அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்-அசோக்ராஜ்

லையைச் சுற்றி தரையில் சுமார் அரை அடிக்கு இரத்தம் கசிந்தபடி மல்லாந்து கிடந்த கிழவியை ஊன்றி ஒரு நிமிஷம் பார்த்தேன். கிழவியின் கண்கள் அநியாயத்திற்கு விழித்தன. ஒரு வித மிரட்சி இருந்தது.  காது, கழுத்து, கைகள் என எதிலும் நகை இல்லை.  மேலே சன்னமான உராய்வு ஒலியுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீலிங் ஃபேனை வெறித்தபடி இறந்து கிடந்தாள். 

அடிக்கடி இப்படி யாருமில்லாத, கொஞ்சம் பணக்கார வீட்டிலிருக்கும் மூதாட்டிகளை நகைக்காகக் கொல்லும் கும்பல் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.   கான்ஸ்டபிள் மணிகண்டனை அழைத்து,

”ஃபோன் பண்ணது யாரு?” என்றேன்.

”ஸார்.. யாரும் ஃபோன் பண்ணலை.. ஏம்பா இங்க வா..” என்று ஒருவனைக் கைக்காட்டி அழைத்தான் மணி.  வந்தவன் வசவசவென்ற தாடியுடன் பரட்டைத் தலையனாக இருந்தான்.  அழுக்கேறிய ஊதா ஜீன்ஸ், கிட்டத்தட்ட பழுப்பாக மாறியிருந்தது.  அவன் தோளுக்கு நிற்காத ஒரு தொள தொள டீ சர்ட்டை அணிந்திருந்தான்.  கண்கள் பயந்தனவா அவ்விதம் நடித்தனவா என்று குழம்பினேன்.  சற்றே குனிந்து நெஞ்சு வரை கையை உயர்த்தி பவ்யமாக வணக்கம் வைத்தான்.

”இவன் தான் ஸார்.. ஸ்டேஷனுக்கே வந்து சொன்னான். இந்த ஏரியா பால் காரனாம்.”  என்றான் மணி.

”உன் பேர் என்ன?” அவன் கண்களைப் பார்த்தேன்.

”அருணகிரி ” என்றான்.  என் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

”பால் எப்ப போடறே.. பதினோறு மணிக்கா?” என்றேன்.

”ஸார் இன்னிக்கு அஞ்சாம் தேதி. வழக்கமா அஞ்சு தேதில பால் காசு வாங்க வருவேன். மாசக் கணக்கு ஸார். வந்து பார்த்தேன். கதவு ஒருக்களிச்சு சாத்தியிருந்துச்சு. ரெண்டு மூணு தடவை சத்தமா கூப்பிட்டுப் பார்த்தேன். யாரும் வரலன்னுட்டு கதவைத் தொறந்தேன். மிரண்டுட்டேன் ஸார். என் கைரேகை கதவுல பட்ருக்கும் அதான் பயந்துட்டு ஸ்டேஷன் வந்துட்டேன்.”

”ஸ்டேஷன் வந்து யார் கிட்ட சொன்னே?”

”இவர் கிட்ட தான்…” என்று மணியைக் கை காட்டினான்.

மணி ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனைக் கண்களால் தடுத்தேன்.

”அருணகிரி.. உன் நம்பர், அட்ரஸ், உன் பால் பூத் அட்ரஸ், உன் முதலாளி பேர், நம்பர் எல்லாத்தையும் கான்ஸ்டபிள் கிட்ட கொடுத்துட்டுப் போ.. எந்த விதமான ஸ்மார்ட்னஸும் போலீஸ் கிட்ட காட்டாதே… மாட்டிப்பே. நீ இன்னொசெண்ட்ங்கறதை விட உண்மையா இருக்கறது ரொம்ப முக்கியம். புரியுதா?”

”ஸார்.. நான் எதுவும் பண்ணலை ஸார்..” என்ற அருணகிரியை போலீஸ்காரனாக பாதி நம்பினேன். அதாவது பாதி நம்பவில்லை.

மணியை அழைத்து ஒரு கொலைக்காட்சியின் தொடர்ச்சியான போலீஸ் விருந்தோம்பல்களை வரிசைப் படுத்தினேன். அவனுக்கும் அந்த வரிசை தெரியுமென்றாலும் சில விஷயங்கள் கூடலாம் குறையலாம். அது அந்தந்த கொலைக் களத்தைப் பொறுத்தது.

”இந்த அம்மாவோட மகன் எங்க போயிருக்காருனு சொன்னே..?”

”பக்கத்துல தூவாக்குடில ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தாராம். ஃபேமிலியோட. பக்கத்து வீட்ல நம்பர் வாங்கி விபரம் சொல்லி, கார்ல வந்துட்டிருக்கார்.”

”நீ என்ன நினைக்கிறே மணி..?” என்றேன். எப்போதும் கேட்கிற கேள்வி தான். மணியிடமிருந்து ஒரு வெள்ளையான உள்ளுணர்வு வரும். சாமான்யமானதாக இருக்கும். எனக்கு அதிலிருந்து விலகி வேறு கோணத்தில் என் மூளையைச் செலுத்த உதவிகரமாக இருக்கும். அதற்காகவே நான் மணியைச் சீண்டுவதுண்டு. ‘சொல்லு மணி நீ கிழக்குல போகச் சொன்னா நான் மேற்கால போகலாம் பாரு’ என்பேன்.

மணி, நான் எதிர்பார்த்தது போல் ”கிழவி நகை போட்டிருக்குமாம் ஸார். கழுத்துல காதுல எல்லாம் சேர்த்து ஒரு பதினைஞ்சு பவுன் தேறுமாம். மொட்டையாக்கிட்டு போயிருக்கானுவ.. போன மாசம் சோழன் நகர்ல ஒரு பாட்டி பெட்ரூம்ல இதே மாதிரி கிடந்துச்சே..! சொல்ல முடியாது ஸார்.. அதே குரூப்பாகக் கூட இருக்கலாம். கமிஷனர் கத்தப் போறார்.. ” என்றான்.

”கத்தினா அவர வந்து விசாரிக்கச் சொல்லுவோம்” என்று கண்ணடித்துவிட்டு ஹாலுக்கு வெளியே வந்தேன். தெருவை அடைத்துக்கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தை விரட்ட உத்தரவிட்டேன்.  தெரு முக்கில் டீ குடிக்கவோ தம் அடிக்கவோ வழக்கம் போலச் சென்ற என் சக போலீஸ் சிகாமணிகளை இங்கிருந்தே விசிலடித்து அழைத்தேன்.  எல்லா ஸ்டேஷனிலும் இருக்கும் சில மண்ணு முட்டுகள் போல எனக்கும் வாய்த்திருக்கிறார்கள்.

ஓடி வந்தவர்களிடம் ”உள்ள போய் ஏதாவது.. கண்டுபிடிங்கய்யா” என்றுவிட்டு தெருவில் நின்று வீட்டை முழுதாகப் பார்த்தேன். கட்டி பதினைந்து வருஷமாவது இருக்கும். பழைய மாடல். மாடியைப் பார்த்தேன்.

மணியை அழைத்து  ”மேல வாடகைக்கு விட்ருக்காங்களா?”

”ஆமா ஸார்.”

”போய் விசாரிச்சீங்களா?”

”ஸார் அந்த பையன் சொன்ன அஞ்சாவது நிமிஷம் நாங்க ஸ்பாட்டுக்கு வந்துட்டோம் உங்க கிட்ட ஃபோன்ல சொன்ன அடுத்த அஞ்சாவது நிமிஷம் நீங்களும் வந்துட்டீங்க… அதிலருந்து..”

”போதும் மணி.. பி ப்ரிஸைஸ்.. மேல போ.” நானும் படியேறினேன்.

கதவை நாலு முறைத் தட்டி இரண்டு நிமிஷம் கழித்ததும் கதவைத் திறந்தது ஓர் இளம் பெண்.  வயது இருபது இருக்கலாம்.

எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் ”என்ன ஸார்…?” என்றாள். பரு முகம். சங்குக் கழுத்து. தங்கச் சங்கிலி.  ஜிப் வைத்த நைட்டி அணிந்திருந்தாள். அதன் நுனி கழுத்துக்குக் கீழே சற்றே திறந்திருந்தது. இளமை. சின்ன நைட்டியை வாங்கிவிட்டாளா.. அல்லது அதை வாங்கிய பிறகு ஓவராகத் தின்றதால் பெருத்துவிட்டாளா என்று குழம்பும் ரீதியில் உடையும் உடலும் ஒருவாறு ஒட்டிக் கொண்டிருந்தன. விண்ணென்று இருந்தாள். உள்ளே….. போலீஸ்காரன் விஜய்க்கு  எக்ஸ்ரே கண்கள் என்று என் மனைவி சொல்வாள்.

”கீழே அந்த அம்மாவை கொன்னுருக்காங்க தெரியும்ல..?” என்றான் மணி.

”ஆமா.. வீட்ல யாரும் இல்ல ஸார். அம்மாவும் அப்பாவும் கல்யாணத்துக்குப் போயிருக்காங்க.. ”

நான் மாடிப் படிக்கட்டுகளில் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு சாய்ந்தபடி அவள் பாடி லேங்குவேஜை….

”அவங்களுமா.. எங்க வெளியூரா?” மணி கேட்டான்.

”இல்ல லோக்கல் தான். ஃபோன் பண்ணிட்டேன். வந்துடுவாங்க..”

”வர்ற வரைக்கும்.. உள்ளே வரலாமா.. சும்மா ஃபார்மாலிட்டி தான். உனக்குத் தெரிஞ்சத சொல்லுமா..” என்றான் மணி.

”ஸார் எனக்குப் பயமா இருக்கு ஸார். அப்பா வந்துடட்டும். நீங்க வேணா கீழ வெயிட் பண்ணுங்க..”

”என்ன மா பயம்? போலீஸ்காரங்க… ”

”மணி போதும். வா” என்றுவிட்டு ”உன் பேர் என்னம்மா?” என்றேன் அவளிடம். ”ஹேமா” என்றவளை அலட்சியம் செய்து அந்த தளத்திற்கும் மேல் இருந்த மொட்டை மாடிக்குச் சென்றேன்.  ”அங்க என்ன ஸார்”  என்று கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தான் மணி.

மொட்டை மாடியின் இலக்கணப்படி கலவையாகத் துணிகள் காய்ந்தன. ஆயிரம் லிட்டர் கருப்பு சிண்டெக்ஸ் தொட்டி. அருகே ஒரு மர பெஞ்சில் வரிசையாக ரோஜாச் செடிகள்.  வெடுக்கென்று அச் செடிகள் என்னைக் கவர்ந்தன.

”மணி.. அந்தச் செடிகளைப் பாரேன்” என்றேன்.

”ஸார் கீழ பாடி கிடக்கு… அதை விட்டுட்டு.. இங்க வந்து செடியை.. ”

”நைஸ் ஜோக்.. பட் சிரிப்பே வரலை.. பாருய்யான்னா.. ”

மணி திரும்பிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான்.  நான் செடிகளின் அருகே சென்றேன். ”எல்லாமே ரோஸ் தான்.. ஆனா பூத்த பூவெல்லாம் பிச்சு கீழ கிடக்குப் பாரு.” என்றேன்.

மணி உற்றுப்பார்த்துவிட்டு ”ஆமா ஸார்.. மொக்கெல்லாம் கூட பிச்சிருக்கு..ஏதாவது பறவை.. பூனை!” 

மணியின் கேவலமான கணிப்பை வியந்தபடியே அச்செடிகளை என் மொபைலில் படம் பிடித்துக் கொண்டேன். கட்டிடத்தின் பின் பகுதியை எட்டிப்பார்த்தேன். நேர் கீழாக ஒரு பெரிய சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது.

”மணி இந்த சாக்கடையைக் கிளறச் சொல்லு..” என்றேன். மேலே ஏறி வந்த கான்ஸ்டபிள் சத்யா(என்னை விட மூத்தவர்)  ”ஸார் அந்தம்மாவோட மகன் வந்துருக்கார்” என்றார். கீழே இறங்கினேன்.  அந்தப் பெண் ஹேமா எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  நாங்கள் வருவதைக் கண்டு உள்ளே தலையை இழுத்துக் கொண்டாள். 

கீழே கிழவியின் மகன், மருமகள், அவர்களின் மகன் தோற்றதில் ஒரு பையன் மூவரும் அந்த அம்மாவின் கோர மரணத்தில் அலறிக் கொண்டிருந்தார்கள்.  பத்து நிமிஷம் பொறுத்தேன். மணியிடம் ஜாடை காட்டினேன்.

கிழவியின் மகனிடம் வழக்கமான கேள்விகள்.

யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா? கிழவியின் பெயரென்ன, வயசென்ன, எத்தனை பிள்ளைகள். அவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள்.  எனக்கு எப்போதும் இப்படியான சம்பிரதாயக் கேள்விகள் கேட்பதில் மெகா கொட்டாவி வரும். யாரையாவது கேட்கச் சொல்லிவிட்டு விலகிவிடுவேன்.  இப்போதும் சத்யாவை அழைத்து ”ஏதாவது கேளுங்க..?” என்றுவிட்டு நகர்ந்தேன்.

மணியிடம் ”சாக்கடையைக் கிளற..”

”ஸார்.. முனிசிபாலிட்டிலேருந்து ஆள் வந்துட்டான்.. சுத்தம் பண்ணிட்டிருக்கான்..” என்றான் மணி.

வீட்டின் பின்பக்கம் சென்றேன்.  முனிசிபாலிட்டியிலிருந்து ஒருவன் சாக்கடையைத் தூர் வாரிக் கொண்டிருந்தான். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தேன்.  க்ரைம் சீனில் நான் பற்ற வைக்கும் சிகரெட் ஒரு துப்பறியும் சாம்பு மாதிரி.  அந்த நேரத்தில் கேஸை எந்த ரூட்டில் கொண்டு செல்வது உசிதம் என்று எனக்குத் துப்பு துலங்கவில்லை எனில் நிச்சயம் அந்த கேஸ் இழுவை தான்.

பற்ற வைத்து ஐந்து செகண்டுகளுக்குப் புகையை உள்ளே இழுத்தேன்.  சாக்கடை தூர் வாருவதை உற்றுப் பார்த்துக்கொண்டே மெதுவாக மூக்காலும் வாயாலும் புகையை வெளியேற்றினேன்.  மூளை சற்றே சுறுசுறுப்படைந்தது. அந்தப் பிய்ந்த ரோஜாப் பூக்கள் மனதில் அலையடித்தன.  ஒரு குரங்கு மாதிரி தலையைச் சொறிந்து கொள்வதைப் பார்த்த மணி சிரித்தான்.

”சாக்கடைல என்ன சார் கிடைக்கப் போகுது. இது கண்டிப்பா அந்த கொலைகாரப் பயலுவ தான் சார்..”  என்று மணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே..  முனிசிபாலிடி ஆள் சாக்கடையிலிருந்து நிமிர்ந்து ”ஸார்..” என்று கத்தினான்.

”இங்க வாங்களேன்..” என்றவனின் அருகே சென்றேன். கையில் வைத்திருந்த குச்சியால் ஒரு பாலீதீன் பையைக் குத்தி எடுத்து கீழே போட்டான்.  முடிச்சு போட்டிருந்த அந்த பை கண்ணாடி மாதிரி உள்ளே இருந்தவற்றைக் காட்டியது.

பிரிக்கச் சொன்னேன்.  ஒரு தங்கச் சங்கிலி, இரண்டு வளையல், இரண்டு கல் தோடு.

மணி ”ஸார்.. நிச்சயமா அது இந்த கிழவியோடது தான் ஸார்.. அப்ப கொலை நகைக்காக இல்லயா..?”  என்றான். ஒரு வித பதற்றம் இப்போது தான் அவனைத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

பாதி கரைந்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டேன். அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்.  நடந்தேன். அந்தப் பிய்ந்த ரோஜாக்கள். வீட்டின் முகப்பருகே வந்தேன். நகைகள் கிழவியுடையது தானா என்று ஊர்ஜிதம் செய்து கொண்டேன். அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்.

சத்யாவை அழைத்தேன். ”ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சிட்டா.. பாடியை போஸ்ட் மார்ட்டம் அனுப்ப ஏற்பாடு பண்ணுங்க.. இந்த ஏரியால எங்க சிசிடிவி, அதோ அங்க இருக்கு பாருங்க.. அங்கேருந்து இந்த வீடு கவராகும்.  அந்த ஃபுட்டேஜ்

கலெக்ட் பண்ணிக்குங்க..நீங்களே எல்லாத்தையும் செய்ய முடியாது. வேலைய பிரிச்சுக் கொடுங்க ஃபுட்டேஜ் மஸ்ட்” என்றுவிட்டு மணியைப் பார்த்து,

”அந்தப் பையன் பேரென்ன?” என்றேன்.

”அருணகிரி”

”அவனை ஸ்டேஷன் வரச் சொல்லு.. ” என்றேன். யோசித்தேன். வேண்டாம் என்று பட்டது. அந்தப் பிய்ந்த ரோஜாக்கள். அடிக்கடி அந்த பிய்ந்த ரோஜாக்கள் மனதில் ஒரு மாதிரி நெருடிக் கொண்டிருந்தது.

மணியை அழைத்து பைக்கை எடுக்கச் சொன்னேன். ”அருணகிரி வேலை பார்க்கிற பால் பூத்துக்குப் போ…” என்றேன்.

ஐந்தாவது நிமிடம், அந்த அருணகிரியிடம் நான் கேட்ட விவரங்களை அருகில் கேட்டுக்கொண்டிருந்த மணியின் கண்கள் கரிய குடை போல் விரிந்தன.  என்னையும் அருணகிரியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவன், ”எப்பப் பார்த்தாலும் மாடில நின்னுட்டு ஃபோன் தான்…” என்று அருணகிரி சொல்லும் போது வாயைப் பிளந்தான்.

கிளம்பும் போது ”இப்ப எங்க போறோம் தெரியுமா?” என்றேன் மணியிடம்.

சொன்னான். ”அட உன் மூளையே மூளை” என்றேன். 

”கிண்டல் பண்ணாதீங்க ஸார்” என்றவனிடம் ”அதுக்கும் முதல்ல அந்தத் தெரு சிசிடிவி ஃபுட்டேஜ்  பார்க்கணும் சத்யாவுக்கு ஃபோன் போடு..”

சத்யா எடுத்து வந்த லேப்டாப்பில் சிசிடிவி தடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  கிழவியின் மகன் குடும்பம் திருமணத்திற்கு காரில் கிளம்பும் போது வெளியே வந்து வழியனுப்பும் கிழவி, உள்ளே சென்ற பிறகு வெளியே வரவேயில்லை. அதற்குப் பிறகு அருணகிரி வருவதும், அவன் பதறியடித்து ஓடி வருவதும், சற்று நேரத்தில் எங்கள் கான்ஸ்டபிள் பட்டாளம் ஜீப்பில் வந்து இறங்குவதும், கொஞ்ச நேரத்தில் நான் பைக்கில் வந்து இறங்குவதும்… அப்படியென்றால் கிழவி வீட்டிற்கு வெளியிலிருந்து யாரும் வரவில்லை. அருணகிரியைத் தவிர.

கொலையுண்ட கிழவியின் வீட்டிலிருந்து பாடி போஸ்ட் மார்ட்டம் சென்றிருந்தது. உறவினர்கள் கூடியிருந்தனர். கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்ற என்னைக் கிழவியின் மகன் எழுந்து வரவேற்றார்.

”ஒரு நிமிஷம்.. ” என்று விட்டு மாடிக்குச் சென்றேன்.  ஹேமா வீட்டுக் கதவைத் தட்டினேன்.

ஹேமாவின் அம்மா போல.. அவளைப் போலவே இருந்தார். ”உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசணும்..?” என்றேன். முகம் பூராவும் கலவரம் விரவிக் கிடக்க, ஹேமாவின் அப்பா உள்ளிருந்து வந்து ”என் பொண்ணு கிட்ட என்ன?” என்றார்.

”உங்க பொண்ணே சொல்வாங்க..” என்றுவிட்டு அவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். ஹேமாவை அழைத்து குருட்டாம் போக்கில், ஒரு வலுவான அனுமானத்தில் ”வாம்மா.. உண்மையைச் சொல்லிடு..” என்றேன்.

அவள் பொலபொலவென்று அழ ஆரம்பித்தாள்.

அத்தனை வாக்குமூலத்தையும் என் செல்ஃபோனில் பதிவு செய்து கொண்டாலும் மறுபடி ஒருமுறை ஸ்டேஷனில் சொல்ல வேண்டிவரும் என்பதை ஹேமாவிடம் தெரிவித்துவிட்டு அவள் அப்பாவிடம் திரும்பினேன்.

”திட்டமிட்ட கொலை இல்லை. வாக்குவாதம் மீறிப் போய் கீழ தள்ளி விட்டதுல தலைல அடிபட்டு இறந்துருக்காங்க. இருந்தாலும் குற்றம் குற்றம் தான். டைவர்ட் பண்ண நினைச்சு நகைகளை ஒளிச்சதும் பெரிய தப்பு. நேரா வந்து சரணடஞ்சிருக்கணும். குறைந்தபட்ச தண்டனை கிடைக்க ட்ரை பண்றேன்.  ஜீப் வேணாம். ஸ்டேஷன் அழைச்சிட்டு வந்துடுங்க!” என்றேன்.  ஏதாவது பதில் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். சிலை மாதிரி நின்று கொண்டிருந்தார்.

மாலை எந்த நியூஸ் சேனலை வேண்டுமானாலும் பாருங்கள்.. கீழ்வரும் செய்தியை நீங்கள் கேட்க நேரலாம்.

திருச்சியில் காதலனிடம் செல்ஃபோன் பேசிக் கொண்டே பூச்செடிகளைப் பிய்த்ததைக் கண்டித்த மூதாட்டியைக் கீழே தள்ளிக் கொன்ற இளம்பெண் கைது.  கொலையைத் திசை திருப்ப நகைகளை எடுத்து சாக்கடையில் வீசியதையும் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீஸார் கண்டுபிடித்தனர்.  கொலை நடந்து இரண்டு மணி நேரத்தில் துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டர் விஜய்க்கு……!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.