நான் பார்த்த கொலை வழக்குகளிலேயே இது வினோதமானது. அதனைப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தியில் ‘பெக்ஹாம் கொலை’ என்று குறிப்பிட்டன. ஆனால் கொலை என்னவோ நார்த்வுட் தெருவில் நடந்தது. அங்குதான் அந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அதனால் அதை பெக்ஹாம் என்று சொல்லமுடியாது. இது சூழ்நிலை ஆதாரங்கள் உடைய வழக்கு இல்லை. அப்படிப்பட்ட வழக்குகளில்தான் நடுவர்களின் பதற்றத்தை நீங்கள் உணர முடியும். ஏனென்றால் மௌனத்தின் மேற்கூரைகள் நீதிமன்றத்தை ஊமையாக்கி விடுவதுபோலத் தவறுகள் நடந்திருக்கின்றன. இல்லை; கொலையாளி சடலத்துடன்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். அரசாங்க வழக்கறிஞர் தனது வழக்கை முன்வைத்தபோது அங்கே இருந்த யாரும் குற்றவாளிக் கூண்டில் நின்றவனுக்கு வாய்ப்பிருப்பதாகக் கருதவில்லை.
அவனுக்குப் பிதுங்கிய, இரத்தச் சிகப்பான கண்கள்; தடியான முரட்டு ஆள். அவனுடைய தசைகளெல்லாம் அவனது தொடைகளில் இருந்ததுபோலக் காணப்பட்டான். ஆம். பார்ப்பதற்கே அசிங்கமாக இருந்தான். நீங்கள் ஒருமுறை பார்த்தால் அவனை மறக்க முடியாது. இதுதான் முக்கியமான குறிப்பு. ஏனென்றால் அவனைப் பார்த்தவர்கள் நான்கு சாட்சிகள். அவர்கள் அவன் முகத்தை மறக்கவில்லை. அரசுத்தரப்பு விசாரணையின் போது, அவர்கள் நால்வருமே அவன் நார்த்வுட் தெருவிலிருந்த அந்த சிறு சிகப்பு வீட்டிலிருந்து வேகமாகப் போனதைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.
அப்போது அதிகாலை இரண்டு மணி. நார்த்வுட் தெரு 15-ஆம் எண் வீட்டிலிருந்த திருமதி சால்மனுக்குத் தூக்கம் வரவில்லை. கதவு மூடும் கிளிக் சப்தம் கேட்டது. தனது வெளிக் கதவு சப்தம்தான் என்று நினைத்தார். ஆதலால் சன்னலுக்குச் சென்று வெளியில் பார்த்தார். திருமதி பார்க்கரின் வீட்டுப் படிக்கட்டில் ஆடம்ஸ் (அதுதான் அவன் பெயர்) நிற்பதைப் பார்த்தார். அவன் அப்போதுதான் வெளியில் வந்திருந்தான். கைகளில் கையுறைகள் அணிந்திருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. அவன் அதை முன் கதவினருகிலிருந்த லாரல் புதர்களில் போட்டதைப் பார்த்தார். அங்கிருந்து நகர்வதற்கு முன் மேலே அண்ணாந்து – திருமதி சால்மனின் சன்னலைப் பார்த்தான்.
தன்னை ஒருவர் தெரு விளக்கு வெளிச்சத்தில் கவனிக்கிறார் என்ற உள்ளுணர்வு அவனுக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. அவனது கண்களில் பயங்கரமான மிருகத்தனமான அச்சம், சாட்டையைத் தூக்கும்போது விலங்கிடம் தோன்றுவதுபோல.
நான் பின்னர் திருமதி சால்மனிடம் பேசினேன். அவரும் ஆச்சரியமான அந்தத் தீர்ப்பிற்குப் பிறகு பயத்திலிருந்தார். எல்லா சாட்சிகளுமே அப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஹென்றி மக்டுகல் பென்ஃப்லீட்டிலிருந்து நேரம் கழித்து வீட்டிற்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ஆடம்சின் மேல் நார்த்வுட் தெருவின் முனையில் மோதவிருந்தார். ஆடம்ஸ் சாலை மத்தியில் ஏதோ ஒரு பிரமிப்பு நிலையில் நடந்து வந்து கொண்டிருந்தான். திருமதி பார்க்கர் வீட்டிற்கு அடுத்த வீட்டில் 12-ஆம் எண் வீட்டில் திரு. வீலர் என்ற முதியவர் இருந்தார். அவரும் ஏதோ சப்தம் கேட்டு – நாற்காலி கீழே விழுவதுபோல –விழித்திருக்கிறார். வீட்டுச் சுவர்கள் காகிதம்போல் மெல்லியதாக இருந்ததால் சப்தம் நன்றாகக் கேட்கும். எழுந்து சன்னல் வழியாகத் திருமதி சால்மனைப் போலவே இவரும் பார்த்தார். அப்போது ஆடம்ஸின் முதுகுப்புறம் தெரிந்தது. ஆனால் அவன் திரும்பியபோது அந்தப் பிதுங்கிய விழிகள் தெரிந்தன. லாரல் தெருவில் அவனை இன்னொரு சாட்சி பார்த்திருக்கிறார் – அவனுடைய நல்ல நேரமெல்லாம் முடிந்து விட்டது போல. பகல் நேரத்தில் இந்தக் குற்றச்செயலைச் செய்திருந்தால் கூட இவ்வளவு உறுதி இருக்காது, அவனைக் குற்றவாளி என்று தீர்ப்பிட.
“எதிர்த்தரப்பு தவறாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது என்று வாதிடப் போகிறது என்று நினைக்கிறேன். ஆடம்ஸின் மனைவி பிப்ரவரி 14 அன்று அதிகாலை இரண்டு மணிக்கு ஆடம்ஸ் தன்னோடு இருந்ததாகச் சொல்லப்போகிறாள். ஆனால் அரசுத்தரப்புச் சாட்சியங்களைக் கேட்டபிறகு, குற்றம் சாட்டப்பட்டவனின் அங்க அடையாளங்களைக் கவனமாக ஆராய்ந்த பிறகு நீங்கள் அடையாளம் காணப்பட்டதில் தவறு இருந்தது என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்,” என்றார் வழக்கறிஞர்.
எல்லாம் முடிந்துவிட்டது, தூக்குதான் பாக்கி என்று நீங்கள் சொல்லியிருப்பீர்கள்.
உடலைக் கண்டுபிடித்த காவலர், அதனை உடற்கூறாய்வு செய்த அறுவைசிகிச்சை மருத்துவர் ஆகியோரின் முறைப்படியான சாட்சியங்களுக்குப் பிறகு திருமதி சால்மன் அழைக்கப்பட்டார். அவருக்கு ஸ்காட்லாந்துக்காரர்களின் உச்சரிப்பு; நேர்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகள் அவர் முகத்தில் தெரிந்தன. அவர் மிகப் பொருத்தமான சாட்சி. அரசுத்தரப்பு வழக்கறிஞர் மென்மையாகக் கதையைக் கொண்டுவந்தார். திருமதி சால்மன் உறுதியாகப் பேசினார். அவர் குரலில் வன்மம் இல்லை, அவருடைய வார்த்தைகளுக்காகச் சிகப்பு உடையில் மத்தியக் குற்றவியல் நீதிமன்றத்தில் காத்திருக்கும் நீதிபதி முன்னிலையில் நிற்பது, செய்தியாளர்கள் அவற்றைப் பற்றி எழுதுவது ஆகியவை எல்லாம் அவருக்கு முக்கியமாகப்படவில்லை. ஆம் என்று சொல்லி விட்டு, தான் காவல் நிலையத்திற்கு தொலைப்பேசியில் தகவல் கொடுக்கக் கீழே போய்விட்டதாகச் சொன்னார்.
“அந்த ஆளை இங்கே நீதிமன்றத்தில் பார்க்கிறீர்களா?” அவர் குற்றவாளிக் கூண்டில் நின்ற அந்தப் பெரிய உருவத்தை நேரடியாகப் பார்த்தார். அவனும் அவனுடைய கழுகுப் பார்வையில் அவரை முறைத்தான்.
“ஆம், அங்கே இருக்கிறார்,” என்றார்.
“உறுதியாகச் சொல்கிறீர்களா?”
அவர் எளிமையாக, “நான் தவறு செய்திருக்கமுடியாது, சர்.”
அவ்வளவு எளிதாக முடிந்துவிட்டது.
எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்ய எழுந்தார். என்னைப்போல நீங்களும் பல கொலைவழக்குகளைப் பற்றிப் பத்திரிகைக்கு எழுதியிருந்தால் அவர் என்ன கேட்கப்போகிறார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் நினைத்தது சரி, ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் வரையில்தான்.
“திருமதி சால்மன். உங்கள் சாட்சியத்தில் ஒரு மனிதனுடைய உயிர் இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.”
“எனக்கு நினைவிலிருக்கிறது, சர்.”
“உங்களுக்குக் கண்பார்வை நன்றாக இருக்கிறதா?”
“நான் கண்ணாடி போடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை, சர்.”
“உங்களுடைய வயது ஐம்பத்து ஐந்தா?”
“ஐம்பத்து ஆறு, சர்.”
“அதிகாலை இரண்டு மணி. உங்களது கண்பார்வை மிகவும் கூர்மையாக இருக்கவேண்டும், திருமதி சால்மன்?”
“இல்லை, சர். நிலா வெளிச்சம் இருந்தது. அந்த மனிதன் மேலே பார்த்தபோது தெரு விளக்கு வெளிச்சம் அவன் முகத்தின் மேல் விழுந்தது.”
“நீங்கள் பார்த்தது இந்தக் கைதிதான் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இல்லை அல்லவா?”
அவர் என்ன எதிர்பார்த்து இந்தக் கேள்வி கேட்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஏற்கனவே கிடைத்த விடைதான் இப்போதும் கிடைக்கும்.
“சந்தேகமே இல்லை, சர். அது மறக்கக் கூடிய முகம் இல்லை.”
வழக்கறிஞர் நீதிமன்றத்தைச் சுற்றிக் நோட்டமிட்டார். பிறகு அவர், “மீண்டும் நீதிமன்றத்தில் இருக்கிறவர்களைக் கூர்ந்து பார்க்கிறீர்களா, திருமதி சால்மன்? இல்லை, கைதியை இல்லை. திரு ஆடம்ஸ். எழுந்து நில்லுங்கள்,” என்றார். குற்றவாளிக் கூண்டில் நின்ற மனிதனைப் போலவே அதே உருவத்தில் நீதிமன்றத்தின் பின்பகுதியில் ஒருவன் இருந்தான். அதே தடித்த உருவம், தசைப் பிடிப்பான கால்கள், அதே பிதுங்கும் கண்கள். இவனும் அவனைப் போலவே, இறுக்கமான நீல சூட், கோடு போட்ட டை அணிந்திருந்தான். அவன் பெயரும் ஆடம்ஸ் போலும்.
“இப்போது கவனமாகச் சிந்தியுங்கள், திருமதி சால்மன். திருமதி பார்க்கரின் தோட்டத்தில் நீங்கள் பார்த்த, சுத்தியலைப் புதருக்குள் போட்ட மனிதர் கைதியா, அல்லது அவருடைய இரட்டைச் சகோதரரான இவரா என்று உறுதியாகச் சொல்லமுடியுமா?”
அவரால் எப்படிச் சொல்லமுடியும்? ஒரு வார்த்தையும் பேசாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். குற்றவாளிக் கூண்டில் கால் மேல் கால்போட்டு அந்தப் பெரிய மிருகம் உட்கார்ந்திருந்தது. அங்கே நீதிமன்றத்தின் பின்பகுதியில் அவன் நின்று கொண்டிருந்தான். இருவரும் திருமதி சால்மனை முறைத்துப் பார்த்தார்கள். அவர் தலையை அசைத்தார்.
பிறகு நாங்கள் பார்த்தது வழக்கின் முடிவு. அவர்கள் பார்த்தது கைதியைத்தான் என்று உறுதியாகச் சொல்ல ஒரு சாட்சியும் இல்லை. சகோதரன்? அவனுக்கும் கொலை நடந்த இடத்தில் தான் இல்லை என்பதற்கு அவனது மனைவி சாட்சி சொன்னாள்.
எனவே சாட்சியம் எதுவும் இல்லாததால் அவன் விடுதலை செய்யப்பட்டான். அவன் கொலை செய்தானா, அவன் சகோதரன் கொலை செய்தானா, அவனுக்குத் தண்டனை கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அன்றைய அசாதாரணமான நாள் அசாதாரணமாக முடிந்தது. நான் திருமதி சால்மன் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். இரட்டையர்களைப் பார்க்க நின்ற கூட்டத்தில் நாங்கள் மாட்டிக் கொண்டோம். கூட்டத்தை விரட்டக் காவலர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் போக்குவரத்தைச் சரி செய்ய முடியவில்லை. அவர்கள் இரட்டையரைப் பின்பக்க வழியாகக் கூட்டிப் போக முயன்றார்கள். ஆனால் இருவரில் ஒருவன் – யார் என்று யாருக்கும் தெரியவில்லை – ”நான் தான் விடுதலை ஆகிவிட்டேனே?” என்று சொல்லிக் கொண்டே முன்பக்க வழியாக ஆரவாரத்துடன் போனார்கள். அப்போதுதான் அது நடந்தது. நான் ஆறடி தள்ளித்தான் இருந்தேன். அதனால் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. கூட்டம் நகர்ந்தது. எப்படியோ இரட்டையர்களில் ஒருவன் சாலையில் தள்ளப்பட்டு ஒரு பேருந்தின் முன்னால் விழுந்துவிட்டான். முயல் கத்துவது போல ஒரு சத்தம். அவ்வளவுதான். அவன் தலை நசுங்கி இறந்துவிட்டான், திருமதி பார்க்கரைப் போல. தெய்வ தண்டனையா? எனக்குத் தெரியவில்லை. இன்னொரு ஆடம்ஸ் உடலுக்கு அருகிலிருந்து எழுந்து திருமதி சால்மனை நேராகப் பார்த்தான். அவன் அழுதுகொண்டிருந்தான். அவன் கொலைகாரனா, குற்றமற்றவனா என்று யாராலும் சொல்ல முடியாது. நீங்கள் திருமதி சால்மனாக இருந்தால் உங்களுக்கு இரவு தூக்கம் வருமா?
–கிரஹாம் கிரீன்
(கிரஹாம் கிரீன் (1904-1991) ஒரு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். தெ பவர் அண்ட் தெ குளோரி முதலான 25 நாவல்களும், பல நாடகங்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இருமுறை அவர் பெயர் நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அவற்றில் சில மர்ம நாவல்கள், சிறுகதைகள். அவருடைய நாவல்களில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன.)