பேதமுற்ற போதினிலே – 6

மோப்ப நாய்

மீபத்தில் ஆய்வாளர் டி. தர்மராஜ் எழுதிய அயோத்திதாசர் புத்தகத்தை வாசித்தேன். நூல் வெளியீட்டு விழாவில் அவரது பேச்சையும் யுடியூபில் கேட்டேன். இத்தொடரின் நான்காம் பகுதியாக வெளியான டிசம்பர் மாதக் கட்டுரையில் தொல்காப்பியம் பேசும் இலக்கணத்தில் இலக்கணத்தைத் தாண்டியுள்ள மெய்யியல் குறித்து, குறிப்பாக உயிரெழுத்துக்களைப் பற்றி நான் சிறிது பேசியிருப்பதுபோல அவர் மெய்யெழுத்துக்கள் குறித்து மீமெய்யியல் தளத்தில் விரிவாக அலசியிருக்கிறார். தமிழின் பதினெட்டு மெய்யெழுத்துக்களும் தனித்து உச்சரிக்க முடியாதபடி ’கம்மென்று’ இருக்கின்றன. கம்மென்று – என்பது சத்தமின்மை மட்டுமல்ல; வாசனையும் கூட என்ற பார்வையை முன்வைக்கிறார் டி. தர்மராஜ். அயோத்திதாசர் சில சொற்களின் இறுதியில் வரக்கூடியை ‘மை’ என்பதை ‘மெய்’ என்று சொல்லவேண்டும் என்கிறார். வாய்மை (வாய்மெய்), பொம்மை (பொய்மெய்), தனிமை (தனிமெய்) இப்படி. இ என்ற உயிரெழுத்து முன்னொட்டாய் சேர்ந்தால் மட்டுமே மெய்யெழுத்துக்களை உச்சரிக்க இயலும். தனித்து ஒலிக்கமுடியாதபடி காத்திருக்கின்றன மெய்கள். ஒலிப்புக்கு முன் மௌனம்; மௌனத்துக்கு முன் வாசனை. 

சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடு தத்துவார்த்த ரீதியானது. ‘ம்’ என்ற எழுத்தை ஒலிப்பதன் மூலம் ஒருமையை சமஸ்கிருதம் கொண்டிருந்தால், ஒலிக்காத பன்மையைக் (பதினெட்டு மெய்யெழுத்துக்கள்) கொண்டது தமிழ் என்ற கருத்தை முன்வைக்கிறார் டி. தர்மராஜ். ஓர் ஆய்வாளர் இந்தளவு படைப்பூக்கத்துடன் தனது தளத்திலிருந்து மாறுபட்டு தமிழில் இத்தனை ஆழத்துக்குப் பயணித்திருப்பது பாராட்டுக்குரியது. மெய்யைப் பற்றி இத்தனை விரிவாகப் பேசியவர் உயிர்மை (உயிர்மெய்) பற்றி மட்டும் ஏதும் சொல்லாது விட்டது மட்டும் சற்று ஏமாற்றமாக இருந்தது.

மெய் எழுத்துக்கள் ஏன் பதினெட்டு இருக்கின்றன? உதாரணமாக ர-ற, ல,ள,ழ, ண-ன இவை தமிழுக்கான சிறப்புகள். சித்த மருத்துவத்தில் தேகம் என்பது பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதாகும். ஐம்பூதங்களான வான், வளி, நீர், நெருப்பு, நிலம்; ஐந்து இந்திரியங்களான செவி, தோல், நாக்கு, கண், காது; ஐந்து புலனுணர்வுகளான கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய பதினைந்தோடு புத்தி, மனம், அகங்காரம் என்று மொத்தம் பதினெட்டு. தேகத்தை அதாவது மெய்யைக் கடந்தவர் சித்தர். பதினெண் சித்தர்கள் என்பது எண்ணிக்கையைக் குறிப்பதல்ல மாறாக அவர்கள் ஞான நிலையைக் குறிப்பது என்றும் சொல்லப்படுவதுண்டு.  

உயிர்மெய் எழுத்துக்கள்: (12X18=216) + உயிரெழுத்துக்கள் 12 + மெய்யெழுத்துக்கள்: 18 = 246. இவற்றோடு சார்பெழுத்துக்கள் 3 சேர 249. வான்மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும், மொத்தம் 249 உபபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 360 பாகையைக் கொண்ட வான்மண்டலம் என்பது 249 உபநட்சத்திரங்களைக் கொண்டது என்று ஜோதிடம் சொல்வதும் கவனிக்கத் தக்கது. 

இந்த ‘ம்’ எழுத்துக்கு தொல்காப்பியர் விசேட கவனம் கொடுத்திருக்கிறார். பிற மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை எனில் மகரம் கால் மாத்திரை. அது பிற எழுத்துக்களோடு இணைந்து ஒலிக்கப்படுகையில் தன்னளவில் குறுகிய ஒலி கொண்டதாகிறது. மகர விளக்கத்துக்கு அடுத்த இரு நூற்பாக்கள் நெஞ்சில் பேரதிர்வை ஏற்படுத்தக்கூடியவை.

‘உட்பெறு புள்ளி யுருவா கும்மே’ (14)

‘மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்’ (15)

இதையெழுதுகையில் என் மூதாதை தொல்காப்பியன் புன்னகைப்பதாக நினைத்துக் கொள்கிறேன். 14வது நூற்பாவை தனித்துப் பார்ப்பதா, மகரத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதா? தனித்துப் பார்ப்பதாக இருந்தால், புள்ளி என்பது ஒலிப்புக்கான வெளிச்சம்; ஜடத்தின்மீது பாயும் உயிராற்றல். இங்கே உயிர் சொல்லப்படாமயே பேசப்படுகிறது. வெளிப்படாவிடினும் மெய்யின் இயற்கை அத்தகு உயிர்ச்சொட்டுப் புள்ளியோடு நிலைத்திருப்பது. மெய் நிலைப்பது உயிரால். நாணில் பூட்டப்பட்ட அம்புபோல ஒலிப்புக்குத் தயாராய்க் காத்திருக்கின்றன மெய்கள்.

மகரத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்போமெனில், இளம்பூரணார் சொல்வது: பகரத்துக்கும் மகரத்துக்குமான வேறுபாடாக, மகரத்தில் புள்ளியை உள்ளே இடவேண்டும். அதாவது இரண்டுமே ப் என்ற எழுத்துதான். ம்-ஐச் சுட்ட மேலேயுள்ள புள்ளியை உள்ளுக்குள் இட்டால் அது ம் (இப்போது வழக்கில் இல்லை). இதுதான் சரியான விளக்கம் என்று சொல்லும்படி 16வது நூற்பா அமைந்துவிடுவதால் மாற்றுப்பார்வைக்கான வழி காணமுடியாமல் செய்துவிடுகிறது. 

’எகர ஒகரத் தியற்கையு மற்றே’ (16)

அதாவது இப்போது இருப்பதுபோல முன்பு எ-ஏ, ஒ-ஓ கிடையாது. எகர ஒகர குறிலெழுத்துக்கு மேல் புள்ளியிடுவது வழக்கமாய் இருந்தது. இப்போது சற்று திரும்பிப் பார்க்கையில் சந்தேகம் எழுகிறது. மகரம் கால் மாத்திரை என்று சொன்னபின் அதை எப்படி எழுதுவது என்று எதற்கு அவர் விளக்கவேண்டும்? ஒவ்வோர் எழுத்துக்கும் இப்படிச் சொல்லவில்லையே?

புள்ளிகள் அனைத்தும் ஒலிப்புக்குத் தயார்படுத்தும் நிலையாகவும், உயிரோடு இணைவதற்கான மெய்ப்புகளாகவும் இருக்கின்றன. புள்ளிகள் விலக்கப்பட்டதும் அங்கே உயிர் குடிகொள்கிறது. இதை தொல்காப்பியர்,

‘புள்ளியில்லா எல்லா மெய்யும்

உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும்’ என்கிறார்.

ஒலி காற்றோடு தொடர்புடையது. உந்தியில் தோன்றிய உதானன் என்ற காற்று மிடற்றை அடைந்தபின், வாயை அங்காத்தலால் பிறக்கும் எழுத்து அ. இதுவே எழுத்துக்களுள் முதன்மையானது. எல்லா எழுத்துக்களும் பிறப்பதற்கும் வாயினை ஓரளவு திறத்தல் வேண்டுதலின் எல்லா எழுத்துக்களிலும் அகரம் கலந்திருக்கிறது என்கிறார் நச்சினார்க்கினியர். இதுவே வேறு உயிர்களோடு மெய்கள் கூடுகையில் உருத்திரிந்து உயிர்க்கிறது. அ தமிழின் முதலெழுத்து. அ என்றால் அழகு; அகரத்தோடு இருப்பதே இயல்பான உயிர்ப்பு. ஏனையவை திரிபுபட்ட உயிர்ப்பு என்று கொள்ளலாம். ஒலிப்புமுறையின் இயல்புகள் இவ்விரண்டுமாகும் என்கிறார் தொல்காப்பியர்.

‘ஏனை உயிரோடு உருவும்திரிந்து உயிர்த்தலும்

ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே’

உலகில் உயிர்களின் பிறப்பையும் அவற்றின் இயல்பையும்கூட வல்லினம், இடையினம், மெல்லினம் கொண்டு விளக்கலாம். இங்கே சில நூற்பாக்களை மட்டும் சேர்த்து அவை பேசும் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

”மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா”

”மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”

”அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்

உள என மொழிப”

“உட்பெறு புள்ளி யுருவா கும்மே”

”மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”

”புள்ளியில்லா எல்லா மெய்யும்

உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும்

ஏனை உயிரோடு உருவும்திரிந்து உயிர்த்தலும்

ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே”

எழுத்ததிகாரத்தில் உள்ள இந்த நூற்பாக்களின் அர்த்தங்களை மட்டும் தனித்துப் பார்த்தால் இவை பேசுவது வறட்டு இலக்கணம் மாதிரியா தோன்றுகிறது? உலகில் உயிர்களின் தோற்றத்தையும், சடப்பொருள் பற்றியும் பேசுவதை உணரமுடிகிறதல்லவா? 

புள்ளியிருந்தால் உரு உருவாகிறது. புள்ளியில்லாதவை ஏற்கெனவே கொண்ட உருவோடு அகரத்தோடு உயிர்க்கிறது. பிறவுயிரோடு சேர்ந்து வேறு உருவம் தரிக்கிறது. அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் உள என மொழிப என்ற பாவில், காலமற்று முடிவிலியில் உயிர்த்திருத்தலும், ஒற்று அதாவது மெய்யெழுத்தின் இசைப்பு நீண்டு தொடர்வதும் உண்டு என்கிறார். பிரபஞ்சத்தில் உயிர்த்தோற்றம் நிகழாவிடத்தும் உயிரும் மெய்யும் தனித்தனியே தம்போக்கில் முடிவிலியில் இருப்பதைக் குறிக்கிறது இது. இது உறுதிப்படுத்தப்படாத கருத்தாக்கம் என்பதால் பாவின் முடிவில் ‘என மொழிப’ அதாவது எனச் சொல்வதுண்டு என்று அறுதியிடாமல் முடிக்கிறார்.

இப்படியொரு கோணம் நிரூபணமற்றது என்று வாதிடலாம். ஆனால் மொழிக்கான இலக்கணத்தில் மொழியின் தத்துவத்தில் அணுக்கொள்கை முழுமையாகப் பொருந்திப்போகும்படி தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது. 

வைசேஷிகம் எனப்படும் அணுக்கொள்கையானது இந்தியத் தத்துவங்களில் ஒன்று. இதை தோற்றுவித்தவர் கணாதர். இவரது காலம் தொல்காப்பியரின் காலத்தைப் போலவே உறுதிப்படுத்தப்பட முடியாதுள்ளது. உலகம் மற்றும் உயிரினங்களின் தோற்றத்துக்கு இந்த அணுக்களும் அவற்றின் சேர்க்கையும்தான் காரணம் என்பது வைசேஷிக வாதம். இது நவீன அறிவியல் ஏற்றுக்கொண்ட ஒன்று. அணுக்கள் அழிவில்லாதவை, நிலையானவை. இத்தோடு ”அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்” என்ற வரியை பொருத்திப் பார்க்கலாம்.


பாலா கருப்பசாமி  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.