யானையும் வேட்டைக்காரனும்
பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு)
காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான். அதற்காக ஒரு பெரிய குழியைத் தோண்டி அதன்மேல் இலை தழைகளை வைத்து மூடினான். யானை விழுந்துவிடுமா என்று தெரிந்துகொள்வதற்காக அதன்மீது எகிறி குதித்தான். அவன் அக்குழியில் விழுந்துவிட்டான். அவனால் குழியிலிருந்து மேலே ஏற முடியவில்லை. யானை வந்தது. தன் தும்பிக்கையை நீட்டியது.
பூனையும் நானும்
ஜே. ஹேமா (எட்டாம் வகுப்பு)
என் பெயர் ஹேமா. நான் ஒரு சிறுமி. நான் ஒரு பூனை வளர்த்தேன். அது ஒரு பெண் பூனை. அதன் பெயர் ரோஸி. அது என்னிடம் மிகவும் அன்பாக இருக்கும். அதன் நிறம் சிறுத்தையின் நிறத்தில் இருக்கும். அந்த சிறிய பூனை தன் தோழியுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல் ஒரு பேருந்து மோதி இறந்துவிட்டது. ரோஸி இறந்துவிட்டது. ரோஸியின் ஞாபகமாக மற்றொரு பூனையை நான் வளர்க்கத் தொடங்கிவிட்டேன். அதன்பெயர் ராஜி. இது கருப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். ராஜி என்னிடம் ரோஸியைப்போல் அன்பாக இருக்கிறது.
ஒரு கனவு
ரா. கிஷ்வர்(பன்னிரெண்டாம் வகுப்பு)
ஒருநாள் மாலையில் நான் கடற்கரையில் படுத்திருந்தேன். நீண்ட களைப்பால் தூங்கினேன். அப்போது ஒரு கனவு வந்தது. நடுக்கடலில் ஒரு தீவு. அதில் பெரிய அரண்மனை. அந்த அரண்மனை வாசலில் சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அந்த நீரோடைக்கு அருகில் ஒரு பெண் சிலை. அப்படி என்று நினைக்கும்போது, அது அரண்மனைக்குள் ஓடிவிட்டது. நான் பின்தொடர்ந்தேன். வழியில் ஒரு பாம்பு படுத்துக்கிடந்தது. என்னைப் பார்த்ததும் தலையைத் தூக்கிப் படம் எடுத்து என்னை விரட்டியது. நான் பயந்து ஓடினேன். அரண்மனையை, பூங்காவை, நீரோடையைத் தாண்டி கடற்கரைக்கு வந்துவிட்டேன். அப்போதும் பாம்பு துரத்தியது. மீண்டும் மூச்சிறைக்க ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன். பாம்பு பெரிய படம் எடுத்து என்னை விழுங்கப் பார்த்தது. நான் கடலுக்குள் பாய்ந்தேன். திடீரென்று புயல் வீசியது. நான் தூக்கி அடிக்கப்பட்டேன். திரும்ப அரண்மனை வாசலில் விழுந்தேன்.
திரும்ப உள்ளுக்குள் போனேன். அதே சிங்காரத் தோட்டம். அதே பெண் சிலை. என்னைப் பார்த்தவுடன் மீண்டும் உள்ளே ஓடினாள். திரும்பப் பின்னால் போனேன். நடுவில் அதே பாம்பு என்னைப் பார்த்துப் படம் எடுக்கத்தொடங்கியது. நான் கண்விழித்தேன். எவ்வளவு மோசமான கனவு. திரும்ப கடலிலிருந்து அரண்மனைக்குத் திரும்பினேன். கனவில் நடப்பதுபோல் நடக்குமா என்று பயத்தில், அரண்மனைக்குச் சென்றேன். சிங்காரத் தோட்டத்தைக் கடந்து, உள்ளே போனேன். அந்தச் சிலை இருந்தது. நான் அதைப் பார்த்தேன். அது உயிருள்ள பெண்ணாக மாறவில்லை.
நல்லவேளை பாம்பும் இல்லை.
வானத்தில் உயரமாகப் பறத்தல்
ஆங்கிலத்தில் – ஜெகதீஷ் ஜோஷி
தமிழில் – பிரஜன் பிரபு (ஒன்பதாம் வகுப்பு)
அது ஒரு பிரகாசமான நீலவானம். சிறுவர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று வானத்திலிருந்து ஒரு பட்டம் அறுந்து வீழ்வதைக் கவனித்தனர்.
“ஓ.. பார்! அதன் வில் ஒடிந்துவிட்டது” அமுஸ் கத்தினான்.
சிவப்புப் பட்டம் தன் ஒடிந்த வில்லுடன் வட்டம் அடித்தபடி கீழே இறங்கியது.
“ஆஹா! அதைப் பிடிப்போம்!” விழுந்துகொண்டிருக்கிற பட்டத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் கத்தினான் அமான்.
“முடியாது! முடியாது! நான் தான் முதலில் பிடிப்பேன்” கத்தினான் மானவ். “நான் வேகமாக ஓடுவேன். ஓடி அதைப் பிடிப்பேன். யாராலும் அதைத் தொடமுடியாது”
அவர்கள் வேகமாக ஓடி, பட்டத்தைப் பிடிக்க முயன்றனர்.
பட்டம் தரைக்கு வரும்பொழுது அவர்கள் எகிறிக் குதித்துப் பிடிக்கப் பாய்ந்தனர்.
அவர்களில் ஒருவன் வில்லைப் பிடித்தான். மற்றவர்களால் அதன் காகிதத் துண்டுகளை மட்டும்தான் பிடிக்க முடிந்தது.
ஆனால் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
“நிறுத்துங்க! ஏற்கெனவே பட்டம் கிழிந்துவிட்டது” என்று கத்தினாள் மீட்டா. அவள்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எனக்கும் பட்டம் விட ஆசை. ஆனால் என்னிடம் காசு இல்லை” என்றான் விவேக்.
“எனக்கும் ஒரு பெரிய பட்டத்தை வானத்தில் பறக்கவிட ஆசை. ஆனால் பெரிய பட்டம் செய்பவர்கள் யாரும் இல்லை” என்று மானவ் முணுமுணுத்தான்.
“ஏன் காத்தாடியை கிழிச்சீங்க! மெதுவாக கீழே இறக்கியிருப்பேன்” என்று அமான் கோபமாகக் கத்தினான்.
“நான் செய்யல. அவன்தான்”
அவர்கள் அனைவரும் ஒருவர்மீது ஒருவர் பழி சுமத்தினர்.
“நான் செய்யல. அவன்தான் என் கையிலிருந்து இழுத்தான்” என்று சொன்ன மீட்டா, “புதிய பட்டம் செய்வோம்” என்றாள்.
“எப்படி? பட்டம் எப்படி செய்வது என்று எங்களுக்குத் தெரியாதே?” என்று அமன் கேள்வி எழுப்பினான்.
உடன், “பட்டத்தை நாம் செய்வது அவ்வளவு கஷ்டம்” என்றான் மானவ்.
“எனக்குப் பட்டம் செய்யத் தெரியும். உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். என் அப்பா எனக்குச் சொல்லித் தந்தார்” என்று அடக்கமாகச் சொன்னாள் மீட்டா.
இதைக்கேட்டதும் அவர்களின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.
“அப்படியா?”
விவேக்கோ “ஒவ்வொருவருக்கும் பட்டம் செய்வதானால் சில வாரம் ஆகும். எனக்கு இதில் விருப்பமில்லை” என்றான்.
மீட்டா அனைவரையும் உற்சாகப்படுத்தினாள். அனைவரும் அமர்ந்து தான் சொல்வதைக் கவனமாகக் கேட்கச் சொன்னாள்.
“நாம இன்னிக்குப் பட்டம் செய்யப்போறோம். கொஞ்சம் துடைப்பக்குச்சி, வண்ணத்தாள்கள், கத்திரிக்கோல், பசை.. தேவைப்படுது. யாராவது உங்கள் வீட்டிலிருந்து கொண்டுவரீங்களா?”
“ஊம்”
அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். அனைவரும் திடீரென காணாமல் போய், சிறு நேரத்தில் திரும்பி வந்தனர்.
ஒவ்வொரு பையனும் ஏதாவது கொண்டு வந்திருந்தார்கள் – துடைப்பக் குச்சி, வண்ணத்தாள்கள், கத்திரிகோல்கள், வில் பந்து, பசை.
ஒவ்வொரு படியாக மீட்டா அனைவருக்கும் சொல்லி வந்தாள்.
பையன்கள் சொந்தமாகப் பட்டம் தயாரிப்பதில் மும்முரமானார்கள்.
மானவ், “பட்டங்கள் தயாரிப்பது சுவராஸ்யமாக இருக்கிறது” என்றான்.
“நான் சொந்தமாக ஒரு பட்டம் தயாரிப்பேன் என்று தெரியாது” அமான் சொன்னான்.
பையன்கள் சொந்தமாகப் பட்டம் தயாரிப்பதில் மகிழ்ச்சியடைந்தார்கள்.
முதலில் பட்டங்களை வில்லினால் வடிவமைத்தனர்.
அதன்மீது வண்ணக்காகிதங்களை ஒட்டினர்.
சிவப்பு பட்டம், நீல பட்டம், மஞ்சள் பட்டம், பச்சைப்பட்டம் என….
ஏழுவண்ணப் பட்டங்கள் உருவாகிவிட்டன.
“இந்தப் பட்டங்கள் எவ்வளவு அழகு!”
“எனக்குச் சிவப்புப் பட்டம் பிடிச்சிருக்கு!”
“எனக்கு நீலம்!”
“அழகான மஞ்சள்”
பின்னர் ஒவ்வொரு காத்தாடியிலும் சரம் உறுதியாகக் கட்டப்பட்டன.
பட்டங்கள் பறக்கத் தயாராகிவிட்டன.
பையன்களுக்குள் இப்போது சண்டையில்லை. பரந்த மைதானத்தில் அவர்கள் வேகமாக ஓடியபடி, பட்டங்களை விடத் தொடங்கினர்.
சில பட்டங்கள் மேலே பறந்தன, சில கீழே விழுந்தன. கீழே பட்டங்கள் தரையிறங்காதவாறு மீட்டா உதவினாள். “ஆஹா! ஆஹா!”
ஏழு வண்ணப் பட்டங்களும் வானத்தில்.
அவை மேலே மேலே பறந்தபடி.
வெவ்வேறு வண்ணத்தில் பறக்கும் பட்டங்களைப் பார்க்கும்போது, வானவில்போல் தோன்றுகிறது.
ஊதா, இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்புப் பட்டங்கள்…..
வானத்தைப் பார்த்தபடி பையன்கள் சந்தோஷத்தில் குதித்தார்கள்
அவர்கள் சேர்ந்து பாடினார்கள்.
“உசர உரசமா பறக்குது
வானத்துல பறக்குது
உன்ன நாங்க விரும்புறோம்
ஒன்னா சேர்ந்து விளையாடுவோம்!”
நன்றி – ஜெகதீஷ் ஜோஷி மற்றும் நேரு பால் புத்தகாலயா, புதுதில்லி.
நன்றி : கவிஞர் ராணிதிலக் அவர்களுக்கு.
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்