சல்பாஸ்

முருகேசன் தன்னுடைய சகா சொன்னபடி காதை, மூப்பு யானையின் தும்பிக்கையைப் போலவிருந்த, தென்னை மரத்தின் கறுத்த தண்டில் அழுத்தி வைத்து, உள்ளுக்குள் ஓடுகிற சத்தத்தைக் கேட்டான். “ஏயெப்பா கரெண்ட் அடிக்கிற மாதிரி விசுக்குன்னு கேட்குதே? சொய்ங்க்னு ஏதோ காந்த சக்தி உள்ளுக்குள்ள இழுக்குது. சல்பாஸ் மாத்திரைக்கு அம்புட்டு பவரோ?” என்றான் வியந்தபடி. தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் அந்த மாத்திரையின் வீரியத்தைப் பற்றித்தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அது காலம்காலமாக அங்கே இருக்கிறதுதான். ஆனாலும் அன்றைக்குச் செவலைபட்டியின் முக்கியப் பேசுபொருளாக அது ஆகியிருந்தது.

வானை முட்டுகிறளவிற்கு வளர்த்தியாய் பல தலைமுறைகள் கண்ட மரமென்றாலும், சுண்டுவிரல் நகக்கண்ணிற்கும் சிறியதான அளவிலிருக்கிற இத்துனூண்டு காண்டாமிருக வண்டு உள்ளுக்குள் குடிபுகுந்து விட்டால் போட்டுத் தள்ளிவிடும். ஆற அமர உள்ளுக்குள் குடியிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து மரத்தின் அடிவேரையே தின்று சாய்த்து விடும். ”தம்மாத்துண்டு வண்டுதான். ஆனாலும் சனியன் உள்ளார புகுந்திருச்சுன்னா கோட்டையையே சாய்ச்சுரும்” எனச் சொல்லி அளவைக் காட்டிலும் வீரியமே முக்கியம் என்பதை உணர்த்துவார்கள். மச்சு வீட்டுக்காரச் சுப்பையாவின் பேரிலேயே குடைவையும் உடைவையும் குறித்த அந்த ஆராய்ச்சி நடந்தது.

சிவனருந்திய ஆலகால விஷத்தைத் தின்றவனைக் கூடக் காப்பாற்றி விடலாம். ஆனால் அந்த மாத்திரை தின்றவனை அந்தச் சிவனே வந்தாலும் காப்பாற்ற ஏலாது என்பது ஊருக்கே தெரியும். அதனால்தான் பொம்பளையாட்கள் மூக்கைக் கசக்கிக் கொண்டு போய் நின்றால், மருந்துக் கடைக்காரர்கள் தரமுடியாதெனத் துரத்தி விடுவார்கள். ஆனால் சுப்பையாவிற்கு அது எப்படிக் கிடைத்திருக்கும் என்கிற சிறுபிள்ளைத்தனமான பேச்சும் அங்கே நிலவியது. “ஏப்பா படிச்சவருன்னாலும் அவருமே சம்சாரிதானப்பா? ஒருகாலத்தில நிலபுலன்னு வாழ்ந்த குடும்பம்தானே? சம்சாரி போயி நின்னு கேட்டா மருந்துக்கடைக்காரன் இல்லைன்னு சொல்ல முடியுமா? அவரு வீட்டிலயே நாலு தலைமுறை கண்ட மரமெல்லாம் நிக்குதேப்பா” என்றார் சம்சாரியான ஆவுடையப்பன்.

வெளியூர் வேலைக்குப் போன ஆட்களைக்கூட வரச் சொல்லி விட்டார்கள். மச்சுவீட்டின் கடைசிக் குட்டியை நன்றாக வழியனுப்பி விடவேண்டும் என்கிற பரிதவிப்பு ஊர்த்தலைவருக்கு இருந்தது. முதலில் விஷயம் அவருக்குத்தான் தெரியவந்தது. மச்சுவீட்டின் கடைசியாய் மிச்சமிருக்கிற ஏழரை ஏக்கரா கரிசல் பூமியில் சுப்பையா குப்புற விழுந்து கிடப்பதாகச் செய்தி கிடைத்ததும் ஓட்டமும் நடையுமாய்ப் போனவர் அவர்தான்.

“போயி ஒடம்பை தொடறேன். தீக்கங்கை தொட்டாப்பில சூடு. கையை படக்குன்னு பின்னாடி இழுத்துட்டேன் என்னையறியாமலேயே. சத்தம் போட்டு பருத்தி காட்டில இருந்து ஆட்கள் ஓடி வந்து என்னோட சேர்ந்து தூக்கறாங்க. தூக்க முடியலை. உச்சி சூரியன் மாதிரி உடம்பில இருந்து சூடு எங்க கையில இறங்குது. தின்னது அந்த மாத்திரைச் சனியந்தான்னு முடிவே பண்ணிட்டேன். இடையில பொத்துன்னு சூடுதாங்காம கீழே வேற போட்டுட்டோம். மண்ணில விழுந்து அவரு புரண்டதை பார்க்கையில மனசே அத்துப் போச்சு” எனப் பார்க்க வந்தவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஊர்த்தலைவர்.

மருந்தடித்த உடம்பு என்பதால் சீக்கிரம் தூக்கிக் காடு சேர்த்துவிட வேண்டும் எனப் பேசிக் கொண்டார்கள். “போலீஸ்காரங்களுக்கு தகவல் தெரிவிக்கணுமா? நாளைப் பின்னே சிக்கல் வந்துறக் கூடாதுல்ல?” என்றார், பலதையும் புகையிலையைப் போல வாயில் வைத்து நமுட்டிக் கொண்டிருக்கிற பழக்கமுடைய நமச்சிவாயம். “அதெல்லாம் வேண்டாம்பா. வெகுபாடுபட்டு தூக்கி வளர்த்த செல்ல குட்டி. அதோட ஒடம்பை கூறு போட்டா நல்லா இருக்குமா? எனக்கும் மருமவன் முறைதானே? நாளைப் பின்னே என்ன வந்தாலும் நான் பார்த்துக்குறேன். சாகுற வயசா இது? அப்படியென்ன மனத்தாங்கல் அவனுக்கு?” என வெட்டவெளியை வெறித்துப் பார்த்துச் சொன்னார் ஊர்த்தலைவர்.

மச்சுவீட்டுச் சுப்பையாவைப் பூப்பல்லக்கில் வைத்து ராஜமரியாதையுடன் சுடுகாட்டிற்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. மச்சுவீட்டின் வாசலை அடைத்த மாதிரி ஓலைப்பந்தல் போட்டார்கள் உடனடியாகவே. அண்டா கணக்காய் இருந்த லோட்டாவில் கடுங்காப்பியும் பைநிறையக் காராச்சேவும் முனியாண்டி கடையில் இருந்து குட்டியானையில் வந்திறங்கியது. அந்த மோட்டார் வண்டிக்குக் குட்டியானை என ரசனையாகப் பெயர்வைத்தவன் எவனோ என்கிற பேச்சுமே ஓடியது. சுப்பையா இருந்திருந்தால், படித்தவர் என்பதால் அதற்கு மிகச் சிறந்த விளக்கம் சொல்லியிருப்பார், அப்படி ஒவ்வொன்றைப் பற்றியுமே கருத்தாகப் பேசக்கூடிய ஆள்தான் என்றுமே ஒருத்தர் சொன்னார். காராச்சேவை மென்று, கடுங்காப்பியை ஊதி உறிஞ்சிக் குடித்தபடி ஒருமுழுவாழ்வை அசைபோட்டது ஊர்.

சுப்பையாவின் கொள்ளுத்தாத்தா நவரத்தினம்தான் அந்த ஊருக்கு முதன்முதலாய் வழிநடையாய் வந்து சேர்ந்தவர். அதுநடந்து நூறு வருஷங்களுக்கு மேலே இருக்கலாம் என்பார்கள். அவர் கிளம்பி வந்த கதையை ஆயிரம் தடவையாவது அவர் வாழ்ந்த காலத்தில் சொல்லி இருப்பார். பிறகு அவருடைய தலைமுறையும் அந்தக் கதையைச் சொல்லிக் கொண்டே இருந்தது. வயது முதிர்ந்த ஊர்ப் பூவரச மரத்தைக் கேட்டால்கூட மென்மையாய்த் தலையாட்டிச் சொல்லி விடும் அந்தக் கதையை. ஏனெனில் அதுவே அந்த ஊரின் பெரும்பாலான பேருக்குப் பூர்வீகக் கதையாகவும் இருந்தது. அந்தக் கதையும் காலமும் மறுபடி அந்தவூரைப் போர்த்திய நிலவொளியைப் போலப் பரவி மீள நிகழ்ந்தது.

நவரத்தினத்திற்கு தான் வாழ்ந்தவூரில் ஏதோ மனச்சடைவு. தன்னுடைய பொண்டாட்டி பிச்சையம்மாளை  அழைத்துக் கொண்டு, கையில் இருக்கிற சொர்ணத்தைப் பத்திரம் பண்ணிக் கிளம்பத் தீர்மானித்து விட்டார். வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் குறித்த அச்சமும் அப்போது ஊருக்குள் நிலவியது. அதுமட்டுமா காரணம்? அவருக்குமே வழித்துணைக்கென ஆட்கள் தேவைப்பட்டார்கள் அப்போது. அவரது மனம் கூட்டாய் அக்காரியத்தைச் செய்ய விரும்பியது. வழியில் தலைச்சுமையை இறக்கி வைக்க ஒரு தாங்குகல்லைத் தேடுவதைப் போலப் பரபரப்பாக இருந்தது மனம்.

அவருடைய வீட்டிற்கு வெளியே குடிசைபோட்டுத் தங்கியிருந்த குடியானவன் முத்துராசாவை நோக்கிப் போனார். அவனுக்குக் கடந்த ஐப்பசியில்தான் கல்யாணம் முடிந்து இருந்தது. புதுப் பொண்டாட்டியோடு படுத்துக் கிடக்கிறவனை எழுப்பலாமா? என்கிற யோசனையும் வந்தது நவரத்தினத்திற்கு. குடிசையின் வாசலில் சற்றுநேரம் அமைதியாய் நின்றார் நவரத்தினம். ஆனால் அசைவைக் கண்ட சாரைப் பாம்பைப் போல உள்ளிருந்து, “சாமி என்ன வேணும்? ஏதும் அவசரமா?” எனக் குரல் வந்துவிட்டது. அவனது கூருணர்வு குறித்து அந்த நேரத்திலும் மெச்சிக்கொண்டார் நவரத்தினம்.

அவனுடைய பொண்டாட்டி பேச்சியுமே கண்ணைக் கசக்கிக் கொண்டு தவழ்ந்த முந்தானையைச் சரிசெய்தபடி வெளியே வந்து நின்றாள். அவள் உடையைச் சரிசெய்யும் பொருட்டு பார்வையைத் தூரத்தில் சிறிதுநேரம் தளர்த்தி பின்னர் அதைமீட்டு, “வேற ஊருக்கு போயிடலாம்ணு கெளம்பிட்டோம். நீங்களும் கூட வர்றீங்களா?” எனக் கேட்டார் நவரத்தினம். மொத்தமாய்க் கேட்டதுதான் என்றாலும், கேள்வி அவளது மடியிலேயே விழுந்தது. நிறைந்த பௌர்ணமி ஒளியில் அவளுடைய கண்கள் மினுக்கின. அவள் தயக்கமே இல்லாத குரலில், “சொந்த மண்ணை விட்டு எதை நம்பி கிளம்பி வர்றது சாமி?” என்றாள். முத்துராசா அவளை முடிவெடுக்கவிட்டு ஒதுங்கி நின்றதை நவரத்தினம் உணர்ந்து கொண்டார்.

“பறவைக்கு புழுபூச்சி தானியம் கெடக்குற எல்லா மண்ணும் சொந்த மண்தான் தாயீ. ஆயுசுக்கும் உங்களைக் கைவிடமாட்டேன். ஒங்களுக்கு மட்டுமில்லை. இனிமே வரப் போற உங்க தலைமுறைக்கும் சேர்த்து நல்லது கெட்டதுக்கு தாய்மாமன் சீரை தந்திடறேன். வார்த்தையை நம்பி கெளம்பி வாங்க” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவெனத் தனது வீட்டை நோக்கிப் போனார். திரும்ப வருகையில் பிச்சையம்மாளுமே உடன் பின்னால் நடந்து வந்தாள்.

அதற்குள் அவ்விருவரும் மனதளவில் கிளம்பத் தயாராக நின்றனர். அந்த நிலவொளியைச் சாட்சியாக வைத்துக் கொடு என்பதைப் போலத் தலையை அசைத்தார் நவரத்தினம். தன்னுடைய சுருக்குப் பையிலிருந்து வெள்ளிக் காசொன்றை எடுத்து அவளிடம் கொடுக்க முயன்றாள் பிச்சையம்மாள். அப்போது அவளது கையைப் பிடித்துக் கொண்டு நவரத்தினம், “எம் பேரே ரத்தினம்தான். ரத்தினமெல்லாம் நிறைஞ்சு கொட்டிக் கிடந்தாலும் இந்தப் பூமிக்கு ராசாங்கறது சொர்ணம்தான். இந்தப் பூமியே மஞ்சள் பூத்து நிறை சுமங்கலியா ஜொலிக்குது இல்லையா? அதனால சொர்ணத்தை மட்டும் கொடு. இது என் கட்டளை” என்றார் பூமியதிர்கிற மாதிரியான சத்தத்துடன். அவர் அப்போது யானைமேல் வீற்றிருக்கிற அய்யனாரைப் போலவே பிறரது கண்களுக்குத் தெரிந்தார்.

தன்னுடைய பையில் இருந்து மின்னுகிற மஞ்சள் சொர்ணத்தை எடுத்து அவளது கையில் கொடுத்தாள் பிச்சையம்மாள். அதன்பிறகு அவள் வாழ்நாள் முழுவதும் சொர்ணத்தை அக்குடும்பத்தின் கைகளுக்குக் கடத்தியபடியே இருந்தாள். சொர்ணத்தையும் அதற்கு நிகரான சொல்லையும் வழித்துணையாக வரித்து, அந்நால்வரும் நிலவொளியை ஊடுருவி தானியங்கள் சிதறிக்கிடக்கிற மண்ணைத் தேடிக் கிளம்பினார்கள்.

வந்துசேர்ந்த செவலைப்பட்டியில் சொர்ணத்தைப் பண்டமாக்கி இருபது ஏக்கர் கரிசல் பூமியை வாங்கிச் சீர்திருத்தினார்கள் எல்லோரும் சேர்ந்து. சிதறிக் கிடக்கிற தானியங்களைப் பொறுக்கவந்த வலசை போகிற பறவைகள்தான் என்ற போதிலும், அப்பூமி அள்ள அள்ளக் குறையாத தானியங்களை அவர்களது குதிருக்குள் பண்டமாற்றாய்ச் சேர்த்து நிறைத்தது. “கொழுத்தவனுக்கு கொள்ளு. எளைச்சவனுக்கு எள்ளு” எனச் சொல்லி முதன்முதலில் எள்தான் விதைத்தார் நவரத்தினம். ஆனால் கொழுத்துப் போகிற அளவிற்குத்தான் அப்புறம் அவர்களுக்கு விளைச்சல் இருந்தது.

அவர்களது வைராக்கியத்தைக் கண்டு ஊரே வியந்தது. “வேற வழியே இல்லைன்னு அதோட காலைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டு பாடுபடறவன் சொல்பேச்சைத்தான் நிலம் நல்லா கேக்குதுப்பா” எனப் பேசிக் கொண்டார்கள். நவரத்தினத்திற்கு ஆணிரண்டு மகவு ஒன்றென மூன்று குழந்தைகள். போட்டியாய்ப் பேச்சியுமே அதேமாதிரி மூன்று குழந்தைகளைப் பெற்றுப் போட்டாள். கூலிக்குப் பேசிக் கூட்டிக் கொண்டு வந்தவர்கள்தான் என்ற போதிலும் முத்துராசா குடும்பத்தை உறவைப் போலக் கருதி, எந்த விலக்கமும் காட்டவில்லை நவரத்தினம். அதனால் பேச்சியின் குதிருமே மனதாரக் குளிர்ந்தது.

சொன்னசொல் மீறாமல் பேச்சியின் குழந்தைகளுக்குக் காதுகுத்தில் துவங்கி கல்யாணம் வரை அத்தனைக்கும் தவறாமல் செய்வதெற்கென ஒரு முறையையும் வகுத்து வைத்திருந்தார் நவரத்தினம். பனை ஓலைப்பட்டி நிறையக் கருப்பட்டியைக் குவித்து அதன் உச்சியில் மினுக்குகிற சொர்ணத்தை வைத்துக் கிழக்குப் பார்த்து நின்று கையளிப்பது. அப்படியான முறையை அந்தவூரும் முதன்முறையாக அதிசயம் போலக் கண்டது.

வெவ்வேறு மாதிரி அதைக் குறித்துப் பேசிக் கொண்டார்கள். “அந்தக் காலத்தில ராசாக்கமார் இப்டீத்தான் தன் குடியானவங்களுக்கு தருவாங்களாம். ஆயிரம் சாமி இருந்தாலும், சொன்ன சொல்லை காப்பாத்துறவந்தான் இந்தப் பூமிக்குச் சாமி. அந்தவகையில நவரத்தினம் தான் பேருக்குத் தகுந்தாப்பில நடந்துக்கிறாரு” எனச் சொல்கிறவரிடம், “அவரு இருக்கறவரைக்கும் நடக்கும்யா. சொல்லை விட்டவன் போய்ச் சேர்ந்த அன்னைக்கு அந்தச் சொல்லுமே செத்து போயிரும் கேட்டீயா? அதுதான் ஒலக வழக்கம்” என்பார் இன்னொருத்தர்.

எல்லோருமே நவரத்தினம் சாவதற்காக அல்லாமல், அந்தச் சொல் எதிர்காலத்தில் என்னவாக மாறப் போகிறது என்பதைக் காணக் காத்திருந்தார்கள். பிள்ளைகள் நிலத்தில் பருவம் பார்க்கத் துவங்கிய காலத்தில் நவரத்தினம் நடமாடமுடியாமல் சுணக்கமானார். முத்துராசாவுமே வீட்டிற்குள்தான் ஒண்டிக் கிடந்தார். அதற்கு முன்னே பேச்சி ஊருக்குள் புதிதாய்த் தட்டுப்பட்ட காலரா நோய் தாக்கிச் செத்துப் போயிருந்தாள்.

நவரத்தினத்திற்கு இழுத்துக் கொண்டு படுக்கையில் படுத்துக் கிடந்தபோது, ஊர்க்காரர்களின் அறிவுரைப் படி இன்னொரு பக்கம் படுக்கையில் கிடந்த முத்துராசாவைத்தான் அழைத்துக் கொண்டு வந்து பாலூற்ற வைத்தார்கள். கைகள் நடுங்க முத்துராசா கடைசிப் பாலை அவரது வாயில் விட்டார். இறுதியாய் அவரது கரத்தைப் பற்றிக் கொள்ள முத்துராசா முயன்ற போது அதனுள் ஒரு சொர்ண நாணயத்தைக் கண்டார். நவரத்தினம் செத்த அடுத்த வாரத்திலேயே முத்துராசாவையும் காடு வாவென அழைத்துக் கொண்டது.

“ரெண்டு பேருமே வைராக்கியமானவங்க. ஆண்டான் அடிமை மாதிரியா நடந்துக்கிட்டாங்க? கூட பொறந்த பொறப்பு கணக்கா நடந்துக்கிட்டாங்களே? அடுத்தடுத்து நிறைவா போய் சேர்ந்திட்டாங்க பாரு” எனப் பேசிய ஊர், அந்த முறைகுறித்துக் காணத் துடித்தது. முத்துராசாவின் குடும்பத்திற்குமே பிள்ளை குட்டிகள், பேரன்கள் எனவுயிர்ச் சங்கிலி வளர்ந்திருந்தது தனியே. நவரத்தினத்தின் மூத்த மகன் சிவனேசன் ஊருக்கே அறிவிக்கிற மாதிரி, முத்துராசாவின் மகன் வயிற்றுப் பேத்திக்கு அந்த முறையைச் செய்தார்.

அவர் ஊரின் அரசல்புரசலான பேச்சுக்களை அறிவார். தன்னுடைய தந்தையை மீறித்தாண்டி சிவனேசன், இரண்டு பனையோலைப் பெட்டிகள் நிறையக் கருப்பட்டியும் சொர்ணமும் எனப் புதிய முறையைத் துவக்கி வைத்தார். “சொல் போட்டா சொல்தான் விளையும்ப்பா” என்றது ஊர் அதைப் பார்த்து. சிவனேசன்தான் அந்தவூரில் முதன்முறையாக மச்சு வீடு கட்டினார். அதன் பேரிலேயே அக்குடும்பம் மச்சுவீட்டுக் குடும்பமென அழைப்படலாயிற்று.

அந்த வீட்டிலிருந்த தானியங்களை நிறைத்து வைக்கிற குதிரைக் காணவே ஜனங்கள் முண்டியடித்தார்கள். “அடேயப்பா முத்துன யானை ஒண்ணு அதுக்குள்ளாற ஒளிஞ்சுக்கலாம். அப்படி ஒரு குதிரு. ராசாக்கமரு குதிரு. வத்தாத சீவநதி” என அதைப் பார்த்த ஜனம் வியந்தது. சிவனேசனின் கூடப் பிறந்த இளையவன் பருவங்களைப் பார்ப்பதற்கு முன்னமே ஜன்னி கண்டு சீக்கிரமே செத்துப் போனான். தங்கையை அசலூர்க்காரச் சம்பந்தத்திற்குத் திருமணம் செய்து வைத்தார். அவளுடைய திருமணம் ஊரே வியக்கிற மாதிரி ஐந்து நாட்கள் நடந்தது. அந்த ஐந்து நாளுமே ஒரு வீட்டில்கூடச் சமைக்கக்கூடாது எனத் தலையாரியை விட்டுத் தமுக்கடிக்க வைத்தார்கள். அப்படியும் யாராவது மனம் கோணி விடுபட்டு விடக்கூடாது என்பதால், ஊர்க் கோவிலின் முன்நின்று துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பொதுக் கும்பிடு போட்டார் சிவனேசன்.

”ஆயிரம்தான் பணம் வந்தாலும் மனுசண்ட்ட அந்த பண்பு கொறையல பாத்தீயா? மனசாரக் கொடுக்கணும்னு நினைக்கறவனோட கை எப்பவுமே தணிஞ்சுதான் போகும்” என்றார் அப்போது ஊர்த் தலைக்கட்டாக இருந்த ராசவேலு. அந்த ஐந்து நாட்களுமே பந்தல் போட்டுப் பந்தி விரித்து ஊருக்கே சோறு பொங்கிப் போட்டார்கள். வடக்கே இருந்து சமையல்காரர்களை அழைத்துவந்து, அதுவரை அந்த ஊர் பார்த்தேயிராத விதம்விதமான இனிப்புகளைச் சுட்டு இலையில் பரப்பினார்கள்.

இறுதியாய் நாக்கிற்கு எந்தக் குறையும் வைத்து விடக்கூடாது என்பதற்காக, மங்கலநாண் ஏறி பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு, நூறு கெடாக்களை வெட்டிக் கறிவிருந்தும் போட்டார்கள். அப்படியொரு திருமணம் நடந்தது அந்த ஊரில் அதுவே கடைசி. அந்தத் திருமணம் குறித்த கதைகள் வழிவழியாய்ச் செவிகளுக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருந்தன.

ஊருக்கே ஓடியோடிச் செய்கிற மனசிருந்தாலும் சிவனேசனுக்குப் பிறந்தது ஒற்றைப் பிள்ளைதான். அதைப் பெற்றதுமே அவருடைய மனைவிக்கு மேலுக்கு முடியாமல் போய்விட்டது. மேலும் குழந்தைகளுக்காக வேறு கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்திய போதும் விடாப்பிடியாக மறுத்து விட்டார் சிவனேசன். ஆனால் அந்தப் பக்கம் முத்துராசாவின் குடும்பம் வாகை மரத்தைப் போலத் தலைவிரித்துப் பெருகி வளர்ந்தது. எங்கெங்கு காணினும் பிள்ளைகள் பல்கிப் பெருகினர்.

சிவனேசனுக்குப் பிறந்த சீனிவாசன் தன்னுடைய தந்தையைப் போலவே கொடுத்து உதவுகிற உள்ளம் படைத்தவனே. ஆனால் அவனுக்குக் குடும்பத்துச் சொத்தான உழைப்பு ஈடேறவில்லை. சிவனேசனின் மனைவி காமாட்சி நல்லமாதிரியாக இருக்கையிலேயே, முடித்துவைத்துவிட வேண்டுமென சீனிவாசனுக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைத்தார்கள்.

அசலூர்க்காரியான அந்த வந்தவளுக்குமே புருஷனை உருட்டி மிரட்டி வேலை வாங்கத் தெரியவில்லை. அந்தப் பருவத்தில் அவர்களது நிலத்தில் பருத்தி குழிக்கு நான்கு மூட்டைகள் மட்டுமே வந்தது. அந்தக் கணக்கைக் கேட்டதும் சிவனேசனால் தாள முடியவில்லை. எழுந்து உடல் சொல்வதைமீறி ஏர் பிடிக்கலாம் என உள்ளம் எண்ணியது. பதினொரு மூட்டைகள் எடுக்கிற நிலத்தில் வெறும் நான்கு மூட்டைகளா? எனத் திகைத்துப் போனார். அந்த மச்சு வீட்டின் எதிர்காலம் எதுவென அவருக்கு நன்றாகப் புரிந்து போனது.

ஆனால் மகனோடு அப்போது பேச்சுவார்த்தையைக் குறைத்துமிருந்தார். மனைவி இருந்திருந்தாலாவது அவள் வழியாகப் புத்தி புகட்டியிருக்கலாம். அவளுமே சீனிவாசன் குறித்த கவலையினாலே சீக்கிரம் போய்ச் சேர்ந்தாள். புழுங்கின அரிசியைப் போலத் தனக்குள் குமைந்து ஆள் குற்றுயிரும் குலையுயிருமாக மாறிப் போனார். “மீனாட்சி கல்யாணத்துக்கு வந்து நின்ன கள்ளழகர் மகசாரா கணக்கா இருந்தவரோட நிலைமையை பார்த்தீயா? தர்மம் தலைகாக்கும்ணு எல்லாம் சும்மா சொல்லி வச்சதுப்பா. அதுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை” என்றனர் அவருடைய சேக்காளிகள்.

தனக்கு முடிவு நெருங்கி விட்டதை சிவனேசன் உணர்ந்தார். மச்சு வீட்டின் மாடியில் வாடைக் காற்றுக்கு இதமாய்க் கம்பளியைப் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்த அவர், கீழே நடந்து போன சீனிவாசனை நோக்கி முடியாமல் குரல் கொடுத்தார். நிமிர்ந்து பார்த்த சீனிவாசன் துடித்துக் கொண்டு மாடிப் படிகளேறி ஓடினார். அங்கே சீனிவாசனை நிறுத்திவைத்து இறுதியாய், “இங்க பாரு. உன் ஏழு ஜென்மத்துக்கும் உக்காந்து சாப்பிடற அளவுக்கு சேர்த்து வச்சிட்டேன். ஆனா ஒண்ணு உக்காந்து நொறுக்கி தின்னா குன்றா இருந்தாலுமே சீக்கிரமே காணாம போயிடும். அதை மனசில வச்சிக்கோ. என்னைக்குமே எங்கப்பாரு சொன்ன சொல்லை மட்டும் காப்பாத்தி குடுத்திடு. உனக்குப் புண்ணியமா போகும். ஒரு தகப்பனா உண்ட்ட நான் கேட்கிற கடைசி யாசகமாகூட இதை எடுத்துக்கோ” என்றார்.

அப்பாவின் மறைவிற்குப் பிறகு சீனிவாசனுமே அந்தச் சொல்லை மீறவில்லை. ஆரம்பத்தில் எதிர்த்த தன் மனைவியிடம், “என்னைக்கூட வகுந்து போட்டிரு. ஆனா அந்த முறையில மட்டும் கையை வச்சீன்னா, உன்னைக் கொன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்” எனத் தெளிவாகச் சொல்லி விட்டார். பாரியாளின் நெருக்கடி காரணமாக, அவருடைய காலத்தில்தான் நேரில் போய்ச் செய்வது என்பது மாறி, முத்துராசாவின் குடும்பம் மச்சு வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் முறை என மாறியது.

காதுகுத்து, சடங்கு, கல்யாணம் எனப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு மச்சு வீட்டின் வாசலில் வந்து நின்று மிருதங்கம் வாசிப்பார்கள். அந்த இசையினூடே வீட்டின் மேல்மாடியில் இருந்து சீனிவாசன் கையில் ஒரு பனையோலைப் பெட்டியுடன் இறங்கி வருவார். அதுவொரு தெய்வ வாக்குச் சொல்லும் சடங்கைப் போலவே நிகழ்ந்தது. ஏற்கனவே மனதளவில் மேனாமினுக்கியான சீனிவாசனுக்குமே மரியாதை கிடைக்கிற அந்தச் சடங்கு பிடித்திருக்கவும் செய்தது. பனையோலைப் பெட்டியைப் போலவே சொர்ணத்தின் அளவும் சுருங்கிக் கொண்டே வந்தது.

கொடுப்பதற்கான மனம் சுருங்கவில்லை சீனிவாசனிடம். மாறாகத் தன்னிடம் இருப்பதைப் பெருக்குவதற்கான உழைப்பு அவரிடமிருந்து விடுபட்டுப் போயிருந்தது. அவருக்குமே ஒத்தை பிள்ளைதான் பிறந்தது. “மூத்த ராசா ஊர்ல இருந்து கெளம்பறப்பயே ஏதாச்சும் சாபத்தை வாங்கிக் கட்டிக்கிட்டு வந்திட்டாரான்னு தெரியலையே?” என அவர் காதுபடவே பேசினார்கள். இரண்டாவதாக வைப்பாட்டி ஒருத்தியை வைத்தும் பார்த்தார். ஒன்றுமே அதற்கெடுத்து பேரவில்லை அவரது வட்டிலில். அப்பா தந்துவிட்டுச் சென்ற குதிருமே கொஞ்சம் கொஞ்சமாய் இளைக்கத் துவங்கியது.

சீனிவாசனின் பையன் ரத்தினம் தலையெடுத்த காலத்தில் பாதிச் சொத்துக்கள் எங்கே போனதெனத் தெரியாமலேயே, எள்ச் செடிமீது படிந்திருந்த பங்குனிப் பனித் துளிபோலக் காணாமல் போயிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் மனதிலிருந்து மச்சு வீடு குறித்த கதைகளும் மறையத் துவங்கின. மச்சு வீட்டின் பழம்கதைகளைத் தெரிந்தவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்த பிறகு, அடுத்து வந்த தலைமுறைக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லாமல் போனது. பனையோலைப் பெட்டிச் சடங்கெல்லாம் அந்தவிரு வகையறாக்களுக்கு மத்தியில் காதுவைத்த மாதிரி நடக்கிற சிறு சடங்காகச் சுருங்கி விட்டது. அவர்களுமே கொட்டடிக்கிற காரியத்தை எல்லாம் நிறுத்திவிட்டு, கல்யாணம் காய்ச்சி என வந்தால் பத்திரிகையைக் கொண்டு போய் நீட்டுவார்கள். பனையோலைப் பெட்டி இருக்கிறதோ இல்லையோ, ஆனால் தவறாமல் சொர்ணத்தைத் தந்துவிடுவார்கள்.

அள்ள அள்ளக் குறையாமல் இருந்த குதிர் காசநோய் பீடித்தவனின் உடலைப் போல மேலும் சுருங்கவும் துவங்கியது. ரத்னத்திற்குப் பிறந்த பையன்தான் சுப்பையா. அவனுக்கு அடுத்து மகளொன்று பிறந்து கடுங்காய்ச்சல் கண்டு ஏழுவயதிலேயே இறந்து விட்டாள். சுப்பையாவிற்கு அவனுடைய கொள்ளுத்தாத்தா நவரத்தினத்தின் முகச்சாடை. அந்தக் காலத்தில் தான் சிறுபையனாக இருக்கையில் அவனுடைய தாத்தாவை பார்த்திருந்த முதியவர் ஒருத்தரே அதைக் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். அந்த வகையில் அந்த வம்சத்துத் தொடர்ச்சியை நினைத்து மெச்சிக் கொண்டார் ரத்தினம்.

ரத்தினம் இருப்பதை வைத்து முட்டி மோதிப் பார்த்தார். அவரால் பெருக்க முடியவில்லை, ஆனாலும் கூடுமான வரை பெருங்காயத்தைக் கொண்டு போய் ஆற்றில் கரைக்காமல் பார்த்துக் கொண்டார். ரத்தினத்தின் மனைவியுமே கடுமையான உழைப்பாளிதான் என்ற போதிலும், போட்ட உழைப்பிற்கான பலன் கைக்கு வராமல் தட்டிப் போனது கண்டு புழுங்கியே கிடந்தனர், கோடையிடி கண்டு வெம்பிய மாங்காயைப் போல. இருப்பதை யாருக்கும் தெரியாமல் விற்று, சுப்பையாவை சென்னைக்குப் படிக்க அனுப்பினார்கள். அவனுமே நன்றாகத்தான் படித்து முடித்து ஊர் திரும்பினான்.

பக்கத்து நகரத்தில் தொழில் துவங்குகிறான் எனச் சொல்லிச் சில சொத்துக்களை அவன்பேரில் விற்கவும் செய்தார்கள். அவனுக்குமே ஒன்றும் துலங்கி வரவில்லை. அவன் தன்னுடைய தாத்தாவை போலவே மேனாமினுக்கியாக இருந்ததை ஊரில் சிலர் அடையாளம் காணவும் செய்தார்கள். ஆனால் குணமென்று வருகையில் தங்கப்புள்ளை எனச் சான்றிதழும் தருவார்கள்.  அவனுக்கு பெண் தரலாம் என வண்டியில் வந்து இறங்குகிறவர்களிடம், “பையன் செம்பு கலக்காத அசல் தங்கம். ஆனா பாருங்க உங்க பிள்ளைத்தான் உழைச்சு அவனை காப்பாத்தணும்” என ஊர்க்காரர்கள் சொல்வதுமே நடந்தது.

அதன்காரணமாகவே அவனுக்கு நடக்கவிருந்த திருமணங்கள் தட்டிப் போய்க் கொண்டுமிருந்தன. அந்தக் கவலையிலேயே ரத்தினமும் அவர் பொண்டாட்டியும் சீக்கிரமே சர்க்கரை முற்றிச் செத்துப் போனார்கள். வரிசையான சாவுகள் தந்த மனவழுத்தத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனான் சுப்பையா. பொழுதிற்கும் மச்சு வீட்டில் தனியாக மேலே அமர்ந்திருப்பான். கீழே போகிறவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துக் கையில் ஏதாவது காசைக் கொடுத்து விடுவான்.

“அப்படியே உங்க தலைமுறையோட ஈகை கொணம் உங்களுக்கும் வந்திருச்சு சாமி” என அவர்கள் புகழ்வதைக் காதுகுளிரக் கேட்டுத் திருப்தியடைந்து கொள்வான். முத்துராசாவின் வழிவழி வேர்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதெல்லாம் தன்னுடைய தாத்தாக்கள் குறித்த கதைகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொள்வான். அக்காலக் கதைகளைக் கேட்கையில் அவனுக்குப் புல்லரித்து அடங்கும். சொத்துக்களை விற்று தன் செலவு போக, மற்றவர்களுக்குக் கொடுத்து, தம்பழைய சடங்கை பேணி என உள்ளுக்குள் ஒரு வாழ்க்கை வாழ்ந்ததில் அவனுக்குமே நாற்பத்தைந்து வயதாகி விட்டது. மச்சு வீட்டின் சுவர்களில் சில இடங்களில் காரையும் பெயர்ந்திருந்தது.

முதல் தலைமுறையின் பெண்வழி உறவினர்கள் வந்து மிச்சமிருக்கிற சொத்துக்களைப் பிரித்துக் கொண்டும் போனார்கள். மச்சு வீட்டைக் குறித்துப் பேச்சு வார்த்தை நடந்த போது இப்போது இருக்கிற ஊர்த்தலைவர்தான், “இங்க பாருங்க. அது வெறும் மச்சு வீடு மட்டுமில்லை. அது இந்த ஊரோட அடையாளம். ஒரு சொல்லோட அடையாளம். அப்புறம் அவன் இருக்கறதுக்குன்னு ஒரு எடம் வேணும் இல்லையா? தயவு செஞ்சு அதுமேல மட்டும் கையை வைக்காதீங்க. நீங்களும் இப்ப நல்லாத்தானே இருக்கீங்க. கோர்ட்டு கேஸூன்னு அலையறது ஒரு பெரிய குடும்பத்துக்கு அழகா?” எனத் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதன்பேரிலேயே அந்த வகையினர் அந்த மச்சு வீட்டையும் சுப்பையாவையும் தனியாய் விட்டு விட்டுக் கிளம்பிப் போனார்கள். சுப்பையாவின் மீது உண்மையான அன்பிருப்பவர்கள் மட்டும் அந்த இருண்ட வீட்டினுள் படியேறிப் போய்ப் பார்த்து விட்டு வருவார்கள். மற்றபடி அவனே பொங்கியுண்டு தனியாக ஒரு வாழ்க்கையை நகர்த்தினான். அவனுடைய முந்தையை தலைமுறை குறித்த கதைகளை மட்டும் கதகதப்பாய் வைத்துக் கொண்டு, மழையில் ஒடுங்கிய பறவையையொத்த நினைவுகளைச் சிறகுகளைப் போல ஆட்டி மச்சுவீட்டின் உச்சியில் தனித்து அமர்ந்திருந்தான்.

அப்படி அமர்ந்திருந்த ஒருநாள் வாசலில் யாரோ வந்து நிற்கிற சத்தம் கேட்டது. மேலிருந்து குனிந்து கீழே பார்த்த போது தாம்பூலத் தட்டோடு நாலைந்துபேர் நிற்கிற காட்சி தெரிந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான் சுப்பையா. முகத்தைக் கழுவித் துடைத்து, நெற்றியில் விபூதியைச் சாற்றிச் சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கிப் போனான். முத்துராசா வம்சாவழியினரில் ஒருத்தர் தன்னுடைய பேத்திக்கு காதுகுத்து வைத்திருப்பதாக பத்திரிகை கொண்டு வந்திருந்தார்.

அவர்களைத் தாழ்வாரத்தில் நிற்கச் சொல்லி விட்டு வீட்டிற்குள் போய் ஒன்றரை ஆள் உயரத்திற்கு நின்ற பழைய மரப்பீரோவைத் திறந்து துழாவினான். துணிகளை எல்லாம் எடுத்துத் தரையில் போட்டுத் தேடிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாய்ப் பரணில் இருந்த பழைய பெட்டி ஒன்றை இறக்கி, பூட்டை உடைத்துத் திறந்து தரையில் கவிழ்த்துப் பார்த்தான். அதில் கடைசியாய் ஒரு சொர்ணக் காசு மட்டுமே மஞ்சள் துணியில் சுற்றிய நிலையில் மிஞ்சியிருந்தது. எந்தத் தாத்தா? என்ன வேண்டுதலுக்காக? அதை அங்கே வைத்து இருப்பார் என்கிற யோசனையும் அப்போது அவனுக்குள் எழுந்தது.

அழுக்குப் படிந்திருந்தாலும் சொர்ணத்தின் மஞ்சள் முகம் மின்னத் தவறவில்லை. இருந்தும் அதை நன்றாக மல்லுவேட்டித் துணி கொண்டு துடைத்தான். வீட்டில் இருந்த சில்வர் தட்டில் நாலைந்து பழங்களை அடுக்கி அதன் மீது அந்தச் சொர்ணத்தை வைத்துக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தான். வந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்த மகிழ்ச்சி உண்டானது. அக்கூட்டத்தில் ஒருத்தர் அதைக்கண்டு வியப்பான முகக்குறியைக்கூடக் காட்டினார். அப்போது கிளம்புவதற்கு முன்பு வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாத மாட்டைப் போல நின்ற பெண்ணொருத்தி சுப்பையாவை நோக்கிச் சிறுபிள்ளை மாதிரி வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி,

“அண்ணே இன்னும் ரெண்டு மாசத்தில இந்தா இந்த வயித்தில பொறக்கிற பிள்ளைக்குச் செய்முறை வேணும்ணு வந்து நிப்பேன். தங்கச்சி மனசு குளிர கொடுக்கணும் அன்னைக்கு” என்றாள் விளையாட்டுக் காட்டும் குரலில்.

அந்தக் கணத்தில்தான் சுப்பையா சல்பாஸ் மாத்திரை தின்னத் தீர்மானித்தான்.

Previous articleநுண்கதைகள்
Next articleநிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்
சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன் (ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.இதுவரை ஒன்பது நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். இவரின் ஐந்து முதலைகளின் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அத்தாரோ நாவலும் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது.

2 COMMENTS

  1. இந்தக் கதையின் சில வரிகள் என் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. என்னால் அழாமல் இந்த கதையை படிக்க முடியவில்லை. சரவணன் சந்திரனின் மைல்கல் இந்தக்கதை.

  2. மனம் கனத்துப் போகும் மிக யதார்த்தமான கதை. கதை மொழி கச்சிதம். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! 💐

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.