அலவர்த்தனம்

மாவாசை வானம் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தபோது, வரிசையாக இடம் பிடித்திருந்த சைவ அசைவ சாப்பாட்டுக் கடைகள் கலைகட்டிக் கொண்டிருந்தன. சைக்கிள் பின் கேரியரில் நின்றிருந்த கேனிலிருந்து நெகிழி டம்ளர்களை ஆவிப்பறக்க நிரப்பிக் கொண்டிருந்தவர்  நீட்டும் கைகளின் சூடு தாங்கும் திடமறிந்து டம்ளர்களை நிதானித்துக் கைமாற்றி விட்டார். 

மொபைலைத் திறந்து மீண்டும் பேருந்து வருவதற்கான நேரத்தைச் சரிபார்த்த பொழுது,இரவு ஒன்பதரை மணி என்று கொட்டை எழுத்தில் காட்டியது. இதை அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே  செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை, யோசித்தேன். தெரியவில்லை. இதில் கடைசி நேரப் பரபரப்பைத் தடுக்கும் அறிவாளித்தனத்தோடு அவசரமாக ஆட்டோ பிடித்து இப்படி ஏழே முக்கால் மணிக்கே  வந்து இறங்கியிருக்கிறேன். நேரத்தை விழுங்க வழியா இல்லை, பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்போடு பேருந்து நிழற்கூடாரத்திற்குள் போய் அமர்ந்தேன்.

கைபேசியை ரொம்ப நேரமாக வெறித்துக் கொண்டிருந்ததில் கண்கள் சோர்ந்திருந்தன.பையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து கொரித்தபடியே பார்வையை  அலைய விடத் தொடங்கினேன்.

ஸ்லீவ்லெஸ் டாப்பும் போனி டெயிலுமாக கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் உரசிக் கொண்டு நின்றிருந்தவனுக்கு உயரத்தை தவிர வேறெதுவும் சரியாக வாய்த்திருக்கவில்லை. அவன் அவளது தோள்பையை கையில் பிடித்திருந்தான். அவள் முதுகில் கிடந்த பொதிப்பையின் இடது தோள் பட்டையை நோக்கி அவன் கைகள் நீள்வதும் குறுகுவதுமாக இருக்க, அவள் பிடிவாதமாக மறுத்து தலையாட்டிக் கொண்டிருந்தாள். எனது பேருந்திற்கான நேரம் நெருங்கத் துவங்கியிருந்தது.

 வலது கைமுட்டியில் இடிப்பட்ட அதிர்விற்கு திரும்பிப் பார்த்தேன். ‘சாரி தம்பி’ என்ற கண்கள் வயதின் சுருக்கத்தில் உட்புதைந்திருந்தன. ‘கையையும் காலையும் வச்சிட்டு உன்னால சும்மாவே இருக்க முடியாது. ‘ செல்லமாக கடிந்துக் கொண்டே  முதிர்ந்த அவரின் தோள்களை தாண்டி லேசாக எட்டி என்னை பார்த்தவள்   ‘பொறுத்துக் கொள்’ என்பதாக ஒரு புன்னகையை உதிர்த்தாள். அவளது புன்னகை அவளின் உதட்டோர சதைச் சுருக்கத்தை  இன்னும் தீர்க்கமிட்டுக் காட்டியது.

 “பரவாயில்லங்க” முதுகுப்பையை எடுத்து மாட்டிக்கொண்டு நிழற்கூடாரத்திலிருந்து வெளியில் வந்து நின்றேன்.

 பேருந்தில் ஏறியிருந்த ஸ்லீவ்லெஸ் டாப்பிடம் தோள்பையை ஒப்படைத்து கையசைத்து நின்றிருந்தவன், பேருந்து நகர்ந்ததும் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான். முன்னும் பின்னுமாக வரிசையில் வந்து நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்த பேருந்தைப் பிடிப்பதற்காக முதுகில் பொதிப்பையோடு மனிதர்கள் அங்குமிங்குமாக  நடப்பதும் ஓடுவதுமாக கடந்துக் கொண்டிருந்தார்கள். நேரம் ஒன்பதரையை கடந்திருந்தது.  பேருந்து ஓட்டுநர் என்று கொடுக்கப்பட்டிருந்த எண்ணிற்கு அழைத்துப் பேசினேன்.

“டிரைவர் நம்பர் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.” எதிர்முனையில் பதில் வந்தது.

“வாட்ஸப் வேண்டாம்னா, ஆட்னெரி மெஜேஜ்ல அனுப்புங்க “ நான்  சொல்லிக் கொண்டிருக்க அழைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்தது.

கைபேசியில் இணைய வேகம் சரியாக இருந்திருந்தால் பேருந்துக்கான ட்ராக்கிங் லிங்கிலேயே பேருந்தின் நிலவரத்தை அறிந்திருந்திருப்பேன். இணைய வேகம் சரியாக இல்லமால் போனதால் தான் ஓட்டுநருக்கே அழைக்க வேண்டி வந்தது. வாட்ஸெப்பில் அவர் நம்பரை அனுப்பினால் வந்து சேருமா.? திரும்பவும் அழைத்தால் வள்ளென்று விழுந்து சங்கடப்படுத்திவிடுவாரோ?  கேள்விகள் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போதே  குறுஞ்செய்தி மின்னியது. நல்லவேளையாக வாட்ஸெப்பில் அனுப்பியிருக்கவில்லை.

புது எண்ணிற்கு அழைத்தபோது ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ‘ பாடி அடங்கியது. மீண்டும் அழைப்பதற்குள் ஓட்டுநருக்கான உருவத்தை மனம் வரைந்து முடிந்திருந்தது. இரண்டாம் முறையில் அழைப்பை ஏற்றுப் பேசியவர் ‘டிராபிக் ஜாஸ்தி இருக்கு. பஸ் டாண்ட்  பக்கத்தில நில்லுங்க வந்துட்டே இருக்கேன்.அவசரமாகச்  சொல்லி முடித்துத் துண்டித்திருந்தார்.

எழுந்திருந்த இடத்தில் மீண்டும் போய் அமர்ந்துக் கொள்ளும் எண்ணத்தோடு திரும்பி பார்த்தபோது அரக்கு நிறப்புடவையிலிருந்த  அம்மா ஒருத்தி இடத்தை கைப்பற்றியிருந்தாள். வயது நாற்பதை நெருங்கியிருக்கும். அடுத்தடுத்த நாற்காலிகளில் இருந்த குழந்தைகள் மும்முரமாக அவர்களுக்குள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்த வயதான ஜோடியைத் தேடி கண்களை அலைய விட்டேன் . அவர்கள் தட்டுப்படவில்லை.

பெருங்களத்தூரிலிருந்து பேருந்து என்றபோதே “கோயம்பேட்டில இருந்து ஏறிகிட்டா கிளம்பிற பஸ்ஸில் நிம்மதியா உட்கார்ந்து  உறங்கிரலாம்ல. பெருங்களத்தூர்ல போய் நின்னுகிட்டு பஸ் வருதா வருதான்னு எட்டி எட்டிலா பாக்கணும். என்ற அம்மாவின் குரல் உள்ளுக்குள் உரைத்தது.

 தூரத்தில் நின்றிருந்த  நான்கு யுவதிகள் அவர்களுக்குள்ளாகப்    புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.பேருந்திற்காக காத்துக் கிடந்த பெரும்பாலான முகங்களில் அப்பியிருந்த பதற்றம், தேடல், சலிப்பு எதுவும் அவர்களின் முகத்தில் துளியேனும் ஒட்டியிருக்கவில்லை. போஸ்களும், கைபேசியை ஏந்தியிருக்கும் கைகளும்  மாறிக் கொண்டேயிருக்க மகிழ்ச்சியின் பெரும் ஊற்று அவர்களுக்கு நடுவே வழிந்துக் கொண்டிருந்தது.சரியான வெளிச்சத்திற்கு உள்ளாக நிற்கிறோம் என்பதை அவ்வப்பொழுது சரிபார்த்துக் கொண்டார்கள். நான் வேண்டுமென்றே அவர்களின் வார்த்தைகள் கேட்கிற தொலைவில் நகர்ந்து நின்றுக் கொண்டேன்.

“ஒரே போஸ்ஸே கொடுக்காத.”

****

“நாங்கல்லாம் கூடிப்போன ஆயுசுக்கே அஞ்சாறு போட்டா தான் எடுத்திருப்போம். அதையே திரும்பப் திரும்ப பார்த்து சிலாகித்துக் கிடந்தோம்.இந்த காலத்து பிள்ளைக இப்படிப் படமெடுத்து …தள்ளுதுகளே, எல்லாத்தையும் வருஷம் கடந்து எடுத்து பாக்குமா?.”

“யாரு கண்டா.” இது அம்மாவின் பதில்.

“ம்ம். திங்க திங்க அலவர்த்தனம்ன்னு சொன்ன கதையா எடுக்க எடுக்க தீரவே மாட்டேங்குது போல.”

 நானும் பெரியம்மா மகள் அனுவும் கைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாவும் ஆச்சியும்  பேசிக் கொண்டதை பெரிதாக காதில் போட்டுக் கொள்ளாமல் நாங்கள்  எங்கள் வேலையில் கவனமாய் இருந்தோம்.

அம்மாவும் ஆச்சியும் எங்கள் இருவரையும் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 தீராத ஆசையை ஆச்சி  அலவர்த்தனம் என்று தான் சொல்லுவாள். சிறுவயதில் அர்த்தம் புரியாமல் ஆச்சியிடம் கேட்டேன்.

“இங்கன வா.” மடியில் பிடித்து அமர்த்திக் கொண்டாள்.  

“நாங்க சிறுபிள்ளையா இருக்கேல,  எங்க வீட்டுல நல்ல கஞ்சிக்கே கஷ்டம். எங்க வீட்டுக்கு அடுத்தது சித்தப்பா வீடு .அங்கன நல்ல வசதி உண்டும். தேனும் தெனமாவுமா கொட்டிக் கிடக்கும். அங்க உள்ள பிள்ளைக வாய் அரையாத நேரமே கிடையாது. ஆனாலும் அதுக எங்க வீட்டுக்கு வருக நேரம் நாங்க கஞ்சி குடிச்சிட்டு இருந்தா எங்க தட்டத்தையே நாக்க சொட்ட விட்டுட்டு பாக்கும். எங்க அம்மா அதுக பாக்க பார்வை பொறுக்காம ஒரு தட்டத்தில அதுகளுக்கும் கொஞ்ச கஞ்சி ஊத்தி வைப்பா. அவுக வீட்டுல கொட்டி கிடந்தாலும் அதுகளுக்கு நாக்கு அடங்காம துடிக்குது பாத்தியா. அதுக்கு பேருதான் அலவர்த்தனங்கது. “

 விளக்கம் கொடுத்து முடிக்கையில் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

****

மீண்டு வந்து யுவதிகளின் பேச்சிற்குள் திரும்பவும் ரகசியமாக  இணைந்துக் கொண்டேன்.

“ கொஞ்சம் நல்லாதான் சிரியேன்டி.”  புகைப்படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த கைபேசி அதிர்ந்தது.

“ உன் ஆளுதான். சீக்கிரம் பேசி முடி. கடல போட்டுட்டிருந்தா அவ்வளவுதான் பாத்துக்கோ. “ கைபேசியை நீட்டிய கைகள் எச்சரித்தது.

 கைப்பேசியை தன்பக்கம் வாங்கிக் கொண்டவள், இரண்டொரு வார்த்தைகள் முணுமுணுத்து, துண்டித்து விட்டாள். .

வர்களின் உரையாடலில் மெய்மறந்து மனதிற்குள் இழித்தபடி நின்றிருந்தபோது எனது கைப்பேசி அதிர்ந்தது. புது எண்ணிலிருந்து அழைப்பு .

“வண்டி வந்திருச்சு சார்.”

“வந்திட்டீங்களா…“அங்குமிங்குமாக தலையைத் திருப்பி பார்க்க என்னைத் தாண்டிய பத்தடியில் பேருந்து கண்ணில் பட்டது.

“கொஞ்சம் சீக்கிரம் வாங்க.“

எதிர்முனையில் பேசிக்கொண்டிருந்த குரல் வெள்ளை பேண்ட் சட்டையில் பேருந்தின் படியில் நின்றிருந்தது. 

‘”வந்திட்டேன்.“பேருந்தை நிறுத்தியிருந்த திசைக்கு விரைந்தேன்.

பேருந்தில் ஏறியபடியே  திரும்பிப் பார்த்தபோது அந்த யுவதிகள் இன்னும் அதே கொண்டாட்டத்தோடு  படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

****

நான் எழுந்து அடுக்களைக்குள் போனபோது அம்மா சத்தமில்லாமல் எதையோ வதக்கிக் கொண்டிருந்தாள். நான் ஊருக்கு வந்து இறங்கும் நாட்களில் என் உறக்கம் கலையாமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு அம்மாவின் சமையல் இப்படி  சத்தமில்லாமல் நடப்பது வழக்கம். சமையல் மேடை சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. சமையல் செய்யச் செய்ய மேடையில் குப்பைகள் சேரவிடாமல் சரி செய்துக் கொண்டே இருப்பாள். அதுதான் கரப்பான்பூச்சியைத் தடுப்பதற்கான ஒரே வழி என்பது அம்மாவின் எண்ணம். எல்லாவற்றையும் மீறி கரப்பான்பூச்சியை அடுப்படியில் பார்த்துவிட்டால் கூச்சலோடு வெளியே ஓடி வந்துவிடுவாள்.அருவருப்பில் அவளது கழுத்து மயிர்கள் கூச்செரிந்து நிற்கும்.

வாழ்வின் எத்தனையோ சவால்களை இரும்பு மனுஷியாகச் சமாளித்திருக்கிற அம்மா கரப்பான்பூச்சிக்கு ஊரைக் கூட்டுவது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

“கொஞ்சம் நேரங்கூட உறங்க வேண்டிதான. ரெண்டு மணி போல சாப்பிடுகதுக்கு எழுப்பிகிடலாம், அயந்து உறங்கட்டும்னுலா இருந்தேன்.”

தாளிப்பை எடுத்து குழம்பில் கொட்டினாள்.

“உறக்கம் வரலம்மா.”

“புள்ளைக்கு பசி வந்திட்டோ. ஏதேசம் முடிச்சாச்சு.  இருபது நிமிஷம் பொறுத்துக்கோ சாப்பிட்டிரலாம்.”

“பசிக்கெல்லாம் இல்லம்மா. காலையில சாப்பிட்டதே வயிறு பொதுமி போய் கிடக்கு.”

புழக்கடையில் இருந்த வாஸ்பேஸினில் தண்ணியை திறந்து விட்டு முகத்தைக் கழுவிக் கொண்டேன்.

முகத்தை துடைத்தபடியே சோபாவில் போய் அமர்ந்தபோது வாசற்க்கதவின் க்ரீச் கேட்டது.

“ ஆண்ட்டி”

“ ஆண்ட்டி“

“இந்தா வந்துட்டேன் மக்ளே”

நான் எழுவதற்குள் அம்மா முந்திக் கொண்டாள்.

“பாத்திரத்த அத்த சாயங்காலம் கொண்டு தாரேன்னு அம்மேட்ட சொல்லு.”

“……”

வாசற்கதவு மீண்டும் க்ரீச்சிட்டது.

“கஞ்சிதண்ணி. “தலைக்குத் தேய்க்கக்  கேட்டிருந்தேன் “

“ சேம்புலாம் தேய்ச்சா தேய்ச்ச மாதிரியா இருக்கு. ஒருநாள் பானையில வடிச்சு எடுக்கலாம்னா உங்க அய்யா வானத்துக்கும் பூமிக்கும் எகிறிருவாருல.”

 அம்மா சொல்லியபடியே என்னைக் கடந்து அடுப்படிக்குள் போனாள்.

“நல்ல புள்ள பாத்துக்கோ.”

அடுப்படியிலருந்து திரும்பி வந்தவள், அருகில் கிடந்த ஒற்றை சோபாவில்  அமர்ந்துக் கொண்டாள்.

“  குடிக்கியா.”

“ வேண்டாம். “

“ கொஞ்சம் போல குடி லேய். நல்லா இருக்கும்.”

“ தலைக்குத் தேய்க்க வாங்கினதா சொன்ன? “

“ அதுக்கு தான் வாங்கினேன். சூடா இருந்திச்சு. அதான் கொஞ்சம்போல குடிக்க எடுத்தேன். வேண்டாட்டா கிட”

அம்மா டம்ளரின் விளிம்பை வாயில் வைத்து உரிய ஆரம்பித்தாள்.

“ வந்திட்டு போனது சுகந்தாதான? “ நான் கேட்டேன்.

“ ம்ம்…தங்கமான புள்ள “பெருமூச்செறிந்தாள்.

கண்கள் ஏதேதோ நினைவுகளைக் கோர்த்து அலைபாயத் தொடங்கியிருந்தது.என்ன சொல்ல வருகிறாள் என்பதாக அம்மாவின் முகத்தை ஊடுருவிப் பார்த்தேன்.

“இந்த லட்சுமி இருபது வருஷமா புள்ள புள்ளனு என்னா மாதிரி நாக்க வாங்குனா.”

அம்மாவின் முகத்தில் தீவிரம் கூடியது.

 விவரம் தெரிந்த வயதிலிருந்து லட்சுமி அத்தையைக் கோவிலிற்கு போகும் மனுஷியாகவே அதிகம் பார்த்திருக்கிறேன். நல்ல புடவை கட்டி நின்றிருக்கும் அவளிடம் “எங்க தூரமா”  என்று விசாரிக்கும் குரல்களுக்குக்

கோயிலுக்கு என்பதே அவளது ஒரே பதிலாக இருந்திருக்கிறது.

“பதினாறு வயசுல கல்யாணம்னா என்னமோன்னு, பெரிய சந்தோஷத்தோட கட்டிகிட்டு வந்தேன். இப்படி மலடி பட்டம் வாங்கிட்டு நிக்கதுக்கு தான் அவ்வளவு அவசரமா எல்லாம் நடந்திருக்கு போல.”

அத்தை அம்மாவிடம் அலுத்துக் கொண்டது நிழலாக ஞாபகத்தில் இருக்கிறது.

“காலகலத்துல பெத்திருந்தா உன் புள்ளைக்கு மூத்ததா இருந்திருக்கும்க்கா.”

அருகில் நின்றிருந்த என்னை அத்தை தொடையோடு கட்டிக் கொண்டாள்.

“இதுக்கு பொறவா நீ பெத்துக்க போற. கோவில் கோவிலா அலையுறத விட்டுட்டு ஆசிரமத்தில இருந்து ஒன்ன எடுக்க வேண்டிதான.”

என்று கடைசி வீட்டு நமச்சி பாட்டி சொல்லியிருக்கிறாள்.

அதை நினைத்து  அழுதபடியே அத்தை சாப்பிடாமல் இருப்பதாக, லட்சுமி அத்தை வீட்டு மாமா வந்து சொன்னபோது சமாதானம் செய்து வருவதற்காக அம்மா போட்ட வேலையை போட்டபடி ஓடினாள்.

அந்த சம்பவத்திற்குப்பிறகு  அத்தை கோவிலுக்குப் போவது குறைந்திருந்தது.

“லட்சுமி உண்டா இருக்காளாம்” என்கிற அதிசய அதிர்வலைகள் ஊர் முழுவதும் பரவியது. அவள் ஆறுமாதம் என்று சொல்லி நடந்த நாட்களில் அவளை நெருங்கி நின்றபடி பேசிக்கொண்டிருந்த முக்கு வீட்டு பாட்டி  எதிர்பாராத நேரத்தில் அத்தையின் வயிற்றை தொட்டுப் பார்த்துவிட்டாள். அத்தை பெரும் ஆர்பாட்டம் பண்ணி அழுதபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

 “நிறைமாச வயிறு மாதிரியா இருக்கு. சும்மா ரெண்டு சுத்துக்கு துணிய சுத்தி வச்சிருக்கா.”  அத்தை பிரசவத்திற்கு திருவனந்தபுரம் போவதாக காரில் ஏறி நகர்ந்த நொடி ஊர் முணுமுணுத்துக் கொண்டது. ஒருவாரம் கடந்து அவள் எடுத்து வந்த குழந்தை பச்சிளம் குழந்தை மாதிரியே இல்லை என்றும், அவள் கொண்டு வந்திருப்பது இரண்டு மாத குழந்தை என்றும் ஒருவருக்கொருவர் ரகசியமாக பேசிக் கொண்டார்கள்.

  “ஒரு வருஷம் ஆச்சு இன்னும் பேசுன காச பேசுனபடி கொடுக்க துப்பில்ல. செருக்கி முண்ட,யார ஏமாத்த பாக்க. புள்ளைய புடுங்கிட்டு போயிருவேன் பாத்துக்கோ.”குழந்தையின் ஒரு வயது பிறந்தநாளன்று அத்தையின் வீட்டு வாசலில்  தன்னை மறந்த போதையில்  முருகன் வார்த்தைகளை வாரி இறைத்தபோது அத்தை கூனிக் குறுகிப் போனாள். 

அத்தை வீட்டு மாமா முருகன் தோளில் கைப்போட்டு அடக்கி அவனை தூரமாக அழைத்துப் போய் பேசிக்கொண்டிருந்தார். பிறந்தநாளுக்காகக் கூடியிருந்தவர்கள் அவர்களுக்குத் தேவையானது கிடைத்துவிட்ட திருப்தியில் மென்று கொண்டிருந்தார்கள். 

“ வயித்துல துணிய சுத்திட்டு திரிஞ்சாலே.எத்தன நாள் முழு பூசனிக்காவ சோத்துல மறைக்க முடியும். இப்ப தெரிஞ்சு போச்சுலா.திருவனந்தபுர ஆஸ்பத்திரில ஒருத்திகிட்ட இருந்து புள்ளைய விலைக்கு வாங்கிட்டு வந்திருக்கா. இந்த முருகன் தான் புள்ள ஏற்பாடு பண்ணிவிட்டு கூடயும் போயிருக்கான்.” எதிர் வீட்டு கோசலை அத்தை அம்மாவிடம் கண்ணை உருட்டி உருட்டி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ அவ பெத்து எடுக்கா, இல்ல தத்தெடுக்க. நமக்கென்ன வந்திச்சு. அது அவ விருப்பம். “

அம்மாவின் பதிலில் கோசலை அத்தை அதற்குமேல் பேசமுடியாமல் வேறு கிளைக்கு தாவிக் கொண்டாள்.

“ உன்ட்ட தான் பேசுகேன்.”

“ ம்ம் சொல்லும்மா.”

அம்மாவின் அதட்டலில் நான் இன்றைய தினத்திற்குத்  திரும்பியிருந்தேன்.

“ஊரு பூரா பேச்சு வாங்கி புள்ளைய எடுத்துட்டு வந்தவ இப்ப புள்ள கருப்பா இருக்குண்ணு அதுகிட்ட ஓயாம எரிஞ்சு எரிஞ்சு விழுறா.  பச்ச புள்ளையா எடுத்திட்டு வரும்போது கலரா தான் இருந்திச்சு. வளர வளர நிறம் குறையுது. அதுக்கு என்ன செய்ய முடியும்.”

“ அன்னைக்கு நம்ம வீட்டுல  பேசிட்டு நின்னா பாத்துக்கோ. டியூசன் விட்டு வந்த பிள்ள பேக்க போட்டுட்டு நேர இங்க தான் வந்து. ஓடி வந்து பிள்ள கெட்டிபுடிக்கு, படக்குண்ணு தட்டி விடுகா.”

 அம்மா சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ இந்த புள்ளைக் குளிக்கும்போது அழுக்கே தேய்க்க விட மாட்டேங்குது. எப்படி இருக்கு பாருங்க. கன்னங்கரேல்ன்னு. இப்படியே பிள்ளைக்கு முன்ன வச்சு சொல்லுகா.”

“அந்த புள்ளை என்னான்னா, அம்மா தேய்ச்சுகிட்டே இருக்காங்கத்தே.எனக்கு வலிக்கும்லான்னு வருதப்பட்டு சொல்லுகு.எனக்கு  புள்ள சொல்லுகத கேட்டதும் பொக்குனு ஆயிட்டு.”

“பிஸ்ஸப் ஸ்கூல்ல தான படிக்குது அந்த பொண்ணு?” நான் இடைமறித்தேன்.

“ஆமா அதுலேலாம் ஒரு குறை வைக்கல. டியூசன் அனுப்புகா. டான்ஸ் கிளாஸ்ல சேர்க்கணும்னு ஒருநாள் பேசும்போது சொல்லிகிட்டு இருந்தா.  சத்தா சாப்பிடணும்னு பழங்கள்லாம் பாத்து பாத்து வாங்கி போடுகா.எல்லாத்தையும் செய்திட்டு கூடவே நெறத்த பத்தியும் ஆத்தாம பட்டுக்குறா.”

“ஒருநாள் சொல்லுகா,  இந்த புள்ள தெருவில நிறுத்திரும். என்ன பாக்காதுண்ணு. அதுவும் புள்ள பக்கத்தில நிக்கும் போதே.”

“எடுத்து வளக்க புள்ளனால பாக்கத்துண்ணு அத்தைக்கு பயம் வந்திருச்சு போல.“

“அதே தான்.  ஊர் வாய அடைக்க அத தூக்கிட்டு வந்திட்டு, இப்ப அந்த புள்ளையபோட்டு  குத்தி குத்தி  எடுக்கா. “

“அந்த புள்ளைக்க தலையெழுத்து . வேற என்னத்த சொல்ல.”

நான் சொல்லி முடிப்பதற்குள் அம்மாவின் முகம் சிவந்திருந்தது.

“தலையெழுத்தா தலையெழுத்து. அதுலாம் ஒன்னுங் கிடையாது. எல்லாம் மனுஷனுக்கு ஆசையும் அலவர்த்தனமுந்தான். ஆண்டவன் ஒரு புள்ளைய மட்டும் தந்திட்டா போதும்க்கா. அப்புறம் இந்த ஜென்மத்துக்கும் வேற ஒண்ணுக்குமே ஆசைப்பட மாட்டேன்னு சொன்ன வாய் இப்ப என்னவெல்லாம் பேசுகு. “

“ ம்ம்….”

தலையாட்டியபடியே சோபாவில் இன்னும் இறுக்கமாக சாய்ந்துக் கொண்டேன்.

அம்மாவின் முகம் சற்று தணிந்தது.

 “சரி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். பசிக்கா.சோறு போடட்டா.”

“ இல்லம்மா பசி எடுக்கல. கொஞ்சம் களியட்டும்.”

“ அப்படீன்னா கொஞ்சம் படுத்துகிடுகேன்.முதுகுலாம் நோவுகு,“

தரையில் நீட்டமாக படுத்துக் கொண்டாள். அம்மா தொலைக்காட்சியில் அவளுக்கான நாடகத்தில் நுழைந்திருக்க நான் கைபேசியை எடுத்துக் கொண்டேன்.

இருவரும் மூழ்கியிருந்தோம். அலுவலக வாட்ஸ் குரூப்பில் குறுஞ்செய்திகள் குவிந்திருந்தன. என் பெயரில் ஏதேனும் ஏவல்கள் வந்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தேன். என் நிம்மதியில் எந்தக் கற்களும் வீசப்பட்டிருக்கவில்லை என்பதே ஆசுவாசமாக இருந்தது.

“ இந்த வேலை புடிச்சுகிட்டா. “ இன்ஸ்டா  ரீல்சுகளை தள்ளிக் கொண்டிருந்த எனது கவனத்தை அம்மா கலைத்தாள். தொலைக்காட்சி திரையில் விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

“ ம்ம் போகுதும்மா.”

“ இழுவ சரியில்லையே. கஷ்டமா இருக்கோ.”அம்மா வேகமாக  எழுந்தமர்ந்தாள்.

“ அப்டிலாம் இல்லம்மா. நல்லா தான் போகுது.”

அம்மாவிற்கு என் பதில் திருப்தியளிக்கவில்லை என்பது அவளின் பார்வையிலேயே தெரிந்தது.

“ புடிச்சிருக்கும்மா.“  மீண்டும் அழுத்தமாக சொன்னபோது  ஆசுவாசம் அடைந்தாள்.

“இந்த கம்பெனில எப்படியாச்சு வேலை வாங்கிறனும்னு எவ்வளவு அலச்சல். எத்தனை தடவ இன்டர்வியூ போன ? நாலா அஞ்சா? “

“அஞ்சு.”

 “இப்ப வேலை புடிச்சுகிட்டுலா.  இனி இங்கனய இருக்க பாரு.

இதோட  நாலு கம்பெனி மாரியாச்சுலா, போதும். மனுஷனுக்கு நிம்மதி தான் பெருசு.“

“ அப்டிலாம் இருந்தா சம்பளம் ரொம்ப ஏறாது மா. மத்த கம்பெனில இருந்து மாறுன மாதிரி ரெண்டு வருஷத்திலே மாற மாட்டேன், ஒரு நாலஞ்சு வருஷம் இருக்கணும். அப்புறம் அடுத்தது பாக்க வேண்டியதான்.”

அம்மாவின் விழிகள் திகைத்தது.ஒன்றும் சொல்லாமல் தொலைக்காட்சி பக்கமாக முகம் திருப்பி ஒருக்கழித்து படுத்துக் கொண்டாள்.

அம்மா ஏதோ சொல்வதைபோல் இருந்தது.

‘எதும் சொன்னியாம்மா’  என் பக்கமாக திரும்பாத முகம் இல்லை என்பதாக அசைந்தது.

கழுத்து மயிர்கள் கூச்செறிந்து நின்றிருந்தன.

“ பசிக்குதும்மா.“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.