திருடன் – ஜூனிசிரோ தனிஸாகி, தமிழில் – சா.தேவதாஸ்

டோக்யோ மன்னர் பல்கலைக்கழக நுழைவுக்கு நான் பள்ளியில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது.

எனதறை நண்பர்களும் நானும் ‘மெழுகுவர்த்திப் படிப்பு’ என நாங்கள் அழைத்ததில் நிறைய நேரம் செலவிட்டதுண்டு. ஒரு நாள் இரவு விளக்குகள் அணைந்ததும், நாங்கள் நால்வரும் ஒரு மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம்.

அந்நாட்களில் எங்களுக்கு கவலை தந்துவந்த ஒரு பிரச்சனையான காதல் குறித்து குழப்பமும் ஆவேசமும் மிக்க விவாதத்தில் நாங்கள் இருந்தது ஞாபகத்தில் உள்ளது. அப்புறம் விவாதம் தன் இயற்கையான கதியில், குற்றம் சம்பந்தமானதாக மாறியது – களவாடுதல், திருடுதல், கொலை தொடர்பானதாகியது.

நன்கறியப்பட்ட ஒரு பேராசிரியரின் மகன் ஹிகுச்சி குறிப்பிட்டான்: “எல்லாக் குற்றங்களிலும் நாம் பெரிதும் செய்திடத் தேவைப்படுவது கொலையே… நான் எப்போதேனும் திருடியிருக்கிறேனா என நம்பவில்லை – என்னால் செய்ய இயலாது. எந்தவிதமான நபருடனும் என்னால் நண்பனாக இருக்க முடியும். ஆனால் திருடன் என்பவன் வேறான ரகம்.” அருவருப்பின் நிழல் அவனின் நேர்த்தியான அம்சங்களின் மீது படிந்தது.

“சமீபத்தில் நமது தங்கும் விடுதியில் நிறையத் திருட்டு நடப்பதாகக் கேள்விப்படுகிறேன், இல்லையா?” என இன்னொரு அறைவாசி நகமூராவை நோக்கி ஹிராடா வினவினான்.

“ஆமாம், அது மாணவர்களில் ஒருவனே என்கின்றனர்.”

“அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்றேன்.

“எல்லா விபரங்களும் தெரியவில்லை. அடிக்கடி நிகழ்கிறது. உள்ளே இருப்பவர்களின் வேலையாகவே இருக்கவேண்டும்” என கிசுகிசுப்பது போல நகமூரா கூறினான்.

“அதுமட்டுமில்லை, வடக்குப் பிரிவிலுள்ள ஒருவன் தன் அறைக்கதவைத் தள்ளி நுழைகையில், யாரோ ஒருவன் கதவைத் திறந்து வெளியே வர, முகத்தில் வாங்கிய அறையுடன் ஓடிவிட்டான். அவன் துரத்திச் சென்றபோது கீழ்ப்படியை எட்டிவிட்டான் திருடன். அறையில் நுழைந்து தன் பெட்டி, அலமாரியைப் பார்த்து எல்லாம் குலைந்து கிடந்ததைப் பார்த்தான். சந்தேகமின்றி அவன் திருடனே” என்றான் ஹிகுச்சி.

“திருடனின் முகத்தைக் கவனித்தானா?”

“இல்லை, எல்லாம் துரிதகதியில் நடந்துவிட்டது, ஆனால் நம்மில் ஒருவனைப் போலிருந்ததாகக் கூறுகிறான் – அவனது உடையை வைத்து. தன் மேல்கோட்டை தலைமீது இழுத்துவிட்டு, கூடத்தில் ஓடியிருக்கிறான். ஒன்று மட்டும் நிச்சயம், அவன் மேல்கோட்டில் Wisteria crest சின்னம் இருந்தது.”

“Wisteria crest? அதைக் கொண்டு எதையும் நிரூபிக்க இயலாது” என்றான் ஹிராடா. அது என் கற்பனையாகக் கூட இருக்கலாம், ஆனால் என் மீது அவன் சந்தேகப் பார்வை வீசினான். அப்போது என் முகத்தை சுளித்துக் கொண்டேன், எனது குடும்பத்தின் சின்னம் அதுவாக இருந்ததால். அன்றிரவு சந்தர்ப்பவசமாகவே அச்சின்னத்தை அணியாது இருந்தேன்.

“அவன் நம்மில் ஒருவனாயிருந்தால், அவனைப் பிடிப்பது எளிதாயிருக்காது. நம்மிடையே திருடன் ஒருவன் இருப்பதை நம்பிட யாரும் விரும்பமாட்டார்கள்” அப்பலவீனமான தருணத்தின் தருமசங்கடத்தை சமாளிக்க முயன்றுகொண்டிருந்தேன்.

“இல்லை, இன்னும் இரு தினங்களில் அவனைப் பிடித்துவிடுவார்கள். அது ஓர் இரகசியம். அவன் வழமையாக குளியல் கூடத்தின் ஆடையணியுமிடத்தில் திருடுகிறான் என்கின்றனர். இரண்டு மூன்று தினங்களாகப் பொறுப்பாளர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றான் ஹிகுச்சி.

“உன்னிடம் கூறியது யார்?” என்றான் நகமூரா.

“பொறுப்பாளர்களில் ஒருவர். ஆனால் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு திரியாதீர்கள்” என்றான்.

“உனக்கு இவ்வளவு தெரிந்திருக்கையில், திருடனுக்கும் இது தெரிந்திருக்குமே!” என அருவருப்புடன் ஹிராடா கூறினான்.

ஹிராடாவும் நானும் நல்ல உறவுநிலையில் இல்லை என்பதை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அப்போது நாங்கள் ஒருவரையொருவர் சமாளித்துக் கொண்டோம். ‘நாங்கள்’ என்றேன், ஆனால் என்னை மிகவும் வெறித்தது ஹிராடாதான். நான் எல்லாருக்கும் தோன்றுவது போன்ற நபரில்லை. என்னை ஊடுருவிப் பார்க்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது; ‘எனக்கு அவன் நண்பனாய் இருக்க இயலாது. அனுதாபப்பட்டுத்தான் அவனுடன் இருக்கிறேன்’ என ஒருமுறை நண்பன் ஒருவனிடம் தெரிவித்திருந்தான்.

நான் இல்லாத போதுதான் இது போன்றவற்றைப் பேசினான்; நேரிடையாககக் கேட்பதில்லை – என்னை அருவருத்தான் என்பது வெளிப்படை. ஆனால் விளக்கம் கோருவது என்னியல்பில்லை. ‘என்னிடம் தவறு இருப்பின் அதனைத் தெரிவிக்க வேண்டும். அது என்னவென்று கூறிடும் நட்பு இல்லையெனில் (அ) அதற்குத் தகுதியானவன் நானில்லை என்று கருதும் பட்சத்தில், நானும் அவனை நண்பனாகக் கருதமாட்டேன்’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். என் மீதான அவனது வெறுப்பு பற்றி எண்ணியபோது தனிமையை சற்று உணர்ந்தேன், ஆனால் அது பற்றி கவலைப்படவில்லை.

பாராட்டத்தக்க உடற்கட்டுடன் எங்கள் பள்ளியே பெருமிதப்படும் அளவுக்கு, ஆண்மை மிக்கவனாக ஹிராடா இருக்க, நானோ எலும்பும் தோலுமாய் வெளிறிப் போயிருந்தேன். எங்களிடையே அடிப்படையில் பொருந்திப் போகாத ஒன்று நிலவியது. ஏனெனில் நாங்கள் வசித்தவை வேறுவேறான உலகங்கள். மேலும் ஹிராடா, ஜூடோவில் கைதேர்ந்தவன், ‘கவனமாயிரு, இல்லையெனில் உதை விழும்!’ என்பது போலிருக்கும் அவன் தன்மை. அவன் வலிமை கண்டு அஞ்சியதால், அவனிடம் அவ்வளவு பணிவு காட்டினேன். ஆனால் அற்பப் பெருமிதங்களைப் பொருட்படுத்த மாட்டேன். ஹிராடாவின் அகந்தைக்கு இணையாக எனது நிலைகுலையாத இயல்பு விளங்கியது. ‘ஹிராடா என்னைப் புரிந்துகொள்ளாவிட்டால் எனக்கு ஒன்றுமில்லை, ஆனால் அவனது நல்லியல்புகள் எனக்குப் பிடித்தவை.’ என்றேன் ஒரு நண்பனிடம். உண்மையில் அதனை நம்பினேன். என்னைக் கோழையாக எண்ணியதில்லை. என் நெஞ்சில் அடியாழத்திலிருந்து ஹிராடாவைப் பாராட்ட முடிகிறதென்றால், உன்னதப் பண்பு மிக்கவன் தான் நான் என்னும் முனைப்பு இருந்தது எனக்கு.

அன்றிரவு ஹிராடா என்னைத் திடீரென்று பார்த்ததும், அவ்விஷமத்தன்மை என்னைப் பதற வைத்தது. அப்பார்வைக்கு என்ன அர்த்தம்? எனது குடும்பச் சின்னம் விஸ்டெரியா என்பது அவனுக்குத் தெரியுமா? அல்லது தனிப்பட்ட என் உணர்வுகளை வைத்து, அப்படி எடுத்துக் கொள்கிறானா? ஹிராடா என்னைச் சந்தேகித்தால், எப்படிச் சமாளிப்பது? நல்லபடியாக சிரித்துக்கொண்டே ‘அப்படியானால் நானும் சந்தேகத்திற்குள்ளாகி இருக்கிறேன், ஏனெனில் அதே சின்னம் என்னிடம் உள்ளது’ என்று கூறிவிடலாம். என்னுடன் சேர்ந்து மற்றவர்கள் சிரித்துவிட்டால், சரியாகிவிடும். ஆனால் அவர்களில் ஒருவன், குறிப்பாக ஹிராடா முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டால் என்னாகும்? அக்காட்சியை மனதில் நிறுத்திக் கொண்டால், என்னால் இயல்பாகப் பேச முடியாது போகும்.

இத்தகைய விஷயத்திற்கு கவலைப்படுவது முட்டாள்தனமாயிருக்கும், ஆனால் அச்சிறு நிசப்தத்தில் எல்லாவித எண்ணங்களும் மனதில் ஓடின. இத்தகு நிலவரத்தில் கள்ளங்கபடமற்றவனுக்கும் நிஜமான குற்றவாளிக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது?”

ஒரு குற்றவாளியின் பதற்றத்தையும் தனிமையினையும் உணர்ந்துகொண்டிருந்தேன். ஒரு கணத்திற்கு முன்னர், அவர்களின் நண்பர்களுள் ஒருவனாக புகழ்வாய்ந்த எங்கள் பள்ளியின் மேட்டுக்குடியினரில் ஒருவனாக இருந்தேன். இப்போதோ, கயவனாக இருக்கிறேன் – குறைந்த பட்சம் என் மனத்தளவில். அது அபத்தமானது, ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாத, என் சாமர்த்தியமின்மை காரணமாக வேதனைப்பட்டேன். எனக்குச் சமமாகக் கருதப்பட வேண்டிய ஹிராடா மனநிலை கண்டு சஞ்சலப்பட்டேன்.

ஹிகுச்சி இயல்பாகச் சொல்லிய ‘திருடன் இன்னொரு ரகத்தைச் சேர்ந்தவன்’ என்ற வார்த்தைகள் என் மனதில் கேடாக எதிரொலித்தன.

“திருடன் இன்னொரு ரகத்தைச் சேர்ந்தவன்…” திருடன்! திருடன்! என அழைப்பது எத்தகைய வெறுக்கத்தக்கப் பெயர்! மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவனாக ஒரு திருடனை ஆக்குவது, அவனது குற்றவியல் நடவடிக்கையில்லை. மாறாக, எது வந்தாலும் அதனை மறைக்கும் முயற்சி, மனதிலிருந்து அதனை அகற்றிடும் சிரமம், தன்னால் ஒப்புக்கொள்ள இயலாததின் இருண்ட அச்சமே. இப்போது அவ்விருளால் சூழப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் சந்தேகத்திற்கு உள்ளாகியிருந்தேன் என நம்பாதிருக்க முயன்றேன்; என் நெருங்கிய சினேகிதனிடம் இதனை ஒத்துக்கொள்ள முடியாத பயங்களால் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். பொறுப்பாளரிடமிருந்து தான் கேள்விப்பட்டிருந்ததை எங்களிடம் கூறியதால், என்னை ஹிகுச்சி நம்பியிருந்தமையால் அது இருக்கக் கூடும். ‘அது பற்றிப் பேசிக்கொண்டு திரிய வேண்டாம்’ என்றான், நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும்? ஹிகுச்சி என்னை சந்தேகித்ததே இல்லை. எப்படியோ, எங்களிடம் தெரிவித்ததிலான அவன் நோக்கத்தைக் கண்டு வியக்கத் தொடங்கினேன்.

மிகவும் ஒழுக்கசீலமிக்கவன் கூட குற்றவியல் பண்பு பெற்றிருந்தால், திருடனாகும் சாத்தியப்பாடு பற்றி கற்பிதம் செய்வது நான் ஒருவனாக மட்டும் இருக்க மாட்டேன். மற்றவர்கள் அதே தர்மசங்கடத்தில் சிறிதை, அதே உற்சாகத்தை அடையக்கூடும். அப்படியானால், தன் ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ள பொறுப்பாளரால் தெரிவு செய்யப்படிருந்த ஹிகுச்சி, பெருமிதம் அடைந்திருக்கவேண்டும். எங்கள் நால்வரில் மிகவும் நம்பப்பட்டவன், “இன்னொரு ரகத்தினனாக இருக்க முடியாதவன் எனக் கருதப்பட்டவன் அவனே. செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக, புகழ்வாய்ந்த பேராசிரியரின் மகனாக இருந்ததால், அந்நம்பிக்கையை அவன் பெற்றிருந்தால், அவன் மீது பொறாமைப்படுவதை என்னால் தவிர்க்க இயலாது. அவனது சமூகத் தகுதிநிலை அவனது ஒழுக்கப் பண்பை மேம்படுத்தியது போல, எனது பின்புலம் – உதவித்தொகை பெறும் மாணவன், ஏழை விவசாயியின் மகன் என்ற உணர்வு என்னிடத்தே கூர்மை கொண்டிருந்தது – என்னை அவமதித்தது. அவனது இருப்பின் முன்னே ஒருவித பிரமிப்பை நான் உணர்வது, நான் திருடனா இல்லையா என்பதுடன் தொடர்பற்றது. நாங்கள் வெவ்வேறு ரகத்தினரே; தனது வெளிப்படையான, திறந்த மனதால் அவன் என்னை நம்பிய அளவுக்கு, எங்களுக்கிடையிலான பிளவு ஆழமாகியது. ஒருவருடன் ஒருவர் தமாஷ் செய்துகொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் சேர்ந்து சிரித்துக்கொண்டும் நட்பாக இருந்திட எவ்வளவு முயன்றோமோ, எங்களுக்கிடையிலான தூரம் அவ்வளவு அதிகரித்தது. இதுபற்றி நான் செய்யக் கூடியதாக ஏதுமில்லை.

அதன் பிறகு நீண்ட நாள் விஸ்டெரியா சின்னமுள்ள அம்மேல்கோட்டை அணிவதா வேண்டாமா எனக் கவலைப்பட்டேன். இயல்பாக அதனை நான் அணிந்திருந்தால், யாரும் கவனிக்காமல் இருந்திருக்கலாம். ‘அதனை அணிந்திருக்கிறான்!” என்று கூறுமளவுக்கு என்னை அவர்கள் பார்த்தார்கள் என்றால், சிலர் சந்தேகப்படலாம் (அ) என்னைக் குறித்த சந்தேகங்களை அடக்கி வைக்கலாம் (அ) நான் சந்தேகத்திற்கு உள்ளாகியதால் எனக்காக வருத்தப்படலாம். ஒரு வேளை, ஹிராடா, ஹிகுச்சியிடம் மட்டுமின்றி எல்லா மாணவர்களிடமும் தருமசங்கடமடைந்து சஞ்சலப்பட்டால், என் மேல்கோட்டை அணியாது ஒதுக்கிவைத்துவிட்டால், அது இன்னும் மோசமானதாயிருக்கும். சந்தேகம் என்னும் அப்பட்ட விபரத்திற்காக நான் அச்சப்படவில்லை, மாறாக, மற்றவர்களிடத்தே கிளறிவிடப்படும் வேதனையான உணர்வுகளுக்காகவே. மற்றவர் மனங்களில் சந்தேகம் எழ நான் காரணமாய் இருந்தால், எனக்கும் எப்போதும் என் நண்பர்களாய் இருந்துவந்திருந்தவர்களுக்கும் இடையே தடுப்பினை உருவாக்கிவிடுவேன். திருட்டினால் எழுப்பப்படும் சந்தேகங்களை விடவும், திருட்டு அவ்வளவு அருவருப்பானதில்லை. நிரூபணமாகாதவரை என்னை ஒரு திருடனாக எண்ணிட யாரும் விரும்பவில்லை. எப்போதும் போல, என்னுடன் சுதந்திரமாக இருந்திட என்னை நம்புமாறு தம்மைக் கட்டாயப்படுத்திக் கொள்ளவே விரும்பினர். இல்லாதுபோனால், நட்புக்கு என்ன பொருள்? திருடனோ, இல்லையோ, நண்பனிடமிருந்து திருடுவதை விடவும் மோசமான பாவம் செய்த குற்றவுணர்வு கொண்டிருப்பேன் – நட்பினை பாழ்படுத்திய பாவம். என்னைக் குறித்த சந்தேக விதைகளை ஊன்றுவது குற்றவியல்தன்மையிலானது. அது திருடுவதை விடவும் மோசமானது. நானொரு புத்திசாலியான, சாமர்த்தியமிக்க திருடனாயிருந்தால் – அப்படி நான் குறிப்பிடக்கூடாது – மற்றவர்களைப் பற்றிய அக்கறை இல்லாது, சிறிதும் மனசாட்சியற்ற திருடனாக நான் இருந்தால், என் நட்பினை மாசுபடுத்தாமல் பராமரித்திட, என் நண்பர்களிடம் திறந்த மனத்துடன் இருந்திட, நான் அவமானம் அடையாத வகையில், விசுவாசத்துடனும் நேசத்துடனும் என் நண்பர்களை நடத்திட முற்படுவேன் – என் திருட்டுகளை ரகசியமாய் செய்தபடியே. ஒருவேளை, “அப்பட்டமான திருடன்” என்று மக்களால் அழைக்கப்படுபவனாயிருப்பேன்; ஆனால் திருடனின் நோக்கில் இதனைப் பார்த்தால், அது நேரிய அணுகுமுறையாய் இருக்கும். ‘நான் திருடியது உண்மை, ஆனால் என் நண்பர்களை மதிக்கின்றேன் என்பதும் சம அளவில் உண்மையே’ என்று அவன் கூறக்கூடும். ‘அது திருடனுக்குரிய வகை மாதிரித்தன்மை, எனவே தான் அவன் இன்னொரு ரகத்தினனாயிருக்கிறான்’. எப்படியோ, அப்படி நான் சிந்திக்கத் தொடங்கியதும், எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையிலான தூரத்தைப் பற்றி மிக மிக உணரத் தலைப்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. அதனை நான் அறிவதற்கு முன் முழுத்திருடனைப் போலுணர்ந்தேன்.

ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, குடும்பச் சின்னத்தை மேல்கோட்டில் பொருத்தியதும் பள்ளி மைதானத்தில் நகமூராவுடன் நடந்தபடி பேசிக்கொண்டிருந்தேன்.

“திருடனை இன்னும் பிடிக்கவில்லை என்று கேள்விப்படுகிறேன்” என்றேன்.

“சரிதான்” எங்கோ பார்த்தபடி நகமூரா குறிப்பிட்டான். “ஏன் பிடிக்கவில்லை? குளியல் கூடத்தில் அவனை சிக்கவைக்கவில்லையா?”

“மீண்டும் இந்தப் பக்கம் அவன் தலைகாட்டவில்லை. ஆனால் மற்ற இடங்களில் நிறையத் திருடுபோவது பற்றி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அன்று பொறுப்பாளர் ஹிகுச்சியைச் சந்தித்து, ரகசியத்தைக் கசியவிட்டதற்காக நிந்தித்துள்ளார்.

“ஹிகுச்சியையா?” என் முகம் நிறம் மாறியதை உணர்ந்தேன்.

பெருமூச்செறிந்த அவன் கன்னத்திலிருந்து கண்ணீர்த் துளி வழிந்தது: “ஆமாம்… நீ என்னை மன்னிக்க வேண்டும்! இப்போதுவரை உன்னிடமிருந்து மறைத்து வைத்திருந்தேன். ஆனால் நீ உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். இதனை நீ விரும்ப மாட்டாய், ஆனால் பொறுப்பாளர் சந்தேகித்தது உன்னையே. இது பற்றிப் பேசுவதை வெறுக்கிறேன் – ஒரு நிமிடமேனும் உன்னை நான் சந்தேகித்திருக்கவில்லை. உன்னை நம்புகிறேன். உன்னை நான் நம்புவதால், உன்னிடம் இதனை நான் சொல்லியாக வேண்டும். என்னை வெறுக்கமாட்டாய் என நம்புகிறேன்.”

“சொன்னதற்கு நன்றி. உனக்கு நன்றியுடையவனாக இருப்பேன்” என்றதும் கண்ணீர் உகுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன், அதே நேரத்தில் ‘கடைசியில் விஷயம் வெளிப்பட்டிருக்கிறது!’ என்றெண்ணினேன். அது குறித்து பயந்தது போலவே, இத்தகைய நாள் வந்துசேரும் என எதிர்பார்த்தேன்.

நகமூரா எனக்கு ஆறுதலளிக்கும்பொருட்டு ‘இதை விட்டுவிடுவோம், உன்னிடம் சொல்லிவிட்டதால் இப்போது நன்றாக உணர்கிறேன்’ என்றான்.

“இது பற்றிப் பேசுவதை வெறுப்பதாலேயே நம் மனங்களிலிருந்து இதனை அப்புறப்படுத்திவிட முடியாது. உனதன்பைப் போற்றுகிறேன், ஆனால் அவமானப்படுத்தப்பட்டிருப்பது நான் மட்டுமில்லை – எனது சிநேகிதனான உனக்கும் அவமானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். நான் சந்தேகத்திற்குள்ளாயிருக்கும் எண்ணமே, என்னை நட்புக்கு அருகதையற்றவனாக்கியுள்ளது. எதுவாயினும் என் பெயர் கெட்டுவிட்டது, இல்லையா? நீயும் என் பக்கம் திரும்ப மாட்டாய் என்று கற்பிதம் செய்கிறேன்”

“ஒரு போதும் அப்படிச் செய்ய மாட்டேன் என வாக்குறுதி தருகிறேன் – எனக்கு எந்த அவமானத்தையும் நீ சேர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். ஹிகுச்சியும்தான். பொறுப்பாளர் முன்னே உன்னைப் பாதுகாத்திட தன்னால் முடிந்தவரை அவன் முயன்றதாகக் கூறுகின்றனர். உன்னைச் சந்தேகிக்குமுன் தன்னைச் சந்தேகித்துக் கொள்வேன் என அவர்களிடம் குறிப்பிட்டுள்ளான்” என் வெறுப்பு மிக்க தொனியால் நகமூரா எச்சரிக்கை கொண்டுவிட்டதாகத் தோன்றியது.

“அவர்கள் இன்னும் என்னை சந்தேகிக்கின்றனர், இல்லையா? என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திட வேறு வழியில்லை. உனக்குத் தெரிந்ததையெல்லாம் கூறு…”

அப்போது தயக்கத்துடன் நகமூரா விளக்கினான்: “பொறுப்பாளருக்கு எல்லா விபரங்களும் வந்து சேர்ந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது. அன்றிரவு ஹிகுச்சி பேசித் தீர்த்ததிலிருந்து, குளியல் கூடத்தில் திருட்டு நடக்கவில்லை, எனவேதான் உன்னைச் சந்தேகிக்கின்றனர்.”

‘ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்தது நான் மட்டும் இல்லையே?’ – இதனை நான் சொல்லாவிட்டாலும் என் மனத்தில் இவ்வெண்ணம் சட்டென்று தோன்றிற்று. அது இன்னும் மோசமானவனாக என்னை உணரச் செய்தது.

“ஹிகுச்சி நம்மிடம் சொல்லியிருந்தது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அன்றிரவு நாம் நால்வரே இருந்தோம், வேறு யாருக்கும் தெரியாத பட்சத்தில்…”

மன்றாடும் தோரணையில் நகமூரா கூறினான்: “நீயே முடிவு செய்து கொள், யாரென்று உனக்கே தெரியும். உன்னைத் தவறாக முடிவு கட்டிவிட்டான், ஆனால் அவனை நான் விமர்சிக்க விரும்பவில்லை.”

திடீர் திகில் என்னைப் பற்றியது. ஹிராடாவின் கண்கள் எனக்குள் பளிச்சிட்டன.

“என்னைப் பற்றி அவனிடம் பேசினாயா?”

“ஆம்… நான் உனக்கு நண்பனாயிருப்பது போன்றே அவனுக்கும் நண்பனாயிருப்பதால், அது எளிதானதில்லை என்பதை உணர்ந்துகொள்வாய் என நம்புகிறேன். உண்மையில் நேற்று இரவில் ஹிகுச்சியுடன் நீண்ட நேரம் விவாதித்தேன், தங்குமில்லத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறுகிறான். ஆக இன்னொருவனுக்காக நான் ஒரு நண்பனை இழக்கவேண்டியுள்ளது.”

நான் நகமூராவின் கையைப் பிடித்து இறுக்கினேன். “உன்னையும் ஹிகுச்சியையும் போன்ற நண்பர்களுக்கு நன்றி பாராட்டுகிறேன்.” என்ற என் கண்களில் கண்ணீர் நிரம்பிற்று. நகமூராவும் அழுதுவிட்டான். மானுடக் கருணையின் கதகதப்பை முதல்முறையாக நான் உணரும் அனுபவமாயிருந்தது. நிராதரவான தனிமையில் வதைபட்டுக் கொண்டிருந்த வேளையில், இதனையே தேடிக் கொண்டிருந்தேன். நான் எவ்வளவு மோசமான திருடனாயினும் நகமூராவிடமிருந்து என்னால் எதனையும் திருட இயலாது.

சிறிதுநேரம் கழித்துக் கூறினேன்: “உண்மையைச் சொல்வதென்றால், உங்களுக்கு நான் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. நீங்களிருவரும் இத்தகைய நண்பனை இழந்து கொண்டிருப்பதைக் கண்டு நான் மௌனமாக இருக்க முடியாது – இன்னும் அவனை மதிக்கிறேன். என்னை விடவும் எவ்வளவோ மேலானவன். எந்த ஒருவரது மதிப்பினையும் போலவே அவனுடைய மதிப்பை அடையாளம் காண்கிறேன். அப்படியானால், நான் ஏன் வெளியேறவில்லை – தயவு செய்து என்னை வெளியேற விடுங்கள், நீங்கள் மூவரும் சேர்ந்து இருங்கள். நான் தனித்து இருப்பினும் அது நன்றாகவே அமையும்.”

நகமூரா உணர்ச்சிததும்பக் கூறினான்: “நீ வெளியேறக் காரணமில்லை. அவனது நல்ல அம்சங்களையும் அடையாளம் காண்கிறேன், ஆனால் இம்சிக்கப்படுவது நீ தான். சரியில்லாதபோது அவன் பக்கம் சேரப்போவதில்லை. நீ வெளியேறினால் நாங்களும் கிளம்ப வேண்டியதுதான். அவன் எவ்வளவு பிடிவாதமானவன் என்பது உனக்குத் தெரியும் – வெளியேறுவது என முடிவெடுத்துவிட்டான் என்றால் மாற்றிக் கொள்ள மாட்டான். அவன் விரும்பியபடியே செய்யட்டும். நிலவரத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வரும்வரை, அவனுக்காகக் காத்திருப்போம். அதற்கு நீண்ட காலமாகாது.”

“ஆனால் அவன் மன்னிப்பு கேட்க ஒருபோதும் வரமாட்டான். எப்போதும் என்னை வெறுத்துக் கொண்டிருப்பான்.”

ஹிராடா மீது ஆத்திரங் கொண்டுள்ளேன் என்று யூகித்துக் கொண்டதாகத் தோன்றிய நகமூரா, சட்டென்று குறிப்பிட்டான்: “அப்படி நான் கருதவில்லை. அவன் சொன்னபடி செய்வான் – அதுவே அவனின் பலமும் பலவீனமும். ஆனால் தனது நிலை தவறென்று உணர்ந்துவிட்டதும், மன்னிப்பு கேட்க வருவான் – மனந் திறந்து பேசுவான். அதுதான் அவனிடமுள்ள நல்ல தன்மைகளுள் ஒன்று.”

“அப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்… உன்னிடம் திரும்பி வரலாம், மீண்டும் என்னுடன் நட்பாய் இருப்பான் என நான் நம்பவில்லை… அவன் விரும்பத்தக்கவன் என்றது சரியே. என்னையும் அவன் விரும்பவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.”

நாங்கள் புல்தரையில் முடிவின்றி நடந்துகொண்டிருந்தபோது, தனது ஏழை நண்பனைக் காப்பாற்றுவது போல, நகமூரா தன் கையை என் தோளில் பதித்தான். அம்மாலைப் பொழுதில் லேசான மூடுபனி மைதானத்தில் கவிந்தது. எல்லையில்லாத புல்வெளி கடலால் சூழப்பட்ட தீவில் நாங்கள் இருந்ததாகத் தோன்றியது.

எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மாணவர்கள் அவ்வப்போது என்னைக் கண்டு, நடந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று கருதினேன்; என்னை ஒதுக்கித் தள்ளுகின்றனர்; தனிமையுணர்வு மீதூர்ந்தது.

அன்றிரவு ஹிராடா தன் மனதை மாற்றிக் கொண்டதாகத் தோன்றியது; வெளியேறும் சமிக்ஞைகளை அவன் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் எங்களிடம், ஹிகுச்சி, நகமூராவிடமும், பேச மறுத்தான். என்னைப் பொறுத்தவரை இக்கட்டத்தில் நான் வெளியேறுவது சாத்தியமில்லை எனத் தீர்மானித்தேன். என் நண்பர்களின் அன்பை ஒதுக்கித் தள்ளுவதுடன், இன்னும் குற்றவுணர்வு மிக்கவனாகவும் என்னை ஆக்கிக் கொள்வதாகிவிடும். சிறிது காத்திருக்க வேண்டும் நான்.

‘கவலைப்படாதே’ என இரு நண்பர்களும் எப்போதும் என்னிடம் கூறிக் கொண்டிருந்தனர். “அவன் பிடிபட்டதும் ஒட்டுமொத்தப் பிரச்சனையும் முடிந்துவிடும்.” இன்னொரு வாரம் கழிந்தும் கூட குற்றவாளி பிடிபடவில்லை. எப்போதும் போல திருட்டுகள் நடந்துகொண்டிருந்தன. கடைசியில் நகமூராவும் ஹிகுச்சியும் கூட கொஞ்சம் பணத்தையும் சில புத்தகங்களையும் இழந்தனர்.

“கடைசியில் நீங்கள் இருவரும் இழந்தீர்கள். எஞ்சிய நாங்கள் இழக்கப் போவதில்லை என்ற உணர்வுள்ளது.” பரிகாசத்துடன் குறிப்பிட்ட ஹிராடாவின் பார்வையில் இம்சைப்படுத்தும் தன்மை இருந்தது.

இரவு உணவு முடிந்ததும், நகமூராவும் ஹிகுச்சியும் நூலகம் செல்ல, ஹிராடாவும் நானும் நேர் எதிராக நின்றோம். வழக்கமாக மாலை வேளைகளில் நூலகத்தில் இருந்தோ நடந்துகொண்டோ இருக்கும் எனக்கு இது தருமசங்கடமாயிருந்தது.

ஓர் இரவில் ஒன்பதரை மணிக்கு நடந்துசென்று திரும்பியபோது, எங்கள் படிப்பறையை நோக்கினேன். ஹிராடா அங்கில்லை, மற்றவர்களும் திரும்பியிருக்கவில்லை. எங்கள் படுக்கை அறைக்குச் சென்றபோது அதுவும் வெறுமையாயிருந்தது. அப்புறம் படிப்பறை போய், ஹிராடாவின் டெஸ்கை அடைந்தேன். அதன் இழுப்பறையைத் திறக்க, அவன் வீட்டிலிருந்து வந்திருந்த உறையில், பத்து யென் பணவிடைகள் மூன்று காணப்பட்டன. அவற்றில் ஒன்றினை என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். இழுப்பறையை மூடியதும் கூடத்திற்கு வந்தேன். டென்னிஸ் மைதானத்தைத் தாண்டி, எப்போதும் நான் பதுக்கி வைத்திடும் புதரை நெருங்கினேன். அப்போது யாரோ ஒருவன் “திருடன்!” எனக் கூச்சலிட்டு, என் மீது பாய்ந்து என் தலையில் தாக்கினான். அது ஹிராடா.

“உன் பையில் நீ திணித்து வைத்திருப்பதைப் பார்ப்போம்!”

“சரி, சரி, அதற்காக நீ கூச்சலிட வேண்டாம். உனது பணவிடையைத் திருடிவிட்டேன், ஒத்துக் கொள்கிறேன். நீ கேட்டால் தந்துவிடப் போகிறேன்; உன்னுடன் வரச் சொன்னால் எங்கும் வரப் போகிறேன். ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறோம், இல்லையா? வேறென்ன வேண்டும்?”

சற்றுத் தயங்கிய ஹிராடா, சீக்கிரமே என் முகத்தில் தாக்க ஆரம்பித்துவிட்டான். நான் சுமந்திருந்த பளு சட்டென இறங்கிவிட்டதான உணர்வு எனக்கு.

“இப்படி அடிப்பதால் பயன் ஒன்றும் இல்லை – நான் சிக்கிவிட்ட பிறகு. உனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்திக் கொண்டிருந்ததால், இவனிடமிருந்து ஏன் திருடக் கூடாது?” என்றெண்ணினேன். இப்போது நீ கண்டுபிடித்துவிட்டாய், அவ்வளவுதான். பிற்பாடு நாமெல்லாம் இது பற்றிப் பேசிச் சிரித்துவிடுவோம்”

நல்ல தன்மையுடன் ஹிராடாவின் கையைக் குலுக்கிட முயன்றேன், ஆனால் அவனோ என் சட்டையின் கழுத்துப் பட்டியைப் பிடித்து எங்கள் அறையை நோக்கி இழுத்துச் சென்றான். அப்போது மட்டுமே ஹிராடா என் பார்வையில் அருவருக்கத் தக்கவனாயிருந்தேன்.

“திருடனைப் பிடித்திருக்கிறேன்! அவனால் பிடிபட்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல முடியாது நண்பர்களே!” என்றான் ஹிராடா. நூலகத்திலிருந்து திரும்பியிருந்த நகமூரா, ஹிகுச்சி முன் கிடந்தேன். இக்கூச்சலைக் கேட்ட மற்ற மாணவர்களும் எங்கள் அறையைச் சூழ்ந்துவிட்டனர்.

தரையிலிருந்து எழுந்தபடி, ஹிராடா சொல்வது சரியே என்றேன் – “நான்தான் திருடன்!” எப்போதும் இயல்பாகக் கூறுவது போல பேச முற்பட்டேன், என் முகம் வெளிறிப் போயிருந்ததை உணர்ந்தேன்.

அவர்களிடம் சொன்னேன்: “என்னை வெறுக்கின்றீர்கள் எனக் கருதுகிறேன் அல்லது என்னைக் குறித்து நீங்கள் வெட்கப்பட வேண்டும்… நீங்கள் இருவரும் நேர்மையானவர்கள், ஆனால் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். மீண்டும் மீண்டும் நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? நான் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவனில்லை நான். ஹிராடாவுடன் நட்பு கொண்டாலும், அவன் என்னுடன் நட்பு பாராட்டப் போவதில்லை!” ஹிராடா எவ்வளவு நேர்த்தியானவன் என்பதை வேறு யாரையும் விட நன்கறிந்தவன் நான். இல்லையா? நான் உங்களிடம் பொய்யுரைத்ததே இல்லை; ஏன் எங்களிடம் வந்து உண்மையை முழுதாகச் சொல்லவில்லை என நீங்கள் கேட்கலாம். உங்களை நான் ஏமாற்றிக் கொண்டிருந்ததாக நினைக்கலாம். ஆனால் எனது நிலையிலிருந்து இதனை நோக்கிட முற்படுங்கள். நான் வருந்துகிறேன், என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயம் திருட்டு. இருந்தும் உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை, எனவே சுற்றி வளைத்து விஷயத்தைக் கூறினேன். அதை விடவும் நேர்மையானவனாக இருந்திட என்னால் இயலாது. என் குறிப்புகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதது உங்கள் தவறு. நான் பிறழ்ச்சி மிக்கவன் என நீங்கள் கருதலாம், ஆனால் ஒருபோதும் நான் தீவிரம் மிகுந்திருந்ததில்லை. என்னால் ஏன் திருட்டை நிறுத்த முடியவில்லை என்று நீங்கள் கேட்கக் கூடும் – நேர்மையாயிருப்பதில் அவ்வளவு அக்கறை கொண்டிருந்தால். ஆனால் அது நல்ல கேள்வியில்லை. நான் திருடனாகப் பிறந்தவன். என்னால் முடிந்த மட்டும் நேர்மையாக இருந்திட முயன்றேன். என்னால் செய்யக்கூடிய வேறெதுவும் இல்லை. அப்போதும் என் மனசாட்சி உறுத்திற்று – ஹிராடாவுக்குப் பதில் நான் வெளியேறுகிறேன் என உங்களிடம் கூறவில்லை? நான் உங்களை முட்டாளாக்க முற்படவில்லை. உங்களுக்காகச் செய்ய விரும்பினேன். உங்களிடமிருந்து நான் திருடியது உண்மையே, ஆனால் நான் உங்கள் நண்பன் என்பதும் உண்மையே. திருடனுக்கு உணர்வோட்டங்கள் உண்டு என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.”

ஆச்சரியத்தில் இமைத்தபடி நகமூராவும் ஹிகுச்சியும் மௌனமாக நின்றனர்.

“நான் மிக தைரியசாலி என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் வேறு ரகத்தினராதலால் இதைத் தவிர்க்க இயலாது என்று கருதுகிறேன்.”

என் கசப்புணர்வை மறைத்திட புன்னகைத்தேன். “நான் உங்கள் நண்பனாயிருப்பதால், இது போன்றது நிகழாதிருப்பது கடைசி முறையில்லை என உங்களுக்கு எச்சரிக்கிறேன். எனவே கவனமாயிருங்கள்! உலகிற்குள் சென்றால் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் பள்ளியில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம், ஆனால் ஹிராடா சிறந்த மனிதன். அவனை முட்டாளாக்க முடியாது!”

நான் அவனை மட்டும் புகழ்ந்தபோது, ஹிராடா முகத்தை சுழித்து வேறு பக்கம் திரும்பினான். அத்தருணத்தில் அவன் புதிரான விதத்தில் தருமசங்கடத்தை உணர்ந்தான்.

—-

அதிலிருந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. நான் தொழில்முறை திருடன் ஆனேன், அடிக்கடி சிறை சென்றேன்; இருந்தும் அந்நினைவுகளை, குறிப்பாக ஹிராடா சார்ந்த நினைவுகளை என்னால் மறக்க முடியாதிருந்தது. ஒரு குற்றத்தை நான் இழைக்கும்போதெல்லாம் எனக்கு முன்னே அவன் முகத்தைப் பார்க்கிறேன். “நான் சந்தேகித்தது போலாயிற்று!” என்று பரிகசித்தபடி, வீறாப்புடன் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் பெரிய உறுதிப்பாடுமிக்க, பண்புநலன் நிறைந்தவன். ஆனால் உலகம் மர்மமானது. வெகுளியான ஹிகுச்சி “பிரச்சனையில் மாட்டிக் கொள்வான்” என்னும் எனது கணிப்பு தவறானது – அதற்கு ஒரு பாதி காரணம், அவனது தந்தையின் செல்வாக்கு – வெளிநாடுகளில் சுற்றி, முனைவர் பட்டம் பெற்று, ரயில்வேயில் நல்ல பணியிலிருப்பவர். இதற்கிடையே ஹிராடா என ஆனான் என யாருக்கும் தெரியவில்லை. வாழ்க்கை கணிக்க முடியாதது என நாங்கள் நினைப்பதில் வியப்பேதும் இல்லை.

இது உண்மையானது என என் வாசகருக்கு உறுதிப்படுத்துகிறேன். நேர்மையின்றி ஒரு வார்த்தையைக் கூட நான் எழுதியிருக்கவில்லை. என்னைப் போன்ற திருடனின் இருதயத்தில் நாசூக்கான தார்மிக நுட்பங்கள் இருக்க முடியும் என நகமூராவும் ஹிகுச்சியும் நம்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஒருவேளை அவர்கள் நம்பாது இருக்கலாம் – எனது ரகத்தினராக அவர்கள் இல்லாதவரை (இதனைக் குறிப்பிடுவதற்கு மன்னிக்கப்படுவதானால்).

—-

ஆதாரம்: Seven Japanese Tales / Junichiro Tanizaki / Tr from the Japanese by Howard Hibbett / Berkley pub. Corporation, 1963.

குறிப்பு: Wisteria crest: 13-ஆம் நூற்றாண்டு பௌத்தத்தில் நிலவிய ஓர் அடையாளம். பூக்கள் உருவம் தாங்கிய சின்னம். பிரகாசத்தையும் நிலையாமையையும் பூக்கள் குறிக்கும்; கவிழ்ந்திருக்கும் பூக்கள் பணிவின் அடையாளம்.

ஜூனிசிரோ தனிஸாகி (1886 – 1965)

புனைவு, நாடகம், மௌனப் படங்களின் திரைக்கதை, கட்டுரை வடிவங்களில் ஈடுபட்டவர். செல்வந்த வணிகக் குடும்பத்தினரான இவர், நாசகரமான பாலியல் பீடிப்புகளை மையப்படுத்தி, பண்பாட்டு அடையாளத் தேடலில் அக்கறை கொண்டவர். மூன்று மனைவியர் இருந்தபோதும், நாடோடி வாழ்வில் ஈர்ப்பு மிக்கவர். கவாபட்டா இவர் காலத்தவர். Naomi, Some prefer Nettles, The Makioka sisters என்பன இவரின் சிறந்த நாவல்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.