பாவப்பட்ட ஆத்மாக்கள்-மரியானா என்ரிக்ஸ், தமிழில்: க. ரகுநாதன்

முதலில் எனது குடியிருப்பைப் பற்றி நான் விவரிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் என் வீடு அருகே தான் இருக்கிறது, என் தாயும் இந்த வீட்டில் தான் இருக்கிறார். ஒன்றில்லாமல் மற்றொன்றை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, குறிப்பாக நான் ஏன் இந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் என்னால் விட்டுச் செல்ல முடியும். என்னால் நாளை கூட விட்டுச் செல்ல முடியும்.

நான் குழந்தையாக இருந்தபோது இருந்ததைவிட இப்போது குடியிருப்பு மாறியிருக்கிறது. பிரிட்டிஷ் ரயில்வே ஊழியர்களுக்காக குறுகலான வீதியில் 1920களில் கட்டப்பட்ட இந்த கல் வீடுகள், இரும்புக் கதவுகள் கொண்ட உயரமான சாளரங்களும் வீட்டின் முன் சிறிய தோட்டமும் கொண்டவை ஆகும். இங்கு குடியிருப்பவர்களால் நிரப்பப்பட்ட புதுமையான கண்டுபிடிப்புகளின் காரணமாக இந்த வீடுகளின் அழகு படிப்படியாக பாழ்படுத்தப்பட்டது என்று உங்களால் எளிதில் கூற முடியும்: ஏசி இயந்திரங்கள், ஓடுகள் வேய்ந்த கூரைகள், பல்வேறு பொருட்கள் பொருத்தப்பட்ட மேல் மாடிகள், பொருத்தமற்ற வெளிப்புற வண்ணப்பூச்சுகள், அசல் மரக் கதவுகளை மாற்றிவிட்டு தரமற்ற கதவுகளைப் பொருத்தியுள்ளனர். ஆனால் இவற்றுக்கு இங்கு குடியிருப்போரின் மலிவான ரசனை மட்டுமே காரணமல்ல, இந்த சுற்றுப்புறம் ஒரு தனித் தீவாக மாறிப் போனதால் ஏற்பட்ட துன்பங்களும் அதற்குக் காரணம். இதன் மேற்கு எல்லையில் அமைந்த மரங்களடர்ந்த சாலை ஒரு மாசடைந்த ஆற்றின் கரையைப் போல எதுவுமின்றி இருந்தது. தெற்குப் பகுதியில் இருந்த குடியிருப்புகள் அபாயம் நிறைந்ததாக இருந்தது. சிறுவர்கள் சில நேரம் தங்களிடம் உள்ள துப்பாக்கியால் சண்டையிட்டுக் கொள்வர். அல்லது கால்பந்துப் போட்டியில் தோல்வி அடைந்ததற்காக வானை நோக்கி பைத்தியம் போல் துப்பாக்கியால் சுடுவர். அதன் வடக்குப் பகுதியில் ஏதாவது விளையாட்டுத் திடலாக உருவாக வேண்டிய துண்டு நிலம் பரம ஏழைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் அவர்கள் சில கான்கிரீட் கட்டிடங்களாகவும் பெரும்பாலானவை தகரக் கூரைகளாகவும் வீடுகளைக் கட்டிக் கொண்டனர். இந்த அடுக்குமாடிக் கட்டிடமும் இந்த சேரிப்புறமும் கிழக்குப் பகுதியில் எங்கள் குடியிருப்பு அருகே இணைகின்றன.

எங்களது நாட்டிலும் எனது நகரத்திலும் இருப்பது போல துயரம் உங்களைத் தொடர்ந்தால் பிழைப்பதற்காக குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். சட்டப்பூர்வமான வேலையைவிட குற்றச் செயல்களில் அதிகப் பணம் கிடைக்கிறது. ஆனால் இங்கு யாருக்கும் சட்டப்படியான வேலை கிடையாது. ஆனால் துணிந்து செயல்பட்டால் தான் நல்ல வாழ்க்கையை அமைக்க முடியும் என்றால், அந்தச் செயலை எல்லோரும் துணிந்தே செய்ய விரும்புவார்கள்.

இந்த உலகம் வேறுவிதமாக இருந்தபோது சிறிய வீடுகள் கட்டப்பட்ட இந்த தீவின் குடிகள் சிலர் எனது அண்டை வீட்டாரும் கூட- என்னைப் போலவே சிந்திப்பார்கள். நான் தெளிவாகக் குறிப்பிடுகிறேன்: நான் சில சமயங்களில் பயந்து போவதும் உண்டு; தெறித்து வரும் ஒரு குண்டு என்னையோ எப்போதாவது வீட்டிற்கு வரும் என் மகளையோ தாக்குவதை நான் விரும்பவில்லை. பேருந்து நிறுத்தத்திலோ அல்லது கட்டப்படும் கட்டிடங்களின் முச்சந்தியில் சிவப்பு விளக்கு எரிகையில் காரில் அமர்ந்திருக்கும் போதோ நான் கொள்ளையடிக்கப்பட விரும்பவில்லை. ஒரு பதின் பருவப் பையன் என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றால் நான் வீட்டுக்கு அழுது கொண்டுதான் செல்வேன். ஆனால் நான் அவர்கள் எல்லோரையும் கொல்ல விரும்பவில்லை. அவர்கள் சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் வெற்றுக் கூட்டம் என்றோ குடியேறிகள் என்றோ மீட்கப்பட முடியாதவர்கள் என்றோ நான் நினைக்கவில்லை. படகோனியாவில் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றும் என் முன்னாள் கணவர் எனது அண்டை வீட்டார் அச்சமடைந்துள்ளதாக என்னிடம் கூறினார். பாசிசம் என்பது பொதுவாக அச்சத்தில் தொடங்கி வெறுப்பில் முடிவடைகிறது என்று நான் அவரிடம் கூறினேன். நான் வீட்டை விற்றுவிட்டு தெற்குப் பகுதியில் அவருக்கு அருகில் குடிபெயர வேண்டும் என்று என்னிடம் கூறினார். நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டாலும் நாங்கள் நண்பர்கள் தான். நாங்கள் எப்போதும் நண்பர்கள்தான். அவரது புதிய மனைவி மிக அழகானவள். இங்கே தங்குவதற்கு எங்கள் மகள் கரோலினை ஒரு சாக்காக நான் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் அது வெறும் சாக்குப் போக்குதான். இந்த வீட்டிலிருந்தும் என்னிடமிருந்தும் வெகு தொலைவில் இருக்கிறாள். வழவழப்பான வடிவமைப்பில் வெளியாகும் ஃபேஷன் இதழின் ஆசிரியர் அவள். அவளுக்கு நான் தேவையே இல்லை.

என் தாய் இங்கு வாழ்வதால் நான் இங்கு தங்கியிருக்கிறேன். இறந்து போன ஒரு பெண்மணியைப் பற்றி இப்படிக் கூற முடியுமா? அப்படி எனில் அவள் ‘வாழ்கிறாள்’. அவள் எனக்கு முதன்முறையாகத் தோன்றியதிலிருந்து நான் இந்தச் சொல்லை நன்கு புரிந்து கொண்டுள்ளேன். அவள் இங்குதான் சூன்யமாக இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும் முன்பே அவள் இருப்பை நான் உணர்ந்தேன்.

புற்றுநோயின் பிடியில் சிக்கி இறப்பதற்காக வீட்டிற்கு வரும் வரை என் அம்மா மகிழ்ச்சியான பெண்மணியாகவே இருந்தாள். அவளது துன்பம் நீணடதாகவும் வலி மிகுந்ததாகவும் மதிப்புக் குறைவானதாகவும் இருந்தது. எப்போதும் அப்படி இல்லை. மொட்டைத் தலையாக மஞ்சள் தோலுடன் படுக்கையில் அமர்ந்து கொண்டு வாழ்வியல் சிந்தனைகளை விதைக்கும் ஒரு அறிவார்ந்த நோயாளி என்பது அர்த்தமற்ற கற்பனாவாதமாக இருக்கும். ஆனால் சிலர் குறைவாகவே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்பதும் உண்மைதான். அது ஒரு உடலியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல நிலைத்தன்மை சார்ந்ததும் ஆகும். என் அம்மாவிற்கு மார்ஃபின் ஒவ்வாமை உண்டு. அதை அவளால் பயன்படுத்த முடியவில்லை. அதனால் பலனற்ற வலி நிவாரணிகளை நாங்கள் நாட வேண்டியிருந்தது. கதறிக் கொண்டே அவள் இறந்தாள். ஒரு செவிலியும் நானும் எங்களால் முடிந்த வரை நன்றாக அவளைக் கவனித்துக் கொண்டோம். எங்களால் அதிகம் செய்ய முடியவில்லை. நான் ஒரு மருத்துவர்தான் என்றாலும் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது இல்லை. அதற்கு மாறாக, ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்தில் நிர்வாகப் பணி புரிந்தேன். இந்த அறுபது வயதில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் அளவிற்கு சக்தியோ பொறுமையோ ஆர்வமோ எனக்கில்லை. ஒரு உண்மையைச் சொல்லப் போனால் நான் மறுத்து வந்த (மறதி ஒரு சக்தி வாய்ந்த மருந்து) உண்மையை, என் தாய் எனக்கு முன்பு தோன்றியபோது ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றிக் கூற வேண்டும். அதாவது பேய் இருக்கிறது, என்னால் அவற்றைப் பார்க்க முடியும். நான் மட்டுமே அவற்றை காண்பதில்லை; மருத்துவமனையில் செவிலியர்கள் ஓடி ஒளிவது வழக்கமான ஒன்றுதான். “பெண்களே நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்” என்று நான் அவர்களை ஆற்றுப்படுத்துவேன்.

என் அம்மாவின் அலறலை முதன் முறையாகக் கேட்டது ஒரு காலைப் பொழுதில் தான். மசமசவென இருள் சூழ்ந்த காலைப் பொழுது அல்ல, நல்ல சூரிய வெளிச்சமான காலை, பயமுறுத்துவதற்கு உதவாத நேரம். இப்பகுதியில் உள்ள வீடுகள் அழகானவை என்றாலும் அருகருகே ஆனால் நெருக்கமற்று கட்டப்பட்டவையாகும். என் அடுத்த வீட்டுப் பெண் மேரி, தான் கொள்ளையடிக்கப்படவோ அல்லது கொலை செய்யப்படவோ நேரிடலாம் என்றோ அல்லது வேறேதேனும் ஒன்றாலோ எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வரும் அவள், யாரேனும் வீதியில் வருகிறார்களா என நான் பார்ப்பது போலத் தன் கண்களை அகல விரித்து அவளது ஜன்னல் வழியே எனது சிறிய முற்றத்தை நோக்கினாள். எனது பீதியினால் முட்டாள்தனமாகவும் யோசனையின்றியும் நான் கொடுத்த எதிர்வினை அது. காலஞ்சென்ற எனது தாயின் அழுகை அது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. யாரோ வெளியே இருக்கிறார்கள் அல்லது ஒரு விபத்து அல்லது சண்டை என நான் நினைத்தேன். எனது அம்மாவின் உண்மையான அலறலை மேரி நினைவு வைத்திருக்கிறாள் போல…அவள் அதிர்ச்சியுடன் வாயடைத்துப் போனாள்.

“அது டி.வி. மேரி, ஒன்றுமில்லை” என்றேன்.

“அது, அந்த சப்தம் எது மாதிரி இருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா டாக்டர்?”

“உண்மையாக அப்படித்தான் இருக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை”

பிறகு நான் உள்ளே சென்றேன்.

என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்பதால், அந்த அழுகைச் சப்தம் எங்கிருந்து வருகிறது என்று வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட்டு, எனது தாயை அமைதியாக இருக்குமாறு பிரார்த்திப்பது போல வேண்டிக் கொண்டேன். அவளது புலம்பலை முற்றிலும் நிறுத்துமாறு நான் கட்டாயப்படுத்தவில்லை. சற்று விவேகமாகவும் சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் தான் நான் கேட்டுக் கொண்டேன். இதே போன்ற கோரிக்கையை மருத்துவமனையிலும், பின்னர் சிகிச்சையகத்திலும் உள்ள மற்ற ஆவிகளிடமும் முன் வைத்தேன். சில நேரங்களில் அதற்குப் பலன் கிடைத்தது. என் அம்மா எப்போதும் நகைச்சுவை உணர்வு உள்ளவள் என்பதால் அவளது சப்தத்தைக் குறைக்குமாறு நான் முறையிட்டது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. நான் வேலைக்குச் செல்லாத அன்று- அவளை நான் பார்க்கவில்லை. ஆனால் அவள் இறந்து போன அறையின் தரையில் அமர்ந்திருந்த அன்றைய இரவில் நான் அவளைக் கண்டேன். மெலிந்து போன அவளை, புண்பட்டு ஒல்லியாகிப் போய் இறுதி மாதங்களில் இருந்தது போலன்றி புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் போலக் கண்டேன். அவளை அணுகப் பயமாயிருந்தது. எனது மூட்டுகள் நடுங்க கதவிடுக்கில் ஒருக்களித்தபடி அவளிடம் பாட்டுப் பாடினேன். என் கால்களை மடக்கி அமர, அவள் முழந்தாளிட்டு அமர, நாங்களிருவரும் எதிரெதிரே நெருங்கி அமர்வது வரை பாடினேன். அவள் வலி தாங்க முடியாதபோது ஆற்றுப்படுத்த நான் பாடிய அதே பாடலைப் பாடினேன். அந்த இரவில் அவள் அலறவில்லை.

ஆனால் ஆவிகள் வருத்தமடைந்ததாகக்  கேள்வியுற்றேன். அவை சிந்திப்பதாக இருந்தால்- என்னவெல்லாம் நினைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் அனிச்சையாக ஒன்றையே திரும்பச் செய்கின்றன. ஆனால் அவை பேசுகின்றன, கருத்துக் கூறுகின்றன- மோசமான மனநிலையில் இருக்கின்றன. என் அம்மா வீட்டைச் சுற்றி அலைகிறாள். சில நேரங்களில் நான் இருப்பது அவளுக்குத் தெரியும். சில நேரங்களில் அவளுக்குத் தெரியாது. சில நேரங்களில் நோயின் உக்கிரம் அவளிடம் திரும்ப வந்தது போலத் தென்படும். அவளது சீரழிந்த உடலின் நோய்க் கொடுமை, பெருங்குடல் திறப்புப் பை, அவமானம்… அவள் மிக நாகரிகமானவள். எவ்வாறு அழுதாள் என்பது நினைவுள்ளது. “அந்த நாற்றம், நாற்றம்”. அது உடல் துன்பத்தை விட மோசமானது. அந்த சமயங்களில்  கோபம் வந்துவிட்டால் மூர்க்கமான அலறலை அவள் வெளிப்படுத்துவாள். அவளை ஆற்றுப்படுத்த பல வழிகளை வைத்திருந்தேன். ஆனால் அவற்றைப் பற்றி இங்கே சொல்ல வேண்டிய தேவையில்லை. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அக்கம்பக்கத்தில் நிகழ்ந்தவைதான். இறுதியில் நான் பித்துப் பிடித்தவள் இல்லை என்பதை உணர்ந்தேன்- தன் இறந்துபோன தாய் மாடிப் படிகளில் ஏறுவதைப் பார்த்த ஒருத்திக்கு- எனக்கு- அங்கிருப்பது எனது அம்மாவின் ஆவி மட்டுமே அல்ல என்பது புரிந்தது.

எனது குடியிருப்புவாசிகள் “பாதுகாப்பு” கூட்டங்களை நடத்தினர். அது நல்லபடியாக முடியவில்லை. அண்டை வீடுகளில் ஆட்கள் புகுந்தார்கள். சில வன்முறைக் கொள்ளைகள் நடந்தன. ஒரு வயதான பெண்மணி தாக்கப்பட்டார். அது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் அண்டை வீட்டார் இன்னும் மோசமாக இருந்தார்கள். கூட்டங்களுக்குச் சென்று தாங்கள் எப்படி எல்லாம் வரி செலுத்துகிறோம் எனக் கூப்பாடு போட்டார்கள். (அதில் பாதிதான் உண்மை. பெரும்பாலான நடுத்தர வர்க்க அர்ஜென்டினர்கள் போல முடிந்தவரை வரி ஏய்ப்பு செய்தனர்) துப்பாக்கிகளை எப்படி வாங்கினர், அதைப் பயன்படுத்த பயிற்சி எடுத்ததைப் பற்றி எல்லாம் கூறி கத்தினர். மேலும் போலீஸ் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவரணை செய்தார்கள். துன்புறுத்துதல், இடைக்கால சித்திரவதை, கண்ணுக்குக் கண் அல்லது அது போன்ற தண்டனைகள் அல்லது மரண தண்டனை கூட. இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு மனிதர் என்னைவிட சற்று வயதானவர், இது போன்ற சட்ட விரோதமானவர்களின் தலைகளை வெட்டி காட்சிப்படுத்த வேண்டும் என்றார். மற்றவர்கள் அதை மறுக்கவில்லை. அவரை நோக்கி பார்வையைக் கூட செலுத்தவில்லை. எல்லாக் கூட்டங்களிலும் அவர்கள் தங்களது தந்தையரைப் பற்றி நினைவு கூர்ந்து, அவர்கள் நல்லவர்கள் என்றும் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறும்போது போட்டிருந்த உடைகளைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் ஏழைகள் ஆனால் நேர்மையானவர்கள் என்றும் உழைப்பதற்காகவே இங்கு வந்தனர் என்றும் அவர்கள் வெள்ளைக்கார்ர்கள் என்றும் கூறுவர். அது ஒரு கட்டுக் கதை. அந்தக் காலகட்டத்தில் அந்தக் குடியேறிகள் எல்லோரும் பெரும்பாலும் சின்னத் திருடர்கள். மற்றவர்கள் போலீஸிடம் இருந்து தப்பித்த கிளர்ச்சியாளர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் தார்மிகப் பொறுப்பேற்பதைக் காட்டிலும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட நேர்மையற்ற வணிகர்களாக மாறிப் போயினர். ஆனால் நான் எந்த வாக்குவாதமும் செய்யமாட்டேன். அவர்கள் கூறும் பார்வைகளிலிருந்து நான் விலகியே இருப்பேன். அவை பொய்கள். பொய்க்கு எதிராக வாதிடுவது என்பது பெரும் சவாலான விஷயம்.

அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் நான் கூட்டங்களுக்குச் செல்வேன். ஒருவேளை வீதியை மூடப் போகிறார்களா என்பதை முன்னதாகவே அறிந்து கொள்ள விரும்பினேன். ஒருமுறை அவர்கள் ஒரு எச்சரிக்கை மணியை அமைத்திருந்தது எனக்குத் தெரியவில்லை. நான் எனது தொலைபேசியில் வந்த குறுஞ்செய்தியைப் பார்ப்பதற்காக சுவற்றில் சாய்ந்தபோது அறியாமல் அமுக்கிவிட்டேன். மேலும் எனது அனுமதி இல்லாமல் எனது வீட்டின் மேல் காமிராக்களைப் பொருத்தியிருந்தனர். ஆனால் அது உபயோகமாக இருந்தது என்பதை நான் ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அது குறைந்தபட்சம் என் வீட்டை யாரேனும் உடைக்கிறார்களா- ஏற்கெனவே பலமுறை முயற்சி நடந்துள்ளது- என்பதை நான் பார்க்க உதவும். அந்த காமிரா இப்போது உடைந்துள்ளது. அதை சரி செய்ய எனக்கு நேரமில்லை.  என் மகளின் குரலைக் கேட்க முடிகிறது: “அம்மா, உன் தைரியமே உன்னைக் கொல்லப் போகிறது. ஒரு நாள் நீ இறந்து கிடப்பதை நான் பார்க்கப் போகிறேன். நான் எனது பணத்தைச் சேமிக்காததால் என் சிகிச்சைக்காக நீ பணம் சேமித்துள்ளாய் என நினைக்கிறேன்”.

ஜூலை மாத மத்தியில் அவர்கள் கூட்டிய அவசரக் கூட்டம் ஒரு உதவாக்கரைக் கூட்டம். ஒரு திகிலான சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து அக்கம்பக்கத்தில் டி.வி. காமிராக்களும், கேபிள் டிவி மற்றும் பிற ஊடகத்தினர் வந்து குழுமியிருந்தனர். ஒரு இரவு நேர விருந்து முடிந்து அதிகாலை வேளையில் மூன்று இளம் பெண்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் வீட்டைக் கடந்து அவர்களது குடியிருப்புக்குச் செல்லும் போது காரிலிருந்து யாரோ ஒருவர் சுட்டார். அவர்களுக்கு தப்பி ஓடக் கூட நேரமில்லை. தெருவிலேயே அவர்கள் இறந்தனர். அவர்கள் இளம்பெண்கள். மூவருக்கும் 15 வயது தான் இருக்கும். அவர்கள் கைகளைக் கோர்த்தவாறு தங்களது மொபைல் போனில் செய்திகளைப் படித்தபடி நடந்து சென்றனர். அப்படித்தான் செய்தித்தாள் புகைப்படங்களில் காணப்பட்டனர். புத்தம் புதிய டென்னிஸ் ஷூ அணிந்தபடி, கால்சட்டைகளில் ரத்தம் தோய்ந்து, தட்டையான வயிற்றுப் பகுதி தெரிய ஒருவர் மீது ஒருவர் என நெருக்கமாக விழுந்து கிடந்தனர். ஒரு பெண்ணின் முகம் குண்டுகளால் சிதைக்கப்பட்டு மீதமிருந்த கண்களின் பாகம் மரத்தின் உச்சியை வெறித்தபடி இருந்தது. அவளுக்கு அடியில் கிடந்த மற்றவர்கள் அந்த இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். குடியிருப்புவாசிகளின் கூட்டம் நடந்தபோது கொலைகாரர்களின் அடையாளம் தெரியாவிட்டாலும் என்ன நடந்திருக்கும் என்பது புலப்பட்டது: இந்தப் பெண்களில் ஒருவர் ஏதேனும் குற்றவாளிக்கோ கொள்ளையனுக்கோ சில்லறை போதைப் பொருள் விற்கும் ஆசாமிக்கோ- பெரிய அளவிலான போதைப் பொருள் விற்பனையாளர் எங்கள் நாட்டில் இல்லை- அல்லது விபச்சார புரோக்கர் மகளாகவோ அல்லது அவர்களது நெருங்கிய உறவினராகவோ இருக்க வேண்டும். அந்த ஆள் யாரையாவது தாக்கியிருக்கவோ அல்லது பணம் தர வேண்டியதோ இருக்க வேண்டும். இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை தான். நாட்கள் செல்லச் செல்ல இந்த அனுமானம் உறுதியானது. அந்தப் பெண்கள் கொல்லப்பட்ட இடத்தைச் சுற்றி போலீஸின் மஞ்சள் தடுப்பரண் அமைக்கப்பட்டிருந்தாலும் அதனைச் சுற்றி மக்கள் மலர் வளையங்களையும் பூங்கொத்துகளையும் அட்டை இதய வடிவங்களையும் கரடி பொம்மைகளையும் வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஒரு நாள் மாலை பணி முடிந்து திரும்பும் போது நான் அவர்களைப் பார்த்தேன். எனது டாக்ஸி ஓட்டுநர் என்னை போலீஸ் தடுப்பிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்ட இடத்திற்கும் அப்பால் இறக்கிவிட்டுச் சென்றார். “லு, எப்போதும் உன் மீது அன்பு செலுத்துவோம்!!!” “நடாலிக்கு நீதி வேண்டும்”, “என் குட்டி தேவதையே சீக்கிரம் சென்றுவிட்டாயே” என எழுதப்பட்டிருந்தது. அவர்கள் நடந்து சென்ற போது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். மூன்று தலைகளும் நெருக்கமாக, புகைப்பட சட்டகத்திற்குள் பொருந்தியிருந்தன. அவர்களது வளையமிட்ட நாக்கு வெளியே நீட்டியபடி (பெண்கள் ஏன் தங்கள் நாக்கினை வெளியே நீட்டியபடி ஒயில் காட்டுகிறார்கள்) இருந்தது. அடுத்த படங்கள் உதடுகளை வாத்து போலக் குவித்து போலியான உணர்ச்சியுடன் இருந்தது. செய்தித்தாளில் வெளியான பெண்களின் புகைப்படங்கள்,  இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சேட்டில் அது விகாரமாகக் காட்சியளித்தது என்று என் மகள் கூறினாள். நாய் மூக்குகளையும் முயல் காதுகளையும் கொண்ட அந்தப் படங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவை எல்லாம் அந்தச் ‘செயலிகளின்’ செயல் என்று பிறகுதான் தெரிந்தது.

அந்தப் பேய் சிறுமிகள் சிரித்துக் கொண்டே நடந்தனர். அந்த இரவில் எனது அண்டை வீடு கைவிடப்பட்டது போல இருந்தது. பைத்தியம் பிடித்தது போல என் மகள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சித் தொடரில், அதில் நிறைய கதாபாத்திரங்கள் வருவதால் என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை (அதில் உள்ள வன்முறை மற்றவர்களை சங்கடப்படுத்தினாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை) வரும் ஒரு பெண் துறவி “இரவு இருளானதும் குலை நடுங்கச் செய்வதுமாகும்” என்று சொல்வாள். பேய் சிறுமிகளின் செல்போன் காமிரா வேலை செய்யவில்லை என்பதால் அவர்கள் சத்தமாக சிரித்தனர். அவர்கள் உயிரோடு இருக்கும் பதினைந்து வயது சிறுமிகள் போல வேலைகளை செய்ய முயற்சிப்பது தெரிந்தது: அவர்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறியாதவர்களாக, தங்கள் உடலுக்குப் பொருந்தாத சிறிய ஆடைகளை அணிந்தபடி, நீலம், பச்சை, கருப்பு என பல வண்ணங்கள் பூசிய தலைமுடி என அலங்கரித்திருந்தனர். பக்கத்து வீட்டின் சன்னல் கதவைத் திறந்ததில்  துப்பாக்கிச் சூட்டைக் கண்டது போல மௌனம் கலைந்தோடியது. அந்தப் பெண்கள் கடந்து சென்றதைப் பார்த்த அந்த வீட்டிலிருந்த ஒருவர் அலறினார். அவர்கள் என்னிடமிருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்தாலும் என்னால் தெளிவாகக் காண முடிந்தது. எனக்கு அது புரியவும் செய்தது. அவர்களில் ஒருவரின் கழுத்தில் ரத்தம் கசிந்தது. மெல்லக் கசிந்த அந்த ரத்தத்தை ஏதோ குடிவிருந்தில் ஒரு பையன் தெரியாமல் பீரை சிந்தியது போலவோ அல்லது மழைத்துளி வழிவதைப் போலவோ கவனமின்றித் துடைத்தாள் அவள். முகம் சிதைக்கப்பட்ட பெண் கவலை ஏதுமின்றி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். இருப்பதிலேயே சின்னவளின் அடிவயிற்றில் மூன்று சிவப்பு ஓட்டைகள் காணப்பட்டன. புற்றுநோயில் அவதியுற்ற என் தாயை அவர்கள் நினைவுபடுத்தியதால் மேற்கொண்டு பார்க்க நான் விரும்பவில்லை.

பிறகு அந்தச் சிறுமி தாங்கள் எடுத்த புகைப்படத்தைப் பார்த்தாள். அதில் அவர்கள் பார்த்த விஷயம் அவர்களை அழ வைத்தது. “இல்லை, இல்லை, இல்லை” என்று கூறியபடி தலையை ஆட்டினர். ஒருவரையொருவர் பார்த்தபடி புகைப்படங்களைப் பார்த்தனர். அதில் உறைந்த ரத்தத்தையும் வெள்ளை எலும்புகள் வெளித் தெரிந்த குண்டுக் காயங்களையும் குருட்டுக் கண்களையும் பார்த்தனர். பிறகு அவர்கள் ஓடத் தொடங்கினர். அந்தப் பேய் சிறுமிகள் விரக்தியில் வட்டமிட்டு சுற்றியது உண்மையில் பீதியூட்டுவதாக இருந்தது. இப்போதுதான் அவர்கள் இறந்துவிட்டதை உணர்ந்தார்களா? என்னவொரு அநியாயம். பொதுவாக இறந்தவர்கள் ஆவியாக வந்தால் கூட அவர்களது உடல் அழுகிப் போவதைப் பார்க்க முடியாத அளவு அதிர்ஷ்டம் கொண்டவர்கள். ஆனால் ஆத்மாக்கள் வெவ்வேறு வடிவம் கொள்கின்றன. அந்த வடிவங்கள் இறந்த அந்த மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிறதா அல்லது அவை எல்லாம் கூட்டுச் சேர்ந்து பார்க்கும் நம்மால் உருவகிக்கப்படுகிறதா?.

அண்டை வீட்டுக்காரர்களும் அலறத் தொடங்கினர். யாரோ ஒருவர் மூர்ச்சையாகி விழுந்துவிட்டதாகவும் ஆம்புலன்ஸ் தேவை என்றும் சொல்வது எனக்குக் கேட்டது. ஆனால் பொன் மஞ்சள் ஒளியில் அழுகிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்களின் உடல் அங்கு கிடக்கையில் யார் அழைப்பார்கள்? அவர்களில் ஒருவர், கழுத்தில் குண்டு பாய்ந்ததால் ரத்தம் ஒழுகிக் கிடந்த பெண், எனக்கு கரோலினாவை நினைவூட்டினாள். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அது அவளது உடையும் இல்லை. இந்தப் பெண் மலிவான மேல் சட்டையும்  கால் சட்டையும் (அது அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) அணிந்திருந்தாள். ஆனால் அந்தப் பெண் அணிந்திருந்த விதம் அந்த மலிவான ஆடை என் மகளின் எதிர்பாரா நினைவுகளைக் கிளறியது. (எதிர்பாராமல் என்று நான் சொல்வதற்குக் காரணம் எந்த வண்ணம் எதனுடன் சேரும் என்றோ, எந்த பேன்ட் கால்களை நீளமாகக் காட்டும் என்று அறிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் எனக்கில்லை). ஆமாம் அந்தப் பெண்ணின் லெக்கிங்ஸ் மலிவான கருப்பு லைக்ரா துணியால் ஆனது. ஆனால் அவள் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை அவளது பிருஷ்டத்தை மறைத்தபடி இருக்க, பெரிய காலணிகளை அநேகமாக ஆண்கள் அணிவது, அணிந்திருந்தது அவளை நகரத்து இளம்பெண் எனக் காட்டியது. அவளது காலணி நீல வண்ணம் கொண்டது. அவளது ரத்தம் தோய்ந்த கழுத்தில் அணிந்திருந்த விக்டோரியன் ஆரம் அவள் ஏழ்மை வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்பதற்கு முரணாக இருந்தது. நான் அவளைப் பற்றி விவரிக்கையில், என் மகளைப் பற்றி நினைத்துக் கொள்கிறேன். அவள் எப்போதும் தனது நாகரீக அடையாளங்கள் பற்றி சுருக்கமாக விளக்குபவள். எப்படியோ, அந்தப் பெண் கரோலினா பற்றி சிந்திக்கத் தூண்டியதால் நான் அவளையே அணுகினேன்.

உண்மையில் நான் பயந்து போயிருந்தேன். எனது இதயத் துடிப்பு எனது வயிற்றில் கேட்டது. மேலும் அந்த அளவு அச்சப்படும் வயது எனக்கு இல்லை. நெஞ்சுவலியோ சீரற்ற இதயத் துடிப்போ ஏற்படும் அபாயத்தில் இருப்பவள். அதுவுமின்றி பக்கத்து வீட்டாரும் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் என்னால் அந்தப் பெண்களை அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை. அவர்களை என்னால் சாந்தப்படுத்த முடியும் என்பது எனக்குத் தெரியும். மருத்துவமனையில் பத்தாண்டுகளுக்கு முன்பு முதல் ஆவியை ஆற்றுப்படுத்தியிருக்கிறேன் என்பதால் எனக்கு இது தெரியும் தானே. ஆனால் மருத்துவமனையில் அவை ஏராளம் இருக்கும். அது எனக்கு மிக அதிகம் தான். வெறித்தனம் என்பது மனிதர்களிடையேயும் ஆவிகளிடையேயும் நோய்த் தொற்றுப் போல பரவக் கூடியது. உண்மையில் அந்த நிகழ்வு ஒருபோதும் ஆராயப்படாது- ஒருவரும் இதை நம்பவும் மாட்டார்கள். நான் செய்யும் இந்த விஷயங்களைப் பற்றி சிந்திக்கும் போது எனக்கு ஹாலிவுட் தயாரிப்புகளில் தவறாகச் சித்திரிக்கப்படும் ஆவி மீடியம்கள் மற்றும் பேய் ஓட்டுபவர்களைப் பற்றி தொலைக்காட்சித் தொடர்களில் அவமானப்படுத்தப்படுவது நினைவு வந்தது. படைப்புத் திறன் சிக்கலாலும் பொருளாதாரச் சிக்கலாலும் மோசமான நடிகர்களாலும் மோசமான திரைக்கதையாலும் அறியாமையில் எடுக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள் குறைந்தபட்சம் பொழுதுபோக்காகக் கூட இல்லை. ஆனால் நான் அதுவல்ல, ஆனால் ஒரு வகையில் நான் அது கூடத் தான்.

நான் அந்தப் பெண்களை பெயர் சொல்லி அழைத்தது என்னை அவர்கள் திரும்பிப் பார்க்க வைக்கப் போதுமானதாக இருந்தாலும் அவர்களின் அலறலை நிறுத்தப் போதுமானதாக இல்லை. அதற்காக நான் அவர்களிடம் பேச வேண்டியிருந்தது. அந்தப் புகைப்படங்களை அழிக்கும்படி கூறினேன். அந்தச் சொல்லுக்குக் கட்டுப்படுவது எப்போதும் போல அவர்களுக்குக் கடினமாக இருந்தது. பின்னர் அவர்களை நகர்ந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். சிறிதாக சிரிப்புக் கூட்டினேன். துணிகளைப் பற்றி அவர்களிடம் பேசினேன். அவர்கள் கலந்து கொண்டு வந்த இரவு விருந்தைப் பற்றிக் கேட்டேன். கொலை செய்யப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. நினைவுக் குறிப்புகளையும் போலீஸ் தடுப்புகளையும் பார்த்ததும் அவர்களின் ஓலம் அதிகமானது. ஆனால் உடனே அவர்களது முனகல் விம்மலாகக் கரைந்தது. கட்டியணைத்தல், சுயபச்சாதாபக் கண்ணீர் விடல் என மாறிய அப்பெண்களும் மறைந்தனர். முற்றிலும் இல்லாமல் கரைந்து போயினர். அவர்களது தோற்றம் மதுவைப் போல காற்றில் ஆவியானது.

போலீஸ் தடுப்பரணுக்கு அருகே ஒரு நொடி நான் உட்கார வேண்டியிருந்தது. எனது பக்கத்து வீட்டுக்காரர் ஜூலியோ விரைவில் வெளியே வந்தார். ஜூலியோ மிகவும் நட்பானவர். எங்கள் அண்டை வீட்டின் அருகே அழகிய குடியகம் அமைத்திருந்தார். ஆனால் வாடகை அதிகம் என்பதால் அவரால் அதை நடத்த முடியவில்லை. மதுவும் உணவும் மிக விலை அதிகமாகவும் வாடிக்கையாளர்கள் குறைவாகவும் இருந்த காரணத்தால் உணவகம் மற்றும் குடியகம் நொடிந்து போனது. அது என்னை எல்லையில்லா சோகத்தில் ஆழ்த்தியதால் தான் அவரது தகுதிக்கு மீறிய அளவிற்கு ஜூலியோ மீது பேரன்பு செலுத்தினேன்.

“என்ன செய்யறீங்க டாக்டர்?”

“நான் எம்மா, ஜூலியோ. தயவு செய்து என்னை எம்மா என்றே அழை”

“என்ன செய்யறீங்க எம்மா?”

அந்தக் கேள்வி வாரக்கணக்கில் திரும்பக் கேட்கப்பட்டது. என்ன நடந்தது என்பதைப் பார்த்தவர்களிடையே ரகசியக் கூட்டங்கள் நடந்தன. பின்னர் சம்பவத்தை நேரடியாக பார்க்காதவர்களும் அந்தக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அங்கே ஏராளமான அவநம்பிக்கை இருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் என்னை உலுக்கி எடுத்தார்கள். நான் என் அம்மாவைப் பற்றி அவர்களிடம் கூறினேன். மேரி என் கதையைக் கேட்பதாக உறுதியளித்தாள். ஆனால் அந்த ஓலம் கேட்டபோது அது டி.வி.யில் இருந்து வந்த சப்தம் என்று பொய் சொன்னதற்காகத் திட்டினாள்.

“மேரி, நான் என்ன சொல்லியிருக்க வேண்டும் என விரும்புகிறாய்?”

நானும் தான் பயந்து போயிருந்தேன். எனக்குப் பித்துப் பிடித்துவிட்டதாக நினைத்தேன்.

அது முழுதும் உண்மையல்ல. ஒரு நபருக்கு, தான் எப்போது பைத்தியம் ஆவோம் என்பது தெரியும்; அது ஓரிரவில் நடைபெறாது. அவ்வளவு ஏன், விபத்திற்குப் பின்பு கூட அப்படி நடைபெறாது. உடலில் எல்லாமே ஒரு செயல்முறை தான். மரணம் கூட.

அண்டை வீட்டினர் என்னை ரகசியமாக வந்து சந்திக்கத் தொடங்கினர். பேய்கள் எனும் தொற்றுநோய் அண்டை வீடுகளில் மிக வேகமாக எழுந்து வந்தது. அந்த மூன்று பருவப் பெண்களைக் கொல்ல ஆணையிட்ட யாரோ ஒருவர்தான் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் நடத்துபவர். அது மட்டுமல்ல அங்கு நடைபெறும் மோசடிகள் விரைவில் ஆள் கடத்தல் அளவுக்குச் சென்றுவிட்டது. ஒரு குறிப்பிட்ட வகையான ஆள் கடத்தலை அவர்கள் ‘எக்ஸ்பிரஸ்’ என அழைக்கிறார்கள். கடத்தல்காரர்கள் ஆட்களை காரில் கடத்தி ஒரு பணம் எடுக்கும் இயந்திரத்திற்கு இழுத்துச் சென்று அவர்கள் கேட்கும் தொகையை எடுத்துத் தருமாறு அச்சுறுத்துவர். சில நேரங்களில் கடத்தலானது அடித்தல், கற்பழிப்பு, துப்பாக்கியால் சுடுவது என வன்முறையாக மாறிவிடும். இந்தத்  திருடர்கள் பெரும்பாலும் வேலையில்லாத இளைஞர்கள் என்பதால் அவர்களிடம் வங்கிக் கணக்கும் இல்லை. அர்ஜென்டினாவில் சில வங்கிகள் ஒரு நாளைக்கு குறைந்த அளவு பணமே, நாளொன்றுக்கு 1500 பெசோஸ் எடுக்க அனுமதிக்கின்றன.  வங்கி வாடிக்கையாளராக இருந்தால் மட்டுமே இரு மடங்கு தொகையை எடுக்கலாம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்கு பல கணக்குகள் இருந்தால் அவை எல்லாவற்றிலும் இருந்தும் உங்களால் அதிகப் பணம் எடுக்க முடியும். ஆனால் அப்படி இல்லை என்றால் அதிகம் பெற முடியாது. திகிலும் பரபரப்பும் கொண்ட பையன்களான அந்த திருடர்களுக்கு அதிகம் தேவைப்பட்டது. மேலும் தங்களிடம் பொய் சொல்லப்படுவதாக அவர்கள் நினைத்தனர். தாங்கள் கடத்தியவர்கள் தங்களை ஏமாற்ற நினைப்பதாகக் கருதினர். “என்னைப் பார்த்தால் இளிச்சவாயன் போல உனக்குத் தெரியுதா? நான் யார்னு காட்டறேன்.” பின்னர் ஒரு குத்து, முகத்திற்கு நேர துப்பாக்கியின் குறி, பீதி சூழ்கிறது. அவர்கள் இது வரை எனக்கு அதைச் செய்யவில்லை என்றாலும் அது நிறையவே நிகழ்கிறது. இந்தக் குடியிருப்பில் உள்ள அனைவருமே குற்றவாளிகள் அல்லர். இக் குடியிருப்பில் நான் ஒரு வீடு வைத்திருப்பதைப் போல அவர்களும் அங்கே ஒரு வீடு வைத்துள்ளனர். அதைவிட்டுச் செல்ல அவர்கள் விரும்புவதில்லை. அவ்வளவுதான்.

முதல் பக்கத்து வீட்டுக்காரர் வந்தபோது நான் என் அம்மாவுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். சில நேரம் அவளுடன் நான் பேசுவேன். அவள் பேசாவிட்டாலும் அவள் அங்குதான் இருப்பாள். என்னைப் பார்த்து சில சமயம் தலையாட்டுவாள். அவள் கோபமாக இல்லாவிடில் சிரிப்பாள். அவள் பேசினால் எங்களுக்குள் நிறைய வேடிக்கைப் பேச்சுகள் இருக்கும். நான் எனது தோழிகளை வீட்டிற்கு அழைக்கமாட்டேன். ஏனென்றால் என் அம்மா அவர்களுக்கு முன் தோன்றக் கூடும் என்பதால் தான். என் மகள் எப்போதாவது தான் வருவாள். அது அவள் தவறில்லை. ஏனென்றால் அவளுக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. இந்த நாட்டில், அவள் நிறைய சம்பாதிக்க வேண்டும். உங்களது வேலை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. ஆட்குறைப்பு செய்வதாகக் கூறும் உத்தரவு திடீரென வரலாம். அடுத்த வேலைக்காக நீங்கள் வருடக்கணக்கில் காத்திருக்கலாம். அதற்குப் பதிலாக வருமுன் காப்போம் என்று சேமித்து வைக்க வேண்டும். நானும் அவளும் தொலைபேசியில் பேசுவதுடன் இணையத்தில் அரட்டையும் அடிப்போம். அவளுக்கு அவளது பாட்டி பற்றித் தெரியாது. அவளிடம் அது பற்றிக் கூற முடியும். ஆனால் ஏன் சொல்ல வேண்டும்? இப்போதைக்கு எந்தத் தேவையும் இல்லை.

என்னைச் சந்தித்த முதல் பக்கத்து வீட்டுக்காரர் பவுலோ தான். அவருடைய இரண்டு சிறு பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். அவரது மனைவிக்கு நரம்புச் சிக்கல் நோய் உள்ளது. அவளுக்கு பீதியில் வலிப்பு ஏற்படும். பவுலோவின் சகோதரர் அமெரிக்காவில் இருக்கிறார். குடியிருப்புவாசிகள் கூட்டத்தில் அமெரிக்காவில் மக்கள் எவ்வளவு நன்றாக வாழ்கிறார்கள் என்றும் அந்த நாடு எவ்வளவு பாதுகாப்பானது என்றும் தொடர்ந்து அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அவர் கூறுவதை நான் திருத்தம் செய்யமாட்டேன். ஏற்கனவே சொன்னது போல எப்போதும் நான் வாதம் செய்யமாட்டேன். அவரது பிரச்சினையைப் பற்றிச் சொல்லும் முன் நிறைய சுற்றி வளைத்துப் பேசுவார். அவர் புகைப் பிடிக்கலாமா என்று கேட்டதும் நான் அனுமதி அளித்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாக, “நிறைய மருத்துவர்கள் புகைப்பிடிப்பார்கள் என்பது தெரியுமா? நிறைய மன அழுத்தங்கள்” என்று சொன்னேன்.

பவுலோவின் பிரச்சினை: மூன்று மாதங்களுக்கு முன் ஒரு நாள் ஒருவன் அவரது வீட்டில் புகுந்தான். மேற்கூரை வழியாகத்தான். அவன் ஒரு திருடன் என்பது அவருக்குப் புரிந்தது. ஏனென்றால் அவன் .22 கைத் துப்பாக்கி வைத்திருந்தான். உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் தனது மனைவி, மகள்களை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு ஒரு சுத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு- அவரால் துப்பாக்கி வாங்க முடியாததால் தான்- போலீஸை தொலைபேசியில் அழைக்கத் தொடங்கினார். பின்னர் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து அந்தத் திருடன் தவறி விழுவதை அவர் கண்டார். அவர் இதைப் பற்றிக் கூறியபோது எனக்கு அந்தச் சம்பவம் நினைவு வந்தது. ஒன்பதாவது மாவட்டத்தில் உள்ள காவல்துறையிடம் பாதுகாப்பிற்கு நிறைய போலீஸ் போட வேண்டும் என கோரிக்கை விடுக்க முடிவு செய்த என் குடியிருப்புவாசிகளிடையே இந்தச் சம்பவம் பற்றிப் பேச்சுகள் இருந்தன. கீழே விழுந்த திருடன் இறந்திருந்தான். அவனை சாக விட்டுவிட்டாயா என நான் பவுலோவைக் கேட்கவில்லை என்றாலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஆம்புலன்ஸ் நேரத்திற்கு வந்திருந்தால் அவன் பிழைதிருக்கக் கூடும். ஜன்னலில் இருந்து விழுந்த திருடன் செத்துக் கொண்டிருப்பதை, கண நேரக் கடவுளென மாறி, ஒரு மனிதனின் விதியை சமைப்பவன் போல பவுலோ பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. எனது குடும்பமும் இது போல் அச்சுறுத்தப்பட்டால்  நானும் இதையே செய்திருப்பேனா? செய்திருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் ஆபத்தில் இல்லாதபோது உங்களால் நெறிமுறைகள் பற்றிப் பேசுவது எளிதானது தான். ஆனால் நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். நான் நேர்மையானவள் என நினைக்கிறேன்.

எப்படியோ அது நிகழ்ந்துவிட்டது. திருடன் மறுபடியும் வந்தான். அவன் கூரை மீது நடப்பதை பவுலோவின் மனைவி கேட்டாள். பவுலோ அவளை நம்பவில்லை. அவள் நரம்புச் சிக்கல் நோயால் அவதிப்படுபவள் தானே. அந்தக் காலடிச் சப்தத்தை அவரே கேட்கும் வரை நம்பவில்லை. அந்தக் கொள்ளையன் வீட்டின் உள் முற்றத்தில் மீண்டும் விழுவதை அவர் பார்த்தார். சத்தமில்லாமல் அந்தப் பேய் திருடன் அதைச் செய்தான். நடப்பதும் விழுவதும் நடப்பதும் விழுவதும் என கீழே விழுந்தவன் பயங்கரமாகச் சிரித்தான் என்றார் பவுலோ. ஒரு நாள் இரவு நான் அங்கு செல்வதற்கு ஒத்துக் கொண்டேன். தனக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் பற்றி என்னிடம் காட்டுவதற்கு அவர் மனைவி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டாள். பொதுவாகச் சொன்னால் அவை மிக அதிகம் என்றாலும் தற்கால மருத்துவர்கள் தேவைக்கு அதிகமாகவே மருந்து மாத்திரைகளை எழுதித் தருகிறார்கள். பவுலோவும் அவரது மனைவியும் கொத்திறைச்சியுடன் உருளைக்கறி கொண்ட இரவு உணவிற்காக என்னை அழைத்தனர். ஆனால் நான் ஏற்கனவே வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன். நான் காத்திருந்தேன். நல்ல வேளையாக குழந்தைகள் படுத்த பின்பே அந்தக் காலடிச் சத்தம் கேட்டது. அவனது இரவு நடை முடிந்து அந்தப் பேய் கீழே விழுந்த பின்பே என் வேலை துவங்கும் என முடிவு செய்தேன்.

அவரை திசைதிருப்ப சில மணித் துளிகளே எடுத்துக் கொண்டேன். நான் என்ன சொன்னேன் அல்லது என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல. எல்லாம் இயந்திரத்தனமாய் நிகழும் ஒரு கணம் அங்கிருந்தது. அமைதியற்ற ஆவியை நான் எதிர்கொள்வது இது மூன்றாவது முறையாகும். ஆனால் உண்மையில் என் தாய் மற்றும் கொல்லப்பட்ட சிறுமிகள் ஆகியோரை பலமுறை நான் அமைதிப்படுத்தி உள்ளேன். அந்த ஆவிகளை நான் எங்கும் அனுப்புவதில்லை. அமைதியுமில்லை முடிவுமில்லை. எந்தச் சமரசமும் இல்லை. வேறு பக்கம் செல்ல எந்த வழியும் இல்லை. எல்லாமே கற்பனை. மற்றவர்களின் வாழ்வில் தங்கள் செயல்கள் மூலம் கிலியை ஏற்படுத்தும் அந்த ஆத்மாக்களை நான் ஆற்றுப்படுத்துகிறேன். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் மறந்தது போலத் திரும்பவும் வரத்தான் செய்கிறார்கள். அது ஏன்? நானும் எனது கணவரும் திருமணமான புதிதில் எங்களிடம் இருந்த அழகான சிறிய கருப்பு மூக்கு கொண்ட பூனையை வளர்த்தோம். அதற்கு வார இறுதியில் சூரை மீன் போடும் போது ஆச்சரியமாகப் பார்க்கும். அதற்கு ஏதாவது ஞபாக மறதி பிரச்சினை உள்ளதா என நான் வியந்தபோது, “இல்லை, அதற்கு மிகச் சிறிய மூளையே உள்ளது. அதன் தலை எவ்வளவு சிறிதாக உள்ளது என்பதை நீ பார்க்கவில்லையா?” என்று என் கணவர் சொன்னார். ஆனால் அவளது முகம் புத்திசாலித்தனம் மிக்கதாகத் தோற்றமளிக்கும்! பேய்களும் அதைப் போலச் சிறியவைதான். அவை மனிதர்களைப் போன்றும் புத்திசாலித்தனமாகவும் தோன்றினாலும் அவை ஒரு மனிதனின் ஒரு பகுதியைப் போல தான் செய்ததை திரும்பத் திரும்பச் செய்யும். அவற்றுக்கு மூளை கிடையாது. ஆனால் அவை சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் ஏதோ ஒன்று உள்ளது. அது எனது பூனையைப் போல சிறியது தான். அவள் பெயர் ஃபுளோரன்ஸியா. தினமும் எனக்கும் என் கணவருக்கும் இடையில் படுத்துத் தூங்குவாள். நான் என் கணவரைப் பிரிந்தது வருத்தமளிக்கிறது. ஒரு கணவனை அல்ல, அவரது நட்பை, உரையாடலை, அவரது உணவை இழந்து தவிக்கிறேன். ஆனால் அவர் யார் மீதாவது அன்பு செலுத்த வேண்டும். நான் தனிமையை விரும்புகிறேன்.

திருடனின் ஆவிக்குப் பின் மற்றவர்கள் வந்தனர். “ஏன் இந்த ஊடுருவல்?” என்று நான் என் அம்மாவைக் கேட்டேன். அவள் அதைக் கவனமாகக் கேட்டாள். ஆனால் எனக்குப் பதிலளிக்கவில்லை. அவளால் முடியாது. ஆனால் எனக்குப் பதில் தெரியும். அந்த ஊடுருவல் குடியிருப்பிற்குள் நிகழ்ந்தது அல்ல. அது எனக்குள் நிகழ்ந்தது. நான்தான் அவற்றைக் கவர்ந்திருக்கிறேன். அதனால்தான், எனது ஈர்ப்புச் சக்தியிலிருந்து எப்படி விட்டு விலகுவது என அறியும் முன் இந்த இடத்தை விட்டு அகல்வது என்பது அறிவுடைமை ஆகாது எனத் தெரிந்தது. ஆனால் உண்மையில் அது என்னைக் கவலைப்படச் செய்யவில்லை. அச்சம் பீதியாக மாறியது. எந்த அண்டைவீட்டாரும் என் கதவுகளை நீண்ட நாட்களாகத் தட்டாதது என்னை பொறுமை அற்றவளாக்கியது. ஆனால் இந்தக் கதைக்கு முக்கியமான ஆவி ஒன்றுடன் நான் வித்தியாசமாக நடந்து கொண்டேன். அதற்கு உதவ முடியவில்லை. அல்லது உதவ விரும்பவில்லை. அல்லது அண்டை வீட்டாருக்கு நான் உதவுகிறேனா? இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தது தான்.

எனது மகளின் பிறந்தநாள் டிசம்பர் 23. நாங்கள் அதிகம் பார்த்துக் கொள்வதில்லை என்பதால் அந்த வருடம் என்னை விருந்திற்கு அழைத்திருந்தாள். நான் விரும்பினால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை தன்னோடு கொண்டாடுமாறு என்னை அழைத்தாள். நான் புத்தாண்டு கேளிக்கை விருந்துக்கு அழைக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியுமாதலால் கிறிஸ்துமஸ் விழாவிற்கும் அதன் பிறகு ஒரு சில நாள் தங்குவதற்கு மட்டும் நான் ஒப்புக் கொண்டேன். எனது காரை நான் வெகு நாட்களுக்கு முன்பே விற்றுவிட்டதால் ஒரு டாக்சியில் எனது துணிப்பையுடன் சென்றேன். நான் வயதானவள் இல்லை என்றாலும் ப்யூனஸ் அயர்ஸில் காரோட்டும் அளவிற்கு நான் இளமையானவள் இல்லை. என் மகளுடன் நான் கழித்த நாட்கள் இனிமையானவை. நாங்கள் அதிகம் சண்டையிடவில்லை. ஆனால் அதிகமாகச் சிரித்தோம். அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தோம். அதில் வரும் நெட்ஸ்டார்க் இதுவரை நான் பார்த்திராத ஓர் ஆண்மகன். சதுர தாடையும் காட்டு மிருகம் போன்ற முதுகும் கொண்ட அவன் மீது மையல் கொண்டேன். அதுவுமின்றி என்னைவிட அதிகபட்சம் பத்து வயதே இளையவராக இருக்க வேண்டும் என நான் அனுமானித்தேன். ஓர் இரவு, நகரின் ஈரப்பதமிக்க வெம்மைக்கும், திணறடிக்கும் காற்றுக்கும் தோதான ஒரு வெள்ளை ஒயின் போத்தலைத் திறந்து பருகும் போது, இந்த முதிய வயதில் நான் பெற்றுள்ள ஆன்மிக ஞானம் பற்றி மகளிடம் ஏறத்தாழ கூறவிருந்தேன். எல்லாம் மிகக் கச்சிதமாக அமைந்த ஒரு சந்திப்பை நான் கெடுத்துவிட இருந்தேன். எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது என அவள் நினைப்பதற்கு எல்லா சாத்தியமும் இருந்தது. 29 ஆம் தேதி மதியம் நான் சுரங்க ரயில் மூலம் வீடு திரும்பினேன். தரைத் தளத்தின் மீது நகரைக் கடப்பது ஒரு அபத்தமான யோசனையாகப்பட்டது. ஆண்டு இறுதிப் போராட்டங்களைத் தவிர மேலும் பல போராட்டங்கள் நடந்தன. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிப் போராடினர்; மறியல் செய்தவர்கள் வீதிகளை மறித்து உணவு கேட்டனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர் துறை அமைச்சகம் முன்பு மீண்டும் வேலை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு மேலதிகமான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றம் முன் பேரணி நடைபெற்றது.

ஒரு இளைஞன் படுகொலை செய்யப்பட்டான். இத்தாலியில் கடைசிப் பெயர் கொண்ட பதினேழு வயது ஸ்பானிய இளைஞன். அவன் கடத்தப்பட்டிருந்தான். ஒரு எக்ஸ்பிரஸ் கடத்தல். ஆனால் அந்த இளைஞன் மைனர் என்பதால் அவனிடம் ஏடிஎம் அட்டை இல்லை. அதனால் கடத்தல்காரர்கள் தங்களது திட்டத்தை மாற்றிவிட்டு அவனது குடும்பத்தாரிடம் பணம் பறிக்க முடிவு செய்தனர். அந்தக் குடும்பத்திடம் போதுமான பணம் இல்லை. அந்த இரவில், அந்தப் பையனை எங்கே கொண்டு செல்வது எனத் தெரியாமல் தங்கள் காரிலேயே  கடத்தல்காரர்கள் வைத்திருந்தனர். பையன் தப்பித்துச் சென்றான். அவன் வெகுதூரம் செல்லவில்லை. எங்கள் குடியிருப்பு அருகே வடக்குப் பக்கம் இருந்த, ஒரு காலத்தில் விளையாட்டுத் திடலாகவும் பின்னர் காலி நிலமாகவும், பின்னர் ஆக்கிரமிப்பாளர்களின் இடமாகவும் மாறி, சேரியாகிப் போன இடத்தில் கடத்தல்காரர்கள் அவனைச் சுட்டனர். அரசு அதிகாரிகள் அங்குள்ள மக்களை வெளியேறுமாறு தொடர்ந்து அச்சுறுத்தியும் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அவர்கள் அனைவரும் எங்கே செல்வார்கள்? அதுவுமின்றி சில சிறிய வீடுகள் நன்றாகக் கட்டப்பட்டு இரண்டு மாடிகள் வரை கட்டப்பட்டுவிட்டன. நீண்ட நாளுக்கு முன் நான் உணவு வாங்க அவ்வழியே சென்றபோது ஒரு செய்தித் தாள் கடையும், ஐஸ்கிரீம் கடையும் திறக்கப்பட்டிருந்தது. போலீஸ்காரர்கள் சந்தேகப்படும் படியான சில நபர்களை சேரியிலிருந்து கைது செய்தாலும் கடத்தல்காரர்கள் அவர்களில் எவரும் இல்லை. இது போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தொலைக்காட்சியில் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இது போன்ற கொடூரக் கொலைகள் நடக்கும் போது என் நாட்டில் இவ்வாறுதான் பொங்குவார்கள்.

இந்தக் குற்றச் சம்பவம் எங்கள் குடியிருப்பு அருகில் நடந்தும் கூட அவர்கள் அவசரக் கூட்டம் நடத்தாதது புதிராக இருந்தது. நான் சில நாட்கள் காத்திருந்தேன்- ஒரு தொலைபேசி செய்தி அல்லது என் வீட்டுக் கதவில் ஒட்டப்பட்ட ஒரு துண்டுச் சீட்டு- ஒன்றுமில்லாமல் அமைதியாக இருந்தது. மளிகைக் கடையில் ஒருவிதப் பரபரப்புடன் சிகரெட்டுகள் வாங்கப்பட்டன. இதை நான் பதற்றத்திற்கு தொடர்புபடுத்திக் கொண்டாலும் இது என் குடியிருப்புவாசிகளின் வழக்கமான எதிர்வினை இல்லை; அவர்கள மிகவும் பதற்றத்துடன் உணர்ச்சி பொங்கக் கத்துவார்கள்.

என் வீட்டின் கதவு தட்டப்பட்டதில் நான் கண் விழித்தேன். கடிகாரத்தைப் பார்க்காமலேயே நள்ளிரவு தாண்டிவிட்டது எனத் தெரிந்து கொண்டேன். என் இளம் வயதில் இருந்தே நான் விடியற்காலையில் தான் படுக்கைக்குச் செல்லும் பழக்கம் கொண்டவள். என்னை விடாது துரத்தும் ஒரு பழக்கம் இது. கதவு மென்மையாகத் தட்டப்பட்டது. யாரோ வெளியே இருக்கிறார்கள். அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடிவு செய்தேன். ஆனால் அந்தச் சப்தம் தொடர்ந்தது. தாள லயத்துடனும் அழுத்தமாகவும் அவசரகதியில் உயர்ந்து வருவதாகவும் அந்தச் சப்தம் ஒலித்தது. அந்த ஆள் இப்போது கதவை உடைப்பது போலத் தட்டத் தொடங்கினான். நான் பயந்து போனேன். எனது படுக்கை அறைக் கதவைத் தாழிட நினைத்தேன். ஆனால் அந்தக் கதவைத் தாழிட முடியவில்லை. எனக்கும் உள்ளே வர முயற்சிக்கும் நபருக்கும் இடையே எதை வைத்துக் காத்துக் கொள்வது? மேரியை அழைக்க வேண்டுமா? படுக்கையில் அமர்ந்து கிசுகிசுப்பான பேச்சை கேட்டபோது என் உள்ளங்கை வியர்வை குளிர்ந்து போனது. ஆனால் அதே நேரம் நான் அமைதியானதற்குக் காரணம் தட்டியவர் உண்மையான மனிதர் அல்ல என்பதுதான். அவரது மென்குரல், கெஞ்சல் முன்பக்கம் இருந்த என்னை வந்தடையவில்லை. “தயவு செய்து திறந்துவிடுங்கள்” என்றார் அவர். அவர் மிக மரியாதையாகப் பணிவாகப் பேசினார். “அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். நான் உங்களைக் கொள்ளையடிக்க வரவில்லை. நான் திருடன் கிடையாது. அவர்கள் என்னைக் கடத்திவிட்டார்கள். தயவுசெய்து உள்ளே வர அனுமதியுங்கள். இல்லாவிடில் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள். என்னைக் கொன்று விடுவார்கள்!”

நான் மாடிப்படியில் வேகமாக இறங்கிச் சென்று ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அந்தப் பையன் சுவற்றோர நடைபாதையில் இருந்தான். உயரமான பதின்ம வயது பையன் என்பது தெருவிளக்கு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. அவன் கோடை காலத்திற்கேற்ப வெள்ளை டி சர்ட்டும் ஓடுவதற்கான காலணியும் அணிந்திருந்தாலும் இறந்துபோனவர்களைப் போல வெளுத்துப் போயிருந்தும் கூட அவனது காயங்களை என்னால் பார்க்க முடியவில்லை. அவன் எங்கே சுடப்பட்டான்? என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. என் மகளுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்த வேளையில் நான் டிவி மற்றும் செய்திகளில் இருந்து என்னைத் துண்டித்துக் கொண்டேன். எனவே இத்தாலிய கடைசிப் பெயர் கொண்ட மட்டியாஸ் என்ற இந்தப் பையன் என் வீட்டிலிருந்து சில கட்டிடம் தள்ளிக் கொலை செய்யப்பட்டுள்ளான். அவன் எப்படி இறந்தான் என்று எனக்குத் தெரியவும் இல்லை, ஏன் என் கதவைத் தட்டுகிறான் என்றும் தெரியவில்லை.

ஆனால் என்னால் ஊகிக்க முடிகிறது. எனது அண்டைவீட்டாரின் மௌனம் இதனுடன் தொடர்புடையதா? உண்மையாகத் தான் இருக்கும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

என்னைப் பார்த்ததும் அந்தப் பையன் கதவைத் தட்டுவதை நிறுத்திக் கொண்டான். ஜன்னலருகே வந்த அவன் கண்கள், உயிரோட்டத்துடன் ஒரு பொன் வண்டைப் போல மின்னின. அதில் வஞ்சமும் வெறியும் தெரிந்தது. இந்த லௌகீக உலகில் அவனால் பழிவாங்க முடியாது என்பதால் நான் அவனைக் கண்டு அஞ்சவில்லை. ஆனால் செயல்பட முடியாமையின் அதிருப்தி அவனது வெறித்தனத்திற்கு தூபமிட்டது. அவனுக்கு இருக்கும் நேரமெல்லாம் இங்குதான் செலவழிக்கப் போகிறான். அந்தப் பையன் உலகில் உள்ள எல்லா நேரத்தையும் தனதாக்கிக் கொண்டானோ என சந்தேகிக்கிறேன். தெருவில் மேலும் கீழும் ஓடினான். அவனைக் கொலை செய்ய உதவிய மக்களை அவன் ஒருபோதும் உறங்க விடப்போவதில்லை.

“நீங்க கதவைத் திறக்கப் போவதில்லையா?” என்றான். உயிரோடிருப்பவர்களைப் போல அவனது குரல் பெரிய வித்தியாசமின்றி தெளிவாக இருந்தது. அதன் பின் அவன் மரியாதையாகப் பேசவில்லை.

கதவருகே சென்ற நான் சாவியைத் திருகி கதவைத் திறந்தேன். மட்டியாஸ் கதவருகிலேயே நின்றான். பின்னர் தாடையில் இருந்த ஓட்டையைப் பார்த்தேன். அது ஒரு மச்சம் போல சிறியதாக இருந்தது. அதில் ரத்தம் கசியவில்லை. மருத்துவமனையில் நான் வழக்கமாகப் பார்க்கும் தற்கொலைகளை அது நினைவூட்டியது. பெரும்பாலானோர் இவனைப் போன்ற வயதுடைய ஆண்கள். அனைவரும் சரியான துப்பாக்கிச் சூட்டுடன் வருவதில்லை. பெரும்பாலும் முகம் சிதைந்து அல்லது துப்பாக்கியை வாயில் வைத்துச் சுட்டுக் கொள்வார்கள்.

“இது மிகத் தாமதம்” என்றான் அவன்.

அவனை என்னால் ஆற்றுப்படுத்த முடியாது எனத் தெரிந்திருந்ததால் “அன்றிரவு நான் வீட்டில் இல்லை! தெரிந்து கொள். இருந்திருந்தால் உன்னை உள்ளே விட்டிருப்பேன்” என்று உரக்கக் கூறினேன்.

“அப்படியா? உன்னை நான் நம்ப மாட்டேன்” என்றான்.

ஒரு உரையாடலால் இத்தாலிய கடைசிப் பெயரைக் கொண்ட மட்டியாஸிடம் பேசித் தீர்த்திருக்க முடியும். மற்றவர்களிடம் இருந்து அவனை வேறுபடுத்திக் காட்டுவது என்ன? திறந்து கிடக்கும் கதவின் அருகில் நின்ற நான் அவன் திரும்பச் செல்வதை நோக்கினேன். அவன் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு கதவைத் தட்டியபடியே சென்றான். முதலில் மெதுவாகவும் பின்னர் முஷ்டியால் குத்தியபடியும் இறுதியில் எட்டி உதைத்தவாறும் சென்றான். மக்களிடம் அமைதியாகப் பணிவாக கதவைத் திறக்குமாறு ஆரம்பித்த அவன் இறுதியில் அச்சத்தாலும் வெறுப்பாலும் சினத்தாலும் அவமதித்துப் பேசுவான். எனது குடியிருப்புவாசிகள் விளக்கை எரியவிட்டாலும் யாரும் கதவைத் திறக்கவில்லை. ஒரு மனிதர் முனகுவதை நான் கேட்டேன்.

சூரியன் உதயமாகும் வரை கதவைத் தட்டிக் கொண்டே இருந்தான் சிறுவன் மட்டியாஸ். அதன் பிறகே நான் உள்ளே சென்றேன். அவன் ஒரு வீட்டைக் கூட விடவில்லை. அவர்களுக்குத் தகுதியானதை அவர்கள் பெற்றார்கள். அவனது இத்தாலிய கடைசிப் பெயரை நான் இணையத்தில் தேடினேன். கிரிமோனெஸி. மட்டியாஸ் கிரிமோனெஸி. அவன் உயர்நிலைப் பள்ளி மாணவன்; கூடைப்பந்து வீரன். அவன் உயரத்திற்கு அவனை சேரிப் பகுதியில் பார்த்தவுடன் சுட்டுள்ளனர். கொலைகாரர்களில் ஒருவன் பிடிபட்டான். அந்தப் பையன் தங்களது முகத்தைப் பார்த்துவிட்டு தப்பித்ததால் மற்றொருவன் தனது துப்பாக்கியால் சுட்டதாகவும் பிடிபட்டவன் கூறினான். அதுவுமின்றி அவர்கள் ஒருவரையொருவர் முன்னமே அறிந்திருந்தனர். அண்டை வீட்டாரை ஏன் கொல்ல வேண்டும்? பத்தொன்பது வயதே ஆன கடத்தல்காரன், அது தங்களுடைய நோக்கம் இல்லை என்றும் அவனிடமிருந்து ஏடிஎம் மூலம் பணம் பறிக்கவே கடத்தியதாகவும் கூறினான். “ஆனால் அவனிடம் ஏடிஎம் அட்டை இல்லை என்றான். நாங்கள் சரியான மனநிலையிலேயே இல்லை.”

அன்று மதியம், மதுவிடுதி நடத்தி நொடிந்து போன எனது பக்கத்து வீட்டு ஜூலியோ என்னை சந்திக்க வந்தார். குடியிருப்புவாசிகள் ஜூலியோவை அனுப்பக் காரணம் எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதால் தான். கொள்ளையன் கீழே விழந்து இறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த பவுலோவைப் போல ஜூலியோ தயங்கவில்லை. அவர் நேரடியாக விசயத்திற்கு வந்தார். அவருக்கு குற்றவுணர்வு ஏதும் இல்லை என்றார். அவர்கள் எல்லோரும் அன்றிரவு அந்தப் பையனின் குரலைக் கேட்டுள்ளனர். அது திருட வந்தவனின் தந்திரம் என்றும் துரத்தப்படுவது போல நடித்து யாராவது வீட்டினுள் நுழைய முயற்சிக்கிறான் என்றும் அவர்கள் நினைத்துள்ளனர். ஆம், அவர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது தென்பட்ட பையனின் தோற்றம் அவர்களது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது- திருடர்கள் எப்போதும் பதின் பருவப் பையன்களாகவே இருக்கிறார்கள் அல்லவா?  “அவர்கள் எப்படி திருடர்களாக மாறினார்கள் என்ற கட்டுக் கதையை என்னிடம் கூறாதீர்கள். நீங்கள் அப்படித்தான் நினைப்பீர்கள். அவர்கள் எல்லோரும் இந்தச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பீர்கள். அந்தக் கருமத்தை நிறுத்துங்க எம்மா” என்றார் அவர். நான் என் வாயைத் திறக்கவில்லை. “நீங்கள் அப்படித்தான் நினைப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அவர்களிடம் பிடிபடவில்லை. ஆனால் அவர்கள் எதனாலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.” நான் இன்னும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவர் தனது குற்றவுணர்வால் அவ்வாறு பேசுகிறார் என்பதை மட்டும் நான் புரிந்து கொண்டேன்.

“எவ்வளவு நேரம் அவன் கதவைத் தட்டினான்?”எனக்குத் தெரிய வேண்டும். “எவ்வளவு நேரமாக அவன் உள்ளே விடச் சொல்லிக் கேட்டான்?”

தான் தனியாகச் சாகப் போகிறோம் என்றுணர்ந்த அந்த பீதியுற்ற இரவில், வெறுப்பின் ஆழத்தில் மட்டியாஸின் பேய் போன்ற கண்கள அச்சத்தில் உள் வாங்கின. ஒருவரும் தனக்கு உதவப் போவதில்லை, போலீசுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யப்போவதில்லை என்றும் மதிப்பு மிக்க நடுத்தர வர்க்கம் வாழும் இந்தப் பெரிய கட்டிடத்திற்கு முன்பு கொலைகாரர்களால் தான் சூழப்பட்டுவிட்டதை அவன் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஜூலியோ பதிலளிக்க விரும்பவில்லை. அவருக்குத் தெரியாது என்றார்.

“அது ரொம்ப முக்கியமா?”

“ஆமாம் முக்கியம் தான்” என்றேன். “ஏனென்றால் அந்தப் பையன் சீற்றத்துடன் இருக்கிறான். நம்மை விட்டுச் செல்லும்படி நான் என்ன சொல்லி தேற்றுவது? நாம் தவறு செய்துவிட்டோம் என்றா? அது போதுமானதாக இல்லை.”

“நீங்கள் முயற்சிக்க வேண்டும்.”

“இல்லை. எப்படி என்று எனக்குத் தெரியவில்லை” என்றேன்.

“நீங்கள் அதை விரும்பவில்லை. நீங்கள் எங்களைவிட சிறந்தவர் என நினைக்கிறீர்கள். நீங்களும் தான் அவனை உள்ளே விட்டிருக்க மாட்டீர்கள்.”

“அதைத்தான் மட்டியாஸ் நேற்றிரவு என்னிடம் சொன்னான்.”

“அவன் பெயரைச் சொல்லாதீங்க”

“ஏன்? அவனுக்குப் பெயர் இருக்கிறதே.”

“நாங்கள் எப்படித் தூங்குவது? குழந்தைகளை எப்படிக் காப்பது?”

“ஜூலியோ, நீங்கள் அனைவரும் விரைவில் அதைப் பற்றி நினைப்பீர்கள். சில தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள். நான் எழுதித் தருகிறேன். அவை பக்க விளைவில்லா சிறந்த மாத்திரைகள்.”

கடுப்பாகிய ஜூலியோ மேசையை ஓங்கி அறைந்தார்.

“நான் முட்டாள் என்று நினைத்தீர்களா?”

“அப்படி எல்லாம் இல்லை. ஆனால் நான் யாருடைய வேலைக்காரியும் இல்லை. அப்புறம் என் வீட்டிற்கு வந்து என்னையே அதட்டிப் பேசுவதை நிறுத்திக் கொள். என்னை சமாதானப்படுத்தும் வழி அதுவல்ல.”

ஜூலியோ சென்ற பின் நான் ஏமாற்றம் அடைந்ததாக உணர்ந்தேன். அவர் ஒரு சிறந்த மனிதர் என்று நான் நினைத்தேன். மற்றவர்களும் என்னிடம் வந்து கெஞ்சினார்கள். அவர்களை தேவாலயம் சென்று அழுது புலம்புமாறு  கூறினேன். அவர்கள் என் மீது கோபமடைந்தார்கள். அவர்களுக்குப் பித்துப் பிடித்துப் போகலாம். யாருமே தூக்க மாத்திரைக்கான மருந்துச் சீட்டு வேண்டுமெனக் கேட்கவில்லை. மனநல மருத்துவர்கள் பற்றி மக்கள் கொண்டுள்ள தவறான புரிதல் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தியவாறே இருக்கும். அல்லது தற்சமயத்திற்கு என்னிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை என நினைக்கிறேன்.

தனது அன்றாட வேலையைச் செய்ய மட்டியாஸ் ஒவ்வொரு இரவும் வந்தான். சில அண்டை வீட்டார் அவனைவிட அதிகமாகக் கத்தினர். தூக்க மாத்திரை போடுவதால் எப்போதாவது விழிக்கும் நான் தெற்குப் பகுதியில் விழித்திருக்கும் எனது முன்னாள் கணவருடன் இணையத்தில் அரட்டை அடித்தேன். “வயதாகிவிட்டது. நான் நன்றாகத் தூங்குவதில்லை” என்று அவர் சொன்னார்.

நாட்கள் செல்லச் செல்ல வாடகை கார் நிறுவனம் நடத்திய எனது பக்கத்து வீட்டுக்காரர்  ஒருவர் நொடிந்து போனார். போலீஸிடம் அவர் கூறுகையில் மட்டியஸ் கிரிமோனேஸி தனது கடையின் கதவைத் தட்டி தன்னை வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்லக் கேட்கிறான் என்றார். ஆனால் மட்டியஸ் கிரிமோனெஸியிடம் பணம் எதுவும் இல்லாததால் எனது பக்கத்து வீட்டுக்காரர் அவனை அழைத்துச் செல்ல மறுத்துள்ளார். அதிகபட்சம் எழுநூறு மீட்டர் தூரம் தான். மேலும் அந்தப் பையன் நம்பத் தகுந்தவனாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவன் பொய்யனாகவோ திருடனாகவோ இருந்தால் என்ன செய்வது?

அவனால் என்ன திருட முடியும்? என்று நான் நினைத்தேன். அந்த ஆளிடம் எதுவும் இல்லை; அவரது வாடகை கார் சேவையை யாரும் பயன்படுத்தியது இல்லை. எந்நேரமும் குடிப்பதும் கால்பந்துப் போட்டியைப் பார்ப்பதுமாக இருந்தார். ஒரு வாரத்தில் அதிகபட்சம் இரண்டோ மூன்றோ வாடிக்கையாளர்களே வந்தார்கள். அவரால் அந்தக் கடைக்கு வாடகை கூட கொடுக்க முடியவில்லை.

தான் தவறு செய்து விட்டதற்காக வருந்துவதாகவும், அந்தப் பையன் பாவம் என்றும் என் பக்கத்து வீட்டுக்காரர் கூறினார். ஆனால் எப்படிப்பட்ட அபாயகரமான நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எங்கள் குடியிருப்புவாசிகள் புரிந்து கொள்ளவில்லை.

நான் எங்களது மகளின் வீட்டில் இருந்தபோது, மட்டியாஸை மொத்த குடியிருப்புவாசிகளும் கைவிட்டதால் தான் அவன் இறந்தான் என்று என் முன்னாள் கணவரிடம் கூறினேன். “ஆனால், நான் இங்கிருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?” நான் கதவைத் திறந்திருப்பேனா? அல்லது மற்றவர்களைப் போலவே நடந்து கொண்டிருப்பேனா?” என்று அவருக்கு இணைய அரட்டையில் எழுதினேன்.

“நீ திறந்திருக்க மாட்டாய்” என்று பதிலளித்தார். “ஆனால் குறைந்தபட்சம் நீ போலீஸை தொலைபேசியில் அழைத்திருப்பாய். ஆனால் அதைக் கூட அவர்கள் செய்யவில்லையே”என்றார்.

“அதைக் கூட அவர்கள் செய்யவில்லை” என்றேன் நான்.

அந்தப் பையனின் ஆவி தினமும் வந்து எங்களது அற்பத்தனத்தையும் கோழைத்தனத்தையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது என்று நான் அவரிடம் கூறவில்லை. அது குடியிருப்புவாசிகளிடையே ஒரு ரகசியம் போன்றது. எனது குடும்பம் வெகு தொலைவில் இருந்தது. அம்மாவைத் தவிர!  எனது முன்னாள் கணவர் என்னை அவருக்கு அருகில் வந்து வசிக்குமாறு மீண்டும் கூறினார். “அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்று என்னிடம் கூறினார்.

“அடக் கிறுக்கா, அறுபது வயதிற்கு இது ரொம்ப அதிகம்” என்றேன் நான்.

“என்னால் தூங்க முடியாது என்று ஏன் நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“வருவது பற்றி நான் யோசிக்கிறேன்” என்று பொய் சொன்னேன்.

எனது முன்னாள் கணவரின் மனைவிக்கு பேறுகாலம் கடும் சிக்கல் மிகுந்ததாக இருப்பதால் நான் அவருக்கு அருகில் வசிக்கும் போது ஏதேனும் அவசரம் ஏற்படின் என்னால் உதவ முடியும் என்று அவர் விரும்புகிறார் என நினைக்கிறேன். ஆனால் நான் அவ்வாறு வசிக்கப் போவதாக இல்லை. என் அம்மாவை தனியாக விட்டுச் செல்ல முடியாது; அவள் உடல் நலிவுற்று இருந்தபோது வலியை மறக்க சமையலறையில் அமர்ந்திருந்தது போல பல இரவுகளை சமையலறையிலேயே செலவிடுவாள்.  எப்போதாவது தோன்றினாலும் கைகோர்த்து சிரித்தபடி அழுகிக் கொண்டிருக்கும் அந்த இளம் பெண்களை விட்டுவிட்டு என்னால் வர முடியாது. என்றாவது ஒரு நாள் அவர்கள் வெளியேறினால் எங்கே செல்வார்கள்? அன்றொரு நாள் என் மகளைப் போல இருக்கும் அந்தப் பெண்களில் ஒருத்தி தனது அரூப சாம்சங் செல்பேசியால் என்னைப் புகைப்படம் எடுத்தாள். எனது புகைப்படம் எங்கே? அவள் அதை யாரிடம்  காண்பித்தாள்?  அல்லது பவுலோவின் முற்றத்தில் தனியாக இறந்த அந்த திருடனை நான் கைவிட விரும்புகிறேனா? சில நேரங்களில் அவன் ஒரு ஆந்தையைப் போல கூரை மீது ஏறுவதை நான் பார்க்கிறேன். அவன் ஏதாவது திட்டமிடுகிறானா? என்னை வெறுத்தாலும் பாவப்பட்ட மட்டியாஸை விட்டுவிட்டு என்னால் வர முடியாது. அவன் கதவைத் தட்டுவதுதான் எனக்குத் தாலாட்டு. அவன் வருகையின்றி என்னால் உறங்க முடியுமா எனத் தெரியவில்லை. பாவப்பட்ட இந்த ஆத்மாக்கள் அனைத்துக்கும் நானே பொறுப்பு. என்றாவது ஒரு நாள் மட்டியாஸை நான் ஆற்றுப்படுத்த முடியுமா என்று என் அம்மாவிடம் கேட்டதற்கு அவள் அளித்த பதில் நம்ப முடியாததாக இருந்தது: அவள் தனது நாக்கை வெளியே நீட்டிக் காட்டினாள்.  என் அம்மா அழகிய நங்கூரம் அச்சிடப்பட்ட நீல வண்ண உடை அணிவாள். அது அவளை ஒரு பழைய கப்பலோட்டி போலக் காட்டும். நான் எனது நாக்கை வெளியே நீட்டி அவளுக்கு மரியாதை செலுத்தினேன். நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம். அவளுடன் சேர்ந்து வளர்ந்து தாயும் மகளும் ஒரே வயதாகி மாடிப் படிகளில் மேலும் கீழும் ஓடியாடி, சமையலறையில் அமர்ந்து, அவளது நங்கூரம் வரைந்த உடையுடனும் எனது வெள்ளைச் சட்டையில் காபிக் கறையுடனும் வெளியில் மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாத, எதிர்காலத்தில் இறக்கும் பையன்களுடனும் இந்த வீட்டிலேயே நான் இருப்பேனோ என்றே நான் வியப்படைகிறேன்.

*பெசோஸ் (அர்ஜென்டினா நாணயம்)

மரியானா என்ரிக்ஸ்

ஆங்கிலத்தில்: மேகன் மெக்டுவல்,தமிழில்: க. ரகுநாதன்

(தி நியுயார்க்கர் -2023 பிப்ரவரி இதழில் வெளியான சிறுகதையின் தமிழாக்கம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.