மான்டிஸ் – வைரவன்.லெ.ரா.

ரவு சுவாரஸ்யமானது;

இரவு ரகசியமானது;

இரவு கொண்டாட்டமானது;

இரவு கவலையானது;

இரவு மோகனமானது;

இரவு சூன்யமானது;

இரவு தந்திரமானது;

இரவு கொடுமையானது;

இரவு உனக்குரியது;’

இருளில், ஓர் மஞ்சள் நிற குண்டு பல்ப் விட்டுவிட்டு எரியும் அடுக்குமாடிக் குடியிருப்பின் குப்பைகள் கொட்டுமிடத்தில் காலியான பியர் பாட்டில்களைப் போட வந்த யுவனும், யுவதியும் பன்னிரண்டு மணிக்குமேல் இருபதுமாடிக் கட்டடத்தின் தரைதளத்திற்கு ஏன் வர வேண்டும்? குப்பைகளைக் கொட்ட ஒவ்வொரு மாடியிலும் அதற்கெனத் தனிப்பகுதியிருக்க கீழே இருவர் வந்திருக்கிறார்கள். அவன் ஒல்லி, சுருட்டை முடி, முகம் முழுக்கச் சவரம் செய்தவன். அவள் கொஞ்சம் புஷ்டி, இடைவரை தொங்கும் முடி, மாநிறமானவள். இருவரும் நீளமான டீ-ஷர்ட்டும், சார்ட்ஸும் அணிந்திருந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் கைகளால் மாறி மாறி அடித்துப் பாவனையாகச் சிரித்தனர். அவன்தான் ஏதேதோ சைகை காட்டி, உதடுகளைப் பாவனையாய் சுருக்கி, பின் விரித்து எதையோ சொல்லிக்கொண்டிருந்தான். அவளுக்கு அதில் என்ன நகைப்போ! அவனையும் தொற்றிக்கொள்கிறது. இவர்கள் ஏன் இந்நேரம் இங்கே வரவேண்டும்? செயற்கையான குளிரூட்டும் இயந்திரங்களற்ற வெட்டவெளியின் தணுப்பில் ஒரு சிகரெட் புகைக்க எண்ணியிருக்கலாம்; நண்பர்களின்றி இருவரும் அந்தரங்க விளையாட்டொன்றை ஆட வந்திருக்கலாம்; இல்லை, அறையில் பலர் கூடிக் களியாடி மோனநிலையில் திளைப்பதைப் பார்க்கச் சகிக்காமல் இறங்கி வந்திருக்கலாம். இதையெல்லாம் இரவு காவலனாகியவன் கண் விழித்துப் பார்க்கவேண்டும்.

நிலவு முழுவட்டமாகி, மேகங்களற்ற, மின்னும் நட்சத்திரங்களும் வெண்மை நிரம்பிய வெளியில் தொலைந்துபோக, தனிமையில் காய்ந்தது. சுற்றியுள்ள பகுதியில் மாநகரம் அடங்கி, குளிரே அமைதியாக நிரம்பியிருக்க, அவ்வப்போது நாய்கள் குரைக்க அதுவும் நிலைகுலைந்தது. குடித்திருந்த மதுவின் துணையால் ஏகாந்த புல்வெளியில், கரும்புரவிகள் சுற்றி அலைய மல்லாந்து படுத்திருப்பதைப் போல எண்ணிக்கொண்டேன். தனிமையில் மனம் இலகுவாகி, அவ்வானில் தகதகவெனப் பறவையாகிப் பறந்தது. நேற்றும் இன்றும் தூர விலகி, நாளை என்றொன்று இன்மையாகிக் காற்றில் புகைந்தது.

அவர்களின் பேச்சரவம் அருகில் கேட்கவே நிகழிற்கு வந்தேன். அறையின் மூலையில் புதிதாய்த் துளையிடப்பட்ட பொந்திலிருந்து என்ன வெளிவருமோ? ஏற்கெனவே இருந்த பொந்துகளில் டியூப் லைட்டை உடைத்து கண்ணாடிச் சில்லுகளை அடைத்து, சிமெண்ட் சாந்தால் பூசி மெழுகிய தரையில், தழும்புகள் போல அவை புடைத்துத் தனியாகத் தெரிந்தன. கையிலிருந்த சிஸர் ஃபில்டரின் கார்ப்பில் தொண்டை வறண்டு இருமல் வந்தது. மிக அருகில் தெளிவில்லாத குரல்கள் கேட்க அத்திசையில் திரும்பினேன். அவர்கள் இருவரும் என்னை நோக்கி வருவது தெரியவும், அமர்ந்திருந்த நாற்காலியின் எதிரே போடப்பட்டிருந்த மேஜையின் கீழே பாதி குடித்து முடித்திருந்த ஓல்ட் மங்க் ரம்மை தள்ளி வைத்துவிட்டு எழுந்து கொண்டேன். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் நான்கு பிளாக்குகள், ஒவ்வொன்றிலும் இருபது மாடி, ஒவ்வொரு மாடியிலும் எட்டு வீடுகள். கீழ்த்தளத்தில் நீச்சல் குளமும், குழந்தைகள் விளையாடும் பூங்காவும் உண்டு. காவல் பணிக்கு பகலில் எட்டு பேரும், இரவில் ஐந்து பேருமுண்டு. இரவில், மெயின் வாசலில் இருவரும், இடது மூலையில் உள்ள ஜெனரேட்டர் அறையில் ஒருவனும், பின்னால் இரண்டும் முனைகளில் இருவர் என நாங்கள் காவல் புரிந்தோம்.  

அவர்கள், பத்துக்கு எட்டு அடி நீள அகலமும், எட்டு அடிக்கு தகர ஷீட் கொண்டு எழுப்பப்பட்ட காவல் அறைக்கு அருகில் வரவும், வெளியே இயல்பாக வருவது போல வந்தேன். என்னைக் கண்டதும் அவள் ஆங்கிலத்தில், “உன்னை விட அழகனாய் இருக்கிறான். நீ கொஞ்சம் தூரமாகத்தான் போகக் கூடாதா?” சொல்லிவிட்டு நுனிநாக்கை மடித்துப் பற்களால் கடித்தாள். பதிலுக்கு அவன், “முகத்தின் அழகு இடுப்பிற்குக் கீழேயும் இருக்குமா? புஸ்ஸஸ், ஹவ் வில் யூ ஐடின்டிஃபை தி ஸ்னேக்.” எனச் சொல்லவும் இருவரும் மீண்டும் கைகளை அடித்து விளையாடத் தொடங்கினர்.

“உன்னிடம் தீப்பெட்டி இருக்கிறதா?” ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான். “ஒரு நிமிடம் இருங்கள், எடுத்து வருகிறேன்,” ஆங்கிலத்தில் பதில் கூறவும் இருவரும் திருதிருவென்று விழித்தனர். தீப்பெட்டியை எடுத்துவிட்டு வெளியே வரவும், “நாங்கள் விளையாட்டாய் பேசிக்கொண்டோம். தவறாக எடுத்துக்கொள்ளாதே,” என்றாள்.

“தவறாக எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது. வார இறுதியில் ஓர் குளிர்காலத்தில் நானும் இப்படி இருந்திருக்கிறேன். என்ஜாய் தி டே.” சொல்லிக்கொண்டே தீப்பெட்டியை நீட்டவும், அவனும் அவளும் ஆளுக்கொரு பிளாக் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டனர். கங்குகள் புகைய ஆரம்பிக்கவும், ஏலக்காயின் மணம் காற்றில் பரவி நாசியில் ஏறியது. அவளின் உதடுகள் மெல்ல அதை உறிஞ்சவும், உதடுகளின் சிவப்பு நீள்வரிக்கோடுகளைக் கவனித்தேன். எனக்குள் மெல்ல ஒரு அரிச்சல் எடுத்தது. அவள் புகையை மூக்கால் வெளியே விடவும், அதை வெறித்தவாறே நின்றிருக்க, அவன், “எடுத்துக்கொள்” என பாக்கெட்டை என் முன்னே நீட்டினான். ஒரு சிகரெட்டிற்காக அவர்கள் முன் வளைகிறேனா? அதற்காக மட்டும்தானா? சில மனிதர்கள் இரவில், அதுவும் போதையில் தன்னை மாபெரும் புனிதனாக நினைத்துக்கொள்கிறார்கள். நாளை இவனே ‘ச்சீ’ என என்னைவிட்டு ஒதுங்கிச் செல்வான். “ஒரு நிமிடம்” சிகரெட்டை எடுத்துக்கொண்டு காவல் அறைக்குள் ஓடி, மிச்சம் வைத்த ஓல்ட் மங்கை குனிந்தபடி குடித்துவிட்டு தொண்டயைச் செறுமியவாறே வெளியே வரவும், இருவரும் எனக்காகக் காத்துக்கொண்டிருப்பது போல நின்றார்கள்.

சிகரெட்டைப் பற்ற வைத்தேன். “உன்னைப் பார்த்தாலே வித்தியாசமாக இருக்கிறது. நீ யார்? இங்கே இரவு காவலானாய்  வேலை பார்க்கிறாய்?” அவளின் சொற்களில் ஆவல் இருந்தது. அருகில், வேறொரு பக்கமாய் தலையைத் திருப்பியபடி அவன் நின்றிருந்தான். “எழுத்தாளன்.. இல்லை இருக்கலாம்.  புதிய நாவலொன்றை எழுதிவருகிறேன். பகுதிநேர வேலை தான் இது,” என்றேன். அவளின் விழிகள் விரிய, “நினைத்தேன்,” என்றாள். அவன் எங்களை விட்டு விலகி சுவரில் ஏறி எதிர்ப்பக்கமாய் விரிந்திருந்த சதுப்புநிலத்தை நோக்கி கால்களைத் தொங்கவிட்டு சிகரெட்டைப் புகைத்தபடி அமர்ந்தான். அவனை நோக்கி கண்கள் திரும்பவும், “உன் மேல் பொறாமை அவனுக்கு,” என்றாள்.

“எப்படிச் சொல்கிறாய்?”

“உன்னிடம் பேச ஆரம்பிக்கவும், அவன் முகமே வாடி விட்டது. உனக்குத் தெரியவில்லையா?”

“இல்லை, எதற்காக?”

“நான் அழகாக இருப்பதால் தான்.”

“அப்படியா? யார் அவன் சொன்னானா! பொய் பேசியிருக்கிறான்.”

“நீயும் இப்போது பொய் தான் பேசுகிறாய்,” விரிந்து கிடந்த கூந்தலை முதுகுக்குப் பின்னால் அள்ளிப் போட்டு, கண்களைச் சுருக்கி, கீழுதட்டைப் பற்களால் கடித்து, தலையை மேலும் கீழுமாய் மெல்ல ஆட்டினாள்.

“ஆம், சில சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல நேரிடும். அப்படியொரு சந்தர்ப்பம் இதில்லையே!” இயல்பாகச் சொல்வது போல முயன்றேன்.

அவள் என்னைச் செல்லமாக முதுகில் தட்டினாள். அவன் வேகமாக இறங்கி எங்கள் அருகே வந்து. “வா, மேலே செல்லலாம்” அவளை அழைத்தான். மெல்லப் புன்னகைத்துத் திரும்பவும், என் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“நீயும் மேலே வா. கொஞ்சம் குடிக்கலாம். நிறையப் பேசலாம்.”

“இல்லை, சரிப்பட்டு வராது, நீங்கள் இந்நாளைக் கொண்டாடுங்கள். நாளை நீங்களே என்னைக் கண்டால் காணாதது போலச் செல்லக்கூடும். போக எனக்கும் டியூட்டி இருக்கிறது.” அதே புன்னகையோடு சொன்னேன்.

“ஏது, நீ காவல் காப்பதால் தான் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோமா? சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. அதுவும் போக, திருடர்கள் இவ்வளவு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் திருட வருவதில்லை. பெருஞ்செல்வங்களை, அடுக்குமாடிக் குடியிருப்பு ஆட்களைத் திருட வேறு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருட பகல் நேரமே போதுமானது. சாதாரணத் திருடர்கள் இங்கே சுவர் ஏறிக் குதித்தெல்லாம் வரப்போவதில்லை. நீ எங்களுக்கு வெறும் ஆசுவாசம்தான், விழித்திருக்கிறாய் அல்லவா? அந்த நம்பிக்கையிலேயே நாங்கள் உறங்கிவிடுவோம். நேரம் நடுச்சாமம் கடந்துவிட்டது. வா.. மேலே செல்லலாம். நீ எழுத்தாளன் என்று வேறு சொல்கிறாய். ஒரு அழகிய பெண் உன்னை அழைக்கிறாள் வரத் தயங்குகிறாய். ஓ! நீ கதைகள் எழுதுபவனா? கவிஞன் இல்லையா?” அவளின் ஆச்சர்ய உதட்டுப் பிதுக்கல் எனக்கு மீண்டும் சிரிப்பை வரவழைத்தது. வார, மாத இதழ்களில் சில பக்கங்களில் வரும் காதல் கவிதைகளைப் படித்துவிட்டு தன்னை இலக்கியம் அறிந்தவளாக எண்ணி என்னைச் சீண்டிப் பார்க்கிறாளாம். சிசிடிவி கேமராக்கள் எங்கே வேலை செய்கின்றன? எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனாலும், அவளின் கன்னங்களில் சிரிக்கும் போதும், பேசும் போதும் விழும் குழியும், கண்ணிமைகளில் பூசிய மைப்பூச்சும், உதட்டு சாயம் இல்லாத உதடுகளும், உதடுகளுக்கு மேலேயுள்ள செம்பட்டை நிறமுள்ள மெல்லிய மயிரிழைகளும் என்னைக் கிறங்க வைத்தன. வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை நோக்கி, “உங்களுக்கு இதில் எதுவும் சிரமம் இருக்கிறதா?” வேண்டுமென்றே கேட்டேன். அப்போதுதான் கவனித்தேன், சவரம் செய்த முகத்தில் வெள்ளை முடிகளின் தளைகள், குரலும் அவனுடைய வயது அதிகம் எனக் காட்டிக்கொடுத்தது, மாறாக, அருகில் அவள் இன்னும் இளமையாக, முகத்தில் மினுங்கும் பழுப்பு நிறப் பருக்களால் கவர்ச்சியாய் தெரிந்தாள்.

அவன் தடுமாறிவிட்டான். ஒருமுறை கனைத்து அவளைப் பார்த்தபடியே, “அப்படியெல்லாமில்லை, நீயும் வேடிக்கையாகத் தான் பேசுகிறாய். எங்களுக்கும் நேரம் போகும். வா போகலாம்,” என்றான். குரலில் என்னைத் தாழ்த்த முயல்வது தெரிந்தது. “இருந்தாலும், நாளை காலை போதையின்றி, இப்போது என்னை அழைப்பதைப் பற்றி யோசித்தால், என்னை அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்ரெட்டரியிடம் புகார் செய்ய மாட்டீர்களென என்ன உத்தரவாதம் இருக்கிறது?” பதிலுக்கு மென்மையாய் சீண்டினேன்.

அவள் குழந்தையைப் போல் சிரிக்க ஆரம்பிக்க, அவனும் அதைத் தொடர பொய்யாய் முயன்றான். “டேய், நீ ஒரு..” சொல்லிவிட்டுத் தொடர்ந்து சிரித்தாள். நாங்கள் லிப்ட்டில் ஏறவும் என்னை விளையாட்டாய் இடித்தபடியே நின்றாள். அவன் கசப்பான சிரிப்பொன்றை என்னை நோக்கி உதிர்க்கவும், நானும் அவள் அப்படிச் செய்வதை உற்சாகப்படுத்தும் எண்ணத்தில் ஒதுங்கி ஒதுங்கி அவனருகே சென்றேன். அவனின் உதடுகள் மோசமான வசைச்சொல்லொன்றை அவிழ்த்துவிட, நானும் அவளை இடித்து விளையாட ஆரம்பித்தேன்.

 அந்த வீடு சுத்தமாக இருந்தது. அதற்கு முன் குடித்துமுடித்த பாட்டில்களைத்தான் அவர்கள் வீச வந்திருக்கிறார்கள். அறையில் மல்லி மணமுள்ள ஒருவித ரிஃபெரஸர் வாசனை நிரம்பியிருந்தது. வெண்சாளரங்கள் சன்னல்கள் திறந்திருந்ததால் அலையலையாய் அசைந்தன. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் ஓர் ஒழுங்கிலிருந்தன. எல்லாமே ஏதோ ஒரு முன்னேற்பாடுகளுடன் இருப்பது போல எனக்குத் தோன்றியது. அவன் அவசரமாகக் கழிவறைக்குள் ஓடினான். வரவேற்பறையின் மையத்திலிருந்த பிரம்பு சோபாவில் அமர்ந்தேன். எதிரே, அவன் வேறொரு பெண்ணோடும், அவள் கையில் பொம்மை போல ஒரு பெண் குழந்தையும் இருக்கும் புகைப்படம் ஆளுயரத்திற்குச் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அவளை நோக்கித் திரும்பவும், எரிச்சலுடன் “அவனைக் கொன்றுவிடலாம் போலிருக்கிறது.” என்றாள்.

அப்படியா! என்பது போல நான் பார்க்கவும், அருகே வந்தவள் இடையில் மெல்லக் கைகளால் வருடி நகர்ந்தாள். அவள் சொல்லிய சொற்களிலிருந்த உறுதித்தன்மை பதட்டத்தை அளித்தாலும், அவளின் முகத்தை அப்போது அருகில் பார்க்க நேர்ந்ததால், அவளை மிஞ்சி வெளிப்பட்ட ஓர்  குழந்தைமையைக் கண்டதில் இயல்பானேன். கழிவறையிலிருந்து வெளியே வந்ததும், எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். மேஜிக் மொமொன்ட்ஸ் வோட்கா முழு பாட்டிலை இன்னொரு அறையிலிருந்து எடுத்தபடி வந்தாள். அவன் எதுவும் பேசாமல் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து மொபைலில் மூழ்கினான். வந்தவள் என்னருகே உட்காரவும், மீண்டும் எங்களை ஒருமுறை வெறித்துப் பார்த்தபடி மொபைலில் தலை குனிந்து டைப் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய சார்ட்ஸ் பாக்கெட்டிலிருந்த மொபைல் சிணுங்க ஆரம்பிக்கவும். என்னிடம் மெல்ல, “அவனுக்கு என் உதடுகள் வேண்டுமாம். உன்னை இங்கிருந்து விரட்டச் சொல்கிறான். பார்க்கலாம்.” கிசுகிசுத்தாள். எனக்கு அவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.

 “நாங்கள் குடிக்கப் போகிறோம். உனக்கு வேண்டுமா?” அவனை நோக்கிச் சத்தமாகக் கேட்டாள். அவனின் பார்வை கோபத்தோடு எங்களிடையே விழுந்தது. சரி என்பது போல வெறுப்பாகத் தலையை அசைத்தான். மூன்று கண்ணாடிக் குவளைகளில் சரிசமமாய் ஊற்றி, கண்களாலே தண்ணீர் அளவைக் கேட்டு நிரப்பினாள். நாங்கள் குவளையை எடுத்து, “சியர்ஸ்” என்றோம்.  அவன் குரல் மட்டும் மெல்ல ஒலித்தது. எதிரே இருப்பவன், எத்தனை பிரயத்தனங்களுக்குப் பிறகு அவளை இங்கு அழைத்து வந்திருப்பான். இடைஞ்சலாக அமர்ந்திருக்கிறேன். ஆம், இவள் தான்.. மோகனம் நிரம்பி வழியும் ஒரு பாத்திரமெனத் ததும்பியிருக்கிறாள். டீஷர்ட்டில் தெரியும் மார்பின் வளைவுகளும், பிருஷ்டங்களின் எடுப்பும் எனக்கும் உள்ளுக்குள் நமைச்சலை அதிகரித்தபடியே இருந்தது. கூட, அவளும் அவன் காணாத நேரங்களில் என் பின்னங்கழுத்தை வருடியும், புட்டத்தை கைகளால் அழுத்தியும் விளையாட்டு காட்டினாள். அடுத்த குவளை ஊற்றும் போது கவனித்தேன், அவனுடைய குவளை வழக்கத்திற்கு மாறாக அதிகம் நிரம்பியது. நானும் அறியாதது போல நடிக்க ஆரம்பித்தேன்.

குடித்துவிட்டு, “நீங்கள் உண்மையிலே எழுத்தாளனா?” கேட்டான்.

“உண்மையிலே எழுத்தாளனா!.. உறுதியாகத் தெரியவில்லை”

“சரி, எதைப் பற்றி இப்போது எழுதுகிறீர்கள்?”

“காமத்தையும் மரணத்தையும் முன்னிறுத்தி ஒரு புனைவை எழுத முயல்கிறேன்.”

“காமம், மரணம். அட்டகாசம். மனிதன் பிறந்திருப்பதே காமத்திற்காகத்தானே.. அதுவும் அழகான பெண்களோடு கலவி முடிந்து இறந்தாலும் நிச்சயம் சொர்க்கம்தான்.” சிரிக்க ஆரம்பித்தான். அவள் என்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பிறப்பதும் காமத்தால்தான். யாருடைய காமத்திலோ ஆரம்பிக்கிறோம். இறுதியில் தனியாக மரணிக்கிறோம்.”

                அவர்கள் இருவரும் பேசாமல் இருக்கவே, எதற்கு இந்த ஃபிளாசஃபி..! நிறுத்தி, அவனைப் பார்த்து “அடங்காக் காமம் கூட மரணத்திற்கான வாயில்தான் தெரியுமா? காமம் பீறிட ஆணும் பெண்ணும் முயங்கும் வேளைகளில், சில பூச்சிகளில், ஆண் பூச்சிகளைப் பெண் பூச்சிகள் காமம் தீராமல் விழுங்கிவிடும் தெரியுமா?” சொன்னேன்.

“பெண்பூச்சி ஆணைக் கொல்லுமா? மாற்றிச் சொல்கிறாய் என்று நினைக்கிறேன்.” நாங்கள் பேசுவதை, வலதுகால் மேல் இடதுகாலைத் தொங்கவிட்டு, வலதுகையைத் தொடையில் ஊன்றி, அதில் தலையைச் சாய்த்துப் பார்த்தபடியிருந்தாள்.

“அது ஒருவகை வெட்டுக்கிளி, எலிகளிலும் சில இனங்கள் உண்டு. உனக்குத் தெரியுமா? விலங்குகளிலும் பூச்சிகளிலும் இனப்பெருக்கம் முடிந்ததும், ஆணுக்கு ஒன்று இறப்பு, இல்லை ஓட ஓட அடிதான்.”

“நீயே சொன்னாய், இனப்பெருக்கம். அங்கே வெறும் இனப்பெருக்கத்திற்காகத் தான் காமம். நாம் அப்படியா? காமத்தைக் கலையாக ஆக்கியவர்கள். நானெல்லாம் அதில் மாஸ்டர்.” அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“சரி, அப்படியென்றால் மனிதர்களில் காமத்தில் உச்சம் யாருக்கு, ஆணுக்கா? பெண்ணுக்கா?”

அவன் “ஆண்,” என வேகமாகச் சொல்லவும், அவளைக் கவனித்தேன். உதடுகள் அலட்சியமாக மெல்ல விரிந்து மூடியது.

“உங்கள் அளவிற்கு எனக்குப் பேசத்தெரியாது. நல்லவேளை நாம் மனிதர்கள். அதுபோக இந்த நூற்றாண்டில் காமம் எல்லாம் எளிதில் தீர்த்துக் கொள்ளக்கூடிய சமாச்சாரம் தான். ” அவளைப் பார்த்தபடியே சொல்லிவிட்டு, அசௌகரியமாய் இருப்பதைப் போல முகத்தைக் கோணலாக்கி மீண்டும் எழுந்து கழிவறையை நோக்கி ஓடினான்.

ஏன் அடிக்கடி போகிறான் என யோசித்துக்கொண்டே அவளை நோக்க, புரிந்தவள் போல, “அவனுக்கு பைல்ஸ்.” நமுட்டுச் சிரிப்பைச் சிரித்தாள். “நாங்கள் இருவரும் ஒரே அலுவலகம். அவன் எனக்கு உயரதிகாரி.” எரிச்சலுடன் சொன்னாள்.

“காமம். மரணம். இரண்டில் எது இப்போது உனக்கு வேண்டும்?” தொடர்ந்தாள்.

என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அவளின் பின்கழுத்தைக் கைகளால் என் முகம் நோக்கி இழுத்து, “காமம்,” என்றேன்.

அவள் திரும்ப, என் மூச்சுக்காற்று முகத்தில் வீசிய வேகத்தில், “என்ன சூடு.. காமம் ஒருவேளை எல்லோருக்கும் கிடைக்காமல் போகலாம். ஆனால் மரணம்..”, அவள் சொல்லவும்,

“கேள், பெண்ணுக்காக.. ஆண் மரணத்தின் வாசலை நோக்கியும் செல்வான்,”  உதடுகள் அருகருகே மயிரிழையில் நெருங்கின. கதவு திறக்கப்படும் ஓசை கேட்கவும் அவள் பின்நகர்ந்தாள். அவன் நெளிந்தவாறே வந்தவன் உட்காராமல் அடுத்த சிகரெட்டைப் பற்றவைக்க, நானும் ஒன்றை வாங்கிக்கொண்டேன். அடுத்தடுத்து இரண்டு குவளைகள் அவசர அவசரமாக நிரம்பித் தீர்ந்தன. கண்கள் சொக்க ஆரம்பித்தன. பக்கத்திலிருந்தவளின் ஏறியிறங்கும் மார்பைப் பார்த்ததும் விழிப்பு வந்தது.

அவன் தடுமாறி எழுந்து, அறையின் வலதுபக்கமிருந்த பால்கனியைத் திறந்து வெளியே சென்றவன், திரும்பி, “முழுநிலவு, வேண்டுமென்றால் வாருங்கள். இங்கிருந்து பேசலாம், நல்ல இயற்கையான காற்று.” அவனின் வாக்கியங்கள் முழுமை பெறாமல் முடிந்து போயின. அவள் என் தொடையைக் கிள்ளி வேண்டாம் என்பது போலத் தலையை அசைத்தாள். “வேண்டாம், நான் அங்கே நிற்க யாராவது பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும்.” அதுவும் சரி என்பது போல ஏதோ சொல்லிவிட்டு பால்கனியை அடைத்துவிட்டு, அவன் மட்டும் வெளியே நின்றான்.

“உனக்குப் பிடிக்காத பெண்ணோடு செக்ஸ் செய்யச் சொன்னால், சரியென்பாயா?” நேரடியாகக் கேட்டாள்.

எனக்குக் கேள்வி புரிந்தும் புரியாதது போல விழித்தேன். “ஹீ வான்ட்ஸ் புளோஜாப், ச்சீ” பாவமான குரலில் சொல்லிவிட்டு, மிச்சமிருந்த கடைசி மதுவை எங்கள் குவளைகளில் நிரப்ப ஆரம்பித்தாள்.

“காமம், எனக்கும் பிடிக்குமல்லவா? உன்னைப் பார்த்ததும், ஐ ஃபீல் பெட்டர். குடித்திருக்கிறேன். இன்று அளவிற்கு அதிகமாக. அவன் ஏற்பாடு தான். நல்ல வேளை உன்னைப் பார்த்தேன்.” என் கழுத்தில் அவளின் கை மெல்ல வருட உடல் சிலிர்த்தது. எத்தனையோமுறை சிலிர்த்திருக்கிறது. ஆனால் இவள் புதிதாகத் தெரிகிறாள். அவளின் கண்கள் என்னைக் குத்திக் கிழித்தன. கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“அவனைக் கொல்லவேண்டும் எனக்கு உதவுவாயா?” கண்கள் சிவக்கச் சொல்லவும், மனம் அதிர்ந்தாலும் “சரி சரி, கொல்லலாம்,” அவளை அமைதியாக்கி அருகில் அமர வைத்தேன். நெடுநேரம் கைகளைப் பிசைந்தாள். என்னைப் பார்ப்பதும், பின் சொல்லவருவதைத் தவிர்ப்பதுமாய் தொடர்ந்தாள். அவள் கைகளைப் பிடித்து, இருவரின் கண்களை ஒன்றாக்கி, “ர்ரிலாக்ஸ்” என்று சொல்லவும், என் தோளில் சாய்ந்தாள். பால்கனியை நோட்டமிட்டேன், முதுகு பால்கனி கதவில் சாய்ந்திருக்கத் தலை தொங்கிக்கிடந்தது.

 “நான் குடித்திருக்கிறேன், நீயும் தான். அங்கங்கே கிள்ளி விளையாடுகிறேன். உனக்கு அசௌகரியம் ஒன்றுமில்லையே!” புருவத்தை உயர்த்தி மென்மையாகக் கேட்டாள். இல்லை எனத் தலையசைத்தேன். “அவன் செக்ஸில் மாஸ்டராம். எரிச்சல் பிடித்தவன், அடுத்தவரின் விருப்பத்திற்கெல்லாம் செவி சாய்க்காதவன். கட்டாயப்படுத்துவான். கொன்றுவிடலாம் போலிருக்கிறது.”

சின்ன அமைதிக்குப் பிறகு, “சரி, ஏதாவது கவிதைகள் சொல்லேன். எழுத்தாளர் கவிதைகள் வாசிப்பவரா?” செல்லமாய் முறைத்தாள்.

“நீ கவிதைகள் வாசிப்பாயா? யார் விருப்பமான கவிஞர்?” இவளைத் தவறாக எடை போட்டுவிட்டேன். முதன்முறையாக உடல் கடந்து உளப்பூர்வமாக அவளிடம் பேசத் தோன்றியது.

“சில்வியா பிளாத்.”

“சில்வியா?” கண்கள் என்னையறியாமல் விரிந்தன. முகம் ஆச்சர்யத்தில் கோண, சட்டென்று என் செயற்கைத்தனத்தைப் பறிகொடுத்தேன்.

“What is this, behind this veil, is it ugly, is it beautiful ?

It is shimmering, has it breasts, has it edges ?

‘Is this the one I am to appear for,

 Is this the elect one, the one with black eye-pits and a scar?

.” வார்த்தைகளை உச்சரிக்கும்போது ஒவ்வொன்றும் பிரத்தியேகமான தாளலயத்தில் ஒலித்தன.

                அவளின் கண்கள் பிரகாசித்தன, சொற்கள் உதடுகளின் வழி பிரசவித்து மெல்லக் குழந்தையாகி அறை நிறைய, எங்கும் எதிலும் சொற்களின் தடயங்கள். அவள் சோபாவில் நிமிர்ந்து படுத்தபடி, கைகளை அகலவிரித்துத் தொடர்ந்தாள்.  கண்களை மூடினேன். ஒளியற்ற வெளியில் நிற்பவன் போலச் சுற்றிலும் இருள்

                “I do not want much of a present, anyway, this year.

After all I am alive only by accident.

I would have killed myself gladly that time any possible way.

Now there are these veils, shimmering like curtains,

….”

                அறையின் வெண்சுவர் முழுக்க காட்சிகள், எல்லாமே அவளின் முகம் சூடிய பெண்ணொருத்தியால் நகர்கின்றன.

                “Must you kill what you can ?

There is this one thing I want today, and only you can give it to me.

It stands at my window, big as the sky.

It breathes from my sheets, the cold dead center

….”

அது.. அது என்ன? ஆம், மரணம். கண்களைத் திறந்து அவளைப் பார்த்தேன். அதே நிலையிலே இருந்தாள். மீண்டும் கண்களை இறுக்க மூடினேன்.

                “Pure and clean as the cry of a baby,

 And the universe slide from my side.”

 நிசப்தம், சோபாவில் அவளில்லை. மெல்லிய பதட்டம் எழ, எழுந்து ஒவ்வொரு அறையாகத் தேட, அடுக்களைக்குள் நின்றாள். கையில் கத்தியின் கூர்முனையை விரலால் வருடியபடி,  இமைகளை மெல்ல விரித்து மூடினாள், இதழ்கள் மொக்கவிழ்வது போல விரிந்தன.

“A Birthday Present poem, சில்வியா பிளாத் தேவதை. எப்போதுமே மரணம் அவளை அதிகம் நேசித்தது. முதலில் அவளின் தந்தையை, அப்போது அவளுக்கு எட்டு வயது. பின்னர் அவளை, இருவரும் இணையப் பலமுறை முயன்றனர்.  ஒவ்வொருமுறையும், அவளும் மரணமும் வாழ்வின் முன்னே தோல்வியடைய, பின் அவளுடைய முப்பத்தொன்றாவது வயதில் இருவரும் ஜெயித்தார்கள். பார், எனக்கும் முப்பத்தொன்று வயது.”  அவள் சொல்லிமுடிக்கும் வரையிலும் கை கால்கள் விறைப்பாக, கத்தியை அவள் கைகளிலிருந்து பறிப்பதைப் பற்றியே சிந்தித்தேன். கத்தியை இயல்பாகக் கீழே வைக்கவும் ஆசுவாசமானேன்.

நெற்றியின் வியர்வையைக் கண்டதும், “என்ன, தற்கொலை செய்து விடுவேனோ என்று பயந்தாயா?” கூறிவிட்டு, அடுக்களையிலே என்னை இழுத்து நெற்றியில் முத்தமிட்டாள். “வெளியே அவன் இருக்கிறான்,” நான் சொல்லவும், “பால்கனியைப் பார். மரணம் வந்துகொண்டிருக்கிறது. அவனைக் கொல்லப்போகிறேன்.”  சொல்லும் போது அவளுள் மின்னலெனத் தோன்றி மறைந்த ஆத்திரமும் குரூரமும், உள்ளங்கைகளை, பாதங்களை நனைய வைத்தன .

குடித்திருக்கிறாள். நிதானமாக இருக்க முயன்றேன். ஆனால், மறுபடியும் மறுபடியும் ‘கொல்லப்போகிறேன்..’ என்று அவள் சொல்வதினால் எனக்குள்ளும் மெல்ல ஓர் கிளுகிளுப்பு உருவானது. இவளா? உள்ளுக்குள் சென்ற மதுவின் அளவு மேலும் மேலும் என்னை வக்கிரமானவனாக மாற்றிக்கொண்டிருந்தது. “கொலை செய்யப் போகிறாயா? நீ.. அவனை. விளையாடுகிறாய்..” உதடுகள் விரிந்தன.

“ஆமாம், கொல்வேன். நீ வேண்டுமென்றால் பார்.”

“பார்ப்பேன். நீ கொல்வது வரையிலும் இருப்பேன். நிச்சயமாக..” பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்து மிச்சமிருந்த மதுவைக் குடித்தேன். சில்வியா பிளாத்தின் கவிதை வரிகள் வேறு மனதிற்குள் ஓட தலை கிறுகிறுவென்று சுத்தியது. கீழே இறங்கிவிடலாமா? இவள் கொல்லக் கூடியவளா? முதலில், அடுத்த சிகரெட் வேண்டும். எழுந்து பால்கனியை நோக்கி நடந்தேன். கதவைத் திறக்கவும், கதவில் சாய்ந்து இருந்தவன் தடுமாறி விழப்போனான்.

உறங்கி விழித்தவன் போலக் கண்களைக் கசக்கி, தலையை அங்குமிங்குமாய் ஆட்டினான். “விடிந்து விட்டதா? நீ அதிர்ஷ்டசாலி.”

“பயப்படாதே, அப்படியெல்லாமில்லை. அவள் புத்திசாலி. நீ என்னை, அவள் அழைத்திருக்கும் போதே அனுமதித்திருக்கக் கூடாது.” முதுகில் தட்டிக்கொடுத்தபடி அருகில் அமர்ந்தேன்.

“உனக்கும் புரிந்துவிட்டதா? அவளைப் பார்.. ஆஹா.. உனக்குள் எதுவும் தோன்றவில்லையா?” பேச்சில் நளி எட்டிப்பார்த்தது.

நாங்கள் இருவரும் பால்கனி கண்ணாடி வழியே அவளைப் பார்த்தோம். சோபாவில் சாய்ந்து கிடந்து மொபலை நோண்டிக்கொண்டிருந்தாள். “இன்றைக்கு மட்டும் நாலாயிரம் பில், மொத்தமாக நாற்பதாயிரம் ஆகிவிட்டது,” கவலையோடு சொன்னான்.

“இவளுக்கு மட்டுமா? இல்லை, மொத்தமாகவா?” வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை, அவனும் சிரிக்க ஆரம்பிக்க, நெடுநேரம் சிரித்தோம்.

இங்கேயே தொடர்ந்து இருக்கவா? இல்லை, கீழே செல்லவா? அங்கிருந்து கிளம்பவே எத்தனித்தேன். “இங்கிருந்து நழுவப் பார்க்கிறேன். நீயும் வெளியே வா.. உன்னிடம் சண்டை போடுகிறேன்.. கோபமாய் பேசு.. ஒரு நாடகம்.” கண்ணடித்தேன். அவன் கண்களில் ஒரு ஒளி இப்போதுதான் தெரிகிறது. நாங்கள் இருவரும் அறைக்குள் வந்து பிரம்பு சோபாவில் அமர்ந்தோம்.

அவள், இருவரின் நடுவே வேண்டுமென்றே வந்தமர்ந்தாள். அவன் எதுவோ கேட்க, அவள் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல அவளின் தொடைகளில் கையை எதேச்சையாக வைப்பது போல வைக்க, எதிர்வினையாய் அவளும் வைத்தாள். எதிர்பார்த்தேன். அவன் இதைக் கண்டதும் சட்டென்று எழுந்து,

“சீ என்ன இது.. இதற்குத்தான் இவனையெல்லாம் உள்ளே விடக்கூடாது என்றேன். வெளியே போ.” கத்தினான்.

நான் எழவும், அவள் என் தொடையைப் பிடித்து கீழே அமர்த்தினாள். “அவன் இருக்கட்டும். உனக்கு என்ன புளோஜாபா? அவ்வளவுதானே. திற, ஜிப்பைத் திற. ஆனால், அதன் பிறகு எனக்கு இவன் வேண்டும்.” என்பக்கமாய் கையை நீட்டினாள்.

மூவரும் போதையின் உச்சத்தில் இருக்கிறோம். இருவரும் சண்டையிட ஆரம்பித்தார்கள். வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன, ஆண், பெண், உடல் பற்றிய வசைகள். மெல்ல எழுந்து இருவரையும் அமருங்கள் எனச் சைகை காட்டினேன். இருவரும் உட்கார்ந்து என்னை நோக்கித் திரும்பினார்கள். “காமம், கட்டுப்படுத்த முடியாதுதான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இவள் விரும்பி இருவரும் ஒரே மனமாய் அவ்விளையாட்டில் ஈடுபட வேண்டும். உனக்குப் புரிகிறதா?” அவனை மட்டும் தீர்க்கமாகப் பார்த்தேன். ஆமாம் என்பது போலத் தலையசைத்தான். “பெண்கள் எளிதாக ஆண்களை விரும்ப மாட்டார்கள். ஏதாவது சாகசம் புரிந்தால், அவன் வீரனாகி, குறைந்தபட்சம் உனக்கு நெருக்கமாகிவிட வாய்ப்பு இருக்கிறதல்லவா?” அவளை நோக்கித் திரும்பினேன். அவளும் சரியென்று தலையசைத்தாள்.

இருவரின் கண்களும் போதையின் உச்சத்தில் ஏறி மூடி மூடி விரிந்தன. எனக்குள், ‘காமம், மரணம்’ புதிதாய் ‘விளையாட்டு’ ஒரு சொல் சேர்ந்துகொண்டது. மண்டைக்குள் மூன்று சொற்களும் தாளமிட்டன.

கேட்கப்போவதை எண்ண ஆரம்பித்தவுடனே உள்ளம் பதறியது. ஆனாலும் என்ன நடக்கும்? எது உச்சம்? பார்க்கலாம். “அவளுக்காக உன் வலதுகை கட்டை விரலை வெட்டிக்கொள்வாயா?” விளையாட்டை ஆரம்பித்தேன். அவன் மௌனமானான். “கிழிப்பான். பயந்தாங்கோழி” அவள் வலிச்சம் காட்டினாள். சோபாவில் சாய்ந்து குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். என்னையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன். வேகமாக அடுக்களைக்குள் சென்று கையில் கத்தியோடு வந்தான். நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவளோ, “சீக்கிரம்,, சீக்கிரம்” என்றாள்.

 முன்னே இருந்த சிறுமேஜையில் வலதுகையை நீட்டி வைத்து இடது கையில் கத்தியைப் பிடித்தபடி, “விரலை வெட்டுகிறேன். ஆனால்..” ஒரு நிமிடம் நிறுத்தி, “இவள் டீஷர்ட்டைக் கழற்ற வேண்டும், முடியுமா?” கண்களை உருட்டியபடி கேட்டான். “முடியுமா? முடியுமா? ஏஏஏ..” அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அவளோ சில நொடிகள் தலையைத் தாழ்த்தி சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

வெறும் பார்வையாளன் ஆனேன். பெரும் பீதியில் உறைந்தேன். ஆண், பெண் போதையில் என் முன்னே. காட்சிகளைக் காண்பவன் மட்டுமே நான். ‘காமம், மரணம், விளையாட்டு’.. ‘விளையாட்டு.. விளையாட்டு’ மண்டைக்குள் ஓடியது.

“இதோ வெட்டு.. கழட்டுகிறேன்..” டீஷர்ட்டின் நுனியை மேல்நோக்கித் தூக்கி தொப்புள் தெரிய, “வெட்டு.. வெட்டு..” சிரித்தாள்.

அவனும் சிரிக்க ஆரம்பித்தான். இருவரும் நாக்கை வெளிநீட்டி வலிச்சம் காட்டி உரக்கச் சிரிக்க ஆரம்பிக்க, அவள் உதட்டைச் சுழித்து, “கோழை.. கோழை..” எனவும், அவன் “நானா.. நானா..” எனக் கத்தினான். இமைகள் மூடித் திறக்கும் அரைநொடியில் வலதுகை கட்டை விரல் தனியாக விழ அவன் குதிக்க ஆரம்பித்தான். துண்டுப்பட்ட விரலில் இரத்தம் வழிந்தோடியது. என்னை அறியாமல் எழுந்து, “போதும். நிறுத்துங்கள்,” என்றபடியே அங்கிருந்த அறைக்குள் ஓடி, கையில் ஒரு துணியோடு வந்தேன். அவளோ டீஷர்ட்டைக் கழற்றி எறிந்தாள். அவன், அவள் மேல் பாய்ந்து இரத்தம் பீச்சியடிக்கும் வெட்டுப்பட்ட கையால் மார்புகளை அழுத்தி அதிலே முத்தமிட்டான். அவள், அவனைத் தள்ளி எறிந்தாள்.

“நீ, சார்ட்ஸை கழட்ட எதை வெட்ட வேண்டும்.” இரத்தம் பீறிடும்  கையோடு அடங்காமல் கேட்டான். அடுத்த அடி எடுத்து வைக்கக் கால்கள் மறுத்தன. வீட்டின் வாசல் கதவு ஆறடி தொலைவில், மேலாடையில்லாமல் குதிப்பவளைக் கண்டதும் அசையாமல் நின்றேன்.

“உன் இடதுகை பெருவிரலை.. முடியுமா? இதோ கழட்டுகிறேன்..”

குடித்த மதுவெல்லாம் வயிற்றில் காய்ந்து, புகைந்து ஏப்பமாக வெளியே வந்தது. காட்சிகள் இருளாகவும், வெளிச்சமாகவும் மாறி மாறி தெரிந்தன. தள்ளாடி நடந்து அவளையும் அவனையும் தடுக்க பாய்ந்தேன். இருவரும் என்னைத் தூர எறிந்தார்கள். இரத்தம் பாயும் கையில் கத்தியைப் பிடித்தபடி இடதுகையை முன்னேயிருந்த சிறுமேஜையில் வைத்தான். கத்தியின் கூர்முனையில் இரத்தம் சொட்டு சொட்டாக விழ, அவளைப் பார்த்தேன். “பால்கனியைப் பார்” என்னை நோக்கிச் சொன்னாள்.

முழுநிலவு, பால்கனியின் கண்ணாடிக் கதவின் வழியே தெரிந்தது. பால்கனி தடுப்பில் கரிய பறவையொன்று அமர்ந்து எங்களை வெறித்துப் பார்த்தது. அதன் கண்கள் சாம்பல் நிறத்தில் மினுங்கின.

உள்ளே, “வெட்டு.. வெட்டு..” முடியெல்லாம் விரிந்து காற்றில் சலசலக்க குதித்தாள். சட்டென்று அமைதியாகி, ஏதோ யோசிப்பது போல, வலதுகை சுட்டுவிரலால் நாடியைத் தொட்டவள், “இல்லை வேண்டாம்,” என்றாள்.

அவன், “அப்போ வா.. வா..” நாக்கைத் தொங்கவிட்டு வாயில் சழுவை வடிய அழைத்தான்.

“விரல் வேண்டாம்.. உன் ஆண்குறி..” சொல்லிவிட்டு மௌனமாகி அவனையே வெறித்தாள்.

“அவ்வளவுதானா!” அவன் சார்ட்ஸை கழட்டித் தொங்கிக் கிடக்கும் ஆண்குறியை சிறுமேஜையில் வைத்தான். ‘காமம், மரணம், விளையாட்டு’ எல்லாமே எல்லையற்றது, அருகில் சென்று அவளை அசைத்தேன், “அவனுக்கே என்ன செய்கிறான் எனத் தெரியவில்லை, விட்டுவிடு.. போதும்..” தொண்டை வறண்டது.

அவனின் இரத்தம் பாய்ந்த மேலாடை இல்லாத மேனியோடு என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். “நீ தானே சொன்னாய்.. அவனைக் கொல்வதைப் பார்ப்பாய் என்று.. பார்.. அவனே அவனைக் கொல்லப் போகிறான்..” சிறுபிள்ளையைப் போலச் சொன்னாள்.

“அவன் போதையில் செய்கிறான்.”

“காமப் போதையில் செய்கிறான். செய்யட்டும். நீ தள்ளிப்போ. எல்லாமே கிறுக்கு.” அவளின் கைகள் உலக்கையைப் போல என் நெஞ்சில் மோதக் கீழே விழுந்தேன்.

“வெட்டிவிடுவேன்.. வெட்டிவிடுவேன்..” அவன் பித்தாகிப் புலம்பினான். கால்கள் தரையில் எம்பின. கருவிழிகள் மெல்ல மெல்ல மேலேறின.

“வெட்டு.. வெட்டு..” சார்ட்ஸை ஏற்றி இறக்கி அவனை வெறியேற்றினாள்.

அவன் கத்தியை ஓங்கவும், கண்களை இறுக்க மூடினேன். ஆண்குறியின் சதைத்துண்டின் ஒருபகுதி மிச்சமிருந்த பகுதியோடு நூல் போல ஒட்டியிருக்க , அவன் தரையில் விழுந்து அலறித் துடித்தான். என்னுடல் பதற ஆரம்பித்தது. எழும்ப முடியவில்லை. கண்கள் திறக்க மறுத்தது. அப்படியே உறங்கிப்போனால் என்ன? தலை விண்ணென்று வலிக்க, கண்களைத் திறந்து எழும்ப முயன்றேன். எதிரே, சார்ட்ஸைக் கழட்டி அவன் மீது வீசினாள். தரையில் துடித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து, இரத்தம் தோய்ந்த நிர்வாண உடம்போடு ஆங்காரமாய் சிரித்தாள்.

எழும்பியவுடன் கால்கள் நடுங்க ஆரம்பித்தன, வெளிவாசல் கதவை நோக்கி மெல்ல நடந்தேன். கைகளைப் பிடித்து யாரோ இழுக்கவும் திரும்பினேன். கைகளை இறுக்கப் பிடித்திருந்தாள், பிடியிலிருந்து நழுவ முடியவில்லை. அவளின் கைகள் என்னை அள்ளித் தூக்கி சோபாவில் வீசியது. கீழே அவன் உணர்வற்றுக் கிடந்தான். அவளின் விரல்கள் என் உடல் மேல் படர உடல் சில்லிட்டு, மயிர்முடிச்சுகள் புல்லரித்தன. என் இதயத்தில் பெரும்வலியெடுக்க ஆரம்பித்தது. முகத்தில் குழந்தைமை வெளிப்பட, என் மார்பில் அவளின் கைகள் வருடின. கண்கள் இருள, உதடுகள் மட்டும் “காமம்.. மரணம்.. விளையாட்டு..” என உச்சரிக்க ஆரம்பித்தன. அருகில் இன்னொரு கை தலையை வருடக் கண்களைத் திறந்தேன், கையில் வெட்டப்பட்ட ஆண்குறியோடு சிரித்தபடி அவன் நின்றான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.