பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து)

உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு. இறுக்கமான விதிமுறைகள் இல்லாததும், மிகச் சுலபமாக வாடகைத் தாய்கள் கிடைக்கும் சூழல் இங்கிருப்பதும் முக்கியமான காரணம். உலகம் முழுக்க ஒரு வருடத்தில் பத்து இலட்சம் செயற்கை கருத்தரித்தல்கள் நடக்கின்றன. அதில் 2.5 இலட்சம் அதாவது 25 சதவீதம் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான செயற்கை கருத்தரித்தல் மையங்கள் இந்தியாவில் திறக்கப்பட்டிருக்கின்றன- Dr. சிவபாலன் இளங்கோவன் (உயிர்மை, ஆகஸ்ட் 2022)

ழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் எழுதியுள்ள முதல் நாவல் ‘காயாம்பூ.’ இந்நாவல், குழந்தையின்மையால் ஒரு பெண் எதிர்கொள்ளும் கடும் அகப்புற நெருக்கடிகளையும் இதன் காரணமாகத் தினந்தோறும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களின் வணிகத் தந்திரங்களையும் மிகத் தீவிரமாகப் பேசியிருக்கிறது. இந்தப் பொருண்மையில் எழுதப்பட்ட முக்கியமான நாவலாகக் காயாம்பூவைக் கருதலாம். இந்நாவலுக்கு முன்பு, குழந்தையின்மையின் துயரத்தையும் அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்கள் மேற்கொண்ட சடங்கையும் பேசிய நாவல் ‘மாதொருபாகன்.’ இந்நாவல்மீது உருவாக்கப்பட்ட சர்ச்சைதான் லாவண்யா காயாம்பூவை எழுதக் காரணமாக இருந்திருக்கிறது. ‘மாதொருபாகன்’ சிவபெருமானுக்கான குறியீடு; ‘காயாம்பூ’ திருமாலுக்கான குறியீடு. இரண்டு நாவல்களையும் தொடர்ச்சியாக வைத்து வாசிக்கும்போதுதான், சமூகத்தில் குழந்தையின்மை என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு பெரிய அழுத்தங்களையும் மன உளைச்சலையும் உருவாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

1

‘குழந்தை’ என்ற உயிரின்மீது உருவாக்கப்பட்டுள்ள தொன்ம மதிப்பீடுகள் அதிக அளவில் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. குழந்தை இல்லாத பெண்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கு நியாயமான ஒரு காரணத்தையும் கூறமுடியாது. சங்கச் சமூகத்தில் தலைவிக்குக் குழந்தை இல்லாதபோது தலைவன் மறுமணம் செய்திருக்கிறான். இவளுக்குப் ‘பின்முறை வதுவை’ என்று பெயர். இவளை வாசலில் நின்று வரவேற்க வேண்டும் எனத் தலைவிக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது அக இலக்கணம். குழந்தை இல்லாத பெண்கள் திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தச் சங்கச் சமூகம் அனுமதி மறுத்திருக்கிறது. நற்காரியங்களில் இவர்கள் ஈடுபடக்கூடாது என்ற மூடநம்பிக்கை எப்போது உருவாகியிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. ‘எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருப்பினும் குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும் புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே’ (புறம்.188) என்று பாண்டியன் அறிவுடை நம்பி என்ற மன்னனே பாடிச் சென்றிருக்கிறான். நெட்டிமையார் பாடலில் (புறம்.9) இடம்பெற்றுள்ள ‘தென்புல வாழ்நர்க் க‌ருங்கட னிறுக்கும் / பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்’ வரிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பைச் சொல்கின்றன. அதாவது பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், பிணி உள்ளவர், இறந்த முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று போர் முரசறைகின்றனர்.

அகநானூற்றில் 86, 136 ஆகிய இரு பாடல்களும் சங்க காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றன. இந்தப் பாடல்களில் இடம்பெற்றுள்ள இரு தகவல்கள் முக்கியமானவை. ஒன்று, தாலி கட்டிக்கொள்ளும் வழக்கம் அன்று இல்லை. இரண்டு, நான்கு பெண்கள்தாம் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர். ஐயரும் தாலியும் அன்றைய திருமணத்தில் இல்லை. மனமொத்துத் தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்ந்தனர். பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், திருமணம் நடத்திவைத்த அந்த நான்கு பெண்களும் பிள்ளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதனை, ‘புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று / வால் இழை மகளிர் நால்வர் கூடிக் / கற்பினின் வழாஅ நற்பல உதவிப் / பெற்றோற் பெட்கும் பிணையை யாகென’ (அகம். 86) என்ற நல்லாவூர்க்கிழார் பாடலால் அறியலாம். பிள்ளைபெற்ற மகளிர் நால்வர் கூடிச் செய்வதுதான் மரபு என்று பழைய உரை குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் இப்பாடலுக்கு உரை எழுதியவர்கள் ‘புதல்வர்’ என்ற சொல்லுக்கு ‘ஆண் குழந்தை’ என்றே பொருள் எழுதியிருக்கின்றனர்.

சங்க இலக்கியப் பாடல்களில் குழந்தைப்பேறு குறித்த பெருமிதங்கள் இடம் பெற்றிருந்தாலும் போரில் வீரமரணம் அடைந்த தம் மகன்களை நினைத்து, ‘ஈன்ற ஞான்றினும் பெரிதே’ என உவந்த தாயையும் ‘வாடுமுலை ஊறிச் சுரந்த’ தாயையுமே அதிகம் பேசினர். இவர்களுடன், ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்று பாடிய பொன்முடியாரையும் தமிழ்ச்சமூகம் உச்சிமுகர்ந்தது. இவர்களையெல்லாம்விட குழந்தைப்பேற்றின் மகத்துவத்தைத் திருவள்ளுவர்தான் அதிக அளவில் ஊதிப் பெரிதாக்கிவிட்டார் என்று தோன்றுகிறது. ‘மக்கட்பேறு’ என்றொரு தனி அதிகாரத்தையே படைத்துக் குழந்தைப்பேற்றின்மீது அளவுகடந்த உன்னதங்களை அடுக்கி விட்டார். ‘நல்ல பிள்ளைகளைப் பெறுவதைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு ஏதுமில்லை’ என்று முதல் குறளிலேயே தன் சாட்டையைச் சுழற்றிவிட்டார் வள்ளுவர். இதனைக் கடைசி குறள்வரை கடைப்பிடித்தார். ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ!’ என்று எழுதி பெண்களைச் சஷ்டி விரதம், சோமவார விரதம் என இருக்க வைத்தார். அடுத்தடுத்து உரை எழுதியவர்களும் வள்ளுவரின் பாடல்களுக்கு மேலும் மெருகூட்டினார்கள். குழந்தைப்பேறு வாய்க்காத ஒருவர், மக்கட்பேறு’ அதிகாரத்தை வாசித்து முடிக்கும்போது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாவார். அந்த அளவுக்கு வள்ளுவரின் எழுத்தாணி வேலை பார்த்திருக்கிறது. மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட ஆதி காவியங்களில் அடுத்த அரச வாரிசுகளை உருவாக்குவதில் என்னென்ன தந்திரங்களையும் மந்திரங்களையும் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே குழந்தைப்பேறு என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாரிசு உருவாக்க ஏற்பாடாகப் பார்க்கப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சி செய்தவர்களும் இந்தத் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டனர். இலக்கியங்களும் இதனைப் பதிவு செய்தன. ‘பிள்ளைத்தமிழ்’ என்ற புதிய இலக்கிய வகைமையே தமிழில் உருவாகிவிட்டது. இன்று இலக்கியங்களும் வரலாற்றுக்கான ஆவணங்களாகப் பயன்படுகின்றன. எனவே, குழந்தைப்பேற்றின்மீது ஏற்றப்பட்ட தொன்ம மதிப்பீடுகளின் மூலத்தைக் கண்டறிவது மிகவும் அரிது என்றே கருதுகிறேன்.

நவீன இலக்கியங்கள்தாம் அன்பு, பாசம், கருணை, உறவு உள்ளிட்ட சொற்களுக்குப் பின்னே மறைந்துகொண்டிருக்கும் மிகையான மதிப்பீடுகளை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. அதுபோல குழந்தைப்பேற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் உன்னதங்களையும் தொடர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதன்மீது விரிசலை உருவாக்க வேண்டும். பெற்றோர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு எந்தப் பிள்ளையும் இப்போது உத்தரவாதம் கொடுப்பதில்லை. இந்தச் சூழலிலும் குழந்தைப்பேறு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், மணமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வாரிசு உருவாக்கத்தைவிடத் தங்களது பாலினத் தன்மையை நிரூபித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியே இன்று பெரிதாக இருக்கிறது. குழந்தை பிறந்து இறந்துவிட்ட இணையருக்கு, அடுத்த குழந்தை பிறக்கவில்லை என்றாலும் இச்சமூகம் அவர்களைப் பெரும் நெருக்கடிக்கு உட்படுத்துவதில்லை என்பது நிதர்சனம். அதனால் வாரிசு என்பதைக் கடந்து, தங்களது ஆண் / பெண் தன்மையை இச்சமூகத்திற்கு நிரூபிக்கவே ஒவ்வொருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதில் தன்முனைப்புக் காட்டுகின்றனர் என்று கருதவும் இடமிருக்கிறது. குழந்தை என்பது ஒவ்வொருவரது பெருமிதங்களின் அடையாளமாகக் காலந்தோறும் பார்க்கப்படுகிறது. அந்தப் பெருமிதங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களை நோக்கி ஓடுகின்றனர். குழந்தைப் பெற்றுக்கொள்ளுதலை ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகக் கருதாதவரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது.

2

‘காயாம்பூ’ நாவலின் கதைநாயகி நந்தினி; இவள் கணவன் துரை. இவர்களுக்குக் குழந்தை இல்லை. சமூக அழுத்தங்களின் காரணமாக நந்தினியும் துரையும் வெவ்வேறு கருத்தரித்தல் மையங்களில் தங்கள் உடல்களைச் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். நந்தினிக்கு மாதவிடாய் நிற்கும்வரை இந்தச் சோதனை முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தத் திட்டத்தைக் கை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வரும்போதெல்லாம் யாரோ ஒருவர் நந்தினியின் குறையைச் சுட்டிக் காட்டுகின்றனர். சக மனிதர்கள் கருணையே இல்லாமல் தொடர்ந்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரிடமுமே குறைபாடு இருப்பதால்தான் நாவலால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது. நந்தினியிடம் மட்டும் பிரச்சினை இருந்திருந்தால் தனிப்பட்ட தாக்குதல், மறுமணம் என நாவலுக்கு வேறொரு முகம்தான் கிடைத்திருக்கும். அவ்வகையில் நாவல் பால் சமநிலையைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது தொடர் பரிசோதனைகளின் மூலமாகக் கருத்தரித்தல் மையங்களின் வியாபாரத் தந்திரங்களையும் மனித உடல்களின்மீது நிகழ்த்தப்படும் மருத்துவ வன்முறைகளையும் புனைவு வெளிச்சப்படுத்தியிருக்கிறது. இதனை நாவலின் முக்கிய நோக்கமாகக் கருதலாம்.

திருமணத்திற்குப் பிறகான பெண்களின் மனநிலை மாற்றத்தை இந்தப் புனைவில் லாவண்யா நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார். பெருந்தன்மையும் சக மனிதர்கள்மீது கருணையும் கொண்ட பெண்கள், தங்களுக்கென்று ஒரு குடும்பம் உருவாகும்போது எப்படித் தங்களைச் சுயநலம் மிக்கவர்களாகத் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் நாவல் உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சுயநலத்திற்குப் பின்னாலும் குழந்தைகள்தாம் இருக்கிறார்கள் என்பதைத் தேன்மொழி, அலமேலு ஆகிய கதாபாத்திரங்களின் வழியாக நிறுவியிருக்கிறார். இது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “உலகில் நடக்கும் மாபெரும் அநியாயங்களுக்குப் பின்னால் இயங்கும் மனித சுயநலத்தின் நீட்சிக்கு குழந்தைப்பேறு ஒரு முக்கியமான காரணம் என்பேன். குழந்தைகள் உள்ள பெற்றோர் தனது வாரிசுகளை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கும் இடத்தில் மனிதம் சரியத் தொடங்குகிறது. அதுவே எல்லாச் சுயநலங்களுக்கு அடிப்படை வித்தாகிறது” (வாசகசாலை இணைய இதழ்) என்று பதில் அளித்திருக்கிறார் லாவண்யா. இதனை நாவலின் மற்றொரு கூறாக வாசிக்கலாம். ஆக, இவ்விரண்டு விஷயங்களை முதன்மைப்படுத்தி நாவல் உரையாடுகிறது.

குழந்தையின்மையினால் நந்தினி எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத்தான் நாவல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அந்த நெருக்கடி எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கு நாவல் கவனம் கொடுக்கவில்லை. ஏனெனில், இந்தக் கேள்வி பெரும் ஆய்வுக்குரியது. ஆனால் அந்த நெருக்கடி எப்படி மருத்துவத்தில் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கி விட்டிருக்கிறது என்பதில் நாவல் கவனத்தைக் குவித்திருக்கிறது. ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்கள் இன்று பெருநகரங்களைக் கடந்து சிறிய நகரங்கள்வரை தங்கள் வணிகத்தை நீட்டித்திருக்கின்றன. இதற்கென ஒரு பெரும் சந்தை உருவாகியிருக்கிறது. இந்தச் சந்தையைக் கட்டமைத்ததில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஊடகங்களும் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்கள் அளிக்கும் விளம்பரங்களினூடாகப் பெரும் வணிகத்தை ஈட்டுகின்றன. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இத்தகைய கருத்தரித்தல் மையங்கள் அளிக்கும் போலியான வாக்குறுதிகள் குழந்தையின்மையைச் சரிசெய்து கொள்வதற்கான பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால் அங்கே என்ன நடக்கிறது; அந்த மையங்கள் எப்படிச் செயல்படுகின்றன? என்பதையெல்லாம் வெகுசன மக்கள் அறிந்துகொள்ள அத்தகைய மையங்கள் வாய்ப்புகளை வழங்குவதில்லை. இந்த நாவல் அதனை ஒட்டுமொத்தமாக விளக்கிக் காட்டியிருக்கிறது.

மூன்று வகையான (1. In Utero Insemination 2. In Vitro Insemination 3. Surrogacy) சிகிச்சைகள் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களில் செய்யப்படுகின்றன. இதில் முதலிரண்டு வகைகள் குறித்து இந்நாவலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மூன்றாவது வகை, வாடகைத்தாய் முறை. இவ்வகையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அதிக பொருட்செலவாகும். பெரும் பணக்காரர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறையாக இதனைக் கருதலாம். இந்நாவல் உண்மைக்கு மிக அணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால் இந்தச் சிகிச்சைமுறைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளார் லாவண்யா. இது தொடர்பான மேலதிக விவரங்களை இணையம் வழியாக அறிந்துகொள்ள இக்கலைச் சொற்கள் உதவும். இப்படி எழுதப்பட்டிருப்பதால் இதனை மருத்துவம் சார்ந்த புனைவாகச் சுருக்க வேண்டியதில்லை. குழந்தையின்மை என்பதைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் உடல்மீதும் அவளது அந்தரங்கத்தின்மீதும் நிகழ்த்தப்படும் வன்முறையைத்தான் நாவல் பிரதானமாகப் பேசியிருக்கிறது. குழந்தைப்பேறில்லாத ஒட்டுமொத்தப் பெண்களின் பிரதிநிதியாக இந்நாவலின் நந்தினி இருக்கிறாள். அவர்களது ஒட்டுமொத்த வலியையும் இவள் தாங்கிக்கொள்கிறாள்; முடியாத தருணங்களில் கோபமாகவும் அழுகையாகவும் தன் இயலாமையை வெளிப்படுத்துகிறாள். அவளால் அவ்வளவுதான் செய்ய முடிகிறது.

லாவண்யா, இப்பிரதியை உருவாக்குவதற்கு நிறையப் பின்னணி வேலைகளைச் செய்திருக்கிறார். துரை சண்டிகரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிகிறான். நந்தினியும் திருமணத்திற்குப் பிறகு சண்டிகர் சென்றுவிடுகிறாள். அங்கேயே ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றுகிறாள். நந்தினி சொந்த நிலத்தைவிட்டு இடம் பெயர்ந்ததால், நாவலின் எல்லை விரிவடைந்திருக்கிறது. இல்லையெனில் மாமியார் – மருமகளுக்கு இடையிலான மோதலாக நாவல் சுருங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுக்கவே குழந்தையின்மை பிரச்சினை தீவிரத்துடன் அணுகப்படுவதையும் நாவல் இதன்மூலமாகச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் ‘செயற்கை கருத்தரித்தல்’ கூடாரங்கள் சண்டிகரைவிடத் தமிழகத்தில்தான் அதிகளவில் இயங்குகின்றன என்ற தரவையும் நாவல் அளிக்கிறது. குழந்தையின்மைப் பிரச்சினையால் நந்தினி அடையும் துயரங்களை மட்டுப்படுத்தவும் பிரதியை வாசிப்பவர்களின் மனக்கொந்தளிப்பை மடைமாற்றவும் இடையிடையே ஜெயந்தி – குமார் இணையரின் வாழ்க்கையும் நாவலில் சொல்லப்படுகிறது. மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தையைப் பெற்றுக்கொண்டு ஜெயந்தி படும் துயரங்கள் நந்தினியின் பிரச்சினையைக் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றன.

ஹரி என்றொரு கதாபாத்திரத்தையும் லாவண்யா உருவாக்கியுள்ளார். ஹரியைக் காயாம்பூ நிறத்தவனின் குறியீடாக வைத்தும் வாசிக்கலாம். இவன் நந்தினியைக் காதலித்தவன். இந்த விஷயம் நந்தினிக்குக் காலங்கடந்தே தெரிய வருகிறது. முன்பின் தெரியாத ஆண்களின் உயிரணுக்களைக் கொடையாகப் பெறுவதைவிட, தன்னைக் காதலித்த ஹரியின் உயிரணுவையே பெற்றுத் தன் கருமுட்டையில் செலுத்துகிறாள் நந்தினி. இதுவும் தோல்வியில் முடிகிறது. காயாம்பூ நிறத்தவன் கடைசிவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். கடவுளரின்மீதும் பிரதி கடுமையான இடையீட்டைச் செய்திருக்கிறது. இதெல்லாம் பிரதிக்குள் ஊடிழையாகத் தொடர்ந்து வருகின்றன. “அகிலம் ஆளும் அவளுக்கு, அந்தத் தொட்டிலோ இந்த வளையலோ கட்டினால்தான் என் நிலம தெரியுமா?” என்று ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதியில் நின்றுகொண்டு நந்தினி கேட்கிறாள். இது ரங்கநாயகி தாயாருக்கும் கேட்டிருக்கும்தானே! நந்தினியும் துரையும் போகாத கோயில் இல்லை; வணங்காத தெய்வங்கள் இல்லை. குழந்தைப்பேற்றிற்காக இச்சமூகம் உருவாக்கி வைத்துள்ள எல்லாச் சடங்குகளையும் தன்னை வருத்திக்கொண்டு செய்கிறாள் நந்தினி. இதில், வாழைப்பழத்தை நன்றாக மென்று, குழந்தைவரம் கேட்டு வந்திருக்கும் பெண்களின் வாயில் ஊட்டிவிடும் குப்பனூர் சாமியின் சடங்கும் அடக்கம். எல்லாச் சடங்குகளின் முடிவும் சுழியம். ஒருவேளை நந்தினிக்குக் குழந்தை பிறந்திருந்தால், அவளது வாழ்நாள் முழுக்க நேர்த்திக்கடன் மட்டும்தான் செலுத்திக்கொண்டிருக்க அவளுக்கு நேரம் இருந்திருக்கும். அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை; அவ்வகையில் ஆறுதல்.

‘செயற்கை கருத்தரிப்பு’ மையங்களில் செய்யப்படும் சிகிச்சை முறைகள் முழுக்க முழுக்க இயற்கைக்கு எதிரானவை; இயற்கையின்மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள். காந்தாரியின் வயிற்றிலிருந்து உதிர்ந்து விழுந்த சதைப்பிண்டத்தை, வியாசர் நூறு பாகங்களாகப் பிரித்து நெய் நிரப்பப்பட்ட பானைகளில் ஒவ்வொரு துண்டமாகப் போட்டு நூறு குழந்தைகளாக உருவாக்கித் தந்தார் என்பது மகாபாரதக் கதை. வியாசர் அன்று செய்ததைத்தான் மருத்துவர்களும் இன்று செய்கின்றனர். உயிரணு ஏற்றப்பட்ட கருமுட்டைகளைக் குப்பிகளில் அடைத்துக் குழந்தைகளை உருவாக்கித் தருகின்றனர். ஆனால், இந்த மையங்களில் சிகிச்சை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் விவரிக்க முடியாதவை. சிலவற்றை மட்டுமே லாவண்யா இந்நாவலில் பதிவு செய்துள்ளார். பூப்புச் சடங்கின்போது அப்பாவின் வேட்டியைச் சிறிதுநேரம் போர்த்திக் கொண்டிருக்க கூசிப்போன நந்தினிதான், பிறப்புறுப்பில் செய்யப்படும் HSG சோதனைக்காக ஆடவரின் முன்பு தன் மொத்த ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாகப் படுத்துக் கிடக்கிறாள். சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்கள், உடலாலும் மனதாலும் கடுமையான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். அவர்களது அந்தரங்கம் சிகிச்சை என்ற பெயரில் பொதுமையாக்கப்படுகிறது. ‘கருவுறுதலுக்கான நமது சிகிச்சை முறைகள் பெண்ணின் மனவுளைச்சலைக் கவனம் கொள்ளாதது மட்டுமல்ல, இன்னும் அதை மோசமாக்கும் வகையில்தான் அமைந்திருக்கின்றன’ என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.

குழந்தையின்மையை ஒரு பெருங்குறையாகவும் தெய்வக் குற்றமாகவும் பார்க்கும்வரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது. அதேநேரத்தில் அவர்களிடம் காட்டப்படும் அதீத அக்கறையும்கூட அந்தக் குறையை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும். மேலும், இந்தப் பிரச்சினை உள்ளவர்கள்மீது வீசுவதற்காகவே பல வசைச்சொற்களை இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அப்படியொரு வசைச்சொல்லைத் துரையும் எதிர்கொள்கிறான். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகக் களையப்பட வேண்டும். நாவல் இதுபோன்ற எந்தத் தீர்வையும் முன்மொழியவில்லை. ஆனால் வாசிக்கும் ஒவ்வொருவரது மனதிலும் சில அசைவுகளை இப்பிரதி உருவாக்கும். இந்நாவல் குழந்தைப்பேறு பிரச்சினையினால் பாதிக்கப்படும் ஆண் / பெண் இருவரையுமே பொருட்படுத்தியுள்ளது. ஆனால் இப்பிரச்சினையினால் ஓர் ஆணைவிடப் பெண்ணே அதிகமும் பாதிக்கப்படுகிறாள். பெண் மட்டும்தான் குழந்தைப்பேறு பிரச்சினைக்குக் காரணமாக இருக்கமுடியும் என்று நீண்ட காலம் நம்பப்பட்டு வந்தது. அதிலிருந்து பெண்களை விடுவித்த பெருமை நவீன மருத்துவத்தையே சாரும். ஆனால் அதே மருத்துவம்தான் பெண்களை இப்படியும் சுரண்டுகிறது.

Previous articleஓவியக் கவிஞன்
Next articleவேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்
சுப்பிரமணி இரமேஷ்
நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதுகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள், தொடக்க காலத் தமிழ் நாவல்கள், தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும், படைப்பிலக்கியம் ஆகிய கட்டுரை நூல்களும் ஆண் காக்கை என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. காலவெளிக் கதைஞர்கள், தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும், பெருமாள்முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகைநூல்களும் இவரது பங்களிப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.