ரிப்பன் மாளிகை
செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி நான் என்ன சொல்வது உங்களுக்கே தெரியும்? கடந்த உரையாடலில் அதைப் பேசினோம். இப்போது சென்னை மாநகராட்சியின் வெள்ளை மாளிகையான மெட்ராசின் அடையாளங்களுள் ஒன்றான ரிப்பன் பில்டிங்கைப் பற்றி பேச மறந்தால் வரலாறு மட்டுமல்ல புவியியலும் நம்மை மன்னிக்காது. 107 வருடப் பழமையான கட்டிடம் இப்போது பாருங்கள். இப்பொழுதுதான் சுரங்கத்திலிருந்து புதிதாக வெட்டியெடுத்த ஒரு வைரத்துண்டு போல மின்னுகிறது. மெட்ராசின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று. 14 அடுக்கு மாடி L.I.C கட்டிடத்தை அதன் 100 வயதுக்குள் ஒரு நாள் இடிப்பார்கள் …. அது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கூட வலிக்கும். ஆனால் அதே இடத்தில் ஒரு ஐம்பது அடுக்கு கட்டிவிடலாம். அல்லது நூறு அடுக்கு. ஆனால், நம் ரிப்பன் மாளிகை வெறும் மூன்று அடுக்கு மட்டுமே அதன் கோபுரத்துடன் சேர்த்து நான்கு அடுக்கு. அதன் பழமைக்காக மட்டுமல்ல அதன் வடிவமும், வரலாறும் ரிப்பன் மாளிகையை இன்னும் பல நூறு ஆண்டுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பேன். நான் மட்டுமா பழமையான கட்டிடங்களை நேசிப்போர் அத்தனை பேரும் இதையே சொல்வார்கள்.
மேற்கு கிழக்கு மத்திய கட்டிடக்கலை பாணியின் கூடலில் பிறந்த அற்புதப் படைப்பை நாம் பராமரிப்பது மிக அவசியம். ஏனெனில் அது போன்று மக்கள் பயன்பாட்டுக் கட்டிடம் நம்மிடம் வேறொன்று இல்லை. ஒரு ஓவியம் போல, ஒரு மகத்தான புதினம் போல, ஒரு பேரழகுச் சிற்பம்…. நியோ கிளாசிக் பாணி வெள்ளைவெளேர் மாளிகை பூங்கா நகர் ரயில் நிலையத்துக்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை லெவல் கிராசிங் மேம்பாலத்தின் மேல் நின்று நான் அதன் பேரழகை என் பத்து வயதிலிருந்து வேடிக்கைப் பார்க்கிறேன். என் ஆசை இன்னும் தீரவில்லை. தூண்கள் வளர்ந்து மேலெழும் அதன் உச்சி பீடத்தில் சுண்ணாம்புச் சுதையாலான சுருள்களும், இலைகளும் என ஒரு மாயம் அசையும் இனி எப்போதேனும் போனால் பாருங்கள் ஒவ்வொரு சதுரடிக்கும் ஒரு அழகு அசையும் இன்றைக்கு அதைப் போன்று செய்ய நம்மில் அல்லது உலகத்தில் கட்டிடக் கலைஞர்கள் இருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் மக்கள் பயன்பாட்டுக்கான அரசு கட்டிடங்கள் இனி இப்படியான அழகுடன் கட்டப்படுமா? மேற்கத்திய பாணியுடன் முகலாய மற்றும் நம்மூர் பாணி கலந்து செய்த சிற்ப மாளிகை என்றாலும் திட்டமிட்டவன் வெள்ளையனாக இருந்தாலும் அதைச் செய்தது நம்மூர் கறுப்பர்களின் கைகள் தானே? அது சரி வெறுமனே ஒரு கட்டிடத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதனால் இந்தக் கட்டிட பாணி பற்றி ஏன் நாம் தெரிந்துகொள்ளக்கூடாது இன்றோ , நாளையோ நீங்கள் வீடு கட்டும்போது இதில் ஒரு பாணியைப் பின்பற்றி தூண்களோ முகப்போ அமைக்க நீங்கள் உங்கள் பொறியாளரைக் கேட்கலாம். அதற்காகவாவது தெரிந்துகொள்வது அவசியம். அது என்ன கட்டிட பாணி? ஆமாம் பலவித பாணிகள் இருக்கிறது. அதைப்பற்றிச் சின்னதாக நமக்கு அறிமுகமிருந்தால் இப்படியான கட்டிடங்களைப் பார்க்கும் போது உங்களுக்கு அந்த நினைவுகள் வரக்கூடும் ..அது நமக்கு கூடுதல் சுவாரசியமாக இருக்கும் எனக்கு அப்படித்தான் உங்களுக்கும் அப்படித்தானே !
ரிப்பன் கட்டிடம் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும் இந்தோ சரசெனிக், இந்தோ கோதிக், முகல் கோதிக், நியோ முகல் இந்தோ கட்டிட முறையெனவும் சொல்கிறார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலப் பேரரசில் குறிப்பாகப் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதேச சமஸ்தானங்களில் பொது மற்றும் அரசு கட்டிடங்களைக் கட்ட பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடக் கலை பாணியாகும். இது இந்திய-இஸ்லாமியக் கட்டிடக்கலை, குறிப்பாக முகலாய கட்டிடக்கலை பிரித்தானிய மற்றும் இந்தியப் பாரம்பரிய பாணி, சிலசமயம் கொஞ்சம், இந்தியக்கோயில் கட்டிடக்கலை ஆகியவற்றின் அலங்காரக் கூறுகளைக்கொண்டு உருவானது. சாரசென் என்பது அரபு மொழி பேசும் முஸ்லிம் மக்களைக் குறிக்க ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்,
ரிப்பன் மாளிகையின் சிறப்பம்சம் இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய, ஆகிய மூன்று முக்கியக் கட்டிடக்கலை வடிவங்ககளை அடிப்படையாகக்கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- கோதிக் கட்டிடக்கலை என்பது ஐரோப்பியக் கட்டிடக்கலையின் ஒரு பாணியைக் குறிக்கும் இப்பாணி தேவாலயங்கள் பேராலயங்கள் போன்றவற்றின் வடிவமைப்புகளோடு தொடர்புடையது. இப்போது நீங்கள் நம் சர்ச் வடிவங்களை நினைத்துக்கொள்ள வேண்டும். சென்னை சாந்தோம் , அன்னை வேளாங்கன்னி, 12 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உருவாகிய இது மத்திய காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது. இதைத் தொடர்ந்தே 15 ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை உருவானது. 18 ஆம் நூற்றாண்டளவில் இங்கிலாந்தில் ஆரம்பமான முயற்சிகள், 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவிலும் பரவியது. இது சிறப்பாகச் சமயம் மற்றும் பல்கலைக்கழகக் கட்டிட வடிவமைப்புகள் ஊடாக 20 ஆம் நூற்றாண்டிலும் புழக்கத்திலிருந்தது. இப்போது உங்களுக்கு சென்னை பல்கலைகழகக் கட்டிடம் நினைவுக்கு வரவேண்டும். ஆனால் நாம் அதை இப்போது பேசப்போவதில்லை.
- அயனிய ஒழுங்கில் அமைந்த கோயில் எபெசு என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆர்ட்டெமிசு கோயில் ஆகும். இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக விளங்கியது. அயனிய ஒழுங்கில் தூண் ஒரு அடித்தளத்தின் மீது அமைந்திருந்தது. இந்த அடித்தளம் தூண் தண்டை அதைத் தாங்கிய மேடையிலிருந்து பிரித்தது. இத் தூண்களின் போதிகைகள் இரட்டை நத்தையோடு போன்ற சுருள் வடிவம் கொண்டவையாக இருந்தன.
- கொறிந்திய ஒழுங்கின் பெயர் “கொறிந்த்” என்னும் கிரேக்க நகரத்தின் பெயரில் இருந்து பெறப்பட்டது . எனினும் இது முதலில் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்பட்டது ஏதென்சு நகரிலே இவ்வொழுங்கு உருவானது எனினும், கிரேக்கர் தமது கட்டிடக்கலையில் இதை மிகவும் குறைவாகவே பயன்படுத்தினர் இவ்வொழுங்கின் தூண்கள் தவாளிகளோடு கூடிய தண்டுகளையும், இலை வடிவம் மற்றும் நத்தைசுருள் வடிவங்களால் அழகூட்டப்பட்ட போதிகைகளையும் கொண்டன. இதை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் புற வடிவத் தூண்களில் நாம் பார்க்கலாம்
ஆக மேற்சொன்ன இந்த மூன்று முறைகளும் கலந்து கட்டி ரிப்பன் மாளிகையை வடிவமைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறத்தில் அமைந்த இக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது. லோகநாத முதலியார் என்பவரின் ராம்சே கம்பெனியால் இந்திய ரூபாய் 7,50,000 செலவில் இது கட்டப்பட்டது. 1909 டிசம்பர் 11 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1913 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அன்றிலிருந்து சென்னை மாநகராட்சி இந்தக் கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மன்றம் இதற்கு முன்பும் செயல்பட்டுக்கொண்டுதானிருந்தது. இதற்கு முன்பு புனித ஜார்ஜ் கோட்டையில் டவுன் ஹால் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மாநகர் சார்ந்த பணிகள் இட நெருக்கடி மற்றும் தனித் துறையாகச் செயல்படுமளவு நகர விரிவாக்கம் காரணமாக இன்றைய பாரிஸ் பகுதியில் உள்ள எரபாலு தெருவுக்கு மாற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி 1913 வரையிலும் அங்கு தான் செயல்பட்டு வந்திருக்கிறது. பிறகு நகர விரிவாக்கம் கூடிக்கொண்டே போவதால் அதற்கு ஒரு பெரும் கட்டிடம் தேவையெனக் கருதி அதற்காகத் திட்டமிட்டார்கள்….இப்படி திட்டம் போடும் போதெல்லாம் இந்த பீப்புல்ஸ் பார்க்கின் மிகப்பெரிய பசுமையான நிலப்பரப்பின் மீது ஆட்சியாளர்களுக்கு அப்படியென்ன ஈர்ப்போ தெரியவில்லை மூர்மார்க்கெட் ( இந்தக் கட்டடம் இப்போது இல்லை அந்த இடத்தில் புறநகர் ரயில் நிலைய வண்டிகள் நிறுத்துமிடம் இருக்கிறது) கட்ட நினைக்கும் போதும் அவர்களுக்கு அங்குள்ள இடம் தான் தேவைப்பட்டது, ராணி விக்டோரியாவின் நினைவாக அரங்கு கட்டத் திட்டமிடும் போதும் அந்த இடம் தான் ஆட்சியாளர்களின் நினைவுக்கு வந்தது. மாநகராட்சிக்குக் கட்டிடம் கட்டத் திட்டமிட்ட போதும் அங்கிருந்த இடம் தான் அவர்கள் நினைவிற்கு வந்திருக்கிறது….நம் ஆட்களுக்கு புறநகர் ரயில் நிலையம் கட்டவும் இந்த இடமே நினைவுக்கு வர அந்த துயரம் நடந்தது பேரழகு பெருமதிப்பான செந்நிற அதிசயமான மூர் மார்க்கெட்டை எரித்து அந்த இடத்தில் கட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு அன்றைய ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டார்கள். 1909 டிசம்பர் 11இல் குளிர் மிகுந்த காலைப்பொழுதில் வைசிராய் மின்டோ மெட்ராஸ் மாநகராட்சிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆங்கிலேய அரசாங்கப் பொறியாளர் ஜி.எஸ்.டி. ஹாரிஸ் கட்டிடத்தை வடிவமைத்தார். இதனை ஒப்பந்தக்காரர் லோகநாதன் என்பவரின் இராம்சே கம்பெனியார் கட்டி முடித்தார்கள். கட்டிட ஒப்ந்தக்காரர் நம் பெருமாள் வழக்கமாகச் சிவப்பு நிறத்தில் கட்டுகிறவர். அதனால் இதை வெள்ளை நிறத்தில் கட்ட இந்த ஒப்பந்தக்காரர் நினைத்தாரோ, அல்லது இந்த நகரத்தைத் தூய்மையாக்கும் தொழிலாளிகள் கறுப்பும், கசடுமாக இருக்கிறார்கள், அதை நிர்வகிக்கப் போகும் இந்தக் கட்டிடமாவது வெள்ளையாக இருக்கட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ…..வெள்ளை நிறத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையில், பல இடங்களில் நுட்பமான சுண்ணாம்பு சுதை சிற்பங்களாலானது. செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இதன் நீளம் 252 அடிகள். அகலம் 126 அடிகள். இதில் உள்ள கோபுரத்தின் உயரம் 132 அடிகள் ஆகும். இந்தக் கோபுரத்தில் 8 அடி விட்டமுள்ள கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட 7.5 லட்சம் செலவானது. 1913-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதியன்று அப்போதைய வைசிராய் ஹார்டின்ஜ் திறந்து வைத்தார். 3 ஆண்டுகளில் அந்த அற்புதம் கட்டியெழுப்பப்பட்டது 1913 நவம்பர் 26 இல் நகரின் மிக முக்கியமான மனிதர்கள் 3000 பேர் குழுமியிருக்க பீப்பில் பார்க்குக்கென நிரந்தரமாக இருந்த பாண்டு வாத்தியக் குழுவினர் மாளிகை திறப்பு விழாவுக்கு இசைக்க வான வேடிக்கைகளுடன் கோலாகலமாகத் திறப்பு விழா நடந்துள்ளது. பெயர் தான் ரிப்பன் பிரபு மாளிகையே தவிர அவர் இந்த மாளிகையில் வசிக்கவும் இல்லை, பார்க்கக்கூடவில்லை.
கட்டிடக் காண்டிராக்டர் P.லோகநாதன் அவர்களுக்கு ஊதியமாக 5,50,000 வழங்கப்பட்டது. இன்று இந்த கட்டிடப் பராமரிப்புக்கும் வெள்ளையடிக்கவே பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படுகிறது. அதில் பாதி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை நிருபிக்க யாருக்கும் திறமையில்லை ஆனால் எல்லோருக்கும் உண்மை தெரியும். ஏன்? இந்த மாளிகைக்கு ரிப்பன் பிரபுவின் பெயரை வைத்துக் கட்டிடத்தின் முன்பாக சிலையும் வைத்திருக்கிறார்கள். அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
ரிப்பன், 10 டவுனிங் தெரு, லண்டன் மாநகரில் பிறந்தார் அவர் பள்ளியோ அல்லது கல்லூரியோ சென்றவரில்லை தனியாகவே கல்வி பயின்றார். அவருக்கு 1870 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அன்றைய நாட்களில் நீதி மன்றங்களில் இந்தியர்களும் நீதிபதிகளாக இருந்திருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்வதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை, இந்த அரை வெள்ளை மற்றும் கறுப்பு நீதிபதிகள் முழு வெள்ளையர்களான நம்மை விசாரித்துத் தண்டனை தருவதா வெட்கக்கேடு அந்த அசிங்கத்துக்குப் பதில் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து நாம் ஊர் திரும்புவதே மேல் என்று வெள்ளை மேட்டிமை உணர்வுள்ள ஆங்கிலேயர்கள் சொல்ல அவர்களுக்கு இங்கிலாந்து, பத்திரிக்கையாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்தச் சூழலில் நிலைமையை சீர் செய்ய ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார்.என்றாலும் மனிதர்களிடையே பாகுபாடுகளை விரும்பாத ரிப்பன் பிரபு வெள்ளை மேட்டிமை வெறி கொண்ட வெள்ளையர் மீதான மனக்கசப்பில் தனது இந்தியாவின் வைஸ்ராய் பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இதன் உடனடி விளைவாக வசதி படைத்த மேல்தட்டு இந்தியர்களால் தங்கள் உரிமைகளைக் காத்துக்கொள்ள 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
இந்திய நிர்வாகத்தில் இந்தியர்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு. வெள்ளை மேட்டிமை மனப்பான்மை இல்லாத பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர் குறைந்த காலமே இருந்தாலும் இன்றும் நினைவில் கொள்ளும்படி பல ஆக்கபூர்வமானப் பணிகளைச் செய்தவர். இந்தியாவிற்கு இங்கிலாந்து அரசு அனுப்பிவைத்த வைஸ்ராய்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கவர் இந்தியர்களின் பிரச்சினைகளைக் கனிவுடனும், பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை ‘ரிப்பன் தி குட் என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்ததாகச் சொல்வார்கள். பிரிட்டிஸ் இந்தியாவின் நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, உள் நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தைத் திரும்பப் பெற்றது, தல சுயாட்சியை அறிமுகப்படுத்தியது, ஆங்கிலேயர் அடாவடியாகக் கைப்பற்றிய மைசூரைத் திரும்பி வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகி தாய்நாடு போனதற்காக மிகவும் வருத்தப்பட்டனர். காரணம் அதிகாரத்திலிருந்தபோது அவர் செய்த மாற்றங்கள் இன்றும் பயன்பாட்டிலிருக்கிறது. இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக்கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார். கி.பி.1882-ல் W.W .ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் ‘உள்ளாட்சி அரசின் தந்தை’ எனப் போற்றப்பட்டார்.1829 இராஜா ராம்மோகன் ராயுடன் இணைந்து சதி முறையை ஒழிக்கப் பாடுபட்டார்…கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார். இதனால் “ரிப்பன் எங்கள் அப்பன்” என்ற ஸ்லோகன் உருவானது. அதனால் அந்த மனிதரின் பெயரையும் வைத்து கட்டிடத்திற்கு முன்பாக ஒரு நுட்பமான அவரது சிலையையும் வைத்திருக்கிறார்கள். நல்ல வேளையாக இன்னமும் அந்தக் கட்டிடத்தின் பெயரை நம்மவர்கள் இன்னமும் மாற்றவில்லை. நாம இப்படி குறைபட்டுக்கொள்ளக் காரணம் இருக்கிறது.
ரிப்பன் மாளிகைக்கு 100 வயதான நாட்களில் மெட்ரோ ரயில் பணிகள் இப்பகுதியில் நடப்பதால் ரிப்பன் கட்டிடத்தில் விரிசலிட்டது இவ்வளவு பாரம்பரியமானதொரு வரலாற்றுக்கட்டிடம் இருக்கிறது அதற்கு பாதிப்பு ஏற்படுமாவென்கிற யோசனை மாநகராட்சி அதிகாரிகளுக்கே இருந்திருக்காது மெட்ரோ ரயில் நிர்வாகமே பாதிப்பைச் சரி செய்திருக்கிறார்கள்.
சென்னை மாநகரின் வெள்ளை மாளிகையான ரிப்பன் மாளிகை கட்டிடம் 2013 இல் நவம்பர் 26ம் தேதியன்று தனது 100 வது பிறந்தநாளினைக் கொண்டாடவில்லை. பாரம்பரியம்மிக்க மாளிகையினை அன்றைய நாளில் வாழ்த்தவும், நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும் ஆட்கள் இல்லாமல் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தது. 100 வது ஆண்டை அறிவிக்கும் வகையில் மின் விளக்குகள் கூட அமைக்கப்படவில்லை பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்று எளிதான காரணத்தைச் சொல்லிவிட்டார்கள் வேறென்ன? இரண்டாவது முறையாகக் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளம் வரை மீண்டும் விரிசல் விழுந்துள்ள நிலையில் அதைச் சரி செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகமே செய்ய முடிவெடுத்தது. குஜராத்திலிருந்து கட்டிடப் பராமரிப்பு நிபுணர்களை வரவழைத்தது. அவர்கள் ஆலோசனை மற்றும் சென்னை ஐஐடி நிபுணர்கள் ஆலோசனையென 7 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட சீரமைப்பு பணி 30 கோடியைத் தாண்டியும் இன்னும் முடிந்ததாகத் தெரியவில்லை ஆனால் பழைய முறையிலான சுண்ணாம்பு ,கடுக்காய், மணல் போன்றவற்றைக்கொண்டு பாரம்பரிய முறைப்படியும்..நவீன ரசாயனங்களைப் பயன்படுத்தியும் வேலைகள் நடக்கிறது… அந்தப் பகுதியில் மெட்ரோ பணிகள் முடிவுக்கு வரும்போது தான் ரிப்பன் கட்டிட சீரமைப்பும் முடிவுக்கு வரும் போலத் தெரிகிறது..
ரிப்பன் மாளிகையின் சின்னச் சின்ன துணுக்குகள்
325 ஆண்டுகள் வரலாற்றை உடையது சென்னை மாநகராட்சி இதில் 100 ஆண்டுகளாக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு கம்பீரமாக நிற்கிறது கட்டிட கோபுரத்தில் உள்ள கடிகாரம் இது கைகளால் இயக்கக்கூடிய பொறியமைப்பைக் கொண்டது. கால்மணி நேரத்திற்கொரு முறை நான்கு மணி சத்தம் கேட்கும் ஒரு மணி நேரத்திற்கு பதினாறு மணி சத்தம் என நகரம் விழிப்போடிருக்க வேண்டுமென திட்டமிட்டிருப்பார்களோ என்னவோ?? அன்றைய மாநகரச் சின்னமாகக் கடலில் மூன்று பாய்களைக் கொண்ட கப்பல் பயணிப்பதைப் போன்ற குடைவு சித்திரம் அதன் தலைப்பகுதியில் குதிரை மீதேறி வரும் செதுக்கு சித்திரம் கருங்கல்லில் வைத்திருந்தார்கள் 1955 – ல் அதை மாற்றி பாய் சுருட்டப்பட்ட மரக்கலம் அதன் மேல் புலி, வில், மீன் என சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கும் தமிழக சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.
தரைத் தளத்தில் 16 அறைகள் வருவாய்த்துறை சம்பந்தமான பணிகளைப்பார்க்கிறது. முதல் தளத்தில் 22 தனித்தனி அலுவலகங்களில் சுகாதாரத்துறை இயங்குகிறது. இரண்டாம் தளத்தில் கவுன்சில் சேம்பர் ஐரோப்பிய பாணியாலான மேயர் இருக்கை பக்கவாட்டில் பிரான்ஸ் வடிவ கண்ணாடி சாளரங்கள் கூடத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் மரப்படிகள் என அன்றைய நாளை அவை நினைவுபடுத்தும்படியுள்ளது தரையில் முன்பிருந்த கடப்பா கற்களைப் பெயர்த்து இப்போது புதிதாகச் சலவைக்கற்கள் பதித்திருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்திற்கான செங்கற்களைச் சூளைமேட்டிலிருந்த அன்றைய சூளைகளிலிருந்து வாங்கியிருக்கிறார்கள். சென்னையின் பெரும்பாலான சிவப்பு கட்டிடங்களைக் கட்டிய நம் பெருமாள் அவர்களுக்கு கற்களை வழங்கிய சூளைகள் அங்கிருந்தன அதனாலே அதற்கு சூளைமேடு என்ற பெயர் வந்திருக்கிறது. (கொசுறு)
அந்த அழகிய வெள்ளை மாளிகை ஒரு நாள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தது என் கண்ணில் ஏதாவது சிக்கலா என்று பதட்டமடைய என்னைப் போலவே பலர் வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர் உலக குளுக்கோமா( கண்ணில் ஏற்படும் ஒருவகை குறைபாடு ) வாரம் கொண்டாட அப்படி விளக்குகளால் ஒளியூட்டியிருக்கிறார்கள். இன்னொரு நாள் பிங்க் நிறத்தில் ஒளிர்கிறது…. கேட்டால் நீரிழிவு நோய் விழிப்புணர்வாம்…மூன்று வண்ணத்தில் ஒரு நாள் அன்று குடியரசு தினம் அந்த வெள்ளை மாளிகையில் அதன் வண்ணத்தை மாற்றலாம் வடிவத்தை மாற்ற முடியுமா? அந்த மாளிகை மெட்ராஸின் முகங்களில் ஒன்று. அதை விட முக்கியமானது அந்த வெள்ளை மாளிகையின் கடைநிலை ஊழியர்களின் ஓயாத செயல்பாடுகள் தான் இரவும் பகலும் இந்த நகரை இந்தளவுக்குத் தூய்மையோடு வைத்திருக்கிறது என்பதுடன் நோய் பரவாமல் தடுப்பதும் என…என் சிறு வயதில் இரண்டு மாடுகள் குப்பை வண்டிகளை இழுத்துப் போகும் இப்போது மாநகராட்சி நிர்வாகம் பல நவீன உபகரணங்களைக் கொண்டுவந்துள்ளது என்றாலும், கழிவுநீர்த் தொட்டியில் மரணங்கள் நிகழவே செய்கிறது…என்பது துயர்மிகு சமூகச் சோகமே. அந்தக் கட்டிடம் குறித்த மயக்கம் பற்றி நான் சொல்வதிருக்கட்டும் அந்தச் சாலையின் மையத்தில் ஈவெரா சாலையும், சைடாம்ஸ் சாலையும் (ராசா முத்தையா) சாலையும் சந்திக்கும் சிக்னலில் (சமிக்ஞை) நின்று கிழக்கு நோக்கிப் பாருங்கள் நான்கு வெவ்வேறு அழகிய பிரம்மாண்ட கட்டிட வரிசையின் மயக்கும் தோற்றம் உங்களை அந்த நாட்களுக்கு அழைத்துப் போகும்…..கொரோனா காலத்தில் அந்தக் காட்சிகள் எனக்கு மிகச் சிறப்பாக வாய்த்தது. 113 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்டிடத்தை சாத்தியமாக்கிய கலைஞர்களுக்கு உழைப்பாளிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள்.
– கரன் கார்க்கி