குர்குட்டியா (Ghurghutia) கிராமம்,
ப்ளாசி (அஞ்சல்),
நாடியா மாவட்டம்.
3 நவம்பர், 1974.
பெறுநர்,
திரு. பிரதோஷ்.சி.மிட்டர்
அன்புள்ள திரு.மிட்டருக்கு,
உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன். இந்தச் சமயத்தில் உங்களைச் சந்திக்க ஒரு பிரத்தியேகக் காரணம் உள்ளது. அதை நீங்கள் இங்கு வரும் பொழுது அறிவீர்கள். இந்த எழுபத்திமூன்று வயது கிழவனின் அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு இங்கு வர விருப்பமென்றால், உங்கள் சம்மதத்தைப் பதில் கடிதத்தின் மூலம் உடனடியாகத்தெரிவிக்க வேண்டுகிறேன். குர்குட்டியாவை அடைய ரயில் மூலம் ப்ளாசி வந்து, அங்கிருந்து தெற்காக ஐந்தரை மைல்பயணிக்கவேண்டும். சீல்டாவிலிருந்து வரும் ரயில்களில் லால்கோலா செல்லும் பயணிகள் ரயில் மதியம் 1:58க்கு புறப்பட்டு மாலை 6:11க்கு ப்ளாசிவந்தடையும். அங்கிருந்து இங்கு வருவதற்கான ஏற்பாட்டைநான் செய்து விடுகிறேன். இரவை இங்கு கழித்துவிட்டு மறுநாள் காலை 10:30 அதே ரயிலில் கொல்கத்தா சென்று விடலாம். உங்கள் பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
கலிகின்கர் மஜூம்தார்.
கடிதத்தை ஃபெலுடாவிடம் திரும்பக் கொடுக்கும்பொழுது“கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது புகழ் பெற்ற யுத்தம் நடந்த அதே ப்ளாசியா?” எனக் கேட்டேன்.
“ஆமாம். வங்கத்தில் வேறு ப்ளாசி கிடையாது தம்பி. ஆனால் அங்கு அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுத்தத்தின் சுவடுகள் எதுவும் எஞ்சி இருக்கும் எனக் கருதினால், நீ ஏமாற்றத்திற்குள்ளாவாய். எந்த அடையாளமும் மிச்சமில்லை. சிராஜ்-உத்-தவுலா காலத்தில் புறநகரிலிருந்த பளாஷ் மரங்கள் காரணமாகத்தான் அந்த ஊருக்கு ப்ளாசி எனப்பெயர் வந்தது என்பது உனக்குத் தெரியுமா?. அந்த மரங்கள் கூட இப்பொழுது இல்லை.”
நான் ஆமோதித்தேன்.
“நீங்கள் அங்குப் போகிறீர்களா ஃபெலுடா?”
அந்தக் கடிதத்தையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துவிட்டு, “அந்த முதியவர் என்னை எதற்காகச் சந்திக்க விரும்புகிறார் என்பது புதிராக உள்ளது” என்றார் யோசனையுடன்.
“அவரது அழைப்பை நிராகரிப்பது சரியாகப்படவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் எதற்காக அழைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பனிக்காலத்தில் நீ கிராமத்திற்குச்சென்றிருக்கிறாயா? விடியும் பொழுதும் பொழுது சாயும் பொழுதும் முற்றிலும் பனியால் மூடப்பட்டுக் காட்சியளிக்கும்வயல்வெளிகளைப் பார்த்திருக்கிறாயா? ஒரு மனிதனின் உயரத்திற்கு மட்டுமே மரங்களும் சுற்றுப்புறம் எதுவும் தெரியும். இருந்த மாத்திரத்தில் கவிந்து விடும் அந்த இருளையும், ஆழமான அந்த குளிரையும் அனுபவித்து வெகுகாலம் ஆயிற்று. போய் ஒரு அஞ்சலட்டை வாங்கி வா டாப்ஷே
கொல்கத்தாவிலிருந்து ஒரு கடிதம் சென்றடைய மூன்றுநாளாவது ஆகிவிடும் என்பதைக் கருத்தில்கொண்டு, நவம்பர் பனிரெண்டில் வருவதாக கலிகின்கருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
லால்கோலா செல்லும் 365 எண் பயணியர் ரயில் மூலமாக 6:30 மணிக்கு ப்ளாசியை வந்தடைந்தோம். பொழுது மறையும் வேகம் குறித்து ஃபெலுடா கூறியதை அந்தப்பயணத்தில் உணர்ந்தேன். பொழுது மறைகிறது என உணரும்முன்பாக சுற்றிலும் இருண்டுவிட்டது. எங்களது பயணச்சீட்டைவாயிலில் கொடுத்து வெளியில் வரும்பொழுது கடைசி செங்கிரணங்களின் பின்னணியில் அனைத்து விளக்குகளும்எரியத் துவங்கி இருந்தன. ரயில் நிலையத்திற்கு வெளியே நான் இதுவரை பார்த்திராத ஒரு கார் நின்றிருந்தது. கலிகின்கரினுடையதாகத்தான் இருக்க வேண்டும். ஃபெலுடாவுமே கூட சிறு வயதில் மட்டுமே இது போன்ற ஒன்றிரண்டு கார்களைப் பார்த்திருப்பதாகவும் மற்றபடி இதுவொரு அமெரிக்க மாடல் கார் என்பதைத் தாண்டி வேறெதுவும் தெரியாது என்றார். ஆங்காங்கே இதன் பூச்சு உரிந்தும் வெளுத்தும் இருந்தாலும் இதன் உண்மை நிறம் அடர் சிகப்பு என்று யூகிக்க முடிகிறது. மேற்கூரையில்ஏற்பட்டிருந்த சேதாரங்களையும் அதன் வயோதிகத்தோற்றத்தையும் தாண்டி, அந்த கார் கொண்டிருந்த வசீகரம் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது.
இது போன்ற ஒரு காருக்கு மிடுக்கான உடையணிந்த ஒரு ஓட்டுநர் இருப்பதே மிகப் பாந்தமாக இருக்கும். ஆனால் வந்திருப்பவரோ வேட்டியும் சட்டையும் அணிந்துகொண்டு கார் மீது சாய்ந்து புகைத்துக் கொண்டிருந்தார். எங்களைப்பார்த்தவுடன் சிகரெட்டை எறிந்து விட்டு, “மஜூம்தாரைச்சந்திக்க வந்திருக்கிறீர்களா?” எனக் கேட்டார்.
“ஆமாம் குர்குட்டியா தான்”.
“நல்லது. வாருங்கள் ஐயா” என நாற்பது வயது காரின் கதவைத் திறந்து விட்டார். பின்னர் காரின் முன் சென்று விசையை இழுத்து இன்ஜினை உயிர்ப்பித்துவிட்டு, அவரது இருக்கைக்கு வந்து வண்டியைச் செலுத்தலானார். கார் இருக்கைகளின் தன்மையும், குண்டுங்குழியுமான சாலைகளும்அந்தப் பயணத்தின் சௌகரியத்தை நீண்ட நேரம் நீடிக்க விடவில்லை. எனினும் நகரச் சந்தடியைக் கடந்து கிராமப்புறத்தை அடைந்ததும் வெளியே விரிந்த காட்சிகள் அந்த அசௌகரியத்தை மறக்கச் செய்தது. மங்கலானவெளிச்சத்தில், பரந்து விரிந்த நெல் வயல்களுக்கிடையில், சுற்றிலும் மரங்களால் சூழப்பட்ட சிறு கிராமங்களைக் கடந்து சென்றோம். அவற்றை நிலத்திலிருந்து சில அடி உயரங்களில்ஒரு புகைப்படலம் போலப் பனி போர்த்தி இருந்தது. அந்தக்காட்சி ஒரு ரம்மியமான ஓவியத்தைப் பார்ப்பது போலத்தோன்றியது.
சற்றும் எதிர்பாராத ஆச்சர்யமாக ஒரு பரந்து விரிந்த பழைய மாளிகை அங்கே தோன்றியது. பயணம் துவங்கி 10 நிமிடங்கள் ஆன நிலையில், தற்போது வழியில் தென்படத்துவங்கியுள்ள மாமரங்கள், பலா மரங்கள், நாவல் மரங்கள் நாங்கள் ஒரு தனியார் நிலத்தில் பயணப்படுவதை உணர்த்தின. வலது புறமாகத் திரும்பிய அந்தச் சாலை, ஒரு சிதிலமடைந்து, கைவிடப்பட்ட ஒரு கோவிலைக் கடந்து சென்றது. சாலையின் முடிவில் ஒரு பாசி படர்ந்த ஒரு பெரிய வெள்ளை நுழைவாயிலை அடைந்தோம். அந்த வாயிலை அடுத்த மதிலின் உச்சியில் பறையறிவிக்கவும் முழங்கவும் பயன்படுத்தும் ஒரு அறை இருந்தது. அந்த வாயிலைக் கடக்கும் முன் ஓட்டுநர் மூன்று முறை ஒலி எழுப்பினார். உடனடியாக மாளிகை வந்து விட்டது.
கடைசி செங்கிரணங்களைத் தொடர்ந்து வானில் அடர்ந்த ஊதா சாயல் படர்ந்தது. அந்த இருளின் பின்னணியில் ஒரு செங்குத்தான மலையுச்சியைப் போன்று அந்த மாளிகை காட்சியளித்தது. காரிலிருந்து இறங்கிய ஓட்டுநரைத்தொடர்ந்து மாளிகையை நோக்கிச் சென்றோம். மொத்த மாளிகையும் அருங்காட்சியகத்தில் வைக்கத்தக்கது என்பதை மாளிகையை நெருங்கியதும் உணர்ந்தேன். பல இடங்களில் அதன் வண்ணப்பூச்சுகள் உதிர்ந்து, வெடிப்புகளில் செடிகள் முளைத்துக் காணப்பட்டது.
அதன் முன் வாசலை நெருங்கி நிற்கையில், “இந்தப்பகுதியெங்கும் மின்வசதி இல்லாதது போல் தோன்றுகிறதே?” என ஃபெலுடா கேட்டார்.
“ஆமாம் ஐயா. மூன்று வருடங்களாக வாக்குறுதிகளைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.” என்றார் ஓட்டுநர்.
நான் நின்ற இடத்திலிருந்து மேல் நோக்கி கட்டடத்தை ஒருமுறை நோட்டம் விடும்பொழுது, முதல் மாடியில் உள்ள பெரும்பாலான சன்னல்களைக் காண முடிந்தது. எதிலும் வெளிச்சம் எதுவும் இருக்கவில்லை. கட்டடத்தின் பக்கவாட்டில் உள்ள புதர்களுக்குப் பின்னாலிருந்தகுடிசையிலிருந்து மட்டும் கொஞ்சம் வெளிச்சம் வந்தது. பணியாளர் தங்கும் இடமாக இருக்கலாம்.
குளிர் மெலிதாக நடுங்கச் செய்தது.
இந்த இடம் சந்தேகத்துக்கிடமான வகையில் காட்சியளித்தது. இங்கு வரச் சம்மதிக்கும் முன் ஃபெலுடா இன்னும் கொஞ்சம் தீவிரமாக விசாரித்திருக்கலாம் எனத் தோன்றியது.
முதிய பணியாளர் ஒருவர் கைவிளக்குடன் வாசலுக்கு வந்தார். அந்த முதியவர் சிறு முகச்சுளிப்புடன் ஏற இறங்கப் பார்த்து விட்டு, “உள்ளே வாருங்கள்.” என்றார். அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றோம். இதற்கிடையில் ஓட்டுநர் எங்கோசென்று விட்டார். ஒருவேளை காரை நிறுத்தச்சென்றிருக்கக்கூடும்.
வெளியே மிகப்பெரும் பரப்பளவைக் கொண்ட மாளிகையின்உட்புறத்தில் அதற்கு நேரெதிராக அனைத்தும் மிகச் சிறியதாகஇருந்தது. கையைத் தூக்கினால் தொட்டுவிடக்கூடிய அளவில் மேற்கூரை, உயரம் குறைவான கதவுகள், அதைவிடச் சிறிய அளவில் கொல்கத்தாவின் சராசரி உயரத்தில் பாதியளவிலேயே இருந்த சன்னல்கள் என அனைத்தும் மிகச்சிறியதாக இருந்தன. “இது ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான வீடு” என்றார் ஃபெலுடா. மேலும் “இருநூறு வருடங்களுக்குமுன்பு வங்கத்தின் கிராமங்களில் ஜமீன்தார்களின் வீடுகள்இந்த அமைப்பில் தான் கட்டப்பட்டன” என்றார்.
ஒரு நீண்ட நடைப்பகுதியைக் கடந்து, வலதுபுறம் திரும்பிப்படியேறிச் சென்றோம். முதல் தளத்தை எட்டியதும் ஒரு விசித்திரமான அமைப்பு கண்ணில் பட்டது. “இது ஒரு பாதுகாப்புக் கதவு. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு பொறி.” என்றார் ஃபெலுடா. “திருடர்களும்கொள்ளையர்களும் புகுந்து விடாதவாறு தடுக்க உருவாக்கப்பட்டது. இதை மூடிவிட்டால் நேராக நின்றுகொள்ளும். பிறகு தானாக மடங்கி படுக்கை நிலைக்கு வந்துவிடும், குறுக்காக நீண்டு, தலைக்கு மேல் ஒரு கூறையைப் போன்று அமைந்து விடும். அதன் மூலம் யாரும் மேலே ஏறிவர இயலாதபடி தடுத்து விடும். இதன் துவாரங்களைக் கவனித்தாயா? இதன் வழியாக ஈட்டிகளைச்செலுத்தி ஊடுருவல்காரர்களுடன் சண்டையிட முடியும்.” என்றார்.
அதிர்ஷ்டவசமாக அந்தக் கதவு திறந்திருந்தது. அதைத்தாண்டி ஒரு நீண்ட தாழ்வாரத்தைக் கடந்தோம். அதன் முடிவிலிருந்த சுவரின் மாடத்தில் ஒரு எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்தப் பணியாளர் அந்த விளக்கின் அருகிலிருந்த கதவைத் திறந்து உள்ளேஅழைத்துச் சென்றார்.
அந்த மிகப்பெரிய அறையை, அதை அடைத்துக்கொண்டிருந்த சாமான்களை அப்புறப்படுத்திவிட்டுப்பார்த்தால், இன்னும் பெரிதாகத் தோன்றக்கூடும். அந்தப்பிரம்மாண்டமான கட்டில் கிட்டத்தட்டப் பாதி அறையை ஆக்கிரமித்து விட்டிருந்தது. அதன் இடது பக்கம் ஒரு மேசையும் ஒரு பெட்டகமும் இருந்தது. மேலும் அந்த அறையில் மூன்று நாற்காலிகள், ஒரு அலமாரி மற்றும் கூரைவரை உயர்ந்த புத்தக அலமாரிகள் இருந்தன. அதன் ஒவ்வொரு அடுக்கும் புத்தகங்களால் அடைந்திருந்தது. அந்தப்படுக்கையில் தாடை வரை போர்த்தப்பட்ட நிலையில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அந்த மெல்லிய விளக்கு வெளிச்சத்திலும் நரைத்த தாடி மீசையின் இடையிலான அவர் புன்னகை தெரிந்தது.
“அமருங்கள்” என்றார்.
“இது தான் நான் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த என் உறவினர் டபேஷ்” என்றார் ஃபெலுடா. மஜூம்தார்புன்னகையுடன் தலையசைத்தார். என்னுடைய வணக்கத்திற்குபொது வழக்கப்படி அவர் கைகளால் வணங்கவில்லைஎன்பதைக் கவனித்தேன்.
கட்டிலுக்கு அடுத்திருந்த இருக்கைகளில் அமர்ந்தோம்.
“என்னுடைய கடிதம் உங்களுக்கு ஆவலை ஏற்படுத்தியிருக்கவேண்டும்”, மஜூம்தார் அவதானித்திருந்தார்.
“நிச்சயமாக. இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்”.
ஒரு திருப்தியுடன் மஜூம்தார் ஆமோதித்தார். “நீங்கள் வந்திருக்காவிட்டால் ஏமாற்றத்தில் உங்களை அகம்பாவம் பிடித்தவராகக் கருதி இருப்பேன். வராமல் போயிருந்தால் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தை நீங்கள் இழந்திருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் அவற்றை முன்பே படித்திருக்கலாம்” என்றவாறே அருகிலிருந்த மேஜையின் பக்கம் பார்வையைத்திருப்பினார். நான்கு புத்தகம் ஒரு குவியல் போல் அங்கிருந்த விளக்கின் அருகில் அடுக்கப்பட்டிருந்தது. ஃபெலுடா எழுந்து சென்று, அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, மிகுந்த ஆச்சர்யத்துடன் “என்ன அதிசயம்! இவை துப்பறிவு சார்ந்த மிக மிக அரிதான புத்தகங்களின் தொகுப்பு. ஒருவேளை நீங்கள் இதற்கு முன்….?” எனக் கேட்டு முடிக்கும் முன்பே மஜும்தார் இல்லை என மறுத்துவிட்டார். சிரித்துக்கொண்டே, “நான் ஒரு போதும் ஒரு துப்பறிவாளனாக விரும்பியதில்லை. இது ஒரு பொழுதுபோக்கு மட்டும் தான். ஐம்பத்தியிரண்டுவருடங்களுக்கு முன்பு, எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு கொலையை மால்கம் என்ற அதிகாரி விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடித்தார். அப்பொழுது ஏற்பட்ட ஆர்வத்தால், அவரிடம் அவரது வேலையைப் பற்றிப்பேசித்தெரிந்து கொண்டேன். அதனால் குற்றவியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இந்தப் புத்தகங்களை வாங்கினேன். எனக்குத் துப்பறியும் நாவல்களை வாசிப்பதில் பெரும் ஆர்வம் உண்டு. எமிலி காபோரியாவ் குறித்துக்கேள்விப்பட்டதுண்டா?” எனக் கேட்டார்.
ஃபெலுடாவும் ஆர்வத்துடன், “ஆமாம் ஆமாம். பிரெஞ்சு எழுத்தாளர் தானே? முதல் துப்பறியும் நாவலை எழுதியவர் என நினைக்கிறேன்” என்றார்.
அதை ஆமோதித்த மஜூம்தார் தொடர்ந்து, “என்னிடம் அவரது எல்லா படைப்புகளும் உள்ளது. அதோடு எட்கர் ஆலன் போ, கனான் டாய்ல் போன்ற எழுத்தாளர்களின் நூல்களும் என்னிடம் உள்ளது. இதை எல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்பே வாங்கி விட்டேன். இன்று குற்றவாளியைப் பிடிக்க அறிவியல் ரீதியாகவும்தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு புதிய நடைமுறைகள்வந்து விட்டன. ஆனாலும் எனக்குத் தெரிந்த வரையில் நீங்கள் பழைய வழமையான நடைமுறையைப் பின்பற்றியே விசாரணை செய்கிறீர்கள். தொழில்நுட்பத்தைக் காட்டிலும் புத்திசாலித்தனத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாலேயேநீங்கள் தனித்து நிற்கிறீர்கள். சரியா?” எனக் கேட்டார்.
“எந்தளவு வெற்றிகரமாக என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் விசாரணை முறை குறித்து நீங்கள் கூறியது முற்றிலும் சரி.” என்றார் ஃபெலுடா.
“அதனால் தான் நான் உங்களைச் சந்திக்க விரும்பினேன்.”
ஃபெலுடா தன் இருக்கையில் அமர்ந்தார்.
சற்று நேர இடைவெளிக்குப் பிறகு, மஜூம்தார் பேச்சைத்தொடர்ந்தார். “எழுபது வயதைக் கடந்து சில ஆண்டுகள் ஆகி விட்டன. எனக்கு வயது ஆக ஆக உடல்நிலையும்மோசமடைந்து வருகிறது. என் காலத்திற்குப் பிறகு இந்த நூல்களின் கதி என்ன என்பது கடவுளுக்கே வெளிச்சம். அதனாலேயே உங்களிடம் இதில் சிலவற்றைக் கொடுத்தால், அதன் மதிப்பறிந்து, நல்ல வகையில் பராமரிக்கப்படும் என எண்ணினேன்”.
“இவை அனைத்தும் உங்கள் சொந்த நூல்களா?” என ஃபெலுடா அந்த அலமாரியைப் பார்த்தவாறே ஆச்சர்யத்துடன்கேட்டார்.
“என் குடும்பத்தில் எனக்கு மட்டும் தான் நூல்களின் மீது ஆர்வம் உள்ளது. குற்றவியலோடு சேர்த்து எனக்கு ஆர்வமுள்ள பிற விசயங்கள் குறித்தும் இங்குள்ள புத்தகங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.”
“புரிகிறது. தொல்லியல், ஓவியம், தோட்டக்கலை, வரலாறு, வாழ்க்கை வரலாறு, பயணம் தொடர்பான நூல்கள் மட்டுமல்லாது நாடகம் சம்பந்தப்பட்ட நூல்கள் கூட உள்ளது.
சில நூல்கள் புதிதாக உள்ளதே. இன்னும் வாங்குகிறீர்களா?”
“ஆமாம் ஆமாம். என் மேலாளர் ராஜன் மாதத்திற்கு இரண்டு மூன்று முறை கொல்கத்தா செல்வார். அப்பொழுது அவரிடம் பட்டியலைக் கொடுத்து விட்டால், கல்லூரிச் சாலையில் வாங்கி வருவார்.”
மேசையில் உள்ள நூல்களைப் பார்த்தவாறே, “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை” என்றார் ஃபெலுடா.
“அவசியமில்லை. என் கைகளால் இந்த நூல்களை உங்களுக்குக் கொடுக்க முடிந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஆனால் என் கைகள் செயலிழந்து விட்டன”.
திடுக்கிட்டு அவரை உற்றுப் பார்த்தோம். அவரது கைகள் போர்வையால் மூடப்பட்டிருந்தது. அதற்கு இப்படியொரு காரணமிருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
“கீழ்வாதத்தால் என் கைவிரல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. என் பணியாளர் கோகுல் தான் தினமும் எனக்கு உணவு கொடுப்பார். தற்போது என் மகன் வந்துள்ளபடியால் அவர் என்னைக் கவனித்துக் கொள்கிறார்” என விளக்கினார் மஜூம்தார்.
“எனக்குக் கடிதம் எழுதியது உங்கள் மகனா?”
“இல்லை. ராஜன் எழுதினார். அவர் தான் இங்கு அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார். ஒரு மருத்துவரைப்பார்க்க வேண்டுமென்றால் கூட பெஹ்ரம்பூரிலிருந்துஅழைத்துவருவார். ப்ளாசியில் நல்ல மருத்துவர்கள் இல்லை.”
மஜூம்தாருடனான உரையாடலுக்கு இடையில், ஃபெலுடாவின் பார்வை கட்டிலுக்கு அருகிலிருந்தபெட்டகத்தின் மீது அடிக்கடி திரும்பியதை நான் கவனித்தேன். இறுதியில் அதைப் பற்றிக் கேட்டுவிட்டார், “இந்தப் பெட்டகம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகத் தெரிகிறதே. இதில் பூட்டுவதற்கென எந்த சாவித் துவாரமும் காணப்படவில்லை. ஏதாவது ரகசிய எண்களைக் கொண்ட பூட்டா?”.
ஒரு புன்னகையுடன் ஆமோதித்த மஜூம்தார், “இதில் இருப்பதெல்லாம் ஒரு கைப்பிடியும் அதைச் சுற்றி எழுதப்பட்டஎண்களும். ரகசிய எண்கள் உள்ள இடத்தை நோக்கிச்சரியான வரிசையில் கைப்பிடியை நகர்த்துவதன் மூலம் தான் இதைத் திறக்க முடியும். இந்தப் பகுதி ஒரு காலத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களுக்குப் பெயர் போனது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் இல்லையா? உண்மையைச்சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சொத்துகளில்பெரும்பகுதியே கூட என் மூதாதையர்கள் கொள்ளையடித்துச்சேர்த்தது தான். சில காலம் கழித்து நாங்களும் அவ்வப்போது கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிட்டது. அதனால் இது போன்ற ஒரு பெட்டகம் பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதினேன்” என்றார்.
ஒரு இடைவெளியும் அசௌகரியமும் அவரிடம் வெளிப்பட்டது. பின்னர் தன் உதவியாளர் கோகுலை அழைத்தார்.
அடுத்த கணமே கோகுல் வந்தார். “அந்தப் பறவையைக்கொண்டு வா. அதை இவர்கள் பார்க்கவேண்டும்” எனப்பணித்தார். ஒரு நிமிடத்தில் கிளியுடன் ஒரு கூண்டை எடுத்து வந்தார் கோகுல். அதனிடம் மெதுவாக, “செல்லக் கிளியே. அதைச் சொல்லு. கதவை மூடு…. (Shut the door…)” என்றார்.
சில வினாடி அமைதிக்குப் பிறகு, கிளி தெளிவான தன் குரலில், “கதவை மூடு (shut the door)” எனக் கூறியது. இவ்வளவு தெளிவாக ஒரு பறவை பேசி நான் கேட்டதில்லை. அத்துடன் அது நிற்கவில்லை. தொடர்ந்து, “தடித்த பெரிய கோழியே! (O big fat hen!) ” எனக் கூறியது. இந்தமுறைஃபெலுடா அதைக் கூர்ந்து கவனிக்கலானார். வேறு யாரும் எதுவும் கூறும் முன் அந்தக் கிளி, “கதவை மூடு, தடித்த பெரிய கோழியே (Shut the door, O big fat hen!) ” என வேகமாகக்கூறியது.
ஒரு இடைவெளிக்குப் பிறகு, ஃபெலுடா “அதற்கான பொருள் என்ன?” என்று கேட்டார். பலத்த சிரிப்புடன், “அதை நான் கூறப் போவதில்லை. ஒன்று வேண்டுமானால் சொல்கிறேன். இதற்கும் அந்தப் பெட்டகத்தின் ரகசிய எண்ணிற்கும் தொடர்பு உள்ளது. அதைக் கண்டுபிடிக்க உங்களுக்குப் பனிரெண்டுமணி நேரம் அவகாசம் தருகிறேன்.” என்றார் மஜூம்தார்.
“அது சரி. அதை ஏன் அந்தக் கிளிக்கு கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா?”
“தாராளமாகச் சொல்கிறேன். முதுமை ஒருவனது நினைவாற்றலுடன் கண்ணாமூச்சி ஆடுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு அந்தப் பூட்டைத் திறப்பதற்கான ரகசிய எண்ணை திடீரென என்னால் நினைவுகூர முடியவில்லை. கிட்டத்தட்டத் தினமும் பலமுறை நான் பயன்படுத்திய ஒரு எண்ணை என்னால் நினைவுகூர முடியவில்லை என்பதை நம்ப முடிகிறதா? பிறகு நாளெல்லாம் முயன்றும் முடியவில்லை. நடு இரவில் திடீரென மனதில் மின்னியது. அதை எங்கும் எழுதி வைக்கலாம் என்றால் வேறு யார் கண்ணிலாவதுபட்டுவிடக்கூடும் என்பதால் அதைச் செய்யவில்லை. என் நினைவையும் முழுமையாகச் சார்ந்திருக்க முடியாத நிலையில், மறுநாள் காலை இந்தச் சங்கேத குறியீட்டை உருவாக்கி என் கிளிக்குக் கற்பித்தேன். தற்போது மற்ற கிளிகள், “ராதேஷ்யாம், எப்படி இருக்கிறீர்கள்?” என்று இயல்பாகக்கூறுவதைப் போல இந்தக் கிளி இதைப் பழகிவிட்டது”.
இதுவரை அந்தப் பெட்டகத்தையே உற்றுப் பார்த்துவந்தஃபெலுடா, ஒரு தீவிர முகபாவனையுடன் அந்தக் கைப்பிடியைநெருங்கிப் பார்த்தார். பிறகு ஒரு விளக்கின் துணையுடன்அதை ஆராய்ந்தார்.
“என்ன ஆயிற்று? உங்கள் துப்பறியும் கண்களுக்கு ஏதேனும் தென்படுகின்றதா?” எனப் பதற்றத்துடன் மஜூம்தார் கேட்டார்.
“மஜூம்தார் ஐயா இந்தப் பூட்டை யாரோ பலவந்தமாகத்திறக்க முயற்சி செய்திருக்கிறார்கள்”.
மஜூம்தாரிடம் இருந்து சிரிப்பு மறைந்துவிட்டது. “என்ன சொல்கிறீர்கள்?”.
ஃபெலுடா விளக்கை வைத்து விட்டு, “இதில் காணப்படுகின்ற தடயங்கள், துடைக்கும்போதோ சுத்தம் செய்யும்போதோஏற்படக்கூடியது அல்ல. இதை அடைய விரும்புகிறவர்கள்யாரேனும் இருக்கிறார்களா?” என்றார்.
மஜூம்தார் சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “இங்கு என்னுடன், கோகுல், ராஜன், ஓட்டுநர் மோனிலால், சமையல்காரர் மற்றும் ஒரு வேலைக்காரனைத் தவிர வேறு யாரும் இல்லை. தற்போது என் உடல்நிலை மோசமானதன் காரணமாக, கொல்கத்தாவிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன் என் மகன் விஸ்வநாத் வந்திருக்கிறான். கடந்த திங்கட்கிழமை நான் தோட்டத்தில் என் இருக்கையிலிருந்து எழமுயன்றபோது, மயங்கி இருக்கையின் மீது விழுந்து விட்டேன். ராஜன் கொடுத்த தகவலின் பேரில் விஸ்வநாத் மறுநாள் காலை கொல்கத்தாவிலிருந்து ஒரு மருத்துவரை அழைத்து வந்திருந்தான். சிறு அளவிலான வாதம் என்கின்றனர். எதுவானாலும் என் ஆயுள் அதிகமில்லை என்பது தெரிகிறது. மீதி இருக்கிற காலத்தையும் என் பெட்டகம் கொள்ளையடிக்கப் படக்கூடும் என்ற பயத்திலும்பதற்றத்திலும் நான் வாழ வேண்டி இருக்குமா?” என்றார்.
“இல்லை இல்லை. உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். என் கணிப்பு தவறாகக் கூட இருக்கலாம். அந்தத் தடயம் பழையதா புதியதா எனச் சிறு விளக்கு வெளிச்சத்தில் அறிய முடியவில்லை. இந்தப் பெட்டகத்தை நிறுவும்போதுஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். காலை பகல் வெளிச்சத்தில் நன்றாக மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். உங்கள் பணியாளர் நம்பிக்கைக்கு உரியவரா?”.
“முழுமையாக நம்பலாம். முப்பது வருடங்களாக இருக்கிறார்”.
“ராஜன்?”
“ராஜனும் நீண்ட காலமாக இருக்கிறார். ஆனால் நம்பிக்கையின் ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லையே. நாளையே ஒருவர் துரோகமும் செய்யலாம்”.
“வருத்தத்திற்குரிய உண்மை. எனக்குத் தெரிந்து பயப்படக்கூடிய அளவு எந்த ஆபத்தும் இல்லை. எதற்கும் கோகுலைக் கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல்லுங்கள்”.
மஜூம்தார் நிம்மதிப் பெருமூச்சுடன் நல்லது என்றார். நாங்களும் கிளம்பத் தயாரானோம்.
“கோகுல் உங்களை உங்கள் அறைக்கு அழைத்துச் செல்வார். படுக்கை, விரிப்பு, கொசுவலை ஆகியவை அங்கேயே உள்ளது. பெஹ்ராம்பூரிலிருந்து விஸ்வநாத் வந்தவுடன் இரவு உணவு உண்ணலாம். இங்கே சுற்றிப்பார்க்கப் பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும், நீங்கள் விரும்பினால் காலை காரில் ஒரு உலா சென்று வாருங்கள்”.
மேஜை மீதிருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு, மஜூம்தாருக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்புகையில். “நீங்கள் அதை நாளை காலைக்குள் கண்டுபிடித்து விட்டால், உங்களுக்கு காபோரியாவ் (Gaboriau) படைப்புக்களின் முழுத்தொகுப்பையும் தந்து விடுகிறேன்” என்றார் மஜூம்தார்.
கைவிளக்குடன் வந்த கோகுல் எங்கள் அறைக்கு அழைத்துச்சென்றார். அது முதியவருடைய அறையைவிடச் சிறிதாக இருந்தாலும், குறைவான பொருட்களே இருந்ததால் தாராளமாகவே இருந்தது. மூலையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிறப்பான கவனத்துடன் இருவருக்குமானபடுக்கைகள் தயார் செய்யப்பட்டிருந்தன.
படுக்கையில் அமர்ந்தவாறே ஃபெலுடா “அந்த ரகசியக் குறியீடு நினைவிருக்கிறதா?” என்றார்.
“ஆமாம்”.
“நல்லது. அதை இந்த ஏட்டில் எழுதிக் கொடு. காபோரியாவ்வின் (Gaboriau) முழுத் தொகுப்பையும்கொண்டுசெல்ல விரும்புகிறேன்”.
அந்தக் குறிப்பை எழுதிவிட்டு ஒருமுறை பார்த்தேன். அதற்கு எந்த ஒரு பொருளும் இருப்பதாகப்படவில்லை. அதை வைத்து எப்படி ஃபெலுடா கண்டுபிடிப்பார் என யோசித்தேன்.
“ஒரு தொடர்பற்ற வினோதமான வாக்கியத்தில் எப்படி எண்களுக்கான குறிப்பு இருக்க முடியும். ஒரு கோழியால் எப்படிக் கதவைச் மூட முடியும்? முட்டாள்தனமாக உள்ளது.” எனச் சந்தேகத்துடன் கூறினேன்.
“சவால் என்பது அது தான். கவனித்தாயா? ஒரு கோழியை யாரும் கதவைச் மூடச் சொல்ல மாட்டார்கள் என்ற யதார்த்தம் தான் நமக்கான குறிப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு குறியீடு இருக்க வேண்டும். எப்படியாவது அதைக் காலைக்குள் கண்டுபிடிக்க வேண்டும்”.
ஃபெலுடா எழுந்து சன்னல் கதவைத் திறந்தார். இந்த நேரத்திற்கு நிலவு உச்சிக்கு ஏறி வெளி எங்கும் வெள்ளியின் சாயலைப் பரப்பி இருந்தது. எங்கள் அறை மாளிகையின் பின்பகுதியை நோக்கி அமைந்திருந்தது. “வலது புறம் ஒரு ஏரி இருக்க வேண்டும்” என்றார் ஃபெலுடா. அங்கிருந்த அடர்ந்த செடிகளுக்கும் புதர்களுக்கும் இடையில் அலையாடும் நீரின் மேற்பரப்பு தெரிந்தது. நரிகளின் ஊளையும் சில்வண்டுகளின் ரீங்காரத்தையும் தாண்டி ஒரு அடர்ந்த நிசப்தம் நிலவியது. இதுவரை இவ்வளவு தனிமையான தொலைதூரப் பகுதியில் தங்கியதில்லை.
வாடைக் காற்றைத் தவிர்க்க ஃபெலுடா சன்னலை மூடியபோதுஒரு கார் வரும் சத்தம் கேட்டது. இது நாங்கள் வந்த அமெரிக்க காரின் சத்தமாக இருக்கவில்லை. “விஸ்வநாத்மஜூம்தாராக தான் இருக்கும்” என்றார் ஃபெலுடா. சீக்கிரமாக இரவு உணவிற்கான அழைப்பு வந்து விடும் என மகிழ்ந்தேன். உண்மையில் எனக்கு நன்கு பசித்தது. மதியம் இரண்டு மணிக்கு ரயில் ஏற வேண்டி இருந்ததால் மதிய உணவை முன்னதாக சாப்பிட்டிருந்தோம். இடையில் ரணகாட்டில்தேநீரும் இனிப்பும் சாப்பிட்டுக் கூட நீண்டநேரம் ஆகி விட்டது. அதனால் வழக்கத்திற்கு மாறாக, எட்டு மணிக்கே பசிக்கத் துவங்கிற்று. வேறு வேலை எதுவும் இல்லாத நிலையில், சற்று நேரமாகவே சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கலாம் என்பது நல்ல யோசனையாகத் தோன்றியது.
அறையைச் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். ஒரு சுவரின் பெரும்பகுதிக்கு ஒரு ஓவியம் இருந்ததை இப்பொழுது தான் முதன்முறையாகக் கவனித்தேன். அதிலிருந்தவர் கண்டிப்பாக மஜூம்தாரின் முன்னோராகத் தான் இருக்கும். அதில் தன் அகண்ட திண்ணமான தோள்கள் கச்சிதமாகத் தெரிய நாற்காலியில் அமர்ந்திருந்தார். பெரிய கண்களுடன், அடர்ந்த முறுக்கிய மீசையுடன், தோள்வரை நீண்ட சுருளை முடியுடன்காணப்பட்டார்.
“இவரைப் பார்த்தால் மல்யுத்தமும் கனமான கர்லாக்கட்டை பயிற்சியும் வழக்கமாகச் செய்பவர் போல் தெரிகிறது. ஒருவேளை கொள்ளையராக இருந்து ஜமீனாக மாறிய முதல் நபராகவும் இருக்கலாம்” எனக் கிசுகிசுத்தார் ஃபெலுடா.
வெளியில் காலடிச்சத்தம் வந்ததைத் தொடர்ந்து கதவைப்பார்த்தோம். வராண்டாவில் வைக்கப்பட்டிருந்த விளக்கை ஒரு உருவம் கடந்து வருவது நிழலசைவில் தெரிந்தது. வாசலில் வந்து நிற்பவரைப் பார்த்தால் விஸ்வநாத் மஜூம்தார் போலத்தெரியவில்லை. அவர் குட்டையான வேட்டியும், சாம்பல் நிற குர்தாவும், தடிமனான கண்ணாடியும் அணிந்து, அடர்ந்த மீசையுடன் காணப்பட்டார்.
அவர் அறைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்த்ததைக்கண்டு, “என்ன வேண்டும் ராஜன் ஐயா?” என்றார் ஃபெலுடா. குரலை அடையாளம் கண்டவுடன் ஃபெலுடாவிடம் “சின்ன முதலாளி வந்து விட்டார். கோகுலிடம் உணவை எடுத்து வைக்கச்சொல்லி இருக்கிறேன். முடித்து விட்டு, ஐந்துநிமிடத்தில் வந்து தகவல் சொல்வான்” என மிகவும் கரகரப்பான குரலில் ராஜன் கூறினார். சளி பிடித்திருப்பதாகத்தெரிகிறது.
அவர் சென்ற பிறகு, “அவர் மீது என்ன வாசனை வந்தது ஃபெலுடா?” என்று கேட்டேன்.
“பாச்சா உருண்டைகள்/வாசனை உருண்டைகள். தற்போது தான் பெட்டியிலிருந்து அவர் அந்தக் கம்பளி குர்தாவை அணிந்திருக்க வேண்டும்”.
காலடிச்சத்தம் தேய்ந்து மறைந்தவுடன் மீண்டும் ஏக அமைதி நிலவியது. ஃபெலுடா இல்லை என்றால், ஐந்து நிமிடம் கூட இது போன்ற அச்சமூட்டக்கூடிய சூழலில் தங்க மாட்டேன். மஜூம்தாரும் பிறரும் இத்தகைய சூழலில் எப்படி ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறார்கள்? திடீரென இந்த வீட்டில் நடந்த கொலைச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அது எந்த அறையில் நடந்ததென்பது கடவுளுக்கே வெளிச்சம்.
இதற்கிடையில் ஃபெலுடா விளக்கு வைக்கப்பட்டிருந்த மேசையைக் கட்டிலுக்கு அருகில் நகர்த்தி ஏட்டில் எழுதப்பட்டகுறிப்பைப் படித்தார். “கதவை மூடு…. கதவை மூடு… (shut the door…. Shut the door….) ” என்று ஓரிருமுறைமுணுமுணுத்தார். சலிப்படைந்த நான் வெளியில் வந்து வராண்டாவில் நிற்கலாம் என வந்தேன்.
என் இதயமே நின்றுவிடும் போலிருந்தது. வெளியில் வெளிச்சம் முடிந்து இருள் துவங்கிய இடத்தில் ஒரு உருவம் அசைந்தது. நான் எந்த அசைவையும் வெளிப்படுத்தாமல்அமைதியாக உற்றுக் கவனித்தேன். சில வினாடிகளில் அது கோடு போட்ட பூனை என்று புரிந்தது. அதுவும் திரும்பி என்னை மந்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, கொட்டாவி விட்டபடி மீண்டும் இருளில் மறைந்தது. சில நிமிடங்களுக்குப்பிறகு அந்தக் கிளியின் அலறல் சத்தம் மட்டும் வந்து, மீண்டும் அமைதி பரவியது. பல கேள்விகள் தோன்றியது. விஸ்வநாத்தின் அறை தரை தளத்தில் இருக்குமா? ராஜன் எங்கே தங்கியிருப்பார்? ஏன் இந்த வீட்டில் நடக்கும் எதுவும் தெரிந்து கொள்ள முடியாத பகுதியில் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது?
அறைக்குத் திரும்பினேன். ஃபெலுடா ஏட்டை மடியில் வைத்தபடி கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். என் சந்தேக மனநிலை வெளிப்படுமாறு, “ஏன் இன்னும் அழைக்காமல் தாமதம் செய்கிறார்கள்?” எனக் கேட்டேன்.
கடிகாரத்தைப் பார்த்த ஃபெலுடாவும், “ஆமாம் டாப்ஷே. ராஜன் வந்து விட்டு சென்று கூட பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கும்” என்று கூறி விட்டு, மீண்டும் ஏட்டில் மூழ்கினார்.
நான் ஃபெலுடாவிற்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களைப்புரட்டினேன். ஒன்று கைரேகை பகுப்பாய்வு செய்வது பற்றியது, மற்றொன்று குற்றவியல் பற்றியது, மூன்றாவது குற்றமும் துப்பறிவும் பற்றியது. நான்காவது நூலின் பெயர் புரியவில்லை என்றாலும் அது முழுவதும் ஆயுதங்களைப் பற்றிய புகைப்படங்களின் தொகுப்பாக இருந்தது. ஃபெலுடா தன் கைத்துப்பாக்கியைக் கொண்டுவந்திருக்கிறாரா?
மாட்டார், வழக்கு விசாரணைக்காக வரவில்லை என்பதால் கொண்டுவந்திருக்க மாட்டார். அதோடு துப்பாக்கியைக்கொண்டு வரக் காரணமோ அவசியமோ எதுவும் இல்லை. எங்கள் பெட்டியில் அந்தப் புத்தகங்களை வைத்து அமருகையில், பரிச்சயமில்லாத ஒரு குரல் திடுக்கிடச் செய்தது. நிமிர்ந்து பார்த்தால் ஒருவர் கதவருகில் நின்று கொண்டிருந்தார். டிரைவரோ, கோகுலோ, ராஜனோ இல்லை என்பதால் அவரை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை. விஸ்வநாத் மஜூம்தாராகத் தான் இருக்கவேண்டும்.
“நீண்ட நேரம் காக்க வைத்ததற்கு மன்னிக்க வேண்டும். என் பெயர் விஸ்வநாத் மஜூம்தார்” என்று கைகளை மடக்கியபடிஃபெலுடாவிடம் கூறினார். மூக்கும் முழியும் மட்டும் அல்லாது பெரும்பான்மையாக அவர் தன் தந்தையைப் போலவே இருந்தார். வயது நாற்பதுகளில் இருக்கக் கூடும். கருமையானதலைமுடி; மழுங்கச் சவரம் செய்யப்பட்ட முகம்; மெல்லிய உதடுகள். காரணமே இல்லாமல், அவரைப் பார்த்தவுடன் ஒரு அசூயை தோன்றியது. ஒருவேளை நான் மிகவும் களைத்திருக்கும் சமயத்தில் நீண்ட நேரம் பசியுடன் காத்திருக்க வைத்ததற்காக இருக்கலாம். அல்லது (இது முற்றிலும் என் கற்பனையாகக் கூட இருக்கலாம்) அவர் சிரிக்கும் போது கண்களில் ஒரு அந்நியமும் இறுக்கமும்தெரிந்ததால் இருக்கலாம். எங்கள் வருகை அவருக்கு மகிழ்ச்சி தருவதாகத் தெரியவில்லை. மாறாக நாங்கள் கிளம்பினால் தான் மகிழ்ச்சி என்பதாகத் தோன்றினார்.
அவருடன் தரைதளத்தில் உள்ள உண்ணுமிடத்திற்குச்சென்றோம். பாரம்பரிய வழக்கப்படி தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும் என எதிர்பார்த்துச் சென்ற எனக்கு அங்கு உணவு மேசை இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. வெள்ளித்தட்டு, கோப்பை மற்றும் பாத்திரங்கள் இருந்தன.
அனைவரும் அமர்ந்தவுடன், “வெயில் காலமாக இருந்தாலும் குளிர் காலமாக இருந்தாலும் தினசரி இரு முறை குளிக்கும்வழக்கம் எனக்குண்டு. அதனால் தாமதமாகி விட்டது” என்றார் விஸ்வநாத்.
அவர் மீது இன்னமும் கடுமையான வாசனைமிக்கவிலையுயர்ந்த சோப்பின் மணம் வெளிப்பட்டது. சாம்பல் வண்ண டிரவுசர், வெண்பட்டு சட்டை, கரும்பச்சைநிறத்திலான கையில்லா குளிர்/மேல் ஆடை (pullover) என அவர் அணிந்திருந்த ஒவ்வொன்றும் ஆடம்பரத்தின் மீதான அவர் பற்றை வெளிப்படுத்தியது.
அனைவரும் உண்ணத் துவங்கினோம். ஒவ்வொருவரதுஉணவுத் தட்டைச் சுற்றிலும் பல்வேறு வகையான உணவுகள் தனித்தனியாக சிறுசிறு பாத்திரங்களில் அரைவட்ட வடிவில் வைக்கப்பட்டிருந்தன. மூன்று வகையான காய்கறிகள், பருப்பு மற்றும் மீன் குழம்புகள் இருந்தன.
அப்பொழுது “என் அப்பாவிடம் பேசினீர்களா?” எனக் கேட்டார் விஸ்வநாத்.
“ஆமாம். சங்கோஜம் தரும் வகையில் அவர் ஒரு காரியம் செய்தார்”.
“புத்தகங்களைப் பரிசாக அளித்ததைக் கூறுகிறீர்களா?”
“ஆமாம். அந்தப் புத்தகங்கள் இப்பொழுது கடைகளில் விற்கப்படுவதாக இருந்தால், அதன் மதிப்பு ஆயிரங்களில் இருக்கும்”.
விஸ்வநாத் சிரிப்புடன், “என் தந்தை உங்களை இங்கு அழைப்பது குறித்து என்னிடம் தெரிவித்த போது நான் சற்றே எரிச்சலடைந்தேன். ஒரு பெரிய நகரத்தில் இருக்கும் ஒருவரை இது போன்ற ஒரு கிராமத்திற்கு அழைப்பது எனக்கு அவ்வளவு நியாயமாகப்படவில்லை” என்றார்.
ஆட்சேபமாக ஃபெலுடா “எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள்? ஏன் வரக்கூடாது? இங்கு வந்ததால் நான் எதையும் இழக்கவில்லை. மாறாக பெரும் பயன் அடைந்துள்ளேன்” என்றார்.
அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. “நான் என் நிலையைச்சொல்கிறேன். கடந்த நான்கு நாட்களாக இங்கு இருந்ததேபோதுமானதாகத் தோன்றுகிறது. உங்கள் மதிப்புக்கு நன்றி. நாளை நான் கிளம்புவதைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சியேகொள்கிறேன். என் தந்தை எப்படிக் கடைசி வரை இங்கிருக்கப் போகிறார் என்பது தெரியவில்லை” என்றார்.
“அவர் வெளியில் எங்கும் செல்வதே இல்லையா?”.
“இல்லை. அந்த இருண்ட அறையைத் தாண்டி வருவதில்லை. முன்பு, அவ்வப்போது தோட்டத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார். தற்போது மருத்துவர் அந்த இடத்தை விட்டு எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை”
“நீங்கள் நாளை கிளம்புவதாகக் கூறினீர்களா?”.
“ஆமாம். தற்போது அப்பாவின் உடல்நலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. நீங்கள் பத்தரை மணி ரயிலில்கிளம்புகிறீர்களா?”.
“ஆமாம்”.
“சரி. அப்படியானால் நீங்கள் ரயில் நிலையத்திற்குச் சென்றவுடன் நான் கிளம்பி விடுவேன்”.
சாப்பாட்டிற்கு பருப்புக்குழம்பை ஊற்றியபடி, ஃபெலுடா“உங்கள் தந்தைக்குப் பல்வேறு விசயங்களில் ஆர்வம் உள்ளது. உங்களுக்கும் தொழிலைத் தாண்டி அது போல் ஏதும் உள்ளதா?” எனக் கேட்டார்.
“இல்லை. தினசரி வேலைகளைத் தாண்டி வேறு எதற்கும் எனக்கு நேரம் மிச்சம் இருப்பதில்லை. ஒரு தொழிலதிபராகநான் முழுமையான மகிழ்ச்சியுடன் இருப்பதால் எனக்கு வேறெதுவும் தேவைப்படவில்லை”.
அவரிடம் விடைபெற்று விட்டு அறைக்கு வரும்பொழுது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. ஏழு மணியே நடு இரவைப் போல் இருப்பதால், கடிகாரம் என்ன மணி காட்டுகிறதென்பது இந்த இடத்தில் ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
“நான் என் தலையணையை எதிர்ப்புறம் வைத்துப் படுப்பதில்உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை உள்ளதா?” என ஃபெலுடாவிடம் கேட்டேன்.
“இல்லை ஆனால் எதற்காக அப்படிச் செய்கிறாய்?”
“காலையில் அந்தச் சுவரிலுள்ள படத்தின் இறுகியமுகத்தைப் பார்த்தவாறு விழிக்க விரும்பவில்லை”.
ஃபெலுடா சிரித்துக்கொண்டே, “நல்லது நானும் அதே போலச்செய்து விடுகிறேன். எனக்கும் அவரது பார்வை பிடிக்கவில்லை” என்றார்.
படுக்கப் போகும் முன் விளக்கை எடுத்து அதன் வெளிச்சத்தைக் குறைத்தார். ஒளியோடு சேர்ந்து அறையின்அளவும் குறைந்தது போல் இருந்தது. சில நிமிடங்களிலேயேகண்களைத் தூக்கம் அழுத்தியது. சரியாகக் கண்ணயரும் நேரத்தில் ஃபெலுடாவின் முணுமுணுப்பு கேட்கவே விழிப்பு வந்து விட்டது.
“கதவை மூடு (shut the door)…. வாயிலைத் திற (open the gate) … அது தவறு. குச்சியை எடு (pick up sticks). ஆம் அது தான் முதலில் வரும்”.
“ஃபெலுடா”, நான் எச்சரிக்கும் தொனியில் சிணுங்கினேன். “எழுந்திருங்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு? நீங்கள் தூக்கத்தில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”
அவர் சிரித்தபடியே, “இல்லை. நான் முழுமையான விழிப்புடன் இருக்கிறேன். எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை என நம்பலாம். இப்பொழுது என்னவென்றால் நான் அந்த காபோரியாவ் புத்தகத் தொகுப்பை வென்றுவிட்டேன் என நினைக்கிறேன்” என்றார்.
“என்ன! அந்தக் குறியீட்டைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?”.
“அப்படித் தான் நினைக்கிறேன். உண்மையில் அது மிக எளிதானது. முதன்முறை கேட்ட பொழுதே கண்டுபிடித்திருக்கவேண்டும்”.
“எனக்கு இப்பொழுதும் அது அர்த்தமற்றதாகத் தான் தெரிகிறது”.
“ஏனெனில் நீ சிந்திக்கவில்லை. சிறுவயதில் உனக்கு எப்படி எண்ணிக்கையைக் கற்றுக் கொடுத்தார்கள்?”
“அது எளிது. ஒன்று, இரண்டு, மூன்று,…. அவ்வளவு தான்”.
“அப்படியா? நன்றாக யோசித்துப் பார். யாரும் எண்ணிக்கையை எளிமையாகக் கற்றுக்கொள்ளப் பாடல் எதுவும் சொல்லித் தரவில்லையா?”.
“எண்களை உள்ளடக்கிய பாடலா? ஒன்று இரண்டு என வரும் வகையிலா? இல்லையே அப்படி எதுவும்…. ஒரு நிமிடம்! ஃபெலுடா ஃபெலுடா நீங்கள் சொல்வது புரிந்து விட்டது. ஆமாம் பதில் கிடைத்துவிட்டது”.
நான் உற்சாகத்தில் எழுந்து அமர்ந்துவிட்டேன். ஃபெலுடாஎன்னை நோக்கித் திரும்பிப் பார்ப்பதை அரைகுறையாகக்கவனித்தேன். அவர் சிரித்தார்.
“மிக நன்றி. அப்பொழுது நாம் அதைப் பெற்றுக்கொள்ளலாம்”.
மழலையர் பள்ளியில் கற்றுக்கொண்ட அந்தப் பாடலை மெதுவாக முணுமுணுக்கத் துவங்கினேன்.
One two (ஒன்று இரண்டு)
Buckle my shoe (என் காலணியை மாட்டு)
Three four (மூன்று நான்கு)
Shut the door (கதவை மூடு)
Five six (ஐந்து ஆறு)
Pick up sticks (குச்சிகளை எடு)
Seven eight (ஏழு எட்டு)
Open the gate (கதவைத் திற)
Nine ten (ஒன்பது பத்து)
A big fat hen (ஒரு பெரிய விடைத்த கோழி)
“இப்போதைக்கு இது போதும். இப்பொழுது அந்தக்குறியீட்டிற்கான முழுபொருள் என்னவென்று நினைக்கிறாய்?”.
“கதவை மூடு என்றால் மூன்று நான்கு. பெரிய தடித்த கோழி என்றால் ஒன்பது பத்து. சரியா?”.
“ஆமாம். இடையில் ஒரு “ஓ” வருகிறது. அப்படி என்றால் 340910. இவ்வளவு தான் இல்லையா? சரி தற்பொழுது தூங்கலாம்”.
ஃபெலுடாவின் புத்திக்கூர்மையை எண்ணி வியந்தவாறுபடுத்தேன். மீண்டும் ஒருமுறை மிகச் சரியாக உறக்கத்தில்அமிழும் நேரத்தில், வெளியில் காலடிச்சத்தம் கேட்டது. இந்தமுறையும் ராஜன் ஐயா தான். எதற்காக இந்த நேரத்தில் வந்திருக்கிறார்?
“சொல்லுங்கள் ராஜன் ஐயா?” என்றார் ஃபெலுடா.
“சின்ன முதலாளி உங்களுக்கு எதுவும் தேவை இருக்கிறதா எனப் படுக்கும் முன் கவனித்துக்கொள்ளச் சொன்னார்”
“இல்லை. சௌகரியமாக இருக்கிறோம். நன்றி”.
ராஜன் ஐயா அமைதியாகச் சென்று விட்டார். இந்தமுறைஉடனடியாக உறக்கம் வந்தது. கதவின் வழி கசிந்த நிலவொளிமங்கியது தான் கடைசியாகக் கண்ணில் விழுந்தது. தூரத்தில் இடி ஓசையும் பூனையின் கத்தலும் கடைசியாகக் காதில் விழுந்தது. பிறகு முழுமையாகத் தூங்கி விட்டேன்.
காலை நான் கண்விழித்த போது, ஃபெலுடா சன்னலைத்திறந்துகொண்டிருந்தார்.
“நேற்றிரவு மழை பெய்தது உனக்குத் தெரியுமா?”
தெரியவில்லை. ஆனால் வெளியில் மேகங்கள் மறைந்து வானம் மந்தகாசமாக இருந்தது. இலைகளின் பச்சை பளிச்சென்று இருந்தது.
அரைமணி நேரம் கழித்து இரண்டு கோப்பை தேநீருடன்கோகுல் வந்தார். பகலில் கோகுலைப் பார்த்தவுடன்ஆச்சர்யமாக இருந்தது. முகத்தில் முதுமையும் கவலைகளின் ரேகையும் அதிகமாகவும் ஆழமாகவும் காணப்பட்டது.
“கலிகின்கர் ஐயா எழுந்து விட்டாரா?” எனக் கேட்டார் ஃபெலுடா. பதில் சொல்லாமல் வெறுமையாகப் பார்த்தார். ஒருவேளை கோகுலுக்கு செவித்திறன் குறைபாடு இருக்கக்கூடும். மீண்டும் சத்தமாக ஃபெலுடா கேட்டபொழுது, தலையசைத்துவிட்டு உடனடியாகச் சென்று விட்டார். சுமார் ஏழரை மணிக்கு கலிகின்கர் அறைக்குச் சென்ற பொழுது, கடைசியாக அவரைப் பார்த்த அதே நிலையில் படுத்திருந்தார். அவரது பெரும்பாலான உடல் போர்வையால்போர்த்தப்பட்டிருந்தது. அவரது படுக்கைக்கு அருகிலிருந்தஜன்னல் மூடி இருந்தது. சூரிய ஒளி உடல் மேல் தவிர்க்கும் பொருட்டாக இருக்கலாம். கதவைத் திறக்கும் போது மட்டுமே அந்த அறைக்குள் வெளிச்சம் வரும். அவரது படுக்கைக்கு மேலே சுவரில் ஒரு புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதில் இளமையாகக் கறுத்த மீசையுடனும் தாடியுடனும் இருந்தார் கலிகின்கர். பல வருடங்களுக்கு முன்பு எடுத்ததாக இருக்கும்.
சிரிப்புடன் வரவேற்றவாறு, “உங்களால் நிச்சயம் கண்டுபிடித்துவிட முடியும் என்று தெரியும். அதனால் காபோரியாவ் புத்தகத் தொகுப்பை ராஜனைவைத்து எடுத்து வைத்துவிட்டேன்” என்றார் கலிகின்கர்.
“அதற்கு முன் நான் கண்டுபிடித்தது சரியா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும். 340910. சரியா?”
உற்சாகமும் அபிமானமும் ஒரு சேர “சபாஷ்” என்றார். “உரிமையுடன் அந்தப் புத்தகங்களை எடுத்துப் பையில்வைத்துக் கொள்ளுங்கள். கிளம்பும் முன் அந்தப்பெட்டகத்தின்மேல் உள்ள தடயங்களை ஒருமுறை பார்த்து விடுங்கள். நான் பார்த்த வரையில் கவலையளிக்கும் வகையில் எதுவும் இல்லை”.
“அது போதும். உங்களுக்குக் கவலையளிக்கும்படியாக எதுவும் இல்லை என்றால் அவ்வளவு தான்.”
ஃபெலுடா மீண்டுமொரு முறை நன்றி கூறிவிட்டு உலகின்முதல் துப்பறிவு எழுத்தாளரின் தொகுப்பைப்பெற்றுக்கொண்டார்.
“தேநீர் அருந்திவிட்டீர்களா?”.
“ஆமாம் ஐயா”.
“நல்லது. விஸ்வநாத் பத்து மணிக்குக் கொல்கத்தா சென்றாகவேண்டும் என முன்னதாகவே கிளம்பிவிட்டான். ராஜன் கடைவீதிக்குச் சென்றுவிட்டார். கோகுல் உங்களுடைய உடைமைகளை எடுத்து வைக்க உதவுவார். ஓட்டுநரை வண்டி எடுத்துவரக் கூறி இருக்கிறேன். கிளம்பும் முன் வெளியில் எங்கும் சென்று வர விரும்புகிறீர்களா?”.
“பத்தரை மணி வரை காத்திருக்க அவசியமில்லாததால், முன்னதாகக் கிளம்பலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். இப்பொழுதே கிளம்பினால் கொல்கத்தாதிரும்பும் 372 எண் ரயிலைப் பிடித்து விடக்கூடும்”.
“நல்லது. பெருநகரவாசிகள் யாரையும் அவசியமின்றி நான் இங்கே இருக்கச் செய்ய விரும்பவில்லை. என் அழைப்பைஏற்று நீங்கள் வந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி”.
உடனடியாக ரயில் நிலையத்திற்குக் கிளம்பி விட்டோம். இரவு பெய்த மழையால், வழி நெடுகிலும் இருந்த நெல்வயல்கள்காலை வெயிலில் மினுமினுத்த காட்சியை ரசித்தவாறுவந்தேன். அப்பொழுது ஃபெலுடா, “ரயில் நிலையம் செல்ல வேறு வழி உள்ளதா?” என ஓட்டுநரிடம் கேட்டார்.
“இல்லை. இது மட்டும் தான்”, என்றார் ஓட்டுநர் மோனிலால்.
ஃபெலுடா திடீரென இறுக்கமாகக் காணப்பட்டார். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் கண்ணில் பட்டதா எனக்கேட்க எண்ணி, கேட்காமல் அமைதியாக இருந்து விட்டேன்.
சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ரயில் நிலையத்தைஅடையத் தாமதமானது. ஃபெலுடா பெட்டிகளைஎடுத்துக்கொண்டு ஓட்டுநரிடம் விடைபெற்றார். அவர் கிளம்பியதும் பயணச்சீட்டு வாங்காமல் நிலைய அதிகாரி அறைக்குச் சென்று பெட்டியை வைத்துவிட்டு, வெளியிலிருந்தஒரு சைக்கிள் ரிக்ஷாவை அணுகினார்.
“இங்குக் காவல் நிலையம் எங்குள்ளது எனத் தெரியுமா?”
“தெரியும்”.
“எங்களை உடனடியாக அங்கே கூட்டிப் போக வேண்டும். அவசரம்”.
ரிக்ஷாவில் ஏறியவுடன், ரிக்ஷாக்காரர் ஜனசந்தடி மிக்க வழியில், பலமாகச் சத்தம் எழுப்பியபடி, இரண்டொருமோதலைத் தவிர்த்தவாறு, முடிந்தளவு வேகமாக வண்டியைச்செலுத்தலானார். ஐந்து நிமிடத்தில் காவல் நிலையத்தைஅடைந்தோம். அங்குப் பொறுப்பில் துணை ஆய்வாளர் சர்க்கார் இருந்தார். அவர் ஃபெலுடாவைப் பற்றி அறிந்திருந்தார். “உங்களைப் பற்றி நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா. நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்?”
“குர்குட்டியாவைச் சேர்ந்த கலிகின்கர் மஜூம்தார் குறித்துக் கூற முடியுமா?”
“எனக்குத் தெரிந்தவரை மதிப்புமிக்கவர். தன்னை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாதவர். அவரைப் பற்றி மோசமாக எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஏன் கேட்கிறீர்கள்?”
“அவரது மகன் விஸ்வநாத் பற்றி? அவர் இங்கு வசிக்கிறாரா?”
“இல்லை. அவர் கொல்கத்தாவில் வசிக்கிறார். என்னாயிற்றுஐயா?”.
“உங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் வர இயலுமா? ஒரு பெரிய குற்றம் நடந்துள்ளது”.
நிமிட நேரம் தாமதிக்காமல் உடனடியாக எங்களை அந்தச்சேறும் சகதியுமான சாலையில், அவரது ஜீப்பில் குர்குட்டியாஅழைத்துச் சென்றார் சர்க்கார். ஃபெலுடாவின் முகத்தில் ஒரு உள்ளார்ந்த உற்சாகம் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒரே ஒருமுறை எனக்கு மட்டும் கேட்குமாறு பேசினார்- “கீழ்வாதம், மார்பின் மீதிருந்த அடையாளம், தாமதமான இரவு உணவு, ராஜனின் கரகரப்பான குரல், வாசனை உருண்டை, ஒவ்வொன்றும் கச்சிதமாகப்பொருந்துகிறது டாப்ஷே. சமயங்களில் என்னை விடப்புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்பதை நான் மறந்து விடுகிறேன்”.
அங்குச் சென்றவுடன் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த விஸ்வநாத்தினுடைய கருப்பு அம்பாசிடரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். ஃபெலுடா, “அதன் சக்கரங்களைப்பார்; எங்கும் சேறு இல்லை. இது இப்பொழுது தான் வெளியில் எடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
காரின் அருகில் நின்று கொண்டிருந்தவரது முகம் ஜீப்பைக்கண்டதும் பயத்தில் வெளிறியது. அனேகமாக அந்தக் காரின் ஓட்டுநராக இருக்கக்கூடும்.
“இந்த காரின் ஓட்டுநரா?”
“ஆமாம் ஐயா”.
“விஸ்வநாத் வீட்டில் இருக்கிறாரா?”.
தயங்கியபடி நின்ற ஓட்டுநரைக் கடந்து உள்ளே சென்ற ஃபெலுடாவை துணை ஆய்வாளர், நான் மற்றும் காவலர்கள் அடுத்தடுத்துப் பின் தொடர்ந்தோம். படியேறி, நடைப்பகுதியைக் கடந்து கலிகின்கர் அறையை அடைந்தோம். அந்த அறையின் அனைத்துப் பொருட்களும் இருந்தவாறு இருந்தன. படுக்கையும், அருகிலிருந்த பெட்டகமும் காலியாக இருந்தன. அது திறந்து கிடந்த நிலையில், முழுவதும் திருடப்பட்டிருந்தது.
கோகுல் வந்து அறைக்குவெளியில் நின்றார். கடுமையான நடுக்கத்துடன் எந்நேரமும் மயங்கிவிடலாம் என்ற நிலையில் கண்ணீர் ததும்ப நின்றிருந்தார். ஃபெலுடா அவர் தோள்களைப் பிடித்து, “விஸ்வநாத் எங்கே?” என்றார்.
“அவர் பின்வாசல் வழியாக ஓடிவிட்டார்”.
“சர்க்கார்”.
மறுமொழியின்றி காவலருடன் விரைந்தார் சர்க்கார்.
கோகுலைப் பிடித்து மெதுவாக அசைத்தபடி, “கவனமாகக்கேள். நான் கேட்பதற்கு ஒரு பொய் சொன்னாலும் சிறைக்குச்செல்ல வேண்டியிருக்கும். புரிந்ததா? உன் முதலாளி எங்கே?” என்று கேட்டார் ஃபெலுடா.
கண்கள் கீழே விழுந்துவிடுமோ எனத் தோன்றுமளவு இமைகள் விரிய, பயத்தில் கோகுல் எங்களைப் பார்த்தார்.
“அவர் கொலை செய்யப்பட்டு விட்டார்” எனத் திணறியபடிசொன்னார்.
“யார் கொன்றது?”
“சின்ன முதலாளி”.
“எப்பொழுது?”.
“அவர் வந்த இரவே. அவருக்கும் அவர் தந்தைக்கும் நடந்த வாக்குவாதத்தின் போது பெட்டகத்தின் ரகசிய எண்ணைக்கேட்டார். முதலாளியோ சொல்ல முடியாது. வேண்டுமானால்என் கிளியிடம் கேட்டுக் கொள் என்றார். பிறகு சின்ன முதலாளியும் அவர் ஓட்டுநரும் சேர்ந்து….” தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறினார். மிகுந்த சிரமத்திற்கிடையில் தடுமாறி, “அவரது சடலத்தை இருவரும் வீட்டிற்குப் பின்னால் உள்ள ஏரியில் கழுத்தில் கல்லைக் கட்டிப் போட்டனர். நான் இது குறித்து வெளியில் மூச்சை விட்டால் என்னையும் கொன்று விடுவதாக மிரட்டினார்”.
அவரை அமர வைத்தபடி, “ராஜன் என்ற பெயரில் ஒருவரும் இல்லை என்ற என் யூகம் சரியா?”.
“ஆமாம். முன்பு அந்தப் பெயரில் ஒரு மேலாளர் இருந்தார். அவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்”.
ஃபெலுடாவும் நானும் அறையிலிருந்து வெளியேறி படியில் பாய்ந்திறங்கி, இடது புறமிருந்த கதவின் வழியாக வீட்டின் பின்புறத்தை அடைந்தோம். சர்க்காரின் குரல் கேட்டது.
“இங்கிருந்து தப்ப முடியாது விஸ்வநாத். என் கையில் துப்பாக்கி உள்ளது”.
அதைத் தொடர்ந்து நீரில் குதிக்கும் சத்தமும் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்டது.
அடர்ந்த புதர்களைத் தொடர்ந்து சருகுகளை மிதித்தபடிதொடர்ந்து ஓடினோம். அங்கே ஒரு புளியமரத்தின் கீழ் கையில் துப்பாக்கியுடன் சர்க்கார் நின்றிருந்தார். அதன் பின்னால் நேற்றிரவு எங்கள் அறையிலிருந்து தென்பட்ட ஏரி இருந்தது. அதன் மேற்பரப்பு முழுக்க பாசியாலும் களையாலும்மூடப்பட்டிருந்தது.
“நான் சுடும் முன்பே குதித்து விட்டார். ஆனால் அவரால் நீந்த முடியாது” என்றவாறே, “கிரிஷ் அவரைப் பிடித்து வெளியில் இழுக்க முடியுமா என்று பாருங்கள்” எனக் காவலரிடம்கூறினார் சர்க்கார்.
கொஞ்ச நேரத்தில் காவலரிடம் அகப்பட்ட விஸ்வநாத் அவரது தந்தையின் கிளியைப் போலக் கூண்டுக்குள்அடைக்கப்பட்டார். பெட்டகத்திலிருந்து திருடப்பட்ட பணமும் நகைகளும் மீட்கப்பட்டன. அவரது தொழில் சிறப்பாக நடந்துவந்தாலும், அதிகப்படியான சூதாட்டத்தால் கடன் கழுத்தை நெரித்திருந்தது தெரியவந்தது.
ஃபெலுடா தான் உண்மையைக் கண்டுபிடித்தது எப்படி என்பது பற்றி விளக்கினார்.
“கலிகின்கரைப் பார்த்துவிட்டு வந்த இருபது நிமிடம் கழித்து ராஜன் நம்மைப் பார்க்க வந்தார். அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து விஸ்வநாத் வந்தார். அதே போல இரவு உணவு முடிந்து சிறிது நேரம் கழித்து ராஜன் வந்தார். ஒருமுறை கூட தந்தையையோ மகனையோ மேலாளரையோ ஒருமித்துப்பார்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து மூவரும் வேறு வேறுநபரா அல்ல ஒரே நபரின் மூன்று வேடமா எனச் சந்தேகம் எழுந்தது. அப்பொழுது தான் அந்தப் புத்தக அலமாரியில்நடிப்பு மற்றும் நாடகம் சார்ந்த நூல்களைப் பார்த்த நினைவு வந்தது. ஒருவேளை அது விஸ்வநாத்தினுடைய நூல்களாகஇருக்குமோ? ஒப்பனையிலும் நடிப்பிலும் அவருக்குத்திறமையும் ஆர்வமும் இருக்குமோ? அப்படியானால் ஒரு இருண்ட வீட்டில் இரவு நேரத்தில், போலியான மீசையும்தாடியும் வைத்து, குரலை மாற்றி இரண்டு புதிய நபர்களை ஏமாற்றுவதென்பது அவ்வளவு கடினமில்லை. அதே நேரத்தில் ஒப்பனையில், தனக்குள்ள அனுபவக் குறைவின்காரணமாகவும், தன் கைகளுக்கு எழுபத்திமூன்று வயது கைகளுக்குரிய ஒப்பனையிடுவதில் உள்ள சிரமத்தைக்கருதியும், கைகளைப் போர்வையில் மறைத்து வைத்திருக்கக்கூடும். காலையில் விஸ்வநாத் எங்களுக்கு முன்பே கிளம்பிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் சாலையில் வாகனம் சென்ற அடையாளம் எதுவும் இல்லாத போதே என் சந்தேகம் ஊர்ஜிதமானது”.
“உண்மையில் உங்களுக்குக் கடிதம் எழுதி இங்கே வருமாறு அழைத்தது யார்?” எனக் கேட்டேன்.
“அது நிச்சயமாக கலிகின்கார் சுயமாக எழுதியது என்பது உறுதி. அது விஸ்வநாத்திற்கும் தெரிந்திருக்கும். அந்த எண்களைக் கண்டுபிடிக்க என்னைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் அவர் என் வருகையைத் தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை”.
தாமதமாகி விட்டதால் பத்தரைக்கு முன்பான ரயிலுக்குச்செல்ல முடியவில்லை. கிளம்பும் முன்பு, தன் பையிலிருந்தபுத்தகங்களை எடுத்து என் கையில் கொடுத்தபடி, “ டாப்ஷே! ஒரு கொலைகாரனிடம் சன்மானம் பெற மனம் ஒப்பவில்லை. அதனால் இவற்றை அங்கேயே வைத்து விடு” என்றார்.
அந்தப் புத்தகங்களை அலமாரியிலிருந்த இடைவெளிகளில்வைத்துவிட்டு வெளியில் வந்தபோது, வராண்டாவில் அந்தக்கிளியின் கூண்டு மாட்டப்பட்டிருந்தது.
“கதவை மூடு…(shut the door) ” என்றபடியே, என்னைப்பார்த்தது. தொடர்ந்து,
“கதவை மூடு ஏய் தடித்த பெரிய கோழியே (shut the door O big fat hen)” என்றது.
-சத்யஜித் ரே
தமிழில் – கோட்டீஸ்வரன்