மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ‘மோகமுள்’, ‘மரப்பசு’ நாவல்கள் வரிசையில் மற்றுமொரு சிறந்த படைப்பு ‘நளபாகம்’.
யாத்திரை ஸ்பெஷல் ரயில் பயணத்தில் நல்லூரம்மா ரங்கமணி, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி சுலோச்சனா, யாத்திரை ஸ்பெஷல் காண்ட்ராக்டர் நாயுடு, கதையின் நாயகன் அம்பாள் உபசாரன் காமேச்வரன் இவர்களின் சந்திப்பும், உரையாடல்களுமாக கதைக்குள் நுழைவது, நாமும் அவர்களுடன் ரயிலில் சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு அருமையான அனுபவம்.
எத்தனைப் பயணங்கள் அமைந்தாலும் ரயில் பயணங்கள், ரயில் சிநேகிதங்கள் எப்பொழுதும் மறக்க முடியாதவைதான். ஒரு நல்ல நாவல் வாசிக்கும் அனுபவம் போல, ரயில் பயண உரையாடல்கள் நம்மை வேறொருவர் வாழ்க்கை அனுபவத்தோடு கட்டிப்போட வைக்கிறது. அதிலும், பெண்கள் அந்த ஒருபயணச் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் எவ்வளவு எளிதில் அன்னியோன்யமாக ஆகிவிடுகிறார்கள். ரங்கமணி அம்மாவும், சுலோச்சனாவும் ‘நீ’, ‘வா’, ‘போ’ என்று அழைக்கக்கோரும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள்.
ரங்கமணி அம்மாவுக்கு கணவனை இழந்து, தான் சுவீகாரம் எடுத்தப் பிள்ளை துரை, மருமகள் பங்கஜத்திற்கு இன்னும் குழந்தை இல்லா குறை. எத்தனையோ பேருக்கு ஜோதிடப் பலன், பரிகாரங்கள் எடுத்துச் சொல்லும் முத்துசாமி, சுலோச்சனா தம்பதியருக்கும் குழந்தை இல்லாத குறை. காமேச்வரன் தன் அப்பா மறுமணம் செய்துகொள்வதும், சித்தியாள் வீட்டில் ஒரு பிடித்தமான வாழ்க்கை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி தன் குரு வஸ்தனால் வளர்க்கப்பட்டு, ஆன்மீகப் புகட்டலோடு, விதவிதமான, சுவையான சமையல் கலையும் தன் குருவிடம் கற்றுக்கொள்கிறான். இந்த யாத்திரை ஸ்பெஷலின் முதன்மை சமையற்காரனாக, அம்பாளுக்கு தினந்தோறும் பூஜை செய்யும் காமேச்வரன், அவனுக்கென்று ஒரு குடும்பம், புகலிடம் இல்லாமல் ரயில் சக்கரங்கள் மாதிரி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை.
முத்துசாமி, ரங்கமணி கொடுத்த ஜாதகத்தைப் பார்த்து ரங்கமணி மருமகள் பங்கஜத்திற்கு புத்திர பாக்கியம் இருக்கிறதெனவும், அவள் சுவீகாரபுத்திரன் துரைக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று எடுத்துச் சொல்லும்போது ரங்கமணி, சுலோச்சனாவுக்கு மட்டும் அதிர்ச்சியல்ல, வாசகர்கள் நாமும் இந்த இடத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது வெகு இயல்பே.
காமேச்வரன் ரயிலில் சுறுசுறுப்பாக விதவிதமாக சமைப்பதை, படுசுத்தமாக இருப்பதை, அம்பாளுக்கு நெருப்பென அமர்ந்து பூஜை செய்வதைப் பார்த்து, ரங்கமணிக்கு அவன்மேல் பாச உணர்வு பீறிட்டுப் பொங்குகிறது.
பத்ரிநாத் மலையடிவாரத்தில் தன் மகனாக தன்னுடனே வீட்டிற்கு வந்து தங்கி அம்பாளுக்கு நெய்வேத்தியம் பண்ணி தினந்தோறும் பூஜை செய்து, அதை பிரசாதமாக கொடுக்குமாறு ரங்கமணி உருகி வேண்டி கேட்டுக்கொள்ளும்போது காமேச்வரனால் தட்டமுடியவில்லை. இது என்ன விபரீத விளையாட்டு என்று தான் நமக்குத் தோன்றுகிறது! இவன் தன் வீட்டில் தங்கி, பூஜை செய்தால்தான் வம்சம் விருத்தியடையும் என்று ரங்கமணி நம்புகிறாள்.
தான் வளர்க்கும் எருமைமாடுகளை குழந்தைகளென கொஞ்சிக்குலாவும் தான் தங்கியிருக்கும் வீட்டுபாட்டியிடம் சொல்லிவிட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ரங்கமணியம்மாள் வீட்டுக்கு வந்து சேர்கிறான் காமேச்வரன்.
காமேச்வரனும், பங்கஜமும் சந்தித்துப் பேசிக்கொள்ளுமிடமெல்லாம் ஜோதிடர் முத்துசாமி சொன்னமாதிரி ஏதோ ஒரு தவறான உறவு ஏற்பட்டு விடுமோ என்ற சஞ்சலத்தை உண்டுபண்ணுகிறார் தி.ஜா. ‘அம்மா வந்தாள்’ அப்பு, இந்து உறவை நினைவுப் படுத்துகிறது. ஆசிரியர் கம்பி மேல் நடக்கும் பயணம் போல இந்த உறவுச் சிக்கலை மிக மிக கவனமாகவே கையாண்டிருக்கிறார். துரை ஒன்றும் தெரியாத அப்பாவியா, ‘அம்மா வந்தாள்’ அப்புவை நினைவுபடுத்துகிறார் – அப்பு வேதசாலையில், துரை மளிகைக்கடையில்.
நல்ல தாம்பத்தியம் அமைய துரைக்கும், பங்கஜத்திற்குமான அன்னியோன்யம் என்பது வீட்டில் அரிய விஷயமாகவே இருக்கிறது. எதேச்சையாக ஒரு அன்னியோன்யம் கணவன் மனைவிக்கு அமையுமிடத்தை அருமையான வார்த்தைகளால் விவரிக்கிறார்.
பங்கஜம் கர்ப்பம் தரிப்பதும், ஊர் வாய் காமேச்வரன் மேல் பழிசுமத்தி தூற்றுவதும் ‘ஊர்தான் நல்லூரு, ஆனால், தடிப்பெய ஊரு’ என்ற இந்த வரிகள் போதும் ஊர் வாயைப் புரிந்துகொள்ள. பங்கஜத்திற்கு இவனால் வரக்கூடிய அவப்பெயர் அவனை மேலும் காயப்படுத்துகிறது. காமேச்வரன் எதிர்கொள்ளும் தீவிரமான உணர்ச்சிகளை தனக்கேயுரிய மொழியில் தி.ஜா. விவரிக்கிறார்.
தன் மருமகள் மூலம் ஒரு ரத்த உறவு வேண்டி ரங்கமணி செய்யும் இந்த செயல், காமேச்வரன், பங்கஜம் உறவுச் சிக்கல், சக்தி வடிவான காமேச்வரனின் ஆன்மீக உணர்வு என இந்த மூன்று புள்ளிகளையும் தி.ஜா. நேர்த்தியாக இணைக்கும் விதம், நமக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது.