3.திசைகாட்டும் குளம்பொலிகள்
மனிதனின் நீண்ட பரிணாம வளர்ச்சிப் பயணத்தில் அவனுடன் மிக நெருக்கமாக ஒட்டிக் கொண்ட விலங்கு – நாய்களுக்கு அடுத்ததாக – புரவிகள் தான். அவன் தன் நாகரீக முன்னெடுப்புகளுக்கு – போர் வாகனமாக, இடம் பெயர்வதற்கு என்று மட்டுமல்லாது – தன் கட்டுக்கடங்காத கற்பனைகளைத் தற்குறிப்பேற்றி வைக்கப் பயன்படுத்திய முக்கிய குறியீடாகவும் குதிரைகளைப் பயன்படுத்தி இருக்கும் வரலாற்றைச் சொல்லாம். கிரேக்கத் தொன்மங்களில் வரும் செண்டார் என்ற குதிரை மனிதனின் கற்பனை அப்படி நிலைத்த ஒன்று. மேலும் குர்ஆன் போன்ற மத ஆதார நூல்களிலும் குதிரைகள் மீது சத்தியமாக என்று உறுதிமொழியிட்டுச் சொல்லும் வரிகள் காணப்படுகின்றன.
2000-க்கு முன்னர் வெளியான பிரபலமான குதிரைகள் பற்றிய திரைப்படங்களுள் பெரும்பான்மையானவை, பெரிதும் நகைச்சுவையாகவோ, விலங்கு சாகசக் கதைகளாகவோ, காமப்பகடிகளாகவோ எஞ்சி விட்டவை. ஆனால் தற்போது ஒரு தசாபதமாக குதிரை பற்றிய திரைப்படங்கள் சில, மனிதனுக்கும் புரவிகளுக்கும் இடையே திகழும் உன்னதமான நட்பைப் பாராட்டுவதோடு நிலைத்த விழிகளுடன் குதிரையின் அசைவுகளைப் பதிவு செய்பவையாகவும் இருக்கின்றன.
- Lean on Pete (2018) / Andrew Haigh
தன்னை எங்ஙனம் கண்டு கொள்ள முடியும் என்ற ஆதார கேள்விக்கு ஆயிரமாயிரம் முகாந்திரங்களை நம் ஆழ்மனம் உணர்ந்திருந்தாலும், அதைத் தெளிந்த நிலையில் திரைப்பிம்பத்தில் காணுதல் என்பது கடினத்தேர்வு. கிட்டினரை எல்லாம் தொலைத்துவிட்டு, வாழ்வின் போக்கில் செல்ல ஒரு தந்தைக்கு வலிமிக்க வரலாறு இருக்கலாம். ஆனால், அத்துடனேயே தன் ஒழுக்கையும் ஏற்றுக் கொண்டு பயணிக்கும் சிறுவனின் தேர்வில் எத்துணை தற்பலி கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. சார்லியின் பயணத்தில் யாரும் குடிகோள் செய்யவில்லை, நேரடித் தடைகள் எனக் கூட ஏதுமில்லை. இயல்பாகவே, மனிதனின் அன்பிற்கு முன்நின்று பேசும்போது கண்ணீரைப் பின் தொடர்தலே பரிசாகிறது, பாதையாகிறது.
நிலங்களைக் காலாற குறுநடையிட்டுக் கடந்தவாறு, தன் குதிரையுடன் பேசிக் கொண்டே செல்லும் வழியில் வாழ்வின் நிலையின்மை, வர்ணங்கள், குரோதங்கள் யாவும் இரவுபகல் போல மாறிமாறி வருவதைப் புரிந்து கொள்ள முயல்கையிலேயே இன்னும் வேகமாய், பசித்தவனின் திருவோட்டிலிருக்கும் ஒற்றை கறித்துண்டத்தையும் பிடுங்கிக் கொள்ளும் கோரத்துடன், வாழ்க்கை தாண்டவமிடுகிறது. கழுத்தில் இருக்கும் கத்தி மெல்ல அழுத்தத் துவங்கும் போது, சிலதுளிகள் இருக்கும் பயமும் உலர்ந்து விடுகிறது. அதிலிருந்து மீண்டவன் வாழ்வு, குறைந்தபட்சம் டஜன் வாழ்க்கையின் செறிவுடனாவது நிகழ்ந்திருக்கும்.
இயக்குநர், சார்லி ப்ளம்மரின் மீது அதீத நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறார். ப்ளம்மரும் மெளனமாகவே சகல ரசங்களின் பரிமாணங்களையும், செய்து.
ஸ்தூல லிங்கமாகி இருக்கிறார். தொடர்ந்து குதிரைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அனைத்திலும் சொல்லபட்டிருக்கும் கம்பீரம், ஆண்மை என்பதைச் சொல்லாமல், கடிவாளம் இழந்த குதிரையின் பதற்றத்தையும், ஒரு அணுவிலிருந்து அண்டமென தெகிழும் வாழ்க்கையை, பல பந்தய வடிவங்களில் பழக்கமுற்ற குதிரையால் எப்படி அணுகமுடியும் என்பதையும் சொல்லியிருப்பதே இதன் தாவல்.
கதாபாத்திரங்களால் அலங்கரிக்கப்படுவதும், அவஸ்தைப்படுவதும் அவரவர் கைகொள்ளும் வசமில்லை. மானுட அகங்களின் பிரபஞ்சத்தில் நிகழும் போருக்கான அதிகபட்ச வெற்றி, கதைசொல்வதிலும், கதைகேட்பதிலும் தான் சாத்தியம் எனும்போது, இப்படித்தான் அணுகுதல்களில், சின்னச் சின்ன நகர்வுகளை செய்பவர்கள் முக்கியமானவர்களாகிறார்கள். இருக்கும் சுகங்களை சலித்துக் கொள்வதும், முடைநாற்றத்தை மனமேற்பதும் அவரவர் அனுபவங்களின் நீட்சியாகிறது. ஏதோவொரு முற்று, எதற்கோ துவக்கப்புள்ளியாகிறது.
- The Turin Horse (2011) – Bela Tarr
ஹங்கேரியத் திரை மேதையின் கடைசி படம். இது நேரடியாகக் குதிரையைப் பற்றிய திரைப்படமல்ல. தனிமையின், சோர்வின், உலைவின் தத்துவத்தைப் பேசும் படம். முதல் காட்சியில் ஒற்றைக் கையுடன் புரவியோட்டி வரும் மனிதன், தன் புரவியோடு சேர்ந்து காண்பிக்கும் தனிமை, பாழ்நிலத்தில் விரிந்திருக்கும் சோர்வு, எதிர்பாராத திசையில் இருந்து ஓடி வந்து கொண்டிருக்கும் விடத்தை எண்ணிக் கொண்டிருக்கும் வலி ஆகியவற்றின் பதிவு. இந்த நீள்காட்சி, திரைப்படங்களின் வரலாற்றிலேயே மிக முக்கியமான காட்சி எனலாம்.
அந்த மனிதனும், அவனது மகளும் தினமும் எழுந்து கேணிக்குச் சென்று நீரெடுத்து வருதல், உருளைக்கிழங்குகளை உண்ணுதல் என்று ஒரே மாதிரியான தினசரி நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். ஆனால் உயிர்வாழ்தல் என்ற ஒற்றைத் தேவைக்காக தினங்களைக் கடத்தும் நிலை என்பது எத்தனை பிரம்மாண்டமாகி விடுகிறது திரையில், அதுவும் குறிப்பாக கருப்பு வெள்ளை காட்சிப்படுத்துதலில்.
அவர்கள் தம்மோடு இணைந்து வேலை செய்ய மறுக்கும் குதிரையிடம் போராடுகின்றனர். இதற்கெல்லாம் அர்த்தத்தைத் தரும் ஏதோ ஒன்று அந்தப் புரவியின் எழுச்சியில் ஏற்பட்டு விடாதா என்ற வினா எழுகையிலேயே மனத்தின் மறுபுறத்தில் இன்னொரு கேள்வியும் எழுந்தாடுகிறது.
நாமெல்லாம் யாருடைய கடிவாளக் குதிரைகள்?
- The Rider (2017) / Chloe Zhao / Brady Jandreau
இது தனது வாழ்மையத்திற்கான நோக்கத்தின் இழப்பு பற்றிய படைப்பு. குதிரைகளுக்கு ப்ரைரி நிலங்களெல்லாம் ஓடிக் களைப்பது என்பது மட்டுமே எப்படி இறைவன் வகுத்த நோக்கமாக இருக்கிறதோ, அப்படியே ஒரு கெளபாய்க்கும் புரவியூரல் இருக்கிறது. அது இனி இயலாது என்றபடிக்குத் தன் மூளைச் செயல்பாடுகள் ஆகிவிட்ட நிலையில், வாழ்விற்குப் புதுப்பற்று எது கிடைக்கும் என்ற தேடலும் ப்ரேடிக்கு உருவாகிறது.
இயற்கையின் ஒவ்வொரு வடிவத்தின் மீதும் கொள்ளும் காதலே வெவ்வேறு வாழ்க்கையாகிறது. எந்த ஒரு தத்துவ தரிசனங்களினையும், பேசாத, ஆனால் தத்துவம் பதிந்த, ரா-வான வாழ்வியல் ரோடியோக்களுக்கு வாய்த்திருக்கிறது. ரோடியோ காட்சிகளின் போது, நடப்பவை அனைத்தும், ஆண்மையின் கொண்டாட்டமாக இருக்கிறது. மேற்குலகின், கெளபாய்கள் தன் தினசரி நிலைவை, ஆற்றோழுக்கை எதற்காகவும் நிறுத்திக் கொள்வதில்லை. வலியுடன் கூடிய ஒழுக்கையே அவர்களை முன்னெடுக்கிறார்கள்.
ப்ரேடிக்குப் பாதையில் மொத்தமாக ஒரு தடை விழுகிறது. ரோடியோ இல்லாமல் போன வாழ்க்கையில், குதிரைகளைப் பழக்குவதைக் கொண்டு நிறைக்க முயல்கையில், அதுவும் இல்லாமல் போகிறது. அங்கிருந்து வெளிப்படும் உலகம், வெகு மெள்ளமாக நடைபோடுகிறது. அந்த பொறுமைக்குப் பழகுவதைத் தான், குதிரைகளைப் பழக்குவதிலிருந்து மீட்டெடுத்திருக்க அவனால் முடியும் போல.
மேஜிக் ஹவர் என்று சொல்வார்களே ஒளிப்பதிவாளர்கள், அதன் சிறப்பை இன்றும், இவ்வளவு தென்காற்றாய் ,முகத்தில் எறிவதற்கு முடிகிறதே! ஒளிப்பதிவின் மெனக்கெடல்கள் நம்மைப் பதற வைக்கின்றன. ஒவ்வொரு முறையும், ப்ரேடி தன் குதிரைகளின் மேல், ப்ரெய்ரி நிலங்களில் ஓட்டமிடுவது விழிக்கவிதை! கதிரோனையும், விசும்பையும் சென்று பிடித்து வந்தது போலன்றி, அவை வந்து கம்பீரமாக படமெடுக்க அமரும் விதங்களையே காண முடிந்தது. சூரியனின் பொன்னொளியில் மிளிரும் பயிர்கள் கண்களை நிறைப்பதும், நீண்ட மேற்குலகின் நீலம் கண்களைப் பனிப்பதும் கண்டவர்களுக்குப் பேறு.
ஏற்கனவே மதியிறுக்கம் கொண்ட தன் சகோதரியுடன் வாழ்ந்து வரும் ப்ரேடி என்ற புரவி சாகசக்காரருக்கு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வாழ்க்கை முற்றிலும் வேறுதிசைக்குச் சென்று விடுகிறது. அவளோடு இன்னொரு நோயாளியாகத் தான் ஆகிவிட்டதை அப்படி ஏற்றுக் கொண்டுவிடுமா மனம்? உடல் இயக்கம் தடைபட்டாலும், மனதின் துள்ளல் அப்படியே இருந்து கொண்டு ஆட்டிப் படைப்பதற்கு எப்படி பதிலிறுப்பது? கண்களை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணங்கள் மறைந்திடப் போவதில்லை.
முதன்மைக் கதாபாத்திரங்கள் அனைவரும், தன் சொந்த பாத்திரங்களிலேயே, நடித்துள்ளனர். அவர்களது இயல்பு மேலும் மேலும், நம்பகத்திற்குரியதாகி நம்முள் எளிதாக நுழைகிறது. அதிலும், ப்ரேடியின் தங்கை லில்லியின் பாத்திரம், மூன்றாம் பிறைநிலவின் பிரமிப்பு. இயக்குநர் க்ளோயி ழ்ஹோவின் இந்த படம், அவரது உழைப்பிற்காகவும், ஆளுமைக்காகவும் என்றும் நிலைத்திருக்கும். இந்த ஆண்டின் சிறந்த படமெனத் திண்ணம் உரைக்கலாம்.
குதிரைப் பயிற்சிக் காட்சிகளிலும், தன் குதிரைகளை இழக்கும் காட்சிகளிலும், தேர்ந்த நடிப்பு வெளிப்படுகிறது. இளமையில் எந்த வலியும் பெரிதல்ல; தன்மானம் காயப்பட்டு விடுவதன் வலியும், அதற்கு முந்தைய கோபமும்தான் உயிரைவிடவும் முக்கியமானதாய்ப் படுகிறது. நண்பர்களைத் தழுவிக்கொள்கையில் அது பாதியாகக் குறைந்து அமைதியளிக்கிறது. மீண்டும் அலை வந்து அடிக்கத்தான் போகிறது. ஆனால், அது புரிந்ததும் வலியும், சுகமும் பகுதியாகி விடுகிறது.
- The Mustang (2019) / Laure de Clermont Tonnere / Mathias Schoenaerts
புரவியை அடக்கி ஆள்வது, தன்னை அடக்க கற்றுக் கொள்வதை முதற்படியாகக் கொண்டிருக்கிறது. ரோமன் கோல்மேன் தனது நெருங்கியவரைத் தாக்கியதற்காக சிறைவாசம் அனுபவித்து வருகிறான். மனிதர்களின் மீது எப்போதும் நற்பழக்கம் கொள்ளும் தன்மையற்றவனாகத் தான் இருப்பதை உணர்ந்து கொண்ட அவன், தனது ஒரே ஒளியான மகளைக் காண மறுத்து கண்கூசிக் கொள்கிறான்.
ஏலத்தில் விற்பனை செய்வதெற்கென்று இருக்கும் மூர்க்கப் புரவிகளை ஓவ்வொரு சிறைக்கைதியும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பணி நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி தனக்கு ஒதுக்கப்பட்ட புரவியுடன் படாத பாடுபட்டு மெல்ல அதன் அன்பைப் பெறும் நிலைப்பாட்டைப் பற்றுகிறான். அவனது அருகாமை, ஆனந்தத்தின் சான்றாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச அன்பின் நேர்மை கொண்டிருப்பதை அப்புரவியும் உள்ளுணர்வு கொள்கிறது.
புரவிக்கு மார்க்விஸ் எனப் பெயரிட்டு, தன் மகளிடம் செலுத்தாத அன்பையெல்லாம் முன்வைத்திருக்கும் அவன், ஏல தினத்தின் போது, தன் ஆற்றாமையை தன் மகளிடம் பிரதி வைக்கிறான். இறுதியில் ஏலத்தின் போது தனது மூர்க்கத்தை வெளியிட்ட மார்க்விஸ் கருணைக் கொலை செய்யப்படப் போவதாக அறிவிக்கப்படுகிறது. ப்ரூஸ் டெர்ன் அழகிய சிறிய கதாபாத்திரம் ஒன்றைச் செய்திருக்கிறார். மாத்தியாஸின் தோற்றமும் கட்டுணராத நரம்புகளும் இன்னொரு உள்ளாடும் புரவியென வந்திருக்கிறது.
- Sweet Country (2017) / Warwick Thornton
இக்கட்டுரையிலேயே நேரடியாகக் குதிரைக்கு முக்கியத்துவம் இல்லாத படம் இதுவே. ஆனாலும், வன்மேற்கு திரைப்படங்களைப் போல குதிரைகளைப் பயன்படுத்தி இருக்கும் ஒரு வகைமை எதுவுமில்லை என்பதால், சமீபத்தில் அவ்வகை திரைப்படங்களுள் தனித்து மிளிரும் ஒன்றிது என்பதாலேயே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.
முகங்களின் தொகை என்றும் அலுப்பதேயில்லை. அவர்கள் முகமும் பாவனைகளும், நிறத்தையும், அகவைச் சுருக்கங்களையும் கடந்தும் அத்தனை மிளிர்கிறது. இன்னும் சொல்லப்போனால், வெறும் முகங்களையே பார்க்க வைத்துக் கொண்டிருப்பது கூட சினிமாவிற்கான இன்னொரு மாபலம். இயக்குநர் சினிமாட்டொகிராப்பில் தன் பகுதியை எடுத்துக் கொள்ளும் போது, முகங்களின் வழியே, இதுவரை இல்லாத சில ஆழங்களைத் தொட்டுப் பார்த்துவிடவே எத்தனிப்பது தொனிக்கிறது. அது மெல்ல, துளித்துளியாய் இணைந்து ஒரு பகுதியில் மொத்த சினிமாவையும் சற்றே கூடுதலாய் கனக்க வைக்கிறது.
வழக்கமான புதிர்களை அவிழ்க்கவோ, எதிர்பாராத் திருப்பங்களைத் தரவோ, அசாவாமையுடன் ஒரு போர் அல்லது விளையாட்டு சினிமாக்காரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நடந்து கொண்டிருப்பதன் சலிப்பை இது தவிர்க்கிறது. சில ப்ளாஷ்-பேக் மற்றும் ப்ளாஷ்-பார்வேட் சட்டகங்களில் கதையை முன்பே நகர்த்தி, நம்மை மேலும் திகைப்பில் வைக்க முடிகிறது.
உப்புப் பாலைவனம், பள்ளத்தாக்குப் பயணங்கள், வரைத்தொடர்கள், குதிரைக் குளம்படிகள் என, க்ளாசிக் கெளபாய் திரைப்படங்களில் இருக்கும் அத்தனை கூறுகளையும் கொண்டு, ஒரு எதார்த்தத் தன்மையுடன் புதிதாய் சின்னடிகள் முன்னகர்ந்திருக்கிறது.
நம் ஆழ்மனதில், ஒரு பழிகூறும் பண்பு பொதிந்திருக்கிறது. கருப்பர்கள், வெள்ளையர்கள், வேற்று சாதி, மத, இன, நாட்டு கலாச்சாரக்காரர்கள் என்றெல்லாம், தேவைக்கேற்ப உலகின் துயரங்களுக்கு எவரையேனும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், உண்மையில் நின்று பார்த்தால், எந்த தனிமனிதனும் தீயநோக்குடன் இல்லாமலே கூட தீங்கு செய்யவும், கொலைபாதகம் செய்யவும் முடியுமென்பது மெல்ல மிளிர்கிறது.
ஆஸ்திரேலியாவின், ஓர் நூற்றாண்டிற்கு முந்தைய கருப்பர்களின் அருகிய சமூக நிலையை, இரண்டாம் தர மனிதனாக வாழும் வாழ்க்கையைச் சொல்லும் போதே, வெள்ளைச் சமூகத்தின் நல்லவர்களும் பிரகடனங்கள் இன்றி, நடக்கிறார்கள். இன்னும் கவனித்தால், மோசமான வெள்ளையனும் கூட, மனக் கொந்தளிப்பையும், கருப்பர்கள் மீதுள்ள எரிச்சலையும், போயர் யுத்தத்திலிருந்து பெறுகிறான் எனும்போது, சூழல் தனிமனிதனை எத்தனை இருளுக்குள் தள்ளும் என்பதும் யோசிப்பிற்குள்ளாகிறது. அரசியல் ஒளியில் எல்லாரும் துலங்குவதில்லை என்பதும் மாறாக கண்கூசி விழியிழக்கிறார்கள் என்பதும் பேசப்பட்டுள்ளது மௌனமாக.
சில காட்சிகளில் சிரிப்புக்குள்ளாகவும், மகிழவும் செய்யும் போதே, திடுக்கென ஆங்காங்கே நிகழும் அத்துமீறல்களால், நெஞ்சு தவித்து அலைவுறுகிறது. ஒரு திமிர்பிடித்த கொலைகார வெள்ளையனை கொன்றுவிடும் சாம், தன் மனைவியுடன் வெள்ளையர் கூட்டத்திலிருந்து தப்பிச்சென்று தண்ணீர் காட்டும் ( நிசமாகவே தண்ணீர் காட்டல் காட்சி உள்ளது ) ஒரு சாகசக் கதை தன் காமிக்கல் தன்மையையும், சினிமா மொழியையும், கிறித்துவத் தொன்மங்களையும் ஒருங்கே கொண்டு பயணிக்கிறது. தன் சாகசத்தைக் கைவிட்டு தானே வந்து கைதாக அமர்ந்திருப்பதும், ஒரு சாகசமே.
நடிப்பும், எழுத்தும் ஒடுக்கப்பட்ட எந்த சமூக அங்கமும், தன் உயிர்காப்பிற்குச் செய்யும் ஒன்று கூட மேல்தட்டுக் கனவான்களுக்கு எப்படி வன்முறையாகத் தெரிகிறது என்பதைப் பொறுப்புடன் சொல்லியிருக்கின்றன. சிறுவனின் நகைப்பிலிருந்து, கிழவனின் சாகசம் வரை அத்தனையும் கதாபாத்திரங்களை நீண்டகாலம் நம் நினைவின் சுழிப்பில் வைத்திருக்கும். எனக்கு தெரிந்த ஒரே முகம் சாம் நெய்ல்- இன் உடையது.
மாறி மாறி சுட்டிக் கொள்வதிலிருந்துதான் துப்பாக்கி முனைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதைக் கழற்றி எறிந்து இருகைகள் நீட்டி சகஜமாக அணைத்துக் கொள்ளும் முன், மானுடத்தின் முகத்தில் பலமுறை அறைகள் விழுந்தாலும், மறு கன்னத்தைக் காட்ட வேண்டியிருக்கும்.
தொடரும்…
-கமலக்கண்ணன்