அம்மாவின் வயிற்றுக்குள்
அச்சத்தில் மீண்டும் தன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த அந்தப் பூனைக்குட்டி வேகமாக ஓடிச்சென்று தன் அம்மாவின் வயிற்றை ஒட்டி கண்களை இருக்க மூடி படுத்துக்கொண்டது. என்ன நடந்தாலும் அம்மாவின் வயிற்றுக்குள் போகும் வரை கண்களைத் திறக்கவே கூடாது என்று முடிவெடுத்தது. யாரோ அதைத் தூக்குவதையும் எங்கேயோ போவதையும் அதனால் உணர முடிந்தாலும், அது கண்களை மட்டும் திறக்கவேயில்லை. தான் தான் அம்மாவின் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தது. தன்னைப் பிரிந்து தன் உடன் பிறந்தவர்கள் கவலைப்படுவார்களா, தன்னால் மட்டும் தனியாக அம்மாவின் வயிற்றுக்குள் எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் யோசித்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அதற்கு வழக்கமான சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை. புதுவிதமான மெல்லிய சப்தம், புதுவிதமான வாசனை. கண்களை திறக்கலாமென முடிவெடுத்து மெல்ல கண்களைத்திறந்தது. நிறைய மரங்கள், செடிகள் கொடிகள் பூச்சிகள் என இருந்தன. அம்மாவின் வயிற்றுக்குள்ளும் ஒரு உலகம் இருக்கிறது போல என நினைத்துக்கொண்டது. மெல்ல அடியெடுத்து வைத்து நடந்தபோது அதற்கு பழக்கமான வாசனை அதை ஈரத்தது.மெல்ல அதை நோக்கிச் சென்றபோது அங்கே அதன் உடன்பிறந்த குட்டிகள் உறங்கிக்கொண்டிருந்தன. ஒருவேளை தான் அம்மாவின் வயிற்றுக்குள் போவதைப் பார்த்து வந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டது. இன்னும் சற்று தூரத்திலிருந்து ஒரு குரல். அது அம்மாவின் குரல். ‘மியாவ்’ என்று கத்திக்கொண்டே குட்டிகளை நோக்கி நடந்து வந்தது. குட்டிக்கு ஒரே ஆச்சர்யம். அம்மா தன் வயிற்றுக்குள்ளேயே எப்படி வந்ததென்று.
மூர்த்தி
“டேய்… மூர்த்தி…” என்ற செண்பகத்தின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அந்த ஆடு. செண்பகம், இறந்த போன தன் மகனின் நினைவாக அந்த ஆட்டுக்குட்டிக்கு மூர்த்தி என்று பெயர் சூட்டினாள். அதனாலேயே மற்ற ஆடுகளைக் கட்டிலும் அதற்குத் தனி கவனிப்பு இருந்தது. மூர்த்தி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டான். கடன்காரர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க அவன் மனைவி தன் குழந்தைகளுடன் பிழைக்க நகரத்திற்குச் சென்றுவிட்டாள். இப்போது கடன்காரர்களைச் செண்பகம் தான் சமாளித்து வருகிறாள். அவர்களுக்குச் செண்பகத்திடம் இருக்கும் ஆடுகளின் மீதுதான் கண். கடனுக்கு ஆடுகளைத் தந்துவிடும்படி அவளை நச்சரித்தனர். அவளுடைய அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற அந்த ஆடுகள் மட்டுமே அவளிடம் இருந்தன. ஐந்து ஆடுகள். அதுமட்டும் தான் இப்போது அவள் உறவுகள். அது மூர்த்தி எப்போது அவள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டுமென்று நினைத்தாள். செண்பகத்தால் ஒரு கட்டத்திற்குக் கடன்காரர்களைச் சமாளிக்க முடியவில்லை. ஆடுகளை அவர்களிடம் கொடுத்துவிட முடிவெடுத்தாள். அவர்கள் வண்டி எடுத்துக்கொண்டு வந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். மூர்த்தி அவர்களைக் கண்டு மிரண்டது. தப்பித்து ஓடியது. ஓடும்போது சாலையில் வந்துகொண்டிருந்த வண்டியில் அடிப்பட்டுத் துடிதுடித்து இறந்தது. செண்பகம் அடித்துக்கொண்டு அழுதாள். “மூர்த்தி ரோசக்காரன். ரெண்டாவது வாட்டியும் மானத்தக் காப்பாத்திக்க செத்துட்டான்” என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.
தனித்திருத்தல்
அவர் தன் மனைவியிடம் மகனை போனில் அழைக்கச் சொன்னார். அவள் மறுத்தாள். இன்னும் சொஞ்சம் நேரமாகட்டும் என்றாள். அவன் வந்தால் தங்களைத் தனியாக இருக்க விடமாட்டான் என்று சொன்னாள். அவர் சிரித்தார். இவ்வளவு காலம் நாம் தனியாகத்தானே இருந்தோம் என்றார். அவள் அதைப் பற்றி யோசித்தாள். இருந்தாலும் இப்போதும் தனியாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்றாள். மேலும் நிறையப் பேச வேண்டுமென்றும் பழைய நினைவு கூட்டில் யாரோ கல்லெறிந்தது போல் ஒரே சமயத்தில் அனைத்தும் ரீங்கரித்துகொண்டு வருவதாகச் சொன்னாள். அவர் பெருமூச்சுவிட்டார். மீண்டும் மகனை அழைக்கச் சொன்னார். அவள் அதைக் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. எதாவது வேண்டுமா, சமைக்கட்டுமா என்றாள். அவர் தனக்குப் பசிக்கவில்லையென்றார். வெளியே மீன் விற்கும் சத்தம் கேட்க, மீன் வாங்கட்டுமா என்றாள். உனக்கு வேணும்னா வாங்கு என்றார். அவள் வெளியே சென்று மீன் வாங்கினாள். உள்ளே வந்து அதைச் சமையற்கட்டில் வைத்துவிட்டு மீண்டும் அவர் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். சமைக்கலயா? என்றார். உங்களுக்குப் பசிக்கும்போது சொல்லுங்க. வறுத்துத் தரேன் என்றாள். நேரமாகுது பையனைக் கூப்பிடு என்றார். அவள் வேண்டா வெறுப்பாக எழுந்து சென்று போனை கையில் எடுத்து மகனை அழைத்தாள். அழைப்பின் இறுதியிலேயே அவன் போனை எடுத்து “சொல்லுமா” என்றான். “அப்பா போயிட்டாருடா” என்றாள்.
வேடன்
கானகத்தின் நடுவே மரத்தின் உச்சியில் யார் கண்ணுக்கும் தென்படாதவாறு உட்கார்ந்திருந்தான் அந்த வேடன். அருகிலிருந்த கிராமங்கள் முழுக்க புலி குறித்த அச்சம் பரவியிருந்தது. ஊருக்குள் நுழைந்து ஆட்களை அடித்துக் கொன்று குவித்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வெளியே வரவே அஞ்சினர். கூட்டமாகக் கூடி மேளம் கொட்டி விரட்டிவிட்டாலும் அது மீண்டும் மீண்டும் அதே வேலையாக இருந்தது. வேடன் புலியைக் கண்டுபிடித்திருந்தான். அவன் பார்வை அசைவற்று புலியை மட்டுமே துளைத்துக்கொண்டிருந்தது. ஆனால், புலியோ வேறு ஒன்றை நோக்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு சிறிய குடில். அதன் அருகில் ஒரு சிறு பதின் வயதுப் பெண். அவள் கணவனிடம் அழுதுகொண்டிருந்தாள். சற்று முன் அவளுடன் விளையாடிக்கொண்டிருந்த மான்குட்டி தனக்கு வேண்டுமென வேண்டினாள். அவள் கணவன் சிறிதும் யோசிக்காமல் அந்த மான் சென்ற திசையை நோக்கி ஓடினான். நீண்ட நேரம் கழித்தும் அவன் திரும்பி வரவேயில்லை. அவள் தன் மைத்துனனை அழைத்தாள். அவனைப் போகச் சொல்லி நிர்ப்பந்தித்தாள். அவன் வேண்டா வெறுப்பாக அதே திசையில் ஓடினான். இந்தப் பதின்பருவச் சிறுவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என வேடன் குழம்பினான். அவன் கவனம் முழுக்க புலியின் மீது இருந்தாலும் இதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அப்போது எதிர்பாராத ஒரு தருணத்தில் மறைவிலிருந்து ஒருவர் வெளியே வந்தார். அவருடைய முகம் வேடனுக்கு நன்றாகத் தெரிந்தது. அதில் அமைதியாகவும் அன்பொழுகவும் இருந்தது. அதே நேரம் புலி தன் தாக்குதலுக்குத் தயாரானது. வேடன் எச்சரிக்கையானான். அவன் கைகள் வேகமாக இயங்கின. அவன் அம்புகள் புலியின் மீது பாயத் தயாராகின. கீழே நின்றுகொண்டிருந்தவரும் புலியைப் பார்த்துவிட்டார். அவர் புலி அந்தப் பெண் மீது பாய்ந்துவிடாமல் தற்காத்து நின்றார். அவரைக் கண்டு புலி ஒரு கணம் தயங்கியது போல் வேடனுக்குத் தோன்றியது. வேடன் அம்பை எய்தினான். ஒருநொடி. அங்கே என்ன நடந்ததென்றே வேடனுக்குப் புரியவில்லை. புலி, அந்தப் பெண், அந்த மனிதர் என யாருமே அங்கே இல்லை. நீண்ட நேரம் கழித்து அந்த இரண்டு இளைஞர்களும் ஊருக்குள் வந்து அந்தப் பெண்ணைத் தேடினார். அந்தப் பெண்ணை விட்டுச் சென்ற அந்த இருவர் மீதும் வேடனும் கோபம் கோபமாக வந்தது. வேடன் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டான்.