நூறு கல்யாணிகள்

சுந்தர் சார் , சீட் பெல்ட் சரியாகப் போட்டுக் கொண்டீர்களா, கிளம்பலாமா ?” என்று கேட்டார் பாலா. வயதானாலும் நிமிர்ந்து கம்பீரமாக இருந்தார். சற்று குள்ளம், ஒல்லியான உருவம், மீசை மழித்து தலை முடி ஒட்ட வெட்டி மெல்லிய ப்ரேமில் கண்ணாடி. ஜீன்ஸ் பான்ட், வெள்ளை ஜிப்பாவுடன் இந்தியனாகவும், பேசினால் அமெரிக்கனாகவும் உடல் அசைவில் இரண்டுங்கெட்டானாக இருந்த பாலா சாருடன், சான்ஃரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து பே ஏரியாவில் மவுன்டன் வ்யூவில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம்.

நிறுத்தம் இல்லாமல் சுமார் 16 மணி நேர விமானப் பயணம். அத்தனை நேரம் உட்கார்ந்து பழக்கம் இல்லை, உடல் முழுவதும் ஒரு சோர்வு. அடுத்த நாள் எப்படிக் கச்சேரி பாடப் போகிறேன் என்று மலைப்பாக இருந்தது.

“சார் எல்லாம் வேண்டாம், சுந்தர் என்றே கூப்பிடலாம் பாலா சார்“ என்றேன். பாலா என்னை விடக் குறைந்தது முப்பது வயது பெரியவர், எழுபதை நெருங்குகிறார் என்று நினைக்கிறேன்,. எதற்காக என்னைச் சார் போட்டு மரியாதையாகக் கேட்டார், கிண்டலா என்று சந்தேகமாக இருந்தது. முகத்தைப் பார்த்தால் தீவிரமாகத்தான் இருந்தார்.

“ மிக்க நன்றி, போன வருடம் அப்படித்தான், இளம் வித்வான் என்று பெயரைச் சொல்லிக் கூப்பிடப் போக அவனுக்குப் பிடிக்கவில்லை “ என்று ஒரு வித்வான் பெயரைச் சொன்னார்.

“அப்படியா சார் ?” என்றேன். வேறு எதுவும் சொல்லவில்லை, எதற்கு வம்பு. இந்த உரையாடலிலிருந்து அவரை சார் என்று அழைப்பதை மாற்றக் கூடாது என்று புரிந்து கொண்டேன். பாலா யு எஸ் வந்து முப்பது நாற்பது வருடங்கள் ஆகி இருக்க வேண்டும், ஆனாலும் இன்னும் சொந்த ஊர் கும்பகோணம் பேச்சு போகவில்லை. பாலாதான் என்னுடைய கச்சேரிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் முன்பு வட அமெரிக்காவின் கர்னாடக சங்கீத அமைப்புக்குத் தலைவராக இருந்தார். சென்ற வருடம் தலைவர் தேர்தலில் அவருக்கு வெற்றி இல்லை. ஓர் இளம் பாலக்காட்டுக்காரர், தொழிலதிபர் வென்று விட்டார். பாலா அமைப்பை விட்டு விட்டு, தானாகவே கச்சேரிகள் ஏற்பாடு செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன்.

முதல்முறையாக வெளி நாடு வந்திருக்கிறேன். விமானத்தை விட்டு இறங்கியதிலிருந்தே எல்லாம் பிரம்மாண்டமாகத் தெரிந்தன.

“பாட்டு போடட்டுமா ?”, அவருடைய ஃபோனை ஒரு கையால் நேரிடிக் கொண்டே கேட்டார். நான் சிறுவனைப்போல் கார் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.

“ஓ தாராளமாக “ என்றவுடன் என்னுடைய பாட்டே ஒலித்தது. உண்மையில் நான் பாட்டுக் கேட்கும் மன நிலையில் இல்லை. அமெரிக்காவில் ,ஃப்ரீவேயில், எழுபது மைல் வேகத்தில் என்னுடைய பாட்டையே காருக்குள் கேட்பது விசித்திரமாக இருந்தது.

“உனக்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. உன்னுடைய ‘காக்கைச் சிறகினிலே’ கேட்பதற்காகவே நாளை நிறையப் பேர் வருவார்கள் “

“அப்படியா, மிக்க மகிழ்ச்சி சார்“ என்றேன்.

இந்தக் காலத்தில் சமூக ஊடகங்களுக்கு என்ன ஒரு சக்தி, நான் இப்படி அமெரிக்காவுக்கு வந்து மேற்குக் கரையிலிருந்து கிழக்குக் கரை வரை எல்லா நகரங்களிலும் பாடப்போகிறேன் என்று கனவு கண்டதில்லை. நாளை சனிக்கிழமை மாலை என்னுடைய முதல் கச்சேரி சான் ஹோசேயில். ஞாயிறு மாலை மறுபடியும் பே ஏரியாவிலேயே. பிறகு வார நாட்களில் கச்சேரி எதுவும் இல்லை. மறுபடி அடுத்த வாரம் சனிக்கிழமை சியாட்டிலில். அதன் பிறகு சான்டியாகோ,டல்லஸ், ஹூஸ்டன், சிகாகோ, டெட்ராய்ட், பாஸ்டன் என்று கடைசியாக ந்யூ ஜெர்சி வரை பதினேழு கச்சேரிகள்.

என்னுடைய மூதாதையரான சுந்தரம் தாத்தா சங்கீதச் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர். அவருக்குப் பிறகு குடும்பத்தில் யாரும் பாட்டுக்கு வரவில்லை. நான்தான் பாட ஆரம்பித்தேன். எனக்கும் அவருடைய பெயர்தான். அதுவும் முதலில் பிரபலம் ஆகவில்லை. நாற்பது வயதுக்குப் பிறகு சென்ற வருடம் நான் பாடிய “காக்கைச் சிறகினிலே” எதிர்பாராமல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியது. அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. தசரா சமயத்தில் சமஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. அந்தக் கச்சேரி மிகச் சிறப்பாக அமைந்து, மகாராஜாவே பாராட்டினார். பிறகு இந்தியாவிலேயே நிறையக் கச்சேரிகள் பெரிய சபைகளில் பாடினேன். இப்போது அமெரிக்காவில் பதினேழு கச்சேரிகள்.

எனக்கு அமெரிக்காவில் கச்சேரி நிலவரம் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

“பாலா சார், நாளை கச்சேரிக்குச் சுமாராக எத்தனை பேர் வருவார்கள் ?”

“நாங்கள் நிறைய கூட்டம் எதிர் பார்க்கிறோம், இது உன்னுடைய முதல் வருகை அல்லவா ? ஏற்கெனவே நானூறு டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்றாயிற்று. இன்னும் நூறு பேராவது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் டிக்கெட் வாங்குவார்கள் “

அய்நூறு பேர் டிக்கெட் வாங்கி வருவார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையில்கூட மிகப் பெரிய நட்சத்திரங்களைத் தவிர அவ்வளவு கூட்டம் வராது.

சுமார் ஒரு மணி நேரத்தில் பாலா சாருடைய வீட்டுக்கு வந்து விட்டோம்.

“இருபது நிமிடம்தான் ஆகும், இப்ப இந்தியா மாதிரி ட்ராஃபிக் “ என்றார்.

முன்புறம் புல் வெளியுடன் பெரிய தனி வீடு. ட்ரைவ் வேயில் ஒரு பக்கம் காரை நிறுத்தினார். அவர் மனைவி வாயிலிலேயே காத்திருந்தாள்.

என்னுடைய தோளில் கை தொட்டுக்கொண்டு “ப்ரியா, இது தான் பிரபல வித்துவான் சுந்தர்” என்றார். நான் கை கூப்ப மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ப்ரியா “ வாப்பா, உன்னுடைய பாட்டு நிறையக் கேட்போம், இப்ப நீ எங்க வீட்டுக்கே வருவது சந்தோஷம் “ என்றார்.

பாலா என்னுடைய பெட்டிகளை இழுக்க ஆரம்பித்தார்.

“சார், விடுங்கள், நீங்கள் என்னுடைய பெட்டிகளை இழுக்கலாமா “ என்று வாங்கிக் கொண்டேன்.

“இவ்வளவு பெரிய பாடகருக்குச் சேவை செய்வது எங்கள் பாக்கியம் “ என்று புன்னகைத்தார்.

உள்ளே வந்தோம். ஒரு அறையைக் காண்பித்து “ இந்த அறை உன்னுடையது, மாடிக்குப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் “ என்றார்.

நான் அந்த அறையில் பெட்டிகளை வைத்தேன். விசாலமான அறை, மரத்தால் ஆன பளபளக்கும் தரை, பெரிய கட்டில், சுத்தமான படுக்கை விரிப்புகள், பெரிய தலையணைகள், சுத்தமான குளியல் அறை எல்லாமாக ஏதோ அய்ந்து நட்சத்திர விடுதி போல இருந்தது.

“இங்கே உனக்கு எந்த விதத் தொந்தரவும் இருக்காது. நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு கச்சேரிக்குத் தயார் செய்து கொள்ளலாம், என்ன வேண்டுமானாலும் கேள். நீ சந்தோஷமாக இருந்தால்தான் கச்சேரி நன்றாக அமையும் “.

என்னுடைய நலன் பற்றி என்ன ஒரு அக்கறை என்று மகிழ்ச்சி ஆனேன். வித்வான்களுக்கு எங்கே போனாலும் மரியாதை.

ஹாலில் இருந்து டைனிங் டேபிளுக்குப் பின்னால் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் விசாலமான புல்வெளி, பூத்துக் குலுங்கும் செடிகள் எல்லாம் தெரிந்தன.

“சுந்தர், குளித்து விட்டு வாங்க, சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கலாம் “ என்றார் ப்ரியா.

“குளிக்கிறேன் எனக்கு அவ்வளவாகப் பசி இல்லை, ஜெட் லாக்கில் ஒரு மாதிரி இருக்கிறது, படுத்துத் தூங்கி விடுவேன் “

பாலா சார் “ சுந்தர், அப்படி செய்தால் அசிடிடி ஏதாவது வந்து விடும், பிறகு நாளை கச்சேரி என்ன ஆகும் ? இந்த ஊர் நேரத்துக்குத் தூங்க முயற்சி செய்“

“அப்படியா, சரி சார்” என்றேன்

“சுந்தர் , இட்லிதான் செய்வதாக இருக்கிறேன், வயிற்றுக்கு ஒன்றும் கெடுதல் செய்யாது” என்றார் ப்ரியா

நான் என்னுடைய அறைக்குப் போய், பெட்டியைப் பிரித்துத் துணி எல்லாம் எடுத்து, குளித்து வருவதற்குள், இட்லி தயாராக இருந்தது.

ப்ரியா “சாம்பார் புதன் கிழமை செய்தது, நாங்கள் வாரத்துக்கு இரண்டு முறைதான் சமைப்பதே , நாங்கள் இரண்டு பேரும் வேலைக்குப் போய் வந்த நாட்களிலிருந்து பழக்கம்,உனக்குப் பரவா இல்லையா “ என்றார்.

“பரவா இல்லை, நீங்கள் சாப்பிடுவதுதானே எனக்கும்“ என்றேன்

பாலா சார்“ மிக்க நன்றி, போன வருடம் இப்படித்தான், ஒரு வயதான வித்துவான் வந்திருந்தார், அவருக்குக் காலையில் செய்தது கூட ராத்திரி சாப்பிட மாட்டாராம், ப்ரியாவுக்கு மிகவும் தொந்தரவாகி விட்டது “ என்றார்.

குளித்து விட்டு வந்தது சற்று பசிக்கிற மாதிரி இருந்தது, ப்ரியா இரண்டு கதவுகளுடன் பெரிய பீரோ மாதிரி இருந்த ஃப்ரிட்ஜின் உள்ளே நிரம்பி வழிந்த நிறைய டப்பாக்கள், ப்ளாஸ்டிக் கவரில் உணவு வகைகள் எல்லாவற்றுக்கும் நடுவிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரை எடுத்தார்.

சாப்பிடும்போது குளிர் காலத்தில் எவ்வளவு குளிரும், மழை பெய்யுமா எப்ப அடுத்த தேர்தல் என்பது போன்ற நாட்டு நடப்புகளைப் பேசினோம். சாப்பிட்டு உடனே படுக்க வேண்டாம் என்று ஹாலில் உட்கார்ந்திருந்தேன். அங்கே மேஜை மேல் வண்ணத்தில் அச்சடித்த என்னுடைய கச்சேரி நிகழ்ச்சி நிரல் இருந்தது. ஆன்லைனில் விளம்பரம் தவிர, சூப்பர் மார்கெட், இந்திய ஸ்டோர்களில் இவற்றை விளம்பரம் செய்வார்கள் என்று பாலா சொல்லியிருந்தார். நல்ல வழவழப்பான காகிதத்தில் என்னுடைய படம் நன்றாக வந்திருந்தது. அந்த ஃப்ளையரில் டிக்கெட் விலை பார்த்தேன். மூன்று வகை டிக்கெட்டுகள். சில்வர், கோல்டு மற்றும் ப்ளாட்டினம் என்று இருந்தன. சில்வர் அய்ம்பது டாலர், கோல்டு எழுபத்தைந்து டாலர், ப்ளாடினம் நூறு டாலர் என்று இருந்தது. ப்ளாடினம் டிக்கெட்டுக்கு கச்சேரி முடிந்தவுடன் என்னுடன் ப்ரத்யேக புகைப் படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும், டின்னரும். என்னுடன் படம் எடுத்துக் கொண்டு டின்னர் சாப்பிட மக்கள் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைந்தேன்.

பாலா சார் “பார், உனக்காக இவை எல்லாம் செய்திருக்கிறோம், நாளை கச்சேரிக்கு நல்ல கூட்டம் வந்து, நல்ல படியாக எல்லாம் நடக்க வேண்டும் “ என்றார்.

சுமாராக எத்தனை பணம் அவர்களுக்கு வசூல் ஆகும் என்று கணக்குப் பார்த்தேன். அய்னூறு பேர்கள், ஒவ்வொரு வகைக்கும் எவ்வளவு டிக்கெட் என்று தெரியவில்லை. சராசரி எழுபது டாலர் என்று வைத்துக் கொண்டாலும் முப்பத்தைந்தாயிரம் டாலர். அப்போதுதான் அவர்கள் எனக்கு ஒரு கச்சேரிக்கு இரண்டாயிரம் டாலர்கள்தான் தருவதாகப் பேசி இருந்தார்கள் என்று உறைத்தது. மீதி செலவு பக்க வாத்தியம், அரங்கம், டின்னர் எல்லாம் சேர்ந்து இன்னொரு பத்தாயிரம் டாலர் இருந்தாலும், சுமார் இருபதாயிரத்துக்கும் மேல் லாபம். நான் சரியாக ரேட் விசாரித்துக் கொள்ளாமல் இவர்களுடைய கான்டிராக்டை ஒத்துக் கொண்டு விட்டேன். முதல் முறையாக வெளி நாட்டுக் கச்சேரி என்ற மகிழ்ச்சியில். சென்னையிலேயே இன்னும் சிறிது விசாரித்திருக்க வேண்டும்.

எனக்கு அனுபவம் அதிகம் இல்லை, அதனால் என்னுடைய குரு ராமகோபாலன் சாரிடம் கேட்டேன். அவர் மூத்த வித்துவான், சங்கீத கலா நிதி பட்டம் எல்லாம் இளம் வயதிலேயே வாங்கி, இப்போது எண்பது வயதிலும் சீஸனில் மாலைக் கச்சேரி பாடி ரசிகர் கூட்டம் கொண்டிருப்பவர். அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்த போதே அவரிடம்தான் முதலில் போய்க் கேட்டேன். எனக்குப் பல வருடங்களாக அவர்தான் வழிகாட்டி. நான் பாடியதைக் கேட்டு விட்டு நல்லதைப் பாராட்டி, இன்னும் எப்படிச் சிறப்பாகப் பாடலாம் என்று அறிவுரை சொல்லுவார். சங்கீதம் எல்லாம் தெரிந்திருந்து,நல்ல குரல் இருந்தாலும் வீட்டில் பாடுவதும், ஏழு நிமிட யூ ட்யூப் விடியோவிலும் பாடுவதும், இரண்டரை மணி நேரம் கச்சேரி பாடிப் பெயர் வாங்குவதும் ஒன்றல்ல. அவர்தான் எனக்கு நிறைய யோசனை சொல்லி, பெரிய சபாக்களில் கச்சேரி எற்பாடு செய்யச் சொல்லி ஆதரவு கொடுத்தார். அவர் என்னுடைய கொள்ளுத்தாத்தா சுந்தரத்தின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர், அந்த அபிமானமாகத்தான் இருக்க வேண்டும்.

அவர் அமெரிக்க கச்சேரித் தொடருக்கு நிறைய விஷயங்கள் சொன்னார். அவர் பல வருடங்களாக , அமெரிக்காவில் தொடர் கச்சேரிகள் வழக்கமாகச் செய்து வருகிறார். ஆனால் பண விஷயம் பற்றி மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. நான் கேட்ட போது கூட “ எல்லாம் பார்த்துப் பேசிக்கொள் “ என்று பூடகமாகச் சொன்னார். நானும் அதிகம் தெரிந்து கொள்ளாமல், பாலா சார் சொன்ன தொகைக்கு ஒத்துக் கொண்டு விட்டேன். வெறும் பேச்சு மட்டும் இல்லை, கான்டிராக்டிலும் கையெழுத்துப் போட்டு விட்டேன். இனி அதைப் பற்றி வருத்தப் பட்டு ஒரு பயனும் இல்லை, அடுத்த வருடம் அழைத்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

தூக்கம் வரவில்லை, அதனால் பயணத்துக்குப் பிறகு குரல் எப்படி இருக்கிறது என்று பார்க்க நினைத்தேன். என்னுடைய அறையில் தரை மேல் உட்கார்ந்து கொண்டு மொபைல் ஃபோனில் தம்பூரா ஆப்பைத் திறந்து, ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு இணைத்தேன். தம்புராவின் நாதம் அலை அலையாகச் சுற்றிலும் நிரம்பியது.

அடுத்த நாள் கச்சேரியில் என்ன பாட வேண்டும் என்று பட்டியல் போட்டிருந்தேன். நோட்டுப் புத்தகத்தை எடுத்து அந்தப் பட்டியலை ஒரு முறை பார்த்தேன். கவனமாகத் தேர்வு செய்த பட்டியல் அது. ராமகோபாலன் சார்தான் எனக்கு உதவினார். அவருக்கு இங்கே வந்து பாடி நிறைய அனுபவம். “பே ஏரியாவா, தமிழ்ப் பாடல்கள் போட்டுக் கொள்ளலாம். எதற்கும் எல்லா மொழிகளிலும் வைத்து கொள். தெலுங்கில் த்யாகராஜர் மட்டும் இல்லை அன்னமாசார்யாவும் சேர்த்துக் கொள். தீக்ஷிதர் க்ருதிகளை ஒரே கச்சேரியில் அதிகம் போடாதே, கச்சேரியின் நடுவில் விறுவிறுப்பு குறைந்து விடும். அங்கே வரும் கூட்டம் எல்லா விதமான ரசிகத் தரமும் கலந்தது. அதனால் ஒவ்வொரு கச்சேரியிலும் சில பேர் மாதிரி லைட்டாக நகுமோமு பாடிக் கொண்டிருக்காதே. பேகடாவும் கூட விரிவாகப் பாடலாம். தெரிந்த கீர்த்தனங்களாகப் பாடு, ஜனங்கள் வருவதே ஏற்கெனவே தெரிந்த பாட்டைக் கேட்கத்தான், புதிய முயற்சிகள் வேண்டாம், பிந்து மாலினியில் பல்லவி பாடாதே, ஊறுகாய் ரசம் ஆக முடியாது “ என்று நிறையச் சொல்லி இருந்தார்.

அடுத்த நாள் கச்சேரியில் முக்கிய ராகமாக கல்யாணி போட்டிருந்தேன். அதுவும் ராம கோபாலன் சார் அறிவுரைப்படிதான். “ உங்க கொள்ளுத்தாத்தா பாடிப் பெயர் வாங்கினார் என்று முதல் நாளிலிருந்து ஆரம்பித்து எல்லாக் கச்சேரியிலும் பைரவி பாடாதே. அதைச் சில இடங்களில் மட்டும் வைத்துக் கொள், அப்ப தான், ஒரே பிராந்தியத்தில் இரண்டு கச்சேரி இருந்தால், முதல் கச்சேரி நன்றாக அமைந்தால், உன்னுடைய புகழ் பெற்ற ராகத்தைக் கேட்க அடுத்த நாளும் வருவார்கள், அப்போது பைரவி பாடு, கூட்டம் சேரும். “ என்று சொல்லியிருந்தார்.

அதனால் பைரவி ராகத்தை முதல் கச்சேரியில் போடவில்லை. சுந்தரம் தாத்தா பைரவி பாடிப் பெயர் பெற்றவர். நானும் பைரவியில் நிறையக் கீர்த்தனைகள் பாடம் செய்து, பயிற்சி செய்து, நிறையப் பாடிப் பெயர் பெற்றிருந்தேன். என்னுடைய பைரவி கேட்பதற்காகவே பலர் வருவார்கள். முதல் கச்சேரியில் கல்யாணி நன்றாக இருக்கும் என்று தீர்மானித்திருந்தேன்.

பயிற்சிக்காக கல்யாணி வர்ணம் ஆரம்பித்தேன். அடதாள வர்ணம். அதில் வரும் கல்யாணியே ஒரு தனி வகை. ஒவ்வொரு சுவரமும் அடுத்த சுவரத்துடன் கோர்த்து வாங்கிய முத்து மாலை மாதிரி இருக்கும். தவிர ஷட்ஜமமும் பஞ்சமும் இல்லாத கோவைகள் எதிர் பாராத சேர்க்கைகளில் நிறைய விரவி வரும். இரண்டு காலம் பாடி குரல் பதமானது. பிறகு ஒன்றிரண்டு கிருதிகளைப் பாடி முடித்துக் கொண்டேன். முழுக் கச்சேரிக்கும் கவனமாகப் பட்டியல் போட்டு வைத்திருந்தேன்.

ராமகோபாலன் சார் “ சில பேர் செய்வது போல, நான் என்ன பாடப் போகிறேன் என்று எனக்கே தெரியாது, அந்தச் சமயத்தில் மேடையில் என்ன தோன்றுகிறதோ அதைப் பாடுவேன் என்று ஆரம்பிக்காதே. ஒரு விருந்து என்றால் மெனு போடுவதில்லையா, அந்த மாதிரிதான். மோர்க்குழம்பும் அவியலும் லெமன் ரசமும் கோஸ் கறியும் ஒன்றாகப் பரிமாறினால் எப்படி இருக்கும் ? மெயின் ராகம் கல்யாணியானால், அதனுடன் ஹிந்தோளம் சேரும் , தன்யாசி சேரும், மோகனம் அவ்வளவு உசிதம் இல்லை “ என்று நிறையச் சொல்லியிருந்தார்.

பட்டியல் இருந்தாலும் அதே வரிசையில் தினமும் பாடிப் பழகவில்லை. அப்படிச் செய்தால், ஒரு மாதிரி அமைப்பு முறை நிரந்தரமாகி விடும். ராகம் பாடுவது, நிரவல், சுவரம் பாடுவது எல்லாமே கற்பனையில் வரவேண்டும். அதனால் குரல் வளத்துக்காகச் சில கிருதிகளைப் பாடி நிறுத்திக் கொண்டேன். தூக்கம் வந்ததால் படுத்து உறங்கி விட்டேன்.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் பக்க வாத்தியக் காரர்களைப் பற்றி பாலா சாரிடம் கேட்டேன். அவர்களுடன் ஒரு ஒத்திகை பார்த்துக் கொள்ளுவது நல்லது என்று ராமகோபாலன் சொல்லி இருந்தார், இந்தியாவில் எனக்கு வழக்கமாக வயலின், மிருதங்கம் வாசிப்பவர்களுக்கு என்னுடைய பாடும் முறை, பாணி தெரிந்திருக்கும். எப்போது எனக்கு மனோதர்மம் பிரவாகமாகும், எப்போது சற்று மந்தமானால் வேகம் அதிகரிக்க வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. புதிய பக்க வாத்தியக் காரர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், கவலை இல்லை. பாலா சார் இந்தியாவிலிருந்து அழைத்து வந்தால் அதிகம் செலவாகும் என்று அங்கே அமெரிக்காவிலிருந்தே இளம் பக்கவாத்தியக்காரர்களை ஏற்பாடு செய்திருந்தார்.

“பாலா சார், கச்சேரிக்கு முன் ஒரு முறை பக்க வாத்தியக்காரர்களை அழைத்து ஒரு ரிகர்சல் செய்து விடலாமா ?” என்றேன்.

“செய்யலாம், ஆனால் அதற்கும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமே, யார் கொடுப்பார்கள் ?” என்று கையால் பணம் கொடுப்பதைச் சைகை செய்தார்.

நான் அந்த மாதிரி பதிலை எதிர் பார்க்கவில்லை.

“எல்லாம் பார்த்துக் கொள்ளுவார்கள், அனுபவம் வாய்ந்த வித்துவான்கள்தான். பாடப் போகும் பாடல் பட்டியலை அவர்களுக்கு அனுப்பி விடு, நன்றாகவாசிப்பார்கள் “ என்று புன்னகைத்து முடித்தார்.

அன்று பகல் முழுவதும் பழம் பெரும் வித்துவான்களின் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கல்யாணி ராகத்துக்கு ஜி என் பி, எம் எல் வி, தன்யாசிக்கு டி கே ஜே என்று நிறையக் கேட்டேன். ஒரே ராகத்தை ஒவ்வொருவரும் எப்படி வேறு வேறு விதமாக கையாண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியம்தான்.

மாலையில் கச்சேரிக்கு குளித்து, தயார் செய்து கொண்டேன். பாலா சார்தான் காரில் அழைத்துக் கொண்டு சென்றார். ஒரு கம்யூனிடி ஹாலில் கச்சேரி. அரங்கம் மிக நேர்த்தியாக இருந்தது. அழகான மேடை, வசதியான நாற்காலிகள், உறுத்தாத ஒளி விளக்குகள், அருமையான ஆடியோ சிஸ்டம் எல்லாமே நன்றாக இருந்தன. அரங்கம் நிரம்பி இருந்தது. பாலா சார் சொன்னபடி அய்னூறு பேர் இருந்திருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்களும், மத்திய வயது உடையவர்களும்தான். ஒரு சில இளைஞர்கள் இருந்தனர். ஒவ்வொரு அரங்கத்துக்கும், கேட்பவர்களையும் சேர்ந்து ஒரு அதிர்வுகள் இருக்கும். இந்த இடத்தில் மிக நல்ல அதிர்வுகள் என்று எனக்கு மனதில் பட்டது.

பாலா சார் எல்லோரையும் வரவேற்று, என்னையும் அறிமுகப் படுத்தி சில நிமிடங்கள் பேசினார். முக்கியமாக யாரும் ஆடியோ மற்றும் வீடியோ ரெகார்டிங் செய்யக்கூடாது என்று இரண்டு முறை சொன்னார். கண்காணிக்க ஆட்கள் இருப்பதாகவும் எச்சரித்தார். எல்லாவற்றையும் விட்டு விட்டு எதற்காகத் திரும்பத் திரும்பப் பதிவு செய்யக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். நான் எப்படிப் பாடினேன் என்று தெரிந்து கொள்ள எனக்கே ஒலிப் பதிவு தேவை. கச்சேரி ஆரம்பிப்பதற்கு அவரை மேடைக்குப் பக்கத்தில் அழைத்து

“சார், நான் ஒலிப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லவா ?” என்று கேட்டேன்.

“சுந்தரம், அந்த அறிவிப்பு உனக்கும் சேர்த்துதான். நான் ஒலிப்பதிவு செய்கிறேன், அதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம், கச்சேரி ஆரம்பிக்கிறாயா ?” என்றார்.

எனக்கு என்னவோ சரியாகப் படவில்லை, இருந்தாலும் அதை மறந்து விட்டு சுருதி சேர்த்துக் கொண்டு பாட ஆரம்பித்தேன். குரல் பதமாக அமைந்தது.

கச்சேரி ஆரம்பத்திலேயே களை கட்டியது. பக்க வாத்தியக் காரர்கள் புரிந்து கொண்டு அனுசரணையாக வாசித்தார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் நிறையக் கைத்தட்டல், எனக்கும் உற்சாகமாக இருந்தது.

முக்கிய ராகம் கல்யாணி பாட வேண்டிய நேரம். கண்களை மூடிக் கொண்டேன். ஒரு மாபெரும் மலைச் சிகரம் தெரிந்தது. பனி மூடிய சிகரம், ஆனால் அதி காலை சூரியன் உதிக்கும் ஒளியில் செக்கச் சிவந்து ஒளிர்ந்தது. தீப் பிழம்புகளால் ஆன மலை. பாடப் பாட சூரியன் எழுந்தது. தீயின் நிறம் மாறியது. இப்போது உதிக்கின்ற செங்கதிரில் சிகரத்தின் உச்சியில் ஒரு தீற்று, ஒரு பக்கம் மாதுளம் பூப் போல நிறம். நான் உச்சியிலிருந்து கீழ் வரை அந்த மலையைப் படிப்படியாகப் பார்க்கிறேன். நடுவே சில தீக் கங்குகள். எத்தனை பார்த்தாலும் தீராது. அருகே சென்று பார்த்தேன். சற்று தொலைவிலிருந்து பார்த்தேன். திரும்பத் திரும்ப பார்த்தேன். நிதானமாகப் பார்த்தேன், மேலும் கீழுமாகப் பார்வையை ஓட்டினேன். ஆச்சரியமே எஞ்சியது. பார்த்துத் தீராதது போல நின்றது.

அப்படியாகக் கல்யாணி ராகம் விரிந்தது. மிக அருமையாகச் சங்கதிகள் விழுந்தன. காலையில் நிறையப் பெரிய வித்துவான்களை கேட்டிருந்தாலும், எனக்கென்று ஒரு தனிப் பாணி உண்டு. அன்றைக்கு மேடையில் புதிய கற்பனைகள் உதித்தன. எனக்குத் திருப்தியாக இருந்தது. கச்சேரி முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து நின்று வெகு நேரம் கை தட்டினார்கள். மிக நிறைவாக இருந்தது.

நிறையப் பேர் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள மேடைக்கு வந்தார்கள். நானும் மகிழ்ச்சியாக எழுந்தேன். பாலா சார் வேண்டாம் என்று கண் காட்டினார். எனக்குப் புரியவில்லை. அவரே கையில் மைக் எடுத்துக் கொண்டு, ப்ளாடினம் டிக்கேட் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் செல்பி என்று அறிவிப்பு செய்தார். பலர் ஏமாற்றத்தில் முணுமுணுத்தார்கள். பாலா அலட்டிக் கொள்ளவில்லை, ப்ளாடினம் டிக்கெட் வாங்கியவர்கள் மட்டும் இருக்கலாம், விரைவில் டின்னர் ஆரம்பிக்கும். மற்றவர்கள் செல்ஃபி எடுக்க வேண்டும், பேச வேண்டும் என்றால் மறு நாள் ப்ளாடினம் டிக்கெட் வாங்கலாம் என்று அறிவித்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

ஒரு நாற்பது ஐம்பது பேர் மட்டும் இருந்தார்கள். பொறுமையாக, புன்னகைத்து படத்துக்கு நின்றேன். சிலர் தனியாக, சிலர் தம்பதியாக வந்து என்னுடன் படம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு டின்னர். கச்சேரி முடித்து எனக்குப் பசி இல்லை. மனதும் வயிறும் நிரம்பி இருந்தது. ஒரு பக்கம் மேசை மேல் மூன்று பாத்திரங்கள் இருந்தன, ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் அப்பளம் தெரிந்தது. அருகே போய் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். புளியஞ்சாதம், தயிர் சாதம், நீர்த்துப்போய் ஒரு சேமியா பாயசம் இருந்தது. இதற்குப் போய் நூறு டாலரா என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வழியாக எல்லோருடனும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

காரில் வரும்போது பாலா சார் “ சுந்தரம், இன்றைய கச்சேரி பிரமாதம், நீ பாடிய கல்யாணிக்கு மட்டுமே டிக்கெட் பணம் சரியாகி இருக்கும், இன்னும் கூட டிக்கெட் விலை அதிகம் வைத்திருக்கலாம் “ என்றார்.

“மிக்க நன்றி சார், அமெரிக்காவில் என்னுடைய முதல் கச்சேரியே இப்படி நன்றாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி “ என்றேன்.

“ சுந்தர், இதேமாதிரி எல்லாக் கச்சேரியும் நன்றாகப் பாடி விடு, உன்னை எங்கேயோ உயரத்துக்குக் கொண்டு விடுகிறேன் “ என்றார். நான் மிக மகிழ்ந்து போனேன்.

“சார் , நீங்கள் ரெகார்டிங் செய்திருக்கிறீர்கள் அல்லவா, எனக்கு ஒரு முறை கேட்க வேண்டும், அடுத்த கச்சேரிகளுக்கு ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் உபயோகமாக இருக்கும் “ என்றேன்.

“ஓ, செய்திருக்கிறேனே, நாளைக்குக் கேட்கலாம் “ என்றார்.

வீட்டுக்கு வந்து என்னுடைய மனைவிக்கும் ராமகோபாலன் சாருக்கும் கச்சேரி மிக நன்றாக நடந்தது என்று மெசெஜ் அனுப்பி விட்டுக் களைப்பாகத் தூங்கி விட்டேன். காலை மூன்று மணிக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்து படுக்கையிலேயே மொபைல் ஃபோனை எடுத்து வாட்சப் செய்திகளைப் பார்த்தேன். இது ஒரு கெட்ட பழக்கம்தான், என்ன செய்வது, பழகி விட்டது.

என்னுடைய மனைவி “ அமெரிக்காவில் முதல் கச்சேரி மிக நன்றாக அமைந்ததற்கு வாழ்த்துகள் “ என்று போட்டிருந்தாள். “நன்றி” என்று பதில் போட்டு அடுத்த செய்தியைப் பார்த்தேன்

“ நீங்கள் நேற்றைக்குப் பாடிய கல்யாணி பிரமாதமாக இருந்ததாம், கலா மெசேஜ் அனுப்பி இருந்தாள்” என்று இருந்தது.

கலா அவளுடைய மாமா பெண், பே ஏரியாவில்தான் இருக்கிறாள்.

“கலா வந்திருந்தாளா ? நான் பார்க்கவில்லையே” என்று பதில் அனுப்பினேன். என் மனைவி வாட்சப்பிலேயே அழைத்து விட்டாள்

எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் என்று மெதுவாகப் பேசினேன். சாப்பிட்டேனா, தூங்கினேனா என்று எதுவும் சொல்லாமல், நேராகக் கச்சேரிக்குத் தாவினேன்.

“ சுந்தர், நேற்று உங்கள் கச்சேரியில் கல்யாணி பிரமாதம், இப்படி ஒரு ராகம் பாடிக் கேட்டதில்லை அப்படின்னு மெசேஜ் அனுப்பி இருக்கிறாள்”

“ நான் அவளைப் பார்க்கவில்லையே, ஒரு வேளை அய்னூறு பேர் கூட்டத்தில் கவனிக்கவில்லையோ என்னவோ “

“வந்திருந்தால் அவள் கட்டாயம் கச்சேரிக்குப் பிறகு உங்களிடம் பேசி இருப்பாள் “

புதிராக இருந்தது. என் மனைவியிடம் சில நிமிடங்கள் ஏதோ பேசி விட்டு வைத்து விட்டேன். கேட்க வந்தவர்கள் யாரும் பதிவு செய்திருக்க முடியாது, பாலா சார் கண்டிப்பாக சொல்லி அறிவிப்பு செய்திருந்தார். வேறு சிலர் அனுப்பி இருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ராமகோபாலன் வாழ்த்தி செய்தி அனுப்பி இருந்தார். பதில் போட்டேன்.

நியூயார்க்கிலிருந்து என்னுடைய சிஷ்யன் ஒருவன் மெசேஜ் அனுப்பி இருந்தான். இது வரை அவனை நேரே பார்த்ததில்லை, ஸ்கைப் வகுப்புகள்தான்.

“சார், நேற்றைய கச்சேரியை நேரில் கேட்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது, அப்படி ஒரு கல்யாணி நாங்கள் இதுவரை கேட்டதில்லை “

ஓரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், அவன் எப்படிக் கேட்டான் என்று மர்மமாக இருந்தது. அவனுக்கு அமெரிக்க கிழக்குக் கரையில் காலை ஆறரை மணி, ஆன்லைனில் இருந்தான். செய்திகளில் உரையாடினோம்.

“ நன்றி, உனக்கு எப்படி நேற்றைய கச்சேரி கேட்க முடிந்தது ?”

“ சார், நேற்று இரவு உங்களுடைய கச்சேரி ஆடியோ முழுவதும் ரிலீஸ் ஆகி விட்டது. ஐம்பது டாலர்தான். சங்கீத ரசிகர் குழுமங்களில் எல்லாம் அதைப் பற்றித்தான் விவாதம். நிறையப் பாராட்டுகள். “

“ ஆடியோ ரிலீசா ? யார் செய்தார்கள் ?”

அவன் உடனே ஒரு இணைய விளம்பரத்தை அனுப்பினான். என்னுடைய கச்சேரிப் படத்துடன், முழு ஆல்பம் விற்பனைக்கு இருந்தது. இந்தியாவில் ஆயிரம் ரூபாய், மற்ற நாடுகளில் ஐம்பது டாலருக்கு டவுன் லோடு செய்து கொள்ளலாம்.

அந்த இணைய விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாலாதான் இந்த விற்பனையைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் வேறு யாரும் பதிவு செய்யக் கூடாது என்று தடை விதித்து கண்டிப்பாகப் பேசினார். அதே இணைய தளத்தில் எவ்வளவு டவுன் லோடு ஆகி இருந்தன என்று எண்ணிக்கை வேறு காட்டிக் கொண்டிருந்தது. உலகம் முழுவதுமாக சேர்த்து, ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு டவுன்லோடுகள். பல ஆயிரம் டாலருக்கு மேல் வரும்படி. எனக்குக் கோபம் தலைக்கு எறியது. இதைப் பற்றி பாலா இன்றும் சொல்லி இருக்கவில்லை. எப்படி ஏமாற்றி இருக்கிறார்.

அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தேன். இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. ஹாலிலேயே உலாவினேன். பாலா எழுந்து வந்தவுடன் கேட்டு விட வெண்டும். என்ன மாதிரி ஏமாற்று ஆசாமி, நானும் தெரியாமல் ஏமாந்து விட்டேன். ஒரு கச்சேரிக்கு இன்னொரு ஆயிரம் டாலராவது கேட்பது என்று தீர்மானித்தேன். இல்லை, ஒவ்வொரு டவுன்லோடுக்கும் பத்து சதவீதம், அதாவது ஐந்து டாலர் கேட்கலாம். அப்படியானால், ஆயிரம் டவுன் லோடுக்கு ஐந்தாயிரம் வரும் என்பது மாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஓர் அரை மணி நேரம் கழித்து பாலா எழுந்து வந்தார். காலை வணக்கம் கூட சொல்லாமல், “சார் என்ன இது , நேற்றைய கச்சேரி ரெகார்டிங்க்கை விற்கிறீர்கள் போல இருக்கிறதே ? என்றேன்.

“ ஆமாம், எத்தனை பேர் வாங்கி இருக்கிறார்கள் தெரியுமா ? நிறைய விற்பனை. உன்னை வரவழைத்ததற்கு முழுப் பலனும் கிடைக்கப் போகிறது, இதை வைத்துக் கொண்டு இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறேன். “

“என்ன சார், இப்படி ரெகார்டிங் செய்து விற்கப் போகிறீர்கள் என்று எனக்குச் சொல்லவில்லையே, நிறைய விற்று எல்லோரும் கேட்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் வருமானத்தில் எனக்கும் பங்கு இல்லையா ?” தைரியமாகக் கேட்டு விட்டேன்.

பாலா சார் ஒரு கணம் மவுனமாக இருந்தார். என்னை ஆழமாகப் பார்த்து “ உன்னை வரவழைத்து இங்கே அமெரிக்காவில் பிரபலப் படுத்துவதே நான். இல்லா விட்டால் சென்னையில் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மத்தியான வேளையில் காலி அரங்கத்தில் பாடிக் கொண்டிருப்பாய். சிறிது நன்றியுடன் நடந்து கொள்”

நான் இதை எதிர் பார்க்கவில்லை.

“சார், இது அநியாயம் உங்களுக்கு ரெகார்டிங் மட்டுமே விற்று ஐம்பதாயிரம் டாலர் பணம் வந்திருக்கிறது, எனக்கு நீங்கள் கொடுப்பதோ வெறும் பிச்சைக் காசு “ முடித்தவுடன், அப்படிச் சொல்லி இருக்க வேண்டாம் என்று தோன்றியது.

பாலா வேகமாக எழுந்து உள்ளே சென்றார், வெளியே வந்த போது கையில் சில காகிதங்கள்.

“ இதோ பார் உன்னுடைய கான்டிராக்ட், படித்துப் பார்த்துத்தானே ஒத்துக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறாய் ? இதில் நியாயம் வேறு பேசுகிறாய் “

எனக்கு அப்படி இருந்ததாக நினைவு இல்லை, அதை வாங்கிப் பார்த்தேன். பாலா கடைசிப் பக்கத்தில் சிறிய எழுத்துருவில் அடிக்குறிப்பாக இருந்த சில வரிகளைக் காண்பித்தார். அதில் தெளிவாக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எல்லா விற்பனை உரிமைகளையும் பாலாவுக்குக் கொடுத்திருந்தேன். என்னுடைய முதல் வெளி நாட்டுக கான்டிராக்ட், சரியாகப் படிக்காமல் , ரேட் பேசாமல் ஒத்துக் கொண்டிருக்கிறேன். கோபம்தான் வந்தது.

பாலா அருகில் வந்து தோளைத் தொட்டார்.

“ சுந்தர், இதெல்லாம் சின்ன சமாசாரம், இதைப் பெரிது படுத்தி மன நிலையை கெடுத்துக் கொள்ளாதே, இன்றைக்கும் கச்சேரி இருக்கிறது. உனக்கு எவ்வளவு பெயரும் புகழும் வரப் போகிறது, அதை நினைத்துக் கொள் “

“ப்ரியா , சுந்தருக்கு ஒரு ஸ்வீட் செய், நேற்றைய கச்சேரி பயங்கர சக்சஸ். “

“ சுந்தர் உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும் ? பாதாம் அல்வா செய்யட்டுமா? இங்கே கலிஃபோர்னியா ஆல்மண்டில் நன்றாக வரும் “

நான் பதில் சொல்லாமல் எழுந்து என்னுடைய அறைக்குச் சென்று கதவை அடித்து மூடிக் கொண்டேன். என்னை ஏமாற்றியது மட்டும் இல்லாமல், சிறு குழந்தைக்குச் சொல்லுவது போல ஸ்வீட் ஆசை காட்டுகிறார்.

முதலில் தண்ணீரைக் குடித்து விட்டு, உட்கார்ந்தேன். இவருக்கு ஏதாவது பதிலடி கொடுக்க வேண்டும். அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து யோசித்தேன். உருப்படியாக எதுவும் தோன்றவில்லை.

சற்று நேரம் கழித்து கதவைத் தட்டி விட்டு பாலா உள்ளே வந்தார்.

புன்னகையுடன் “ உன்னுடைய கோபம் குறைந்ததா ? வா சாப்பிடலாம், சாப்பிட்டு நீ சற்று படுத்து எழுந்தால்தான் களைப்பு இல்லாமல் இன்றைய கச்சேரி நன்றாகப் பாட முடியும். நேற்றைய கச்சேரி சோஷியல் மீடியாவில் நிறையச் சலசலப்பு, இன்றைக்கு இன்னும் கூட்டம் வரும். “ என்றார்.

“இல்ல சார் எனக்கு பசி இல்லை, இப்போதைக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை “ என்றேன்.

“ சுந்தர், கச்சேரிக்குப் பிறகு ராத்திரி சாப்பாடு உனக்கு நேற்றைக்கே அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று கவனித்தேன். ஆனால் இன்றைக்கும் ரசிகர்களுடன் டின்னர், அதே மெனுதான், நல்ல சாப்பாடு வேணுமானால் இப்போதே சாப்பிட்டுக் கொள் “ என்று சிரித்தார்.

நான் வேண்டா வெறுப்பாக எதுவும் பேசாமல் மதிய உணவு சாப்பிட்டேன். திரும்ப அறைக்கு வந்து படுத்து யோசித்தேன். ஜெட் லாக் கண்ட வேளையில் தூக்கம் மயக்கம் மாதிரி வந்தது. எழுந்த போது மணி மூன்று ஆகி இருந்தது. அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்தேன். அன்றைய கச்சேரி பட்டியலைப் பார்த்தேன். அன்றைக்கு பைரவிதான் முக்கிய ராகம். தண்ணீர் குடித்து விட்டு சுருதி சேர்த்துக் கொண்டு , பைரவி வர்ணம் மூன்று காலம் பாடினேன். குரல் நன்றாக இருந்தது. குளித்து தயார் செய்து கொண்டு கச்சேரிக்குக் கிளம்பினேன். குளிக்கும்போதும் யோசித்துக் கொண்டிருந்தேன். இப்படி மடத்தனமாக கான்டிராக்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன் என்ற எண்ணம் குறையவில்லை. ஆனால் என்ன செய்யலாம் என்று புதிதாக எதுவும் தோன்றவில்லை.

கச்சேரிக்குப் போகும்போது காரில் எதுவும் பேசவில்லை. மனம் பைரவியில் இருந்தது. இந்தக் கச்சேரி வேறு ஓர் இடத்தில். ஒரு பள்ளிக்கூடத்தின் அரங்கத்தில். அரங்கம் இன்னும் பெரியதாக இருந்தது. ஆயிரம் பேர் கூட எளிதாகக் கொள்ளும். மேடைக்குப் பின்புறம் இருந்த அறையில் சுருதி சேர்த்துக் கொண்டு தயார் ஆனோம். அந்த அறையிலேயே ஒரு பக்கத்தில் டின்னர் பாத்திரங்கள் இருந்தன. பாலா சொன்னது உண்மையா என்று திறந்து பார்த்தேன். அதே புளியஞ்சாதமும், தயிர் சாதமும், நீர்த்த சேமியா பாயசமும்.

“என்ன சார் உண்மையாகவே இன்றைக்கும் அதேதானா ? ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி வருபவர்கள் புகார் செய்ய மாட்டார்களா ?”

“ மாட்டார்கள், நேற்று ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி உன்னுடன் படம் எடுத்துக் கொண்டு டின்னர் சாப்பிட்டவர்கள், இன்று வந்திருந்தாலும் கச்சேரி கேட்க மட்டும்தான் வருவார்கள் “

“ஓ அப்படியா “ என்றேன்.

“ எல்லாம் சரியாகி விட்டதா, முழு மனதுடன் பாடு, ரசிகர்களைத் திருப்தி செய்ய வேண்டும், நேற்றைய கச்சேரியை விட இன்று இன்னும் பிரமாதமாக அமையட்டும் “

“கட்டாயம் பாடுகிறேன், மேடைக்குப் போகலாமா ?”

மேடையில் அமர்ந்தோம். திரை விலகியது. அரங்கம் முழுவதும் கூட்டம் நிறைந்திருந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் ஏமாந்து விட்டேன் என்ற உணர்வு தாக்கியது.

பாலா ரெகார்டிங்க் செய்யக் கூடாது என்ற அறிவிப்பைச் செய்தார். அப்போதுதான் எனக்கு அந்த யோசனை ஒளிர்ந்தது. ஆகா இதுதான் சரியான பழிவாங்கும் படலம் என்று ஒரு புன்னகை செய்தேன்.

கச்சேரி ஆரம்பித்தது. முதலில் வர்ணம். முதல் நாள் பாடியதையே பாடினேன். பாலா சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த கீர்த்தனையும் முதல் நாள் பாடியதேதான். பாலா அமைதியற்று எழுந்து நின்றார். பக்க வாத்தியக்காரர்கள் கேள்விக் குறியோடு பின்தொடர்ந்தார்கள். அவர்களுக்கு முழுவதும் வேறு ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். பதினேழு கச்சேரிகளுக்கும் பாடல்கள் மீண்டும் வராமல் அமைத்திருந்தேன். அதைப் பின் பற்றப் போவதில்லை. எல்லாக் கச்சேரியும் அதே பாடல்கள்தான்.

மூன்றாவது பாடலும் அதே மீண்டும் வந்தவுடன், இடைவெளியில் பாலா மேடைக்குத் தண்ணீர் எடுத்து வந்து என்னிடம் தாழ்ந்த குரலில் கேட்டார்.

“ என்ன இது அதே பாடல்களைப் பாடுகிறாய் “

“ சார், உங்கள் கான்ட்ராக்ட் படி ஒவ்வொரு கச்சேரியிலும் வேறு வேறு பாட வேண்டும் என்று போடவில்லையே !” சிரிக்காமல் சொன்னேன்.

பாலா முகம் சிவந்து வேகமாகத் திரும்பி கீழே இறங்கிப் போனார்.

ரசிகர்களிலும் நிறையப் பேர் இரண்டாவது நாளும் டிக்கெட் வாங்கி வந்திருந்தால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்குமே என்று வருத்தப் பட்டேன். ஆனால் கைதட்டல்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் முதல் நாளை விட அதிகமாகக் கைதட்டல்.

அன்றைக்கும் முக்கிய ராகம் பாட வேண்டிய நேரம். கண்களை மூடிக் கொண்டேன். மறுபடியும் அந்த மாபெரும் மலைச் சிகரம் தெரிந்தது. ஆனால் இன்றைக்கு மாலைப் பொன் ஒளியில் மிளிர்ந்தது. தீப் பிழம்புகளால் ஆன மலை. இது நேற்று பார்த்த மலையா என்று ஆச்சரியமாக இருந்தது. பாடப் பாட சூரியன் இறங்கியது. நான் கீழிருந்து உச்சி வரை அந்த மலையைப் படிப்படியாகப் பார்க்கிறேன். இன்றும் எத்தனை பார்த்தாலும் தீரவில்லை. ஆச்சரியமே எஞ்சியது.

நான் கச்சேரி முடித்த போது நின்று கொண்டு மூன்று நிமிடம் கை தட்டினார்கள்.

பதினேழு கச்சேரியும் இப்படி அதே பாடல்களைப் பாடினேன். இரண்டாவது கச்சேரியிலிருந்து ரெகார்டிங் செய்தாலும், அவை ரிலீஸ் செய்யப் படவில்லை. கடைசியாக எல்லாக் கச்சேரிகளும் முடிந்தவுடன், பாலா சொன்னபடி பணம் கொடுத்து விட்டார். பணம் அதிகமாக வரா விட்டாலும், என்னை ஏமாற்றியவருக்குச் சரியான பதிலடி கொடுத்து விட்டேன் என்று நிறைவாக இருந்தது.

இந்தியா திரும்பி வந்து ஜெட்லாக் களைப்பு தூங்கி வழிந்தேன். நூற்றுக்கணக்கான செய்திகள். அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிலிருந்து எல்லாம் நிறைய.

என்னுடைய குரு ராம கோபாலன்

“ மகாவித்துவான், இந்தியா திரும்பி வந்தாயிற்றா ?” என்று ஸ்மைலியுடன் பூங்கொத்து போட்டிருந்தார்.

மறு நாள் காலையில் அவரைப் பார்க்கப் போனேன். முக மலர்ச்சியோடு வரவேற்றார்.

“வா வா, இன்னும் வரலயேன்னு பார்த்தேன், அமெரிக்கக் கச்சேரித் தொடர் அமர்க்களமாக முடிச்சிட்டு விட்டு வந்திருக்க, இனிமேல் நீ மகா வித்துவான் தான் “

அவர் காலில் விழுந்து வணங்கினேன்.

“ சார், எல்லாம் உங்க ஆசீர்வாதம், எல்லாம் நீங்கச் சொல்லிக் கொடுத்தது “

“நான் சொல்லிக் கொடுத்தது என்ன, நீ குருவ மிஞ்சின சிஷ்யன் ஆயிட்ட “

“சார், அப்படி எல்லாம் சொல்லக் கூடாது “

சிரித்துக் கொண்டே “ பின்ன, பதினேழு கச்சேரியும் கல்யாணி ராகம் பாடி பெரிய பேர் வாங்கிட்ட, நானும் கேட்டேன் என்ன கற்பனை, நீ மகா வித்வான் தான் “

அவர் எப்படி எல்லாக் கச்சேரியிலும் நான் பாடினதைக் கேட்டார் என்று எனக்குப் புரியவில்லை.

‘சார், நானே இன்னும் கேட்கவில்லை, பாலா எனக்கு ரெகார்டிங் தரவில்லை, அதை நீங்கள் எப்படிக் கேட்டீர்கள் ?”

“ அவன் சும்மா தரமாட்டான், உன்னுடைய பாட்டையே நீ விலை கொடுத்து வாங்க வேண்டும் “

“உங்களுக்கு எப்படிக் கிடைத்தது ? பாலா ஒரு கச்சேரிதான் ரிலீஸ் செய்திருந்தார்”

“ ஒரு கச்சேரிதான், ஆனால் தனியாக நீ பாடிய கல்யாணி ராகம் மட்டும் பதினேழு கச்சேரியிலிருந்தும் எடுத்து ஒரு தனி ஆல்பமாக பாலா ஆல்பம் ரிலீஸ் செய்திருக்கிறானே. “

அவருடைய மொபைல் ஃபோனில் இணைய விளம்பரத்தைக் காண்பித்தார். இருநூறு டாலர் விலை, ஏற்கெனவே ஆயிரத்துக்கும் அதிகம் டவுன்லோடுகள் ஆகி இருந்தன. எனக்குப் பாலா மேல் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. மனுஷன் மறுபடியும் ஏமாற்றி இருக்கிறான்.

“அடேயப்பா என்ன மாதிரி பாடி இருக்கிறாய், ஒரு நாள் பாடிய மாதிரி இன்னொரு நாள் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு தனிக் கல்யாணியாக ஜ்வலிக்கிறது. வந்தது வராமல் இப்படிப் பாட அசாத்தியமான கல்பனை வேண்டும். பாலா தொகுப்புக்குச் சரியாகத்தான் பெயர் கொடுத்திருக்கிறான் ‘ “நூறு கல்யாணிகள்””

எனக்குப் பேச வரவில்லை.

“சார், அப்படி எல்லாம் சொல்லாதீர்கள், எல்லாம் நீங்கள் கொடுத்தது. நீங்கள்தானே சொன்னீர்கள் கல்யாணி ராகம் இமய மலையில் ஒரு சிகரம் போல. ராகத்தை நானே அப்படி வளர்த்துக் கொண்டேன். கீழிருந்து பார்த்தால் ஓர் அழகு, அருகில் போய்ப் பார்த்தால் இன்னொரு அழகு, பனி மூடினால் ஓர் அழகு, காலை சூர்யோதயத்தின் போது இன்னொரு அழகு, மாலையில் அந்தி சாயும்போது இன்னொரு அழகு மேகம் சூழ்ந்தால் வேறு ஒரு அழகு என்று. அந்த மாதிரி என்னை அறியாமலேயே கல்யாணியை ஒவ்வொரு கச்சேரியிலும் வேறுவேறு விதமாகக் கண்டிருக்கிறேன் “

“அதனால்தான் சொன்னேன் மகா வித்துவான் என்று, எங்களை மாதிரி பெரிய வித்துவான்களே ராகங்களை வாய்ப்பாடு போல ஒரே மாதிரி ஒப்பிக்கிறோம். நீ மேதை. ஒரே கல்யாணியை வித விதமாகப் பாடி இருக்கிறாய். எனக்குத் தெரிந்து கல்யாணி ராகத்தை நான்கு ஐந்து விதமாக ஆரம்பிக்கலாம், நீ பதினேழு விதமாக ஆரம்பித்திருக்கிறாய். அதெல்லாம் நான் சொல்லிக் கொடுத்தது அல்ல. இனிமேல் உன்னைப் பிடிக்க முடியாது. அகாடமியில் மாலைக் கச்சேரிதான். நிறையப் பேர் எனக்கு பாராட்டு அனுப்பி இருக்கிறார்கள். உன்னைப் போல ஒரு சிஷ்யன் கிடைத்தது எனது அதிர்ஷ்டம் நான் என்னுடைய குருவுக்கு நமஸ்காரம் செய்து விட்டு வெளியே வந்தேன்.

பாலா மேல் இன்னும் கோபம் வந்தது. வீட்டுக்கு வரும் வழியில் கார் கண்ணாடி வழியே வெளியே பார்த்துக் கொண்டு யோசித்து வந்தேன். மனுஷனுக்கு உடம்பு முழுவதும் பிஸினஸ் மூளை. எனக்கு இன்னும் பல லட்சங்கள் வந்திருக்க வேண்டும். நேராக மைலாப்பூர் சென்று என்னுடைய மாமாவைப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அவர் ஒரு பெயர் பெற்ற வக்கீல். ஆனால் அவர் முதலில் கான்ட்ராக்டைக் கேட்பார். கையில் இல்லை, வீட்டுக்குப் போய் எடுத்து வர வேண்டும். என்னுடைய மாமா மிகப் பெரிய வழக்குகளை எல்லாம் நடத்தி வெற்றி பெற்றவர். கட்டாயம் இந்த கான்ட்ராக்டில் ஏதாவது ஓட்டை கண்டு பிடிப்பார். பாலாவைக் கோர்ட்டுக்கு இழுக்காமல் விடப் போவதில்லை. உடனேயே பாலாவுக்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டும் போல இருந்தது.

“டியர் மிஸ்டர் பாலா” என்று ஆரம்பித்து அவர் எப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர் திட்டி ஒரு செய்தி எழுத ஆரம்பித்தேன். அது நீண்டு கொண்டே போனது. ஒரே சமயத்தில் கேவலமாகவும் மரியாதையாகவும் திட்டுவதற்கு ஆங்கிலம் ஒரு அருமையான மொழி. அதை முடித்து அனுப்புவதற்குள் வீடு வந்தது. காரிலிருந்து இறங்கி கதவை அறைந்து மூடினேன். வீட்டுக்குள் வந்து ஃபானைப் போட்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். செய்தியுடன் அனுப்பி எவ்வளவு பணம் வந்தது என்று கேள்வி கேட்க அந்த ஆல்பத்தின் இணைய விளம்பரத்தைத் தேடி எடுத்தேன்.

“ நூறு கல்யாணிகள்” ஆல்பம் என்னுடைய முகத்துடன் ஜ்வலித்தது. ஒரு கணம் அப்படியே உறைந்து போனேன்.

ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்து மட மட என்று குடித்தேன். நான் முதலில் எழுதி இருந்த செய்தியை அழித்தேன்.

“மகா ரசிகருக்கு நூறு நன்றிகள்” என்று பாலாவுக்குச் செய்தி அனுப்பினேன்.

Previous articleகித்தானுடைய வண்ணப்பேழை
Next articleஅல்ஹம்டுலிலா
தருணாதித்தன்
தருணாதித்தன் என்ற பெயரில் எழுதும் ஸ்ரீகிருஷ்ணன் தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். தொழில் நுட்பப் பொறியியலாளர், தலைமைத்துவப் பயிற்சியாளர், இசைக் கலைஞர், ஆராய்ச்சியாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். “மாயக்குரல்” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

8 COMMENTS

  1. அருமை ங்க.பணம் அவருக்கு புகழ் உங்களுக்கு. உளச் சிக்கலான மற்றபடி சரியான சமன்பாடு. வாழ்த்துக்கள்.

  2. Another good ,special US based story. Crithu konde padithen! Music lovers like 5his very much. As usual your stamp is visible at the end .

  3. நூறு கல்யாணிகள் could be rated as நூத்துக்கு நூறு. Your story made me to recall few of my experiences during my US trips in one or other ways. Your style is simply superb. Story ended in a emotionally matured way.

    Keep it up Krishnan. God bless you in abundance….

  4. மிகவும் இரசித்து வாசித்த கதை. ஒருவரின் உழைப்பை, அறிவை, ஆற்றலைத் திருடி பணம் சம்பாதிப்பவர்கள் எங்கும் இருக்கிறார்கள். எனினும், அதற்கான புகழ் உரியவரையே அடைகிறது என்பதை உணர்த்தி கதையை முடித்த விதம் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.