மனநோயின் மொழி

ளப்பிணி எதிர் மருத்துவம் (ஆன்டிசைக்கியாட்ரி) என்ன என்பதையும், அதனை ஒரு புத்தகமாகக் கொண்டுவந்து “மனநோயின் மொழி” என்று டேவிட் கூப்பர் எழுதியதை, தமிழில் லதா ராமகிருஷ்ணன் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார். சந்தியா பதிப்பகம் அப்புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.இப்புத்தகத்தினை வாசித்தப்பிறகு என் கருத்துகளை கீழே உள்ளவாறு தொகுத்துக் கொள்கிறேன்.

இன்றும் நம் சமூகத்தில் எளிதான விவாதமாக இருப்பது உளவியல் சம்பந்தமான கருத்துகளும், தத்துவங்களும் தான். உண்மையில் மனநோய் இருக்கிறதா? மனநோய் என்பது என்ன? மிக முக்கியமானது மன நோயாளி என்பவர் இங்கு யார்?

இந்த மூன்று கேள்விகளுக்கும் உளவியல்துறைசார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பலரும், அதுவும் எளிதான பதிலைச் சொல்லக்கூடியவர்களாகவும்,உளவியல் நிபுணர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.

ஏனென்றால் இங்கு மனிதர்களின் அனைத்து செயல்களுமே இந்திய இதிகாசங்களால் மக்களுக்குக் கற்பிக்கப்பட்டவையாக இருக்கிறது.இங்கு உள்ள எளிய மக்கள் யாரிடமும், எந்த உரையாடலும் நடத்தப்படவில்லை என்கிறார் வங்காளத்தைச் சேர்ந்த கிரிந்தர சேகர் போஸ் என்ற மனநல மருத்துவர். இவர் இந்திய மனநோயாளிகளுக்கென்று ஒரு பிரத்தியேக நோய்க்கூறுகள் இருக்கின்றன என்கிறார்.

அதனால் தான் தத்துவம், கலை, அறிவியல் இந்த மூன்று துறையும் சேர்ந்து உளவியலுடன் கலக்கும் போது, மனநோய் என்பது பாவ,புண்ணியக் கணக்கிலும், மக்களின் விவாதத்திற்குரிய கலைரீதியான படைப்பாகவும் சமூகத்தில் பரப்பப்படுகிறது. அதனால் தான்அறிவியலில் உளவியல்துறை சார்ந்த சிகிச்சைமுறைகளின் தாக்கம் மக்களை விட்டு விலகி நிற்கிறது.

இதற்காகத்தான் என்றுமே நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் கடந்த காலத்தில் நடந்த விஷயங்கள் மற்றும் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தையும் நம் துறைசார்ந்த முன்னோடிகள் என்ன மாதிரி பிரச்சினைகளைக் கடந்து வந்தார்கள் என்றும், எந்த மாதிரியான தீர்வுகளைப்பிரச்சினைகளுக்கு வழங்கினார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

அப்படியாக  உளவியல் (சைக்கியாட்ரி) துறைக்கு உளப்பிணி எதிர்மருத்துவம்(ஆன்டிசைக்கியாட்ரி) என்ற இயக்கத்தை உருவாக்கியவர் டேவிட் கூப்பர். உளப்பிணி எதிர்மருத்துவம்(ஆன்டிசைக்கியாட்ரி) என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியவரும் இவரே.

உளவியல் சிகிச்சையின் நலன்களைப் பற்றிய விழிப்புணர்வை மருத்துவத்துறை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் வெகுவேகமாகச் செயல்படும்போது, உளப்பிணி எதிர் மருத்துவம் (ஆன்டிசைக்கியாட்ரி) பற்றிய கோட்பாடுகளை விவரிக்கிறார் டேவிட் கூப்பர்.

டேவிட் கூப்பரும் ஒரு மனநல மருத்துவமனையில் வேலை பார்த்தவர். அங்கு இருந்த மனநோயாளிகளின் மனநோய்களுக்கான அடிப்படை காரணமாக இருந்தவைகளில் சமூகப்பிரச்சனைகளும், சமூகஅழுத்தங்களும் மிக இன்றையமையாததாக இருந்தது அதனால் அவர் தீர்க்கமாக எடுத்துரைத்தது என்னவென்றால், எத்தனை பெரிய சிகிச்சைகளை உளவியல் ரீதியாக அளித்திருந்தாலும், அடிப்படை சமூகக்கலாச்சாரங்களை மாற்றாமல் எந்த ஒரு மனிதனின் மனநோயையும் தீர்க்க முடியாது என்கிறார். சமூக அரசியலால் ஏற்படும் தனிமனித மனப்பாதிப்புக்குஏட்டுக்கல்வி உளவியலாளர்களால் சம்பிரதாயமான பதிலைத்தான் தர முடியும் என்கிறார்.

“மூளை என்பது வெறுமனே அந்தரத்தில் சுழன்று கொண்டிருப்பதில்லை. அது, பூமியின் வரலாறு, சமூக, அரசியல் போக்குகளுடன் தொடர்பு கொண்டது”

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தீவிர மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் தொடர்ந்து சில நாட்களாகக் குளிக்காமல், சாப்பிடாமல் இருந்தார். இதன் பாதிப்பைப் புரிந்ததால், உடனே மனநல மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை எடுக்கக் கூறி இருந்தேன். அக்குடும்பமும்நண்பர் சாப்பிடாமல் இருப்பதால் வேறு எதுவும் நடந்து விடக்கூடாது என்று பயந்து மனநல மருத்துவமனையில் உள்ள சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள்.

அந்த நண்பரோ மூன்று நாட்கள் மருத்துவமனையில்இருக்கும்பொழுது, அங்குச்சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொண்டார். அதைப் பார்த்த குடும்ப உறவுகள் அவரின் மனச்சிதைவு பற்றி யோசிக்காமல், சரியாகச் சாப்பிடுகிறார் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு வீணாகச் செலவு செய்வதை விட்டுவிட்டு, வீட்டிற்கு மருத்துவரின் அறிவுரையை மீறி அழைத்து வந்துவிட்டார்கள். ஆனால் நண்பரோ வீட்டிற்கு வந்தபின் மறுபடியும் சாப்பிடவில்லை. இதைப்பார்த்த மனைவிக்கு, மருத்துவமனையில் வேலைபார்க்கும் பெண்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுகிறார், வீட்டில் தான் சமைத்துக் கொடுப்பதைச் சாப்பிடாமல் இருக்கிறார் என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

இதைத்தான் டேவிட் கூப்பர் கூறுவது, வீட்டில் உள்ள பிரச்சினையைச் சரி செய்யாமல், மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது ஓட்டைப்பானையில் தண்ணீரை ஊற்றும் கதையாக மாறிவிடும்.

பொதுவாக மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்ப்பை அளிக்கும் மனப்பாங்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏதாவது காரியம் அவர்களுக்குச் செய்தாக வேண்டும் என்றில்லாமல், நடுநிலைச் சார்புடன் இயங்க வேண்டும் என்பது தான் மனநல சிகிச்சையின் அடிப்படை விதியாக இருக்க வேண்டும் என்று எர்விங் காப்மேன் என்ற சமூகவியலாளர் கூறுகிறார்.

அரசியலுக்கு எதிராகவும், ஆதரவாகவும்பேசுபவர்களையும், மதத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும்பேசுபவர்களையும், ஜாதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசுபவர்களையும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசுபவர்களையும் மனநோயாளி என்று அவரவர்களின் தொண்டர்களால்சமூகத்தில் தொடர்ந்து பரப்பப்படுகிறது. அதனால் கூப்பர் சொல்வது, உளவியலும், சட்டமும் அதிகாரத்துக்கெதிரான எத்தகைய கிளர்ச்சியையும் அடக்கிட அரசுக்குத் துணை புரியும் கருவிகள் என்கிறார்.

சமூகவியல் கோட்பாடுகளில் கீழ்ப்படிதல் (Obedient) என்பது எந்த ஒரு நபரும் கூறக்கூடாத வார்த்தையாக இன்றும் பாடத்திட்டத்தில் இருக்கிறது. சமூகமும், கலாச்சாரமும் சேர்ந்து எல்லாவித கட்டுப்பாடுகளையும் எடுத்துக் கூறி, யாரோ வகுத்த விதிமுறைகளை இம்மி பிசகாமல் செயல்படுபவரை சாதாரணநபர்(நார்மல்) என்றும், அந்த விதிமுறைகளைக் கேள்வி கேட்டு, அதற்கு முரணாக நடப்பவரை அசாதாரணமான நபர் (அப்நார்மல்) என்றும் கூறுவதைத்தான் இந்தச் சமூகம் தொடர்ந்து செய்கிறது என்று கறாராகக் கூறுகிறார்.

இதற்காகத் தான் கூப்பர் விடுதலை உணர்வுடன் கருத்தியல் சார்ந்து இயங்கும் மனநல மருத்துவர்கள், நீதிபதிகள், உளவியலாளர்கள், படைப்பாளிகள் என அனைவரும் ஒரு இயக்கமாக மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

குடும்பத்தில், அரசியலில், சமூகத்தில் ஒரு மனிதனுக்கு முக்கியப் பண்பாக இருப்பது இயக்கமற்ற பணிதல் நிலை என்றும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு எதிராக இருக்கும் நபர்களை வன்முறையாளர்கள் என்றும் பிரகடனப்படுத்துகிறார்கள். இதனால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதும், கேள்வி கேட்பவர்கள் யார் என்பதும் மறைக்கப்படுகிறது.

மனித நாகரீக வளர்ச்சியில் குடும்பம் மிக முக்கியமான சிறப்பம்சம் என்று அனைவராலும் கருதப்படுகிறது. அதனால் குடும்பத்திற்கெதிராகப் பேசுபவர்களை சமூகம் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.  குடும்பம் என்கிற அமைப்புக்கு எதிராக கூப்பர் பேசவில்லை. ஆனால் ஒரு குடும்பம் அமைவதற்கு மனதளவில் எல்லாரும் தெளிவான கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டும் என்கிறார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் ஆசைக்கும், கனவுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அந்த எண்ணத்திற்கு மதிப்பு குறையும்போது, அக்குடும்பத்தைப் பற்றிய முரணான எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும்.அப்படி தன்னுடைய குடும்பம்பற்றி முரணாகப் பேசும் நபர்களை இயல்பாகக் கடக்க வேண்டும் என்று கூப்பர் அழுத்தம் திருத்தமாக அக்குடும்ப நபர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்.

இன்றைய தலைமுறையில் நமக்குத் தெரிந்த பல முகங்கள் திருமணம் ஆகாமல் அல்ல, திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். அதற்கு அடிப்படைக் காரணமாகத் திருமண உறவில் உள்ள நெருக்கடி, பெற்றோரின் கட்டுப்பாடுகள், உறவினர்களின் அடுக்கடுக்கான சம்பிரதாய சடங்குகள் இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லத்தெரியாத இயலாமையின் வெளிப்பாடுதான் திருமணத்தை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள். ஏனென்றால் தான் படித்த கல்வி, தான் வாசித்த புத்தகங்கள், தான் கலந்துகொண்ட அமைப்புகள் இவை எல்லாம் சொல்லிக்கொடுத்த எதையும் தன்னால் தன் வீட்டில் அல்லது தனக்குப் பிடித்த நபரிடம் செயல்களாகச்செய்ய முடியாத ஒரு சமூகச் சிக்கலில், யதார்த்த சூழலில் இருக்கிறார்கள். அதை எதிர்கொள்ளும் பக்குவமும், திறனும் அவர்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

அதனால் சாதாரண மனிதன் எழுப்பக்கூடிய கேள்விகளுக்குக் கூட முறையான பதிலை கொடுக்கத் தெரியாத குடும்ப அமைப்பாக இன்றும் நம் கலாச்சாரம் இதிகாசங்களின் தாக்கத்தில் ஊறிப் போய் இருக்கிறது. இதனால் மிகவும் குடும்ப அமைப்பை நம்பக்கூடிய சமூகத்தில் பெற்றோர், கணவன் மனைவி உறவு, காதல், குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல் கேலி, கிண்டலுடன் அவர்களின் வாழ்வியலை எளிதாக விவாதம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

மனச்சிதைவு என்பதை கூப்பர் ஒரு நோயாகப் பார்க்கவில்லை. மாறாக நோய்சார் விஷயமாகக் கருதாமல், மனிதர்களுக்கிடையே நடக்கும் செயல்பாடுகளாகப் பார்க்கிறார். ஒரு மருத்துவர் நோயாளியைக் கேள்வி கேட்கும் முன் நோயாளியைப் பற்றி ஒரு முன் முடிவுக்கு வருகிறார். அதே போல் மருத்துவரைப் பற்றியும், நோயாளி ஒரு முன் முடிவுக்கு வருகிறார்.

இப்படியாகக் குடும்பத்தைச் சரி செய்யாமல், சமூகத்தைச் சரி செய்யாமல், அரசியலைச் சரி செய்யாமல் மனநலச் சிகிச்சையில் முழு வெற்றியை யாராலும் கொடுக்க முடியாது என்பதே இந்தப் புத்தகம் நமக்கு விரிவான ஒரு பார்வையைக் கொடுக்கிறது.

மனநோயாளி என்பவர் யார் என்பதை விடவும், அதற்குச் சிகிச்சை அளிக்கும் உளவியல் மருத்துவர்கள், ஆலோசகர்கள், முதலில் ஒரு திறந்த மனப்பாங்குடன் அணுக வேண்டும் என்பதே இன்றைய தலைமுறை மாற்றத்தில் மிக முக்கியமான பங்காக இருக்கிறது.

அப்பொழுது தான் நோயாளியின் பார்வையில் மட்டும் பார்க்காமல், சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றிய பார்வையைப் புரிந்துகொண்டு, அதற்கான தெளிவையும் கொடுக்க வேண்டிய கடமை உளவியல் ஆலோசகர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தில் பங்கெடுக்கும் அனைவருக்கும் இருக்கிறது. மனநோயின் மொழியை முதலில் சரியான வார்த்தையில், சரியான அர்த்தத்தில் தெரிந்து பேசுவது அடிப்படைத்தேவையாக அனைவருக்கும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.