விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி (கண்ணீரைப் பின்தொடர்தல்)

பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதோ அதுவே அப்படம்.

ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வருடங்களாக பாதேர் பாஞ்சாலி திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அடிப்படையாக அமைந்த விபூதி பூஷன் பந்த்யோபாத்யாயவின் அபூர்வமான நாவல் பேசப்பட்டது மிகவும் குறைவு. என் கணிப்பில் கலைப்படைப்பு என்று பார்த்தால் விபூதி பூஷனின் நிழல்தான் சத்யஜித்ரே.

வங்க இலக்கியத்தில் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் இடம் மிக மிக முக்கியமானது. அறுபதுகளில் அங்கு நவீனத்துவ அலை எழுந்தபோது தாகூரையும்,தாராசங்கரையும், ஜீபனானந்த தாஸையும் நிராகரிக்கும் போக்குகள் எழுந்தன. பல முக்கியமான படைப்பாளிகளை இந்த அலை உருவாக்கியது. எனினும் விபூதிபூஷனின் இடம் ஐயத்திற்குள்ளாகாமலேயே இருக்கிறது.

வாழ்வை கட்டுக்கோப்பான கதையமைப்புக்குள் ஒழுங்குபடுத்தும் செவ்வியல் பாணி படைப்புகளை நவீனத்துவம் நிராகரிக்க முயன்றது. அறிவுசார்ந்த சட்டகங்களுக்குள் வாழ்வை வடித்து வைக்க முயலும் கோட்பாட்டு ரீதியான முயற்சிகளை அது ஐயப்பட்டது. இலக்கியத்தை கருத்துப்பரவல் சாதனமாகக் காணும் போக்குக்கு எதிராக அது தீவிர நிலைப்பாடு எடுத்தது. இந்த அலைகள் ஏதும் விபூதி பூஷணை பாதிக்கவில்லை. காரணம் செவ்வியல் நாவல்களின் இக்குறிப்பிட்ட இயல்புகள் ஏதுமற்ற செல்லியல் நாவல்கள் அவருடையவை. இப்புகழ் பெற்ற நாவலை தமிழின் ஆரம்பகட்ட படைப்பாளிகளில் முக்கியமானவரான ஆர். ஷண்முக சுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். நாகம்மாள், சட்டிசுட்டது முதலியவை ஆர்.ஷண்முக சுந்தரத்தின் முக்கியமான நாவல்கள்.

பாதேர் பாஞ்சாலியில், முறையாகத் தொடங்கி முதிர்ந்து முடிவடையும் வழக்கமான கதையோட்டம் இல்லை. தர்க்கரீதியாக நாவலை நிலைநாட்டும் முயற்சியும் இல்லை. ஒரு சிறுவனின் வாழ்க்கையை மையமாக்கி , அனேகமாக அவனது கண்வழியாக, இருபதாம் நூற்றாண்டில் கண்விழித்தெழும் ஒரு கிராமத்தை காட்டும் ஆக்கம் இது. அழகிய இயற்கைச்சித்தரிப்புகள் நேர்த்தியான கதாபாத்திரங்கள் மூலம் பிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சொல்லோவியம் . பிற்காலத்தைய நவினத்துவப் படைப்பான அதீன் பந்தோபாத்யாயவின் படைப்புகளிலும் கூட இதே பாணிதான் பின்பற்றப்பட்டுள்ளது. மனம் நினைவுகளில் தோயும் இயல்பான நகர்வையே தன் வடிவமாக இது கொண்டுள்ளது. மிக அடிப்படையான ஒன்று இது. தன்னிச்சையாக தொடுக்கப்பட்டபடி நம் மனதிலோடும் பிம்பங்களின் தொடர்போல உள்ளது இவ்வடிவம்.

அதே சமயம் விபூதிபூஷனின் நாவல்கள் தூய செவ்வியல் படைப்புகளும் கூடத்தான். அவற்றின் செவ்வியல் தன்மை அப்படைப்புகளை உருவாக்கும் ஆதார மனநிலையில்தான் உள்ளது. வாழ்வை ஒரு களிநடனமாக லீலையாக – காணும் வங்காள வைணவ அணுகுமுறையிலிருந்து உருப்பெற்றது அது. இயற்கையும் மனிதனும் பின்னிப் பிணைந்து சிரித்து அழுது இறந்து பிறந்து தொடரும் ஒரு முடிவற்ற ஓட்டம். அதன் நோக்கமென்ன, கட்டமைப்பு என்ன என்பவை விபூதி பூஷணை பாதிக்கும் விஷயங்களேயல்ல. சைதன்ய மகாப்பிரபு இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் கண்ட, காரண காரியத்திற்கு அப்பாற்பட்ட, லீலைதான் அது. இயற்கையின் பெரும் லீலையின் சித்திரத்தில் மனித வாழ்வின் நாடகத்தை கனகச்சிதமாக, முற்றிலும் இயல்பாக பொருத்திக் காட்டுகிறார் விபூதி பூஷண். நாவல் நேரடியாகச் சித்தரிப்பது ஓர் அழிவை. அப்புவின் வீடு வறுமையில் உருக்குலைந்து சிதைந்து மண்ணுடன் மண்ணாக ஆவதன் சரித்திரம் இது. கூடவே இது அப்பு என்ற குழந்தை கண்கள் திறந்து உலகைப்பார்த்து வாழ்வை அளக்க முயல்வதன் சித்திரமும் கூட. ஆக்கமும் அழிவும் ஒன்றாக ஆகும் ஒரு சலனம். இந்த செவ்வியல் தரிசனமே விபூதிபூஷனின் படைப்புகளுக்கு மிக அபூர்வமான காவியச் சாயலை அளிக்கிறது.

பாதேர் பாஞ்சாலி அப்பு. அப்புவின் அக்கா துர்க்கா ஆகியோரின் இளமைப் பருவத்தின் சித்திரங்களின் தொகுப்பு. அப்புவிற்கு அவனைச் சுற்றி பசிய வயல்களாகவும் மரக்கூட்டங்களாகவும் மூங்கில் கூட்டங்களுமாக நிரம்பியிருக்கும் பிரபஞ்சம் தாங்க முடியாத ஆச்சரியங்களின் விசுவரூபமாக இருக்கிறது. அதில் அவனுக்கு வழிகாட்டியும் ஆசிரியையும் ஆக இருப்பவள் அவனைவிட வயது மூத்தவளான துர்க்கா. துர்க்காவிற்கு அப்பிரபஞ்சம் உண்டும் முகர்ந்தும் அனுபவிக்க வேண்டிய ஒன்றாக தெரிகிறது. அவளுக்கு எப்போதும் பசிதான். தோட்டம் முழுக்க கொய்யாக்காய்கள் பொறுக்குவாள். சாப்பிடத்தக்க எதையும் தேடிப்பிடித்து சாப்பிடுவாள். அவளுடைய நாக்கு நுனியிலிருந்தபடி பிரபஞ்சத்தின் ஒருதுளி பிரபஞ்சத்தையே உண்டு விடத் துடிக்கிறது.

ஒருவரையருவர் நிரப்பிக் கொள்பவர்களாக இளம்பருவத்தில் உடன்பிறப்புகள் உருவாவது இயற்கையின் ஜாலங்களில் ஒன்று. அவர்கள் ஒரே ஆளுமையாக மாறிவிடுகிறார்கள். பிறகு பிரிந்து தனித்தனியாக வளர்ந்து முழுமை பெறும் போதுகூட ஒருவரின் ஆளுமை இன்னொருவரில் மிக அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. ஒருவேளை இளமைப் பருவமென்பதே தன்னிடம் இல்லாத விஷயங்களையெல்லாம் பிறரிடமிருந்து உறிஞ்சி முழுமைப்படுத்திக் கொள்ளும் பயணம்தானோ என்னவோ.

அப்பு பூஞ்சை. அச்சமும் தயக்கமும் நிரம்பியவன். கனவுகளில் உலவுபவன். ஒரு நாணல் குச்சி கையிலிருந்தால் அவன் அர்ச்சுனன் ஆகிவிடுவான். ஒரு மூங்கில் குழலை வாயில் பொருத்தினால் கிருஷ்ணன். புற உலகத்தின் மீது அவனுடைய கற்பனை உலகமும் படிந்திருக்கிறது. இரண்டிலும் ஒரே சமயம் அவன் வாழ்கிறான். எது உண்மையானது என்று அவனால் கூறமுடியாது. புறஉலகின் ஆச்சரியங்களிலிருந்து அவன் படைத்துக் கொண்டது அவனது கற்பனை உலகம். அந்த அகஉலகின் ஒளிபட்டு சுடர்வது அவன் புற உலகம். துர்க்கா கைகளாலும் வாயாலும் செய்யப்பட்ட குழந்தை. அவள் தசைகளெங்கும் தங்குதடையற்ற பசியும் ருசியும் பொங்கிப் பரவுகின்றன. அதன் உற்சாகமும் வலிமையும் அவளை காடு மேடெங்கும் துள்ளித் திரியச் செய்கின்றன. தம்பி அவளுக்கு தன் உடலின் ஒரு உறுப்பு போல. தன் ஆன்மாவின் ஒரு துளிபோல.

இரு குழந்தைகளும் நுட்பமாக இயற்கையையும், மனித உறவுகளையும் கண்டடைவதுதான் பதேர் பாஞ்சாலியின் `கதை’ எனலாம். இறுதியில் அப்பு மரணத்தையும் அறிய நேர்கிறது; துர்க்காவின் மரணத்தின் வழியாக. இந்நாவலின் உச்சகட்டமும் இதுவே. அதன்பிறகு அப்பு எப்போதைக்குமாக மாற்றமடைந்து விடுகிறான். வாழ்வின் முழுமையை அதன் மூலம் அவன் அறிந்து கொள்கிறானா? மரணமே வாழ்வுக்கு முழுமையின் ஒத்திசைவை அளிக்கிறதா? மரணத்தை அறிவதுதான் வாழ்வை அறிவதா?

நிச்சிந்தாபுரம் அப்புவின் இளமை நிலம். அப்பெயர் சுட்டுவது போல அது சிந்தனையற்ற காலம். அப்பு தன் குழந்தைப் பருவத்திலிருந்து விலகிச் செல்வதுதான் நாவலின் அடுத்த கட்டம். காசி நகரத்தின் சித்தரிப்பு இந்நாவலில் அப்புவின் இளமை காலத்திற்கு நேர்மாறான ஒன்றாக இருக்கிறது. இடுங்கின தெருக்கள் அவசரமான மனிதர்கள். இருட்டு, அழுக்கு, நாற்றம், மனிதர்களின் நாற்றம். மரணத்தின் நாற்றம். மதத்தின், மரபின், வரலாற்றின் முடை நாற்றம். நிச்சிந்தாபுரம் அப்புவின் கனவாகிப் போன பாலிய காலம். காசி தலைமீது அழுத்தும் இளமைப் பருவம். ஆயினும் அவனுக்குள் அக்கிராமத்தின் பசிய நிலம் அப்படியே மாறாமல் இருக்கிறது. அவனுக்கு வயதாகும். அவன் முதிர்ந்து பழுப்பான். ஆயினும் அவனுள் அந்நிலம் எப்போதும் பசுமை இழக்காது. அங்கு துர்க்கா தன் குழந்தைமையை ஒரு போதும் இழக்காமல் துள்ளித் திரிந்தபடியே இருப்பாள்.

துர்க்காவின் கதாபாத்திரத்தில் உள்ள அசலான தன்மைதான் இந்நாவலை உலகப்புகழ்பெற வைத்தது என்று சொல்ல முடியும். நீர் கண்ட இடத்தில் எல்லாம் வேர் செலுத்தி முண்டி மோதி கிளைச்சந்துகளில் தலைநீட்டி இலைகளையும் தளிர்களையும் விரித்து பூக்களை வளரச்செய்யும் காட்டுமலர்ச்செடி போலிருக்கிறாள். வறுமையின் தீவிரத்தில், புறக்கணிப்பின் வெளியில் வாழ முனையும் முனைப்பே அவளுடைய ஆளுமையாக ஆகிறது. அவளை உயிரின் இயல்பான துடிப்பு மட்டுமே கொண்ட அழகிய சிறுமியாக மட்டுமே படைத்துள்ளார் ஆசிரியர். அவளுடைய அக ஓட்டங்கள் நாவலில் இல்லை, அப்புவின் கண்வழியாகவே அவள் வருகிறாள். அவளுடைய ஆளுமை அப்பு கண்டறிவதேயாகும். நாவலின் தொடக்கத்தில் உணவுதேடி அவள் கொள்ளும் ஆவேசம் உயிரின் துடிப்பே. அப்போது அது நாவில் உள்ளது அவ்வளவுதான். கொய்யாக்காய்கள், பலவகை பழங்கள் , எளிய வெல்லப்பலகாரங்கள், விருந்துச்சாப்பாடு. பின் அவள் மனம் மெல்ல முதிராமங்கைப்பருவத்திற்குத் தாவும்போது புடவைகள், நகைகள். கடைசியாக மெல்ல மலரும் அவள் மங்கையுள்ளத்தின் தாபம் போல ஒரு மெல்லிய ரகசியக்காதல். காதலென்றுகூட சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு.

துர்க்காவின் வாழ்க்கை முடியும் விதமே இந்நாவலுக்கு ஆழத்தை அளிக்கும் மையமாக அமைகிறது. வாழ்நாளெல்லாம் உயிருடனிருக்க , வேரோடி தழைக்க முயன்ற ஒருசெடி சட்டென்று நோயுற்று வாடி மறைகிறது. எந்த பொருளும் இல்லாத , அதிர்ச்சியை மட்டுமே சாரமாகக் கொண்ட மரணம்.வங்கத்தில் மிகச்சாதாரணமாக உள்ள மழையில் நனைவதன் மூலம் காய்ச்சல் வந்து அவள் மறைவது ஒரு குரூர அங்கதம் போலவே உள்ளது. நிராதரவாக தவிக்கும் சர்வஜயாவும் ஒன்றும் புரியாத அப்புவும் சூழ நோயுற்று துர்க்கா மறையும் காட்சி வாசக மனதை உலுக்குவதாகவே உள்ளது. அப்படியானால் அவள் வாழ்நாள் முழுக்க கொண்ட துடிப்பெல்லாமே வாழ்க்கை முடிவதற்குள் அதை அனுபவித்துவிடவேண்டுமென்ற ஆழ்மன இச்சை மட்டும்தானா? ஆனால் அது அவள் மரணம் ஏற்படுத்தும் ஒரு சித்திரம் கட்டுமே. ”மரணம் அதுவரையில் வாழ்க்கைக்கு இல்லாத ஓர் ஒழுங்கையும் அர்த்தத்தையும் உருவாக்கி அளிக்கிறது” என்றார் காம்யூ. பெருமூச்சுடன் வாசகன் துர்க்காவின் மரணத்தை பிந்தொடர்ந்து வெகுதூரம் செல்லமுடியும்.

இரு குறியீடுகள் மூலம் அவளுடைய கதாபாத்திரம் மேலும் உக்கிரமாக்கப்பட்டு அப்புவின் நெஞ்சில் நீங்கா நினைவாகிறது. அவள் மறைந்துபோனபின்னர் அவள் பக்கத்துவீட்டிலிருந்து திருட்டுத்தனமாக எடுத்து ஒளித்துவைத்திருந்த மாலையை அப்பு கண்டெடுக்கிறான். அவளுடைய இளநெஞ்சின் ஒளித்துவைத்த ஆசைகள் அனைத்துக்கும் குறியீடாக அமைகிறது அந்த மாலை. அவள் இறந்தது அறியாமல் வீட்டுக்கு வரும் அப்புவின் அப்பா அவளுடைய திருமணத்தை உத்தேசித்து கொண்டுவரும் துணி இன்னொரு குறியீடு. அவளைப்பற்றி பெற்றோர் நெஞ்சில் நிறைந்திருந்த ஒளிமிக்க கனவுகளின் குறியீடு அது. அப்பு நிச்சிந்தாபுரத்தை விட்டுச்செல்லும்போது துர்க்காவின் நினைப்பே அவனில் நிறைந்துள்ளது. அவன் திரும்பிவரலாம். வராமலும் போகலாம். ஆனால் அந்த மண் அவனுள் எப்போதும் இருக்கும். அங்கே துர்க்கா கலந்திருக்கிறாள்.

ஊரைவிட்டுச்செல்லும் அப்பு துன்பமா இன்பமா என்று தெரியாத உணர்வுகளை அடைகிறான். ஒரு மன எழுச்சி. மான்ம் நிறைய பிம்பங்கள். அவ்வளவுதான். ‘அக்கா இப்போதுகூட கண்சிமிட்டாமல் உற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். …அடுத்தக்கணமேஅவன் மனத்திலிருந்த சொல்லால் விளக்கமுடியாத விஷயம் கண்ணீராகத்தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அக்கா நான் போகவில்லை. நான் மனப்பூர்வமாக உன்னைவிட்டுப்போகவில்லை. இவர்கள் என்னை அழைத்துக்கொண்டுபோகிறார்கள்…”

துர்க்காவின் வாழ்க்கையின் மறுபக்கமாக நாவலில் வரும் கதாபாத்திரம் சர்வஜயாவின் கிழ நாத்தனாராகிய இந்திரா. மிகச்சிறுவயதிலேயே விதவையாக ஆகி சர்வஜயாவின் வீட்டில் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கிறாள். உலகமே அவளிடம் செத்துப்போ செத்துப்போ என்கிறது. ஆனால் அவளில் வாழ்க்கை மீண்டும் மீண்டும் தளிர்விட்டு வளர்தபடியே உள்ளபோது அவள் எப்படி இறக்க முடியும். ஒருவகையில் இந்திராவின் இளைமையே துர்க்கா. வாழ்வதற்கான ஆதித்துடிப்பே உருவானனவர்கள்இரிவரும் . சர்வஜயாவின் வசைகளைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் இந்திரா வருவதும் நீங்காத்துணையாக அவளுடன் இருக்கும் அந்ந்தச்செம்பும் — அது உலகத்திடம் அவள் வாழ்க்கைக்காக யாசிப்பதன் குறியீடுபோல! –கடைசியில் புறக்கணிக்கப்பட்டு நிராதரவாக இறப்பதும் நாவலின் உருக்கமான காட்சிகள். அதேசமயம் இயல்பானவையும் கூட. வாழ்க்கை அதன் இயல்பான போக்கில் முதிர்ந்தவற்றை உதறுகிறது. அவை உதிர்ந்து மட்கி அழிகின்றன. இந்நாவலை திரைப்படமாக்கிய சத்ய ஜித் ரே இந்திரா ஒரு சின்ன மரக்கன்றை நட்டு நீரூற்றும் காட்சி வழியாக அவளுடைய வாழும் துடிப்பை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்.

ரே பாதேர் பாஞ்சாலியை திரைப்படமென்னும் ஊடகத்தின் அதிகபட்ச சாத்தியங்களைப் பயன்படுத்தி காட்டியிருந்தார் என்றே சொல்லலாம். ஆனாலும் நாவல் உருவாக்கும் ஆழமான அதிர்வை அந்த படம் உருவாக்கவில்லை .காரணம் நாவல் முழுக்க நாம் பசுமையை காண்கிறோம் என்பதே. மூங்கில் கூட்டங்கள் மண்டிய கிராமத்துப்பாதைகள். ஊருக்குவெளியே அப்புவும் அக்காவும் தாமரை பறிக்கும் குளங்கள். இடிந்துபோன ஏதோ காலகட்டத்து அரண்மனை. அதைச்சூழ்ந்த குறுங்காடு. வயல்வெளிகள். கிராமத்து வீடுகள். அதிகமாக விவரிக்காமலேயே விபூதிபூஷன் அந்தச் சித்திரங்களை அளிக்கிறார். சிறுவயதில் இந்நாவலை வாசித்த வண்ணதாசன் அதைப்பற்றி கலாப்ரியாவிடம் ‘அது பச்சைநிறமான நாவல்’ என்று சொன்னதாக ஒரு கதை உண்டு. அத்தகைய ஒரு விரிந்த கற்பனைவெளியை உருவாக்க சொற்களால்தான் முடியும். ரேயின் படம் கறுப்புவெள்ளை. அது மிகச்சிறப்பான ஒளிப்பதிவுள்ள வண்னப்படமாக இருந்தாலும்கூட சொற்கள் எழுப்பும் அலைகளை உருவாக்கியிருக்க இயலாது. இரு கலைகளின் சாத்தியங்களின் எல்லை அது.

ஆனால் அப்புவும் துர்க்காவும் ஊருக்கு வெளியே சென்று ரயிலைப்பார்க்கும் காட்சியை ரே சிறப்பாக படமாக்கியிருந்தார். நிச்சிந்தாபுரத்தின் நிச்சிந்தையையைக் கலைத்தபடி வரும் நவீனத்துவத்தின் குறியீடு அது. நவீனத்துவமே வங்கத்துக்கு காலராவையும் டை·பாய்டையும் மலேரியாவையும் கொண்டுவந்தது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் வெளி ஒன்று முன்னால் திறந்திருப்பதைக் காட்டியது. வாய்ப்புகளின் வெளி. சவால்களின் வெளி. அவனுடைய சிறிய எல்லைகளை சிதறடிக்கும் வெளியும் கூட. அப்பு அந்த வெளியை நோக்கித்தான் இறங்கிச் செல்கிறான். காசி அதன் மகத்துவத்துடன் கும்பலுடன் பரபரப்புடன் அழுக்குகளுடன் அந்நவீனத்துவத்தின் குறியீடாக ஆகிறது. அப்படிப்பார்த்தால் பாதேர் பாஞ்சாலி நவீனத்துவத்தால் சிதைக்கப்பட்ட ஒரு எளிய குருவிக்கூட்டின் கதை. அக்குருவிக்கூட்டை ஓயாது தேடும் ஒரு பயணத்தின் தொடக்கம்.

பாதேர் பாஞ்சாலி இன்றும் படிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக அமையும் ஒரு அம்சத்தை இந்த கோணத்தில் நாம் கவனிக்கவேண்டும். இது மண்ணை இழப்பதன் கதை. அப்புவுக்கு எப்போதைக்குமாக அவன் மண் இல்லாமலாகிறது. அது அவனுடைய இளமையின் புறவடிவமாக அவனுக்குள் தேங்கியுள்ளது. ஆகவே அது ஒரு பெரும் படிம வெளி. அவனுடைய கனவுகளை நிரப்பியுள்ளது அது. உண்மையில் அக்கனவுகளில் இருந்துதான் இந்நாவலையே விபூதி பூஷன் திரட்டி எடுத்துள்ளார். இந்நாவல் முழுக்க நிரம்பியுள்ள கனவுச்சாயல் இப்படி உருவானதேயாகும். மண்ணை இழக்கும் இந்த அனுபவம் இந்திய நடுத்தர வர்க்கத்து வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக உள்ள ஒன்று. நடுத்தர வர்க்கம் தொடர்ந்து தங்கள் கிராமத்தை உதறிவிட்டு நகரங்களிலும் பெருநகரங்களிலும் குடியமர்ந்துகொண்டிருக்கிறது. முதலில் பிராமணர்கள் பிறகு முறையே அடுத்தடுத்த கட்ட சாதிகள்.

இது நடைமுறையில் இயற்கையிலிருந்து, குலதெய்வங்களிலிருலுந்து, உறவுகளில் இருந்து, மரபின் ஆசாரங்கள் சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதுதான். அவர்கள் நினைவுகளில் பிறந்து வளர்ந்த கிராமம் ஒரு வகை கனவுமண்டலமாக நிறைந்துள்ளது. இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த பூர்வீகநிலத்தைப்பற்றியே வாழ்நாள் முழுக்க எழுதியவர்கள். தி.ஜானகிராமனின் கும்பகோணம் முதல் யுவன் சந்திரசேகரின் கரட்டுப்பட்டி வரை தமிழில் உதாரணம் காட்டலாம். பாதேர் பாஞ்சாலி அந்த கடந்தகால ஏக்கத்தை மிகச்சிறப்பாக சித்தரித்த முன்னோடிப் பெரும் படைப்பு. அதன் அழியாத கவற்சிக்குக் காரணம் இந்த ஏக்கமும் கனவும்தான்.

*

ஒருவகையில் விபூதிபூஷனின் சுயசரிதை பாதேர் பாஞ்சாலி. அப்புவிடம் மென்மையாக உருவாகும் இலக்கிய ஆர்வம் இந்நாவலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது. அப்பு அவன் வீட்டிலிருந்த மதநூல்களை மட்டுமே கூர்ந்து படித்திருக்கிறான். முதன் முதலாக வெளிநூல்கள் அவன் கவனத்துக்கு வரும்போது அவன் அடையும் பரவசம் பிற்காலத்தில் அவன் ஓர் எழுத்தாளனாக, விபூதிபூஷனாக, வருவதற்கான எல்லா சாத்தியங்களும் கொண்டது. அப்பு கதைகளில் அடையும் பரவசத்தை சீக்கிரமே கதைகளை எழுதுவதிலும் கண்டுகொள்கிறான். ராணியின் நோட்டுபுத்தகத்தில் அவன் பலவிதமான கதைகளை எழுதிக்கொடுக்கிறான்.

காசியில் வாழ்கையில் அவனுள் இருக்கும் எழுத்தாளனை அடையாளம் கண்டுகொள்ளும் அவன் தந்தை அடையும் பரவசம் குறிப்பிடத்தக்கது. அவனுடைய அழகிய முகத்தின் ஒளியைக்காணக்காண அவருக்கு கண்ணீர் பெருகுகிறது. வறுமையில் உழன்றாலும் கல்வியின் வலிமையை கவிதையின் ஒளியை உள்ளூர உணர்ந்த பண்டிதர் அவர். மரணப்படுக்கையிலிருக்கும் ஹரிஹரன் தன்மனைவி மருந்து வாங்க காசுக்காக அலையும் நிலையிலும் ஒளித்து வைத்து கடைசியாக எஞ்சிய நான்குரூபாயில் மூன்று ரூபாயை மகனின் முதல்கட்டுரையை அச்சிடும்பொருட்டு எடுத்துக்கொடுக்கிறார். தன் பெயர் அச்சில் வரும் என்று களிப்புடன் அப்பு சொல்கிறான். ஆனால் அதைக்காண அவர் உயிருடன் இல்லை. தன் உயிரால் ஒரு தந்தை மகனுடைய கலைக்கு அளித்த ஆசீர்வாதம் அது.

இருவகை அடையாளங்களுடன் அப்பு வளர்வதை பாதேர் பாஞ்சாலியின் அடுத்த கட்டம் சித்தரிக்கிறது. ஹரிஹரன் இறந்து அனாதையாக ஆன சர்வஜயாவும் அப்புவும் ஜமீந்தார் வீட்டில் வேலைக்காரர்களாக ஆவதும் ஒவ்வொரு தருணத்திலும் அவமானப்பட்டு சிறுமைகொண்டு உள்ளூரச்சுருங்கி வாழ்வதும் ஒரு பக்கம். அந்த துயரங்களை உண்டு செரித்து அப்புவின் மனம் விரிந்து விரிந்து எழுவதும் அவனுக்குள் அவன் ஆளுமை உருவாவதும் இன்னொரு தளம். தன்னை புறக்கணிக்கும் யஜமானர் வீட்டில் லீலா என்ற ஒரே ஒரு ஆறுதல் தனக்குக் கிடைக்கும்போது அப்பு பெட்டியில் பாதுகாத்துவைத்திருந்த தன்னுடைய கதையைத்தான் எடுத்துக் காட்டுகிறான். அவனுடைய சுய அடையாளம் அது. செய்யாத குற்றத்துக்காக அடிபட்டு அவமானப்படும்போது அவன் அழுவதில்லை. தன் தனிமைக்குள் வந்து சேர்ந்தபின் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்தக்கண்ணீர் பின்னர் எழுத்துக்களில் பெருகும். ‘பதேர் பாஞ்சாலி’ ஆகும். ‘வனவாசி ‘ ஆகும்.

நாவல் அப்பு அடையும் இந்த சுயத்துவத்தில் முடிவடைகிறது. ” சுடுகின்ற தரையில் வேப்பம்பூவின் மணத்தை நுகர்ந்துகொண்டே இனி அவன் எப்போது சுற்றுவான்? மறுபடியும் அவன் தன் வீட்டில் இருந்துகொண்டு பறவைகளின் குரலைக்கேட்பானா?” அவனை நிச்சிந்தாபுரம் கூப்பிடுகிறது. ‘கண்ணீரைத்துடைத்துக்கொண்டு துக்கத்துடன் ‘ஆண்டவா எங்களை மறுபடியும் நிச்சிந்தாபுரத்துக்கு அனுப்பிவை. இல்லாவிட்டால் எங்களால் வாழமுடியாது.’ என்று வேண்டிக்கொள்கிறான்.’அடேய் முட்டாள் பையனே உன் பாதை தெரியவில்லையா? … உன் பாதை போய்க்கொண்டே இருக்கிறது. அந்த ஊரைவிட்டு அயலூரிலும் சூரியோதயத்தை விட்டு அஸ்தமன திசையிலும் ஞானத்தை விட்டு அஞ்ஞானத்திலும் உழன்றுகொண்டிருக்கிறாயே ?” என்று தெய்வம் கூவியது ….இரவு பகலைக் கடந்து மாதங்கள் வருஷங்கள் யுகங்கள் யுகாந்திரங்களைக் கடந்து பாதை சென்றுகொண்டே இருக்கிறது….. ஆனந்தமாக அந்தப்பாதையில் யாத்திரை செல்வதற்காகத்தான் உன்னை விடுவித்தோம் போ மேலே செல்!”

அப்புவின் பயணம் இழந்தை நிச்சிந்தாபுரத்தை எங்கோ மீண்டும் கண்டுபிடிப்பதற்கான தேடல். அதுவே ஞானம். முக்தி என அவன் அறிகிறான்

*

இந்நாவலை நாம் எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலுடன் ஒப்பிடுப்பார்க்க முடியும். சென்றநூற்றாண்டைச் சேர்ந்த குக்கிராமப்பின்னணி. கடுமையான வறுமை நடுவே வாழ்க்கையை செம்மையாக்க முயன்று முடியாமல் ஊரைவிட்டு விலகிச்செல்லும் பிராமணக்குடும்பம். இதுவே இரு நாவல்களுக்கும் மையக்கரு. இது அக்காலகட்டத்து யதார்த்தமாக இருக்கலாம்.

ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் கழித்து அதற்கு அடுத்த கட்ட ஜாதியினரால் எழுதப்பட்ட நாவல்களில் மண்ணுடன் கடைசி உதிரம் வற்றும் வரை போராடும் மனிதர்களைக் காண்கிறோம். ஆனால் பிராமணர்கள் எளிதில் விட்டுவிட்டுச்செல்கிறார்கள். இது அவர்களின் சாதிசார்ந்த மன அமைப்பின் விளைவு மட்டுமல்ல அன்றைய கிராமசமூகத்தின் பொருளியலமைப்பின் விளைவும் கூட. பிராமணர்கள் ஒருவகையில் ஒரு கிராமத்தில் மேற்கட்டுமானத்தைச்சேர்ந்தவர்கள். கல்வி, மதம் ஆகியவற்றின் பிரதிநிதிகள். கிராமப்பொருளியல் சீர்கெட்டு அடித்தளம் ஆட்டம் காணும்போது மேற்கட்டுமானம்தான் முதலில் சரிகிறது. இவ்வாறு கிராமத்தை விட்டு பலவகைகளில் துரத்தப்பட்ட பிராமணர்கள் நகரங்களை நாடுவதையும் நவீனமயமாகி வந்த நகரங்கள் கல்வி கற்கும் திறன் கொண்டவர்களுக்கு அளித்த பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதையும் நாம் பல இந்திய நாவல்களில் காணலாம்.

ஒரு குடும்பம் சிதைகிறது நாவலிலும் பாதேர் பாஞ்சாலி நாவலிலும் வீடுகள் இடியும் காட்சிகள் முக்கியமாக சித்தரிக்கப்பட்டு படிமங்களாக மாறுகின்றன. எஸ்.எல்.பைரப்பாவின் நாவல் கங்கம்மாவின் வீடு கைமாறப்பட்டு இடியவிடப்படுவதன் வழியாகவே தொடங்கி முன்னகர்கிறது. விபூதி பூஷனின் நாவலில் வீடு கடைசியில் கடும் மழையில் இடிகிறது. மழைநீர் உள்ளே கொட்ட ஈரத்தில் கிளிக்குடும்பம்போல அவர்கள் சுருண்டுகொள்கிறார்கள். வீட்டை அப்படியே அழியவிட்டுவிட்டு அப்புவும் குடும்பமும் கிளம்பிச்செல்கிறது. ஒருவேளை அப்பு திரும்பிவந்தால் அந்த இடத்தில் ஒரு மண்மேட்டைக் காணக்கூடும். அவன் இதயத்தில் ரணம் ஆறி எஞ்சிய தழும்பு இருப்பதைப்போல.

ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் கதாபாத்திரங்களில் நஞ்சம்மாவையும் பாதேர்பாஞ்சாலி நாவலின் சர்வஜயாவுடனும் ஒப்பிடலாம். சர்வஜயா பதற்றம் நிறைந்த, ஆழமற்ற உலகமறியாத பெண்ணாக இருக்கிறாள். நஞ்சம்மா அமைதியும் அழுத்தமும் கொண்டவள். வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலும் விடாமுயற்சியும் உடையவள். நஞ்சம்மா தோற்றது வாழ்க்கையுடனல்ல, விதியுடன்தான்; வெல்ல முடியாத மரணத்துடன்தான். அவ்வகையில் நஞ்சம்மா ஒரு துன்பியல் கதாபாத்திரமாக விளங்குகையில் சர்வஜயா அவளுடைய சர்வ சாதாரணத்துவம் வழியாக நாமறிந்த பெரும்பாலான கிராம அன்னையர்களை நமக்குக் காட்டுகிறாள்.

சர்வஜயாவின் கிராமத்து அப்பாவித்தனம் பல இடங்களில் நாவலில் அழகாக வெளிவருகிறது. ‘அப்புவுக்கு என்ன குறை , இன்னும் பெரியவன் ஆனால் இரு கிராமங்கள் புரோகிதத்துக்கு இருக்கின்றன!’ என்று ஜமீந்தார் வீட்டில் பேச்சுநடுவே சொல்லி நகைப்புக்கு உள்ளாகிறாள். அவள் அறிந்த வாழ்க்கை அந்தக்கிராமம் மட்டுமே. பிறந்தது முதல் அவள் வறுமையை மட்டுமே கண்டவள். அவளுடைய கனவுகளுக்கும் அந்த களம் மட்டுமே. சர்வஜயாவின் பொறாமை, தன் குழந்தைகள் சார்ந்த சுயநலம் ஒவ்வொன்றும் துல்லியமாக வெளிப்படுகிறது. தன் குழந்தைகள் மீது பழி சுமத்தப்படும்போது அடித்து நொறுக்கும் ஆவேசம் அழுகை. அவள் தன் இல்லத்தை அண்டி வாழும் முதியவளான இந்திராவை இரக்கமில்லாமல் வீட்டைவிட்டு துரத்தி மரணமடையச்செய்யும்போதுகூட சர்வஜயாவின் நிராதரவான நிலைமையையும் அவளுடைய இயலாமையையும் சேர்த்தே வாசகமனம் அடையாளம் காண்கிறது.

சர்வஜயாவுக்கும் இந்திராவுக்கும் இடையேயான வேறுபாடு மிகமிகச் சிறியதுதான். இந்திராவைப்போலவே அவளையும் ஒரு பண்டிதர் மணம்செய்துகொள்கிறார். அவளும் கைவிடப்படுகிறாள். எதிர்காலம் தன்னை என்னசெய்யப்போகிறதென அறியாமல் அவளும் கண்ணீருடனும் கனவுகளுடனும் பிரார்த்தனையுடனும் காத்திருக்கிறாள். இந்திராவின் கணவர் வரவேயில்லை, சர்வஜயாவின் கணவர் வந்துவிட்டார்,அவ்வளவுதான். ஆனால் வாழ்க்கை அதே வறுமையின் நீங்காத துயரம்தான். ஆனாலும் சர்வஜயா இந்திராவுக்கு அப்பெரும்கொடுமையைச் செய்தாள்.

பலவருடங்கள் கழித்து எங்கோ ஒரு ஊரில் உண்ணவும் உடுக்கவும் புகலிடம் கொள்ளவும் இடுபவரை அண்டி நிற்கும் வேலைக்காரியாக வாழும்போது ஒரு பணக்காரியை சர்வஜயா காண்கிறாள். அவள் வேலைக்காரிகள் புடைசூழ பல்லக்குக்காகக் காத்திருக்கையில் சர்வஜயா அந்த முகம் எங்கோ பார்த்தது போலிருப்பதை நினைத்து மீண்டும் மீண்டும் நெஞ்சைதுழாவுகிறாள். கடைசியில் கண்டுகொள்கிறாள். அது இந்திராவின் முகம். ஒரு நுண்ணிய திசை மாற்றம். கொடுத்தது திரும்பவருகிறது. அவளுடைய பிரமையாக இருக்கலாம் அது. ”அவள் கிழிந்துபோன சேலையை ஒட்டு போட்டு ஒட்டுபோட்டு உடுத்திக் கொண்டிருந்தாள். ஒரு சாதாரணச் சீதாப்பழத்துக்காக எவ்வளவு கெஞ்சி அவமானப்பட்டாள்!. அவளை யாரும் ஏனென்ன்று கேட்பாரில்லை. மத்தியான்ன வெயிலில் வீட்டைவிட்டுதுரத்தப்பட்டாள். வழியிலேயே விழுந்து பரிதாபகரமாக இறந்தாள். சர்வஜயாவின் கண்களில் இருந்து இடையறாது கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.”

அதேபோல அப்புவின் உலகமும் விசுவனின் உலகமும் பலவகையில் சமானமானது. மிகச்சிறுவயதிலேயே இருவரும் வறுமையின் கொடுமையை உணர்கிறார்கள். கூடவே வாழ்வதின் உவகையும் வாசிப்புலகுக்கு அறிமுகமாகும் பரவசமும். இருவரும் உலகை எதிர்கொள்ளும் விதத்தில் உள்ள குழந்தைத்தனம் மிக்க உத்வேகமும் அர்ப்பணிப்பும் வியப்புக்குரியவை. விசுவனுக்கு அம்மா மற்றும் பெரியப்பாவுடன் நடந்தே சிருங்கேரிக்குச் சென்றது மறக்க முடியாத வெளியுலக தரிசனம். அவன் வாழ்ந்த கிராமத்துக்கு அப்பால் விரிந்து கிடக்கும் புற உலகம் பற்றிய பிரக்ஞ்ஞையை அது உருவாக்கியது. பின்னால் அவனை நாடோடியாக எழுத்தாளனாக ஆக்கிய அனுபவம் அது. அதற்கிணையான அனுபவம் அப்பு காசிக்குச் செல்வது. அவனுடைய நோக்கில் அது அளிக்கும் பிரமிப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அசல் நெய்யில் பொரித்த பலகாரங்கள், எப்போதும் மக்கள்கூட்டம் நெருக்கம். அவனுக்கு தன் வாழ்க்கை ‘வெளியே’ இருப்பதான பிரமையை அதுவே உருவாக்குகிறது.

*

இந்நாவல் எழுதப்பட்டு ஏறத்தாழ எழுபது வருடங்கள் முடிந்துவிட்டன. தமிழாக்கம் செய்யப்பட்டே நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. தமிழில் இதைவாசித்து வளர்ந்த மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிவந்துள்ளனர். ஆயினும் இன்னும் இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டிய விஷயங்களின் தொகையாகவே உள்ளது இது. அப்பு வாழும் அந்த மண் போல. நான் என் பத்தொன்பதுவயதில் மலையாளத்தில் இதை முதன் முதலாக வாசித்தேன். அன்று எனக்கு நானறியாத ஒரு மண்ணையும் அங்குவாழும் என்னுடைய இன்னொரு வடிவத்தையும் காட்டக்கூடிய ஒரு நாவலாக இருந்தது இது. நான் எழுதியிருக்கக் கூடிய ஒரு நாவலாக இதை உணர்ந்தேன். நவீன இலக்கியவடிவங்கள் பரவலாக அறிமுகமாகி, பேரிலக்கியங்களில் மனம் தோய்ந்த இருபத்தெட்டு வயதில் மீண்டும் இந்நாவலைபடித்தேன். அப்போது எளியவிஷயங்களில் ஒளிந்திருக்கும் நுட்பங்களைக் கண்டடைவதன் மூலம் பிரபஞ்ச பேரியக்கத்தையே தொட முயலும் ஒரு செவ்விலக்கியமாக இந்நாவலை எண்ணினேன். இப்போது இதை எழுதுவதற்காகப் படிக்கும்போது ‘இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை’ என்று பெருமூச்சுடன் எண்ணிக் கொள்ளவைக்கும் பெரும்படைப்பு என்று நினைத்துக் கொள்கிறேன். மீண்டும் இருமுறையாவது இதைநான் படிக்கக் கூடும்.

[பதேர் பாஞ்சாலி — விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய; தமிழில் : ஆர். ஷண்முக சுந்தரம். மல்லிகா வெளியீடு – 1964]