பெருந்தேவி குறுங்கதைகள்


அழுமூஞ்சிகளின் ஊர் 

ந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து தொலைக்கிறதே” என்று அழுவார்கள். வெயிலடிக்காமல் மழையும் பெய்யாமல் மேகமூட்டமாக இருந்தால் “காயவும் காயாமல், பெய்தும் தொலைக்காமல் அழுமூஞ்சியாக இருக்கிறதே” என்று கண்ணீர் விடுவார்கள்.

இயற்கை விவகாரம் என்றில்லை. ஒருவருக்கு ஏதாவது நல்லது நடந்தால், கல்யாணம் காட்சி நடந்தால் அல்லது நல்ல வேலை கிடைத்தால் போதும், “எத்தனை நாளைக்கோ இது!” என்று மூக்கைச் சிந்த ஆரம்பித்துவிடுவார்கள். நல்லது நடக்காவிட்டால் சொல்லவே வேண்டாம்.  ஒரு லிட்டர் கண்ணீர் பல லிட்டராகும்.

அந்த ஊரில் எல்லாத் தெருக்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தன. அதனால் ஒரு தெருவிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வரப் படகுப் போக்குவரத்து மட்டுமே அங்கே இருந்தது.

இந்த ஊரின் விசித்திரம் பற்றிக் கேள்விப்பட்ட சாவு  ஒரு வசந்த காலத்தில் மரம் செடிகளெல்லாம் பூத்துக் குலுங்கிய நாளில் உள்ளே வந்தது. வந்தது யாரென்று சிணுங்கிக் கண்ணைக் கசக்கியபடி விசாரித்த முதல் ஆளிடம் “சாவு” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.  அந்த ஆள் உடனே “சாவு வந்திருக்கிறது” என்று கதறியபடி உரக்க அறிவிக்க, ஊர்மக்கள் எல்லாரும் புலம்பிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். கண்ணீர் ஆறுகளுக்கும் குட்டைகளுக்கும் குளங்களுக்கும் சற்றுமேலே இருந்த ஒரு மணல் திட்டில் ஒரு மரத்தடியில் கண்ணீரும் கம்பலையுமாகக் கூடினார்கள். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சாவு, “உங்களை ஒன்றும் செய்ய வரவில்லை, இந்த ஊர் பற்றிக் கேள்விப்பட்டதால் சும்மாதான் பார்த்துவிட்டுப் போக வந்தேன்,” என்று தன்மையாகச் சொன்னது. சாவு சொன்னதைக் கேட்டு குய்யோ முறையோ என்று கூவிக்கொண்டே அவரவரும் அழுகையைத் தொடர்ந்தார்கள். எத்தனையோ நாடு நகரங்களில் அழுதவர்களைச் சாவு பார்த்திருக்கிறது. ஆனால், இந்த ஊராரின் பிலாக்கணம் அதன் கடினச் சித்தத்தையே அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. சாவு என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் அவர்களில் கதறல் நிற்காததால், கேத வீட்டுக்கு விசாரிக்க வருபவர்கள் செய்வதைப் போல சொல்லிக்கொள்ளாமலேயே அது  அங்கிருந்து ஓடிப் போய்விட்டது.

சாவு அங்கே இல்லாததைக் கண்ட ஊர் மக்கள் மீண்டும் கலங்கிக் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள், “நம் ஊரைப் பார்த்துவிட்டுப் போய்விட்டதே, என்னென்ன செய்யப் போகிறதோ.” அவர்கள் சாவைப் பற்றி அரற்றியபடி உட்கார்ந்து அழுதார்கள். நின்றுகொண்டு அழுதார்கள். நடந்துகொண்டு அழுதார்கள். தூக்கத்தில் கனவில் அழுதார்கள். தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக அழுதார்கள்.

ஊரில் பலரும் தொடர் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த நிலையில் ஒரு பாட்டியின் பிரலாபம்  வானத்தைத் தொட்டது. வானத்துக்கு அப்பாலிருந்து ஒரு கன்னித்தேவதை கதவைக் கொஞ்சம் ஒருக்களித்துத் திறந்து என்னவோ ஏதோவெனப்  பார்த்தது.  ஊராரின் நிற்காத ஒட்டுமொத்தக் கதறல் அதை உலுக்க, தேவதையும் கண்ணீர் சொரியத் தொடங்கியது. அந்தத் தேவதையிடமிருந்து மற்ற தேவதைகளுக்கும் கின்னரர், கந்தர்வர் முதலிய மற்ற விண்ணவர்களுக்கும் தொற்றுநோயாக விண்ணில் பரவியது அழுகை. அவர்கள் கடவுளின் சிம்மாசனத்தைச் சுற்றி நின்றுகொண்டும், முழந்தாள்களுக்குள் முகம் புதைத்து விசும்பியபடியும் தரையில் புரண்டபடியும், தலையில் நெஞ்சிலும் அடித்துக்கொண்டும் அழத் தொடங்கினர். அதில் சிம்மாசனத்தில் கடவுள் அமர்ந்திருந்தாரா இல்லையா என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.


உரையாடல்

சுமதியின் அப்பாவுக்கு  எழுபது வயதில் காது கேட்கும் திறன் குறையத் தொடங்கியது. அவருடைய ஒரே தம்பிக்கும் ஒரே தங்கைக்கும், அதாவது சுமதியின் சித்தப்பாவுக்கும் அத்தைக்கும், அதே வயதில் காது கேட்கும் திறன் குறையத் தொடங்கியது. எழுபத்தியிரண்டு வயதானால் எல்லாரும் முழுச் செவிடர்களாகிவிடும் குடும்பம் அது.

என்றாலும், சுமதியின் தந்தையும் அவர் சகோதர சகோதரிகளும் மாதம் ஒரு முறை சந்தித்துப் பேசிக்கொள்வார்கள்.  ஒவ்வொரு மாதமும் சுக்லபட்ச ஏகாதசி அன்று சுமதியின் அத்தை கோயிலுக்குப் போய்விட்டு காலை டாணென்று பதினோரு மணிக்கு சுமதியின் வீட்டுக்கு வருவாள். அப்பாவும், சித்தப்பாவும் முன்னறையில் சுமதியின் அத்தைக்காகக் காத்திருப்பார்கள். மதியம் ஒரு மணி வரை மூவரும் உரையாடிக்கொண்டிருப்பார்கள். காது புலனுக்கான கருவியாக அன்றி உடலுறுப்பாக மட்டுமே இருந்ததைப் பொருட்படுத்தாத மூவர்.

ஒரு முறை மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது சுமதியின் அப்பா சென்னை மாநகராட்சியைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டிருந்தார்.

“பொழுது போனா அஸ்தமிச்சா அங்கங்க பள்ளம் தோண்டி வச்சுடறாங்க. நாலுமாசம் அப்டியே இருக்கு.”

பதிலுக்கு சுமதியின் சித்தப்பா, “ஆமா, வைகாசி மாசம் சேவை மாதிரி வராது அண்ணா, சன்னிதித் தெருவெல்லாம் என்ன கூட்டம், என்ன கூட்டம்!” என்றார்

“இவ்ளோ வெயில் அந்தக் காலத்தில இல்ல. வாசல்லயே நாள் முச்சூடும் விளையாடிட்ருப்போம். அம்மா வந்து நாலு மொத்து வைப்பா” என்றாள் சுமதியின் அத்தை.

அப்பா பதிலுக்கு வேகமாக, “நமக்குப் பொறுப்பு இருந்தாத்தானே பொறுப்பா இருக்கறவங்களை சூஸ் பண்ணுவோம்?” என்று கேட்டார்.

சித்தப்பா, “ஆனா நம்ம பக்தி போகப் போக அதிகமாகுதே தவிர கொறயல பாருண்ணா!” என்று சிரித்தபடி சொன்னார்

அத்தை, “பாலுக்கும் மோருக்கும் ஒரு நாள் கொறச்சல் இருந்ததா?  இப்ப பாலுனு போடறான் பச்சத்தண்ணியா இருக்கு, அவரானா காப்பி சரியில்லனு என்னத் திட்டறாருணா,” என்று குறைப்பட்டுக்கொண்டாள்

ஒருவர் பேசும்போது மற்ற இருவரும் காது கூர்ந்து நிதானமாகக் கேட்டார்கள். குறுக்கே ஒரு வார்த்தை பேசவில்லை. தங்களுக்குக் காது கேட்காது என்ற குறைபாட்டை உணர்ந்து, சமயத்தில் நாற்காலியில் முன்பக்கமாக நகர்ந்து அடுத்தவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டார்கள். தலையை ஆட்டி அங்கங்கே ஆமோதித்தார்கள். சுமதியின் அத்தை பிரயாசையோடு காதுகொடுத்துக் கேட்டவிதத்தில் நாற்காலியிலிருந்து முன்பக்கமாக விழுந்தே விடுவாள் போலிருந்தது.

இடையில் மூவருக்கும் காப்பி எடுத்துக்கொண்டு வர அடுக்களைக்குச் சென்ற சுமதி ”அவங்களப் பாரும்மா” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். அவள் அம்மா ”பெரியவங்களப் பாத்து எதுக்குடி சிரிக்கிற? அவங்க மூணு பேருக்கும் இருக்கற ஒத்துமை ஒனக்கும் ஒன் அண்ணாவுக்கும் சுட்டுப் போட்டாலும் வராதுடி,” என்று இடித்துக் காட்டினாள்.

ஒரு அற்ப விஷயத்துக்காக சுமதியும் அவள் அண்ணனும் மனஸ்தாபம் கொண்டு  நான்கைந்து வருடங்களாகப் பேசிக்கொள்வதில்லை. அவர்கள் இருவருக்கும் எழுபத்தியிரண்டு வயதானபின் அவர்கள் பேசிக்கொள்ளலாம். நிச்சயம் கடைசிவரையில் பேசிக்கொள்வார்கள், ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்காதபோது இருவருக்கிடையில் எதற்காகச் சண்டை வரப்போகிறது?


-பெருந்தேவி

3 COMMENTS

  1. முதலில் சிரிப்பு காட்டினாலும் கடைசி பத்தியில் சிரிப்பை பிடுங்கிக்கொண்டது ‘உரையாடல்’. 👍

  2. முதக் கத சினேகா மாதிரி,2 வது கத வீரப்பா மாதிரி சிரிக்க வெச்சது

  3. ரெண்டும் ரொம்ப நல்லாருக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.