சாமியப்பன் – காளீஸ்வரன்

டைசி மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் டம்ளரைக் கசக்கி வீசினான் இளங்கோ. அலுவலக நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பாருக்கு வெளியே வந்தான். புதிய பிராண்ட் கூடவே பீரும் என்பதால் அளவாகத்தான் குடித்திருந்தான். மிதமான போதை. ஊத்துக்குளி பேருந்து நிறுத்தத்திலிருந்து ரயில்வே ஸ்டேசன் செல்லும் வழியிலிருந்தது அந்த பார். பக்கத்திலிருக்கும் ஆலையிலிருந்து 8 மணி சங்கு ஒலித்தது. திடீரென, ஒரு திடுக்கிடல் போல சாமியப்பன் நினைவு வந்தது. அவரைப் பார்த்து ஓரிரு மாதங்கள் இருக்கும். இன்றைக்கு அவனது வீட்டிலும் யாருமில்லை. அப்பா அம்மா இருவருமே உடுமலைப்பேட்டையிலிருக்கும் ஆத்தா வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். நாளை இரவுதான் வருவார்கள். இன்றைக்கு ராத்தங்கல் தோட்டத்தில்தான் என முடிவெடுத்தான் இளங்கோ. எதற்கும் அரவிந்திடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என செல்போனை எடுத்தான் அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. மாலையில்தான் செல்போனை முழுக்க சார்ஜ் போட்டிருந்தான். சில மணி நேரங்களிலேயே சுவிட்ச் ஆப் ஆனது வினோதமாக இருந்தது. பேட்டரி பிரச்சனையாயிருக்கலாம் என எண்ணியவனாக தன் ஆக்டிவாவை கிளப்பினான்.

பாரிலிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் சென்றதும், வலப்பக்கம் பிரியும் சென்னிமலை சாலையில் வண்டியைத் திருப்பினான். ஒரு ரயில்வே பாலம், அதைத் தாண்டியதும் ஒரு மளிகைக்கடை, பக்கத்திலேயே தள்ளுவண்டியில் போண்டா பஜ்ஜி விற்பனை. கொஞ்ச நஞ்ச ஆள் நடமாட்டமும் இந்த எல்லையுடன் முடிந்துவிடும். இனி சாலையின் இருபுறமும் தோட்டங்கள் மட்டுமே. அங்கிருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டரில் இருக்கிறது அரவிந்தின் தோட்டம். சாமியப்பன் அங்குதான் இருக்கிறார். அரவிந்தின் பாஷையில் சொல்வதானால் அங்குதான் வேலை செய்கிறார். ஆளரவமற்ற சாலையில் மெதுவாக வண்டியை ஓட்டினான் இளங்கோ. கடும் குளிர். மெல்ல மெல்ல போதை ஏறுவதை உணர்ந்தான்.

அரவிந்த் இளங்கோவின் பால்ய சினேகிதன். தோட்டம், பைனான்ஸ், காம்ப்ளக்ஸ் வாடகை என நல்ல வருமானம் உள்ளவன். ஊத்துக்குளியிலிருந்து சென்னிமலை செல்லும் சாலையில் அரவிந்துக்கு சொந்தமான ஒரு தோட்டமும் உண்டு. சனிக்கிழமை இரவுகளை பீர் பாட்டில்களும், புரோட்டா, சிக்கன் பார்சல்களுமாக இளங்கோவும் அரவிந்தும் அந்த தோட்டத்தில் கழிப்பது வழக்கம். இரண்டு ஏக்கர் தோட்டம். பெரும்பாலும் தென்னை மரங்கள். தோட்டத்துக்கு மத்தியில் சிமெண்டு சீட் போடப்பட்ட ஒரு பெரிய ரூம். கொட்டிக்கிடக்கும் தேங்காய்களும், உரிக்கப்பட்ட மட்டைகளும் ஒருபுறம் குமிந்திருக்க, மறுபக்கம் ஒரு கயிற்றுக்கட்டில் போடப்பட்டிருக்கும் அதுதான் அவர்களின் உல்லாச மாளிகை. உள்ளூர் நிகழ்வுகளில் துவங்கி, சினிமா, அரசியல் இப்படியாக வேகமெடுத்து, பால்ய கால கதைகளில் உச்சமடைதல் என பீரும் பேச்சுமாக நள்ளிரவு கடந்துவிடும். அதிகாலை தூங்கி ஞாயிறு மதியம்தான் அவரவர் வீட்டுக்குச் செல்வார்கள். எப்படியும் மாதத்திற்கு இரண்டு முறை தவறாமல் நடக்கும் நிகழ்வு இது. இரண்டு வருடங்களுக்கு முன்பு, அப்படிப்பட்ட ஒரு சனிக்கிழமை இரவில்தான் முதன்முதலில் சாமியப்பன் இளங்கோவுக்கு அறிமுகமானார். வழக்கம்போல, அரவிந்துடன் பாட்டிலும் பார்சலுமாக தோட்டத்துக்கு வந்த இளங்கோ கேட் திறந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அதைவிடவும் ஆச்சரியம் எப்போதும் சிதறிக்கிடக்கும் தென்னை மட்டைகளும், சரிவரப் பேணப்படாத வாய்க்கால்களும் இருக்கும் தோட்டம் அம்முறை கொஞ்சம் சீராய் இருந்தது. இரண்டுக்கும் ஒரே காரணம் சாமியப்பன். ஒருவகையில் அரவிந்தின் அப்பாவுக்கு தூரத்துச் சொந்தம். குன்னத்தூருக்கு பக்கத்திலிருக்கும் பொன்னாபுரம்தான் அவரின் சொந்த ஊர். கடைசிக்காலத்தில் உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் தோட்டமே கதி என இங்கு வந்துவிட்டவர். இவ்விரு விசயங்களை மட்டும்தான் அரவிந்த் சொன்னான்.

அந்த இரவும், தொடர்ந்து வந்த ஓரிரு சனிக்கிழமை இரவுகளும் இளங்கோவுக்கு அவருடைய இருப்பு பெரும் இடைஞ்சலாக இருந்தது. தான் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் அவரது பார்வை தன்னைவிட்டு விலகுவதேயில்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான். பின்னர் ஒரு சனிக்கிழமை இரவு இளங்கோ சற்று முன்னதாகவே தோட்டத்துக்கு வந்துவிட்டான். ஒரு விசேசத்துக்குச் சென்றுவிட்டு நேராகத் தோட்டத்துக்கு வந்துவிடுவதாய் அரவிந்த் சொல்லியிருந்த அன்றுதான் முதன்முதலாக, சாமியப்பன் அவனிடம் பேசினார். முதலில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் துவங்கிய பேச்சு, அரவிந்த் வருவதற்கிடைப்பட்ட அந்த ஒரு மணி நேரமும் நீண்டது. பொதுவாகவே கதை கேட்பதில் விருப்பமுடையவனான இளங்கோவுக்கு சாமியப்பனின் ருசிகரமான பேச்சு மிகவும் பிடித்துப்போனது. அன்று முதல் அவரது இருப்பும், பார்வையும், பேச்சும் இளங்கோவுக்குத் தொந்தரவாக இல்லை.

அதற்குப் பிறகான நாட்களில் சாமியப்பனும் இளங்கோவிடம் உரிமை எடுத்துக்கொண்டார். சில சமயம், இவர்கள் தோட்டத்தில் தங்கச்செல்லும் போது இரவே இளங்கோவுக்கு சிக்னல் கொடுத்து விடுவார். மறுநாள் காலை வேண்டுமென்றே, அரவிந்த் கிளம்பிய பின்னர்தான் இளங்கோ எழுந்திருப்பான். வாய் கொப்பளித்து முகம் கழுவி வந்தவுடனே, சாமியப்பன் கைகளில் ஏதாவது பாத்திரமோ பையோ முளைத்திருக்கும். பக்கத்துத் தோட்டத்தில் புதிதாகக் கன்று பிறந்திருப்பதால் கிடைத்த சீம்பால் கட்டி, அதிகாலையில் இறக்கப்பட்ட சுத்தமான பதநீர், முந்தின நாள் கிடைத்த பனம்பழம் இல்லாவிட்டால் சீம்பு என ஏதாவது ஒரு பொருள் அவனை ஆச்சரியப்படுத்தும். பெரும்பாலும் அவர் அவனுக்கென எடுத்து வைத்திருக்கும் பண்டங்கள் இளங்கோவுக்கு மிகவும் பிடித்தமானவையாகவே இருக்கும்.

ஆனால் அரவிந்துக்கோ சாமியப்பனைக் கண்டாலே ஆவதில்லை. பிறகொரு சந்தர்ப்பத்தில் சாமியப்பனுடனான விலகலைக் குறித்து அரவிந்திடம் கேட்ட இளங்கோவுக்கு, “இவெரயெல்லா வெக்க வேண்டிய எடத்துலதான் வெக்கோணும். நீ மூடு” என்பதே பதிலாக வந்தது. சாமியப்பனும் அரவிந்த் இருக்கும்போதெல்லாம் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பார். ஆனால், அவரது கவனம் எப்போதும் தன் மீது இருப்பதாக ஒரு உள்ளுணர்வு இளங்கோவுக்கு. அரிதாக இளங்கோ சற்று முன்னதாக வந்துவிடும் நாட்களிலெல்லாம் சாமியப்பன் முகத்தில் ஒரு பொலிவு கூடிவிடுவதை அவன் உணர்வான். அப்போதெல்லாம், இன்னதென்று இல்லாமல் ஏதாவது விசயங்களை அவனிடம் சலிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார் சாமியப்பன். கைக்கெட்டும் தூரத்தில் அமர்ந்துகொண்டு பேச்சின் இடையில், வாஞ்சையுடன் தொட்டுப்போகும் சாமியப்பனின் கரங்கள் இளங்கோவுக்கு அவனது அம்மாவை நினைவூட்டும். மிஞ்சிப்போனால் ஒரு அரைமணி நேரம், அதற்குள் அரவிந்த் வந்துவிட, உணர்ச்சி ஏதுமின்றி விலகிச்சென்றிவிடுவார்.

கடந்தகால நினைவுகள் இளங்கோவுக்கு ஒரு மின்னலைப் போல வந்துபோயின. தோட்டம் சமீபித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஏறியிருந்த போதை இப்போது உச்சத்தில். இளங்கோ தன்னிலை மறக்காமலிருக்க பெரும் முயற்சி செய்யவேண்டியிருந்தது. ரோட்டில் எரிந்துகொண்டிருந்த வீதி விளக்குகள் அணைந்தன. இப்போதெல்லாம் அடிக்கடி கரண்டு போய்விடுவதை எண்ணிக்கொண்டே, மெயின் ரோட்டிலிருந்து தோட்டத்துக்குச் செல்லும் ஒத்தையடிப்பாதையில் வண்டியைத் திருப்பினான். பௌர்ணமி நிலா வெளிச்சத்தில், கொஞ்ச தூரத்திலேயே தோட்டத்தின் இரும்புக்கதவு பார்வைக்குப் பட்டது. கேட்டை நெருங்கினான். அதன் முன்புறமிருந்த சிறு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியது. கீழே விழுந்துவிட்டதைப் போலத் தோன்றியது. நல்லவேளையாகச் சமாளித்துக் கொண்டான். இந்த நேரத்துக்குத் தோட்டத்தின் இரும்பு கேட் திறந்திருந்ததும், அதன் பக்கத்திலேயே சாமியப்பன் நின்று கொண்டிருந்ததும் வினோதமாகத் தோன்றியது. தோட்டத்துக்குள் நுழைந்ததும், வண்டியை நிறுத்தியதும் அவனுக்குக் கனவு போல இருந்தது. தலைசுற்றல் தாங்கமுடியவில்லை. பீரையும் பிராந்தியையும் கலந்து அடித்தது தப்புதான் என எண்ணியவாறே, வண்டியைப் பூட்டி சாவியை எடுத்த இளங்கோவுக்குக் கண்கள் சொருகியது, மேற்கொண்டு நடக்க இயலாமல் கீழே விழுந்தான்.

”செரியான மப்பு, இல்ல கண்ணு” சாமியப்பன் குரலும் உருவமும் கொஞ்சம் கொஞ்சமாகத் துலங்கியது. இளங்கோவுக்குத் தாகமெடுத்தது.

”இந்தா இதக்குடி” பெரிய பித்தளை சொம்பு நிறையத் தரப்பட்ட திரவத்தை வைத்த வாய் எடுக்காமல் குடித்து முடித்தான். சிறிது நேரத்திலேயே பார்வையும் மனமும் தெளிவடைந்தன. பௌர்ணமி நிலவின் வெளிச்சம் அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தோட்டத்து அறைக்கு வெளியே தென்னை மரங்களினூடே போடப்பட்டிருந்த நாற்காலியில் அவன் அமர்ந்திருந்தான். எதிரிலிருந்த நாற்காலியில் சாமியப்பன். எப்போதும் சிரிப்பு ததும்பும் கண்களில் வெறுமை. முகத்தில் கருமை படர்ந்திருந்தது. உயிரோட்டமேயில்லை.

“எதையுமே அளவொட வெச்சிக்கிட்டாத் தேவுல”

சம்பிரதாய துவக்கமெல்லாம் இல்லாமல், நீண்ட உரையாடலின் தொடர்ச்சிபோல துவங்கினார் சாமியப்பன். சரியென்பதுபோல தலையசைத்தான் இளங்கோ. சற்று நேரம் அமைதி. தென்னை ஓலைகளின் சலசலப்பு கூட இல்லை. தொலைவிலோ அருகிலோ எங்கும் எதுவுமே நிகழாமல் உலகமே நின்றுபோனது போன்ற பேரமைதி. இதுநாள் வரை இந்த இடம் இப்படி இருந்ததில்லை. இப்படி ஒன்றுமே பேசாமல் சாமியப்பன் இருப்பதும் புதிது. ஏதேனும் கேட்டே ஆகவேண்டும் என எவரோ கட்டளை இடுவதுபோல இளங்கோவுக்குத் தோன்றியது.

“அதெப்புடி, கரெக்டா  கேட்ட தொறந்து வச்சிருந்தீங்க? இந்நேரத்திக்கு இங்க ஆரு வரப்போறாங்க? நா வருவேன்னு நெனச்சீங்களா?” ஆச்சரியமாகக் கேட்டான் இளங்கோ.

தெரியும் என்பதுபோல வெறுமனே தலையை மட்டும் அசைத்தார் சாமியப்பன்.

“என்ன ஆச்சுங்க? மூஞ்சில ஒரு கெளுத்தியவே காணோம். நெம்ப வெசனப்படுறாப்புல தெரியுதுங்களே” கேட்டே விட்டான்.

“மனசே ஆற மாட்டேங்குது” சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் தரையையே பார்த்துக்கொண்டிருந்தார் சாமியப்பன். தன்னுள் எதையோ தொகுத்துக்கொண்டவராய் இளங்கோவைப் பார்த்தார். எப்போது வேண்டுமானால் சிந்திவிடக்கூடும் எனும்படி, அவரது கண்களில் கண்ணீர் இப்போது தளும்பி நின்றிருந்தது.

“என்ன பிரச்சனைங்க? எதுன்னாலும் சொல்லுங்க. மனசு வுட்டு பேசுனாத்தான எனக்கும் வெகரம் புரியும்”

எங்கிருந்தோ ஒரு பூனைக்குட்டி ஓடிவந்து அவரின் மடியில் எவ்வித தயக்கமுமின்றி அமர்ந்துகொண்டது. கருப்பு நிறப்பூனை. தோட்டத்தில் இதற்கு முன்னர் இளங்கோ அதைப் பார்த்ததில்லை. ஒருவேளை எங்கிருந்தாவது சமீபத்தில் வந்து இணைந்திருக்கக்கூடும். தன்னைப் போலவே சாமியப்பனின் அருகாமை அதற்கும் தேவைப்பட்டிருக்கலாம். ஒரே ஒருமுறை மட்டும் இளங்கோவை நிமிர்ந்து பார்த்த பூனை பின்னர் அவனைச் சட்டைசெய்யவே இல்லை. சாமியப்பன் மடியில் அது உரிமையுடன் அமர்ந்தவிதம் அவனை மிகவும் தொந்தரவு செய்வதாக இருந்தது.

“மனசு வுட்டுப்போச்சு. பேசுறதுக்கும் நெறைய விசியங்க இருக்குது. எத்தனயோ வருசமா மனசுக்குள்ள சேத்தி வச்சிருந்த விசியங்க பெரும் பாரமா ஆயிப்போச்சு. இனியும் சொமக்கறது முடியாது. அதுக்கு தேவயுமில்ல.” சின்ன அமைதி.

“ஆமா, இன்னிக்குதா பேச முடியும். பேசிட வேண்டியதுதா” லேசாகக் கம்மிய குரலை செருமிக்கொண்டு தொடர்ந்தார் சாமியப்பன். அவரின் கைகள் பூனையில் உடலை வருடத்துவங்கின.

”பெருங்கொண்ட சொத்தில்லைன்னாலும் பல தலமுறைக்கி பழுதில்லாம சாப்புடுற அளவுக்கு எங்கப்பாரு சொத்து சேத்து வச்சிருந்தாரு. எங்கய்யன் அதை பெருக்கவுமில்லை சுருக்கவுமில்லை. ஒழச்சவுனுக்கு வகுறாற சோத்துக்கு என்ன வேணுமோ அத விட அரைப்பங்காச்சும் கூடுதலா கொடுத்தாதா அவருக்கு சோறு எறங்கும். எங்கம்மா, அப்பா நெனப்புக்கு மாத்தி நெனச்சதில்லை. நா அவிங்களுக்கு ஒத்தைக்கொரு புள்ள. அம்மாக்கு எம்மேல அம்புட்டுப் பிரியம். எப்பயுமே அவுங்க கண்பார்வைக்குள்ளாற நா இருக்கறமாதிரி பாத்துக்குவாங்க. அன்னிக்குதேதில ஊரு ஒலகத்துல இல்லாத வழக்கமா, எங்கய்யனும் என்னை அப்புடித்தாங்குவாரு. துணிமணி எடுக்கறதுயோ, திம்பண்டங்க கொடுக்கறதுலயோ, வேணுங்கறதெல்லா வாங்கிக்கொடுகறதுலயோ இல்ல அந்த பிரியம். அன்னாட வாழ்க்கையில நம்மகூட நடந்துக்கற மொறைலதா அது இருக்கு. எங்கப்பா என்னிய அவரோட செரிபாதியா ஒரு சினேகிதகாரனாட்டம் நெனச்சாரு. ஒரு பத்து பன்னெண்டு வயசு தாண்டித்தான் அவரு என்னிய எப்புடி மதிக்கறாருங்கறதே எனக்குப் புரிஞ்சது.”

“கண்ணு, மனுசனுக்கு சாராயம், கஞ்சா, பொண்ணு, மண்ணு, தங்கமுன்னு ஆயிரத்தெட்டு போத இருக்குது. ஆனா, அது எதுக்கும் கொறஞ்சதில்ல பேச்சுல இருக்குற சொகம். அதும், நம்ம மனசுக்கு நெம்ப புடிச்சவுங்ககிட்ட நாம பேசுறதும், அவிங்களும் நம்மகிட்ட அதே பிரியத்தோட பேசுறதும் பாத்தா சோறு தண்ணியெதுவுமே தேவயில்லன்னு ஆயிடும். அப்பெல்லாம் எல்லாருக்கும் பேச்சும் சிரிப்பும் கூட்டாளிககிட்டத்தா. வூட்டு ஆளுங்ககிட்ட பேசுற ஒண்ணு ரண்டு பழமயும் சோறு தண்ணியப் பத்தியோ, இல்லாட்டி பண்டம்பாடி பாக்குறதப்பத்தித்தா. அதத்தாண்டி பொண்டாட்டி புள்ளிங்ககிட்ட ஏதாச்சும் பேசணும் புடிக்கணும்ன்னு ஆருக்கும் தோணுனதுமில்ல, அதுக்கெல்லாம் அப்ப நேரமுமில்ல.”

”எங்கப்பா அப்பயே ஒரு தினுசான ஆளு. எதுலயுமே நியாய தர்மம் பாக்குறவரு. தன்னோட சொந்த சாதிசனமுன்னோ, பழக்க வழக்கமுன்னோ எப்பயுமே சப்போர்ட்டு போட மாட்டாரு. அது என்ன பிரச்சனைனாலும் எவம்பக்கம் நாயமிருக்குதோ அவம்பக்கந்தா நிப்பாரு. சின்னது தொட்டே அவரு அப்புடித்தா. அவருக்கு நெருங்குன சிநேகிதகாரன்னு யாருமேயில்ல. அதுனாலதானோ என்னமோ நாம் பொறக்கறவரை எங்கம்மா கிட்டயும், அதுக்கப்புறம் எங்கிட்டயும் அன்னாடம் அன்னன்னிக்கி நடந்ததோ இல்லாட்டிப் போனா, பழய கதையோ எதாச்சிம் பேசிட்டே இருப்பாரு. பேச்சுன்னா, இதோ இப்ப நீங்க பேசுறீங்களே, இதுமாறியா? பொழப்பத்த பேச்சு. எங்கப்பா பேசுனா, அது ஏதோ கூத்துக்காரன் கத சொல்லுறமாதிரி இருக்கும். அன்னாடம் நடக்குற விசயங்கதா. ஆனா, அதுல எத்தன கதைக, சிரிப்பென்ன அழுகையென்ன. ஏ யப்பா. எங்கூட்டு ஆசாரமே பேச்சாலும் சிரிப்பாலும் நெறஞ்சிருக்கறதா தோணும். மாச மாசம் பெளர்ணமியன்னிக்கி ராத்திரி குலதெய்வக்கோயில சாமி கும்பிட்டுட்டு ஆளும் பேருமா நடந்துவரப்போ அப்பா சொல்லுற ஒவ்வொரு விசியமும் அப்புடி சிரிப்பா இருக்கும். மைல் கணக்குல நடந்திருந்தாலும் நடக்குற அலுப்பே தெரியாது. வயக்காட்டுல பெருக்கான் புடிச்சு சுட்டுத்திங்குறவிங்க பெருக்கான்னு நெனச்சு பாம்ப புடுச்ச கத ஒண்ணு இருக்கு, அத எத்தன தடவ கேட்டிருப்பேன்னு எனக்கே தெரியாது, ஒவ்வொரு தடவே கேக்கும்போதும் புதுசு மாதிரி சிரிப்பு வரும். அதே மாதிரி, ஊரு பஞ்சாயத்துல, எல்லாரையும் அதட்டி, உருட்டுற பெரியசாமி மாமன் அவரு மச்சினி கிட்ட ஒத வாங்குன கதயும். இப்புடி ஏகப்பட்ட கதைகள சொல்லியிருக்கார். நாளாக நாளாக என்னிய சுத்தி நடக்குற விசயங்கள நானும் கவனிக்க ஆரம்பிச்சேன். எனக்கும் சொல்லுறதுக்கு நெறய விசயங்க சேந்துச்சு. ஆனா, அப்பாகிட்டயோ அம்மாகிட்டயோ எதயுஞ்சொல்ல முடியாது. ஏன்னா, அப்பா இருந்தாலே அவரு கதகதயா பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கணும்ன்னு எனக்கு அம்புட்டு ஆச.”

தொடர்ந்து பல கதைகளையும் சம்பவங்களையும் விவரிக்கத்துவங்கினார் சாமியப்பன். பெரும்பாலும் அவரது பால்ய கால நினைவுகள் நடுநடுவே அவரது அப்பா அவருக்குச் சொன்ன கதைகள். சன்னதம் வந்தவரைப் போலச் சொல்லிக்கொண்டிருந்த சாமியப்பன் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. ஒரு குழந்தைக்கான குதூகலம் அவர் குரலில். தானறியாத சாமியப்பன் இவர் என இளங்கோ எண்ணிக்கொண்டிருந்தான். அந்தப்பூனை இன்னமும் அவரைவிட்டு நகரவேயில்லை. அத்தனை கதையும் அதுக்குத்தான் என்பதுபோல அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு பொம்மையைப் போல. சாமியப்பன் அந்தப்பூனை மீதான வருடலை நிறுத்தவேயில்லை.

“எங்கூர் ஆளுங்க அம்பிட்டு பேருக்கும் சந்தோசம்னா காசு பணம் சேக்குறது. கெவுரவமா வாழுறது. அவ்வளவுதான். இப்படி கத கேட்டு, பேசிச் சிரிச்சு சுகங்கண்டவனுங்க வேற ஆராச்சும் இருப்பானுங்களா? தெரியாது. செய்யுற வெவசாயத்துல அப்பாவுக்கு அம்மாவுக்கும் நல்ல கருக்கடை இருந்துச்சு. ஆனா என்ன, ஆளாப்பறந்து சொத்து சேக்கல. இருகறத அழிக்கவுமில்ல. அதேதான் எனக்கும். இம்புட்டு சந்தோசம் மனுசனுக்கடுக்குமா அப்புடின்னு எனக்கே சந்தேகம். எம்பட சந்தேகம் பலிச்சிருச்சு. எறக்கத்துல போறப்ப இருக்குற சுலுவுக்கு கணக்கான சிரமத்த மேடேறும் போது அனுபவிச்சுத்தான ஆகணும். நானும் அனுபவிச்சேன்.”

”எம்பட வாழ்க்கைல நாம்பட்ட மொத அடி எங்கப்பா அம்மா சாவுதான். நல்ல மழக்காலத்துல, அறுந்துகெடந்த கரண்டு கம்பிய மிதிச்சு ஒரே நாள்ல ரெண்டுபேரும் போய்ட்டாங்க. பொறவு ஒரே வருசத்துல எனக்கு கண்ணாலம் கெட்டி வச்சாங்க. ருக்குமணி என் சொந்த தாய்மாமம் மகதான். மொத மூணு மாசம் ஒரு கொறயுமில்லாமதா வாழ்க்கை போச்சு. ஆனா, மொல்ல மொல்ல எனக்கு சூதானம் பத்தாதுன்னு ருக்குமணி நெனச்சா. என்ன காரணமுன்னு கேட்டா எம்பங்காளிக எல்லாம், காசு பணம் நெலம் நீச்சுன்னு, அவிங்கவிங்க  சொத்த ஒண்ணுக்கு பத்தா பெருக்கி வச்சிருக்க, நானும் எங்கப்பனுந்தா வெகரமில்லாம பொழச்சிட்டோம்ன்னு பொழுதனிக்கும் வூட்டுல சண்டையோ சண்ட. எவ்வளவுதா மொட்டப்பாறைன்னாலும் ஏதாச்சும் ஒரு சந்துல செடி மொளச்சுருதுல்ல. அப்புடித்தா ருக்குமணி கெர்ப்பமானா. எனக்கா எங்கப்பாதான் புள்ளயா வந்து பொறக்கப்போறதா ஒரு நெனப்பு. நெனச்சமானிக்கே பையந்தான் பொறந்தான். எனக்கு இருப்பே கொள்ளல. எங்கப்பாவும் நானும் இருந்தமாதிரி எம்பையனும் நானும் இருக்கோணும்ன்னு ஒரே ஆச. எப்படா அவன் வளருவான், எங்கூட பேசுவான்னு ஆறப்பொறுக்காதவனாட்டம் தவிப்போ தவிப்பு. அவங்கிட்ட சொல்லுறதுக்கும் பேசிச்சிரிக்கிறதுக்கும் ஆயிரங்கதைங்கள சேத்து வச்சிருந்தேன். ஆனா, அப்பனுக்கும் புள்ளக்கும் ஆவாதுன்னு எவனோ போக்கத்த சோசியக்காரன் சொன்னான்னு சொல்லி, அவனை அவங்கம்மா ஊருக்கே அனுப்பிட்டா எம்பொண்டாட்டி. எடைல நாம் பாக்கப்போனாலோ, இல்ல அவன் எங்கூட்டுக்கு வந்தாலோ, ராத்தங்கல்கறதே இல்ல. வெடியக்காலைல வந்தா ரவைக்கி கெளம்பிருவான். இதனாலயோ என்னவோ பையன் வளர வளர எங்களுக்குள்ள ஒரு இதுவே இல்லாம போச்சு. எந்நேரமும் சிரிப்பும் சந்தோசமுமா இருந்த அதே வூட்டுல, மனசு வுட்டு பேசக்கூட ஆளில்லாம கிட்டத்தட்ட ஒரு அனாதையா ஆயிட்டேன். எம்பொண்டாட்டி மாதிரியே எம்மவனும் என்னிய கூறுகெட்டவன்னு நெனச்சுட்டான் போல. ஆனாலும் எனக்கொரு நப்பாச, எங்கிருந்தாலும் என்னிக்கிருந்தாலும் அவம் எம்புள்ள, என்னிய புரிஞ்சுக்குவான்னு.”

“அந்த நம்பிக்கதா என்னிய அந்த வூட்டுலயே அத்தன வெசனத்தோடயும் இருக்க வச்சிச்சு. மனுசப்பெய மனசுக்கு உண்ம நல்லா தெரிஞ்சிருந்தாக்கூட, தனக்குப் புடிச்சமாதிரி வாழ்க்க மாறும்ங்கற நம்பிக்கைல காலத்த ஓட்டுறமாதிரிதான் எம்பொழப்பும் ஆகிப்போச்சு. மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கைலயும் மண்ணள்ளிப்போட்ட நாளும் வந்துச்சு. ரெண்டு வருசத்திக்கு முன்னாடி ஒரு நா எம்பொண்டாட்டி எங்கூர் பஞ்சாயத்த கூட்டுனா, கூட்டுக்கு மாமன் மச்சினமார்களும். ஒரு ஓரத்துல ஒப்புக்குச் சப்பாணியாட்டம் எம்பையனும் இருந்தான். எனக்கு வெகரமில்லையாம். சொத்த ரூப்பு பண்ண வக்கில்லையாம். அதனால, பூராச் சொத்தும் எம்பொண்டாட்டிக்கும் பையனுக்குமே போற மாதிரி தானசெட்டில்மெண்ட் எழுதித்தரச்சொல்லி எம்மேல பிராது. எங்கப்பா அம்மா இருந்த இருப்புக்கும் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்புடி மூணாவது மனுசனுங்கெல்லாம் எங்கூட்டு நாயத்த பேசக்கூடாதுன்னு, பஞ்சாயத்து தொடங்கறதுக்கு முன்னாடியே எங்க பரம்பர சொத்துல எனக்குன்னு எந்த உரிமையும் வேண்டாமின்னு எழுதிக்கொடுத்துட்டு வந்தவந்தான். இந்தத் தோட்டமே கதின்னு இம்புட்டு நாளு ஓடிப்போச்சு. இன்னியவரைக்கிம் எம்புள்ள என்கிட்ட பாசமா ஒரு நாலு வார்த்த பேசினதில்ல. என் மனசார அவனக் கட்டிப்புடுச்சு கொஞ்சினதில்லை.  கைக்கொழந்தயா அவனிருக்கரப்போ தூக்கினதோட செரி, அந்தப் பால்மணம் ஒண்ணுதான் எனக்கு அவனப்பத்தி இருக்குற ஒரே நெனப்பு. அவங்கிட்ட பேசுறதுக்கும் சொல்லுறதுக்கும் எம்மனசுல சேத்துவச்ச விசயங்க பெருகிப்பெருகி என்னால சொமக்கவே முடியாத பெரும் பாரமா ஆயிடுச்சு.”

முதல்முறையாக நீண்ட மௌனம். இப்போது அந்தப்பூனை அவர் கைகளை நக்கத்துவங்கியிருந்தது.

“ஒனக்குக் கூட தோனியிருக்கும், என்னடா பாத்த மொத நாள்ல இருந்தே நம்மகிட்ட பலவருசப் பழக்கம் மாதிரி பேசினாரேன்னுட்டு. அது வேறொண்ணுமில்ல, உம்மொவம் அப்புடியே எம்புள்ள மொகமேதான். என்ன, அவன் நல்ல கருப்பு. கருப்பராயன் மாதிரி நல்ல கருப்பு. நீ கொஞ்சம் நெறம் அவ்வளவுதான். எனக்கென்னமொ வித்தியாசமா நெனக்கவே தோணல. அப்பப்ப எதாச்சும் சாக்குவச்சு உங்கிட்ட பேசுறதும், உன்னிய பாத்துக்கிட்டேயிருக்கறதும் எனக்கொரு சின்ன ஆறுதல் அம்புட்டுத்தான்.”

சாமியப்பன் கண்களிலிருந்து, தளும்பிக்கொண்டிருந்த கண்ணீரில் ஒரு துளி கூட விழவில்லை. தென்னந்தோப்பிலும், சுற்றியிருந்த பகுதிகளிலிருந்தும் துளி சத்தமுமில்லாத அமைதி. முற்றும் தெளிந்துபோன நிறை போதை. அவனைப் பார்க்காத போதும் இளங்கோவால் உணரமுடிந்த சாமியப்பனின் பார்வை. என்றுமில்லாத திருநாளாய் அன்று அவனை விட்டு விலகி அமர்ந்திருந்த சாமியப்பன். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கருப்புப்பூனையும் அதன் பார்வையும் என அனைத்தும் கூடி அந்த இரவுக்கு ஒரு அமானுஷ்யத்தன்மையை ஏற்றியிருந்தன. இளங்கோவுக்கோ அனைத்தும் கனவில் நடப்பது போன்ற பிரமை எழுந்தது. ஆனால் இவை அனைத்தும் கடந்த ஒரு உலகில் சாமியப்பன் இருந்தார். தண்ணீர் கூட குடிக்கவில்லை. இடையில் ஓரிரு நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டதோடு சரி. அவரின் பால்ய கால நினைவுகள், அவரது அப்பாவிடம் கேட்ட கதைகள், மகன் மீது அவருக்கிருந்த பிரியம், அவனிடம் சொல்ல எண்ணிய விசயங்கள் என அவரது மொத்த ஆயுளுக்குமாகச் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் ஏற்கனவே தொகுத்துக் கொண்டவர் போலச் சொல்லிக்கொண்டே இருந்தார். இளங்கோவுக்குக் களைப்போ சலிப்போ ஏற்படவே இல்லை. நேரம் போகாமல் அப்படியே நின்றுவிட்டதைப் போல, சூழலும் எவ்வித மாற்றங்களுமின்றி நீடித்திருந்தது.

காலமற்ற வெளியில் ஏதோ ஒரு அழைப்பு வந்தவர் போல திடீரென தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் சாமியப்பன். அந்தப் பூனையைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு எழுந்தார். அவனைப் பார்த்த அந்தப்பூனையின் பார்வையில், புதிதாகச் சினேகம் முளைத்தது போல இளங்கோவுக்குத் தோன்றியது.

“செரி, முடிஞ்சது. ஏதோ இந்த மட்டுக்கும், ஒங்கிட்ட பேசுறதுக்காவது ஒரு கொடுப்பினை இருக்குதேன்னு ஒரு சின்ன ஆறுதல். நீ தூங்கு கண்ணு. எனக்கும் நேரமாச்சு”

சாமியப்பனையும், அவரது அணைப்பில் அந்தப்பூனையையும் அப்போது பார்க்க, ஆட்டுக்குட்டியை அணைத்துக்கொண்டிருக்கும் ஏசுபிரானின் நினைவு இளங்கோவுக்கு எழுந்தது. அதுவே கடைசி நினைவு. மயங்கி விழுந்தவன் போல தூங்கத் துவங்கினான் அவன்.

**

”டேய், பைத்தியக்கார நாயி, எந்திரி, எந்திருச்சுத்தொல சனியனே”

அரவிந்தின் குரல் எங்கோ கிணற்றின் அடி ஆழத்திலிருந்து ஒலிப்பதைப் போல இளங்கோவுக்குக் கேட்டது. தொடர்ந்து முகத்தில் மீது வலுவான அறைகள் விழுவதைப்போல நீரடிக்கப்பட்டது. மெல்லத் தடுமாறியபடியே எழுந்து தரையில் அமர்ந்தான் இளங்கோ. தான் எங்கேயிருக்கிறோம் என்பது அவனுக்குப் பிடிபடவேயில்லை. சில நிமிடங்களில் எதிரிலிருந்த அரவிந்தின் முகம் துலங்கியது. தான் அரவிந்தின் தோட்டத்துக்கு வெளியே படுத்துக்கிடப்பதும், சற்றுத்தள்ளி இரும்புகேட்டுக்கு முன்னாலிருக்கும் பள்ளத்தினருகில் தன்னுடைய வண்டி கீழே விழுந்து கிடப்பதும் தெரிந்தது. ஆனால், இரவில் அந்தப்பள்ளத்தில் விழாமல் சமாளித்தது, தோட்டத்துக்குள் வண்டியை நிறுத்தியது, தொடர்ந்து தென்னை மரத்தடியில், பௌர்ணமி வெளிச்சத்தில் சாமியப்பனிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தது என அனைத்தும் துல்லியமாக நினைவில் எழுந்தன. இளங்கோவுக்கு பெரும் குழப்பம் நேர்ந்தது. முகத்தில் மேலும் சிலமுறை நீரடித்தபின் இளங்கோவை கைத்தாங்கலாகத் தூக்கி அருகிலிருந்த கல்லின் மீது அமரவைத்தான் அரவிந்த்.

“நேத்து ராத்திரி 8 மணில இருந்து போன் பண்ணிட்டே இருக்கேன் நாட் ரீச்சபிள், நாட் ரீச்சபிள் னே வருது. உம்மட ஆபிசு கூட்டாளிககிட்ட கேட்டா, அவனுங்க நீ 8 மணிக்கே டாஸ்மாக்ல இருந்து கெளம்பிட்டன்னு சொன்னானுக. மப்பெல்லாமில்ல, தெளிவாதான் கிளம்பினன்னு சொன்னாங்க. செரி ஊட்டுக்கு போயிருப்பன்னு நெனச்சேன். காலில பக்கத்துத் தோட்டத்துக்காரரு யாரோ நம்ம தோட்டத்துக்கு முன்னாடி வுழுந்து கெடக்குறான்னு போன் பண்ணுனாரு வந்து பாத்தா நீயி. நீ எப்ப வந்த ? எங்கிட்ட சொல்லவேயில்ல.”

அரவிந்தின் கேள்விகள் சற்றே உறைக்கும் நிதானத்துக்கு வந்திருந்தான் இளங்கோ.

“நாட் ரீச்சபிளா? இல்ல அரவிந்து, நான் தோட்டத்துக்கு வாரதுக்கு மின்னாடியே ஒனக்கு போன பண்ணலாம்ன்னு பாத்தேன். எம்பட போனு சுவிட்சு ஆப் ஆயிருந்தது. எப்புடியிருந்தாலும் நீ வந்துருவன்னு ஏதோ ஒரு ரோசனைல நேரா தோட்டத்துக்கு வந்துட்டேன். தோட்டத்துக்குள்ளாரதான் இருந்தேன். ஆனா, வெளில எப்புடி வுழுந்தேன்னு தெரியுல. வண்டியயும் உள்ளுக்குள்ளாறதான் நிப்பாட்டிருந்தேன். நம்ம சாமியப்பன் வேற…” மேலும் தொடரவிடாமல் டக்கென்று இடைமறித்தான் அரவிந்த்.

”ஒனக்குத் தெரியுமா ?. பெருங்கொடும. அத சொல்லத்தான் நான் ஒனக்கு போன் பண்ணிட்டே இருந்தேன். நாங்கூட நேத்து ராத்திரி அங்க பொன்னாபுரத்துல அவங்கூட்டுலதா இருந்தேன்”

”யாருக்கு கொடும ? என்ன கொடும? ஒரு மயிரும் வெளங்கல. தயவுசெஞ்சி வெளக்கமா சொல்லு.”

“என்னத்த வெளக்கறது. இந்தாளு சாமியப்பனோட பையன் மொட்டக்கெணத்துல கால்தவறி வுழுந்து ஸ்பாட் அவுட்டு போல. அவிங்க பங்காளி மாமம் மச்சான் எல்லாருமா சேந்து, அவிங்களே எரிச்சு காரியமெல்லாம் முடிச்சிட்டாங்க. இவருக்கு ஒரு தகவல் கூட கொடுக்கல. அட பொண்டாட்டிக்காரி சொல்லனாலும் போச்சாது, ஊர்க்காரனுங்களாவது தாக்கல் சொல்லிருக்கலாம். அப்புடிகிப்புடி யாராவது இந்தாளுக்கு தாக்கல் சொல்லிவுட்டா தானும் நாண்டுக்குவேன்னு மெரட்டி அடுத்தவன் சொல்லுறதையும் அந்தப் பொம்பள தடுத்துப்போட்டா. நேத்திக்கு மத்தியானம், பொதங்கெழம சந்தைக்கி ஊத்துக்குளி போனவருக்கிட்ட ஆரோ விசியத்த சொல்லிருக்காங்க. பிதிறு புடிச்சவறாட்டம் அங்கிருந்து அப்புடியே நேரா பொன்னாபுரத்துக்கு போயி, பொண்டாட்டிகிட்ட ஏக ரகள. பேச்சு முத்திப்போயி அடிதடி வரைக்கும் போக, ஒரு கட்டத்துல அவ, ”ஒனக்கெதுக்குடா சொல்லோணும் வக்கத்த நாயி? அவன் ஒனக்கே பொறக்கலடான்னுட்டா”. ஏற்கனவே பையன தொலைச்ச சோகம். கூடவே, ஊருக்கு முன்னால இந்த அசிங்கம் வேற, மனுசன் இடிஞ்சு போயி, திண்ணைல சாயங்காலம் வரைக்கும் அப்புடியே உக்காத்துட்டாராம். கூட்டம் சமாதானம் சொல்லி கலஞ்சதும், அங்கிருந்த சீமெண்ணய எடுத்து மேல ஊத்திக்கிட்டு பத்தவெச்சுட்டாப்ல. ஆளும் பேருமா சேந்து காப்பாத்தி குன்னத்தூர் ஆசுபத்திரிக்கி எடுத்துட்டு போகும்போதெ அர உசிரு போயிருச்சு. ஆசுபத்திரிக்கு வந்தப்புறம்தான் எங்களுக்கு தகவல். சேதி கேட்டு நானும் எங்கப்பாவும், ஆறு மணிக்கே குன்னத்தூரு ஆசுபத்திரிக்குப் போயிட்டோம். ஒரு புண்ணியமுமில்ல, நேத்து ராத்திரி, செரியா எட்டு மணிக்கு, சுத்தமா மூச்சு நின்னு போச்சு.”

இளங்கோவுக்கு நன்றாக வேர்த்திருந்தது. போதை முற்றிலும் இறங்கிவிட்டது. சாமியப்பனின் குரல், கதைகள், கண்ணீர் தளும்பி நின்ற விழிகள், கருப்பு நிறப் பூனை என அனைத்துமே கலந்த நேற்றிரவு துல்லியமாக நினைவிலிருந்தது. அடி முதுகிலிருந்து, ஒரு மெல்லிய சிலிர்ப்பு போன்றதான உணர்ச்சி உடலெங்கும் பரவியது. குழப்பம் பீதியாக மாற, குழறும் குரலில் அரவிந்திடம் சொன்னான்

“இல்லடா, ராத்திரி தோட்டத்துல எங்கிட்ட பேசிட்டிருந்தாறே”

“யாரு சாமியப்பனா? செரியாப் போச்சு போ. எனக்கு அப்பவே சந்தேகம் ரெண்டு பீர தாண்டுனாலே நம்மாளுக்குத் தாங்காதே அப்புடின்னு. உம்மட கூட்டாளிக அப்பவே சொன்னானுக. பிராந்தியையும் பீரையும் கலந்தடிச்சும் கூட நெதானமா கெளம்பினாருன்னு. செத்த நேரத்துல குப்புன்னு தூக்கிருச்சு பாத்தியா. வண்டிய கூட நிறுத்த முடியாம வுழுந்து கெடக்குற. மப்புல கெனாமாதிரி எதாச்சும் கண்டுருப்ப. சனியன வுடு. இந்த நெலமைல நீ வூட்டுக்குப் போகாம இங்க வந்ததும் ஒரு விதத்துல நல்லாதாப் போச்சு”

குழப்பம் தீராத இளங்கோ, “இல்லடா … “ என ஏதோ சொல்லத்துவங்க இடைமறித்தான் அரவிந்த்

“என்ன லொல்லடா? அந்தாள நீதாம் மெச்சிக்கணும். எங்கப்பந்தான் நேத்து இவரு கதய சொன்னாரு. அவங்கூர்ல, தலக்கட்டு தலக்கட்டா அவங்களது நல்ல மருவாதியான குடும்பம். அந்தாளு நம்பள விடப் பெரிய சொத்துக்காரராம். சும்மா எம்புருசனுங் கச்சேரிக்கிப் போறான்கற கதையா, வெதச்சோம் தின்னோம்ன்னே இருந்திருக்காப்புல. ஒண்ணியும் சேத்தும் வெக்கல, உருப்புடியும் பண்ணுல. அந்தப் பொம்பள நெலமல இருந்து ரோசன பண்ணிப்பாரு. சுத்திலும் இருக்குறவனுங்க பூராம் வெகரமா பொழைக்கறப்ப, தன்னோட ஆம்புளயும் கொஞ்சம் சூதானமா இருக்கோணும்ன்னுதான அவளும் நெனப்பா. பத்தாததுக்கு தாம்புள்ளயும் புருசன மாதிரியே ரூப்பில்லாம போயிரக்கூடாதுன்னுதான் நெனவு தெரியறதுக்கு முந்தியே அப்பனவுட்டு தள்ளியே வளத்தாளோ என்னமோ. ஆனா இந்தாளுக்கு பையன் மேல அம்புட்டுப் பிரியமாமா. மாமியா வூட்டுக்குப் போயி மறைஞ்சிருந்து புள்ளய பாக்குறது, அவம் படிக்கற பள்ளிக்கூட வாசலு, வெளயாடப் போற எடம்ன்னு எப்ப எங்கயிருப்பாருன்னே சொல்ல முடியாதாமா. அதான் அவன் இல்லீங்கற வெசனத்துல இவரும் இப்புடிப் பண்ணீட்டாரு. குன்னத்தூரு டாக்டரு எங்கப்பாவுக்கு தெரிஞ்சவருங்கறதால, போலீசு கேசுனெல்லாம் ஆகாம பேசிக்கீசி, ராத்திரியோட ராத்திரியா செய்யவேண்டியதெல்லாம் செஞ்சு, எரிச்சும் முடிச்சிட்டோம். செரி அவரு கத இப்புடி முடியணும்ட்டு இருந்திருக்குது போல.”

பேசிக்கொண்டே, கீழே விழுந்து கிடந்த இளங்கோவின் வண்டியை எடுத்து ஸ்டாண்டு போடு நிறுத்திய பின், இரும்புக்கதவைத் திறந்து தோட்டத்துக்குள் நுழைந்தான் அரவிந்த். சுத்தமாகப் போதை தெளிந்து நல்ல நிதானத்துக்கு வந்திருந்தான் இளங்கோ. நேற்றிரவு நடந்தவைகள் குறித்து எந்தவொரு முடிவுக்கும் வர இயலாதவனாய் தவித்தான் இளங்கோ. தோட்டத்துப்பக்கம் பார்வையைச் செலுத்தவே அவனுக்குப் பயமாக இருந்தது. உடனடியாக அங்கிருந்து கிளம்பியே ஆகவேண்டும் என எண்ணினான்.

“செரி, நா கெளம்புறேன் மாப்ள, ஒருவேள அப்பனாத்தா வந்திருந்தாலும் வந்திருப்பாங்க. ராத்திரில இருந்து செல்லு வேற சுவிட்சு ஆப்பு. சீக்கிரம் வூட்டுக்குப் போகோணும்”

இளங்கோவில் குரலில் இருந்த தெளிவு, அரவிந்துக்கு நம்பிக்கையைத் தந்தது.

“செரி எளங்கோ. இனி இந்தமாதிரி சரக்குகள கலந்தடிக்குற வேல வெச்சிக்காத. நெற போதைல நம்மளுக்கு என்ன நடக்குது ஏது நடக்குதுனே தெரியாது. மனச போட்டு ஒலப்பாம இரு. ஊட்டுக்கு போயி போன் சார்ஜ் ஆனதும் எனக்கு ஒரு மெசேஜ் தட்டிவுடு என்னா?”

சொல்லிவிட்டுத் தோட்டத்துக்குள் சென்றான் அரவிந்த். அரவிந்த் பார்வையிலிருந்து மறையும்வரை தோட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் இளங்கோ. அந்தக் காலையில் தோட்டம் மிக வித்தியாசமாய் இருப்பதுபோல் தோன்றியது. குழப்பம் நீங்காமல் வண்டியை நோக்கிச் செல்ல திரும்பினான். அப்போது, அவனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல்போன் ஒலித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.