புதைக்கப்பட்ட கதை   

டுமையான குளிர்காலத்தின் இரவு என்பதால் தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மார்ட்டின் தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்த சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். குளிருக்கு அணிந்திருக்கும் இரவு உடையுடன் அவனருகே வந்து தோள் தொட்டாள் அவனது மனைவி மேரி. மார்ட்டின் அவளது கண்களைப் பார்த்தான். நீண்ட நேரம் அழுததால் அவளது கண்கள் சோர்வுற்று ஒளியிழந்து காணப்பட்டன. அவளது கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு தன் அருகே அமரவைத்தான். அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். மஞ்சள் நிறத்திலிருந்த அவளது கன்னத்தில் கண்ணீர் நதியென ஓடி மறைந்திருந்தது. அவளது உதடுகள் சன்னமாக முணுமுணுத்தன.

“இது தவறு மார்ட்டின்” என்பதைத் திரும்பத் திரும்ப சொல்லியபடியே இருந்தன சிகப்புச்சாயமிடப்பட்ட அந்த இதழ்கள். அவளது வலதுகை விரல்களை தன் இடது கை விரல்களோடு கோர்த்துக் கொண்டவன் அவள் புறமாக சாய்ந்து அவளது முன்நெற்றியில் முத்தமிட்டான்.

“இதைத் தவிர வேறு வழியில்லை மேரி…காலம் கடந்துவிட்டது இனி தப்பிச் செல்ல வழியில்லை” எனச் சொல்லி முடித்தபோது பக்கத்து அறையிலிருந்து அவர்களது ஒரு வயது பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது சமையலறையிலிருந்து வெளிப்பட்ட இமெல்டா குழந்தையிருக்கும் அறைக்குள் ஓடிச்சென்று குழந்தையை தோளில் போட்டபடி அதன் அழுகையை நிறுத்தும் முயற்சியில் இருந்தாள். இமெல்டாவைக் கண்டவுடன் மேரி ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.  அதே சமயம் வரவேற்பறையின் மூலையிலிருந்த தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. சோபாவிலிருந்து விருட்டென்று எழுந்த மார்ட்டின் தொலைபேசியைக் காதில் வைத்து ஹலோ என்றான். மறுமுனையின் தகவலைப் பெற ஆரம்பித்ததும் அவனது முகம் இறுகத் தொடங்கியது. மேரிக்கு புரிந்து விட்டது. தொலைபேசியில் ‘நன்றி’ எனும் ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு மேரியை அழைத்துக்கொண்டு வீட்டின் அடித்தளத்திற்கு விரைந்தான்.

“ஏனிந்த பதற்றம் மார்ட்டின்?”  மேரியின் வார்த்தைகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டது தெரிந்தது.

“மேரி, ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல நாம் இன்று முதல் அடித்தளத்தில் ஒளிந்து கொள்ள வேண்டும். அந்தக் கரும்பலகையை வீட்டின் வரவேற்பறையில் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது”

அவனுடன் சேர்ந்து அந்த மிகப்பெரிய கரும்பலகையை தூக்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள்.  அப்போது குழந்தையை உறங்க வைத்துவிட்டு வரவேற்பறைக்கு வந்த இமெல்டா கரும்பலகையைப் பார்த்தபடியே உறைந்து நின்றாள். அதில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைச் சில நாட்களுக்கு முன்பு மார்ட்டின் அவளிடம் காண்பித்தபோது ஏற்பட்ட உடல் நடுக்கம் இப்போதும் அவளைப் பிடித்தது. அவள் நின்றிருந்த இடத்தில் அவளது பாதத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகள் திட்டுத்திட்டாகப் படிந்தது. மேரிக்கு இமெல்டாவின் கண்களைப் பார்க்க முடியாமல் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் தெரியுமாறு அந்தக் கரும்பலகையை வைத்துவிட்டு நிமிர்ந்தான் மார்ட்டின். நேராக இமெல்டாவிடம் வந்தவன்,

“இமெல்டா…இனி தாமதிக்க நேரமில்லை, இன்று மாலை நாங்கள் அடித்தளத்தில் இருக்கும் ரகசிய அறைகளில் ஒளிந்து கொள்வோம். எதிரிகள் இன்றிரவு நம் ஊருக்குள் வருவதாக செய்தி வந்திருக்கிறது. அவர்கள் நம் ஊரைவிட்டு வெளியேறும் வரை நீதான் இந்த வீட்டின் காவல் தெய்வம். பத்து நாட்களில் அவர்கள் வெளியேறிவிடுவார்கள். நாம் பேசியது உனக்கு நினைவிருக்கிறது அல்லவா?”

இமெல்டாவுக்கு அந்தக் கொடூரமான இரவு ஞாபகத்திற்கு வந்தது.

                                                —-—–0o0——–

மெல்டாவின் பூர்வீகம் பிலிப்பைன்ஸ் என்றபோதும் மார்டினின் வீட்டில் கடந்த ஏழு வருடங்களாக வேலை செய்து வந்தாள். சமைப்பதும், வீட்டைச் சுத்தம் செய்வதும் மட்டுமின்றி மார்ட்டினின் குழந்தையையும் கவனமாகப் பார்த்துக்கொண்டாள்.  தன் முப்பத்தி இரண்டாவது வயதில் அவள் மார்ட்டினின் வீட்டில் முதல் முதலாக நுழைந்த போது மார்ட்டினுக்கும் மேரிக்கும் திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது.

அன்று வீடு திரும்பிய மார்ட்டின் மிகுந்த பதற்றத்துடனிருந்தான். அவனது பதற்றத்தின் காரணம் தெரியாமல் நின்றனர் மேரியும் இமெல்டாவும். மேரியின் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு தன் படுக்கையறைக்குள் நுழைந்தவன் வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இடையிடையே மேரியின் குரலும் அழுகைச் சத்தமும் வெளியே கேட்டது. இமெல்டா ஒன்றும் புரியாதவளாய் வரவேற்பறையின் தரைவிரிப்பை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் வெளிறிய முகத்துடன் வெளியே வந்த மேரி இமெல்டாவைக் கண்டதும் கண்ணீர் பெருக அவளது கைகளைப் பற்றிக்கொண்டாள்.  ஏன் மேரி அழுகிறாள் என்பது புரியாமல் இமெல்டா தவித்தபோதுதான் மார்ட்டின் அவர்கள் இருவரையும் வரவேற்பறையிலிருக்கும் சோபாவில் உட்காருமாறு சைகை செய்தான். 

“இமெல்டா நீ எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்”  

என்ன இது, ஏன் மார்ட்டின் தன்னிடம் உதவி கேட்கிறான், அவனது வீட்டுப் பணியாள் நான், என்னால் என்ன உதவி செய்திட முடியும்? என இமெல்டாவுக்குள் எம்பிக்குதித்தன பல்வேறு கேள்விகள்.

“சொல்லுங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்?”  சற்று பயம் கலந்த குழப்பத்துடன் கேட்டாள்.

அவளிடம் தான் எதிர்பார்த்த உதவியைக் கேட்டு முடித்த போது அவள் உடல் பயத்தில் நடுங்கிக்கொண்டிருப்பதை மேரி கவனித்தாள். அவளது தோளில் தன் கைகளால் அணைத்து “பயப்படாதே இமெல்டா” என மென்மையாகச் சொன்னாள்.

“உங்கள் கேள்விக்கான பதில் இப்போது என்னிடமில்லை. எனக்கு யோசிப்பதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்”  சொல்லும்போதே அவளது குரல் உடைந்திருந்தது.

நீண்டதொரு பெருமூச்சை விட்டபடி சரியென்று தலையாட்டினான் மார்ட்டின்.

அதன் பிறகான இரு நாட்களும் உறக்கமில்லாமல் கரைந்தன. இமெல்டா தன் பத்து வயது மகள் ரோஸ்லின் உறங்குவதையே பார்த்தபடி இரவெல்லாம் விழித்திருந்தாள்.ரோஸ்லினைக் கொடுத்துவிட்டு தன்னை ஏமாற்றிச் சென்ற மைக்கேலின் முகம் அப்போது அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. மார்ட்டினின் வீட்டில் வேலை கிடைத்தபோது ரோஸ்லினுக்கு மூன்று வயது என்பதால் பிலிப்பைன்ஸில் வசிக்கும் தன் அம்மாவிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சேர்ந்தாள். போன வருடம் ஏற்பட்ட விபத்தொன்றில் அவளது அம்மா இறந்துவிட்டதால் ரோஸ்லினை தான் வேலை பார்க்கும் மார்ட்டின் வீட்டிற்கே அழைத்து வந்திருந்தாள். மார்ட்டினும் மேரியும் ரோஸ்லினிடம் அன்பாகவே இருந்தது அவளுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருந்தது. ரோஸ்லின் இந்தப் போர்க்காலத்தை கடந்து நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது மட்டுமே இமெல்டாவின் மனதெங்கும் நிறைந்திருந்தது.

மார்ட்டின் கேட்டிருந்த உதவியை செய்துவிடத் தீர்மானித்தபோது விடியத் தொடங்கியிருந்தது.

                                                            —-—–0o0——–

நினைவிலிருந்து மீண்டவள் அந்தக் கரும்பலகையின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் வாசித்தபடியே மார்ட்டினிடம் “நன்றாக நினைவிருக்கிறது” என்றாள். வீட்டின் அடித்தளத்தில் நான்கு அறைகள் இருந்தன. அதிலொன்றை ரோஸ்லினுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.பத்து வயது சிறுமியான ரோஸ்லினுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போனது. அங்கே இருந்த பொம்மைகளுடன் விளையாட ஆரம்பித்தாள். அடித்தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு செல்லும் ஏணிப்படி தரைத்தளத்திலிருக்கும் படுக்கையறையின் கீழே வரை சென்றது. அந்தப் படுக்கையை நகர்த்திவிட்டு அங்கே இருக்கும் தரைவிரிப்பை அகற்றினால் மட்டுமே அடித்தளத்திற்கு செல்லும் ஏணிப்படிக்கான கதவு தென்படுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.  மார்டின் தன் குழந்தையை கையில் ஏந்திகொண்டு முதலாவதாக அந்த ஏணிப்படி வழியே கீழே இறங்கினான். அவனைத் தொடர்ந்து மேரியும் பின் ரோஸ்லினும் இறங்கிய பின்னர் அந்தக் கதவை அடைத்து தரைவிரிப்பை அதன் மேல் விரித்து படுக்கையை தரைவிரிப்பின் மீது நகர்த்தி வைத்தாள் இமெல்டா.

வரவேற்பறையிலிருக்கும் சன்னல் வழியே பார்த்தபோது சற்று தொலைவில் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த நதி தென்பட்டது. அந்த தேசத்தின் உயிர்நாடியாக விளங்கிய நதி இனி ரத்தத்தால் நிறம்பப்போகிறதோ எனத் தோன்றியது. தெருவில் ஆள் நடமாட்டமில்லை. அப்போது ஆழ்ந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு தூரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. எதிரிகள் உள் நுழைந்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட இமெல்டா மண்டியிட்டு கண்கள் மூடி ஜெபிக்க முயற்சித்தாள்.

இடைவிடாத துப்பாக்கிச் சத்தமும் பெரும் ஓலமும் அவளது ஜெபத்தை கலைத்துப் போட்டன. தெருவெங்கும் கூச்சலும் அழுகையொலியும் கேட்க ஆரம்பித்தபோது இமெல்டாவின் பார்வை மூடியிருக்கும் வீட்டின் கதவையை பார்த்தபடி நிலைகுத்தி நின்றன. இன்னும் சிறிது நேரத்தில் எதிரிகள் இந்தக் கதவின் வழியே உள்ளே வரக்கூடும் என்கிற எண்ணம் தோன்றியதும் இதயம் பலமாக அடிக்கத் துவங்கியது. பயத்தில் செய்வதறியாது அமர்ந்திருந்தபோது வீட்டுக் கதவை எட்டித் திறந்தபடி உள்நுழைந்தான் ராணுவ வீரன் ஒருவன்.

கண்களில் வெறியுடன் இமெல்டாவை நோக்கி முன்னேறியவன் அவளருகே இருந்த கரும்பலகையைப் பார்த்தவுடன் சட்டென்று நின்றான். அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்க அவனால் முடியவில்லை. அந்தக் கரும்பலகை வாசகத்தை இரண்டு மூன்று முறை வாசித்தவன் சத்தமிட்டு கத்தியபடி பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். இமெல்டாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

—-—–0o0——–

றைக்குள் மேரியை இழுத்துச் சென்றதும் படுக்கையில் அவளை உட்காரச் சொல்லிவிட்டு தானும் அருகே உட்கார்ந்து கொண்டான் மார்ட்டின்.

“ஏனிப்படி பதற்றமாக இருக்கிறீர்கள்…என்ன விஷயம்?”  அவனது தோளைத் தொட்டுக் கேட்டாள் மேரி.

“மேரி இப்போது நான் சொல்வதை நீ மிக கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும். இன்னும் சில நாட்களில் நம் நகரத்தை முற்றுகையிடப் போகிறார்கள் எதிரிப் படையினர்.  இப்பொழுதே நாம் தப்பி வேறு இடத்திற்கு போக வேண்டும். ஆனால் அதுவும் முடியாது”

“ஏன் முடியாது?”

“மேரி நம்மிடம் இருக்கும் தங்கத்தை நீ மறந்துவிட்டாயா?”

அப்பொழுதுதான் மேரிக்கு வீட்டின் அடித்தளத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நூறு கிலோவுக்கும் அதிகமான தங்கத்தின் ஞாபகம் வந்தது.ஜெர்மன் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தான் மார்ட்டின். ஹிட்லரின் எண்ணத்திற்கு மறுபேச்சில்லை எனும் நிலை ஏற்பட்டபோது இனி படைத்தளபதியாக இருந்து பயனில்லை என்று முடிவுசெய்து ஜெர்மனியிலிருந்து தங்கக்கட்டிகளுடன் ஹாங்காங் வந்திறங்கினான். ஹாங்காங்கிலிருந்து சீன எல்லைக்குள் நுழைந்து தற்போது வசிக்கும் நகரத்தில் மாட்டுப்பண்ணை வைத்து வாழ்வை நகர்த்தி வந்தான்.

“தங்கத்தை விட நம் குழந்தையின் உயிர் முக்கியம் மார்ட்டின்”

“எனக்குத் தெரியும் மேரி, ஆனால் ஒன்றை நீ புரிந்துகொள்ள வேண்டும். தங்கம் நம்மிடம் இருக்கும் வரைதான் நம் உயிருக்கு உத்திரவாதம். இது போர்க்காலம். இந்நேரத்தில் நம்மிடம் தங்கம் இல்லையெனில் எப்போது வேண்டுமானாலும் நாம் கொல்லப்படலாம். புரிகிறதா மேரி”

“புரிகிறது மார்ட்டின், சரி உங்கள் திட்டம் என்ன?”

“சொல்கிறேன். நாம் வசிக்கும் இந்த வீட்டைக் கட்டும்பொழுதே அடித்தளம் இருக்கும் வகையில் கட்டினேன் ஞாபகமிருக்கிறதல்லவா? அங்கேதான் நாம் இனி தங்க வேண்டும். போரின் தீவிரம் குறைந்த பின்னர் நாம் வெளியே வரலாம்.அது வரை நமக்குத் தேவையான உணவும் உடைகளையும் இமெல்டாவின் உதவியுடன் அடித்தளத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்”

“சரி மார்ட்டின். எதிரிகள் நம் நகரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்போது நம் வீட்டை சூறையாடி தீவைத்து கொளுத்திவிட மாட்டார்களா?” அவளது குரலில் பதற்றம் தென்பட்டது.

“சரியான கேள்வி மேரி. நிச்சயம் இது நடக்கும். நம் நகரத்தின் ஒவ்வொரு வீட்டையும் சூறையாடி தரைமட்டம் ஆக்கிவிடுவார்கள் நம் வீட்டைத் தவிர, அதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்” சொல்லிவிட்டு நிறுத்தினான் மார்ட்டின்.

என்ன திட்டம் என்பதுபோல மேரி அவனது சொற்களுக்காக காத்திருந்தாள்.

“நான் ஜெர்மன் படைத்தளபதியாக இருந்தபோது இப்பொழுது நம் நகரை ஆக்கிரமிக்க வரும் படைத்தளபதியாக இருக்கும் டோஷியோவை சந்தித்திருக்கிறேன். அவனிடம் இன்று ஓர் ஒப்பந்தம் செய்திருக்கிறேன். அவனுக்கும் அவனது படைக்கும் மட்டுமே தெரியும் ஒரு குறிச்சொல்லை கரும்பலகை ஒன்றில் எழுதி நம் வீட்டின் வரவேற்பறையில் வைக்கச் சொல்லியிருக்கிறான். நம் வீட்டிற்குள் நுழைகின்ற படையினர் அந்தக் குறிச்சொல்லை பார்த்துவிட்டால் அதன் பின் நம் வீட்டை ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதற்கு விலையாக ஐம்பது கிலோ தங்கத்தை அவனுக்கு நான் கொடுப்பதாக சொல்லியிருக்கிறேன் மேரி”

“ஒரு வேளை குறிச்சொல்லைக் கண்டபின்பும் நம்மை யாரும் தாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் மார்ட்டின்?”

“அதற்குதான் நமக்கு இமெல்டாவின் உதவி தேவைப்படுகிறது மேரி. நீ, நான் நம் மகள் மற்றும் இமெல்டாவின் மகள் ரோஸ்லின் அனைவரும் எதிரிப்படை நம் நகருக்குள் நுழையும் நாளில் அடித்தளத்திற்குள் சென்றுவிட வேண்டும். இமெல்டாவை கரும்பலகையுடன் வரவேற்பறையில் இருக்கச் செய்ய வேண்டும். இதுவே என் திட்டம்” 

“மார்ட்டின், இது எப்படி நியாயமாகும்? இமெல்டாவையும் நம்முடன் அழைத்துக்கொள்வோம், கரும்பலகை மட்டும் நம் வரவேற்பறையில் இருந்தால் போதுமே?”

“அப்படி விட்டுவிட முடியாது மேரி, நம் வீட்டிற்குள் நுழையும் படையினர் ஒருவேளை கரும்பலகையை அலட்சியம் செய்துவிட்டு வீட்டை எரித்துவிட்டால் என்னாவது? மேலும், இமெல்டா இருந்தால் அவளை சாட்சியாக வைத்துக்கொண்டு குறிச்சொல்லை மீற மாட்டார்கள் அல்லவா?”

மேரிக்கு இதில் உடன்பாடில்லை என்பது அவளது கண்களிலிருந்து வழியும் கண்ணீரில் தெரிந்தது. இமெல்டாவின் உயிரைப் பயணயமாக மார்ட்டின் வைக்கிறான் என்பது தெரிந்தும் அவனை எதிர்த்துப் பேச முடியாமல் தவித்தாள். மார்ட்டின் முடிவெடுத்துவிட்டால் அதற்கு மறுபேச்சுக் கிடையாது என்பது அவனை அறிந்த நாள் முதலே மேரிக்குப் புரிந்திருந்தது.

அறையைவிட்டு வெளியே வந்து திட்டத்தை இமெல்டாவிடம் விவரித்தான் மார்ட்டின்.

—-—–0o0——–

ந்த ராணுவ வீரன் போன பின்பும் தன்னுடலின் நடுக்கம் குறையவில்லை என்பதை உணர்ந்தாள் இமெல்டா. சன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது அந்த நகரமே பற்றி எரிந்துகொண்டிருப்பது தெரிந்தது. தெருவெங்கும் குடல் சரிந்து ரத்த சகதியில் கிடந்தனர் மக்கள். இரண்டு ராணுவ வீரர்கள் கூர்வாளுடன் யார் அதிகமான மனிதர்களை வெட்டிச்சாய்ப்பது எனும் போட்டியுடன் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். கூச்சலும் கதறலும் அந்தத் தெருவெங்கும் ஒலித்தபடி இருந்தது. சன்னலை இறுக்கமாக மூடிவிட்டு சோபாவின் அருகிலிருக்கும் தரைவிரிப்பில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் இமெல்டா. பின்னிரவில் உறங்கத் துவங்கியவளின் கனவில் தலையற்ற உடல்கள் அங்குமிங்கும் ஓடியபடி இருந்தன.  அதன் பின் ஏழு நாட்கள் அவ்வீட்டினுள் வேறு எவரும் நுழையவில்லை.

எட்டாம் நாள் விடியலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீட்டிற்குள் வந்தார்கள். இருவரும் போதையில் இருப்பது அவர்களது குளறிய பேச்சில் தெரிந்தது. இமெல்டாவைக் கண்டவுடன் அவர்களது கண்களிலிருந்து குரூரமானதொரு பார்வை வழியத் தொடங்கியது.

“நேற்றிரவு உன் கணக்கு என்ன மட்சுயி?”  முதலில் வீட்டிற்குள் நுழைந்தவன் பின் தொடர்ந்தவனைப் பார்த்துக் கேட்டான்.

“கொன்றது முப்பத்தி ஏழு, வன்புணர்ந்தது எட்டு அல்லது ஒன்பது ஹிஷாவோ” சொல்லிவிட்டு தள்ளாட்டத்துடன் அவன் சிரித்தபோது அவனது வாயிலிருந்து கிளம்பிய துர்நாற்றம் அறையெங்கும் படர்ந்தது.

“இன்னும் நீ ஐம்பதைத் தொடவில்லையா…வெளியில் சொல்லாதே வெட்கம். இதோ இந்தப் பெண்ணைப் பார் சீனப்பெண்கள் போல் மெலிந்த தேகம் இவளுக்கு இல்லை. இவள் உனக்குத்தான் எடுத்துக்கொள். இவள் உயிரை என் வாள் எடுக்கும்” என்றபடி தன் இடையில் சொருகி வைத்திருந்த வாளை உருவினான். ரத்தக்கறை படிந்து சிகப்பு நிறத்திலிருந்த வாளை மருட்சியுடன் பார்த்தபடி நின்றிருந்த இமெல்டா கரும்பலகையை நோக்கி கையை நீட்டினாள்.

அவர்கள் இருவரும் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த குறிச்சொல்லைக் கண்டவுடன் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர்.

“தளபதியின் சொல்லை மறுக்க இயலாது. வா அடுத்த வீட்டிற்கு சொல்வோம்” என்றான் மட்சுயி.

“அதுவும் சரிதான். அவர் சொல்படி இந்த வீட்டின் உடமைகளை நாம் விட்டுவிடுவோம். ஆனால் இந்தப் பெண் இந்த வீட்டின் உரிமைக்காரி போலத் தெரியவில்லை. இவளை இழுத்துக்கொண்டு நட” என்று ஹிஷாவோ சொன்னதைக் கேட்டதும் அவர்களது மொழி புரியாவிட்டாலும் தன்னை நோக்கி வருகின்ற ராணுவவீரனின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட இமெல்டா வேகமாக வீட்டை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தாள். தெருவில் அவள் இறங்கியபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் நிற்பதைக் கண்டு விக்கித்து நின்றாள். சூரியன் கிழக்கிலிருந்து மெல்ல மேல் எழுந்தபோது இமல்டாவின் உடலைக் குதறி குன்ஹுவாய் ஆற்றிற்குள் வீசி எறிந்துவிட்டு அதனருகே நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர் ராணுவ வீரர்கள்.

ஆறு சிகப்பு நிறத்தில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

—-—–0o0——–

ன்று நள்ளிரவில் அடித்தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு ஏறி வந்த மார்ட்டின் இமெல்டாவைக் காணவில்லை என்பது தெரிந்தவுடன் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொண்டான். கீழே கிடந்த கரும்பலகையை எடுத்து மேசை மீது நிறுத்திவைத்தான்.

சன்னல் வழியே எட்டிப்பார்த்தவன் இன்னும் எதிரி படையினர் இருப்பதைத் தெரிந்துகொண்டு மீண்டும் அடித்தளத்திற்கு திரும்பினான். இன்னும் இரண்டு நாட்கள் சமாளித்தாக வேண்டும். அல்லது ஆளற்ற வீடு என்பதால் வீட்டைக் கொள்ளையடித்து தீயிட்டுக் கொளுத்திவிடுவார்களே என்று யோசித்தபடி அங்குமிங்கும் நடந்தவன் தன் சிறிய பொம்மையை அணைத்துக்கொண்டு படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த ரோஸ்லினைக் கண்டான்.

மெல்ல அவள் உறக்கம் கலைந்துவிடாமல் தூக்கிக்கொண்டு தரைத்தளத்திலிருக்கும் வரவேற்பறைக்கு வந்தான். சோபாவில் அவளை கிடத்திவிட்டு மீண்டும் அடித்தளத்திற்கு திரும்பி உறங்கிக்கொண்டிருக்கும் மேரியின் அருகில் படுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை ரோஸ்லின் விழித்தபோது நான்கு பூட்ஸ் கால்கள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தன.

கதைக்குறிப்பு:

டிசம்பர் 13, 1937ம் வருடம் சீனாவின் நான்ஜிங் நகருக்குள் நுழைந்த ஜப்பானிய படை அந்த நகரில் வசித்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை கொன்று குவித்தனர். எண்பதாயிரம் பெண்கள் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டார்கள். போரின் அறத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு அவர்கள் ஆடிய வெறியாட்டம் சரித்திரத்தின் கறுப்பு பக்கங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. அதன் பின்னணியில் புனையப்பட்ட கதை இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.