(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்)
பெரிய முருகன் தண்ணீர் மோட்டாரை அணைத்துவிட்டு புங்க மரத்தடியில் உட்கார்ந்தார். கிணறு வற்றி அடியில் கரும்பாறைகள் புலப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்தான் நீர் ஊறும். நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. முனியன் துணிகளுடன் ஓரமாக நடந்து வந்தார். கொல்லைக்குள் இறங்கினார். அவர் அரசாங்க தோல் தொழிற்சாலையில் நீண்ட கால வேலையாள். அங்கு எண்ணிக்கைக் கணக்கில் வேலை செய்தார்கள். இரண்டு, மூன்று மணி நேரத்தில் முடித்தால் வெளியேறிவிடலாம். எட்டு மணி நேர வேலையில்லை. அவருக்கு ஆற்றுப் புறம்போக்கில் சில வாய்க்கால் நிலமிருந்தது. ஆரம்பத்தில் ஊர் பஞ்சாயத்தில் மேல் கொல்லை ராமசாமி எதிர்த்தார். “அதெப்படி, ஊரு உலகுக்குப் பொதுவான ஆத்த சொந்தம் கொண்டாட முடியும்? உங்கப்பன் சம்பாதிச்சதா?” என்றார். “அது பாட்டன் காலத்துலயிருந்து வருது. பேசாம உடுண்ணா” என்றார் முனியனுக்கு ஆதரவாக நாட்டாமை கங்கன் பெரியப்பா.
முனியன் வேலை முடிந்து அப்படியே தன் கொல்லைக்கும் சென்று வந்திருந்தார். உடம்பில் தோல் வாடை ஒட்டியிருந்தது. “முருகா கொஞ்ச நேரம் கழிச்சி தண்ணி போடு” என்றார். சோப்புப் பெட்டியை தொட்டிச் சுவரிலும், துவாலை, துணிகளை பெரிய முருகன் பக்கத்தில் மரத்தடியிலும் வைத்தார். சலவை வேட்டிச் சட்டைகள் நீலமிட்டு வெண்மையாயிருந்தன. தொழிற்சாலையின் கணிச சம்பளத்தில் வாங்கியவை. கொல்லை வேலையில் அவற்றை அணிய முடியாது. முனியன் நீர் நிறைந்த தொட்டியில் இறங்கினார். மூழ்கி எழுந்து கைப்பிடிச்சுவரில் சொட்டச் சொட்ட உட்கார்ந்தார். உடல் சிலிர்த்தது. சோப்பை நன்றாக நுரை எழத் தேய்த்தார். “ராவும் பகலுமா இந்தக்கொல்லையில கெடக்கறியே. சொந்தமா பயிர் செய்யி. உழைக்கறதுக்கு ஏத்த பலன் கெடைக்கும். மக பெத்த புள்ளைங்களக் கரையேத்தலாம்.”
பெரிய முருகன் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். முனியன் கரு மேனியில் நுரை அப்பியிருந்தது. சுற்றி சந்தன வாசம் வீசியது. பெரிய முருகன் சோப்பு போட்டுக் குளிப்பதில்லை. கொல்லைத் தொட்டியில் இறங்க மாட்டார். அது முதலாளி சுந்தரத்துக்கு அவமரியாதை என்று நினைத்தார். கால்வாய் கணுக்கால் நீரில் உட்கார்ந்து குளிப்பார். இருகைகளாலும் அள்ளி ஊற்றிக்கொள்வார். தேங்காய் நாரால் அவசரமாக உடலைத் தேய்ப்பார். முனியன் தலைக்கும் முகத்துக்கும் சோப்பிட்டு கண்களை மூடியிருந்தார். பெரிய முருகன் எழுந்து மோட்டாரைப் போட்டார். தொட்டியில் தண்ணீர் குதித்தது. முனியன் குழாயில் தலையைக் காட்டினார். நீர் வெளியில் சிதறியது. சுந்தரம் பார்த்தால் கிணற்றில் விழுகிறதென ஆட்சேபிப்பார். முனியன் எழுந்து வண்ணத் தேங்காய்ப்பூ துவாலையால் துடைத்துக்கொண்டார். தலை மயிரை உதறினார். சில குளிர்ந்த துளிகள் பெரிய முருகன் மேல் பட்டன. முனியன் வேட்டியை எடுத்துக் கட்டினார். அங்கங்கே சிறிதாக ஈரம் படர்ந்து நீலம் பாரித்தது. பெரிய முருகனுக்கும் குளிக்கும் ஆசை எழுந்து அடங்கியது. “டே, பொண்ணு வீட்டோட வந்துட்டா. உனக்குதா வளத்து ஆளாக்கற கடம” என்றார் முனியன். அரசியல்வாதி போல் துவாலையை இரு தோள்களிலும் சேர்த்து காயப்போட்டுக்கொண்டார். “எந் சும்மா கெடக்கற கொல்லய வாரக் குத்தகையா வச்சுக்க, போ” என்று நடக்கத் தொடங்கினார். சாலை மேட்டிலேறி மறைந்தார். நெடுநேரம் சந்தன மணம் கமழ்ந்தது.
எல்லாவற்றையும் எண்ணியபடி பெரிய முருகன் கமலை ஓட்டிக்கொண்டிருந்தார். தனியாயிருந்தாலும் யாரோ உடனிருக்கும் உணர்வு. அது எப்போதும் தோன்றிக்கொண்டிருந்தது. செருமிக்கொண்டு எருதிடம் “வா, வா, போ” என்றார். நீண்ட நேரம் பேசாமல் உதடுகள் ஒட்டியிருந்தன. முனியனின் கொல்லை ஆற்றங் கரையில் ஒதுங்கியிருந்தது. சிமெண்டு உறை இறக்கிய மணற் கேணியில் நீர் வற்றுவதில்லை. ஆற்றில் நீரோடினால் குனிந்து மொள்ளலாம். வெள்ளம் கரை புரளுகையில் கிணறு பொங்கி வழியும். கொல்லை முழுவதும் ஓடி மீண்டும் ஆற்றில் கலக்கும். இந்த நிலத்தை உழத் தொடங்கி கொஞ்ச காலமாகிறது. சுந்தரத்தின் கொல்லையிலிருந்து விலகியதும் வந்தது. இங்கு மணல் கலந்த மண் வெண்மையாயிருந்தது. தாமாக கையிடுக்குகளில் உதிர்ந்தன. அவர் ஒரு கணமும் ஓயவில்லை. பயிரிட்டு சோளம், கேழ்வரகு அறுத்திருந்தார். விளைச்சல் குறைவாயிருந்தது. ஆனால், தாள்கள் நீண்டு, அகன்று, கரும் பச்சையாக அசாதாரணமாயிருந்தன.
பெரிய முருகன் புதிதாக நட்ட கத்தரி நாற்றுகளுக்கு மடை திருப்பியிருந்தார். இப்போதே இலைகள் நன்கு விரிந்திருந்தன. வெறுமனே கமலையில் நீரிறைத்துக்கொண்டிருந்தால் போதும். கால்வாயில் நீரோடும். ஒவ்வொரு பாத்தியாக பாயும். ஈரம் பட்டதும் நாற்றுகள் உயிர் பெற்றவை போல் சட்டெனத் தலை நிமிரும். சுந்தரம் கொல்லையில் போலில்லாமல், ஒரே நாளில் நீரில்லா விட்டால் காயும். அவர் கமலைக் கயிறில் உட்கார்ந்து வேகமாக சரிவில் இறங்கினார். மீண்டும் மெல்ல நடந்து திரும்பினார். வாய் வரை பாட்டுகள் வந்தன. தொண்டையிலிருந்து வெளியேறவில்லை. கரகரவென “சோ, சோ” என்றார். நீட்டி பாட்டாக்கினார். எங்கோ பட்டு அமானுஷ்யமாக எதிரொலித்தது. பசுந் தட்டுகள் சூழ்ந்திருந்தன. உட்கார்ந்தால் ஆள் மறையும் சோளக்கொல்லை. அவரும் மாடும் கிணறும் தெரியமாட்டார்கள். மாடு கண்களை மூடி அசையிட்டு நடந்துகொண்டிருந்தது.
பெரிய முருகன் குத்தகை உழவுக்கு புதிய மாடு வாங்கினார். அது ராஜியால்தான் நடந்தது. அவள் சிறுக பணம் சேர்த்திருந்தாள். அடிப் பானை, பழைய இரும்புப் பெட்டி, கடுகு டப்பா, தன் பெரியப்பா, இரண்டு மாதச் சீட்டுகள் என்று சேமித்திருந்தாள். உறவுப் பெண்ணிடம் திரும்பப் பெறுவது கடினமாயிருந்தது. கடைசியில் அவளும் உணர்ந்து தந்துவிட்டாள். பெரிய முருகன் பலரிடம் பணம் கேட்டு கெஞ்சுகையில்தான் அறிந்தார். தான் வைத்திருந்த பணத்தை மஞ்சள் பையில் சாதாரணமாகப் போட்டுத் தந்தாள் ராஜி. தொடர்ந்து தென்னை ஓலைகள் பின்னி விற்ற காசு. அப்போது அவள் முகத்தில் பெருமை வழிந்தது. தரகர் தனபாலுடன் பெரிய முருகன் சந்தையில் மாடு வாங்கி வந்தார். பல ஊர்களுக்கான சந்தை. தெற்கிலிருந்தும் மாட்டை ஓட்டி வந்திருந்தார்கள். மாடு முழு வெண்மையாக, கண்களில் மை தீட்டியது போலிருந்தது. கொம்புகள் கூராக வளைந்திருந்தன. முகத்தில் பசு மாட்டைப்போன்ற சாந்தம். கண்ணன் என்று மகள் பெயர் வைத்தாள். அவர் சில சமயங்களில் லட்சுமி என்பார்.
பெரிய முருகன் இரவில் கிணற்றுக்குப் பக்கத்து சிறிய குடிலில் படுப்பார். எண்ணெய் தீரும் வரை லாந்தர் எரியும். பிறகு நிலவு, நட்சத்திரங்கள் துணையிருந்தன. வானைப் பார்த்தபடி தனக்குக் கிடைத்த கொல்லையைப் பற்றி பெருமைப்படுவார். அடுத்து சோளம் அறுத்து தக்காளியும் வெண்டையும் போட நினைப்பார். அவை ஆற்றங்கரை மணலில் செழித்து வளரும். எண்ணிக்கைக் குறைந்தாலும், பூசணி, சுரைக் காய்களைப்போல் மிகப் பெரிதாயிருக்கும். நல்ல விலைக்கு விற்கும். கோடையிலும் கிணறு வற்றாது. ராட்சசத்தனமாக பயிர்கள் வளரும். அபரிமிதமாக தானியங்கள் கொட்டும். அவர் சிறுக சிறுக பணம் சேர்ப்பார். தான் இறந்த பின்னால் மகளும் பேரப் பிள்ளைகளும் நன்றாயிருப்பார்கள். பேரன் படித்து மருத்துவராக ஊருக்குத் தலை நிமிர்ந்து வருவான். அவர் விழித்தபடி கனவு கண்டார்.
அன்று மேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டிருந்தது. பெரிய முருகன் குடிலுக்குள் தலையிறங்கப் போர்த்திப் படுத்திருந்தார். திடீரென ஆழ் மனம் உறுத்த விழித்தார். சுற்றிலும் பார்த்தார். எதிரில் சோளப் பயிர் கரும்சுவர் போலிருந்தது. கிணறும் கம்பங்களும் மரமும் துலங்கின. அருகே சிறிய தொட்டியில் ஓர் உருவம் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. முதலில் கொல்லைச் சொந்தக்காரர் முனியன் போலிருந்தது. அவர் அகாலத்தில் வர மாட்டார். அதற்கு மிகவும் தாகம் போலும். அவருக்குள் பச்சாதாபம் எழுந்தது. பிறகு பயத்துடன் அனிச்சையாக குரலெழுப்பினார். தொண்டையில் சப்தம் சிக்கிக்கொண்டது. அது தலையைத் திருப்பிப் பார்த்தது. முகத்தில் எவ்வித உணர்ச்சிகளுமில்லை. கண்கள் இருண்டிருந்தன. நீரை அள்ளாமல் கைகள் நின்றன. வாயிலிருந்து நீர் ஒழுகியது. அது மெல்ல எழுந்து வந்தது. அவர் நகர முடியாமல் படுத்திருந்தார். அவரை முகர்ந்தது. மறுப்பதுபோல் தலையாட்டி நிராசையுடன் வாயைத் திறந்து கத்தியது. அதன் ஓசையும் கேட்கவில்லை. அவர் கண்களை இறுக மூடிக்கொண்டார். அரை மயக்கத்துடன் கிடந்தார். யாராவது பொறாமைப் பிடித்தவர்கள் நிலத்திலிருந்து பயமுறுத்தி விரட்ட முயற்சிக்கலாம். அல்லது வேடிக்கைக்காகவும் செய்யலாம் என்று எண்ணினார். அந்த உருவம் விலகிச் செல்வதுபோல் தோன்றியது. நீண்ட நேரம் கழித்து கண்களைத் திறந்தார். பொழுது நன்கு விடிந்திருந்தது. எழுந்து கொல்லையைச் சுற்றி வந்தார். சோளக் காட்டில் முளைத்திருந்த களைகள் வேரோடு பிடுங்கப்பட்டிருந்தன. அவை அங்கங்கே குப்பல்களாக மண் ஒட்டிக் கிடந்தன. அவர் நேற்றுதான் களையெடுக்க நினைத்தவை.
பெரிய முருகன் நடந்தவற்றை யாரிடமும் சொல்லவில்லை. யாரும் நம்ப மாட்டார்கள். தனியாயிருந்து பைத்தியம் பிடித்துவிட்டது என்பார்கள். நடுவில் வீட்டுக்குப் போகையில் ராஜியிடமும் தெரிவிக்கவில்லை. அவருக்கு சந்தேகமாயிருந்தது. தான் கண்டது கனவு என்று தோன்றியது. அவளைப் பயமுறுத்த விரும்பவில்லை. கொல்லைக்குப் போகக் கூடாதென அழுவாள். அவர் மீண்டும் புறப்படும் முன் பேரப்பிள்ளைகளுடன் ஒட்டிப் படுத்தார். சின்னவள் மேலே காலைத் தூக்கிப் போட்டாள். “புதுசா ஒரு கத சொல்லு” என்றாள். அவர் யோசித்தார். கதையை சொல்லத் தொடங்கினார். “ஒரு ஊர்ல ஒரு பேயிருந்துச்சு. அதுக்குப் பாவம் ரொம்பத் தாகம். எங்கியும் தண்ணி கெடைக்கல. தேடி அலைஞ்சுச்சு. ஒரு இடத்துல தண்ணியப் பாத்துச்சு. வாய வச்சு எடுக்காமக் குடிச்சுச்சு. தொட்டி தண்ணியும் காலியாச்சு. அப்ப கொல்லைக் காவல்காரன் வந்து தொரத்தினான். தெரிஞ்ச மந்திரங்கள சொன்னான். தயவுசெஞ்சு விட்டுப் போயிடுன்னு கெஞ்சனான். பேயும் பேசாம தன் வூட்டுக்குப் போயிடுச்சாம்…” பிள்ளைகள் திகைத்துப் போயிருந்தார்கள். அப்படியே தூங்கியும்விட்டார்கள். தூக்கத்தில் “உம்” கொட்டினாள் சின்னவள். அவளின் காலை பத்திரமாகத் தூக்கிவைத்துவிட்டு பெரிய முருகன் எழுந்தார். லாந்தரை எடுத்துக்கொண்டு கிளம்பினார். ராஜி பயந்திருந்தாள். அவளும் கதையைக் கேட்டிருந்தாள். மெதுவாக “இத வச்சிக்க, பாத்துப்போ” என்று துருப்பிடித்த ஆணியைத் தந்தாள். இரும்பிருந்தால் கண்டிப்பாகப் பேய் பிடிக்காதென்ற நம்பிக்கை. அவர் வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டார். பக்கத்தில் பேச்சி சிரித்தபடி கோலூன்றி நின்றிருந்தாள். அவள் கதையைக் கேட்டு ரசித்திருந்தாள்.
பெரிய முருகன் சோள அறுவடை முடிந்து படுத்திருந்தார். இரண்டு வாய்க்கால் பாடுபட்டு தனியே அறுத்திருந்தார். சிறிய களத்தில் கதிர்கள் மலையாகக் குவிந்திருந்தன. இன்னும் உதறத் தொடங்கவில்லை. பெரிய தாள்களை தூக்கி அடிப்பது மிக சிரமமான வேலையாயிருக்கும். தானியங்கள் குறைவாக விழும்போலிருந்தன. நிறையப் பதராயிருந்தன. மறுநாள் வீட்டுக்கு மூட்டையில் எடுத்துச் செல்ல வேண்டும். பின்னிரவில் தூரத்தில் காலடிச் சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில் கொல்லையருகில் வந்தது. அழுத்தமாக வரப்புகளில் நடந்தது. பிறகு களத்தில் உலவியது. கனத்த காலடியோசை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அவர் போர்த்திக்கொண்டு மூட்டைபோல் சுருண்டிருந்தார். எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று எண்ணினார். அழுத்தம் திருத்தமான விடாத ஓசைகள். அவர் மூச்சை அடக்கிப் படுத்திருந்தார். அப்படியே அரையுறக்கத்தில் அமிழ்ந்தார். எங்கோ சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு ஓய்ந்தது. அவரால் எழ முடியவில்லை. அது முன்பு போல் கொல்லையில் கடினமாக உழைத்திருக்கும் என நினைத்தார். உடனே எழுந்து பார்க்க விரும்பவில்லை. காலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் கண் விழித்தார். களத்தில் சோளக் கதிர்கள் முழுமையாக அடித்து முடிக்கப்பட்டிருந்தன. நீண்டு அகன்ற உதறிய தட்டைகள் ஓரமாக அடுக்கியிருந்தன. சோளம் மூட்டையில் கொட்டி நிரப்பப்பட்டிருந்தது. வெள்ளாமை குறைவுதானெனினும் அடுத்த போகத்தில் கூடுமென நம்பினார். அவருக்கு உடல் முழுவதும் வலித்தது. திருப்தியுடன் கை, கால்களை நீட்டி முறித்துக்கொண்டார்.
கொல்லை பக்கத்தில் நாலைந்து ஊர்களுக்கு சேர்த்து சுடுகாடிருந்தது. அவ்வப்போது பிணங்களை புதைப்பார்கள். சிலவற்றை ஆற்றில் எரிப்பார்கள். கொல்லை மேல் வெளிச்சம் விழுந்து பேய்போல் ஆடும். மயிர் கருகும் நாற்றமும் ஊனுருகும் வாடையும் வீசும். திடீரென சிதையில் பிணம் விறைத்து எழுந்து அமரும். காவலுக்கிருப்பவர்கள் அடித்துப் படுக்க வைப்பார்கள். சவம் சற்று நேரம் கால் நீட்டி உட்கார்ந்திருந்து சாயும். முதலில் கண்டபோது பெரிய முருகன் தூக்கம் வராமல் தவித்தார். பிறகு பழகிவிட்டது. இந்தக் கொல்லையும் முன்பு சுடுகாடாயிருந்தது என்றார்கள். அப்போது ஆறு மிகப் பெரியது. அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுக்கும். நீர் குறையும்தோறும் கரைகளும் குறுகின. கரையோர நிலங்கள் பெரிதாகின. அங்கங்கே பிணங்களைப் புதைத்தார்கள். இப்போது மயானத்துக்கு எல்லை வகுக்கப்பட்டுவிட்டது. பெரிய முருகன் கொல்லையை குத்தகை எடுத்த புதிதில் தன்னை மறந்து ஏர் ஓட்டிக்கொண்டிருந்தார். கரை வரப்போரத்தில் திடீரென கலப்பையில் உருண்டைப் பொருள் இடித்தது. கார் முனையில் சிக்கியது. மண் படிந்து நிறம் மாறியிருந்தது. ஓட்டைத் தேங்காயாக அல்லது பழைய பாத்திரமாயிருக்குமென நினைத்தார். ஏர் மேற்கொண்டு நகரவில்லை. அதை கையிலெடுத்துப் பார்த்தார். மாடு கடைக்கண்ணால் கண்டு வெருண்டது. அது மனித மண்டையோடு. அவரை நோக்கி இளித்தது. இந்த மண்ணில் நிலைத்திருக்க நினைத்த எந்த மனிதனுடையதெனத் தெரியவில்லை. சுடுகாட்டுப் பக்கம் தூக்கி எறிந்தார். அவர் ஏரோட்டுவதில் முனைந்தார்.
கொல்லைச் சொந்தக்காரர் முனியன் மாலையில் வந்தார். திடீரென முன்னால் நின்றதும் பெரிய முருகன் பயந்துவிட்டார். முதலில் பேய் என்று நினைத்தார். முனியனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் செழித்த சோளத் தாள்களையும் கத்திரிச் செடிகளையும் முனியன் கண்டார். குடிலின் பக்கத்தில் வைத்திருந்த தென்னை மரம் அதற்குள் உயர வளர்ந்திருந்தது. மட்டைகள் பருத்திருந்தன. இன்னும் காய்க்கவில்லை. ஆற்றோரக் கொல்லை பசுஞ்சோலை போலிருந்தது. தனக்குச் சொந்தமானது என்று நம்ப முடியவில்லை. மற்றவர்கள் சொல்கையில் மிகைப்படுத்தல் என எண்ணியிருந்தார். அவர் கேட்காவிட்டாலும் அவர்கள் பொறாமையுடன் கூறினார்கள். பெரிய முருகன் கடும் பாடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். முனியனுக்கு உடனே நிலத்தைப் பெற ஆசையாயிருந்தது. பேசாமல் திரும்பிவிடவும் எண்ணினார். பெரிய முருகன் வேலையை நிறுத்தவில்லை. கைகள் களைகளைத் தேடிப் பறித்தன. கொல்லைக்கு யாராவது ஆட்கள் வந்தால் அவர் நேராகப் பார்ப்பதில்லை. கண்கள் கூசும். சோளப் பயிருக்குப் பின்னால், மரத்தை ஒட்டி, எருதுக்குப் பக்கத்தில் நின்று பேசுவார். சுந்தரத்துடன் பெரும்பாலான பேச்சுகள் அப்படித்தான் நடந்தன. எங்கோ பார்த்தபடி சுந்தரம் சொல்வார். பெரிய முருகன் தலை சொறிந்தவாறு பின்னாலிருந்து கேட்டுக்கொள்வார்.
பெரிய முருகன் சோளக் கொல்லைக்குள் நகர்ந்தார். தலை தெரியவில்லை. முனியனுக்கு கேட்காமல் திரும்பத் தோன்றியது. ஆனால் வேறு வழியில்லை. அவருக்கு எதிர்பாராமல் வேலை பறி போயிருந்தது. எல்லா தொழிலாளர்களும் வேலை இழந்திருந்தார்கள். அரசாங்கத் தோல் தொழிற்சாலை நட்டத்தில் இயங்கியது என்று சொல்லப்பட்டது. அரசு உடனே மூடிவிட்டது. பெரும் ஊழல் நடந்ததாக பேசிக்கொண்டார்கள். தரமில்லாத தோல்கள் விற்காமல் குவிந்திருந்தன. வாங்கிய மட்ட இரசாயனங்கள் மறுபக்க கிடங்கு முழுக்க நிரம்பியிருந்தன. இனி தான் பழையபடி கௌரவமாக காலம் கடத்த வேண்டும். வெள்ளை வேட்டிச்சட்டையுடன் உலவ வேண்டும். அவர் மனதை திடப்படுத்திக்கொண்டு “இதப் பாரு பெரிய முருகன். நீ குத்தகையிருந்தது போதும். இனிமே நானே உழப்போறேன். எனக்கு வேல போயிடுச்சி” என்றார். சோளப் பயிர்களின் உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நீளத் தட்டைகள் அசையவில்லை.
கொஞ்ச நேரத்தில் பெரிய முருகன் சோளப் பயிருக்குள்ளிருந்து வெளிப்பட்டார். முனியனை ஏறெடுத்துப் பார்க்காமல் “சரி, நாந் புறப்படறேன்” என்றார். கொட்டகையோரம் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்தார். முதுகின் மேல் கைப்பிடிக் கயிறைப் போட்டார். மண்வெட்டியை கையில் தூக்கிக்கொண்டார். போர்வையை தோளில் எடுத்துப் போட்டுக்கொண்டார். மற்றொரு கையில் லாந்தர். அவர் கிளம்பத் தயாரானார். அதைக் காண முனியனுக்கு வருத்தமாயிருந்தது. “நீ இப்பவே போவாத. நாலைஞ்சி நாளு கழிச்சுக் காலி பண்ணா போதும்” என்றார். “இது உங் கொல்ல. ஆனா, போகம் முடியறப்பதா திரும்பக் கேட்டிருக்கணும்” என்றார் பெரிய முருகன். அவர் கடுமையாக எதிர்ப்பார் என்று முனியன் எதிர்பார்த்திருந்தார். “சரி, அப்பிடிதா அறுக்கறவரைக்கும் இருந்துக்கோ” என்றார். பெரிய முருகன் தலைகுனிந்தவாறு “இல்ல, நா போறதுதா நாயம்” என்றார். முனியன் தான் தவறு செய்துவிட்டதாக நினைத்தார். ஆனால் பெரிய முருகன் உடனே காலி செய்வதுதான் நல்லது. பிறகு அவர் வெளியேற மறுப்பார். பயிர்கள் அறுவடையானதும் நியாயப்படி சிறு பங்கு கொடுத்தால் போதும். முனியன் மௌனமாக நின்றார். பெரிய முருகன் திரும்பிப் பார்க்காமல் நடந்தார். அவருக்கு முன்னால் எருது தலையாட்டியபடி சென்றது.
வீட்டுத் திண்ணையில் பெரிய முருகன் தொடர்ந்து உட்கார்ந்திருந்தார். சுவரில் சாய்ந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தார். இவ்வளவு நாள் கொல்லைகளில் தன் காலத்தைக் கழித்திருந்தவர். நாலைந்து நாட்களாக வீட்டில் அடைபட்டிருந்தார். அவர் எதையும் சொல்லவில்லை. பேச்சியம்மா ஊகித்துக்கொண்டாள். பிள்ளையை அப்படியே விடக்கூடாது என்று நினைத்தாள். அவனுக்குப் புத்தி பேதலித்துவிடும். பெரிய முருகன் பக்கத்தில் சென்று உட்கார்ந்தாள். நடுவில் கைத்தடியை கிடத்தினாள். தலை முடி கலைந்து, தாடி மண்டிய மகன் முகத்தைத் திருப்பினாள். “ஏம் இப்படி உக்காந்திருக்க? நாம சும்மாயிருக்கக் கூடாது. இல்லாட்டி பேய் புடிச்சுக்கும்” என்றாள். அவள் எதையும் வித்தியாசமாக சொல்வாள். அவருக்கு புரிந்ததுபோலிருந்தது. “உம் வீட்டுக்காரிய நெனைச்சிப் பாரு. அவ உள்ளுக்குள்ள எவ்வள வேதனை? எல்லாத்தையும் ஓலையத் தச்சி மறக்கறா” என்றாள் தொடர்ந்து. வாசப்படியில் கை வைத்து ராஜி அழுதவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். “உம் பேரப் பிள்ளைங்க உன்னப் பாத்து பயப்படுதுங்க. உங் கிட்ட வர மாட்டதுங்க.” பெரிய முருகனின் கண்கள் கலங்கின. “செரி, விடு. போயி பழய கொல்லைக்காரு சுந்தரத்தப் பாத்து வேலயில சேரு. நா சின்னவங் கிட்ட நிக்கச் சொல்றேன்” என்று பேச்சியம்மா மேலும் பேசிக்கொண்டிருந்தாள். “முன்ன ஒரு பஞ்சம் வந்துச்சு. பல காலம் சனங்க பட்டினியாயிருந்தாங்க. மண்ணக் கரைச்சுக் குடிச்சாங்க. புல்ல அறுத்துத் தின்னாங்க. கடைசில கொஞ்சம் பேரு தப்பிப் பொழைச்சாங்க…”