்.
“இரவும் பகலும்/ நேரத்தைப்/ புரிந்து கொண்டு/ நினைப்பதில்லை/ வெறுமைத் தரைப்/ புல் தேடி/ யாத்திரை செய்கிறேன்,” என்பார். ஏறத்தாழ இது எழுதப்படாத நிலையாகத்தான் இருக்க வேண்டும். நம் நாட்டார் பாடல்கள் மாதிரி – மனசின் பாடல்கள். அன்பின் பிணைப்பு – இதைச் சுவைக்கவே வேண்டும். பதவுரை, பொழிப்புரை தேடி அலைதல் உதவாது. அறிவுப்பூர்வமாகவோ, தர்க்க ரீதியாகவோ புரிந்து கொள்ள முயலக் கூடாது. இயற்கை அனுபவம் அதன் பரவசம் – இதுதான் கவிதை. இதில் அமிழ வேண்டும். அடையாளம் காணவேண்டும்.
தமிழ்த் திணைக்கோட்பாடுதான் ஜப்பானியர்களுக்கும் – பருவகாலங்கள் உண்டு. அதற்குரிய பழக்கவழக்கங்கள், சடங்குகள், பாடல்கள், பிரார்த்தனைகள் எல்லாமே உண்டு. இலக்கியங்களும் நம்முடைய வகைமைதான். காதல், ஏக்கம், மிகை, நம்பிக்கை, ஏசல், போர் என்பது மாதிரிதான். அது எல்லாத் தளங்களிலும் எதிரொலித்தது. பிற்காலங்களில் ஜென் பௌத்தம் கைக்கொண்டது. பழமை செத்துப் போனது என்பர். இது ஒரு வசதிக்காகத்தான். அது நவீனத்தின்மேல் முழுவட்டமாய்ச் சூழவே இருக்கிறது. இதை அறிவதற்குப் புத்திசாலித்தனம் தேவைப்படாது. எளிய பார்வை போதுமானது. மனது சட்டென உள்வாங்கிக் கொள்ளும்.
இருட்டு சூழும் போது/ என்னைத் துரத்தும்/ இந்த இலையுதிர் காற்று/ இந்த மெல்லிய வெப்பத்தில்/ குளிர்காய்வேன்/ என் நம்பிக்கை –
கொகின்ஷூ, மன்யோஷூ, ஹைக்கூ என்றெல்லாம் வகை பிரித்தனர். கவிதைகளுக்கு ஜப்பானில் அபாரமான அந்தஸ்து இருந்தது. குதிரை வண்டிக்காரனுக்கும் அரசனுக்கும்கூடக் கவிதை தெரிந்திருந்தது. விசேஷ காலங்களில் கொகின்ஷூ, மன்யோஷூ, ஹைக்கூக்களைத் திரைச்சீலைகளில் எழுதித் தொங்க விடும் ரசனை இருந்தது. இக்கவிதைகள் மறைபொருளைப் பேசுவதில்லை. நேரடியாகப் பேசுபவை. வாசகன் புரிந்துகொள்வதே அவற்றின் அசல் பொருள் என்றாயிற்று.
மனிதன் இயற்கையிலிருந்து அதிகம் பெற்றுத்தான் வருகிறான். பெற்றதைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அது ஒரு போதும் வற்புறுத்துவதில்லை. கடனாளியாக வாழ்தல் சுதந்திரமான வாழ்வாகாது. அன்பு இருக்கும் இடத்தை வெற்றிடமாக வைத்திருக்க விரும்புதல் தகாது. அதற்குள் வேறு ஏதாவது வந்து உட்கார்ந்து கொள்ளும். அன்பு இருக்கும் இடத்தில் அன்பைத் தவிர வேறு ஏதும் இருத்தல் கூடாது. கவிஞனின் வார்த்தைகளில் வேறு பொருள்களைத் தேடுவது வாசகனின் வேலைதான்.
நிலவில் பசும் புற்கள்/ பறித்து/ இவனின் சொற்கள்/ எத்தனை திறமையானவை/ ஆனால்/ இதயத்தின் வண்ணமோ/ எளிதில் கரைந்து மறையும் –
மாறுபட்ட கோணத்தில் வாழ்க்கையைப் பார்ப்பது. அது வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்தக்கூடும். சோம்பல் ஓய்வாகாது. மாறுபட்ட கோணம் என்பது நம் மனதில் இருக்கிறது. கவிதையும் அப்படியே இருக்கிறது. வாசிப்பு அனுபவத்தில் ஓர் அமைதி இருக்க வேண்டும். புத்தம் புதுக் காலையையும் அதன் மலர்களையும் பெற முடியும். இது இயற்கையின் தாராளமான கொடை, பரிசு. வாழ்க்கை துயர் அன்று. கொண்டாட்டம். நேசமிக்கவர்கள் நீண்ட யாத்திரை செய்தாவது அதை அடைவார்கள். இதில் களைப்பும் இல்லை, பிரயாசையும் இல்லை. உல்லாசப்பயணம்தான்.
அவள் தேடி வருவாள்/ இன்றிரவு என அறிவீர்/ வர்ணம் சிதைந்தாலும்/ என்னவள் நெஞ்சம் புணரும் மகத்தான வேளை / எங்கும் என் காமம் / என் தெரு நெகிழ்ந்து அவிழும் –
நம்பிக்கையின் ஊற்றினால் விளையும் வர்ண ஜாலங்கள் கட்டுடைத்துக் கொண்டு வரும். இதன் பொருள் எளிதில் கிட்டும்.
நேசம் நிறைய/ என்னை அறிய வேண்டும்/ இப்பூவுலகம்/ எனப் பேசும்/ ஆனாலும்/ யோஷிமா மலையில்/ எதிரொலிக்கச் செய்வேன்.
ஜப்பானியக் கவிதை வடிவம் சித்திர எழுத்துக்களால் ஆனது. காஞ்சி, ஈமோஜி முதலான பல்வகையுண்டு. ஒவ்வோர் எழுத்தும் ஒரு சித்திர வடிவம்தான். ஒவ்வொன்றுக்கும் பொருளுண்டு. ஒரு சித்திர எழுத்தைக் கையெழுத்துக்குப் பதிலாகக் காசோலைகளில் பதித்தால் அந்த முத்திரை செல்லுபடியாகும். ஜப்பானியக் கவிதைகளில் வெளி (Space) முக்கியமானது. கியாட்டோ என்ற கோயில் ஆயிரக் கணக்கானோர் கூடுவது. உண்மையில் ஒரு கருங்கல்லாலான நுழைவு வாயில் மட்டுமே உண்டு. அதன் பின்னால் பரந்தவெளி. அந்த வெளியே தரிசனத்திற்குரியது. கணந்தோறும் கணந்தோறும் ருசிதான் வாழ்க்கை. அவர்களின் கொண்டாட்டம். சநோயு – தேநீர் விருந்து இகபானா மலர் அலங்காரம் – நோ நாடகம் – களிப்பின் மேடை. இவற்றில் நுட்பமான அழகைக் கண்டனர். இருபெரும் அணுகுண்டுச் சிதறல்களுக்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்று உலகிற்குக் காட்டமுடிந்தது இதனால்தான்.
ஆஹா!/ என் கூரை எரிந்து விட்டது/ நிலவைப் பார்க்கத் தடையேதுமில்லை; என்று மட்சு பாஷோ குதூகலிப்பான். துயரங்களிலிருந்து கொண்டாட்டம் பெறுவது அதை அடைவது தவம் – வாழ்வுமுறை.
‘‘நண்பகல் ஆலயத்து
வெண்கல மணி
விழியுறங்கும்
வண்ணத்துப் பூச்சி’’
என்பார் வெய்ஸா. இங்கே நிலையாமையோ விரக்தியோ இல்லை. வாழ்க்கை இவ்வளவுதான் என்ற மனோபாவம் இல்லை. துளி அவகாசத்திலும் செம்மையாக அமிழ்ந்து வாழ்தல்தான்.
மௌனம் தாண்டி
என் நேசம் பேசும்
காதலும் வரும்
சொற்கள் வாயிதழ்
கடப்பதாய் –
ஆனாலும்
என் ஆழ்தலில்
நிசப்தமாய்ப்
பெருகும் என் காமம் –
இது வாழ்தல் கலை தான்.
– நா. விச்வநாதன்
சிறப்பான கட்டுரை விசு
ந க துறைவன்