”முதல் தலைகோதல் நினைவிருக்கா?”
தலைவிரிகோலமாக ஆய்வுமேடையில் படுத்துக்கொண்டு மருத்துவர்களுக்கு காத்திருக்கும் வேளையிலா இப்படி ஒரு கேள்வி?
கழிவது நிமிடங்களா மணிகளா நாட்களா என்று அறியாதபடி தனியாகப் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தால் சிந்தனைகள் பல்வேறு திசைகளிலும் ஓடி இப்படித்தான் பலவித எண்ணங்களும் கேள்விகளும் மனதில் எழும்.
முதலில் தலையை கோதியது யார் என்கிற கேள்வியை உங்களிடம் கேட்டால் நீங்கள் பெற்றவளைத் தானே சொல்லுவீர்கள்?
நானும் ஒரு பேச்சுக்கு அப்படியே சொல்லலாம். ஆனால் அதற்கு என் தாய் என்னை வேண்டா வெறுப்பாகப் பெற்றிருந்திருக்கக் கூடாது இல்லையா?
பிறந்த சிசுவிற்கும் கணவனுக்கும் புறமுதுகிட்டுப் படுத்து உன் வற்புறுத்தலால் பிறந்தவளை நீயே கொஞ்சு என்று சொல்லாமல் சொன்னவளாகவோ, உன் மகனால் தானே நான் இரண்டாவது வயிற்றை அறுத்துக் கொண்டது என்று ஒரு வாரக் குழந்தையை மாமியாரிடம் போட்டு விட்டு, மூத்த பிள்ளையை இழுத்துக் கொண்டு ஊருக்கு போனவளாகவோ இருக்கக் கூடாது இல்லையா?
இதையெல்லாம் பின்னொரு நாளில் என் மகள் பிறந்த சேதி கேட்டு, ஊரிலிருந்து பார்க்க வந்திருந்த ரஞ்சிதம் அத்தை தான் சொன்னாள். நான் அப்போது என் மகளை மடியில் கிடத்தி பால் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
”அன்னிக்கு ராவெல்லாம் மழை.. இன்னிக்கே எல்லாத்தையும் கொட்டிக் கணக்குத்தீத்தரணும் போல அப்படி ஒரு மழை” சொல்லிக் கொண்டிருந்த அத்தையின் கண்களில் என்றோ பெய்த மழையின் ஈரம் மினுங்கியது.
”ஒங்கம்ம கிளம்பிப் போயிட்டா.. ஒன் அப்பன் கோவிச்சுட்டு தண்ணியை போட்டுட்டு எங்க கிடந்தானோ தெரியாது வீடு வந்து சேரலை.
எங்கம்மை ஒன்ன ஒரு பழஞ்சீலைல சுத்தி உரலுக்குள்ள கிடத்திட்டா. பொட்டப்புள்ளை இருந்தா என்ன, செத்தா என்னன்னு ஒரு மொறத்தைக் கொண்டு கவுந்தாப்புல மூடியும் வச்சுட்டா. லேசா ஒரு சிணுங்கச்சத்தம் கேட்டுச்சு. அப்புறம் ஒரு சின்ன சத்தமுண்டா ஓங்கிட்ட இருந்து? எனக்குன்னா ஈரக்கொலை அறுந்து போச்சு”
நீங்க என்னை தூக்கிக்கலையா அத்தை என்று கேட்க நினைத்து, மூணு பெண் பிள்ளைகள் அவருக்கு என்பது நினைவுக்கு வர, பேசாமல் இருந்தேன்.
”ராத்திரியெல்லாம் பொட்டுத் தூக்கம் இல்லை. விடிஞ்சும் விடியாமலும் மனசு கேட்காம ஓடி வந்து மொறத்தைத் தூக்கிப் பார்க்கேன், கைக்குள்ள கொத்து முடியைப் பிடிச்சு வாய்க்குள்ள வச்சு சப்பிக்கிட்டு, மொட்டு மொட்டுன்னு முழிச்சுக்கிட்டு கிடக்க.”
வேகவேகமாக பால் குடித்துக் கொண்டிருந்த மகளின் இறுக மூடிய கைக்குள் பிடிபட்டிருந்த அவளது கொத்து முடிகளை ஒரு கணம் பார்த்து மெதுவாக விடுவித்தேன்.
”ஆயுசு கெட்டி சவம் போய் சேர்ந்துச்சா பாருன்னு ஒன் ஆச்சியே வந்து ஒன்ன தூக்கிக்கிட்டா”
அப்படி எடுத்துக் கொண்ட ஆச்சி மட்டும் எங்கிருந்து தலை கோதி வளர்த்திருப்பாள்?
ஒரு சாதாரணக் கேள்வி ஏன் இப்படி என் சிந்தனையை இவ்வளவு பின்னோக்கி பிறப்பு வரை போகச் செய்து விட்டது? ஒரு கேள்வி பதிலைத் தராமல் ஏன் எப்போதும் பல்வேறு கேள்விகளையே உருவாக்குகிறது?
”இன்னும் எவ்வளவு நேரம் சார்?”
இந்தக்கேள்வி நான் படுத்திருந்த அறையின் வெளியிலிருந்து யாரோ கேட்டது. காத்திருப்பைப் போல அதிகக் கேள்விகளை உருவாக்குவது வேறொன்றுமில்லை போலும்.
முதல் என்றால் கடைசி என்றும் ஒன்று உண்டு தானே? கடைசியாக யார் எனக்கு தலை கோதியது?
போன முறை இதே போல் தலையை விரித்துப் போட்டபடி ஹாஸ்பிடலில் படுத்திருந்த போது ஈஈஜி எடுத்த இளைஞன் தான் நினைவுக்கு வந்தான்.
திடீரென்று ஆரம்பித்த தலைவலி மூன்று மாதமாகியும் நிற்காமல் வலித்தது. எடுத்துக் கொண்ட வலி மாத்திரைகளோ தடவிப் பார்த்த களிம்புகளோ எதுவும் வேலைக்கு ஆகவில்லை. ஆவி பிடி, பற்றுப் போடு.. கேட்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு கை மருத்துவம் சொல்லிக் கொண்டே தான் இருந்தார்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல நானும் அவற்றையெல்லாம் செய்து கொண்டே தான் இருந்தேன். எதற்கும் கேட்கவில்லை இதோடு மருத்துவர் பரிந்துரை வேறு சொன்னார்கள். அப்படிப் பரிந்துரையின் பேரில் போயிருந்த தில்லியின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை மருத்துவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மருந்து மாத்திரைகளோடு சில பரிசோதனைகளையும் எழுதிக்கொடுத்திருந்தார்.
ஈஈஜி தவிர்த்து பிற பரிசோதனைகள் அன்றே முடிந்து விட்டன.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் ஒவ்வொரு விதி. எம்.ஆர்.ஐயில் நாம் அணிந்திருந்த எல்லாவற்றையும் களைந்து விட்டு அவர்கள் கொடுத்த உடையை அணியச் சொன்னார்கள். தாலி உட்பட அனைத்தும் நீக்கி ஆஸ்பத்தரி உடையோடு படுத்திருக்கையில் தலையில் க்ளிப் எதுவும் இல்லையே என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்திப் போனார் அட்டெண்டண்ட்.
ஈஈஜி எடுப்பதற்கு தலைமுடியை ஷாம்பு போட்டு அலசியிருக்க வேண்டுமென்ற விதி இருக்கவே அதற்கு மறு நாள் தேதி கொடுத்தார்கள்.
அவர்கள் சொல்லியிருந்தபடி ஷாம்பு போட்டு அலசியிருந்த தலையை அன்றும் இப்படித்தான் விரித்துப் போட்டுக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தேன். வலிக்காக எடுத்துக் கொண்டிருந்த வீரியமிக்க மாத்திரைகளின் காரணமாக ஏற்கனவே கண்கள் சொருகுவது போல இருந்தது.
ஒடிசலான தேகம். கைகளில் வண்ண வண்ணக் கயிறுகள், மணிகளும் பாசிகளும் கோர்த்தபடி தொங்கின. நேற்றைய ரக்ஷா பந்தனுக்கு சகோதரிகள் கட்டியதாக இருக்க வேண்டும். உருவத்திற்குத் தகுந்தபடி பேச்சிலும் செயலிலும் அப்படியொரு மென்மையோடு வந்தான் ஈஈஜி எடுக்கிற இளைஞன்.
“இதுக்கு முன்னாடி ஈஈஜி பண்ணியிருக்கீங்களா?”.
“இல்லை”.
இப்போது அவனது செயலில் மென்மை மேலும் கூடிவிட்டது போல தோன்றியது.
அவன் பொறுமையாக தலைமுடியை வகிடு வகிடாக பிரித்து ஆங்காங்கே பசை போல ஏதோ ஒன்றை தடவி எலக்ட்ரோடுகளை மாட்டிக் கொண்டிருந்த போது அந்நாள் வரை இல்லாத ஒரு சுகமான தூக்கம் வந்தது.. அவன் மட்டும் இந்தப் பக்கம் திரும்புங்க அங்கே திரும்புங்க என்று நடுநடுவே சொல்லியிராவிட்டால் அங்கேயே உறங்கியிருப்பேன்.
குறைந்தது இருபது எலக்ட்ரோடுகள் மாட்டியிருக்கக் கூடும். அந்தக் கைகளால் தான் எவ்வளவு நிதானமாக ஒரு பச்சிளம் குழந்தைக்கு தலை வாருவது போல மிருதுவாக தலைமுடியைப் பிரித்தான்.
ஒரு கணம் டெக்னீசியன் அல்லது அட்டெண்டண்ட் என்பது எல்லாம் தாண்டி கண்டிப்பாக இவனது கையில் கயிறுகள் கட்டிவிட்ட சகோதரிகளுக்கு ஒரு சிறந்த சகோதரனாக இருப்பான் என்று தோன்றியது. மேலும் யாரோ ஒரு பெண்ணுக்கு ஒரு சிறந்த நண்பனாக, காதலனாக, கணவனாக இருக்கக்கூடும்.
அந்த யாரோ ஒரு பெண்ணுடன் இருக்கையில், அவளது தலை கோதுகையில் தினம் தினம் பரிசோதனை செய்கிற தலைகளின் அல்லது கூந்தலின் நினைவு இவனுக்கு வரக் கூடுமோ? வேண்டாம் வராமல் இருக்கட்டும்
சோதனைக்கு முன்பு தான் என்றில்லாமல், பரிசோதனைக்குப் பின் எலக்ட்ரோடுகளைப் பிரிக்கும் போதும் அதே பொறுமை அதே லாவகம். பின்னர் தலையில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டு, தூக்கிக் கொண்டிருந்த பசைகளை ஈரப் பஞ்சு கொண்டு நீக்கும் போதும் அதே கரிசனம்.
சிலரின் செயல்களும் அவை தரும் சுகங்களும் காதலுக்கும் காமத்துக்கும் அப்பாற்பட்டவைகள் இல்லையா?
நுனி முடியில் தவறுதலாக ஒட்டியிருந்த துளி பசையை டக்கென்று விரல்களால் நீவி விட்டான். அப்போது அங்கே டெக்னீஷியன் இல்லை. நண்பனே இருந்தான்.
ஏனோ அப்போது ஒன்பதாம் வகுப்பு சுந்தரின் ஞாபகம் வந்தது. சுந்தர் தான் இப்படி என் நுனி முடியை எப்போதும் நீவி விடுவான்.
”நீ ட்யூஷனுக்கு எப்ப வருவேன்னு இருந்தேன் ப்ரியா..” என் நீள முடியை வருடிக்கொண்டே கேட்பான்.
”ஏன்?”
”இந்த முடியை தடவ தான்.”
வலது கையால் மேத்ஸ் சார் போர்டில் எழுதுவதை நோட்டில் எழுதிக் கொண்டே, இடது கையால் டேபிளுக்கு அடியில் என் ஜடையைப் பிடித்து நுனி முடியை விரல்களால் தடவிக் கொண்டே இருப்பான். எப்போதாவது ஆட்காட்டி விரல் நடுவிரல் இரண்டையும் பட்டுத்துணியின் கீழும் கட்டை விரலை அதன் மேலும் வைத்து மென்மையை தடவிப் பார்த்திருக்கிறீர்களா? அவனது மூன்று விரல்கள் அதே போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கும்
நுனி முடியைத் தான் அவன் விரல்கள் வருடிக் கொண்டிருக்கும் என்றாலும் உச்சி முதல் உள்ளங்கால் வரை என்னவென்று புரியாத ஒரு மின்னல் பாயும். அதை சொல்ல முடியாமல் விடு யாரும் பார்த்தா லூசுன்னு நினைப்பாங்க. என்றபடி வெடுக்கென்று ஜடையை இழுத்து பின்னால் தள்ளுவேன்.
நினைச்சா நினைக்கட்டும்.. பதறிப்போய் அதே வேகத்தில் ஜடையை முன்னால் இழுத்து நுனியை பற்றிக் கொள்வான்.
”எங்க நீ வராம போயிருவியோன்னு கவலைப் பட்டுட்டு இருந்தேன் தெரியுமா?”
”ஏன்?”
”அப்புறம் இன்னிக்கு உன் முடியை தடவ முடியாம போயிருமே.”
”என் அம்மா கிட்ட கூட உன்னைப் பத்தி சொன்னேன். ”
”என்னன்னு?”
”ம்மா.. ப்ரியா முடி அவ்வளவு சாஃப்ட்னு.”
இப்படி என் அம்மாவிடம் சொல்ல முடியாது. சுந்தர் பக்கத்தில் உட்கார்ந்தேன் என்று தெரிந்தாலே வீட்டில் ப்ரளயமாகி விடும். சுந்தர் என்று இல்லை எந்த பையன் என்றாலும் பார்த்தேன், சிரித்தேன் என்று தெரிந்தால் கூட நடுஹாலில் நிறுத்தி வைத்து குடும்பத்தோடு கலவரம் உண்டாக்குவார்கள்.
”நீ எப்பவும் என் கூடவே இருக்கணும் ப்ரியா”
”எதுக்கு?”
”எதுக்குன்னா நான் உன் தலை முடியை தடவிட்டே இருக்கணும். இந்த சாஃப்ட்னெஸ் எனக்கு எப்பவும் வேணும்.”
என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் அவனது பதில் என் தலைமுடியிலேயே இருந்தது.
ஒவ்வொரு நாளும் ட்யூஷனுக்கு வரும் போதும் வேறு இடத்தில் உட்கார வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வருவதும் பிறகு உனக்கு சீட் போட்டு வச்சிருக்கேன் இங்க வா என்று சுந்தர் இழுத்துக் கொண்டு போய் ஜடையை கோதுவதற்கு வாக்காக அவன் அவனருகில் பிடித்து வைத்திருக்கும் சீட்டில் உட்காருவதும் வாடிக்கையாகி இருந்தது.
இந்த நீளமான அதே சமயம் அடர்த்தியான முடி எனக்கு சில சமயங்களில் எரிச்சலைத் தந்தது. ஈரத்தலையோடு ஜடை பின்னிக்கொண்டு பள்ளிக்கு ஓடுவது. பின்னர் தலைவலியோடு திரும்பி வருவது. கோடை காலத்தில் கொண்டை போட்டுக்கொண்டால தலை கனத்து வேர்த்து பிசுபிசுத்துக் கிடப்பது என்று பல பிரச்சனைகள் இருந்தன.
தலைமுடியை கொஞ்சம் வெட்டிக் கொள்ள என்று அம்மாவிடம் கேட்ட போதெல்லாம் முடி அழகு முக்கால் அழகு அதைவெட்டக் கூடாதென்று ஒவ்வொரு முறையும் கடுமையாக மறுத்து வந்தார். பிறந்தது முதல் தகப்பனுக்கு, திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கு, அதன் பின் பெற்ற மகனுக்கு என்று அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர். பெற்ற மகளையும் அடிமை வாழ்க்கைக்கே தயார் செய்பவர், இதில் கூந்தல் முக்கால் அழகைத் தந்தால் என்ன? முழு அழகைத் தந்தால் என்ன?
மற்ற பிள்ளைகளுக்கோ என் இடுப்பைத் தாண்டிய நீள முடி மட்டுமல்லாது, சுந்தரின் இந்த செயல்களுமே நிறைய பொறாமையை தந்தன.
ஒரு முறை ஃபாத்திமா நான் எப்போது வருவேன் என்பது போல காத்திருந்து, நீ இங்கே வா ப்ரியா நான் இடம் வச்சிருக்கேன் என்று அழைத்தாள். அப்போது சுந்தரின் முகம் போன போக்கும், அவன் கண்கள் சிவந்து உதடு துடிக்க பாத்திமாவை பார்த்தபடி நின்ற நிலையயும் நான் மட்டுமல்ல பாத்திமாவுமே மறந்திருக்க மாட்டாள்.
”அவன் உன் மேல ரொம்ப பொசசிவ்வா இருக்கான் ப்ரியா, பார்த்துக்கோ” என்றாள் ஃபாத்திமா ட்யூசனிலிருந்து சைக்கிளில் வீடு திரும்புகையில். நான் பதிலேதும் சொல்லாமல் ஜடையை எடுத்து முன்னால் போட்டு நீவிக் கொண்டேன்.
இப்போது அன்று இருந்த அடர்த்தியான முடி இல்லை. கொஞ்சம் முன்பு அட்டெண்டெண்ட் நான் போட்டிருந்த குதிரை வாலின் ரப்பர் பேண்டை அவிழ்த்து தலைக்கு மேலே விரித்து விட்டிருக்கும் முடி, தலை தெரியும் அளவுக்கே அடர்த்தியோடிருக்கிறது. அந்த முடியிலும் இப்போது சுந்தர் சொன்ன மென்மை இல்லை. அருகில் அமர்ந்திருக்கையில் பேருந்தில் பயணிக்கையில், ஏன் கூடலின் போது கூட “இந்த முடியை கொஞ்சம் ஒதுக்குறியா குத்துது“ என்று முகம் சுழித்து சொல்கிற அளவுக்கே மென்மை இருக்கிறது. ஒருவேளை சுந்தருக்கு இந்த முடியும் மென்மையாக தோன்றுமோ? பதில் சொல்ல இப்போது சுந்தரும் இல்லை. அப்பாவிற்கு வேலை மாறுதல் என்று திடுதிப்பென்று ஊரை விட்டுப் போனவன் பற்றி இப்போது எந்த தகவலும் இல்லை.
”டாக்டர் எப்ப வருவாங்க சார்? ”
கதவுக்கு வெளியே இருந்து கேட்ட கலக்கமான குரல் சிந்தனையைக் கலைத்தது.
”வரும் போது வருவாங்க. எத்தனை தடவ கேப்பீங்க கொஞ்சம் அமைதியா சேர்ல உட்காருங்க” கதவுக்கு உள்ளேயிருந்து சொன்ன குரலும் பொறுமை இழந்து கொண்டிருந்தது. கொடுப்பது யார் பெற்றுக் கொள்வது யார் என்று தெரியாதபடி இற்றுப் போன பொறுமையை, எரிச்சலை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
மேஜைக்கும் வாசலுக்கும் இடையே இருந்த தூய வெள்ளை தடுப்பின் காரணமாக வெளியே இருந்து கேட்டது யார் என்பதைப் பார்க்க முடியவில்லையே தவிர, பார்க்கத் தேவையின்றி குரலே யாரென்பதைக் காட்டிக் கொடுத்தது. இந்தக் குரலுக்குரியர் பொறுமைக்கு உரியவர் இல்லை.
வெள்ளைத் தடுப்பின் நேர் மேலே, ஒரு குண்டு பல்பு நட்சத்திரம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.
நீங்கள் மின்னும் விண்மீண்களைப் பார்த்திருப்பீர்கள்.
கண்களால்.
கண்ணில் நட்சத்திரங்கள் மின்னிப் பார்த்திருக்கிறீர்களா?
அதற்கு இடி விழுந்தது போல அறை ஒன்றையாவது நீங்கள் உங்கள் வாழ்நாளில் வாங்கியிருக்க வேண்டும்.
எனக்கு ஒருமுறை அப்படித்தான் கண்ணில் பல வண்ண நட்சத்திரம் மின்னியது.
பத்து வயதிருக்கும். என்னை விட இரண்டு வயது மூத்தவன், இதோ அறை வாசலில் பொறுமையின்றி கேட்டுக் கொண்டு இருக்கிறானே, அவனுடன் ஏதோ சிறுபிள்ளைத் தகராறு.
கொக்கு தலைல பனங்காயை வச்ச மாதிரி இம்புட்டுக்காணும் பிள்ளைக்கு எதுக்கு இவ்வளவு முடியை வளர்த்து விட்டிருக்கு என்று அக்கம் பக்கம் எல்லோரும் சொல்லி சிரிக்கும் அளவு இருந்த கற்றை முடியை பின்மண்டையோடு பற்றி இழுத்து ஒரு அறை வைத்திருந்திருக்கிறான்
கண்ணுக்குள் பல வண்ணங்களில் மின்னி அடங்கி என்ன நடக்கிறது என்பது புரியவே கொஞ்ச நேரம் ஆகியிருந்தது. அறை விழுந்த சப்தம் கேட்டு ஓடி வெளியே வந்தாள் அம்மா..
”ஏண்டா அந்தப் பிள்ளையை அடிச்ச?”
அந்தக் கேள்வியிலோ அல்லது குரலிலோ கோப அதட்டல் இல்லை. லேசாகக் கொஞ்சல் இருந்தது போலத் தோன்றியது. ’அந்தப்’ பிள்ளை என்று என்னைக் குறிப்பிட்டது கொஞ்சம் அன்னியமாகப் பட்டது.
”பொம்பளைப் பிள்ளை பதிலுக்கு பதில் பேசினா அடிக்காம?” சொல்லிக்கொண்டே அவன் அறைக்குள்ளே போய் விட்டான்.
”இவ என் ராணி.. இந்த வீட்டுக்கு மகாராணி..” என்று எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டு யாரையும் என் மீது ஒரு கடும்சொல் கூட பட்டு விடாமல் பார்த்துக் கொண்ட அப்பா இருந்திருந்தால் இப்படி கை ஓங்கியிருப்பானா.? தினமும் காலையில் எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து சீவி, முன்பக்க மங்கி கிராப் முடிகளை லேசாக இடது புறம் திருப்பி விட்டு அழகு பார்த்த அவர் இருந்திருந்தால் இந்நேரம் இவனை என் ஒற்றை முடியை இழுக்க விட்டிருப்பாரா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த போது திகுதிகுவென்று கன்னம் எரிவது போல் தோன்ற தொட்டுப் பார்த்தேன். சிவந்து வீங்கிய கன்னத்தில் கண்ணீர் தாரைகள் வழிந்து தீயாய் எரிந்து கொண்டிருந்தது. அவன் பற்றி இழுத்த பின்மண்டைப்பகுதி பல நாட்களுக்கு கடுமையாக வலித்துக் கொண்டிருந்தது.
சிறிது காலமாகத் தான் இப்படி எல்லோர் மீதும் தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்திருந்தான். முன்பெல்லாம் தூங்கும் வரை, ஏன் தூங்கும் போது கூட சேர்ந்தே தான் விளையாட்டு இருவருக்கும். அந்த விளையாட்டுச் சங்கிலியின் கண்ணி எந்த கணத்தில் உடைந்து போனது என்பது இன்று வரை விளங்கவே இல்லை.
அப்பாவின் இறுதிக்காரியத்தில் உறவினர்களெல்லாம் கழுத்துப்புருஷன் போயிட்டா என்ன வயித்துப் புருஷன் இருக்கானே என்று அம்மாவிடம் சொல்லி தேற்றியதும், எல்லாக் காரியங்களிலும் ஒரு பத்து வயது சிறுவனை முன் நிறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த வீட்டின் தலைவன் நான் தான் என்று அந்த சின்ன வயதிலேயே பிறருக்குக் காட்டிக் கொள்ள வேண்டியபடி சூழ்நிலை அவனை மாற்றியிருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.
உனது சக்தி, உன்னிடம் இருப்பது மட்டுமல்ல, உன்னிடம் இருப்பதாக எதிராளி நினைப்பது என்கிற சால் ஆலன்ஸ்கியின் முதல் விதி போல தன்னிடம் ஆளுமையும் அதிகாரமும் இருக்கிறதென்றும் பிறரை நினைக்க வைக்க, அவன் சிறு வயதிலேயே இப்படியெல்லாம் தன் நடத்தைகளின் வழி காட்டிக் கொள்ள முயன்றிருக்க வேண்டும்.
வெளியே மீண்டும் சலசலப்பு. யாரோ அழுகிற சத்தம் போல. தொந்தரவாக இருந்தது. மருத்துவர் வர ஏன் இவ்வளவு தாமதம். வந்து பரிசோதனை முடித்து விட்டார் என்றால் அடுத்தடுத்த காரியங்களைப் பார்க்கலாம். எவ்வளவு நேரம் தான் இங்கேயே படுத்திருப்பது.
இப்போது ஒருவர் உள்ளே வந்து டேபிளின் மீது ஒழுங்கற்று பரந்து விரிந்து கிடந்த என் தலை முடியை தண்ணீர் தெளித்து பரபரவென்று வாரி இழுத்து சீராக்கினார். மருத்துவர் வருகைக்கு முன்னான ஆயத்த ஏற்பாடுகள் போலிருக்கிறது.
படுக்கை அருகே டிரேயில் அடுக்கியிருந்த க்ளாம்ப், ஸ்கால்பெல், ஃபோர்செப்ஸ், ரூலர், கத்தி, கத்தரிக்கோல் இன்ன பிற உபகரணங்களை மேலும் அடுக்கினார். அதைப் பார்த்த போது கோமளவள்ளி ஞாபகம் வந்தது.
டெலிவரிக்காக நாலைந்து நாள் ஆஸ்பத்திரியில் இருக்க நேரிட்ட போது கொஞ்சம் நட்பாகியிருந்த நர்ஸ் அவர். நான் கேட்டுக் கொண்டேன் என்பதற்காக மருத்துவ உபகரணங்களின் பெயரெல்லாம் அவர் தான் எனக்கு சொல்லித் தந்திருந்தார். அடுக்கி முடித்து விட்டு அவற்றை எண்ணி கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அதற்கான காரணத்தைக் கேட்டேன்.
”ஆபரேஷன் முடிஞ்சப்புறம் எண்ணி கணக்கு சரியா இருக்கான்னு பார்க்கத்தான். மறந்து போய் வயித்துக்குள்ள வச்சு தச்சிரக் கூடாதுல்லா” என்று சொல்லிச் சிரித்தார்.
இதெல்லாம் மயக்க மருந்து செலுத்துவதற்கு முன்பு தான் அதற்குப் பின் எல்லாம் குறிப்பாக இடுப்புக்குக் கீழ் எல்லாம் மரத்துப் போனது. என்னைச் சுற்றி நடந்தவற்றை எல்லாம் மங்கலாகவே உணர்ந்து கொண்டிருந்தேன். இப்போது போலவே. டாக்டர் அடிவயிற்றில் இடப்புறம் இருந்து வலப்புறமாக ஒரு கோடு போட்ட போதும் சரி, கால்களை அகற்றும் போதும் சரி, பின்னர் ஜிப் நீக்கிய மணிப்பர்ஸை திறந்து துழாவுவது போதும் சரி, கீறிய அடிவயிற்றுக்குள் கை விட்டு துழாவி இரு கைகளாலும் பிள்ளையை எடுத்த போதும் சரி எல்லாம் தெரிந்தது. ஆனால் எதுவும் வலியில்லை. உணர்வில்லை.
பிள்ளையை என் முகத்தருகே நீட்டிக் காண்பித்து ”நல்லா பார்த்துக்கோம்மா.. ஒரு வழியா பிள்ளையைப் பெத்து பொழைச்சுட்ட” என்றபோது சிரமப்பட்டு கண்ணைத் திறந்து உற்று நோக்கினேன்.
கன்னங்கரேலென்று கொத்துக் கொத்துக்காக தொங்கிய சுருள் தலைமுடி தான் முதலில் கண்ணில் பட்டது. இன்னொரு நர்ஸ் நெருங்கி வந்து ”பிறக்கும் போதே இதுக்கு எவ்ளோ முடி பாருங்க டாக்டர்” என்றார்.
குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் செல்ல காத்திருந்த கோமளவள்ளி தான் அதற்கு பதில் சொன்னார், ”அடிவயிறெல்லாம் பார்த்தேல்ல.. தடவித் தடவி எப்படி தடம் படிஞ்சு படையாக்கி வச்சிருக்கான்னு. மாசமா இருக்கும் போது அடிவயிறு இப்படி சொறியெடுத்தா, பிள்ளை இப்படித்தான் தலை கொள்ளாம முடியோட பிறக்கும் எங்கம்மை சொல்லியிருக்கா..”
கோமளவள்ளி தன் படிப்பு வேலை எல்லாம் மறந்து ஒரு தாயின் மகளாக அல்லது ஒரு மகளின் தாயாக இருந்தார். அப்போது அங்கே இருந்த மற்றவர்களுமே நர்ஸாகவோ டாக்டராகவோ இல்லாமல், தம் படிப்பு தொழில் பதவி எல்லாவற்றையும் மறந்து சாதாரண மனிதனாகி இருந்தார்கள்.
அப்போது அவர் கூறியதையும் வெகு நாட்கள் போகாதிருந்த அடிவயிற்று கருப்புத் திட்டுக்களையும் இக்கணம் நினைத்துப் பார்க்கையில் ”நீ வயிற்றுக்குள் இருந்த போதே உன் சின்னஞ்சிறு தலை கொள்ளாத கற்றை முடியைத் தடவிக் கொடுத்திருக்கிறேன் மகளே” என்று அரூபமாக சொல்லிக் கொண்டேன்.
இந்த சோதனையை மட்டும் முடித்து ரிசல்டை தந்து விட்டார்கள் என்றால் போதும். இதுவே கடைசி முறை ஆஸ்பத்திரி வாசமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் போலவே இந்த முறையும் நினைத்துக் கொண்டேன்.
ஒரே நேரத்தில் சத்தமாக சிரித்தபடி, இப்போது சிலர் உள்ளே நுழைந்தார்கள். ஏதோ அவர்களுக்குள்ளான நகைச்சுவை என்பது அவர்களில் குரலில் இருந்த மகிழ்ச்சியில் தோன்றியது.
ஒரு பெண் மூன்று ஆண்கள். சற்று தொலைவில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே ”ப்ரிப்பரேஷன் எல்லாம் முன்னமே முடிச்சிட்டீங்களே குட்.. எனக்கும் சீக்கிரம் போகணும். ஹேபிடேட் செண்டர்ல மராத்தி படம் இன்னிக்கு டைரக்டர் வர்றார். படம் முடிச்சுட்டு மூவி க்ரூவோட ஒரு டின்னர் இருக்கு” என்ற பெண் தான் சீஃப் டாக்டராக இருக்க வேண்டும். ஒருவர் மருத்துவர் தோற்றத்தில் இல்லாமல் கையில் நோட்டும் பேனாவும் கொண்டு அலுவலர் போல இருந்தார். ஒருவர் சற்று முன் வந்து என் தலையை வாரி விட்டுப் போனவர். மற்றொருவர் அட்டெண்டெண்டாக இருக்க வேண்டும், என் அருகே வந்து தலை முடியை இங்குமங்குமாகக் கோதி சோதனை செய்தபடியே,
“மேடம், வந்து ஹேர் அண்ட் ஸ்கால்ப் பார்த்துடறீங்களா?”
”இதோ.. நீங்க ஆரம்பிங்க. வந்துடறேன்”
மேடம் வரவில்லை. ஐபேடில் எதையோ பார்த்து லேசாக நகைத்தபடி அங்கேயே அமர்ந்திருந்தார்.
”சரி, ஸ்டார்ட் பண்ணிடலாமா?”
தனக்குத் தானே கேட்டுக் கொண்டே தலையை இறுகப் பிடித்து வெடுக் வெடுக்கென்று அங்கும் இங்குமாக திருப்பினார். அந்தத் திருப்பல் ஈஈஜி இளைஞனின் மென்மையை அல்ல, மாற்றாக வேறொருவனின் வன்முறையை நினைவுபடுத்தியது.
இப்படி ஒன்றின் சாயல் மற்றொன்றை நினைவுபடுத்துவது எல்லோருக்கும் நிகழ்வது தானே? வாழ்க்கையின் பல நினைவுத்துளிகள் மூளையின் மேடு பள்ளங்களுக்குள் எங்கேனும் விதை போல விழுந்து காலப் போக்கில் துளிர்த்து, தழைத்து, அகண்ட விருட்சமாகி பின் சந்திக்கிற நபர்கள், வாசிக்கிற புத்தக வரிகள், கேட்கிற இசைக் குறிப்புகள் என்று ஒவ்வொன்றின் மீதும் தன் நிழலை, அந்நினைவுத்துளியின் சாயலை பரப்பிக் கொண்டே தானே இருக்கின்றன?
அதே சமயம் மறந்தும் அல்லது மரணப்படுக்கையிலும் நினைவில் எழும்ப முடியாதபடி ஒன்றிரண்டு நினைவுகளை ஆழப்புதைப்பதையும், கடற்கரை மணல்வெளி காலடித்தடம் போல மென்மேலும் புதுப்புது நினைவுத்தடங்களைக் கொண்டு அழித்து விடுவதையும் அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டு தானே இருக்கிறோம் நாம்.
அப்படி புதைத்திருந்த நினைவு இப்போது ஏன் வெளியே எழ வேண்டும்?.
கல்லூரிப் பேருந்தில் இருந்து ரயில்வே கிராசிங்கில் இறங்கி ஒற்றையடிப் பாதையில் தனியே வீடு திரும்புகிற போது எதிர்பாராத விதமாக உச்சந்தலையைப் பின்னிருந்து பற்றி முரட்டுத் தனமாக இழுத்தணைத்து தன் பிடிக்குள் வைத்து மோகித்து பின்னர் அதே வேகத்தில் தள்ளி வீசிவிட்டு வெளியே சென்றவனுடைய நினைவு ஏன் இப்போது மேலெழும்ப வேண்டும்?
செய்வதறியாது திகைத்துப் போய் வெகுநேரம் சிலையாய் நின்றிருந்த போது நிறுத்தாமல் உதறிக்கொண்டிருந்த உடலும், விண்விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்த உச்சந்தலையும் நினைத்தால் இப்போதும் பதறுகிறது. வெளியே யாரிடத்தும் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் மனதில் அது ஒரு ஆறாத வடுவாகவே இருந்தது.
இப்போது எல்லாம் மரத்து விட்டது. இதோ மரத்துக் கிடக்கிற என் உடல் போல.
”முடி நார்மலா இருக்கு. தலைலயும் எந்த பிரச்சினையும் தெரியலை. நோட் பண்ணிக்கோங்க ராஜேஷ், ’ஹேர் இஸ் நார்மல் அண்ட் ஹெல்த்தி. நோ அப்நார்மலிடீஸ் ஃபவுண்ட் இன் ஸ்கால்ப். நோ விசிபிள் இஞ்சூரி மார்க்ஸ் இன் ஹெட் ஆர் ஸ்கால்ப்’ ”
அலுவலர் போலிருந்த ராஜேஷ், தான் கொண்டு வந்திருந்த காகிதங்களில் வேகமாக குறிப்பெடுத்துக் கொண்டார்.
”மேடம், நீங்க ஒரு முறை பார்த்துடறீங்களா?”
எழுந்து வந்து ஒரு அவசரப் பார்வை பார்த்து விட்டு ”மிச்சதையும் நீங்களே பண்ணிடுங்க சஞ்சீவ் நான் கடைசியா அறிக்கையை கன்ஃபர்ம் பண்ணிடுறேன்”.
மீண்டும் தம் இருக்கையில் போய் அமர்ந்து ஐபேடை கையில் எடுத்துக் கொண்டார்.
”சரி அப்ப மற்ற ஆர்கன்ஸ்க்கு போயிடலாமா?”
மீண்டும் தனக்குத் தானே கேட்டபடி என் தலைமாட்டில் நின்று கொண்டிருந்த சஞ்சீவ் படுக்கைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ட்ரேயிலிருந்து ஸ்கால்ப்பெல்லை எடுத்து தலையை இடதுபுறம் திருப்பி வலது காதுக்கு பின்புற மேட்டில் இருந்து அப்படியே ஒரு கோடு இழுத்து பின்புற மண்டை வழியாகப் போய் தலையை வெடுக்கென்று வலதுபுறம் திருப்பி இடதுகாதின் பின்புற மேட்டில் முடியும்படி ஒரு கோடு இழுத்தார். பின்னர் ஸ்கால்ப்பெல்லை உள்ளே நுழைத்து கீழிருந்து மேல்நோக்கி செதுக்கியபடியே சென்று மண்டையோட்டின் மேற்புறத்தோலை முடியோடு சேர்த்து அப்படியே உரிப்பது போல மேலே இழுத்துக் கொண்டு வந்து போட அது என் முகத்தின் மீது விரிந்து விழுந்தது.
அட்டெண்டர் சஞ்சீவின் கைகள் ரம்பம் கொண்டு அறுத்தபடி மெல்ல பின்மண்டை நடுமண்டை என்றெல்லாம் என் காலக் கோட்டில் பயணித்துக் கொண்டிருந்தது. மண்டை ஓட்டை மேல்புறமாக தூக்கித் திறந்து கர்ப்பப் பையின் உள்ளிருந்து ஒரு சிசுவை எடுப்பது போன்ற லாவகத்துடன் இரு கைகளாலும் மூளையை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது,
“எவ்ளோ அழகான முடி! இட்ஸ் சச் அ வேஸ்ட் டு லூஸ் திஸ் லவ்லி ஹேர் இல்லை?” என்கிற சீஃப் லேடி டாக்டரின் ஆதங்கமான வார்த்தை மங்கலாகக் கேட்டது. மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பதற்கு பிரேதப் பரிசோதனை அறைகள் மட்டும் விதிவிலக்கா என்ன?
இப்போது என் முகத்தை மூடியபடி மண்டையோட்டின் மேல்தோலோடு படர்ந்து கிடந்த கற்றை முடி மிருதுவாகவும் இருப்பது போலவும், உறுத்துவது போலவும் ஒரே நேரத்தில் தோன்றியது.
அருமை. உலுக்கி விட்டது.சரளமான நடை, செல்ல வந்ததை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.