நான் சிறுவனாக இருந்த காலத்தில், எனக்குச் சொந்தமாக எனக்கான வீடோ அல்லது இல்லமோ இருந்ததில்லை. பள்ளி விடுமுறை காலங்களில் எனது பல சொந்தக்காரர்களின் வீடுகள்தோறும் வலம் வருவேன். பள்ளி விடுமுறைக்காலங்களில் முக்கியமாக எனது இரு நெருங்கிய உறவினர் வீடுகளுக்குத்தான் அதிக நாட்கள் போய் தங்குவேன். இவர்களது இரு வீடுகளும் யோடோ நதிக்கு தெற்கிலும் வடக்கிலும் அமைந்திருந்தது. ஒரு வீடு கவாச்சி பகுதியில் உள்ள ஒரு நகரத்திலும் மற்றொரு வீடு செட்சு பகுதியில் உள்ள மலைக்கிராமத்திலும் இருந்தது. நான் இந்த இரு வீடுகளுக்கும் பயணியர் படகில் போய் வந்துகொண்டிருந்தேன். இந்த இரு வீடுகளிலும் “வந்ததற்கு நன்றி” என கூறாமல் “வீட்டிற்கு நல்வரவாகுக” என முகமனுரைப்பார்கள்.
எனது இருபத்தி இரண்டாவது வயதில், கோடைகால விடுமுறையான ஒரு மாத காலத்திற்குள்ளாக மூன்று மரண இறுதிச் சடங்குகளில் பங்கேற்றேன். இதில் அனைத்திலும் எனது காலமான தகப்பனாரின் பட்டு மேலங்கியையும், இடை வெட்டிட்ட நீள கால் சராய்களையும், வெள்ளை காலுறைகளையும், தரித்து கைகளில் புத்த தியானமணிகளை வைத்திருந்தேன்.
முதலாவதாகக் கவாச்சி குடும்பத்து வழிவந்த வீட்டுத் தலைவரின் தாயார் இறந்ததற்குப் போயிருந்தேன். மிகுந்த வயதான அவளுக்குப் பேரன்பேத்திகளே முப்பது வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தனர். நீண்ட கால நோயாளியான அவளைப் பராமரித்து வந்துள்ளனர். அவள் எந்த வருத்தங்களையும் படாமல் போய்ச் சேர்ந்திருப்பாள் என நீங்கள் சொல்லலாம்தான். நான் குடும்பத்தலைவரின் சோகமுற்ற தோற்றத்தையும் பேத்திகளின் சிவந்த கண்களையும் பார்த்தே அவர்களது மனவருத்தத்தை உணர்ந்தேன். ஆனால் இறந்த முதியவளுக்காக என் நெஞ்சம் துக்கிக்கவில்லை. அவளது மரணம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. மேடை முன் வாசனை ஊதுபத்திகளைப் பொருத்தி ஏற்றி வைத்துக்கொண்டிருந்த போதும் எனக்கு அந்த சவப்பெட்டியிலிருக்கும் பெண்மணியின் முகம் நினைவுக்கு வரவில்லை. அப்படி ஒரு நபர் இருந்ததையே மறந்துவிட்டிருந்தேன்.
சவப்பெட்டியை அடக்கம் செய்யத் தூக்கிச் செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டிய சம்பிரதாய துக்கச் சடங்கை நான் துஷ்டி முறை ஆடைகளோடும் கையில் விசிறியும் ஜபமணிகளையும் வைத்துக்கொண்டு செய்தேன். செட்சு விலிருந்து வந்த என் ஒன்று விட்ட அண்ணனும் என்னோடு உடனிருந்தான். எனது அண்ணனின் செய்கைகளை ஒப்பு நோக்கும்போது, வயதில் இளையவனாக நானிருந்தபோதும் நான் செய்த இறுதிச் சடங்கு சம்பிரதாயங்கள் பூரணமாகவும் துல்லியமாகவும் இருந்தது. இந்த சடங்குகளை நிகழ்த்துபவனாக நான் லகுவாக உணர்ந்தேன்.இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட என் அண்ணன் என் செய்கைகளை அதே போலச் செய்தான். வீட்டு முகப்பில் கூடியிருந்த ஐந்தாறு தாயாதிகள் சோகமுகம் காட்டாமல் இயல்பாயிருந்தனர்.
ஒரு வாரம் கழித்து நான் கவாச்சியில் இருந்தபோது செட்சுவிலிருந்து என் அண்ணனின் தொலைப்பேசி அழைப்பின் மூலம் அவனது மணமான சகோதரியின் குடும்ப வழியில் ஒரு மரண சடங்கு நடத்தப்பட வேண்டியுள்ளது என்ற தகவலை அறிந்தேன். நீயும் வரவேண்டும் என சொல்லி அவன் என்னை அழைத்தான். முன் அந்த வீட்டாட்கள் எங்கள் வீட்டுத் துக்க நிகழ்வுகளில் பங்கேற்றிருப்பார்கள் போலிருக்கிறது. நான் செட்சுவிற்கு அண்ணன் துணையோடு ரயிலில் அங்கு சென்று சேர்ந்தேன். துக்க வீட்டில் முதன்மையான சோகம் கப்பிய ஒரு உறவைத் தவிர மற்ற யாரெல்லாம் சொந்த வீட்டுக்காரர்கள் என அறியமுடியவில்லை. யார் இறந்தார் எனக்கூட எனக்குத் தெரியவில்லை. துக்க நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் தங்குமிடமாக என் ஒன்று விட்ட சகோதரியின் வீடு ஏற்பாடாயிருந்தது. அவளது கணவனின் உறவினர் அனைவரும் தனியாக ஒரு அறையில் இருந்தனர். இறந்தவரைப் பற்றி நானிருந்த அறையில் யாருமே பேசவில்லை. அவர்கள் அனைவரும் தட்பவெட்ப உஷ்ணத்தை பற்றியும், சவப்பெட்டி எப்போது நீங்கும் எனவும் பேசிக்கொண்டனர்.
அவ்வப்போது – யார் இறந்தது எனவும் என்ன வயதிருக்கும்? எனவும் கேள்விகள் எழுந்தது. நான் துக்கச் சடங்கிற்கு முன்னவராகச் செயலாற்றிவிட்டு சவப்பெட்டியை வெளியேற்றக் காத்திருந்தேன்.
அந்த மாதத்தின் கடைசிகளில் செட்சு அண்ணன் தனது பணியிடத்திலிருந்து மறுபடியும் அழைத்தான். அவனது மூத்த சகோதரியின் கணவனுக்குத் தூரத்து சொந்தமான ஒருவர் வீட்டில் மரணத்திற்கு சடங்காற்ற தனக்குப் பதிலாக என்னைப் போகச் சொன்னான்.
அவனுக்குத் துக்க வீட்டு விலாசமோ கிராமத்தின் பெயரோ அடக்கம் செய்யப்படும் இடத்தின் பெயரோ எதுவுமே தெரியவில்லை. நாங்கள் இருவரும் தொலைப்பேசியில் பேசும்போது அவன் நகைச்சுவையாக,” நீ இப்போது இறுதிச் சடங்கு சம்பிரதாய சடங்காளனாக ஆகிவிட்டதால்தான் உன்னைக் கேட்கிறேன்” என்றான்.
நான் திக்பிரமையடைந்தேன். தொலைபேசி பேச்சு என்பதால் என் முகம் போன போக்கை என் அண்ணன் அறியவில்லை. நான் எனது மூன்றாவது இறுதிச் சடங்கை நிகழ்த்தப் போனேன். அப்போது கவாச்சி வீட்டில் உடனிருந்து கேட்டுக்கொண்டிருந்த அண்ணனின் இளம் மனைவி கிண்டலாகப் புன்னகைத்து, “என்னமோ நீ பிண அலங்கரிப்பாளன் ஆனது போலிருக்கே” என்று தையல் செய்து கொண்டே என் முகத்தைப் பார்த்துச் சொன்னாள். அந்த நிகழ்விற்குப் போக முதல்நாள் இரவு செட்சுவீட்டில் தங்கி மறுநாள் அங்கு போய்ச் சேர முடிவெடுத்து தற்போது யோடோ ஆற்றைக் கடந்தேன்.
எனது அண்ணனின்,” இறுதிச் சடங்கு சம்பிரதாய சடங்காளன்” என்ற வார்த்தை யோசிக்க வைத்தது. எனது இறந்த கால வாழ்வு இம்மாதிரி வார்த்தைகளால் உணர்ச்சிவசப்பட வைத்தது. எனது குழந்தைப்பருவத்திலிருந்து தற்போது வரை எண்ணிலடங்கா இறுதி யாத்திரைகளில் கலந்திருக்கிறேன்தான். எனது மிக நெருங்கிய உறவுகளின் மரணங்களில் மட்டுமல்லாமல் கிராமத்தில் பரஸ்பரமாக துக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வீடுகளுக்கு எனது குடும்பத்தின் பிரதிநிதியாகப் போயிருக்கிறேன்.
செட்சு பகுதியின் மரண இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை கற்றுத் தேர்ந்துகொண்டேன்.
எனக்கு புத்த தர்மத்தைக் கடைபிடிக்கும் சுத்த பிரதேச மற்றும் புது சுத்த பிரதேசத்தின் இறுதிச் சடங்குகள் நன்றாக அத்துப்படியாயிருந்தது. இதுமட்டுமல்லாமல் ஜென் மற்றும் நிச்சிரென் வகைமை இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு ஐந்தாறு நபர்களின் இறுதி மூச்சு நீங்கும் வரை உடனிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. இறந்த உடல்களுக்கு மூன்றோ அல்லது நான்கு முறை உதடுகளில் கடைசி நீர் பருகக் கொடுத்து ஈரப்படுத்தியிருக்கிறேன். நான் முதல் ஊதுபத்தியும் கொளுத்திவைத்து பின் வழியனுப்பும் முகமாகக் கடைசி ஊதுபத்தியும் ஏற்றியுள்ளேன். எரியூட்டியபின் சாம்பலை சேகரித்து ஜாடியில் அடைக்கும் சடங்குகளிலும் பலமுறை இணைந்திருக்கிறேன். புத்த மதமுறைப்படி இறப்பிற்குப் பின் நாற்பத்தி ஒன்பதாவது தினம் செய்யும் சடங்குகளும் எனக்கு நல்ல பரிச்சயமே.
அந்த கோடைக்காலத்தில் நான் கலந்துகொண்ட மரண நிகழ்வுகளில் இறந்த அந்த மூன்று பேரை நான் பார்த்ததுகூட கிடையாது. இதனால் எனக்கு அவர்கள் மேல் தனிப்பட்ட முறையில் இழப்புதுயர் கிடையாது. ஆனால் ஊதுபத்தி மணம் கமழும் இடுகாட்டில் எனது உலகாயத எண்ணங்களைக் களைந்துவிட்டு இறந்தவரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பேன். பொதுவாக அந்தச் சூழ்நிலையில் இளைஞர்கள் தலை குனிந்தும் பக்கவாட்டில் கைகளைத் தொங்கவிட்டும் நின்றிருக்கும்போது, நான் எனது இரு கைகளையும் இணைத்து வணங்கி தியானிப்பேன். இதை கண்ணுறும் மனிதர்கள் நான் இறந்தவருக்காக மற்றவர்களைக் காட்டிலும் தூய பூஜிப்பு மனநிலையில் இருப்பதாக நினைத்துக்கொள்வர். நான் இந்த எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்குவதற்கு என்ன காரணமென்றால் எனக்கு இந்த இறுதிச் சடங்குகள் எனக்கு நெருங்கியவர்களின் வாழ்வையும் சாவையும் யோசிக்க வைப்பதால்தான்.
இதை ஸ்மரிக்கும்போது என் இதயம் அமைதியடையும். என்னோடு அதிக தொடர்பற்ற மனிதர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கு பெரும்போது, எனது தனித்த நினைவுகளோடு, அவர்களுக்காக இடுகாட்டுக்குப் போய் சடங்குகளை செய்துவைக்க வேண்டும் என்ற ஆவல் மீதூறும். எனது தனித்த நினைவுகளுக்காகவும் பக்தியாகத் தியானித்து ஊதுபத்திகளைக் கொளுத்தி மணக்கவைக்கச் செய்வேன். இம்மாதிரி இளைஞனான நான் தெரியாதவர்களின் இறுதிச் சடங்குகளிலும் செய்யும் பக்தி மிளிரும் செயல் நடிப்பல்ல; உண்மையில் அது என் உள்ளூறும் சோகத்தின் பிரதிபலிப்பே.
எனது பெற்றோரின் மரண இறுதி நிகழ்வுகள் பற்றிய ஞாபகங்கள் ஏதும் எனக்கு இல்லை.அவர்கள் உயிரோடிருந்த போதும் அதுபற்றிய நினைவுகள் எனக்கு ஞாபகத்திலில்லை.
என் உறவினர்கள் யாவரும்,” எப்போதும் உன் பெற்றோரை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்” என்றாலும் என்னால் என்ன முயன்றும் நினைவுபடுத்திக்கொள்ளவே முடிவதில்லை.
புகைப்படத்தைப் பார்க்கும்போது எனக்கு அது ஓவியத்திற்கும் உயிருள்ளதற்கும் இடைப்பட்டதாகத் தோன்றுகிறது. சொந்தமுமில்லாமல் அயலாருமில்லாமல் நடுவாந்தரமான ஒன்று. புகைப்படத்தைப் பார்க்க நேரும்போது இனம்புரியாத மனஅழுத்தமும் கூச்சமும் தோன்றும்.
யாராவது என் பெற்றோர் குறித்துப் பேசும்போது என்ன மாதிரி தோரணையில் கேட்டுக்கொள்வது என்பதே குழப்பமாயிருக்கும்.
சீக்கிரம் அவர்கள் பேசிமுடித்தால் பரவாயில்லை என நினைப்பேன். அவர்கள் பெற்றோரின் இறந்த தேதிகளையோ அவர்களின் அப்போதைய வயதைப் பற்றிச் சொல்லும்போதுகூட அது ஏதோ எண்கள் என அப்போதே மறந்து போவேன்.
எனது தகப்பனாரின் இறுதி நிகழ்வின்போது நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததாக எனது அத்தை சொன்ன போது, நான் “பீடத்தில் உள்ள மணியை ஒலிக்கவேண்டாமே”
“தீபத்தை அணையுங்கள்”
“அகலில் மீந்த எண்ணெய்யை எடுத்து தோட்டத்தில் கொட்டுங்கள்” என பேசி விலக்கினேன். வினோதமாக இந்த கதைதான் என்னை உருகவைத்தது.
டோக்கியோவிற்குப் பழைய பெயரான ஈடோ என அழைக்கப்படும் காலத்திலேயே வந்து சேர்ந்தாராம். எனது தகப்பனார் டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர். யூஜிமா டென்ஜின் மடாலய கோவிலில் அந்த மருத்துவப் பள்ளியின் தலைவரின் பித்தளை உருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது.
டோக்கியோ போன எனது முதல் நாளில் அவரது சிலையைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோது உயிர்ப்போடு இருப்பதுபோன்ற ஒரு அலாதியான உணர்வால் அதை நேரே பார்க்க முடியாமல் கூச்சப்பட்டேன்.
நான் ஆரம்ப பாடசாலையில் படிக்கத் துவங்கிய ஆண்டில் எனது பாட்டியின் இறப்பு நிகழ்ந்தது. என் தாத்தாவோடு சேர்ந்து பாட்டியும் என்னை வளர்த்து வந்தனர், நோயாளி குழந்தையான என்னைப் பராமரிக்க மெனக்கெட வேண்டியதில்லை என ஆசுவாசப்பட ஆரம்பிக்கும் நேரத்தில் இறந்து போனாள். அன்று சரியான மழை பெய்தது. அதனால் சில ஆட்கள் என்னை இடுகாட்டிற்கு முதுகில் தூக்கிச் சென்றார்கள். பத்து பதினோருவயது ஆன என் அக்காள் வெள்ளுடை தரித்து வந்தாள். அவளையும் ஒருவர் முதுகில் வைத்துத் தூக்கிக்கொண்டு அந்த செம்மண் படிந்த மலைப்பாதையில் முன் சென்றார்.
எனது பாட்டியின் மரணத்தின் போதுதான் எனக்கு எங்கள் வீட்டுப் பூஜை மேடை மீது உண்மையான அக்கறையும் பக்தியும் உண்டானது. எனது தாத்தா பார்க்காத போது எங்கள் குடும்ப பூசை மேடை அமைந்த அந்த பிரேத்யேக அறையைத் திருட்டுத்தனமாக நோட்டம் விட்டேன்.தாத்தா கவனிக்காத போது அதன் இழுப்பு கதவை மீண்டும் மீண்டும் லேசாகத் திறந்து திறந்து மூடினேன். முழுவதுமாகத் திறந்து பூசை மேடைக்குப் போய் நிற்பதை நான் வெறுத்ததையும் நினைவு கூர்ந்தேன்.
தொடுவானத்திற்கருகே சாயும் சூரியக்கதிர்களை நான் பார்க்கும் போதெல்லாம், எனக்கு எட்டுவயதாக இருந்தபொழுதில், எங்கள் பூஜை அறை மேடையை நிறைத்த ஒளியை நினைத்துக்கொள்வேன்.
எனது ஒழுங்கும் அழகுமற்ற ஒன்றாம்வகுப்பு படிக்கும் பையனின் கையெழுத்தில் எனது பாட்டியின், இறப்பிற்குப் பின் கொடுக்கப்பட்ட புத்தமத பெயரை பூஜை அறையின் வெள்ளை இழுப்பு கதவில் எழுதி வைத்திருந்தேன். நாங்கள் அந்த வீட்டை விற்கும் வரை அவ்வெழுத்துக்கள் அழியாமல் இருந்தது.
பல ஆண்டுகள் கழிந்தபின் எனக்கு,எனது அக்காவின் உருவம் தெளிவாக நினைவில் நிற்காமல்,யாரோ ஒருவரின் முதுகில் துஷ்டி வெள்ளுடை தரித்து சவாரி போனது மட்டும்தான் நினைவில் மங்கலாக இருந்தது.கண்களை மூடி பலமாக யோசித்து, அந்த உருவத்திற்குத் தலையையும் அவயங்களையும் கற்பனை செய்து பார்த்தாலும் தெளிவில்லாமல், மழையும் செம்மண் பாதையும் மட்டும்தான் நினைவிலாடியது. எனது மனக்கண்ணில் அன்றைய நிகழ்வுகளை நேரடியாக கொண்டுவரமுடியவில்லையாதலால் எரிச்சலாக இருந்தது. அக்காளை தூக்கிச் சென்ற மனிதனின் தோற்றமும் நினைவுக்கு வரவில்லை. இதனால் மென்மையான வெள்ளுடை தரித்த உருவம் மிதந்து போவதாக மட்டும்தான் என் சகோதரியைப் பற்றிய நினைவு எனக்கு எஞ்சியது.
எனது அக்காள் எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தாள்.அப்போது எனக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். எனது பதினொன்றோ பன்னிரெண்டு வயது நடக்கும்போது அந்த உறவினர் வீட்டிலேயே அவள் இறந்து போனாள். எனது தாய்தந்தையின் நினைவுகளை அறியாததைப்போலவே என் அக்காளைப்பற்றிய நினைவும் எனக்கு இருக்கவில்லை. எனது தாத்தா, ” உன் சகோதரியின் இறப்பிற்காகத் துக்கப்படு,துக்கப்படு” என படுத்தியெடுத்தாலும், எனது மனம் எப்படி துக்கப்பட எனப் புரியாமல் குழம்பலாயிற்று. எனது முதிய தீனமான தாத்தாவின் துயரம் கரைகடந்து போவதைப் பார்த்துத்தான் என் உள்ளம் குன்றிப்போனது. எனது உணர்வுகள் தாத்தாவின் துயரத்தோடு இணைந்து நின்றதே தவிர என் அக்காளிடம் போகவேயில்லை.
எனது தாத்தா சோதிட சாஸ்த்திரத்தைக் கணித்து சிறப்பாகச் சொல்லக்கூடியவர். அவரது அந்திம காலத்தில் கண்பார்வை மங்கி தொந்திரவு செய்து, கடைசி காலக்கட்டங்களில் கிட்டத்தட்ட பார்வை இழந்துபோகும் நிலையை அடைந்தார்.
எனது அக்காள் இறக்கும் தறுவாயில் இருப்பதாக செய்தியறிந்த என் தாத்தா அமைதியாக தன் சோதிட கோல்களை அடுக்கி தன் பேத்தியின் ஆயுசைப்பற்றி கணித்துநோக்கினார். அவரது கண்பார்வை மிகவும் மோசமாக இருந்ததால் நான் அவரது சோதிடகோல்களை வரிசைப்படுத்தி நேராக்க உதவி செய்யவேண்டியதாக இருந்தது.
பகல் இருண்டு முடியும் வேளையாக இருந்த போது நான் எனது தாத்தாவின் முதிய வயதான முகத்தையே கூர்ந்து நோக்கினேன். இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் என் அக்காளின் மரணச்செய்தி வந்தபோது அதை அவரிடம் எப்படிச் சொல்வதென தவித்தேன். அந்த செய்திக்குறிப்பை இரண்டு அல்லது மூன்று மணி நேரமாக தாமதித்து அதன் பின்பே படித்துச்சொல்ல முடிவெடுத்தேன். அந்தவயதில் என்னால் அடிப்படையான சீன எழுத்துருக்களைப் படித்துவிட முடிந்தாலும், கூட்டெழுத்தில் எழுதியிருந்ததைப் படிக்க முடியாமல், தாத்தாவின் உள்ளங்கையில் எழுதி எழுதிக் காட்டி அவர் புரிந்து படித்துச்சொல்ல கேட்டுக்கொள்வேன். இப்போதுகூட எனது தாத்தாவின் கையைப்பிடித்து அந்த எழுத்துக்களைப் படித்துப்புரிந்து கடிதத்தை விளக்கியதை நினைக்கும்போது எனது இடது உள்ளங்கை குளிர்ந்து போகிறது.
சக்ரவர்த்தியின் உடைமைகளையும் பட்டங்களையும் பெற்ற ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற மாலைப்பொழுதில்தான் என் தாத்தாவும் இறந்துபோனார். அந்த கோடைக்காலத்தோடு எனக்கு பதினாறு வயதாகியிருந்தது.
தாத்தா தனது மூச்சை இழுத்து விட முயன்றபோது சளிக்கோழை வந்து மூச்சுக்குழலில் அடைத்து தொந்திரவு செய்ததால் நெஞ்சைப் பிசைந்து கொண்டார். அவரது படுக்கையருகே இருந்த ஒரு முதியவள், “இவர் புத்தரைப்போல இந்த கடைசி நேரத்தில் ஏன்தான் இவ்வளவு துன்பப்பட வேண்டுமோ?” என்றாள்.
அந்த சித்ரவதையைக் காணப்பெறாமல் நான் அடுத்த அறைக்குள் ஓடி ஒருமணி நேரமாக அங்கேயே பதுங்கிக்கொண்டேன்.
ஒரு, ஒருவருடம் கழிந்தபின் என் தூரத்து சகோதரிகளில் ஒருத்தி, இம்மாதிரி மிக நெருங்கிய உறவு இறுதி நிலையில் இருக்கும்போது அருகில் இல்லாமல் நான் இருந்ததற்குக் கடிந்துகொண்டாள். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டேன்.
எனது இச்செயல்கள் இம்மாதிரியாகப் பொருள் கொள்ளப்பட்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. நான் சிறுவனாக இருந்தபோதே எதற்கும் விளக்கம் கொடுப்பதற்கு எனக்கு விருப்பம் இருந்ததில்லை.
அந்த முதிய பெண்மணியின் வார்த்தைகள் என்னை மிகவும் ஆழமாகக் காயப்படுத்தியது.
நான் ஏன் இறப்பின் அருகாமையில் தாத்தா இருந்தபோது விலகி ஓடினேன் என்பதை ஒரு வார்த்தையால் விளக்கினால்கூட அது அவருக்குச் செய்யும் இழுக்கு என்பதைப்போல் நினைத்தேன்.
அதன்பின் தற்போது எனது சகோதரியின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து எனது தனிமையுணர்வு என்னுள் ஆழ்ந்து இறங்கியது. நான் யாருமற்ற அனாதி என்னும் உணர்வு என்னைச் சூழ்ந்தது.
இறுதிச் சடங்கு நாளன்று, துஷ்டி அனுஷ்டிப்பாளர்களை வரவேற்றுக்கொண்டிருந்தபோது, எனக்கு திடீரென மூக்கிலிருந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது. எனது மூக்குத் துவாரத்திலிருந்து ரத்தம் வழிவதை உணர்ந்த நான் எனது கிமோனா உடுப்பின் இடுப்பு பட்டி முனையில் மூக்கை பொத்திக்கொண்டு நடைக்கல் பாவிய தோட்டத்தில் வெறுங்காலோடு புகுந்தோடினேன்.
யாரும் பார்க்காதவாறு ஒரு மரத்தின் மறைவில் கிடந்த ஒரு மூன்றடி உயர கல்மேல் தலைவைத்து மல்லாந்து படுத்து ரத்தம் ஒழுகுவது நிற்கக் காத்திருந்தேன்.ஒரு பெரும் முதிய ஓக் மரத்தின் இலைகளின் வழியே கண்ணைக் கூச வைக்கும் சூரிய ஒளி வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. இலைகளின் ஊடே சிதறுண்ட நீல வானத்தைக் காண முடிந்தது. எனக்கு இதுதான் முதல்முதலாக மூக்கிலிருந்து ரத்தம் வழிவது என யோசித்தேன். எனது தாத்தாவின் மரணம் எவ்வளவு தூரம் என்னை பாதித்துள்ளது என்பதை இந்த ரத்தஒழுக்கு கவனப்படுத்தியது.
குடும்பத்தின் ஒரே ஆளான நான் வந்தவர்களை வரவேற்கவும், சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யவும் இருந்தபோது எனக்கான ஓர்மை கிடைக்கவில்.
என்னால் தாத்தாவின் மரணத்தின் விஸ்தீரணத்தை உணரவும் அது எப்படி என் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறது என்பதையும் விவரணப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
நான் என்னைப் பூஞ்சையானவன் என நினைத்ததில்லை. ஆனாலும் இந்த ரத்தஒழுக்கு என்னை அதைரியப்படுத்தியது. என் ஒளிவு என்னைக் கோழை என நினைக்கவைப்பதை நான் விரும்பவில்லை.
நான்தான் தலையாய துஷ்டியாளன். மேலும், சவப்பெட்டியை வெளிக்கொண்டு போகும் நேரமும் நெருங்கியது. இந்த சூழலில் எனது நடவடிக்கை மன்னிக்கமுடியாததாகவும், பெரும் சச்சரவையும் கிளப்பியது. தாத்தா இறந்தபின் வந்த மூன்று நாட்களில், அந்த தோட்டக்கல்லின் மேல் தலைசாய்த்திருந்த போதுதான் எனக்கான ஒரு அமைதியை உணர்ந்தேன். நான் ஒதுக்கப்படுகிறேன், தனியாகிறேன் என்ற எண்ணமும் என் நெஞ்சில் வளர்ந்தது.
மறுநாள் காலை சாம்பலையும் எலும்புகளையும் சேகரிக்கும் சடங்கிற்காக எனது உறவினர்கள் ஆறேழுபேரோடும் சக கிராமத்தாருடனும் சென்றேன். அந்த மலைப்பிரதேசத்து எரியூட்டுமிடத்தில் மேற்கூரையென ஏதுமில்லை. நாங்கள் எரியூட்டிய சிதைமேடையில் சாம்பலைக் கிளைத்தபோது உள்ளே இன்னும் தீக்கங்குகள் கனன்றன. அதிலிருந்து எலும்புகளை சேகரிக்கும்போது எனக்கு மறுபடியும் மூக்கிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. நான் வைத்திருந்த மூங்கில் குச்சிகளைக் கீழே வீசிவிட்டு ஓரிரு வார்த்தைகளை முணகியபடியே எனது இடுப்பு பட்டியை லகுவாக்கி மூக்கை அதால் பிடித்துக்கொண்டு மலைப்பகுதியின் உச்சியை நோக்கி ஓடினேன். முந்தைய நாளைப்போலல்லாமல் நான் என்ன செய்தும் என் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவது நிற்கவேயில்லை.
எனது கைகளிலும், கிமோனா இடுப்பு பட்டியில் பாதியளவிற்கும் ரத்தம் பரவியிருந்து தரையில் முளைத்திருந்த புல்லிதழ்களில் சொட்டியது. அமைதியாக மல்லாந்து படுத்திருந்த நான், குன்றின் கீழிருந்த குளத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். தூரத்து குளத்துநீரில் எதிரொளித்த சூரிய ஒளிக்கதிர்கள் என்மேல் பிரதிபலித்ததால் மயக்கம் வருவதைப்போல உணரவைத்தது. என் கண்கள் இருண்டுகொண்டு வந்தன. ஒரு அரை மணி நேரத்திற்குப்பின் தூரத்திலிருந்து பல குரல்கள் என்னைத் திரும்பத்திரும்ப கூவி அழைப்பதைக்கேட்டேன். எனது ரத்தம் தோய்ந்த இடுப்பு பட்டியை மறைத்துக் கட்டிக்கொண்டேன். அது கருப்பு நிறத்தில் இருந்ததால் யார் பார்வைக்கும் தெரியாது என எண்ணியபடியே நான் மறுபடியும் அந்தச் சடங்கில் போய்க் கலந்துகொண்டேன்.
எல்லோருடைய பார்வையிலும் ஒரு வெறுப்பு தெரிந்தது. எலும்புகளைப் பிரித்தெடுக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர். வெறுமையான மனதுடனே அந்தச் சிறிய எலும்புத் துண்டுகளை சேகரித்தேன். அந்த நாள் முழுக்க ரத்தத்தால் காய்ந்து உறைந்து கரடுதட்டிப்போன கிமோனா இடுப்பு பட்டியையே அணிந்திருந்தேன். எனது இந்த இரண்டாவது ரத்த ஒழுக்கு யாராலும் கண்டுபிடிக்கப்படாமலேயே முடிந்து போனது. நான் யாரிடமும் இதைச் சொன்னதுமில்லை. எனது குடும்பத்தைப் பற்றியும் யாரும் என்னிடம் கேட்டதுமில்லை, நானும் என் குடும்பகதைகளைச் சொன்னதுமில்லை.
நான் நகரத்திலில்லாமல் தொலைதூர கிராமத்தில் வளர்க்கப்பட்டவனாதலால், அங்கிருந்த ஐம்பது குடும்பங்களும் என்மேல் பரிதாபப்பட்டு அழுதார்கள் எனச் சொன்னால் அது மிகு மிகையாகாது. சவ ஊர்வலம் வரும் ஒவ்வொரு முச்சந்தியிலும் கிராமத்துப்பெண்கள் சவப்பெட்டிக்குச் சற்றே முன் சென்று கூக்குரலிட்டும் ஓலமிட்டும் அழுதனர். ” என்ன கொடுமையிது, எவ்வளவு பரிதாபமிது” என அழுதவாறே அவர்கள் சொல்வதைக் கேட்ட எனக்கு ஒருவிதமான கூச்சத்தை ஏற்படுத்தி விரைப்பாக நடக்க வைத்தது. ஊர்வலம் ஒரு முச்சந்தியைக் கடந்து அடுத்ததற்கு போவதற்கு முன்பாக குறுக்கு வழியில் விரைந்து அடுத்த முச்சந்திக்கு வந்து நின்று ஓலமிட்டு அந்த பெண்கள் அழுதனர்.
எனது குழந்தைப்பருவத்திலிருந்து என்னைச் சுற்றியிருந்தோரின் பரிவுணர்ச்சி என்னைப் பரிதாபகரமானவனாக ஆக்க முயன்றது. என் பாதி நெஞ்சம் இந்தப் பரிவுகளை ஏற்றுக்கொண்டாலும், அடுத்த பாதி அதைக் கம்பீரமாக நிராகரித்தது. எனது தாத்தாவின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு எனது பாட்டியின் இளைய சகோதரி, என் மாமா, எனது ஆசிரியர் மற்றும் என் நெருங்கிய சொந்தங்கள் என பலரது மரணத்திற்காக நான் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியிருந்தது. எனது அப்பா விட்டுப்போன சம்பிரதாய உடைகளில் நான் ஒரே ஒரு முறைதான் மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்துகொண்டேன். அது எனது ஒன்று விட்ட சகோதரனின் மணநாளாகும். மற்றபடி எண்ணற்ற பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் மரண இறுதிச் சடங்குகளாகவே அமைந்ததால் இதை அணிந்து இடுகாடுகளுக்குச் சென்றேன். எல்லோரும் என்னை மரண நிகழ்வு சடங்காளனாக ஆக்கிவிட்டனர்.
நான் அந்த கோடைக்காலத்தில் கலந்துகொண்ட மூன்றாவது இறுதிச்சடங்கு எனது ஒன்று விட்ட சகோதரனின் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. நான் என் சகோதரனின் வீட்டிற்கு விருந்தாளி போல் போய் ஓரிரவு தங்கி மறுநாள் இதற்காகக் கிளம்பும் தருவாயில், சகோதரனின் குடும்ப அங்கத்தினர் ஒருவர் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறே, “நாங்கள் மறுபடியும் உங்களை அழைக்க நேரலாம், எங்களது சொந்தக்காரப்பெண் ஒருத்தி என்புருக்கி நோயாளி, அவள் இந்த கோடையைத் தாண்டமாட்டாள் என நினைக்கிறோம்”
“சடங்காளன் இல்லாமல் இறுதிச்சடங்கை நடத்திக்கொள்ளலாமா என நான் யோசிக்கிறேன்?” என்றாள்.
நான் என் சம்பிரதாய உடைகளை மூட்டை கட்டிக்கொண்டு செட்சு வில் உள்ள எனது சகோதரனின் வீட்டிற்குத் திரும்பினேன்.தோட்டத்திலிருந்த என் சகோதரனின் மனைவி நகைச்சுவையாகப் புன்னகைத்துக்கொண்டே “வீட்டிற்கு நல்வரவு பிண அலங்கரிப்பாளரே”
“எதையாவது உளறுவதை நிறுத்திவிட்டு கொஞ்சம் உப்பை எடுத்து வா” என வாயிலருகே நேராக நின்றபடியே சொன்னேன்.
“உப்பா? அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போறீங்க?
“நான் என்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளப்போகிறேன், அதைச் செய்யாமல் நான் உள்ளே வரமுடியாது.”
“என்ன கொடுமை இது பைத்தியக்காரத்தனம்”
எனச் சொல்லியபடியே ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டு வந்து நாடகீயமாக என் மேல் தெளித்தாள்.
“போதுமா”
நான் கழட்டிப் போட்ட வியர்வை மணம்வீசும் கிமோனா உடுப்பை எடுத்து வெயிலில் காயப்போட எடுத்துப்போன என் உறவினள், அதை முகர்ந்து பார்த்தபடியே புருவத்தைச் சுளித்து ஒரு பகடியை நினைத்துப் பார்த்தபடி
“உங்க கிமோனா புதைகுழி போல வாசமடிக்குது, பயங்கரம்”.
“உனக்குப் புதைகுழியின் வாசம் தெரியவில்லை என்பது கெட்ட சகுனமே”
அவள் சிரித்த படியே, “எனக்குத் தெரியும், இது பொசுங்கும் முடி போல வாசமடிக்குது” என்றாள்.
யசுநாரி கவபத்தா
தமிழில்- விஜய ராகவன்
[tds_info]
ஆசிரியர் குறிப்பு:
யசுநாரி காவாபட்டா (1899-1972) ஜப்பானிய நாவலாசிரியர், சிறுகதையாளர். 1968 இல் நோபல் பரிசு பெற்றவர். 1972 இல் தற்கொலை செய்து கொண்டவர். அதுதற்கொலையானதல்ல தற்செயலானது என அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் குறிப்பிட்டனர். அவரது நண்பரும் சக எழுத்தாளருமான யுகியோ மிஷிமாவின் தற்கொலை (1970) தந்த அதிர்ச்சியால் இறந்தார் என்று கூறுவதும் உண்டு.
மொழிபெயர்ப்பாளர்:
விஜயராகவன்: திரு. மனோன்மணியின் ’புதிய எழுத்து’ இதழில் , இசபெல்லா அலேண்டே, D.H லாரன்ஸ், சல்மான் ரஷ்டி, பாஷாவிஸ் சிங்கர் ஆகியோரின் சிறுகதைகளை முதலில் மொழியாக்கம் செய்துள்ளார். பின்பு காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக ரேமண்ட் கார்வரின் ” வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு” மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் விஜயராகவன் மொழிபெயர்த்த கதைகளும் வெளியாகின. இவரின் அனைத்து மொழியாக்க கதைகளையும் “தேரையின் வாய்” என்ற தலைப்பில் புதுநெல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
[/tds_info]
அபூர்வமான கதை. சரளமான மொழிபெயர்ப்பு. இதோடு மூன்று முறை படித்துவிட்டேன். துக்கம் இல்லை ஆனால் மெளனத்தையும் ரகசியத்தையும் வைத்துக்கொண்டு உலகத்து நிலையாமையை கண்கொண்டு பார்த்து எதிர்கொண்டுவிட முடியும் என்கிறாரா காவாபட்டா. சாவு வெறுமனே அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கிற நுழைவாயில்கள் மட்டும்தான் போலும்.