1) காலம்போன காலம்
அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில்
நாயொன்று கண்முன்னே
சாவகாசமாய்த் திரிகிறது
நாயென்றால் வெறும் நாய்
ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல்
முன்னங்கால் நீட்டி
சோம்பல் முறிக்கும் அதன்மீது
ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது
வேகமாய் வெறுங்கையை வீசுகிறேன்
நாய் கற்பனை செய்துகொண்ட அந்த “கல்”
என் கையிலிருந்து பறந்துசெல்கிறது
2) நிறக்கூடு
அவளின் வயிற்றிலிருக்கும் குழந்தை
குமிழொன்றை ஊதிக்கொண்டிருக்கிறது
என்னதான் பலூன் என்றவொன்று
சந்தையில் பிரபலமென்றாலும்
ஒரு சிலருக்கு சரியாக ஊதத்தெரியாமல்
சில மாதம்வரை வந்துவிட்டு வாய்வலிப்பதென
முடியாமல் காற்றிறங்கிப்போகிறது
அல்லது யாரும் உடைத்துவிடாதபடி
கைகளால் ஏந்திக்கொண்டே அலைவதெல்லாம்
ஆகும் காரியமா…
இந்தமுறை இறுதி முயற்சியாய்
மிகவும் கவனமாக
சோப்புநுரையை ஊதுகிறாள்
காற்றில் மேலெழும்பி
இங்கும் அங்குமாய் விளையாடிப்போகும்
நிறைமாதக் குமிழ்
“இம்முறையும்
தனக்குள்ளிருப்பது ஒன்றுமில்லையென’
அவளுக்கு புரிந்திடாதபடி கூறிப்போனது.
-பெரு விஷ்ணுகுமார்
இரண்டும் அற்புதமான கவிதைகள்.
//வேகமாய் வெறுங்கையை வீசுகிறேன்
நாய் கற்பனை செய்துகொண்ட அந்த “கல்”
என் கையிலிருந்து பறந்துசெல்கிறது //
எல்லாரும் தான் இச்செயலை செய்திருப்போம், ஆனால் கவிதையில் காண்கையில் பிரமிப்பாக இருக்கிறது
நாய் கற்பனை செய்துகொண்ட அந்த ” கல் ”
கவிஞருக்கு அன்பும் நன்றியும்
❤❤❤
இந்த இணையதளம், பவா., அவர்கள் கதை சொல்வதைக் கேட்கும்போது எனக்கு தெரிய வந்தது. கதை, கவிதை எல்லா இலக்கியங்களையும் ரசிப்பதற்கு ஒரு சரியான தளம். பாராட்டுக்கள்.
நாய் கடைசி வரை நாயாகவே வாழ்கிறது. மனிதன் பல அவதாரங்கள் ஏற்க நேரிடுகிறது.
“கறபனை கல்” பலரும் ஒரு கட்டதில் செய்வதை அழகாய் கவிதையாக்கிருப்பது சிறப்பு.