பூனைக்குட்டிகளைக் கடத்திச்சென்ற பூதம்

சின்னவள் அவ்வளவாக யாருடனும் பேசமாட்டாள். ஆனால் ஐந்தாவது படிக்கும் அவள், ஆமை, குருவிமூக்கன் மூவரும் ஒரு செட்டு. ஆமை பெயருக்கு ஏத்த மாதிரி படு சோம்பேறி. அவள் இவர்களோடே சுத்திக்கொண்டிருப்பாளே தவிர்த்து விளையாட்டில் எல்லாம் அவளுக்குப் பெரிதாக ஈடுபாடு கிடையாது. வெறுமனே மேகங்களையோ பூச்சிகளையோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாலே அவளுக்கு பொழுது போய்விடும். சின்னவளுக்கும் குருவிமூக்கனுக்கும் அப்படி கிடையாது. அவர்களுக்கு வியர்க்க விறுவிறுக்க விளையாடினால் பொழுது கழியும், இல்லாவிட்டால் அதுவும் ஆமை மாதிரி குளத்தில் போட்ட கல்லாய் கிடக்கும். இப்போதுகூட மேம்பாலத்திலிருந்து கருவாட்டு சந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கையில் சின்னவளுக்கு மனசு துடிக்கிறது. சந்தையின் வாசலிலிருந்து பின்னாலிருக்கும் கடைசி கடை வரை அவளை விட யாரும் வேகமாக ஓடமுடியாது. தன்னால் முடியுமென போன திங்களன்று குருவிமூக்கன் சொல்லியிருந்தான். இந்த திங்களில் அவள் மட்டும் தனியாக இருக்கிறாள். மேம்பாலத்தில் நிற்பதைப் பார்த்தால் ஆத்தா திட்டுவாள். பிள்ளையார் தோட்டத்தில் நந்தியாவட்டைகள் பறித்துக்கொண்டு இந்தப் பக்கமாக இந்நேரந்தான் வருவாள்.

அன்று மதியம் கூட அவர்கள் விளையாடவில்லை. ஆமை ஏதோ கேட்கப் போய் பேச்சு மட்டும் எங்கெங்கோ சுற்றி வந்தது. அதன் நடுவே குருவிமூக்கன் சின்னவளைப் பார்த்து அப்படிச் சொல்ல அவள் கோபித்துக் கொண்டு கிளம்பி வந்துவிட்டாள். அன்று பள்ளி முடியும்வரை அவன் முகத்தைக் கூட பார்க்கவில்லை.

என்ன இருந்தாலும் அவன் அப்படி சொல்லியிருக்கக் கூடாது! பயலுக்கு கருநாக்கு வேறு! சின்னவளுக்கு மனசு தாங்கவில்லை. வீட்டுக்கு வந்த பின்னரும் குமைந்துகொண்டே இருந்தாள். என்னடி பெரிய மனுசி மூஞ்சிய தூக்கி வச்சு உக்காந்திருக்க? என்னாச்சு? பள்ளிக்கூடத்துல பயலுக யாரும் எதுவும் சொல்லிப்புட்டானுகளா? என்று அப்பாவும் அக்காக்களும் கேட்டுப் பார்த்தும் அவளுக்கு மனசு தாங்கவில்லை. அவளும், இரண்டு அக்காக்களுமான அந்த வீட்டில் அப்பா மட்டும்தான். அம்மா கிடையாது, இவள் பிறந்த சில மாதங்களில் செத்துப் போய்விட்டாள். ஆனால், அம்மாவின் அம்மா தனமாரி ஆத்தா இவர்களோடே இருந்துகொண்டாள். இவள் பிரசவத்துக்கு வந்தது. அவளுக்குக் கட்டினவர், கூடப்பிறந்தவர் யாரும் கிடையாது. ஒரே பிள்ளை இவர்கள் அம்மாதான். ஆனால் அதற்கு முன் கிராமத்து வீட்டில் தனியாக இருந்துவந்தாள். அம்மா இறந்ததும், வீட்டை விட்டுவிட்டு இங்கே இவர்களுடனே டவுனுக்கே வந்துவிட்டாள். பெரியவளுக்கும் நடுவுள்ளவளுக்கும் ஆத்தாவை அவ்வளவு பிடிக்காது. அல்லது அப்படித்தான் சின்னவளுக்குத் தோன்றியிருக்கிறது. ஆத்தாவுக்கும் அவளுக்குமான உறவு ரொம்ப ஸ்பெசல் என்று அவளுக்கு நினைப்பு. எல்லா கடைக்குட்டிகளும் ஊரில் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

அப்படிப்பட்ட ஆத்தாவைத்தான் சீக்கிரமே காணாமல் போய்விடுவார் என்று அந்த குருவிமூக்கன் சொல்கிறான். அதற்கு காரணமும் சொல்கிறான். ஊருக்குள் பெரியவர்கள் காணாமல்போவது சமீபமாக நடப்பதுதான். கரீம் தாத்தா, சேவை பெரியவர், சரியாக கண் தெரியாத மூத்த ஆச்சி என பலரையும் சமீபமாக பார்க்கமுடியவில்லை. இவளிடம் பெரியக்காக்கள் எதையும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். பள்ளியில் இவள் வயதுடைய பிள்ளைகள் எக்கச்சக்கமாக கதைகள் சொல்கிறார்கள். கவர்மெண்ட்டில எதுவோ சட்டம் போட்டிருக்காங்களாம், அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாதவங்கள எல்லாம் ஜெயில்ல போட்ருவாங்களாம் என்பதே பெரும்பான்மையோர் அறிந்திருந்த கதை. ஆனால், என்ன மாதிரியான கேள்விகள் என்பதில் ஒத்துப்போவதாக ஒரு முடிவுக்கும் அவர்களால் வரமுடியவில்லை. சமூக அறிவியல் மாதிரி பாடத்திலிருந்து ஏதாவது கேள்வி கேட்பார்களா? இதெல்லாம் கிடக்க, இன்று வந்து அந்த குருவிமூக்கன் இப்படிச் சொல்லிவிட்டான்! அதுவும் நம்பாமல் இருக்கமுடியாதபடிக்கு உறுதியாக வேறு சொல்கிறான். அவன் சொன்னதை சோதித்துப் பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்திருந்தாள். ஆனால் அன்று ராத்திரி சாயும் வரைகூட அதற்கான வாய்ப்பு வாய்க்கவில்லை. ஆத்தாவும் பெரியக்காவும் தனியாக என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். இவள் வந்தால் சட்டென்று பேச்சு மாறுவதாகத் தோன்றியது. அதற்கேற்ப இவளை வெளியே போகவும் சொன்னார்கள், படிக்கிற வேலையில்லையா, எதுக்கு இப்ப அடுப்படியில பூன மாதிரி சுத்திவர!

அவர்கள் சொன்னது இரண்டு வருடங்களுக்கு முன் ஊரில் பூனைகள் காணாமல் போன சம்பவத்தை நினைவூட்டியது. இவளது வீட்டுக்கு தினம் வந்து போய்க்கொண்டிருந்த சுரேன் முதற்கொண்டு பல பூனைகள் காணாமல் போயிருந்தன. ஆனால் அப்போது பெரியவர்கள் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். இவர்கள் கேட்டபோது பல கதைகள் சொன்னார்கள். இப்போது காணாமல் போயிருக்கும் கரீம் தாத்தாதான் பூனைகளைப் பிடித்துச்செல்லும் ஜின்னைப் பற்றின கதைகளைச் சொன்னார்.

அது முன்னொரு காலத்தில் அல்லா உயிர்களைத் தோற்றுவித்தபோது, நெருப்பிலிருந்து தோன்றிய ஒரு ஜின்னாம். எப்போதும் பசியும் தாகமுமாக சுத்திக்கொண்டிருக்குமாம். மழைக்கால ஆரம்பத்தில் குளிருக்கு இதமாக தூங்கத் தொடங்கும் அது, மழை குறைகையில் முழித்துக்கொள்ளுமாம். அதுதான் வெயில்காலங்களில் சில சமயம் திடீரென்று ஊர்க்குளங்களில் இருக்கும் தண்ணீரையெல்லாம் குடித்துத் தீர்த்துவிடுமாம். அதை நிரந்தரமாக தூங்கச் செய்யவேண்டி பெரிய ஞானியொருவர் அல்லாவிடம் பிரார்த்தித்தாராம். பிரார்த்தனையில் தெரிந்துகொண்டதுபடி ஒரு மயிலிறகுத் துடைப்பத்தை எடுத்து அடித்து அதிலேயே அதைக் கட்டிவைத்துவிட்டாராம். அவர் இந்த ஊரில் இருக்கும்வரை வருடத்தில் ஒருநாள் அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு எங்காவது தூரப்பிரதேசத்துக்கு சென்று ஆடுமாடுகளைத் தின்றுவிட்டு குளத்துநீரைக் காலிசெய்துவிட்டு திரும்ப வந்து அதிலேயே ஒண்டிக்கொள்ளும். தப்பிக்கலாம் என்று நினைத்தாலே அடிதான். சில வருடங்களுக்கு முன் மெக்காவுக்கு பயணம் சென்ற ஞானியார் வரும் வழியில் மிகுந்த கஷ்டத்திலிருந்த ஒரு கிராமத்து மக்களுக்கு உதவுவதற்காக அங்கேயே தங்கிவிட்டார். இப்போது யாரோ விஷமக்காரர்கள், வருடக்கணக்காக பசியோடு இருந்த இந்த ஜின்னை அவிழ்த்து விட்டுவிட்டார்கள். நீண்ட காலம் அடைபட்டிருந்ததால் சக்தியிழந்திருந்த அது, பெரிய உயிர்களைப் பிடிக்கமுடியாமல் குட்டிப் பூனைகளைப் பிடித்துத் தின்றுவருகிறது. இனி அந்த ஞானியார் வந்தால்தான் இதனைப் பிடித்துக் கட்டமுடியும் என்று சொன்னார்.

சின்னவளுக்கு அந்தப் பூனை மேல் பாசம் அதிகம். அதனால்தான் அவளுக்குப் பிடித்த அறிவியல் வாத்தியாரான சுரேந்தரின் பெயரைக்கொண்டு அதற்கு சுரேன் என்று வைத்திருந்தாள். ஒருமுறை வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு அணிலைப் பிடித்துக்கொண்டு வந்து அவள் காலடியில் போட்டுவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. அவ்வளவு பாசம்! அவள் இரண்டு முறை தள்ளிவிட்டும் அதை மீண்டும் அவளை நோக்கி நகர்த்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தது. பின்னர் கடைசியாக அவளுக்கு நிச்சயம் அந்த சாப்பாட்டுப் பரிசு வேண்டாம் என்று தெரிந்ததும் சற்றே ஏமாற்றத்தோடு அதைத் தூக்கிக்கொண்டு சென்று தின்றது. அவள் அதனை அவ்வளவு மகிழ்ச்சியுடன் அக்காவிடம் சொன்னபோது அணிலுக்காக பரிதாபப்பட்டும், சுரேனின் மேல் அருவெறுப்போடும் அவள் பேசினால் என்பதனால் சின்னவள் அந்த விசயத்தை வேறு யாரிடமும் சொல்லவில்லை. அந்த நீண்ட இரவில், பூனைகள் எங்கே போயிருக்கும், அவற்றைத் தூக்கிச் சென்ற ஜின்தான் இப்போது ஆட்களைத் தூக்கிச் செல்லும் அளவு வளர்ந்துவிட்டதா. அல்லது இப்போது ஆட்களைத் தூக்கிச் செல்லும் ஜெயில்காரர்கள்தான் பூனைகளையும் தூக்கிச் சென்றார்களா! அப்பாவிடம் ஒரு ஃபோன் வாங்கிக்கொடுக்க சொல்லவேண்டும், பெரியக்காவிடம் மட்டும்தான் ஃபோன் இருக்கிறது. அவள் அதனைக் கொடுக்கமாட்டாள். பள்ளியில் நிறைய பிள்ளைகள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் இப்போது ஃபோன் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நிறைய விசயங்கள் தெரிகின்றன, என்றெல்லாம் யோசித்தபடியே சின்னவள் தூங்கிப்போனாள்.

காலை எழுந்தவுடன் தனியாக சமைக்கத் தயார் செய்துகொண்டிருந்த ஆத்தாவை ஓடிப்போய் பிடித்துக் கொண்டாள்.
“ஆத்தா ஒன் பொறந்தநாள் சொல்லு?”

“ஒருவாட்டி இரண்டு வருசம் தொடர்ந்து முப்போகமும் தவறிப் போச்சாம். சுத்தி எல்லா ஊருலயும் பெரிய பஞ்சமாம். அதுக்கு ஒண்ணோ இரண்டோ மழை தாண்டி பொறந்தேன்.”

“சரியான நாள் சொல்லு ஆத்தா.”

“எனக்கெப்புடி தாயி தெரியும். அதெல்லாம் அந்த காலத்துல யார் எழுதிவைச்சா!”

“உன் ஸ்கூல் சர்டிஃபிகேட்ல இருக்கும், எனக்கு இப்பவே பாத்து சொல்லு.”

“நான் எங்கம்மா ஸ்கூலுக்கு எல்லாம் போனேன்!”

“அப்ப நெஜமா உனக்கே தெரியாதா, உன் அப்பா அம்மா சொந்தக்காரங்க யாருகிட்டயாவது கேளு.”

“எனக்கு அப்படி யாரும் இல்லயே தாயி உங்களவிட்டா…”

அவ்வளவுதான், சின்னவள் ஓவென அழத் தொடங்கிவிட்டாள். தான் என்ன சொல்லிவிட்டோமென இப்படி அழுகிறாளென ஆத்தாவுக்கும் புரியவில்லை. அப்பாவும் அக்காக்களும் வந்து கேட்டாலும், இப்போவே ஆத்தாவோட பர்த்டே எனக்குத் தெரிஞ்சாகணும் என்று சொல்லித்தான் பினாத்துகிறாள். வேறு எந்தக் காரணங்களும் சொல்லமாட்டேன் என்கிறாள். எதுக்குடி இப்போ காலங்காத்தால ஒப்பாரி வைக்கிற என்று அப்பா எகிறுகிறார். அக்காக்கள் இருவருமாக சேர்ந்து அவளை அங்கிருந்து இழுத்துச் செல்கிறார்கள். அதற்குள் ஆத்தாவுக்கும் கண்களில் கோர்த்த நீர் முகத்தையெல்லாம் நனைத்துவிட்டது. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்ல என்ற வார்த்தைகளை இதுவரை மருமகன் வாய்விட்டு சொன்னதில்லை, அப்படியொரு நல்ல மனுசன். ஆனால் தான் இந்தக் குடும்பத்துக்கு மட்டுமில்லை, மண்ணுக்கே பாரமாகத்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கும் அவ்வப்போது வந்துதான் செல்கிறது. இதற்கிடையே எங்க பொறந்தோம்னு அத்தாச்சி வேணுமாம், எடுத்துட்டுப் போனது வெறும் கணக்கெடுப்பு மட்டுமில்லையாம் எனக் குழப்பமான பேச்சுகள் அங்கங்கே கேட்டுக்கொண்டிருந்தன. பிறந்தநாளுக்கு எல்லாம் அவள் எங்கே போவாள், தனமாரி என்ற பெயரே எப்போதாவது ரேஷன் சம்பந்தமாக யாரும் ஏதாவது வந்து கேட்டால்தான் ஞாபகம் வரும். எல்லாருக்கும் அவள் இப்போது ஆத்தாதான். கரீம் பாய்க்கு நடந்தது ஊர்முழுக்க பேச்சாகியிருந்தது. அவர் ஆளு ஒருமாதிரிதான் என்று நேற்றுவரை பேசிக்கொண்டிருந்த சனங்கள் புதிய கதைகள் கட்டத் தொடங்கிவிட்டனர். சேவை பெரியவருக்கு என்ன ஆனதென யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இப்படி நாலு மொழி பேசும் இந்த பெரிய ஊருக்கு வந்ததற்கு கிராமத்திலேயே தானாக பொங்கித் தின்றுகொண்டு இருந்திருக்கலாமெனத் தோன்றியது. ஆனால் அங்கு மட்டும் என்ன நிலமையோ! திக்கற்றவள் வாழ்க்கை எங்கிருந்தாலும் ஒன்றுதான் என்ற நினைப்பு மனதை அழுத்தியது.

சற்றே அழுகை மட்டுப்பட்டதும் குருவிமூக்கன் சொன்னதை அக்காக்களிடம் சொல்கிறாள் சின்னவள். பர்த்டே என்னன்னு சொல்லி கவர்மெண்ட்ல இருந்து வந்து எல்லார்கிட்டையும் கேப்பாங்களாம். சரியா பதில் சொல்லாதவங்களப் புடிச்சு கொண்டுபோய் ஜெயில்ல போட்ருவாங்களாம். அப்படித்தான் கரீம் தாத்தாவ புடிச்சுகிட்டு போய்ட்டாங்களாம். அடுத்து நம்ம ஆத்தாவையும் புடிச்சிட்டுப் போய்ருவாங்களாம் என்று அழுகைக்கிடையே மெல்லச் சொன்னாள். கரீம் தாத்தா முஸ்லீம்ல அதனாலதான் அவரப் புடிச்சிட்டுப் போய்ட்டாங்க, நம்மள எல்லாம் போலீஸ் புடிக்கமாட்டாங்க என்று பெரிய அக்கா ஆறுதல் சொன்னாள். இல்லையே சேவை பெரியவர் இருக்கார்ல, அவரையும்தான் புடிச்சிட்டுப் போய்ட்டாங்க என்று முரண்டு பிடிக்கிறாள். தப்பா புடிச்சிட்டுப் போய்ருப்பாங்க, சீக்கிரம் விட்ருவாங்க என்று அக்காக்கள் சமாதானப்படுத்தி அனுப்புகிறார்கள். பெரிய அக்கா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவளுக்கு எல்லாம் தெரியும் என்று சின்னவள் தனக்கே ஆறுதல் சொல்லிக்கொள்கிறாள்.

அன்று பள்ளியில் சின்னவள் குருவிமூக்கனிடம் போய் எங்க ஆத்தாவ எல்லாம் புடிச்சிட்டுப் போகமாட்டாங்க! உங்க முஸ்லீம் ஆளுங்கள மட்டுந்தான் புடிச்சிட்டுப் போவாங்க, உன் வாப்பாவ புடிச்சிட்டு போவாங்க பாரு என்றாள். பொய் சொல்லாதடி பித்துவாயி, உனக்கு யார் சொன்னா அப்புடி என்று அவன் கேட்டதற்கு, எங்க அக்கா வாட்ஸாப்புல பாத்து சொன்னா என்றாள். வாட்ஸாப்பில பாத்து சொன்னா என்றதும் குருவிமூக்கன் சற்றே தயங்கினான், அவனுக்குள் பயம் எட்டிப்பார்த்தது. அதை உணர்ந்துகொண்ட சின்னவள் டிவியில கூட நேத்து அதேதான் சொன்னாங்களாம் என்று அவளாக ஒரு பிட்டு சேர்த்துக்கொண்டாள். போன வாரம் கூட குருவிமூக்கனின் வாப்பா மெட்ராஸ் வரை போயிருந்தார், எதுக்கு என்றதற்கு ஜமாத்துல வர சொல்லியிருக்காங்க என்று சொல்லியிருந்தார். அதற்கு மேலும் கேட்டால் பெரியவங்க விசயத்துல இப்பயே மூக்க வுடுற புத்தி எங்க இருந்து வந்துச்சு என்று திட்டுவார். தன் வாப்பாவைப் பிடித்துப் போய்விட்டால் என்ன செய்வதென்ற பயம் குருவிமூக்கனைப் பிடித்துக்கொண்டது. பேச்சுதான் இருக்கு ஒலக வெவரம் கிடையாது என்று அம்மி அடிக்கடி சொல்வார், சில சமயம் கோபமாக, சில சமயம் கொஞ்சலாக. ஒருவேளை போலீஸ்காரர்கள் வந்து கேட்டால் வாப்பாவால் உண்மையாலுமே சமாளிக்க முடியாது. தெரிந்த விசயங்கள் கூட அவருக்கு அடிக்கடி மறந்துபோய்விடும், ஒருபொருள் வைத்தால் வைத்த இடத்தில் இருக்கிறதா என்று அம்மி அடிக்கடித் திட்டுவார். அன்றிரவே வாப்பாவின் பர்த்டே என்றைக்கு என்பதைத் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டுமென முடிவுசெய்தான்.

அன்றிரவு அந்த ஊரில் இருந்த குழந்தைகளின் கனவுகள் முழுக்க கரிய மேகங்கள் சூழ்ந்திருந்தன. காய்ந்து கிடந்த ஊர்க்குளங்களில் முளைத்திருந்த வினோதச் செடிகளின் இலைகளை காணாமல் போன பூனைகள் நக்கிப்  பார்த்துக் கொண்டிருந்தன. பற்கள் இழந்த ஜின்னொன்றும் பூனைகளிடையே உலவிக்கொண்டிருந்தது. அவர்கள் புதிய பேச்சுகளைக் கற்றபடி கனவுலகில் பூனைகளோடு விளையாடினர், பூனைகளை வேட்டையாடினர்.


-வயலட்

Art courtesy : fineartamerica.com

2 COMMENTS

  1. அருமை. நிகழ்கால நடப்பை அழகாக எடுத்துக்காட்டுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.