நகுலாத்தை – தொன்ம உருவாக்கம்

குலாத்தையில் தொழிற்பட்டிருக்கும் மொழி நுட்பமானது, செறிவானது, அடர்ந்த குறியீட்டுப் பண்பு கொண்டது, பிரக்ஞையுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பது. புறக்காட்சி விவரிப்புகள் சூழல் உருவாக்கத்திற்கான அழகியல் கூறுகளாக (மட்டும்) இல்லாமல் நிகழ்த்துதல்களால் (performing the events) உருவாகி எழுந்து வருவனவாக இருக்கின்றன. சின்ராசன் காட்டிற்குள் வேட்டைக்குச் செல்லும் முதல் அத்தியாயம் சின்ராசனின் அசைவுகளைத்தான் காட்சிப்படுத்துகிறது. அந்த அசைவுகளின் வழியே காட்டின் அடர்த்தி மெல்ல மெல்ல விரிகிறது. அதற்கப்பால் காடு குறித்த கதைசொல்லியின் தனிப்பட்ட புறக்காட்சி விவரணைகள் கதையில் இடம் பெறுவதில்லை. போலவே கூளைக்கடா வேட்டை, குழுமாடு பிடித்தல் போன்ற காட்சிகளும் நிகழ்த்துதலின் வழியே தங்கள் சூழலைத் தாங்களே கட்டியெழுப்பிக்கொள்கின்றன.  நிகழ்த்து மொழியின் (performative language) வழியே வனத்திற்குள் செல்பவனை வனமாயும், வேட்டைக்குச் செல்பவனை வேட்டையாயும், கலையாடும் பெண்ணைக் கலையாடலாயும் காட்டுவது கதைசொல்லிக்குச் சாத்தியமாகிறது. இதனால் கதையில் செயல்படும் உயர்திணையோடு கூடவே அஃறிணைப் பொருள்களும் அசைவுப்பண்பு கொண்டவையாக, உயிர்ப்பண்பு கொண்டவையாக இருக்கின்றன. வேட்டை, காதல், சடங்குகள், போர், சாவு என்று கதைக்களத்தில் ஒவ்வொரு நிகழ்வும் நிகழ்த்தப்படும் கணத்தில் அந்த நிகழ்வின் அங்கமாகவே அதற்கான சூழல் மேலெழுகிறது. இது சூழலையும் சூழலுக்குள் இருப்பவரையும் வேறுபாடறப் பிணைக்கிறது. வனத்திற்குள் அமைதியைத் தேடிச் செல்பவன் வனம் அமைதியாய் இருக்கிறது என்று எண்ணும்போதே அந்த அமைதியிலிருந்து விலகிவிடுகிறான் என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. அதுபோல நகுலாத்தையின் கதைமாந்தர்கள் யாரிடமும் சூழலின் இருப்பைத் தனியே உணரும் விலக்கம் இருப்பதில்லையென்பதையே கதைசொல்லியின் மொழி தெரியப்படுத்துகிறது. இந்தத் தெரியப்படுத்தல் கதை நிகழ்வுகள் கதைசொல்லியின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, நிகழ்வுகளைச் சொல்லிச் செல்லும் மொழியின் ஆளுகைக்குள் இருக்கின்றன என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது. அதாவது கதை நிகழ்வுகள் கதை சொல்லும் மொழியின் போக்கிற்கேற்பவே தங்களை நிகழ்த்திக்கொள்கின்றன. மொழி பல தளங்களில் பரவிச் செல்லும் திரவத்தன்மையைத் தன்னியல்பாகக் கொண்டதாதலால் முழுக்க மொழியின் சாத்தியப்பாடுகளாலேயே கட்டமைக்கப்படும் ஒரு புனைவும் தன்னை ஏந்திக்கொண்டிருக்கும் கதைசொல்லியின் விரலிடுக்குகளிலிருந்து அடிக்கடி வழிந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. விளைவாக ஒரு அமைதியான கிராமத்தில் போர்ச்சூழல் உருவாக்கும் அதிர்வுகளைப்பற்றி ஒரு நேர்கோட்டுக் கதையைச் (அமைதியான கிராமச்சூழல், இயக்கத்தினரின் நுழைவு, அதன் விளைவுகள், பாதிப்புகள் என்கிற வரிசைக்கிரமத்தில்) சொல்லும் நோக்கத்துடன் தொடங்கப்படும் கதைப்பிரதி வாசிப்பின்போது முன்பின்னாக வரிசை தப்பிச் சிருஷ்டிபரமான குழப்பங்களை ஏற்படுத்திவிடலாம்.

நகுலாத்தையின் மொழிப் பிரவாகம் என்ன செய்கிறது என்பதைப் பார்க்குமுன், இந்தக் கட்டுரையின் வாசிப்பு எல்லையை வரையறுத்துக்கொள்வதற்காக, இந்தப் புதினத்தின் ஒருவரிக் கதைச் சுருக்கத்தை இப்படி வரைந்துகொள்ளலாம்: ‘அமைதியான கீரிக்குளம் கிராமத்து மக்கள் இயக்கமும் ஆமியும் நிகழ்த்தும் போரின் பொருட்டாக இயக்கத்தால் பிடிக்கப்பட்டு அழைத்துச்செல்லப்படுதல்’. இந்த வாசிப்பு கதையை மூன்று பகுதிகளாகப் பிரிகிறது:

  1. கீரிக்குளத்தின் அமைதியான வாழ்க்கை
  2. இயக்கத்தின் களப்போர் வாழ்க்கை
  3. கீரிக்குளமும் இயக்கமும் இடைவெட்டிக்கொள்ளும் ஆட்பிடிப்பு நிகழ்வுகள்

பிரதியில் கீரிக்குளத்தின் அமைதியான வாழ்க்கை என்பது தங்கள் நிலத்தின் குடியிருப்புகளிலும் அவற்றின் வாழ்வாதாரங்களான விளைச்சல் பரப்புகளிலும் அவற்றைச் சுற்றிச் சூழ்ந்துள்ள காடுகளிலும் நீர்நிலைகளிலும் அசையும் ஒவ்வொரு அசைவிற்கும் தொன்மம் சார்ந்த பொருள்கோடல்களை உருவாக்கிக்கொண்டு, அந்தத் தொன்மப் படலத்திற்கடியில் தங்களுடைய அன்றாடங்களை அமைத்துக்கொண்டிருக்கிற, நகுலாத்தையெனும் நாட்டார் தெய்வத்தை ஒட்டிய தொன்மங்களின் காலத்திலேயே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிற, ஒரு வாழ்வியலைக் குறிக்கிறது. அதாவது கீரிக்குளம் கிராமம் என்பதே ஒருவகையில் ஒரு தொன்ம நிலம்தான் (‘’கீரிக்குளம் கல்லாலையும் மண்ணாலையும் மட்டுமில்லை, கதையாலையும் சேர்த்தெல்லோ கட்டியிருக்கு’’ (பக். 43)). கீரிக்குளத்தின் இந்தத் ‘தொன்ம இருப்பு’ என்பதைத் தொன்ம உருவாக்கம் சார்ந்த சில மொழியியல் சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு பிரதியிருப்பு என்பதாக வாசிப்பது பிரதி எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாட்டைத் தீர்க்க உதவும்:

சொல்லுக்கும் பொருளுக்கும் இடையிலான இடுகுறிப்பண்பு கொண்ட உறவே தொன்மங்களின் உருவாக்கத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. ஒரு சொல்லைப் பொருள்கொள்வது என்பது பொருளின் காண்பண்பு (visibility), பிரதிப்பண்பு (textability) என்கிற, பொருள்கொள்ளலின் இரண்டு வகைமைகள் சார்ந்து நடைபெறுகிறது. ஒரு சொல் அது இடம்பெறும் சூழலைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைப் பெறும்போது பொருள்கோடல் செயல்பாட்டின் முதல் விளைவாகச் சொல் தன்னுடைய காண்பண்பு கொண்ட பொருளை இழந்து பிரதிப்பண்பு கொண்ட பொருளைப் (பொருள்களை) பெறுகிறது. எடுத்துக்காட்டாக ‘நதி’ என்கிற ஒரு சொல்லின் காண்பொருள் (Visible object) ஒரு நகரும் நீர்ப்பரப்பு. ஆனால் நதி என்கிற சொல் பிரதியாக்கத்தின்போது இந்தக் காண்பொருளை இழந்து பெண், வளம், வனம், சாவு, தெய்வம், மாநிலம், ஓட்டுவங்கி, புனைவு, போர் என்று பல பிரதிப்பொருள்களை (Textual objects) பெறுகிறது. இந்த பிரதிப்பொருள்கள் அனைத்துமே அந்தச் சொல்லுக்குரிய காண்பொருளின்மேல் (நீர்ப்பரப்பு) படலங்களாகப் படிந்திருக்கின்றன. இந்தப் படலங்கள் ஒரு சொல்லுக்குரிய பொருளின் காண்பண்பைக் காப்பாற்றும் அரண்களாக அந்தச் சொல்லின்மேல் செயல்படுகின்றன. பிரதிப்பொருள்களினடியில் பதுங்கியிருக்கிறவரையில் ஒரு சொல்லுக்கான பொருளின் காண்பண்பு பாதுகாப்பாக இருக்கிறது என்று சொல்லலாம். எப்படி?

ஒரு சொல்லுக்கான பொருளின் காண்பண்பு சர்வதேசத்தன்மை கொண்டதாயும் (நதி என்கிற சொல்லுக்குரிய பொருளின் காண்பண்பு எந்த மொழியிலும் நகரும் நீர்ப்பரப்பு என்பதாகவே இருக்கும்) அதன் பிரதிப்பண்பு பிரதேசத்தன்மை கொண்டதாயும் (பாம்பு என்கிற சொல் இந்தியாவில் போல இங்கிலாந்தில் தெய்வமாகப் பொருள்கொள்ளப்படாமலிருக்கலாம். பிரான்ஸில் போல இந்தியாவில் பூட்டு என்கிற சொல் காதல் என்பதான பிரதிப்பண்பை பெறாததாக இருக்கலாம்) இருக்கின்றன. பிரதிப்பண்பு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் சொல்லின் காண்பண்பின்மேல் ஏற்றப்பட்டு அதை அதன் சர்வதேசத் தன்மையிலிருந்தும் விடுவிக்கிறது. எனில் ஒரு சொல்லுக்குரிய பொருள் தன் பிரதிப்பண்பை இழந்தால் அது ஒரு குறிப்பிட்ட (பிரதேசச்) சூழலுக்குரிய பண்பாட்டுப் பொருள் என்கிற, உணர்வு சார்ந்த, தனித்துவ நிலையிலிருந்து விலகி ஆய்வு சார்ந்த பொதுநிலைக்கு நகர்வதாக ஆகும். பொதுநிலைப் பண்பிற்கு நகரும் பொருள் பரிவர்த்தனை வட்டத்திற்குள் வருகிறது. பரிவர்த்தனை வட்டத்திற்குள் வந்தவுடனேயே இயல்பாகவே அது பேரச் சரக்காயும் (Negotiable commodity) மாறிவிடுகிறது. ஒரு பொருள் பேர நிலைக்கு வந்துவிட்டால் பின் அதை முதலாளித்துவத்தால் எளிதில் கைப்பற்றிவிட முடியும். ஒரு சொல்லுக்கு ஒரே பொருள், அதுவும் காண்பண்பு கொண்ட மூலப்பொருள் என்பதே முதலாளித்துவத்தின் அடிப்படை வணிக உத்தியாக இருக்க முடியும். இதையே விஞ்ஞானப்பூர்வமான பொருள்கோடல் என்றும் அது வாசிப்புத் தளத்தில் (குறிப்பாகத் தத்துவத் தளத்தில்) பிரபலப்படுத்தவும் முயற்சிக்கும்.

சொல், பொருள் என்கிற, மொழியின் இந்த இரண்டு உறுப்புகளும் அவற்றின் இயல்புகளும் தொன்ம உருவாக்கத்தில் முறையே நிகழ்தல் (event), நிகழ்ந்ததைச் சொல்லுதல் (narrating the event) என்பனவாக அமைகின்றன. நிகழ்வு காண்பண்பு உடையதாக அமைய, நிகழ்வின்மீதான சொல்லுதல் பிரதிப்பண்பு கொண்டதாக அமைந்து நிகழ்வின் காண்பண்பைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. என்றோ எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வு அதை நேரில் கண்டவர்கள், அதில் பங்கு கொண்டவர்கள் ஆகியோர் காலப்போக்கில் மறைந்து அவர்களுடைய பார்வையால் உருப்பெற்றிருக்கும் அந்நிகழ்வின் தூல வடிவம் மெதுமெதுவே சிதையத் துவங்கும்போது அந்நிகழ்வு காலமாற்றங்களை உட்செரித்த சொல்லலின் வழியே பிரதிப்பண்பு கொண்டதாக ஆக்கப்பட்டு தொன்மமாக மாற்றப்படுகிறது. அந்த வகையில் ஒரு தொன்ம உருவாக்கம் மூலநிகழ்வை மொழியாக மாற்றுவதன் வழியே அந்நிகழ்வை வரலாற்றின் பார்வையிலிருந்து மறைந்துவிடாமல் பாதுகாக்கவும் அதேசமயத்தில் அதன் பொருளைப் பன்மைத்துவத்திற்கு உட்படுத்தும் பிரதிப்பண்பு கொண்டதாயும் மாற்றும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது எனலாம். இந்த வகையில் கீரிக்குளம் ஒரு தொன்ம நிலமாக இருப்பது என்பது (‘’ஆத்தையைத் தாண்டி ஆமி வந்திடுவானோ? கிட்ட வந்தால் நான் போய் உருவடி ஒண்டு அடிக்கிறன். அதுக்குத்தான் புதுக்கொட்டிலைத் தோல் ஏத்துறன். பிறகு பார் ஆமி தானாய்ப் பின்னுக்குப் போவான். உவங்களுக்கு ஆத்தையை இறக்கினால்தான் சரி’’ (பக். 439)) அதன் மூலாதார வளங்களின்மேல் அது பிரதிப்பண்பு கொண்ட பொருள்களை நிறுவி அவற்றினடியில் அவற்றின் காண்பண்பைப் பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதாகப் பொருள் தருகிறது. இந்த பிரதிப்பண்பு கொண்ட பொருள்கோடல்களை மொழிவழியே நிகழ்த்துதல்களாகவே ஊர்த்தெய்வமான நகுலாத்தை சார் நிகழ்வுகளும் (திருவிழா, குழுமாடு பிடித்தல், கலையாடுதல்), பிற இயற்கை நிகழ்வுகளும் (கீரி, பாம்பு சண்டை, அம்மான் கண் குளம், முகம் சிதைந்த குரங்கு) பிரதியில் இடம் பெறுகின்றன.

அடுத்ததாக, பிரதியில் இடம்பெறும் தொன்மச் சொல்லாடல்களுக்கு இணையான பக்க விகிதங்களில் இயக்கம் தொடர்பான சொல்லாடல்கள் இடம்பெறுகின்றன. இயக்கம் தொடர்பான சொல்லாடல்கள் மூன்று பண்புகளைப் பெற்றிருக்கின்றன:

  1. கீரிக்குளம் கிராமத்தின் பிரதிப்பண்பியல்பிற்கு எதிராக இந்த இயக்கம்சார் நிகழ்வுகள் தம்மைக் காண்பண்பு கொண்டவையாகவே தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றன. இயக்கம் தன்னுடைய நடவடிக்கைகளை பிரதிப்பண்பு கொண்டவையாக மாற்றி வாசித்துக்கொள்ளப் பார்வையாளர்களை அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் ஒரு சொல், ஒரு நிகழ்வு அதன்மீதான வாசிப்பில் பிரதிப்பண்பு கொண்டதாக மாறுவது என்பது மொழியின் இயற்கையாதலால் அதன் காண்பண்பு மறைவது தவிர்க்கவியலாததாக மாறும்போது அது (காண்பண்பு கொண்ட) வாசிப்பை மட்டுமல்லாமல் வாசிப்பவர்களையுமே அழித்துவிட முனைகிறது. இந்த அழிப்பின் குறியீடாகத்தான் கிராமத்தவரைப் பிடித்து இயக்கத்தவராக மாற்றும் ‘ஆட்பிடிப்பு’ நிகழ்வுகள் அமைகின்றன.
  • இயக்கம் தொடர்பான கதையாடல்கள் கதையின் நேர்கோட்டு வளர்ச்சிப் போக்கை இடைவெட்டி அதன் ஒழுங்கைச் சிதைக்கின்றன. அதாவது தொன்மங்களால் உயிர்த்திருக்கும் கிராமம், அங்கிருந்து இயக்கத்திற்குக் கூட்டிச் செல்லப்படுகிறவர்கள், பிறகு அவர்களின் கதி அல்லது இயக்கத்தின் செயல்பாடுகள் என்கிற, கதைப்போக்கின் வரிசையில் இல்லாமல் தொன்மக் கதையாடல்களுக்கு நடுநடுவே கொண்டுவந்து நிறுத்தப்படுகின்றன. புராணிக கருவிகளுக்கு நடுவே நவீன ஆயுதங்கள், தொன்மத் தெய்வங்களுக்கு நடுவே இயக்கத் தலைவர்கள், கலையாடல் பரவசங்களுக்கு நடுவே மாவீரர் தின நெகிழ்ச்சிகள், கொடைநாள் பலிகளுக்கு நடுவே போர்கள், சுயவதைகளுக்கு (அலகு குத்துதல், தீமிதித்தல் இன்னபிற) நடுவே தற்கொலைப்படைகள் என்றிப்படி.
  • இயக்கம் தொடர்பான சொல்லாடல்கள் கீரிக்குளத்தின் தொன்மச் சொல்லாடல்களின் இருமையெதிர்வுகளாக மட்டுமல்லாமல் தொன்மச் சொல்லாடல்களை ரத்து செய்து ஒருமையாய் மாறுவதற்கும் முயற்சி செய்கின்றன. கீரிக்குளம் கிராமத்தின் வாழ்வாதாரங்களின்மீதான பிரதிப்பண்பைக் காண்பண்பிற்கு மாற்ற முயல்கின்றன (இது பண்பு 1ன் மறுபக்கம்: பண்பு 1 தன்மீதான மற்றமையின் வாசிப்பை மறுப்பது. இது (பண்பு 3) மற்றமையைத் தான் வாசிக்க மறுப்பது). நகுலாத்தைக்கு மிருகப்பலி கொடுக்கப்படுவதை இயக்கம் தடைசெய்கிறது. காட்டிற்குள்ளிருக்கும் ஆத்தை வளைவில் திருவிழா நடத்துவது இயக்கத்திற்கு உவப்பானதாக இல்லை (பின்னர் திருவிழாவின்போது அங்கே குண்டு விழுகிறது), அம்மான்கண் படித்துறையின் காவல் தெய்வமான சொத்திமுனி பின்பு அதை இயக்கத்தவர் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பாக முன்பே (ஆத்தையின் உருவினளென்று வணங்கப்படும் ஆச்சியாலேயே) அப்புறப்படுத்தப்பட்டு அது காவலற்ற (தொன்மப் படலம் நீக்கப்பட்ட) குளமாகிறது (இவற்றோடுகூட கரவியல்பு கொண்ட சில பிறழ்வுறவுகளும்கூட இயக்கத்தவரால் காண்பண்பு கொண்டவையாக மாற்றப்படுவதையும் (காங்கேசன் அவனுடைய தொடுப்பான சைலஜாவை ரகசியமாகச் சந்தித்துவிட்டு வரும் வழியில் இயக்கத்தவரால் அவமானப்படுத்தப்படுகிறான்) கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்).

ஆக, இயக்கம் கீரிக்குளம் கிராமத்தில் போருக்காக ஆட்பிடிப்பை நிகழ்த்துவது என்பது வெறுமே மனிதர்களின் பௌதீக இடப்பெயர்வை மாத்திரம் குறிப்பதாக மட்டுமல்லாமல் வாழ்வாதாரங்களின் பண்பு மாற்றத்தின் குறியீடாகவும் இருக்கிறது. கிராமத்திலிருந்து வெளியேறி இயக்கத்தவராக மாறித் திரும்ப உள்ளே நுழையும் ஒவ்வொரு நபரின் பார்வையிலும் கீரிக்குளம் ஒரு ஆக்கிரமிக்கப்படவேண்டிய, தேவைப்படும் பட்சத்தில் அழிக்கப்படவேண்டிய, காண்பண்பு கொண்ட பொருளாகவே காட்சியளிக்கிறது (‘’தனக்குள்ளிருந்து எதையும் நேசமாக உணர முடியாத அளவிற்கு அவ்வூர் அன்னியப்பட்டுக்கிடக்கின்ற உணர்வைப் பார்க்க வேண்டியிருந்தது’’ (பக். 438), ‘’கீரிப்பிள்ளை மேடு மட்டுமில்லை, அதன் சரி நேரே பெரிய வாய்க்காலால் இணைக்கப்படும் இரணைமடுவும் கல்மடுக்குளமும் ஒருங்கே உடைக்கப்படப்போகின்றன… இருப்பது ஊரில்லை, கட்டிடங்கள்தானே’’ (பக். 450)). இது என்ன நகைமுரணை உருவாக்குகிறதென்றால், கீரிக்குளத்தின் தொன்மங்களை வேற்றுப்பண்பாடாகப் பாவித்து அதை ஆக்கிரமித்து அழிக்க நினைக்கும் ஆமியின் அதே தளத்தில்தான் கீரிக்குளத்தை ஆமியிடமிருந்து காப்பாற்ற நினைக்கும் இயக்கத்தின் கதையாடல்களும் இயங்குகின்றன. அதாவது தொன்மங்களின் வழியே காப்பாற்றப்பட்டுவந்த ஒரு நிலத்தின் வாழ்வாதாரங்களைத் தொன்ம நீக்கம் செய்வதன் வழியே கைப்பற்றி அவற்றை மீண்டும் போரின் வழியே திரும்பத் தரும் கதையாடலை இயக்கம் முன்வைக்கிறது. இதனால் மொழிவழியே கதையில் உருவாகும் ஒரு உரையாடல் சட்டகம் கலைப்பிற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகிறது: ஆமி X (இயக்கம்+மக்கள்) என்பது இயக்கம் உருவாக்க நினைக்கும் கதையாடலாய் இருக்க, மக்கள் X (இயக்கம்+ஆமி) என்பது கீரிக்குளம் கிராமம் உருவாக்கும் கதையாடலாய் இருக்கிறது. கதைத்தளத்தில் ஒரே கதையாடல் நோக்கத்தைக் (விடுதலை) கொண்டவையாய் கட்டப்படும் இரண்டு அலகுகளுக்கிடையேயான உரையாடல் இப்படிக் குழப்பமடையும்போது (‘’ஆமி ஊரிலை ஆக்களை இழுத்துக்கொண்டு போகேக்க சனம் பேசாமல் நிண்டு பாக்கும். அப்ப அவங்கள் ஆமிக்காரர், சுட்டுப்போடுவாங்கள் எண்டு பயந்ததிலை ஒரு நியாயம் இருந்த. இண்டைக்கு எங்கடை பிள்ளையை எங்கடையாக்களே பிடிச்சுக்கொண்டு போகேக்கையும் சனம் சும்மாதான் நிண்டது (பக். 267)), மேலும் இந்தக் குழப்பத்திற்குத் தன்னிலை சார்ந்த கருத்துருவங்களிலோ கோட்பாடுகளிலோ தெளிவு கிடைக்காதபோது (அதாவது இது ஒரு கோட்பாட்டு மோதலாக இல்லாமல் மொழி வழியாக உருவாக்கப்படும் ஒரு வாழ்வியலின் இருப்பு சார்ந்த கலக்கமாக இருக்கிறபோது), இந்த உரையாடலை ஒரு புனைவாக மாற்ற முனையும் கதைசொல்லியின் மொழிக் கட்டமைப்பு, அவர் அந்தக் குழப்பத்தை ஏதேனும் ஒரு கோட்பாட்டிற்குள் செலுத்தித் தீர்வை நோக்கி நகர்த்த முனையாமல் பிடிவாதமாகத் தன் புனைவு மொழியின் அசைவினுள்ளேயே விடாமல் பற்றிக்கொண்டிருக்க விரும்புவாரேயானால், தவிர்க்கவியலாமலும் தானேயறியாமலும் தன்னைத்தானே தகர்த்துக்கொண்டுவிடுகிறது. இந்த மொழித் தகர்வு புனைவியலுக்குப் புதிய அழகியல் எல்லைகளை உருவாக்கிக் காட்டும் மாதிரி நிகழ்வாயும் ஆகிவிடுகிறது.

நகுலாத்தை தன் மொழியால் உருவாகும் புனைவொழுக்கை இரண்டு விதங்களில் தகர்த்துக்கொள்கிறது: தகர்வு 1. கதை மாந்தர்களின் அடையாளம் தகர்தல். இந்தத் தகர்வு கதைக்களத்தில் கதை மாந்தர்களுக்கு நிகழ்த்தப்படுவதாகச் சொல்லப்படும் பெயர் மாற்றம் என்னும் நிகழ்த்துதலால் ஏற்படுகிறது. இந்த நிகழ்த்துதலின் வழியே இயக்கத்தால் பிடிக்கப்பட்டுக் கூட்டிச்செல்லப்படும் எந்தவொரு கதாபாத்திரமும் அதுவரையில் கிராமத்தவரால் அறியப்பட்டிருந்த தனது இயற்பெயரை இழந்து இயக்கத்தால் தரப்படும் ஒரு மாற்றுப்பெயரைத் தன் அடையாளமாகப் பெற்றுக்கொள்கிறது. பிடித்துச்செல்லப்படுபவர் எதற்காகப் பெயர் மாற்றப்படவேண்டும் என்பதற்கான காரணம் கதையில் எங்கேயும் சொல்லப்படுவதில்லை, மாறாகப் பெயர் மாற்ற நிகழ்வு என்கிற சொல்லின்மீது கதைப்பரப்பில் வழங்கப்படும் தடயங்களைக் கொண்டு பிரதிப்பண்பை ஏற்றி வாசித்துக்கொள்ள வாசகரை அனுமதிக்கிறது. அதன்படி: போருக்காக ஆமியால் அழைத்துவரப்படும் ஆட்களின் பண்பு வேறு. அதே நோக்கத்திற்காக இயக்கத்தால் அழைத்துவரப்படுபவர்களின் பண்பு வேறு. ஆமி தரப்புச் சிப்பாய்கள் ஒரு நிலத்தைத் தாக்கி அழிப்பதற்காக வேறொரு நிலத்திலிருந்து அழைத்து வரப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள். பொதுவாகப் போரின் இயற்கையும் இதுதான்: ஒரு நிலத்தையோ பண்பாட்டையோ சேர்ந்தவர்கள் இன்னொரு நிலத்தையோ பண்பாட்டையோ அழிக்கும் / ஆளும் நோக்கத்தைக் கொண்டிருப்பது. ஆனால் இயக்கத்தினுடைய போர் இயற்கை இதிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. அது எந்த நிலத்திலிருந்து ஆட்களைப் போரிட அழைத்து வருகிறதோ அந்த நிலமே அந்த ஆட்களின் தாக்குதலுக்கான குறியிலக்காகவும் இருக்கிறது. இயக்கம் இணைத்துக்கொண்டபின் பழைய வாழ்வு குறித்த ஏக்கமோ, கொலைகள் மற்றும் அழிப்புகள் குறித்த குற்றவுணர்வோ முன்னாள் கிராமத்தவர்களுக்கு இருப்பதில்லை (‘இருக்கக்கூடாது’). கீரிக்குளத்தைச் சேர்ந்த கிராமத்தவராக வெளியேறி இயக்கத்தவராகப் பெயர் மாற்றம் பெறும் ஒவ்வொரு நபரின் பார்வையிலும் கீரிக்குளம் ஆமியைத் தாக்கவும் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் பயன்படும், ஒரு காண்பண்பு கொண்ட வெற்று நிலப்பரப்பாகவே காட்சியளிக்கிறது (எடுத்துக்காட்டாக, மரம் என்கிற சொல் நாற்காலி, கட்டில், மேசை என்கிற பிரதிப்பண்பு கொண்ட பொருள்களாக வாசிக்கப்படுகிறவரையில் மரங்களை நடுவதும் வளர்ப்பதும் தொடர்கிறது. அந்தச் சொல்லிற்கான காண்பண்பிற்கு (இலைகளையும் கிளைகளையும் உடைய, செங்குத்தாக நிற்கும் ஒரு வஸ்து) அதன் பொருளைத் திருப்பிவிடும்போது அவற்றின் இருப்பு மனிதக் குடியிருப்புகளின் நிர்மாணத்திற்கு இடையூறானதாகப் பார்க்கப்பட்டு அவை அழிவுபடத் தொடங்கிவிடுகின்றன. இறைச்சியாகப் (பிரதிப்பண்பு) பொருள்கொள்ளப்படும் விலங்குகள் மனிதனால் அவற்றின் காண்பண்புடன் பராமரிக்கப்படுவதையும் விலங்குத்தன்மையை (காண்பண்பை) விட்டுக்கொடுக்காத விலங்குகள் (புலி, கரடி இன்னபிற) விரைவில் அழிவு நிலைக்கு வந்துவிடுவதையும்கூட இங்கே எண்ணிப்பார்க்கலாம்). மேலும் பெயர் மாற்றம் பெற்றவர்கள் தங்களுடைய பூர்வகதையைச் சக போராளியிடம் பகிர்ந்துகொள்ளும் தருணங்கள் உருவாகும்போது அதைத் தள்ளிப்போடவோ, பொய் சொல்லவோ முயல்கிறார்கள். நச்செள்ளை என்று பெயர் மாற்றப்பட்ட வெரோனிகா சக போராளியான மார்கழியிடம் (மாற்றப்பட்ட பெயர்) தன் இயற்பெயரைத் தாமரை என்று சொல்லி வைக்கிறாள். அவள் தன் பூர்வகதை குறித்து மார்கழியிடம் கதைக்க விரும்புவதில்லை. நெய்தல் என்கிற பெண்ணிடம் தன்னுடைய நிஜப்பெயரோடு கடந்தகாலத்தையும் பொய்யின்றிப் பகிர்ந்துகொள்ளும் தாமரை தான் சொன்ன, தன் நிலம் குறித்த உண்மைகளாலேயே அந்தப் பெண்ணால் சக்கையாக ஏமாற்றப்படுவதன் வழியே கடந்தகாலத்தின்மீதான பெயர் மாற்றப்பட்டவர்களின் உரிமை மொழித்தளத்தில் மறுக்கப்படுகிறது (தாமரை சாகும் தருணத்தில் அவளுடைய தோழியாயிருக்கும் அரசியுடன்கூட அவள் பொதுவாகக் கீரிக்குளத்தின் தொன்மக்கதைகளையல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட குடும்பக்கதையைப் பகிர்ந்துகொண்ட தடயங்கள் புதினத்தில் இல்லை). இயக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுடைய மாதிரி வாழ்க்கையாகப் பிரதியில் காட்டப்படும் இந்த, தாமரை, வெரோனிகா ஆகிய இருவரின் கதைகள் இப்படியாக இருப்பது, விரிவான கதையாடல்களாக இடம்பெறாமல் பெயர்களாக மிதக்கும் மற்ற இயக்கத்தவர்களின் கடந்தகாலங்களையும் மறதிக்குட்பட்டதாயும், பொய்க்கதைகளாயும் மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக கீரிக்குளம் அம்மான்கண் குளத்தின் கலிங்கிலிருந்து காலகாலமாக ஊர்க்காரர்களுக்குக் கேட்கும் நீரின் தொன்மக் குரல் கீரிக்குளம் ஊர்ப்பெண்ணான தாமரையின் காதுகளில் ஒலிக்காமல் அந்தக் குளத்தை அழிப்பதற்காக அவளுடன் வந்துசேரும், கீரிக்குளத்தைப்பற்றி முன்பின் அறியாத, அரசி என்கிற பெண்ணின் காதோடு ‘’அம்மான் கண், அம்மான் கண்’’ என்று பேசுவதன் வழியே அரசி என்கிற, பெயர் மாற்றம் செய்யப்பட்ட, இயக்கப் போராளியின் பூர்வகதை (அவள் வேற்றூரைச் சேர்ந்தவள்) சந்தேகத்திற்குரியதாக அல்லது பொய்யானதாக அல்லது மறந்துபோன ஒன்றாக ஆக்கப்படுகிறது. ஆக ஆமியின் போர் அதன் தாய்நிலம் குறித்த நினைவுகளை முன்னிறுத்தி நிகழ்த்தப்படுகிறதென்றால் இயக்கத்தினுடையது இதற்கு நேரெதிராகத் தாய்நிலம் குறித்த மறதியின்மேல் நிகழ்த்தப்படும் போராக மாறுகிறது. இந்த அச்சமூட்டும் வேற்றுமையை மொழியின் குறியீட்டுத் தளத்தில் சமனப்படுத்தி மனவுறுத்தலின்றிக் கடந்துவிடும் முகமாகவே, அதுவரை தான் உண்டு களித்திருந்த கிராமத்தின் வாழ்வாதாரங்களைத் தகர்க்கும் ஆணையைச் (பௌதீக ரீதியாக மட்டுமல்லாமல் தொன்ம நிகழ்வுகளை மறுப்பதன் வாயிலாகவும்) சுமந்துகொண்டிருக்கிற முன்னாள் கிராமத்து நபர் தன்னுடைய இயற்பெயரின் வழியே அறிந்துவைத்திருக்கிற தனக்கு அணுக்கமான அதன் அடையாளங்களை மறந்து, மனவுறுத்தலின்றித் தகர்க்கப்படுவதற்குத் தகுதியான வேற்று நிலமாக அதை உணரும் முகமாக, அவருக்கு வேறு பெயர் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இப்படிப் பெயர் மாற்றத்தின் வழியே தனிமனித அடையாளம் கலைக்கப்படுவதானது யாருடைய பெயருக்குள்ளும் யார் வேண்டுமானாலும் கதையாக ஒளிந்துகொள்ளக்கூடிய வாசிப்பு வாய்ப்புகளைப் பிரதியில் உருவாக்குகிறது. இவை நிகழ்வுகளின் தொடர்ச்சியைக் கலைத்துக் காலக்குழப்பத்தை உண்டாக்க வல்லவையாகவும் ஆகின்றன. இயக்கத்தால் (பெயர் மாற்றப்பட்டவர்களின் குழுவால்) நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்வின் (மாவீரர் நாள்) பார்வையாளர்களாக இருப்பவர்கள் (எடுத்துக்காட்டாகத் தாமரை, வெரோனிகா) நிகழ்காலத்தில் கிராமத்தவர்களாய் இருக்கலாம். ஆனால் மாற்றப்பட்ட பெயர்களின் பின்னணியில் ஒரு கிராமத்துக் கதை இருக்கிற பட்சத்தில் நிகழ்வை நிகழ்த்திக்கொண்டிருப்பவர்களும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அதே கணத்தில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களாக இருக்கும் வாசிப்புச் சாத்தியம் உண்டாகிறது. மேலும் அதே தர்க்கப்படி இப்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டுவிட்டவர்களாயும் ஆகிறார்கள். இந்த வாசிப்பை வெறுமே மொழி விளையாட்டாகச் சுருக்கிப் பார்க்கவும் வேண்டியதில்லை. இப்படி, இனி நிகழப்போகிற நிகழ்வு (பெயர் மாற்றம்) ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதாக வாசிப்பதற்கான தடயங்களும் பிரதியில் கிடைக்கத்தான் செய்கின்றன: பக்கம் 133ல் ஒரு உரையாடல்:

‘’இப்பப் பெடியளை வேற பிடிக்கிறாங்களாம். வீட்டுக்கொராள் வேணுமெண்டு மேலிடம் அரசியல்துறைக்குச் சொல்லியாச்சாம்.’’

‘’போகத்தானே வேணும். சுதந்திரம் சும்மா வருமோ?’’

பக்கம் 213ல் இன்னொரு உரையாடல்:

‘’ஒரு பிள்ளையை நாட்டுக்குக் குடுக்காமல் கடைசில ஆமி சுட்டுத்தான் சாகப்போறியளோ? ஏன், என்ர தங்கச்சி இயக்கத்துக்குப் போய்ச் செத்தவள்தானே. சொகுசா இருந்து சுதந்திரம் கேட்டா எப்படி?’’

இவ்வளவு ஏன், வெரோனிகாவினுள்ளேயே அவளுடைய தாய் வேறொரு ஆணை விரும்புவதையொட்டி இயக்கத்தில் சேர்ந்துவிடும் (பெயர் மாற்றம் பெற்றுவிடும்) விருப்பம் இருக்கிறது. அதாவது வெரோனிகாவினுள், அவள் கிராமத்துப் பெண்ணாய் இருக்கும்போதே, பிற்காலத்தில் தன் பெயரைத் தாமரை என்று மார்கழியிடம் சொல்லிக்கொண்டிருக்கும் நச்செள்ளை என்கிற இயக்கத்தவளாகப் பிரதியில் வெளிப்பட்டுக்கொண்டுதானிருக்கிறாள். இப்படிக் கதைமாந்தர்களின் அடையாளம் தகர்வதானது நிகழ்வுகளின் காண்பண்பின்மேல் மொழியின் திரவப்பண்பால் உருவாக்கப்படும் பிரதிப்பண்பு கொண்ட பொருள்களை உருவாக்கிப் பெருக்குகிறது.

தகர்வு 2: கதை சொல்லியின் அடையாளம் தகர்தல். நகுலாத்தை என்னும் புதினத்தைச் சொல்லும் கதைசொல்லியின் குரல் ஒரு ‘அனைத்துமறிந்தவரு’டையது (omnipresent). இந்த அனைத்துமறிந்தவரின் கண்முன்னே கீரிக்குளம் கிராமத்தின் ஒரு காலகட்டத்து நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டேயிருக்க அவை வாசகருக்கு அவருடைய குரலால் சொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. கீரிக்குளத்தில் அந்தக் குரல் அறியாத இடங்களிலில்லை, வனத்தின் முடிச்சுகளோ, குளத்தின் கழுத்தை இறுக்கும் ஆழமோ அந்தக் குரலால் அளக்கப்பட்டுவிடுபவைதான். அந்தக் குரல் அறியாத மனிதர்களில்லை. அது அறியாத எண்ணவோட்டங்கள் இல்லை. நிகழ்ந்தவை, நிகழ்பவை, நிகழவிருப்பவை யாவும் அந்தக் குரலால் அறியப்பட்டவைகளே. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் கீரிக்குளம் கிராமமே அந்தக் குரலால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான். அந்தக் குரல்தான் ஒருபுறம் பிரதிப்பண்பு கொண்ட (கிராமத்து) அசைவுகளையும் மறுபுறம் காண்பண்பு கொண்ட (இயக்கத்து) அசைவுகளையும் ஒருசேர நகுலாத்தை என்னும் பிரதிப்பரப்பில் நிகழ்த்திக் காட்டுகிறது. கதைசொல்லியின் குரலின் வழியே பிரதியில் இந்தக் கதை நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்த்தப்படுகின்றன. கதைமாந்தர்கள் (கிராமத்தவர், இயக்கத்தவர் மற்றும் அஃறிணைகளும்) அசைவதை, எண்ணுவதை, உணர்வதை, பேசுவதை வாசகர் நிகழ்த்துதல்களாகப் (performed events) பார்க்கிறார். ஒரு பிரதிப்பண்பு கொண்ட நிலமும் நிலம்சார் வாழ்வியலும் அவற்றின் காண்பண்பிற்குத் திருப்பப்படுவது தூலமாக வாசகர் கண்முன்னே நாடகீயப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்த்துதலை வாசிப்பின் போக்கில் மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள முடியும் (இவற்றை ஆசிரியர் புதினத்தைப் பிரித்திருக்கும் பகுதிகளோடு சேர்த்து யோசித்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்):

1. கீரிக்குளம் கிராமத்தின் வாழ்வியல்

2. இயக்கத்தின் போர் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்

3. கிராமத்தினர் இயக்கத்தவராக மாற்றப்படுதல் (இந்த மூன்றாவது பகுதி பெயர்மாற்றம் என்கிற நிகழ்வும் பிரதி வாசிப்பில் அது உண்டாக்கும் பொருளும் ஏற்படுத்தும் அடையாளத் தகர்ப்பு மற்றும் காலத் தகர்ப்புகள் இல்லையென்றால் பகுதி ஒன்றுக்கு அடுத்ததாக வரிசையிடப்பட்டிருக்கும்).

பகுதி 1 மற்றும் 2ன் அனைத்து அசைவுகளையும் நிகழ்த்துவதன் வழியே தன்னை அனைத்துமறிந்தவராகக் காட்டிக்கொள்ளும் கதைசொல்லி இந்த இரண்டு பகுதிகளுக்குமிடையிலான உரையாடல் அல்லது மோதல் என்று உருவகிக்கத்தக்கதான, மிக உணர்ச்சிகரமான, தீவிரமான காட்சிப்புலத்தையும் மொழியின் அணுக்கத்தையும் வேண்டி நிற்பதான ஆட்பிடிப்புத் தருணங்களின்போது (பகுதி 3) மட்டும் தன்னுடைய அனைத்துமறிந்த கதைசொல்லி என்னும் அடையாளத்தை இழக்கிறார். அந்தத் தருணங்கள்பற்றி ஏதும் அறியாதவராகத் தன்னை மாற்றிக்கொள்கிறார். அந்த உக்கிரமான தருணங்கள் ஒன்றிரண்டு வரிகளில் வாய்வழிச் செய்தியாகப் பதிவாகிக் கடக்கப்பட்டுவிடுகின்றன. உண்மையில் நகுலாத்தை புதினத்தின் முதன்மை நோக்கமே (கதைப்படி) இந்த ஆட்பிடிப்பு நிகழ்வுகளைச் சொல்வதுதான். ஆனால் ஆட்பிடிப்பை மையமாகக் கொண்டு அதன் இரு புறங்களிலும் எதிரெதிராக விரிந்திருக்கும் மற்ற இரண்டு பகுதிகளும் (கிராமத்து வாழ்க்கை, போராளி வாழ்க்கை) கதையில் நிகழ்த்திக் காட்டப்படுபவையாயிருக்க (performed events), ஆட்பிடிப்புத் தருணங்களோ இந்த நிகழ்த்திக்காட்டும் கதைமொழி தகர்ந்து, சொல்லப்படும் நிகழ்வுகளாக (narrated events), மிகச் சுருக்கமான குறிப்புகள் என்கிற அளவிலேயே பதிவாகின்றன.

பிரதியில் வாசிக்கக் கிடைத்தவரை மொத்தம் 7 ஆட்பிடிப்புத் தருணங்கள் கதைக்களத்தில் நிகழ்கின்றன.   யசோதா (பக். 140), வல்லி (பக். 161), சாரங்கன் (பக். 225), ஜீவன் (பக். 243), வெரோனிகா (பக். 254, 265), அட்சயன் (பக்.340), தாமரை (பக். 344). இந்த ஏழில் வல்லி தவிரப் பிற யாருடைய ஆட்பிடிப்புத் தருணங்களும் விரிவான விவரிப்புகளைப் பெறுவதில்லை (வல்லியினுடையதுமே நான்கைந்து சிறிய பத்திகளை மட்டுமே சலுகையாகப் பெற்றிருக்கிறது). வல்லி, வெரோனிகா, அட்சயன் ஆகிய மூன்றுபேருடையதைத் தவிர மற்ற நால்வருடைய ஆட்பிடிப்புத் தருணங்களும் பிரதியில் நிகழ்த்தப்படுவதில்லை. இயக்கம் அவர்களை நெருங்கி வரும் தருணம்வரை கதையை நிகழ்த்திக்கொண்டுபோகும் கதைசொல்லி இயக்கம் காட்சியில் தோன்றியதுமே தன் அனைத்துமறிந்த குரலை இழந்துவிடுகிறார். பிறகு வேறோரிடத்தில் வேறு யாரோ ஒருவரால் அவர்கள் பிடிபட்ட செய்தி வாய்வழித் தகவலாகச் சொல்லப்படுகிறது (விவரிக்கப்படுவதுகூட இல்லை). அதுவரையில் கிராமத்தவராய் இருந்த ஒருவர் இயக்கத்தவரால் பிடிபட்டுவிட்டதாக யாராலோ ‘சொல்லப்பட்டுவிட்ட’ அடுத்த கணத்திலேயே போராளி வாழ்க்கைக்குள் வந்துவிடுகிறார். உண்மையில் பிரதியில் அவர் எங்கும் ‘பிடிபடுவதேயில்லை’. சரி, இந்த நான்கு போக மீதம் மூன்று பேருடைய ஆட்பிடிப்புத் தருணங்கள் (ஓரிரு வரிகளில்தானென்றாலும்) நிகழ்த்தப்பட்டிருக்கின்றனவேயென்றால் அந்த மூன்று தருணங்களின் நிகழ்த்துதல்களும் அவர்கள் தொடர்பான வேறு மூன்று தருணங்களால் பண்புநீக்கம் செய்யப்பட்டு நிகழாதவையாக ஆக்கப்பட்டுவிடுகின்றன. வெரோனிகா பிடிபடும் காட்சி பக். 265ல் நான்கு வரிகளில் நிகழ்த்தப்படுகிறது. இந்த வரிகள் வெரோனிகாவை இயக்கம் அவளுடைய விருப்பமின்றிப் பிடித்துக்கொண்டு செல்லும் சித்திரத்தை உருவாக்குகின்றன (பொதுவாகவே ஆட்பிடிப்பு என்கிற வார்த்தையே கட்டாய ஆள்சேர்ப்பு என்கிற பொருளைத்தான் பிரதியில் கொண்டிருக்கிறது). ஆனால் அந்தக் காட்சிக்கு முன்னாலும் (விழாவூரெடுத்த காதை: 12) பின்னாலும் (காடுபாடியது: 02) தரப்படும் கதையாடல்கள் வெரோனிகாவிற்கு தன் தாய்மேல் வெறுப்பு இருந்ததையும் அதன் காரணமாகத் தானே விரும்பி இயக்கத்தில் சேர்ந்திருக்கக்கூடும் என்கிற சனங்களின் ஊகத்தையும் (‘’ஆனால் அண்ணை, அண்டைக்குப் பாத்த சனம் பிள்ளை ஏதோ விரும்பிப் போன மாதிரி சொல்லுதுகள். கையைப் பிடிச்ச இயக்கப்பெட்டையின்ர கையை உதறிட்டு ‘’நான் வாறன், நீர் தொடாதையும்’’ எண்டிருக்கிறாள்’’ (பக். 268)) வாசிக்கத் தந்து (வெரோனிகாவின் மனப்பதிவு என்ன என்பது குறித்துக் கடைசிவரை ‘அனைத்துமறிந்த’ கதைசொல்லியிடமிருந்து எந்தக் குறிப்பும் இல்லை) ஆட்பிடிப்பு என்கிற தருணத்தை அழித்து அதை விரும்பிச் சேர்தலாயும் பொருள்கொள்ள விட்டுவிடுகின்றன. அடுத்ததாக, அட்சயன் பிடிபடும் நிகழ்த்துத் தருணமும் தம்பிக்குப் பதிலாகத் தாமரை தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அவனை அங்கிருந்து விடுவித்து மீண்டும் கிராமத்தவனாக ஆக்கிவிடுவதன்மூலம் அழிக்கப்பட்டுவிடுகிறது. வல்லியின் ஆட்பிடிப்புத் தருணம் ஒப்பீட்டளவில் சிறிது விரிவாகச் சொல்லப்படுகிறதுதான். ஆனால் கிராமத்தில் வல்லியின் இன்மை கண்ணனின் இருப்பால் சரிக்கட்டப்பட்டு வல்லி பிடிபடும் தருணம் மட்டுமல்லாமல் அவனுடைய இருப்பே கதையில் பொருளற்றதாக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடுகிறது. வல்லியின் காதலி வதனி கண்ணனின் காதலியாகிறாள் (வதனி வல்லிக்குப் பிறகு கண்ணனை விரும்புவதாகக் காட்டப்படவில்லையாயினும் கண்ணன் தன் கற்பனைகளின் வழியே வதனி-வல்லி உறவைக் கலைத்து வல்லியை இல்லாமலாக்குகிறான்), வல்லியின் சிறப்புத் தகுதியான குழுவன் பிடியைக் கண்ணன் கைப்பற்றிக்கொள்கிறான், வல்லியின் விசுவாசமுள்ள நண்பர்கள் கண்ணனின் தலைமையை ஏற்றுக்கொள்கிறார்கள். வல்லியைக் கண்ணனைக்கொண்டு மறையச் செய்வதன்மூலம், பிரதியில் அவனுடைய தேவையை இல்லாமலாக்குவதன்மூலம் கதைசொல்லி வல்லி தொடர்பான ஆட்பிடிப்பு நிகழ்வை அர்த்தமிழக்கச் செய்கிறார் (வல்லி பிடிபடுவதால் எந்தக் கதை நிகழ்வும் தடைபடுவதில்லை. அவை கண்ணனால் நிறைவேற்றப்பட்டுவிடுகின்றன).

இப்படிக் கதை மாந்தர்களின் அடையாளத்தைத் தகர்த்தல், கதைசொல்லியின் அடையாளத்தைத் தகர்த்தல், கால, இடக் குழப்பங்களை உருவாக்குதல் போன்ற, புனைவு மொழிச் செயல்பாட்டின் உச்சபட்ச சாத்தியங்களைப் பிரயோகித்துப் பார்ப்பதன் வழியே பிரதியில் இயக்கம் பிடிவாதமாகத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் ஒரு தூல நிகழ்வின் (ஆட்பிடிப்பு) காண்பண்பானது பிரதிப்பண்பைச் சாத்தியப்படுத்தும் ஒரு மொழி நிகழ்வாக மாற்றப்படுகிறது. இந்தப் போர் சார்ந்த நிகழ்வு காணுலகின் அரசியல் மொழியால் அளவிடப்படும் வரலாற்று நிகழ்வென்கிற நிலையிலிருந்து (அப்படி அளவிடப்படும்போது ஆட்பிடிப்பென்னும் நிகழ்வு போர் என்னும் பெருங்கதையாடலின் அடியில் ஒரு சிற்றசைவாகத் தன் முக்கியத்துவத்தை இழக்கிறது. நகுலாத்தையிலும்கூட ஆட்பிடிப்பானது நிகழ்த்துதலாக அன்றி உச்சரித்தலாக இடம் பெறுவது இந்த முக்கியத்துவமிழப்பின் குறியீடாகவே அமைகிறது) விடுவிக்கப்பட்டுப் புனைவு மொழியில் பல்வேறு பிரதிப்பொருள்களுக்கு இடமளிக்கும் ஒரு தொன்மமாக மாறுகிறது. இந்தத் தொன்மமாக்கலின் வழியே வலுக்கட்டாயமாகக் காண்பண்பிற்கு மாற்றப்பட்ட தங்களுடைய வாழ்வியலையும் அதன் இறுதிக்கட்டத்தையும் தலைமுறைகளின் நனவிலியாகப் பாதுகாத்து வைக்க விரும்பும் மக்கள் திரளின் பிரதிப்பண்பு கொண்ட இக்கதையாடல் வழக்கமான அழகியல்தன்மைகளிலிருந்து தப்பித்த ஒரு மாதிரிப் புனைவாக உருவாகியிருக்கிறது.

(பிரதி: நகுலாத்தை – வகைமை: புதினம் – ஆசிரியர்: யதார்த்தன் – வருடம்: 2022 – வெளியீடு: வடலி – விற்பனை உரிமை: கருப்பு பிரதிகள் – பக்கங்கள்: 480 – விலை: 750)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.