சீசாச் சில்லுகள்
சக்கர நாற்காலியொன்று நகரத்தின் மழைக்கும்
சாலையை தன்னந்தனியாக கடந்து வீடு சேர்வதாய்
ஓர் மன்னிப்பு
திமிரின் சீசாச்சில்லுகள் பதித்த சுவர்களை
பூனையின் பாதங்களுடன் கடந்து
உன் அழும் முகம் அருகே நிற்கிறது
கண்ணாடிக் கூம்புக்குள் எரியும் சுடர்
மிக நெருங்கின மூச்சுக்கு அசைவதாய்
கண்கள் யாசிக்கும் அந்த முதல் சொல்
ஏழுகடல் ஏழு மலை தாண்டி குகைக்குள் …
அந்த கிளியோ ஊமையும் செவிடும்
கண்களை மூடி ஒரே அணைப்பில்
சகலமும் பொடித்து விட்டாய்
மழை முடிந்ததும்
காற்று சுவர்களை உலர்த்தத் துவங்குவதைப் பற்றி யாரேனும் எழுதி
இருக்கிறார்களா
அதன் விநோத சித்திரங்களைப் பார்த்திருக்கிறாயா
மழைக்குப் பிறகு துவங்கும்
மெல்லிய ரீங்காரங்கள் குறித்து..
இல்லை அல்லது தெரியாது
இக்கணம்
நான் உன் இறக்கைகளுக்குள்
பத்திரமாய் இருக்கிறேன்
போதும்.
-
தலைகீழ் தாவரம்
சாணைக்கல்லில்
சவரக்கத்தியாய்
பால் கோடிழுக்கிறது
மின்னல்
நீண்ட ஊடலுக்குப் பின்
உன் தயக்கப் புன்னகை
எங்கிருந்தோ முளைத்த மாயக்கரம்
வனப்பெண்ணுக்கு
ஓடையால் இடுப்பு வரைகிறது
ஒருக்களித்து உறங்கும் உன் இடைவளைவில்
இரவு விளக்கின் ஒளி மெழுகு
தண்ணீரை நெல் தூற்றுவதாய்
தூற்றி மிஞ்சியதை
நட்சத்திரங்களாய் சேமிக்கிறதா வானம்
இல்லை நட்சத்திரம் விதைத்து
வளரும் தலைகீழ் தாவரமா மழை
மற்றும்
இந்த அன்பு
கை சூம்பிய ஒருவன் ஒரு
மலரைத் தொட்டுப் பார்ப்பதைப் போல்
கடிகார முள் காற்றைத் தொட்டு
நகர்கிறது