மார்ஸ்டன் பண்ணையில் சோகம்-அகதா கிறிஸ்டி,தமிழில்: ச.வின்சென்ட்

நான் ஊரை விட்டு சில நாட்கள் வெளியே போகவேண்டியதிருந்தது. திரும்பி வந்தபோது பாய்ரோ தனது சிறிய பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார்.

“சரியான நேரம், ஹேஸ்டிங்ஸ். என் கூட வருவதற்குச் சரியான நேரத்திற்கு வரமாட்டீர்களோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.”

“இன்னொரு வழக்கிற்கு அழைப்பு வந்துவிட்டதா என்ன?”

“ஆம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது அது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும். திரு மால்ட்ரேவர்ஸ் என்பவரின் மரணத்தைப் பற்றி விசாரிக்குமாறு நார்தன் யூனியன் இன்சூரன்ஸ் கம்பெனி கேட்டுக்கொண்டுள்ளது. அவர் சில வாரங்களுக்கு முன்னர்தான் அவர்களிடம் ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு உயிர்க் காப்பீடு செய்திருந்தார். பெரிய தொகை.”

“அப்புறம்?” என்றேன் ஆர்வத்துடன்.

“காப்பீட்டு ஆவணத்தில் வழக்கமான தற்கொலை பற்றிய ஒரு நிபந்தனை இருந்தது. ஓராண்டுக்குள் தற்கொலை செய்துகொண்டால் காப்பீட்டுக் கட்டணத் தொகையை இழக்கவேண்டும். குழுமத்தின் சொந்த மருத்துவரே திரு. மால்ட்ரேவர்ஸை சோதித்தார். இறந்தவர் இளைஞராக இல்லாவிட்டாலும். நல்ல உடல் நலத்துடன்தான் இருந்திருக்கிறார். எனினும், சென்ற புதன்கிழமை அன்று, நேற்றைக்கு முன்தினம், எசக்ஸில் அவருடைய மார்ஸ்டன் பண்ணையில் மால்ட்ரேவர்ஸின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மரணத்திற்குக் காரணம் உடலுக்குள்ளே இரத்தப் போக்கு என்று கூறப்பட்டது. அதில் ஒன்றும் குறிப்பிடத்தக்கதாக இல்லை. ஆனால் திரு. மால்ட்ரேவர்ஸின் நிதிநிலை பற்றிப் பல வதந்திகள் இருந்தன. எனவே நார்தன் யூனியன் இறந்து போனவர் திவாலாகும் நிலையிலிருந்தார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துகொண்டது. இது வழக்கிற்குப் புதிய கோணத்தைக் கொண்டுவந்தது. மால்ட்ரேவர்ஸுக்கு அழகான இளம் மனைவி. அவரிடமிருந்த பணத்தையெல்லாம் திரட்டிக் காப்பீட்டுக் கட்டணத்தைக் கட்டித் தன் மனைவிக்குச் சாதகமாகக் காப்பீடு செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டது. இப்படி நடப்பது புதிதில்லை. எப்படி இருப்பினும் நார்தன் யூனியனின் இயக்குநரான எனது நண்பர் ஆல்ஃப்ரட் ரைட் என்னை இந்த வழக்கின் உண்மையை விசாரித்துக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் நான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னதுபோல எனக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. சாவிற்கான காரணம் இதயச் செயலிழப்பு என்றால் எனக்கு நம்பிக்கை இருந்திருக்கும். ஏனென்றால் இதயச் செயலிழப்பை உள்ளூர் பொது மருத்துவர் முன்கூட்டியே கணித்திருக்க முடியாது. ஆனால் உள்ளுறுப்புகளில் இரத்தக் கசிவு என்பது அப்படி இல்லை. எனினும் நாம் விசாரணை செய்து பார்ப்போம். உங்கள் பையைக் கட்டுவதற்கு ஐந்து நிமிடங்கள்தான், ஹேஸ்டிங்ஸ். லிவர்பூல் தெருவிற்கு ஒரு டாக்சி எடுத்துக் கொள்வோம்.”

ஒரு மணிநேரம் கழித்து கிரேட் ஈஸ்டர்ன் இரயிலிலிருந்து மார்ஸ்டன் லே என்ற சிறிய ரயில் நிலையத்தில் இறங்கினோம். இரயில் நிலையத்தில் கேட்டபோது மார்ஸ்டன் பண்ணை ஒரு மைல் தூரத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். பாய்ரோ நடந்து போகலாம் என்று சொன்னதால் பெரிய தெருவழியாக நடந்தோம்.

“உங்கள் திட்டம் என்ன?” என்று நான் கேட்டேன்.

“முதலில் மருத்துவரைப் பார்ப்போம். மாரஸ்டன் லேயில் ஒரு மருத்துவர்தான் இருக்கிறார் என்று உறுதி செய்துகொண்டேன். அவர் பெயர் டாக்டர் ரால்ஃப் பெர்னார்ட். ஆ, அவர் வீட்டிற்கே வந்துவிட்டோம்.”

அந்த வீடு ஒரு உயர்தரக் குடிசை போல இருந்தது. சாலையிலிருந்து சிறிது தள்ளியிருந்தது. வெளிக்கதவில் டாக்டரின் பெயர் கொண்ட பித்தளைத் தகடு இருந்தது. நாங்கள் பாதையைக் கடந்து உள்ளே போய் அழைப்புமணியை அடித்தோம்.

நாங்கள் அழைத்தது நல்ல நேரம் போல. அது மருத்துவர் நோயாளிகளைப் பார்க்கும் நேரமாக இருந்தாலும் நோயாளிகள் ஒருவரும் இல்லை. டாக்டர் பெர்னார்ட் முதியவர், கூன் விழுந்திருந்தது. தெளிவில்லாத ஆனால் இனிமையான தோற்றம்.

பாய்ரோ தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களது வருகையின் நோக்கத்தை விளக்கினார். இதுபோன்ற வழக்குகளில் காப்பீட்டுக் கழகம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கண்டிப்பாக,” என்றார் தெளிவில்லாமல். “அவர் பணக்காரர் என்பதால் அவர் உயிரை அதிகத் தொகைக்குக் காப்பீடு செய்தார்களோ?”

“அவர் பணக்காரர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, டாக்டர்?”

மருத்துவர் வியப்படைந்தது போலத் தோன்றியது.

“இல்லையா? அவருக்கு இரண்டு கார்கள் இருந்தன, தெரியுமா உங்களுக்கு? அவருடைய மார்ஸ்டன் பண்ணை ஒரு பெரிய இடம். அவர் அதை மலிவாக வாங்கினார் என்று நினைக்கிறேன்.”

“அண்மையில் அவருக்கு அதிகம் இழப்பு ஏற்பட்டதாக அறிகிறேன்,” என்றார் பாய்ரோ மருத்துவரைக் கவனமாகப் பார்த்துக்கொண்டே.

ஆனால் மருத்துவர் வருத்தத்துடன் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார்.

“அப்படியா? அவருடைய மனைவிக்கு அதிர்ஷ்டம். உயிர்க்காப்பீட்டுப் பணம் இருக்கிறது. அழகான கவர்ச்சியான பெண். ஆனால் இந்த சோக நிகழ்ச்சியால் பயங்கரமாக அதிர்ச்சியடைந்து விட்டார். பாவம், கடுமையான தளர்ச்சி. நானும் அவரை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. அதிர்ச்சி அதிகம்தான்.”

“நீங்கள். திரு. மால்ட்ரேவர்ஸுக்கு அண்மையில் சிகிச்சை அளித்திருக்கிறீர்களா?”

“அன்புள்ள சர், நான் அவருக்குச் சிகிச்சை அளித்ததே இல்லை.”

“என்ன?”

“திரு. மால்ட்ரேவர்ஸ் ஒரு கிறிஸ்தவ விஞ்ஞானி என்று நினைக்கிறேன்.. அது போல ஏதோ ஒன்று.”

“நீங்கள் உடலை ஆய்வு செய்தீர்களா?”

“உறுதியாக. என்னை ஒரு தோட்டக்காரர் கூட்டிப்போனார்.”

“சாவிற்கான காரணம் தெளிவாக இருந்ததா?”

“ஆமாம். அவர் உதட்டில் இரத்தம் இருந்தது. ஆனால் இரத்தக் கசிவு எல்லாம் உடலின் உள்ளேதான் இருந்திருக்க வேண்டும்.”

“நீங்கள் பார்த்தபோது அவர் படுத்த நிலையிலேயே இருந்தாரா?”

“ஆம், உடலை யாரும் தொடவில்லை. தோட்டத்தின் ஓரத்தில் படுத்திருந்தார். அவர் பறவை வேட்டைக்குப் போயிருக்கவேண்டும். அவர் அருகில் பறவை சுடும் துப்பாக்கி கிடந்தது. இரத்தம் கொட்டுவது திடீரென்று ஏற்பட்டிருக்க வேண்டும். வயிற்றுப்புண்; சந்தேகமில்லை.”

“அவரை யாரும் சுட்டிருக்க வாய்ப்பில்லை, இல்லையா?”

“அன்புள்ள சர்!”

“மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால், என்னுடைய நினைவு சரி என்றால், அண்மையில் நடந்த ஒரு கொலை வழக்கில் மருத்துவர் இதயச் செயலிழப்பு என்று சொல்லிவிட்டார். ஆனால் உள்ளூர்க் காவலர் அவர் தலை வழியாகக் குண்டு பாய்ந்திருந்ததைச் சுட்டிக் காட்டியவுடன் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.”

“நீங்கள் திரு. மால்ட்ரேவர்ஸின் உடலில் எந்தக் குண்டுக் காயத்தையும் கண்டுபிடிக்க  இயலாது. சரி, வேறு ஒன்றும் இல்லையென்றால்…..” என்றார் டாக்டர் பெர்னார்ட்.

நாங்கள் குறிப்பை அறிந்துகொண்டோம்.

“காலை வணக்கம், எங்கள் கேள்விகளுக்கு அன்போடு பதில் சொன்னதற்கு நன்றி, டாக்டர். அதிருக்கட்டும். நீங்கள் உடற்கூறு ஆய்வு செய்வது தேவையில்லை என்று நினைத்தீர்களோ?”

“தேவை இருக்கவில்லை.” மருத்துவர் ஆடிப்போய்விட்டார். “மரணத்திற்கான காரணம் தெளிவாக இருந்தது. என்னுடைய தொழிலில் இறந்துபோன ஒருவரின் உறவினர்களுக்குத் தேவையின்றி மனவருத்தம் தரத் தேவையில்லை என்று நினைத்தோம்.”

திரும்பி கதவை வேகமாகச் சாத்தினார் எங்கள் முகத்தில் அடித்தது போல.

“நீங்கள் டாக்டர் பெர்னார்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஹேஸ்டிங்ஸ்?” என்று கேட்டார் பாய்ரோ, நாங்கள் பண்ணையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது.

“ஒரு கிழட்டுக் கழுதை.”

“சரியாகச் சொன்னீர்கள். ஒருவருடைய குணத்தைப் பற்றிய உங்கள் முடிவு எப்போதும் சரியாகத்தான் இருக்கும் நண்பரே.”

நான் அவரை இக்கட்டான மனநிலையில் பார்த்தேன். ஆனால் அவர் தீவிரமாகவே கேட்டிருக்கிறார். எனினும் ஒரு மின்னல் அவர் கண்களில் தோன்றியது. எனினும் தந்திரமாகத் அவர் தொடர்ந்தார்:

“அதாவது அங்கே ஒரு அழகான பெண் வந்திருக்கக் கூடாது.”

அவரை நான் முறைத்துப் பார்த்தேன்.

நாங்கள் பண்ணை வீட்டிற்கு வந்தபோது ஒரு மத்திய வயதுப் பணிப்பெண் கதவைத் திறந்தார். பாய்ரோ தன்னுடைய முகவரி அட்டையையும் திருமதி மால்ட்ரேவர்ஸூக்கு உயிர்க்காப்பீட்டுக் கழகம் அனுப்பிய கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார். எங்களை ஒரு சிறு அறையில் அமரச் செய்துவிட்டு அவருடைய எசமானியைக் கூட்டிவரப் போனார். பத்து நிமிடங்கள் கழித்து, கதவு திறக்க ஒரு ஒல்லியான உருவம் கைம்பெண் உடையில் வாயிற்படியில் நின்றது.

“மிசியர் பாய்ரோ?” என்றார் தடுமாற்றத்துடன்.

“மேடம்,” என்று சொல்லிக்கொண்டே வேகமாக எழுந்து அவரை நோக்கிப் போனார்.

“நாங்கள் இவ்வாறு உங்களை குழப்புவதற்கு வருந்துகிறோம். ஆனால் நாங்கள் வேறு என்ன செய்வது? அவர்களுக்கு இரக்கமே இல்லை,” என்றார்.

திருமதி மால்ட்ரேவர்ஸ் தன்னை நாற்காலி வரையிலும் கூட்டிப்போக அவரை அனுமதித்தார். அவரது கண்கள் அழுததில் சிவந்து போயிருந்தன. ஆனால் அவரது அசாதாரணமான அழகை மறைக்க முடியவில்லை. அவருக்கு இருபத்தேழு அல்லது இருபத்தெட்டு வயது இருக்கும். பெரிய நீலக்கண்கள்,  அழகான உதடுகள்.

“என் கணவருடைய உயிர்க்காப்பீடு பற்றியதா? இப்போது அதுபற்றி என்னைத் தொந்தரவு செய்ய வேண்டுமா – அதுவும் இவ்வளவு சீக்கிரம்?”

“தைரியமாக இருங்கள், அன்புள்ள மேடம். உங்களுடைய கணவர் பெரிய தொகைக்கு உயிர்க்காப்பீடு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கம்பெனி சில விவரங்களில் முழுதிருப்தி அடைய வேண்டும். அவர்களுக்காகச் செயல்பட எனக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்கள். உங்களுக்கு மனவருத்தம் வராத வகையில் என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். புதன்கிழமை நடந்த சோக நிகழ்வினைப் பற்றிச் சொல்லமுடியுமா?”

“நான் தேநீர் குடிக்கச் செல்வதற்காக, உடை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது பணிப்பெண் வந்தாள். தோட்டக்காரர்களில் ஒருவன் வீட்டிற்குள் ஓடி வந்து …”

அவருடைய குரல் தழுதழுத்தது. பாய்ரோ அவரது கைகளை ஆதரவுடன் தொட்டார்.

“எனக்குப் புரிகிறது. போதும், அன்று பிற்பகல் உங்கள் கணவரைப் பார்த்தீர்களா?”

“மதிய உணவுக்குப் பிறகு இல்லை. நான் அஞ்சல் தலைகள் வாங்க கிராமத்துக்கு நடந்து போயிருந்தேன். அவர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.”

“பறவைகளைச் சுட்டுக் கொண்டிருந்தாரா?”

“ஆமாம், வழக்கமாகப் பறவைகள் சுடும் சிறு ரைஃபிளை எடுத்துக்கொண்டு போவார். ஒன்றிரண்டு துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டது.”

“அந்தப் பறவை சுடும் ரைஃபிள் எங்கே?”

“ஹாலில் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

அவர் அறைக்கு வெளியே கூட்டிச் சென்று அந்தச் சிறிய துப்பாக்கியை பாய்ரோவிடம் கொடுத்தார். அதை அவர் கவனமாக ஆராய்ந்தார்.

“இரண்டு குண்டுகள் வெடிக்கப்பட்டிருக்கின்றன,” என்று சொல்லிவிட்டுத் திரும்பக் கொடுத்து விட்டார். “இப்போது மேடம், நாங்கள்….”

அவர் மென்மையாக நிறுத்தினார்.

“பணிப்பெண் உங்களைக் கூட்டிச் செல்வார்,” என்று அந்தப் பெண் முணுமுணுத்தார்.

பணிப்பெண் வரவழைக்கப்பட்டார். அவர் பாய்ரோவை மேலே கூட்டிப் போனார். நான் அந்தப் பரிதாபத்திற்குரிய அழகியோடு இருந்தேன். பேசுவதா அமைதியாக இருப்பதா என்று தெரியவில்லை. நான் பொதுவாகச் சில விஷயங்கள் பற்றிப் பேசினேன். அவர் அதற்கு ஏனோதானோ என்று பதில் சொன்னார். சிலநிமிடங்களில் பாய்ரோ திரும்பிவிட்டார்.

“உங்களுடைய மரியாதைக்கு நன்றி, மேடம். உங்களுக்கு இன்னும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. அதிருக்கட்டும், உங்கள் கணவருடைய நிதி நிலை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”

அவர் தலையை ஆட்டினார்.

“ஒன்றுமே தெரியாது. அம்மாதிரி விஷயங்களில் நான் ஒரு முட்டாள்.”

“அப்படியா? உங்கள் கணவர் ஏன் உயிர்க்காப்பீடு செய்யத் தீர்மானித்தார் என்பது பற்றி உங்களுக்குத் தெரியாது. இதுவரையில் காப்பீடு செய்ததில்லை என்று அறிகிறேன்.”

“எங்களுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனால் அவர் ஏன் இப்போது உயிர்க்காப்பீடு செய்தார் என்பது தெரியும். அவர் தான் நீண்டநாள் வாழமாட்டேன் என்று தீர்மானித்து விட்டார். சாவு பற்றி அவருக்கு முன் கூட்டியே உள்ளுணர்வு கூறியிருக்கிறது. அவருக்கு ஏற்கனவே இரத்தப் போக்கு இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னொன்று வந்தால் அதுதான் முடிவு என்று அவருக்குத் தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட அச்சங்களைப் போக்க நான் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் பயனில்லை. அவர் நினைத்தது சரியாகப் போயிற்று.”

அவர் கண்களில் கண்ணீர் மல்க எங்களுக்கு விடை தந்தார். பாய்ரோ அவருக்கே உரிய கை அசைப்புடன் இருவரும் நடந்தோம்.

“சரி, அவ்வளவுதான்! லண்டன் போகவேண்டியதுதான், நண்பரே, இந்த எலிப் பொந்தில் எலி இல்லை போலத் தெரிகிறது.. ஆனால்…”

“என்ன..”

“ஒரு சிறு முரண்பாடு, அவ்வளவுதான். நீங்கள் கவனித்தீர்களா? இல்லையா? வாழ்க்கையே முரண்பாடுகள் நிறைந்தது தானே. அந்த மனிதர் தற்கொலை செய்திருக்க முடியாது. அவரது வாயில் இரத்தம் இருக்கும் போது நஞ்சு உள்ளே போயிருக்கமுடியாது. இல்லை, இல்லை. இங்கே எல்லாம் தெளிவாக, குற்றம் இல்லாது இருக்கிறது என்று ஒதுங்கிக் கொள்ளவேண்டியது தான். ஆனால்… யார் இது?”

ஓர் வளர்த்தியான இளைஞன் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒன்றும் பேசாமல் எங்களைக் கடந்து போனான். பார்க்க மோசமில்லை. தாமிர நிறமாகிப் போன முகம். வெப்பப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் . இலைகளைக் கூட்டிக் கொண்டிருந்த தோட்டக்காரர் ஒருவர் ஒரு நிமிடம் தனது வேலையை நிறுத்தினார். பாய்ரோ அவரிடம் வேகமாகப் போனார்.

“அந்த ஆள் யாரென்று சொல்வீர்களா? உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

“அவர் பெயர் எனக்கு நினைவில்லை. பெயரைச் சொன்னார்கள். சென்ற வாரம் இங்கே ஓர் இரவு தங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை.”

“வேகமாக வாருங்கள். அவரைப் பின் தொடர்வோம்.”

முன்னால் போய்க்கொண்டிருந்தவனைத் தொடர்ந்து போனோம். அப்போது கறுப்பு உடையணிந்த உருவம் மேலே தென்பட்டது. அந்த ஆள் அதை நோக்கித் திரும்பினான். நாங்களும் சந்திப்பைப் பார்க்க வேகமாகத் தொடர்ந்தோம்.

திருமதி மால்ட்ரேவர்ஸ் தடுமாறினார். அவரது முகம் வெளுத்தது.

“நீயா? நீ கப்பலில் போய்க்கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். கிழக்கு ஆப்பிரிக்காவுக்குப் போகவில்லையா?”

“என்னுடைய வழக்கறிஞர்கள் தந்த செய்தி என்னை நிறுத்தி விட்டது. எனது மாமா எதிர்பாராத விதமாக ஸ்காட்லாந்தில் இறந்து விட்டார். எனக்குப் பணம் விட்டுப் போயிருக்கிறார். இந்தச் சூழலில் பயணத்தை நிறுத்துவது நல்லது என்று நினைத்தேன். அப்போதுதான் செய்தித்தாளில் இந்தக் கெட்ட செய்தியைப் பார்த்தேன். நான் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்க வந்தேன். உனக்கு உன் காரியங்களைப் பார்க்க ஒருவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாய்.”

அப்போதுதான் நாங்கள் இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். பாய்ரோ முன்னால் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவரது கைத்தடியை ஹாலில் வைத்துவிட்டதாகச் சொன்னார். திருமதி மால்ட்ரேவர்ஸ் அறிமுகம் செய்து வைத்தார். அவர் தயக்கத்துடன் அதைச் செய்தது போல எனக்குத் தோன்றியது.

“மிஸ்டர் பாய்ரோ, காப்டன் பிளாக்.”

சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். காப்டன் பிளாக் ஆங்கர் இன்னில் தங்கியிருக்கிறார் என்ற விவரத்தை பாய்ரோ தெரிந்துகொண்டார். கைத்தடி கண்டுபிடிக்கப்படவில்லை (அது வியப்பிற்குரிய ஒன்று இல்லை). பாய்ரோ மீண்டும் மன்னிப்புக் கேட்க நாங்கள் புறப்பட்டோம்.

வேகமாகக் கிராமத்திற்கு வந்தோம். ஆங்கர் இன்னுக்கு பாய்ரோ கூட்டிப்போனார்.

“இங்கேயே நமது நண்பர் காப்டன் வரும் வரையில் இருப்போம். நாம் லண்டனுக்கு முதல் தொடர்வண்டியில் போகப்போகிறோம் என்று நான் அழுத்திச் சொன்னதைக் கவனித்திருப்பீர்கள். நான் அப்படித்தான் செய்யப்போவதாக நீங்கள் நினைத்திருப்பீர்கள். இல்லை. இந்த இளம் காப்டனைப் பார்த்தவுடன் திருமதி மால்ட்ரேவர்ஸின் முகம் மாறியதைக் கவனித்தீர்களா? அவருக்கு உண்மையில் அதிர்ச்சி. அவன் அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறான், இல்லையா? அவன் செவ்வாய்க்கிழமை இரவு இங்கே இருந்திருக்கிறான். அதாவது திரு மால்ட்ரேவர்ஸ் இறப்பதற்கு முந்திய தினம். காப்டன் பிளாக்கின் நடவடிக்கைகளை ஆராயவேண்டும், ஹேஸ்டிங்ஸ்.”

அரை மணி நேரத்தில் எங்கள் ஆள் வந்து விட்டான். பாய்ரோ அவனைச் சந்தித்து நாங்கள் ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்து வந்துவிட்டார்.

“நாம் இங்கே வந்திருக்கும் நோக்கத்தை காப்டன் பிளாக்கிற்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். திரு. மால்ட்ரேவர்ஸ் இறப்பதற்கு முன்னாலிருந்த மனநிலையைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன், காப்டன். துன்பம் தரக்கூடிய  கேள்விகளைக் கேட்டு திருமதி மால்ட்ரேவர்ஸூக்கு மேலும் துயரம் தர எனக்கு விருப்பம் இல்லை. நிகழ்ச்சி நடப்பதற்குச் சிறிது முன்னால் நீங்கள் இருந்ததால் எங்களுக்கு முக்கியமான தகவல் தர முடியும்.”

“உங்களுக்கு உதவ நான் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் வித்தியாசமான எதையும் நான் கவனிக்கவில்லை. எங்கள் வீட்டாருக்கு மால்ட்ரேவர்ஸ்கள் பழைய நண்பர்கள். எனக்கு அவரை நன்றாகத் தெரியாது.”

“நீங்கள் எப்போது வந்தீர்கள்?”

“செவ்வாய் பிற்பகல். எனது கப்பல் பன்னிரண்டு மணிக்குப் புறப்பட இருந்ததால் நான் புதன் அதிகாலையே புறப்பட்டு விட்டேன். ஆனால் எனக்குக் கிடைத்த ஒரு செய்தியால் என் திட்டத்தை மாற்ற வேண்டியதாயிற்று. திருமதி மால்ட்ரேவர்ஸிடம் நான் சொன்னதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.”

“கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு நீங்கள் திரும்பப் போகிறீர்கள் அல்லவா?”

“போருக்குப் பிறகு நான் அங்கேதான் இருக்கிறேன். பெரிய நாடு,”

“ஆமாம். செவ்வாய் இரவு உணவின் போது என்ன பேசிக்கொண்டீர்கள்?”

“ஓ, எனக்கு நினைவில்லை. வழக்கமான விஷயங்கள்தான். மால்ட்ரேவர்ஸ்கள் ஜெர்மன் மீட்பு பற்றிக் கேள்விகள் கேட்டார்கள். திருமதி மால்ட்ரேவர்ஸ் கிழக்கு ஆப்பிரிக்கா பற்றி நிறையக் கேட்டார். நானும் சில கதைகள் சொன்னேன். அவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.’

பாய்ரோ சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மென்மையாக, “உங்கள் அனுமதியோடு ஒரு சிறு சோதனை செய்ய விரும்புகிறேன். உங்களுடைய நினைவு மனதிற்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிவிட்டீர்கள். இப்போது உங்கள் அடிமனதைக் கேள்விகள் கேட்க விரும்புகிறேன்,” என்றார்.

“உளப்பகுப்பாய்வா?” என்றார் அச்சத்துடன்.

“அதெல்லாம் இல்லை. இப்படித்தான் செய்யப்போகிறோம். நான் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்வேன். நீங்கள் அதற்குப் பதிலாக ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். எந்த வார்த்தையாகவும் இருக்கலாம். உங்கள் மனதில் முதலில் தோன்றும் சொல்.”

“சரி,” என்றார் சங்கடத்துடன்.

“இந்த வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள், ஹேஸ்டிங்ஸ்,” என்றார் பாய்ரோ. பிறகு பையிலிருந்து ஒரு கடிகாரத்தை எடுத்து மேசை மேல் வைத்தார். “ஆரம்பிக்கலாம். பகல்”

ஒரு நிமிடத் தாமதம். பிறகு பிளேக் பதிலளித்தான்:

“இரவு.” இப்போது வேகமாக விடை வந்தது.

“பெயர்,” என்றார் பாய்ரோ.

“இடம்.”

“பெர்னார்ட்”

“ஷா.”

“செவ்வாய்.”

“இரவு உணவு.”

“பயணம்.”

“கப்பல்.”

“நாடு.”

“உகாண்டா.”

“கதை.”

“சிங்கங்கள்.”

“பறவை சுடும் ரைஃபிள்”

“பண்ணை.”

“துப்பாக்கி சுடுதல்.”

“தற்கொலை.”

“யானை.”

“தந்தங்கள்.”

“பணம்.”

“வழக்கறிஞர்கள்.”

“நன்றி, கேப்டன் பிளாக். அரை மணி நேரம் கழித்து எங்களோடு சில நிமிடங்கள் செலவழிக்க முடியுமா?”

“கண்டிப்பாக..” அந்த இளம் படைத்தளபதி ஆவலுடன் பார்த்து, முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்தான்.

“இப்போது உங்களுக்கெல்லாம் புரிகிறது அல்லவா?” என்று கதவைச் சாத்திவிட்டு, புன்னகையுடன் என்னிடம் சொன்னார்.

“எனக்கு ஒன்றும் புரியவில்லை.”

“உங்களுக்கு அந்த சொற்கள் ஒன்றும் சொல்லவில்லையா?”

நான் அதை ஆராய்ந்தேன். ஆனால் தலையை ஆட்டினேன்.

“நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். பிளேக் எல்லாக் கேள்விகளுக்கும் தயக்கமில்லாமல் பதில் சொன்னான். அதனால் அவனிடம் மறைப்பதற்குக் குற்றம் பற்றிய விவரம் எதுவுமில்லை என்று தெரிகிறது. பகலுக்கு இரவும் இடத்திற்குப் பெயர் எல்லாம் சாதாரணமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நான் பெர்னார்ட் என்று சொன்னவுடன் அவன் உள்ளூர் மருத்துவரைச் சொல்லியிருப்பான் அவரைச் சந்தித்திருந்தால். அவரை அவன் சந்திக்கவே இல்லை. அடுத்து நான் சொன்ன செவ்வாய்க்கு இரவு உணவு என்று சொன்னான். ஆனால் பயணத்திற்கும் நாட்டுக்கும் கப்பல் என்றும் உகாண்டா என்றும் பதிலளித்தான். அவனுக்கு அவனது பயணம்தான் முக்கியமே தவிர இங்கே வந்தது முக்கியமில்லை. கதை என்று சொன்னவுடன் அவன் இரவு உணவின்போது சொன்ன சிங்கக் கதைகள் நினைவுக்கு வந்திருக்கும். பறவை சுடும் ரைஃபிள் என்ற உடன் எதிர்பாராமல் பண்ணை என்றான். துப்பாக்கி சுடுதல் என்று நான் சொன்னதற்குத் தற்கொலை என்று பதில் சொன்னான். தொடர்பு தெளிவாக இருக்கிறது. அவனுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் பறவை சுடும் ரைஃபிளைக் கொண்டு எங்கோ ஒரு பண்ணையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவனது மனம் அவன் இரவு உணவு சமயத்தில் அவன் சொன்ன கதைகளில் தான் இன்னும் இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். காப்டன் பிளாக்கை அழைத்து அவனிடம் அவன் உணவின்போது சாப்பாட்டு மேசையில் சொன்ன தற்கொலைக் கதையைத் திரும்பச் சொல்லுமாறு கேட்டோமென்றால் நான் சொல்வது உண்மை தான் என்று ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.”

இந்த விஷயத்தில் பிளேக் நேர்மையாக நடந்து கொண்டான்.

“ஆம், இப்போது நினைத்துப் பார்க்கும்போது நான் அந்தக் கதையை அவர்களுக்குச் சொன்னேன் என்பது நினைவிற்கு வருகிறது. கதையில் ஒருவன் தன் பண்ணையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டான். இந்தப் பறவைகள் சுடும் ரைஃபிளால் வாய்க்குள் வைத்துச் சுட்டான். குண்டு அவன் மூளையில் பதிந்துவிட்டது. மருத்துவர்கள் குழம்பிப் போனார்கள் – உதடுகளில் ரத்தம் தவிர வேறொன்றும் இல்லை. சரி, ஆனால்…”

“இதற்கும் திரு. மால்ட்ரேவர்ஸூக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்கள். அவர் பக்கத்தில் ஒரு பறவை சுடும் ரைஃபிள் இருந்தது உங்களுக்குத் தெரியாது.”

“என்னுடைய கதைதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறீர்களா? பயங்கரம்!”

“நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்படியாவது அது நடந்துதான் இருக்கும். சரி, நான் லண்டனுக்குத் தொலைப்பேசியில் பேசவேண்டும்.”

பாய்ரோ நீண்ட உரையாடல் நடத்தி விட்டு சிந்தனையோடு திரும்பினார். பிற்பகலிலும் தனியாகப் போய் ஏழு மணிக்கு வந்து, தான் விஷயத்தை இன்னும் காலம் தாழ்த்த முடியாது என்றும் இளம் விதவைக்குச் செய்தியைச் சொல்லிவிடவேண்டும் என்றும் அறிவித்தார். என்னுடைய அனுதாபம் அந்தப் பெண்ணுக்குத்தான். பணம் இல்லாமல், தனது கணவன் தற்கொலை செய்து கொண்டார் என்ற எண்ணத்தோடு இருப்பது எந்தப் பெண்ணுக்கும் ஒரு பெரும் சுமைதான். அவருடைய முதல் சோகம் போனபிறகு அந்த இளைஞன் பிளாக் அவருக்கு ஆறுதலாக இருப்பான் என்பது எனது இரகசிய நம்பிக்கை. அவன் அவளை மிக அதிகமாகக் கொண்டாடினான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

அந்தப் பெண்ணுடனான எங்கள் சந்திப்பு மிகவும் மனம் நோகச் செய்தது. பாய்ரோ சொன்னதை அவர் நம்ப மறுத்துவிட்டார். கடைசியாக நம்பி துக்கத்தில் வெடித்துவிட்டார். உடற்கூறு ஆய்வின்போது சந்தேகம் உறுதிப்பட்டது. பாவம் அந்தப் பெண். பாய்ரோ அவர் மேல் இரக்கப்பட்டார். ஆனால் அவர் காப்பீட்டுக் கழகத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர். அவர் என்ன செய்ய முடியும்? புறப்படும்போது அவர் திருமதி மால்ட்ரேவர்ஸிடம் மென்மையாக, “மேடம், இறந்தோர் என்று யாரும் இல்லை என்று உங்களுக்குத் தெரியும்,” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்றார் தடுமாற்றத்துடன், கண்களை அகல விரித்து.

“ஆன்மீக முறையில் இறந்தவர்களோடு தொடர்பு கொள்ளும் கூட்டங்களில் பங்கெடுத்திருக்கிறீர்களா? ஆவிகள் மூலம் இறந்தவர்களுடன் பேசுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.”

“சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஆன்மீகத்தில் நம்பிக்கை வைக்கிறீர்கள் அல்லவா?”

“மேடம், நான் வினோதமான பலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஊரில் இந்த வீடு பேய் பிடித்தது என்று பேசிக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.”

அவர் தலை அசைத்தார். அப்போது பணிப்பெண் இரவு உணவு தயார் என்று அறிவித்தார்.

“நீங்கள் இருந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்.”

நாங்கள் நன்றியுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் இருப்பது அவரது சோகத்தைத் திசை திருப்பும்.

நாங்கள் சூப் குடித்து முடித்தபோது வெளியில் அலறல்  கேட்டது. பீங்கான் உடையும் சப்தம் கேட்டது. நாங்கள் அவசரமாக எழுந்தோம். பணிப்பெண் தன் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு வந்தாள்.

“ஓர் ஆள் வழியில் நிற்கிறான்.”

பாய்ரோ வேகமாக வெளியில் போய் உடனே திரும்பிவிட்டார்.

“ஒருவரும் இல்லை.”

“ஒருவருமில்லையா, சர்? எனக்குப் பயமாகப் போய்விட்டது,” என்றாள் பணிப்பெண் தீனக் குரலில்.

“ஏன்?”

தணிந்த குரலில் அவள், “ திரு. மால்ட்ரேவர்ஸ் என்று நினைத்தேன். அவரைப் போலவே இருந்தார்.”

திருமதி மால்ட்ரேவர்ஸ் பயந்து போனார். எனது மனம் பழைய மூடநம்பிக்கைக்குப் போனது. தற்கொலை செய்தவர்களுக்கு அமைதி இல்லை. அவரும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து பாய்ரோவின் தோளைப் பிடித்துக் கொண்டு அலறினார்.

“உங்களுக்குக் கேட்டதா? சன்னலில் மூன்று முறை தட்டியது? இப்படித்தான் அவர் வீட்டைச் சுற்றி வரும்போது தட்டுவார்.”

“ஐவி கொடி. அது சன்னல் கண்ணாடியில் தட்டியிருக்கும்.” என்றேன் நான்.

ஆனால் ஒருவகை பயம் எல்லோரையும் பிடித்துக்கொண்டது. பணிப்பெண் மிகவும் பயந்துபோய் இருந்தாள். சாப்பாடு முடிந்த பிறகு திருமதி மால்ட்ரேவர்ஸ் பாய்ரோவிடம் உடனே போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் பக்கத்து அறையில் உட்கார்ந்தோம். காற்று அடிக்கத் தொடங்கியது, வீட்டைச் சுற்றி முனகல் சப்தம் கேட்டது. இரண்டு முறை கதவின் தாழ்ப்பாள் விலக, கதவு மெல்லத் திறந்தது. இரண்டு முறையும் அந்தப் பெண் பயந்து என்னைப் பிடித்துக்கொண்டார்.

“ஆ இந்தக் கதவு, இதற்குப் பேய் பிடித்துவிட்டது,” என்று கோபமாக பாய்ரோ கத்தினார். எழுந்து கதவை மீண்டும் அடைத்து சாவியைக் கொண்டு பூட்டினார், “நான் இதைப் பூட்டி விடுகிறேன்,” என்றார்.

“பூட்டாதீர்கள், இப்போது அது திறந்ததென்றால்….” என்று திணறினார் அந்தப் பெண்.

அவர் பேசிக்கொண்டிருந்த போதே நடக்க முடியாதது நடந்தது. பூட்டப்பட்ட கதவு திறந்தது. நான் வெளியில் நடையைப் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்ணும் பாய்ரோவும்தான் அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெண் பயங்கரமாகக் கத்திக்கொண்டு அவரைப் பார்த்தார்.

அவர் குழப்பத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்துத் தலையை ஆட்டினார்.

“நான் அவரை – என் கணவரைப் பார்த்தேன். நீங்களும் பார்த்திருக்கவேண்டும்.”

“மேடம், நான் எதையும் பார்க்கவில்லை. உங்களுக்குச் சுகமில்லை, பயந்து போயிருக்கிறீர்கள்…”

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நான்… ஓ, கடவுளே!”

திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் விளக்குகள் அணைந்து விட்டன. இருளிலிருந்து மூன்று முறை தட்டும் சப்தம். திருமதி மால்ட்ரேவர்ஸ் முனகுவதை என்னால் கேட்க முடிந்தது.

இப்போது நானும் பார்த்தேன்.

மேலே படுக்கையில் கிடந்த அதே ஆள் எங்களைப் பார்த்துக்கொண்டு மங்கிய பிசாசு வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது உதடுகளில் ரத்தம். அவரது வலக்கை எதையோ காட்டியது. திடீரென்று பிரகாசமான வெளிச்சம் அவரிடமிருந்து வருவதுபோல இருந்தது. என்னையும் பாய்ரோவையும் தாண்டி திருமதி மால்ட்ரேவர்ஸின் மேல் விழுந்தது. அவளது பயத்தில் வெளுத்துப்போன முகத்தையும் – வேறொன்றையும் பார்த்தேன்.

“கடவுளே, பாய்ரோ, அந்தப் பெண்ணின் வலக்கையைப் பாருங்கள், சிகப்பாக இருக்கிறது!” என்றேன்.

அவருடைய கண்களும் அதன்மேல் விழுந்தன. தரையில் சுருண்டு விழுந்தார்.

“இரத்தம்!” என்று கத்தினார் மனப் பேதலிப்புடன். “ஆம், இரத்தம். நான் தான் அவரைக் கொன்றேன். நான் தான் செய்தேன்  என்று என்னிடம் காட்டிக் கொண்டிருந்தார். நான் எனது கையை வைத்து துப்பாக்கியின் விசையை அழுத்தினேன். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் – காப்பாற்றுங்கள். அவர் திரும்ப வந்து விட்டார்.” அவரது குரல் அடங்கியது.

“லைட்ஸ்,” என்றார் பாய்ரோ உற்சாகமாக.

மாந்திரீக வித்தை போல விளக்குகள் எரிந்தன.

“அவ்வளவுதான். நீங்கள் கேட்டீர்களல்லவா, ஹேஸ்டிங்ஸ்? நீங்களும்தானே எவரெட்? ஓ, இவர் திரு. எவரெட். சிறந்த நடிகர். அவருடன் இன்று பிற்பகல் தொலைப்பேசியில் பேசினேன். அவருடைய ஒப்பனை எப்படி, நன்றாக இருந்ததல்லவா? இறந்தவர் போல, வலது கையில் ஒரு டார்ச் விளக்கு, ஃபாஸ்பரசு பூச்சு. சரியான தோற்றம். இந்தப் பெண்ணின் வலது கையைத் தொடக்கூடாது, ஹேஸ்டிங்ஸ். சிகப்பு பெயின்ட் கறை. விளக்குகள் அணைந்தபோது நான் அவரது கையைப் பிடித்தேன். எல்லாம் இருக்கட்டும். நாம் தொடர்வண்டியை விட்டுவிடக்கூடாது. காவல்துறை ஆய்வாளர் ஜேப் சன்னலுக்கு வெளியில் இருக்கிறார். இந்த மோசமான இரவில் அவர் பாவம், அவ்வப்போது சன்னலில் தட்டி நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்,” என்று விளக்கினார் பாய்ரோ.

காற்றும் மழையும் அடிக்க, பாய்ரோ வேகமாக நடந்தார். “பாருங்கள். அந்தச் சிறு முரண்பாடு. இறந்தவர் ஒரு கிறிஸ்தவ அறிவியலாளர் என்று மருத்துவர் நினைத்தார் அல்லவா? அவருக்கு அப்படிப்பட்ட ஒரு கருத்தை அவரிடம் திருமதி மால்ட்ரேவர்ஸ் தவிர வேறு யார் ஏற்படுத்தி இருக்க முடியும்? ஆனால் நம்மிடம் அந்தப் பெண் அவர் தன்னுடைய மோசமான உடல் நிலைபற்றிக் கவலைப்பட்டதாகச் சொன்னார். அப்புறம் பிளேக் திரும்பி வந்த போது அவர் ஏன் திகிலடைந்தார்? கடைசியாக, ஒரு பெண் தனது கணவன் இறந்த துக்கத்தின் அடையாளமாக உடை அணியவேண்டும் என்பது வழக்கம் என்று எனக்குத் தெரியும். ஆனால் கண் இமைகளுக்கு ஏன் அவ்வளவு சாயம்? நீங்கள் கவனிக்கவில்லை அல்லவா, ஹேஸ்டிங்ஸ்?  இல்லை? நான் அடிக்கடி  சொல்வதுபோல, நீங்கள் ஒன்றையும் பார்ப்பதே இல்லை!” என்றார் பாய்ரோ.

மேலும் தொடர்ந்தார்: “இரண்டு சாத்தியங்கள். பிளேக் சொன்ன கதை, திரு. மால்ட்ரேவர்ஸ் தற்கொலை செய்ய இந்த கெட்டிக்காரத்தன முறையைத் தேர்ந்தெடுக்க அவரைத் தூண்டியதா? அல்லது அதைக் கேட்ட இன்னொருவரான அவரது மனைவி மிகக் கெட்டிக்காரத்தனமாகக் கொலைசெய்ய அவருக்கு வழிகாட்டியதா? எனக்கு இரண்டாவதுதான் சரியென்று தோன்றியது. திரு மால்ட்ரேவர்ஸ் தன்னையே சுட்டுக்கொள்ள வேண்டுமென்றால், அவர் தனது கால் கட்டை விரலால்தான் அதைச் செய்திருக்க முடியும். அதற்கு அவர் தன்னுடைய ஒரு காலணியைக் கழற்றி இருக்கவேண்டும். அப்படி இருந்ததாக யாரும் சொல்லவில்லை. அப்படிப்பட்ட வினோதமான காட்சியைக் கவனிக்காமல் யாரும் இருக்க முடியாது. அதனால் தான் இது கொலை, தற்கொலை அல்ல என்று தீர்மானித்தேன். ஆனால் எனக்கு அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதற்காகத்தான் இந்த நாடகம்.”

“இப்போதும்கூட கொலையின் விபரங்கள் எனக்குத் தெரியவில்லை,” என்றேன்.

“முதலிலிருந்து தொடங்குவோம். இவர் ஒரு கெட்டிக்கார சூழ்ச்சி செய்யக்கூடிய பெண். அவர் பணத்திற்காக வயதானவரைக் கட்டிக் கொண்டார். ஆனால் அவருடைய மோசமான நிதிநிலைமை தெரிகிறது. ஆகவே அவரைப் பெரும் தொகைக்கு உயிர்க்காப்பீடு செய்ய வைக்கிறார். பிறகு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற வழி தேடுகிறார். ஒரு நிகழ்ச்சி அவருக்கு வழிசொல்கிறது – அதுதான் காப்டனின் கதை. காப்டன் கப்பலில் போய்க்கொண்டிருப்பார் என்று நினைத்தார். அன்று பிற்பகலில் அவரும் கணவரும் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ’நேற்றிரவு கேட்டது என்ன வித்தியாசமான கதை!’ என்று அவர் சொல்கிறார். ‘இப்படி ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொள்ளமுடியுமா? செய்யமுடியுமென்று நீங்கள் காட்டுங்கள்!’ என்று கூறுகிறார். பாவம் அந்த முட்டாள், காட்டுகிறார். ரைஃபிளின் முனையை வாயில் வைக்கிறார். மனைவி குனிந்து துப்பாக்கியின் விசையில் விரலை வைத்து, “இப்போது நான் விசையை அழுத்தினால் என்ன ஆகும்?’ என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார்.”

“பிறகு, பிறகுதான் அவர் அழுத்துகிறார்.”

-அகதா கிறிஸ்டி

குறிப்பு: கிறிஸ்தவ விஞ்ஞானிகள் (Christian Scientists) நோய்கள் மன்றாட்டுகளினால் குணமாகும், மருத்துவச் சிகிச்சை தேவையில்லை என்று நம்புகின்ற ஒரு பிரிவினர்.

( அகதா கிறிஸ்டி (1890 – 1976) ஒரு ஆங்கில எழுத்தாளர். அறுபத்தாறு துப்பறியும் நாவல்களும் பதினான்கு  சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார். மர்ம நாவல்களின் அரசி என்று அழைக்கப்படுகிறார். அவர் உலகின் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட தனி எழுத்தாளர் என்று சொல்லப்படுகிறது. அவர் படைத்த துப்பறிவாளர்கள் ஹெர்குலு பாய்ரோ (Hercule Poirot) வும் மிஸ் மேப்பிளும்.)

தமிழில்: ச.வின்சென்ட்

Previous articleமான்டிஸ் – வைரவன்.லெ.ரா.
Next articleஅந்தப் பிய்ந்த ரோஜாக்கள்-அசோக்ராஜ்
ச. வின்சென்ட்
பேராசிரியர் முனைவர் ச.வின்சென்ட் ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறைத் தலைவர். எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும், காஃப்காவின் உருமாற்றம். தீர்ப்பு, தாஸ்தாய்வ்ஸ்கியின் வெகுளி, சூஃபி ஞானி அத்தார் கவிதைகள் ஆகியவை.. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு பத்து நூல்கள் வரையில் மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: பிராதமுதலியார் சரித்திரம், ஒப்பியல் சமய நோக்கில் திருவருட்பா. திறனாய்வுக் கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளும் இவருடைய திறனாய்வு நூல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.